Monday 29 January 2018

புதியதோர் உலகை பயிர் செய்வோம்.





நல்லதோர் உலகைப்

பயிர் செய்ய போகிறேன்

பதவியை துறந்த

பணத்தினை மறந்த

நேயத்துடன் வாழும்

மனிதர் நிறைந்த

உலக விதையினை

விதைத்திடப் போகிறேன்

அறத்தை உரமாக்கி

அன்பை நீராக்கி

நேர்மையால் உழவோட்டி

புதியதோர் உலகை

விதைக்கப் போகிறேன்

பதராகிப் போகாமல்

குணமேந்தும் நெல்லாக்கி

புதியதோர் உலகை

பயிராக்க போகிறேன்

கெஞ்சும் நிலைப் போக்கி

கஞ்சி ஆக்கும் மனிதரை

கொண்ட உலகை விதையென

விதைக்கப் போகிறேன்

கணினி விடுத்து

கலப்பை மதிக்கும்

மூளை தாங்கிய உலகை

விதைக்கப் போகிறேன்

விளையாத விதையகற்றி

நாளும் விளையும்

உலகை விதைக்க போகிறேன்

உணவாக்க மட்டுமில்லை

உலகாக்கவும் அறிந்த

உழவன் நான்

உலகை விதைக்க போகிறேன்

புதியதோர் உலகை

பயிராக்க போகிறேன்.





-கோ.லீலா

Monday 15 January 2018

பனித்துளி...

நான் இலையின் விளிம்பில்
ஒரு பனி துளி போல்
கால் பெருவிரல் ஊன்றி
கவனமுடன் நடனமிடுகிறேன்
மற்றொரு பனித்துளி
எனக்கு அடுத்ததாக தோன்றுகிறது
மென்மையான காற்று வீசுகிறது
நாங்கள் விளிம்பில் சுழன்று ஆடத்தொடங்க
திறனைத்தும் கொண்டு நிலைப்படுத்திக் கொள்கிறோம்
இறுதியாக, நாங்கள் ஒன்றிணைந்தோம்
ஒளியின் கதிர் நம்மிடையே செல்கிறது
ஒரு அழகான வானவில் உருவாக்க
அது வெறும் பனித்துளி…….


-கோ.லீலா.

தை மகள்.

தைமகளே நீ வந்தா
தரையெல்லாம் குளிரும்ணு  
பிறைமதி வானை பிரியுமுன்னே
வண்ண வண்ண இழையாலே
பூக்கோல சமுக்காளம்
வாசலிலே விரிச்சிருக்கேன்
தைமகளே நீ அமர
பேசிடணும் ஏராளம்
நீ காட்டணும் மனத்தாராளம்
அறுவடை நாளே உலகெங்கும்
புத்தாண்டாய் தானிருக்க
பொங்கலாய் மட்டும் நீ
வந்து போகலாமோ சொல்லு
மீன மேஷம் பார்த்து
புத்தாண்டை மாற்றிட்ட
சோறு கஞ்சி இல்லாம
சாகுமோ அந்நாளில் ஆதி
தமிழ் மக்கள் கூட்டம்
தைமகளே  நீயே
புத்தாண்டாய் இருந்திட்டா
கையில் கொஞ்சம் காசிருக்கும்
சுருக்கு பையும் நிறைஞ்சிருக்கும்
அறுத்த நெல்லு மணம் சேர
குதிருக் கூட நிரம்பிவிடும்
பூக்கோலம் விரிஞ்சிருக்கும்
நடுவே பூசணிப் பூ சிரிச்சிருக்கும்
மஞ்சளோடு இஞ்சிக்கொத்து
மணத்து மங்கலத்தை பெருக்கிடும்
அச்சுவெல்லம் பச்சரிசி பாலோடு
தான் பொங்க முந்திரியும் ஏலமும்
உழவன் மனசுப் போல மணத்திருக்கும்
உழவன் முகம் மலர்ந்திருக்க
நுனிக்கரும்பும் இனிப்பாகும்….
உழைத்த உயிர்களுக்கெல்லாம்
அன்று ஒருநாள் விடுப்பாகும்
அவர்களுக்கு நன்றி
சொல்லல் எம் பொறுப்பாகும்.

-கோ.லீலா

பூ....

பூக்கள் மலரும் நேரம்
யாரும் அறிந்ததில்லையே
முழு இதழ்கள் விரியும் கோலம்
யாரும் கண்டதில்லையே
பூவிதழ் விரியும் ஓசை
யாரும் கேட்டதில்லையே
நான் பெரிதென்று பூவும்
கர்வம் கொண்டதில்லையே
இயற்கை செதுக்கிய சிலையே
எழிலைச் சுமந்த கலையே
பூக்களில் பல நிறங்கள்
அதன் ஒற்றைப் பெயர் பூக்கள்
கவிக்கு கரு கொடுக்கும்
வாழ்ந்து முடிந்து போகையிலே
சரீரத்தோடு சேர்த்து நடக்கும்
காதலுக்கு முன்னுரைக்கும்
திருமணத்தில் முன்னிருக்கும்
பறித்த போதும் பூக்கள்
சிரிக்க மறப்பதில்லை
கவிக்கு உவமையான போதும்
பூக்கள் மனம் மயங்கவில்லை
கருவறையோ கல்லறையோ பூக்கள்
முகம் மாற்றிக் கொள்வதில்லை
மரிக்கும் போதும் பூக்கள்
மணம் வீச மறுப்பதில்லை
மானுடனே நீயும் பூக்கள்
நாளும் சொல்லும் பாடம்
கேட்டு மனம் மலரு
வேரை நீங்கா மலரென
நீயும் வாழ பழகு.
-கோ.லீலா.

வேரும் வேலியும்...



பூமியின் கீழ் நழுவி
சந்திந்துக் கொள்ளும்
வேர்களின் சுதந்திரத்தை.
வேலிகளால் விலங்கிட முடியாது.

-கோ.லீலா.

புத்தன்...



ஞானமடைந்த புத்தனும்
சிற்பத்தின் வடிவில்
சிக்கி கருங்கல்லானான்.

-கோ.லீலா.


யானை.....



ஆனை வருதென்றால்

குழந்தையா ஆராவரம் செய்ற

நான் அடிமைப்பட்டு கிடப்பதை

நீ எங்க நினைக்கிற

நான் வனத்தின் கம்பீர பிராணி

வனத்தை கட்டும் நிர்மாணி

முப்பத்தி மூணு சதவீதம்

இருக்க வேணும் காடு

அதுதானே எங்களோட வீடு

காடு கடத்தி விடுகிறாய்

எங்களை பிச்சை எடுக்க விடுகிறாய்

சுடும் சாலையில் நடக்க விடுகிறாய்…

தந்தம் எண்ணி விற்கிறாய்

பட்டையை நீ போடுகிறாய்

பாதம் வைத்தும் வைக்கமாலும்

நாமத்தை நீ சாத்துகிறாய்

உன் மதம் என்மேல் ஏற்றுகிறாய்

பிடி பெருமையோடு வழிநடத்த

பிரிவினை ஏதுமின்றி வாழும்

ஆனைக் கூட்டம் நாங்க

.மனிதா! நீ பழசை மறக்கிறாய்

என் வலசையை மறைக்கிறாய்

காடுக்குள் ஊடுருவது ஊரு

நான் நகருவது ஊருக்குள்ளா?

எட்டா மரப்பட்டை உரிப்பேன்

வயிற்றுக்குள் போட்டு அரைப்பேன்

பாதிப் போக பாதியை சாணமிடுவேன்

சாண, வழி எட்டா மரம் கிட்டும்

பட்டாம் பூச்சிக்கும் பலவகைக்கும்

மகரந்த சேர்க்கை நடந்திட

காடு செழித்து வளர்ந்திடும்

-கோ.லீலா.

திராட்சை......



கொத்து கொத்தாய் தொங்குதம்மா

திராட்சையுமே பந்தலிலே

சொட்டு சொட்டாய் ஊறுதம்மா

எச்சிலுமே நாவினிலே

கேட்க பிடிக்க காவற்காரர்

யாருமில்லை தோட்டத்திலே

பறிக்க கையிரண்டும் ஏங்கையிலே

மனசு ஏனோ தடுக்குதம்மா

புளிக்கும்னு பயமில்லே நெஞ்சினிலே

எண்டோசல்பானில் முங்கி எழுந்த

திராட்சை அழகாய் மின்னுகையிலே

“கருக்”ன்னு இருக்கு மனசுக்குள்ளே

நாட்டுப்பழம் வீட்டுப்பழம் எதிலும்

எண்டோ சல்பான் இருக்கையிலே

பூவுக்குள் புகுந்தே வினையாகுது

சுவைக்கும் திராட்சையிலே

சூல்கொண்ட அழகுப் பெண்ணே

திராட்சை நீ தவிர்த்திடு கண்ணே

மற்றவர் சுவைக்கலாம் மனம்போல

உப்புக் கரைந்த நீரில் மஞ்சள்

கலந்து தெளித்த பின்னே…..

மண்ணை கெடுக்கும் உரம்

நம்மை கெடுக்கும் உரம்

வேண்டாமென நீ முடிவெடு

நாளும் நாடு செழித்திடும்

வலம் நிறைய கொடுத்திடும்.

=கோ.லீலா.

கத்தரிக்காய்,கத்தரிக்காய்....

நாட்டு கத்தரிக்காய் என்றால்
நாடி நீயும் வாங்கிடு
பி.டி கத்தரிக்காய் என்றால்
பிடிப்படாமல் நீ ஓடிடு
பி.டி கத்தரிக்காய் வேணாம்         
மண்ணை புண்ணாக்கும்
பி.டி கத்தரிக்காய் வேணாம்
புற்றுநோயைப் போக்கும்
நாட்டு கத்தரிக்காய் போதும்
உருமால் கட்ட ஆசைப்பட்டு
உழவு மாட்ட வித்துப்புட்ட
சாணிப்போடா எந்திரத்த ஒட்டிட்ட
எருவுக்குப் பதிலா உரத்த
நீயும் பூமியிலே கொட்டிட்ட
மகசூல் காண கனவு கண்டிட்ட
மனுசபய நலனை மறந்திட்ட
விதையில்லா காய் வேண்டாம்
விலைக்கொடுத்து விதை வேண்டாம்
நாட்டு கத்தரிக்காய் வாங்கிடு

நலனை நீயும் நாடிடு.
-கோ.லீலா

செம்பருத்தி......

முற்றத்திலே பூத்திருக்கு செம்பருத்தி
வச்சிருக்கேன் சில கேள்வி
அதனிடம் கேட்க எண்ணி
யாரிடம் பெற்று வந்தாய்
எண்ணம் மயக்கும் வண்ணம்
பூமித்தொடா பிள்ளைப் பாதம்
முத்தமிட்டு பெற்று வந்தாயோ
நாணி சிவந்த பெண்ணைக்
கொஞ்சம் தொட்டு வந்தாயோ
நலிந்த மக்கள் நினைந்து
சிவந்த கவிஞன் விழி
கண்டு பெற்று வந்தாயோ
நாடு காக்க உயிர்நீத்த
மாவீரன் ரத்தம் அதில்
நீ நனைந்து வந்தாயோ
கொவ்வை கனி கொத்தும்
கிளி மூக்கு உன்மேல் பட்டு
சிவப்பை விட்டு சென்றாதா
கதிர் உமிழும் நிறமதை
உறிஞ்சி சிவந்து நின்றாயா
பசியால் கனன்று எரியும்
வயிறிடம் சென்று வந்தாயா
யாரிடம் பெற்று வந்தாய்
சிங்கார சிவப்பு வண்ணத்தை
இன்னுமொரு கேள்வியுண்டு நெஞ்சிலே
கோப நாண உணர்வுக்கு வண்ணம்
சிவப்பெனவே வகுத்தது யார்,

-கோ.லீலா.

#நடைவண்டி#

தளிர்கரம் தீண்ட
மரித்த மரமொன்று
உயிர்பெற்று அசைகிறது
-கோ.லீலா.

கவிதைகளின் மாநாடு...

கவிதைகள் யாவும் மாநாடு போட்டன
சிறந்த கவிஞன் யாரென்று கேட்டன
காதல் கவிதை தன்னை எழுதியவரே
அன்புக் கொண்ட சிறந்தவர் என்றது
இயற்கை கவிதை தன்னை எழுதியவரே
ரசிகத்தன்மை கொண்ட சிறந்தவர் என்றது
மூடநம்பிக்கை போக்கும் கவிதையோ எம்
முற்போக்காளர் கவிஞரே சிறந்தவர் என்றது
சமூக அவலம் பேசும் புரட்சிக் கவிதையோ
நாட்டுப்பற்றுடை கவியே சிறந்தவர் என்றது
நகைச்சுவை கவிதைகள் நகைத்து நலனை
பலப்படுத்தும் தன் கவியே சிறந்தவர் என்றது
எனைப் பார்த்த கவிதைகள் புன்னகைத்து
மெய்போல் பொய் பேச ஆயத்தமாயின
கையமர்த்தி அநீதி கண்டு பொங்குபவரே
நற்கவிஞன் இல்லையா என்றேன்…………
கவிதைகள் மௌனமாய் பார்க்கின்றன
தெரிந்தவர் யாரும் பதில் சொல்லுங்கள்
நானும் கவிதைகளும் காத்திருக்கிறோம்.

-கோ.லீலா.

தைப்பொங்கல்..



பழையக் கஞ்சிய ஊத்திக்கிட்டு
தூக்கு சட்டிய தூக்கிக்கிட்டு
வரப்பு மேட்டுல வெரசா நடக்கும்
கண்ணம்மா உன்
வயக்காடு நனைஞ்சிதா
வயத்துபாடு குறைஞ்சிதா
கல்யாண கடன் அடைஞ்சிதா
படிக்க வைக்க கண்ட
கனவு ஏதும் பலிச்சிதா
சோடி மாட்டை ஓட்டிக்கிட்டு
சோறில்லாமா பாடிக்கிட்டு
ஊருக்கே சோறுபோடும்
சின்னையா நீ
விதச்ச வெத நின்னுச்சா
வைக்கோலாவது மிஞ்சிச்சா
தண்ணி…….
கணக்கு பார்க்கும்அதிகாரி
என் மனசெல்லாம் கனக்குது
நினைக்க நினைக்க
கண்ணிரெண்டும் பொங்குது
சம்பாவோட குறுவையும்
யாருக்கு இங்கே தெரியுது
நித்தம் பொங்கும் உன்
அடிவயிறு யாருக்கு புரியுது
பாக்கெட் பாலு ஊத்தி
பட்டணத்து பொங்கல் பொங்குது…….
பகட்டா வாழ்த்து சொல்ல
உழவன் பேர சொல்லுது
என் வீட்டு மஞ்சக் கொத்துல
ஒட்டி வந்த வயலு மண்ணு
உன் உதிரத்த உதிர்க்குது….
என் மனசு இங்கே நிக்கலே.
உன் வீட்டு பானை
அடுப்பேறிச்சா தெரியல.
நினைக்க நினைக்க
கண்ணு ரெண்டும் பொங்குது
கால்வாயா ஓடுது.
தைப் பொங்கல் நாளாச்சும்
எல்லார் மனசிலேயும் உன்
நெனப்ப பொங்க வைக்கவாவது
வந்து போகட்டும் தைப்பொங்கல்.


-கோ.லீலா.


கிராமிய நிலை........



அரைப் பரீடசை விடுப்புக்கு
ஆத்தா ஊருக்கு வரேன்னு
ஆச பேரன் சொல்லிப்புட்டான்
அடுக்காய் அடுக்காய் அவன்
ஆசைகளை அடுக்கிட்டான்
விளைஞ்ச நிலமதிலே கதிரோடு
நின்னு படம் புடிக்கணுமாம்
களைப்பு தீர குளத்துல
முங்கி குளிக்கணுமாம்
ஆத்தா முந்தானையிலே
மீனும் நிறைய புடிக்கணுமாம்
பொரிச்சு தின்ன பின்னால
கன்னுக்குட்டி பால் குடிக்கும்
அழகை படம் புடிக்கணுமாம்.
பதபதச்சு போனா மயிலாத்தா
பழைய நினவுக்குள்ள
நழுவிப்போனா அந்தாத்தா
காவிரி ஆத்துல தண்ணி வர
கறுப்பு வாவால் துள்ளி வர
தேனாத்துல தண்ணி வர
தெப்பிலி கெண்டை மிதந்து வர
நீலாத்துல தண்ணி வர
நெத்திலி மீனு துள்ளி வர
பாலாத்துல தண்ணி வர
பப்பாளி கெண்டை துள்ளி வர
பாலாத்து பரமசிவனுக்கு
நிறஞ்ச சோவனம் கொட்டுங்கடி
என கைத்தட்ட கனவுல
காலம் கழிஞ்சது நினைச்சி
பதறி எழுந்திரிச்சா மயிலாத்தா
என்னான்னு சொல்லுவேன்
ஏதுன்னு சொல்லுவேன்
பாடையில வாரது போல்
கூடையில வர மீன
திங்கறத சொல்வேனா
கண்மாய் குளமெல்லாம்
கரட்டு மேடு ஆனத சொல்வேனா
விளை நிலம் இங்கே
கம்பி வேலிக்காரனுக்கு
கைமாறி போனத சொல்வேனா
கறவை மாட்டைக் கடங்காரனுக்கு
அவுத்து கொடுத்தத சொல்வேனா
பதறிப் போனா மயிலாத்தா
பரபரன்னு காயிதம் தேடி
ஓடுனா அடுத்து வீட தேடி
படிச்ச பய அவனப் பார்த்து
பேரனுக்கு காயிதம் ஒண்ணு
போடச் சொன்னா மயிலாத்தா
"விடுப்புக்கு நான் வாரேன் அங்க"ன்னு
“வா”ன்னு பதில் கடுதாசி
வந்தபின்னும் தனக்குள்ளே
ஒப்பாரி வச்சியழுதா மயிலாத்தா
காசு பணம் சேத்து என்ன செய்ய
கண்னே நீ கேட்ட காட்சி
சுகமெல்லாம் காசு கொடுத்தாலும்
கிடைக்காதே என்ன செய்ய….
மழ ஒருநாள் வரும்
கனவெல்லாம் நிறைவேறும்னு
தனக்குத் தானே சொல்லிக்கிட்டா.
மனச கொஞ்சம் தேத்திக்கிட்டா.
-கோ.லீலா.


குடை குடையாய் பூத்திருக்கு
மழையை எண்ணி காத்திருக்கு
கறுத்த மேகம் திரளுமோ
கனத்த மழை பெய்யுமோ
புல்லு பூண்டு நனையுமோ
பச்சை கம்பளம் விரியுமோ
எண்ணம் விரியுது குடையென
மழையை நினைக்கும் மனதிலே
மழை விலகி நிற்குதோ
ஒற்றை குடையின் கீழே
மக்கள் வரவே நினைக்குதோ
பெண்வதை யாவும் தீரவே
ஆணின் மனம் குடையென
விரிய மழை காத்திருக்குதோ
மடக்கிய குடையென மூலையில்
உறங்கி கிடக்கும் நியாயமும்
மழைநாள் குடையென யாவருக்கும்
விரியவே ஏங்கி நிற்குதோ
மனப் பூக்கள் மலரட்டும்
மழை பூமியைத் தொடட்டும்
மண்ணும் மகிழ்ந்து குளிரட்டும்
நல்லது செய்து வாழந்திட
நலங்கள் நாடி சூழ்ந்திடும்.
-கோ.லீலா.

பாம்படம்.....


பாம்படம் ஆடி வர
பலகதைகள் பேசி வர
ஊர்கதை வம்பளந்து
உறவுகுள்ள உசந்து
நின்னா முத்தம்மா
இளசா இருக்கையிலே
இளந்தாரியை கைப்பிடிக்கையிலே
மனமுவந்து பூட்டிக்கிட்ட
பொன்நகைதான் பாம்படம்
காது கேக்காத கதையையும்
பாம்படம் வச்சிருக்கும் பத்திரமா
பிறகதை சொல்லும் சரித்திரமா
இட்லி அவிச்ச கதை
இடியாப்ப மாவு இடிச்ச கத
வெல்லம் இடிச்ச உரலுல
முறைமாமன் தலைவிட்ட கத
ஆளான பொண்ணுக்கு
சோவனம் போடும் கத
முறைமாமன் மீசை முறுக்கையிலே
முகம் சிவந்து நின்ன கத
இப்படி ஏதோ ஏதோ கத சொல்லும்
இதிகாசமதையும் விடாது
இப்போ பாக்கு இடி சத்தமோடு
மருமகளை முணுமுணுக்கும்
மத்த நேரம் வெறும் வாசல் பாத்திருக்கும்
மின்விளக்கில்லா வீட்டு சிம்னிப் போல
ஓரத் திண்ணையில ஆத்தா ஒத்தயா
முணுமுணுக்க  பாம்படம் மட்டும்
கேட்ட்தா  தலையசைக்கும்….
கதக்கேட்டு கதச்சொல்லி கதமுடிஞ்ச
பாம்படம் கனத்துக் கிடக்க
பாம்படத்தை கழட்டமா
பக்குவமா பாத்துக்கிட்டான் மகன்
பலகதை சொல்லிடுமோன்னு
பயந்தே போயிட்டான்
பாம்படம் புதைஞ்சி போச்சி
பழங்கதை மறஞ்சி போச்சி
பாட்டியில்லா வீட்டில்
ஐபாடு கதை சொல்லுமா….
-கோ.லீலா.