பூக்கள் மலரும் நேரம்
யாரும் அறிந்ததில்லையே
முழு இதழ்கள் விரியும் கோலம்
யாரும் கண்டதில்லையே
பூவிதழ் விரியும் ஓசை
யாரும் கேட்டதில்லையே
நான் பெரிதென்று பூவும்
கர்வம் கொண்டதில்லையே
இயற்கை செதுக்கிய சிலையே
எழிலைச் சுமந்த கலையே
பூக்களில் பல நிறங்கள்
அதன் ஒற்றைப் பெயர் பூக்கள்
கவிக்கு கரு கொடுக்கும்
வாழ்ந்து முடிந்து போகையிலே
சரீரத்தோடு சேர்த்து நடக்கும்
காதலுக்கு முன்னுரைக்கும்
திருமணத்தில் முன்னிருக்கும்
பறித்த போதும் பூக்கள்
சிரிக்க மறப்பதில்லை
கவிக்கு உவமையான போதும்
பூக்கள் மனம் மயங்கவில்லை
கருவறையோ கல்லறையோ பூக்கள்
முகம் மாற்றிக் கொள்வதில்லை
மரிக்கும் போதும் பூக்கள்
மணம் வீச மறுப்பதில்லை
மானுடனே நீயும் பூக்கள்
நாளும் சொல்லும் பாடம்
கேட்டு மனம் மலரு
வேரை நீங்கா மலரென
நீயும் வாழ பழகு.
-கோ.லீலா.
No comments:
Post a Comment