Saturday 28 April 2018

அறம்-1



எழுத்தாளர் ஜெயமோகன் குறித்து என் நண்பர்கள் சிலரிடம் விவாதம் செய்தது உண்டு......என்றாலும் படைப்புகளை எழுத்துக்களை பொதுப்பார்வையோடு படிக்கும் பழக்கமும் எனக்கு உண்டு.கடந்த பலமாதங்களாக இடையறாத பணிகளுக்கிடையே படித்தல் என்பது சற்று விலகியே இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.


சற்று ஓய்வு கிடைக்க "அறம்" படித்துக் கொண்டிருக்கிறேன்.ஒரே நாளில் படித்துவிடக்கூடிய நபர் தான் நான் எனினும் வேலையின் காரணமாக எட்டு கதைகளை மட்டும் படித்திருக்கிறேன்.


அறம் என்றால் என்ன? என்றொரு கேள்வி முதலில் தோன்ற படிப்பதற்கு முன்பாகவே சில சிந்தனைகளை தூண்டி விட்டது தலைப்பு.


"அறன் எனப்படுவது யாதெனின் பிறர்கின்ன செய்யாமை"

என்ற வரிகளே முதன்மையாக தோன்றுகிறது.

எனில் அறம் யாவருக்கும் பொதுவானதாக இருக்கிறதா? என்ற பல்வேறு கேள்விகளுடன் புத்தகத்தை திறக்க.

முதல் கதை "அறம் பாடுதல்" வகை.


படைப்பாளி அறம் பாடுதல் அழிவுக்கான அறமல்லவா?

அழிவை தடுத்துவிட படைப்பவனின் மன சஞ்சலம் வாழவிடாது என்பதுணர்ந்த பதிப்பாளரின் மனைவியின் போராட்டம் ஒரு வகை அறம்.


மதுரைய எரித்த கண்ணகி முதல் அறம் ஆச்சி வரை பெண்கள் நிலைநாட்டிய அறம்.


தார் சாலையில் உச்சி வெயிலில் அமர்ந்து இருந்ததை..


"சேலை பாவடையோட தோலும் சதையும் வெந்து,தாரோட சேர்ந்து ஒட்டியிருந்துச்சுன்னு சொன்னாங்க" என்ற வரிகள் காலங்காலமாய் ஆண்களால் குடும்பத்திற்கு,தேசத்திற்கு வரும் சாபங்களை பெண்கள் தானே போக்கி கொண்டிருக்கிறார்கள் அறம் செய்து.


பெண்களே அறத்தை கிழிக்கும் போது யார் அதை சரி செய்வது.........?


-தொடரும்.

Wednesday 11 April 2018



மேகங்களற்ற விண்மீன்
நிறைந்த வான்கொண்ட
இரவின் அழகென அவள்
மெல்ல நடந்து செல்கிறாள்
மேன்மையான இருளும்
ஒளிரும் ஒளியும்
அவளது விழிகளில்
சந்தித்துக் கொள்ள
கனிந்த மெல்லிய ஒளியை 
கசியவிடுகிறது அவளது நயனங்கள்
என்றும் காணாத
வனப்புகளின் சொர்க்கமாக
காலங்களை மறுதலித்து
ஒளிவீசிக் கொண்டிருக்கிறது..
குறைந்த ஒளிக்கீற்றின் நிழலென 
கிளைகளில் ஊஞ்சலாடும்
அவளது பெருங்கருணையில்
முகம் ஒளிர்ந்து புனித
சிந்தனைகளை இனிய 
கீதமென வழிய
தூய்மையான நேசத்திற்குரிய
இருப்பிடமாக மாறுகிறது
அவளது கன்னங்களும்
புருவமும் மிக மென்மையாக
மௌனமாக எதையோ 
சதா முணுமுணுக்கிறது.
வென்றுவிடும் புன்னகையும்
பூக்களின் வண்ணத்தால்
ஒளிர்ந்த அந்த நாட்களின்
பேரானந்தம் குழந்தையின்
அன்பென வசீகரமாய் 
நெஞ்சினில் இசை மீட்ட…..
சட்டென எழுந்து அவளை
காண சென்றேன் அவளோ
மூடிய விழிகளுடன் எதையோ
வேண்டியப்படி நிற்கிறாள்
அவள் பெயர் காவிரி….
-கோ.லீலா.

காவிரி தாய்.......



பூவாடை மேனியெங்கும்
பூத்து மணம் வீசிவர
குடகு மலை காற்றும்
கைவீசி சேர்ந்து வர
எம்பூமி நீ நடந்த
நாளல்லாம் திருநாள்தான்
கரையோர தருவெல்லாம்
முக்கனியை உதிர்த்துவிட 
முக்கனியின் சுவையோடு
முத்தான சொல்லெடுத்து
சத்தான தமிழ்கொடுத்து
கொத்தாக நெல்கொடுத்த
காவிரி தாயே!
காவியங்கள் பலதந்து
கற்புக்கும் நாயகியாய்
கண்ணகியை வழிநடத்தி
காதலுக்கு உடனிருந்து
கவிதைக்கு நீரூற்றி
காயாத வயலெல்லாம்
தமிழாக நெல்விளைய
கண்டிருந்த நாளெல்லாம்
கனவாய்தான் போனதம்மா
சீர்தந்தும் பேர்தந்தும்
வாழ வைத்த காவிரியே
வாரியம் அமைக்க முடியலையே
வாக்கு கெட்டு போனதாலே
கவிதை தந்த காவிரி
காய்ந்து வெடித்த நிலமாகி
சருகுக்கே இடமாகி போனதம்மா
கண்ணு ரெண்டும் காட்டாறா
கால்வாயா தான் ஓடுதம்மா
மூவாயிரமாண்டா முத்தொள்ளாயிர
ஆண்டா காவிரி கரைசேர்த்த
நாகரிகமெல்லாம் நகலழிஞ்சி
நகரழிச்சி போயிடுமோ.
குடமுருட்டி நீபாய்ந்து
கொழித்து செழிக்க வைத்த
உன்னைதான் தறிக்கெட்ட மனசு 
பகடையா உருட்டுதம்மா 
சூரியனின் செந்நிறம் மின்ன
வெள்ளை நதியாய் நீ நீள
பசுமையாய் கொடி விளைந்தம்மா
நீலசக்கரம் கழன்றுதான் போனதுவோ
சுழலமால் தான் நின்னதுவோ
ஏரோட்டம் நின்றுவிட்டால்
பாரோட்டம் என்னாகும் 
சிறுமனசு பதறுதம்மா.
பார்த்தவருக்கெல்லாம் நீ ஆறு
உன்மடி வளர்ந்த எங்களுக்கு
நீர் உணவு! நீர் உணர்வு!
நீர் தமிழ் ! நீர் தாய்! நீர் உயிர்!
தவறியும் மலடென உனை
சொல்லமாட்டேன் தாயே !
மாற்றானும் மூழ்கிடமா
தடம் தந்து காத்திடும் நீ
மீண்டும் உயிர்த்தெழுவாய் !
உயிரான தமிழாய் வருவாய் !
-கோ.லீலா