Monday 27 March 2017

சுற்றுச்சூழலும் வளர்ச்சியும்………


வணக்கம் தோழமைகளே……
ஒரு  நாட்டின் நீடித்த முன்னேற்றம் என்பது சுற்றுச்சூழல் மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தான் அமையும்.

சுற்றுச்சூழல் என்றால் என்ன? நம்மை சுற்றியுள்ள எதுவும் எல்லாமும் என்ற  பொருள் தருமெனினும்.சுற்றுச் சூழல் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட definition இருக்க வேண்டுமென, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986ல் சுற்றுச்சூழல் என்றால் என்ன என்பதை வரையறுக்கிறது.

“நீர்,நிலம்,காற்று ஆகியவற்றை உள்ளடக்கியதே சுற்றுச்சூழல் மற்றும் நீர்,நிலம்,காற்று,இவைகளுடன் மனிதனுக்கும்,மற்ற உயிரினங்களுக்கும், நுண்ணுயிர்களுக்கும் உள்ள  பிணைப்பே” சுற்றுச்சூழல் ஆகும்.
                    

உலக சுகாதார நிறுவனத்தின் கவனத்தின் படி மானுடத்தின் 70% நோய்களுக்கு, குறைப்பாடுகளுக்கும் காரணம் சுற்றுச்சூழல் மாசடைவதாகும். இதில் தொழிற்சாலைகள் வெளியிடும் அபாயகரமான புகை மற்றும் கழிவுப் பொருடகள் பெரும் பங்கு வகிக்கின்றன.அதே போன்று விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இராசயான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் அந்த தாவரங்களில்,உணவுப் பொருட்களில் விட்டுச் செல்லும்  இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் மிச்சங்கள்(residues) மற்றும் பொது சுகாதாரம் சார்பான கட்டமைப்புகளான கழிவு நீர் மற்றும் குப்பைகளும் சுற்றுச்சூழல் மீது தாக்கத்தை நடத்துகின்றன.


இது ஒருபுறமிருக்க வளர்ச்சி என்ற ஒன்று தொடர் நிகழ்வாக மனிதன் தோன்றிய நாளிலிருந்து நிகழ்த்தப்படுகின்றன.ஒரு நாட்டின் சுற்றுச்சூழல் பிரச்சனையென்பது அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அளவை பொருத்து அமைகிறது.இயற்கை வளம்,மக்கள் தொகை பெருக்கம் அவர்களின் வாழ்க்கை முறை என அனைத்தும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு மற்றும் அழிவிற்கு காரணமாகிறது. உலகளவில் சுற்றுச்சூழல் மீது கொள்கை ரிதீயான பிடிப்பு இல்லாத காரணம் போலவே இந்தியாவிலும் அதே நிலைதான் நிலவுகிறது.தனிநபர் உள்நாட்டு உற்பத்தி உயரும் போது சுற்றுச்சூழலின் பாதிப்பும் முதலில் உயருகிறது பின்பு வீழ்ச்சியடைகிறது, EKC (Environmental Kuzent’s curve) காட்டுவது போல்.எனினும் EKC பலரால் எதிர்க்கப்பட்ட ஒரு  எண்ணக்கருவாகும்.(CONCEPT).”Pollute first and clean up later” என்ற கொள்கைதான் இந்த EKC.இதை நோபல்பரிசு வென்ற பொருளாதார நிபுணர் கென்னத் ஆரோ அவர்கள் 1995 ல் எதிர்த்தார்.
ஏனெனில்,முதலில் மாசுப்படுத்திய பின் சரிசெய்வது என்பது முற்றிலும் தோல்வியடைந்த கருத்தாகும் சில சரிசெய்ய முடியாத சுற்றுச்சூழல் பாதிப்பை, வளர்ச்சியடைந்த பின் சரி செய்ய முடியாதென்பதுதான் அடிப்படை கருத்து.

நிற்க.

நீரும்,காற்றும்,நிலமும்,உயிரினங்களும்,நுண்ணுயிரிகளும்,மனிதனும் தொடர் கண்ணிகளால்ஆக்கப்பட்டசங்கிலியால் இணைக்கப்பட்டிருப்பது
தான் இயற்கையின் சாதனை.

உயர்திணையான மனிதன் முதல் அஃறிணையான மற்றவைகளும் ஒன்றை ஒன்று சார்த்திருப்பதுதான் சுற்றுச்சூழலின் அடிப்படை எனலாம்.
நீரை சார்ந்து நிலமும்,நிலம்,நீர்,காற்று சூரிய ஒளியை சார்ந்து தாவரங்களும், விலங்குகளும் மற்ற உயிரினங்களும் உள்ளதே சான்றாகும்.

நிலம்,செடி,கொடிகளுக்கும்,மனிதனுக்கும்,விலங்குகளுக்கும் உணவளிக்கிறது. நிலத்திற்கான உணவை மேற்கூறியவற்றின் கழிவுகளிலிருந்து பெற்றுக் கொள்கிறது.இதன் மூலம் இது ஒரு சுழற்சி முறை என்பதும் புரிய வரும்.இதில் ஒரு கண்ணி அற்றுப் போனாலும் இந்த சுற்றுச்சூழல் பாதிப்படையும்.இயற்கை பாதிப்படைந்தால் மனிதகுலத்திற்கான அழிவு தொடங்குவதை மனிதன் புரிந்துக் கொள்ள வேண்டும்.

இயற்கையை வெல்லுமா மனிதம்?

மனிதனுக்கு,இந்த பூமிக்கு வேண்டிய அத்தனை செல்வங்களையும், வளங்களையும் தருகின்ற இந்த இயற்கையன்னையை மனிதம் வென்றிடுமா?


இயற்கையின் சூழல்தான் நம்மை பாதுக்காக்கிறது என்ற உணர்வே இல்லாமல், இயற்கையை அழித்து வளர்ச்சியை உருவாக்குவது ஒரு முட்டாள்தனமாக உணரப்படவே இல்லையென்பதுதான் ஆழ்ந்த வருத்தத்தை உண்டாக்குகிறது.

தண்ணீருடன் சவால் விடும் பணிதான் என்னுடையது,அணைகள் கட்டுதல், வாய்க்கால் மற்றும் தண்ணீரை எடுத்துச் செல்லும்,தேக்கி வைக்கும் கட்டமைப்புகளை கட்டுவது,வடிவமைப்பது மற்றும் தண்ணீர் பங்கீடு ஆகியவை தான்.

இயற்கையோடு போராடும் பணி! அதீத உடல் ஆற்றலும்,மன ஆற்றலும் தேவை,எனினும் இயற்கையை வெல்ல முடியுமா? நீரோட்டத்தை தடுத்து நிறுத்துவதை என்னால் வளர்ச்சி என ஒப்புக்கொள்ள முடிவதில்லை நிறுத்தப்படுவது நீரோட்டம் மட்டுமல்ல,அங்கு வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை,நினைவலைகள்,அங்கு சுதந்திரமாக பறந்த பறவைகள்,சுற்றி திரிந்த விலங்குகள் அத்தனையின் வாழ்க்கையும் நிறுத்தப்படுகிறது.

ஒரு பொறியாளாராக வளர்ச்சியை நோக்கி பயணிக்கவும்,ஒரு இயற்கை ஆர்வலராக,மானுடத்தின் மீது அன்பு கொண்டவளாக அதை பாதுகாப்பதற்காக பயணிக்கவும் வேண்டிய சூழலில்தான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன்…

இரு விழிகளாலும் ஒரு பொருளை மட்டும்தான் ஒரு நேரத்தில் பார்க்க முடியும் ஆனால் இரு விழிகளாலும் இரு பொருளை சமநிலையோடு ஒரே நேரத்தில் பார்க்க வேண்டிய சூழல் எனக்கு.

அணை,சாலை,பாலம்,அணு உலைகள்,மின் நிலையங்கள், தொழிற்சாலைகள், நிலத்தடி நீரை எடுக்க அனுமதியென  இன்னும் எத்தனையோ முன்னேற்றங்கள் வந்தாலும் அத்தனையும் இயற்கையை அழித்துதான் வரமுடியும்.

அருந்ததி ராயின் “The Greater Common Good”.வைரமுத்துவின் “கள்ளிக்காட்டு இதிகாசம்” "மூன்றாம் உலகப்போர்". இறையன்புவின் “ஆத்தங்கரையோரம்” போன்ற நூல்கள் எல்லாம் இயற்கைக்கு மாறாக,எதிராக அதிகாரமும்,ஆளுமையும் கொண்டவர்கள் சமர் தொடுத்த போது சாமனியனுக்கும்,அவனது இளமை கால நினைவுகளுக்கும் நேர்ந்த கொடுமைகளை கூறுகிறது.

இன்றும் கூட சாலைகளை அகலப்படுத்தும் பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களை பார்க்கும் போதெல்லாம் மனம் பதறிதான் போகிறது.நிச்சய்மாக இயற்கையை குறித்த தொலை நோக்கு உள்ளவர்களாய் இருந்திருந்தால், மரங்களை இடம் பெயர்ப்பதற்கான செலவுகளையும்,அம்மரங்களை மறுநடவு செய்வதற்கான நிலங்களை தேர்வு செய்தல் மற்றும் அதற்கான செலவுகளை மதிப்பீட்டில்,ஒப்பந்தத்தில் சேர்த்திருப்பார்கள்.

இன்றைய சமூகம் நுகர்வோர் சமூகமாக மாறிவிட்டதால் பொருளாதார வளர்ச்சியே வளர்ச்சி என நினைத்துக் கொள்வதும்.அடிப்படை தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டு வேண்டாதவற்றை ஒதுக்குபவரை வறியவரென நினைக்குமொரு மனநிலையும் பரவலாக காணப்படுகிறது. இதனால் வளர்ச்சி என்பது அறிவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்றே எண்ணப்படுகிறது.இயற்கையை வெல்லுவதே வெற்றி என்றும் வாழ்க்கையென்றும் நினைக்கிறார்கள்.
இயற்கையை ஒருநாளும் வெல்லமுடியாது…….

இயற்கையை அழிப்பதாக எண்ணிக்கொண்டு தன்னையே அழித்துக்கொள்ளும் மானுடத்திற்கு தெரியாது இயற்கை தன்னை புதுப்பித்துக் கொள்ளும் என்று…….
                     

சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்தான வாதங்களும் விவாதங்களும்:

வாதம்:பட்டினியால் வாடும் பல்லாயிரக் கணக்கான மக்களை காப்பது இயற்கை வளங்களை காப்பதை விட முக்கியமில்லையா? மேலும் பல இயற்கை வளங்கள் புதுப்பித்துக் கொள்ள கூடியவை.வளர்ந்த நாடுகள் இயற்கையின் மீது காட்டும் அக்கறையை,கடுமையான ஏழ்மையில் வாடும் வளரும் நாடுகள் காட்ட முடியாது…

விவாதம்: ஏற்கனவே வேண்டிய அளவிற்கு இயற்கை வளங்களை அழித்து வீண் செய்துவிட்டோம்.அதனால் பூமி மிக அபாயமான நிலையில் இருக்கிறது.நமது சந்ததியினருக்கு ஒரு நல்ல சுற்றுச்சூழல் உடைய பூமியை விட்டுச் செல்ல வேண்டியது நம் கடமை என்பதால் இயற்கை வளத்தையும் ,பூமியையும் பாதுக்காக்க வேண்டியது இருக்கிறது.மேலும் ஏழ்மையும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஒன்றொடு ஒன்று தொடர்புடையவை, மழைக் காடுகளை அழித்தன் மூலம் மண்ணின் மைந்தர்களுக்கு போக இடம் ஏதுமின்றி நகரத்திற்கு அநாதைகளாக இடம்பெயர வேண்டியுள்ளது. அதோடு மாசுப்படுத்தப்பட்ட நீர், பயிர்களின் விளைச்சலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.தட்ப வெட்ப மாற்றத்தால் வளமான நிலங்கள் பாலைவனம் ஆகின்றன, கடலோர வெள்ளங்களால்பல்லாயிரக் கணக்கான மக்கள் அழிகின்றனர்.வளரும் நாடுகள் தன் மக்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை தர நினைத்தால், நீடித்த  சுற்றுச்சூழல் பாதுக்காப்பையும், வளர்ச்சியையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வாதம்: தொழிற்சாலை மயமாக்கப்பட்ட நாடுகள் வலியுறுத்தும் இயற்கை மற்றும் பசுமை சார்ந்த விஷயங்கள் வளரும் நாடுகளின் முன்னேற்றத்தை தடைப்படுத்தும்.ஏனெனில் வளரும் நாடுகளின் பணிகளில் அது சுணக்கத்தை ஏற்படுத்தும் விஷயமாகவே இருக்கும்,மற்றும் மூன்றாம் உலக நாடுகள் இடையே பெரும் இடைவெளியை உண்டாக்கும்.மேலும் பொருளாதார போட்டியாளர்களை வேண்டுமென்றே தடை செய்வதற்கான வழியாகிவிடும். 
                  
ஏற்கனவே,அமெரிக்க மற்றும் அய்ரோப்பா நாடுகள்,வளரும் நாடுகளில் குறைந்த செலவில் தாயராகும் பொருட்களை இறக்குமதி செய்து கொள்வதற்கு, இறக்குமதி வரி அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அந்த பொருட்கள் அமெரிக்க மற்றும் அய்ரோப்பிய சந்தைகளில் விற்பனையாவது குறிப்பிட வேண்டிய ஒன்று.மேலும் நல்ல லாபம் தரக்கூடிய ஆனால் இயற்கையை மாசுப்படுத்தும் தொழிற்சாலைகளை நிறுவுவதில் தயக்கம் காட்டினால்,அது  நமது தேசத்தை பொருளாதார அடிப்படையில் பின் தங்க வைப்பதற்கான முகாந்திரமாகவே இருக்கும்.

விவாதம்:பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு வாழ்வு தரும் பொருளாதார முன்னேற்றத்தை யாரும் தடை செய்ய சொல்லவில்லை.அதே நேரத்தில் சுற்றுச்சூழல் குறித்தான அக்கறை,சமூக நீதி மற்றும் பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கிய ஒரு நீடித்த நிலைத்த வளர்ச்சியை வலியுறுத்த வேண்டும்.கட்டுபாடற்ற வளர்ச்சியை பூமி தாங்காது…ஏற்கனவே வளர்ந்த நாடுகளிலுள்ள நிறுவனங்கள், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பொருட்டு அங்கு தயாரிக்கப்படும் பொருட்களுக்கு அதிக விலையை நிர்ணயம் செய்துள்ளன,இந்நிலையில் தன் நாடுகளின் இயற்கையை மாசடைய செய்து குறைந்த செலவில் வளரும் நாடுகள் தயாரிக்கும் பொருட்களின் மூலம் வளர்ந்த நாடுகள் லாபம் காண்பது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

வாதம்:வளர்ந்து வரும் நாடுகளில்,மக்கள் பெருக்கத்தின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு பொருளாதார முன்னேற்றம் அவசியம். தொழிற்சாலை மயமாக்குதலை கட்டுப்படுத்த வேண்டுமெனில்,மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான சில சட்ட திட்டங்களை கொண்டு வரவேண்டும் இதன் மூலம்  அத்தியவசியமான தண்ணீர் போன்ற இயற்கை வளங்களை பாதுக்காக்க முடியும்.

விவதாம்:எந்த தேசமாக இருந்தாலும் கட்டுப்பாடற்ற மக்கள் தொகை பெருக்கம் ஒரு விரும்பத்தகாத தாக்கத்தையே உருவாக்கும்.தேசத்திற்கு மட்டுமல்ல மொத்த பூமிக்கோளுக்கும் ஆபத்துதான்…சப் சஹாரன் ஆப்ரிக்க பகுதியின் ஏழ்மை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு காரணமே வேகமாக பெருகி வரும் மக்கள் தொகையே….அதே நேரத்தில் ஒரு தம்பதியருக்கு ஒரு குழந்தை என்ற திட்டத்தை செயல்படுத்தி வரும் சைனா செல்வநிலை வாய்ந்த நாடாக இருக்கிறது…மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதின் மூலம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், சுற்றுச்சூழலை பாதுக்காக்கவும் முடியும்……..

வாதம்: எல்லா தேசங்களும் சுற்றுச்சூழல் சார்பான சட்ட திட்டங்களை சற்று கடுமையாக பின்பற்றினால்,இந்த உலகம் நிச்சயமாக இப்போது இருப்பதை இருப்பதை விட வாழ்வதற்கு தரமான ஒரு இடமாக மாறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை……எனினும் சைனாவில் மிகப் பெரிய மாசடைவை உருவாக்கும் தொழிற்சாலையும் தொழிலும் ஆன Capital Iron and steel works ஐ மூடினால் ஏறக்குறைய 40000 பேர் வேலையை இழக்கும் அபாயம் இருக்கிறது.அதே போல் எல்லா தேசங்களிலும் சுற்றுச்சூழல் சட்டதிட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படும் போது பொருளாதார முன்னேற்றதிற்கு ஒரு தடையாகவே இருக்கும் அதோடு அரசியல் ஸ்திரதன்மையும் கேள்விக்குரியதாக ஆகிவிடும் அபாயமு உள்ளது…..
விவாதம்: எந்த தேசமாகயிருந்தாலும் தொழிற்சாலை மயமாகுதலால்  பெற்ற ஆதாயத்தை விட இழப்புக்களே அதிகம்…குறிப்பாக சைனா  ஒரு சிறந்த உதாரணமாகும் இருபது வருட கட்டுப்பாடற்ற பொருளாதார வளர்ச்சியால் கிடைத்த பலன் மிகவும் அபாயகரமான அதே நேரத்தில் காற்று மற்றும் தண்ணீர் நாள்பட்ட மாசடைவிற்கு உட்பட்டுள்ளது.(Chronic pollution) .இதனால் ஆரோக்கிய கேடுகளை உருவாக்கியுள்ளது,அதோடு பயிர்களின் சேதம் அல்லது இழப்பின் மூலம் ஆண்டுதோறும் பல கோடிக்கணக்கில் பண இழப்புகளை விவசாயிகளுக்கு உருவாக்கியுள்ளது. இதன் மூலம் கட்டுப்பாடற்ற வளர்ச்சி என்பது சுற்றுச்சூழல் கேடுகளை உருவாகுவதுடன், ஒரு பொருளாதார உணர்வுமில்லையன்பதே தெரிய வருகிறது.

வாதம்:வேகமாக வளர்ந்து வரும் தொழிற்சாலை மயமாகுதல் என்பது நினைப்பது போல் சுற்றுச்சூழல் மீது பெரும் அழுத்தத்தை தருவதாக இல்லை…ஏனெனில் அறிவியலின் வளர்ச்சியினால் மாசு அடைவதை குறைக்கும் வண்ணம் பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன.வளரும் நாடுகள்,வளர்ந்த நாடுகள் தொழில்புரட்சி மூலமாக சுற்றுச்சூழல் குறித்து செய்து செய்த தவறுகளிலிருந்தும் சைனா மற்றும் USSR ஆகிய நாடுகளில் நடந்த பேரிழப்புகள் மூலமும் கற்றுக்கொள்ள முடியும்.மேலும் புதிய ஸ்டீல் வேலைகளில் குறைந்த அளவு தண்ணீர்,மூலப்பொருட்கள் மற்றும் சக்தி பயன்படுத்துவதை புதிய அறிவியல் வளர்ச்சியாகவே கருதலாம். அதோடு பாரம்பரிய தொழிற்சாலைகளை விட புதிய தொழில்நுட்பத்தின் மூலம் மாசு குறைக்கப்பட்டுள்ளது.அதே போல் நிலக்கரி மூலம் தயாரிக்கப்படும் சக்தியை விட அணு உலைகள் மூலம் அதிக சக்தியை தயாரிக்க முடிகிறது அதோடு உலக வெப்பமயகுதல் நிலக்கரியின் மூலம் சக்தி தயாரிக்கும் போது அதிகமாக இருக்கும்,அணு சக்தி தயாரிக்கும் போது உலக வெப்ப மயமாகுதலில் இதன் பங்கு குறைவே…அதே போல் சூரிய சக்தி, காற்றில் இருந்து,தண்ணீரில் இருந்து சக்தி எடுப்பது மூலம் புதுப்பிக்கத்தக்க சக்தியை பெறுகிறோம்..
விவாதம்:அறிவியலும்,தொழில் நுட்பமும்,மனிதனுக்கு சுற்றுச்சூழலை கட்டுப்படுத்துவதில் ஒரு ஆளுமையையும்,தன்னம்பிக்கையையும் கொடுத்துள்ளது.இந்த் அரை நூற்றாண்டுக்குள் உலகம் அணு சக்தியால் மூன்று மாபெரும் விபத்துக்களை சந்தித்துள்ளது.Wind scale (UK,1957),Three mile Island (USA 1979) and Chernobyl (USSR 1986) அதே போல் அணு உலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகளை இன்றைய தேதி வரை பாதுக்காப்பாக DISPOSE செய்யவோ அல்லது சேர்த்து வைக்கவோ முடியவில்லை என்பதுதான் உண்மை,இவ்வகை கழிவுகளினால் மனித குலத்திற்கு ஏற்படும் உடல் நலகுறைவுகள் நாட்பட்டதாக இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.அதே மாதிரி நீரிலிருந்து மின்சாரம் எடுப்பதென்பது, தண்ணீரை அணைக் கொண்டு நிறுத்துவதென்பதும் பெரும் அழிவுகளை உருவாக்க கூடியதே எடுத்துக்காட்டாக சைனாவில் கட்டப்பட்ட 3’Gorges அணை கட்டும் போது பலர் இடம்பெயர்ந்ததும்.அவ்விடம் நல்ல மழை பெறக்கூடிய இடமாகும். ஆனால் அணை கட்டிய பின் ஒரு வருடத்திற்கு மழையில்லை,திடீரென acute rainfall பெய்ததும் யாவரும் அறிந்த ஒன்றே. இதனால் தட்ப வெட்ப சூழ்நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


            .

வாதம்:வளரும் நாடுகளை,அல்லது ஏழ்மையுள்ள நாடுகளை சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க சொல்வதும்,அதை பாதுக்காக்க சொல்வதும் வளர்ந்த நாடுகளின் பாசங்குதன்மையைதான் பறைச் சாற்றுகிறது.ஏனெனில் தொழிற்சாலை மயமாகுதல் என்ற பெயரில் மொத்த சுற்றுசூழலையும் அழித்து இன்று பொருளாதார வளர்ச்சியில் முதல் இடத்தில் இருப்பவைகள் தாம் இந்த வளர்ந்த நாடுகள்.தன் நாட்டின் பல்லாயிர கணக்கான மரங்களை வெட்டி வீழ்த்தி,தண்ணீரை மாசடைய செய்து,இந்த வளி மண்டலத்தில் டன் கணக்கில் கார்பனை அள்ளி தெளித்த நாடுகள் தான் இன்று அறிவுரை கூறிக்கொண்டிருக்கிறது. அறிவுரை கூறும் தகுதி இல்லையனினும்,இந்த நாடுகள் பொருளாதார ரீதியில் முன்னேறிய நாடுகளெ இன்று சுற்றுச்சூழலைப் பற்றி அக்கறையுடன் இருக்கின்றன. அதற்கென ஏதாவது செலவழிக்கும் நிலையிலும் இருக்கின்றன.எனவே வளரும் நாடுகள் பொருளாதார வளர்ச்சியுற்ற பின் சுற்றுச்சூழல் பற்றி சிந்திக்கலாம்அவகாசம் உள்ளது.

விவாதம்:நம் உலகின் உடையக்கூடிய கூட்டுத்தன்மையைபார்த்த பின்னர், காலசூழல்களில் அல்லது தட்ப வெட்ப நிலைகளில் நிகழும் வெகுவான மாற்றம் என்பது வளர்ந்த நாடுகளை மட்டுமல்ல,மொத்த புவிக் கோளையும் பாதிக்கக் கூடியது.இன்னும் சொல்லப் போனால்,தட்ப வெட்ப மாற்றங்களால் கடல்மட்ட உயர்வு,பாலைவனங்கள் உருவாகுதல்,மற்றும் இயற்கை பேரிடர்கள் போன்றவைகளால் வளரும்  நாடுகளே அதிகமாக பாதிக்கப் படுகிறது.சைனா மற்றும் இந்தியாவின் கட்டுப்பாடற்ற பொருளாதார வளர்ச்சியை கணக்கில் கொள்ளாமல்,அய்ரோப்பாவில் மரம் வெட்டுவதை நிறுத்துவதால் எந்த பயனும் இல்லை. சொல்லப் போனால் இத்தகைய போக்கு சுற்றுச்சூழலின் அழிவைதான் அதிகமாக்கும். மாறாக,வளர்ந்த நாடுகள்,வளரும் நாடுகளில் சுற்றுச்சூழலை பாதுக்காப்பு செய்ய பசுமை சார்ந்த தொழில் நுட்பங்களை வளரும் நாடுகளுக்கு கடத்தலாம். மேலும் நீடித்த மற்றும் நிலைத்த நல்ல சுற்றுச்சூழலை உருவாக்க பொருளாதார உதவி செய்யலாம்.

வாதம்: பசுமை புரட்சியின் மூலம் இரண்டு மடங்கு தானிய மகசூலை அறுவடை செய்கிறோம்,அதனால் அதிகளவு தானிய உற்பத்திக்காக காடுகளை அழித்து விளை நிலமாக ஆக்க வேண்டிய அவசியமில்லை. இன்றைய உலகில் பெருகி வரும் மக்கள் தொகை அனைத்திற்கும் சுற்றுச்சூழலை அழிக்காமல் உணவளிக்க கூடிய அறிவியலையும், அறிவையும் பெற்றுள்ளோம்.மேலும் வளரும் நாடுகளில் குறைந்த அளவு தண்ணீர் மற்றும் உரங்கள்,பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி அதிக மகசூலை பெறக்கூடிய மரப்பணு மாற்றம் செய்யப்பட்ட பயிர் வகைகளை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலை அழிக்கமால் பொருளாதார வளர்ச்சி அடைவதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
                   
விவாதம்: பசுமை புரட்சி என்ற பெயரில் கலப்பின விதைகளை(hybrid seeds) அறிமுகம் செய்து நாட்டு விதைகளை அழிவிற்கு கொண்டு வந்ததன் மூலம் மூன்றாம் உலக நாடுகளின் பல்லுயிர் (அ) உயிரியற் பன்வகைமைகளை (biodiversirty) மிரட்டுவதாக உள்ளது.சுற்றுச்சூழல் அல்லது பொருளாதார வளர்ச்சியில் நீண்ட கால பலனாக பசுமை புரட்சி என்ன செய்யும் எனத் தெரியவில்லை.எனினும் குறைந்த கால பலனாக நாட்டு ரக விதைகளையும், தாவரங்களையும் அதை சார்ந்து வாழும் விலங்குகளையும் அழித்துவிட்டது என்பது தெளிவாகவே தெரிகிறது. அதோடு கலப்பின விதைகளை பயன் படுத்தும் விவசாயிகள் வருடா வருடம் விலையுர்ந்த விதைகளை வாங்க வேண்டியிருக்கிறது.ஏனெனில் நாட்டு விதைகளை போன்று வருடம் முழுவதும் பாதுகாப்பாக சேமித்து எதிர்வரும் வருடத்திற்கு விதையாக பயன்படுத்த முடியாது.எந்த பகுதிகளிலெல்லாம் இந்தியாவில் அதிகமாக கலப்பின விதைகளை பயன்படுத்தினார்களோ அங்கெல்லாம்,விவாசாயிகள் திவாலாகிப் போனார்கள்.இதை தொடர்ந்து நல்ல வளமான நிலங்கள் எல்லாம் உழப்படாமல் தரிசாகியும்,பாலைவனமாகவும்(desertification) மாறிவிட்டன.  
நிற்க. இப்படி நீண்ட நெடிய வாதங்களுக்கும் விவாதங்களுக்கும் உட்பட்டதே இந்த நடைமுறை பிரச்சனை.

”கண்ணை விற்று சித்திரம் வாங்கிடில் கைக்கொட்டி சிரியாரோ” 

                          
என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. சுற்றுச்சூழல் ரீதியான அழிவை ஏற்படுத்தும் பொருளாதார வளர்ச்சியால் ஒரு சமத்துவமின்மைதான் உருவாகிறது.”Survival of the fittest” என்ற டார்வினின் கருத்தே வலியுறுத்தப்படுகிறது……….

     “மனிதனால் ஒரு நாளும் இயற்கையை வெல்ல முடியாது.”

கார் வேகத்தில் பொருளாதார வளர்ச்சியும்,நத்தை வேகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் நடைபெறும் வரை உலகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியே....
நன்றி தோழமைகளே....வேறொரு செய்தியுடன் விரைவில் சந்திப்போம்.
-அன்புடன் லீலா. 

Saturday 18 March 2017

திருக்குறளின் நான்காம்பால்.


வணக்கம் தோழமைகளே……….



வாங்க,வாங்க இன்றைய உரையாடல் மேடை சற்றே இலக்கியமும் இயற்கையும் இணைந்த அற்புதம்….

ஹேமா: என்ன மேம்  நான்காம் பால்?

சியாமளா: அதானே திருக்குறள் னா முப்பால்தானே.

நான்: இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்.

பரிமள்: என்ன திடீர்னு திருக்குறள் எல்லாம்.

நான்: ஒப்பு உவமையற்ற இனிய தமிழ் மொழியில் பல காப்பியங்கள் இயற்றப்பட்டுள்ளன.இதில் எனக்கு மிகவும் பிடித்த முதன்மையான தமிழ் நூல் திருக்குறள். அதனால்தான் திருக்குறள் பற்றி இன்னைக்கு பேசலாம் ன்னு.

இன்று மேலாண்மை (Management) படிப்பில் வெளிநாட்டு அறிஞர்கள் கூறியதாக படிக்கும் அனைத்து மேலாண்மை உத்திகளும் திருக்குறளில் கூறப்பட்டுள்ளது என்பது தமிழ் இனத்தின் அறிவிற்கு ஒரு சான்று ஆகும்.

அனிதா: ஆமாம் நான் கூட அதை உணர்ந்திருக்கேன் அது சரி எப்பவுமே இயற்கை,சூழல் இப்படித்தானே பேசுவோம், என்ன இலக்கிய பக்கம்?.

நான்:மேலாண்மை என்பது திருக்குறளின் கூடுதல் சுவையே.தமிழ் இலக்கியத்தில் வாழ்வியல் தத்துவ நூல்எனில்அறம், பொருள்,இன்பம்,வீடுபேறு பற்றி கூறுவதாக இருக்கும்,ஆனால் திருக்குறளில் அறம்,பொருள்,இன்பம் பற்றி மட்டும் கூறி வீடுபேற்றைப் பற்றி கூறாமல் விடுத்ததின் மூலம் அறம் செய்து, அற வழியில் பொருள் தேடி,பிறன்மனை நாடாமல் நேர்மையாக மனையாளுடன் இன்பம் கண்டு,வாழ்ந்தாலே வீடு பேறு கிடைக்கும் என்பதை சொல்லாமல் சொல்லியிருப்பதே திருக்குறளின் தனிச்சிறப்பு.

 தான் தோன்றிய காலத்திற்கு மட்டும் இல்லாமல்,இந்த நூற்றாண்டு மனிதர்களுக்கும் பொருந்தும் வாழ்வியல்  தத்துவம்குறள், இலக்கியம் மட்டுமன்று ஒரு வாழ்வியல் பதிவு.

பாரதி,பெரியார் யாவருக்கும் முன்னே ஆண் பெண் சமம் என்பது குறித்தான செய்திகளை பதிவு செய்து புரட்சி செய்தவர் வள்ளுவர்.

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

என்ற குறளின் மூலம் இந்த ஆற்றலும்,ஞானமும் நிறைந்த பெண்களை இந்த சமூகத்திற்கு தந்துள்ளார்.

கருத்தாழம் மட்டுமின்றி கவியாழமும்,இலக்கிய சுவையும் நிறைந்த குறளில் உள்ள நான்காம் பால் பற்றிதான் இதில் பேசப்போகிறோம்.அனிதா நீ கேட்ட கேள்விக்கு பதில்தான் இந்த நான்காம் பால் அதுதான் இயற்கையைப் பற்றிய பால்.

செல்வா: அதானே பார்த்தேன்,நல்ல சுவாரஸியமான செய்தியைதான் பேசப்போறோம்.

நான்: உலகம் என்பது நிலம் நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்  ஆகியவற்றால் ஆனது.

மனிதர்களுக்காக மட்டுமில்லை செடி,கொடி,மரம்,விலங்குகள், பறவைகள்நீர் வாழ்வன, நில வாழ்வன,பூச்சிகள் வண்டுகள் மற்றும் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகள் என பல உயிரினங்களுக்கும் சொந்தமானதுதான் இந்த உலகம்.

பல்லுயிர்களும் வாழ்வதற்கான இடம் இது. நிலம் நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றில் அனைத்திற்கும் உரிமை உண்டு.இந்த அடிப்படை செய்தியினை மனிதன் மறந்ததுதான் இன்றைய சூழலியல் சீர்கேட்டிற்கு காரணம்.எல்லா உயிரினங்களுக்கும் சம உரிமை அளிக்கப்படாமல்,மனிதனின் தன்னலம் ஓங்கியதால்.உயிரின சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது.அதாவது உயிரின சங்கிலி தொடர் அறுப்பட்டு சூழல் பெரும் துயர் அடைந்துள்ளது.


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

பிறப்பினால் எல்லா உயிரும் ஒரே தன்மையானதுதான் என்று கூறியிருப்பதன் மூலம் இந்த உலகத்தில் எல்லா உயிர்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற உயரிய சிந்தனையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்து இருக்கிறது குறள்.இதில் சாதிய மறுப்பினை மட்டுமின்றி “உயிர்” என்ற சொல்லின் மூலம் ஓரறிவு முதல் ஆறறிவு உயிர் வரை பிறப்பினால் ஒத்தது என்றும் கூறியிருக்கிறார்.

ஹேமா: அடடே! உண்மைதான் ஆனா,மனிதர்கள்தான் இதை பின்பற்றுவதில்லை…..

நான்:பல்லுயிர் இல்லையென்றால் சூழலியல் ஏது? ஆங்கிலத்தில் BIODIVERSITY என்று கூறுவார்கள்.Biological diversity is generally refers to varieties and variability of life on Earth. இதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு தமிழ் நூலில் குறிப்பிடப்பட்டிருப்பது அறிந்து சுவைக்கப்பட வேண்டிய குறிப்பு.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

என்ற குறளின் மூலம் பல்லுயிர்களையும் பாதுக்காக்க வேண்டுமென்றும் அதோடு,பகுத்துண்ண வேண்டும் என்றும் அதுதான் தலையாய அறம் என்றும் கூறுவதன் மூலம், சூழலியல் முக்கியத்துவத்தை பதிவு செய்திருக்கும், குறளை போற்றி காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது அல்லவா?

பாலாஜி: சரி மேம் பல்லுயிர் பற்றி சொல்லியிருக்காரே அவைகளுடைய பாதுக்காப்பு குறித்து ஏதும் பதிவு செய்திருக்கிறாரா?

நான்: நல்ல கேள்வி சார், அதுதானே உலகின் இன்றைய பேசுப் பொருள்.

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின் நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.

மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ என்பதுதான் இக்குறளின் பொருள்,”மற்ற உயிர்களின்” என்று குறிப்பிட்டதன் (பிறிதின்) மூலம் preservation of biodiversity பற்றி கூறியிருப்பது மிகுந்த வியப்பும்,மகிழ்வும் தருகிறது   வள்ளுவரின் தொலை நோக்கு பார்வையும்,மற்ற உயிர்களிடத்தில் அவர் கொண்டிருந்த அன்பும் போற்றப்பட வேண்டிய ஒன்று.அதோடு பெருமிதமும் கொள்ள வேண்டியதும் ஆகும்.

செல்வா:உண்மைதான்.ஒரு குறள் தான் பாதுக்காப்பை பற்றி சொல்லியிருக்காரா?

எனக்கு தெரிஞ்சி இன்னும் சில குறளும் இருக்கு

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

இதன் பொருள் தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை,உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.

இதன் மூலம், மீண்டுமொரு முறை மற்ற உயிர்களை பாதுக்காத்தல் குறித்து பதிவு செய்துள்ளார்.

பரிமள்: அப்போ,சிக்கன்,மட்டன் பிரியாணியெல்லாம் போடுறோமே அதெல்லாம் ???

நான்: அதெல்லாம் சாப்பிடக்கூடாதென ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார் பரிமள்.

சியாமளா: மேம்,சோறு முக்கியமாச்சே.

நான்:சோறு உண்டு,கோழிச்சோறுதான் கிடையாது.

பாலாஜி: என்ன மேம் சஸ்பென்ஸ் எல்லாம் வைக்கிறீங்க.நான்வெஜ் இல்லையா!

நான்: ஹேமா மேம் உங்களுக்கு பிரச்சனை இல்லை.

அனிதா & செல்வா: ஏ! சொல்லுப்பா.

நான்: கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
               எல்லா உயிருந் தொழும்.


ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும் என்பதுதான் இதன் பொருள்.

புலால் உண்ணாமை,கொல்லாமை என பல அதிகாரங்கள் பிற உயிர் பாதுக்காப்பு மற்றும் போற்றுதலுக்காக எழுதியுள்ளார்.இதன் மூலம் அவர் பிற உயிர்களின் மீது கொண்டுள்ள அன்பின் மூலம் சிறந்த சூழலியில் ஆர்வலர் என்பது தெரிய வ்ருகிறது.

ஹேமா: அது சரி,நாம நீர் வள ஆதார துறையில் இருக்கோம் வள்ளுவர் அத பற்றி என்ன சொல்றார்.

நான்:மிகச் சரியா கேட்டீங்க மேம்,சூழலியல் என்றால் தண்ணீர் பற்றி பேசாமல் எப்படி,அதுவும் தண்ணீருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கார்ன்னு பாருங்க.முதல் அதிகாரம் வழிபாடு,இரண்டாவது அதிகாரம் வான்சிறப்பு தான்.

ஓவிய வடிவில் குறள்-அய்யா நடராஜன் அவர்களின் ஓவியம்

பத்து குறள் இதற்கெனவே எழுதியிருக்கார், அதோடு ஆங்காங்கே நீரின் சிறப்பு,இயற்கையின் அரணும் நாட்டிற்கு தேவையென்பதையும் கூறியிருக்கிறார். நாடு எனும் அதிகாரத்தில்

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

என்று பதிவு செய்துள்ளார்.

இந்த குறளில்,நாட்டிற்கு எது உறுப்பு எனும் போது மாட மாளிகை கோபுரங்கள்,கருவூல பெட்டிகளையெல்லாம் கூறவில்லை.மாறாக
ஊற்றும்,மழையுமாகிய இருவகை நீர்வளமும்,தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும்,வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும் என்கிறார்.

குறளின் பொருளை ஆழ்ந்து நோக்கினோமானால்,குறள் எந்த அளவிற்கு நீர் வளத்தை வலியுறுத்தியிருக்கிறார் என்பதும் அதை ஒரு அரசுக்கு சொல்லியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே போல் அரண் எனும் அதிகாரத்தில்.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.

மணிநீர் என்றால் கண்ணாடி போன்ற சுத்தமான் நீர் (Crystal clear water)

மண் குறித்து கடைசியாக காண்போம்.

மலை என்பது யாவரும் அறிந்த ஒன்று

அணிநிழற் காடு என்பது குளிர்ந்த நிழல் தரக்கூடிய காடு ஆகும்.

மண் என்பது குறித்து ஒரு பொறியாளராக தேடி பார்த்த போது

குறளுக்கு விளக்கவுரையாக வெட்ட வெளி நிலமென கொடுக்கப்பட்டிருந்தது.மீண்டும் மீண்டும் தேடியபோது மருநிலம் என பொருள் கிடைத்தது.

அதாவது,சூரிய ஓளி நுழைய முடியாத அளவிற்கு அடர்ந்த சோலைகாடுகளின் இலைகள் உதிர்ந்து மட்கி,மண் போன்றாகி நிலம் தன் இயல்பு நிலையிலிருந்து மருவி நிற்கும். மருநிலம் தண்ணீரை பூமிக்குள் ஊடுருவ விடாமல் மேலே தாங்கி பிடித்து தக்க வைத்து கடை நிலை வரை கொண்டு சேர்க்கிறது. இதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்திருப்பது வள்ளுவரின் தொலைநோக்கு பார்வையையும், சூழலியல் சார்பான அவரது நுணுக்கமான அறிவாற்றலும் தெரிய வருகிறது.

அதோடு இரண்டாவது வரியில் “காடும் உடைய தரண்” என்பதன் மூலம் மொத்த பரப்பளவில் 33% காடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருப்பதும் நுணுகி ஆராய்ந்து இன்புற வேண்டிய ஒன்றாகும்.

அனைவரும்: நம் தமிழ் நூல் எவ்வளவு நுட்பமான கருத்துக்களை இந்த உலகத்திற்கு தந்துள்ளது என்று நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கு.

நான்: இன்னும் பல செய்திகள் உள்ளன, நாடு என்ற அதிகாரத்திலேயே,

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு.

என்கிறார் இதில் முதல் இரண்டு சீரும் சொல்வது “செழிப்பு குறையாத விளைபொருள்” என்பதாகும்.இதன் மூலம் சிறந்த விளைநிலமும்,உழவும் தேவையென்பதை மறைமுகமாக சுட்டியிருக்கிறார்.

நாடென்ப நாடா வலத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.

என்ற குறளில் இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளை விட,இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடாகும் என்பதன் மூலம்,அவர் இந்திய நாட்டில் வசித்தது மட்டுமல்லமால்,இயற்கை வளம் நிறைந்த நாடாக இருந்ததையும் சுட்டுகிறார்.

அனிதா: அடேயப்பா! எவ்வளவு பெரிய கருத்துக்களை ஒண்ணே முக்கால் அடியில் சொல்லியிருக்கிறார்.

நான்: ‘கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்’,‘அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்’ ஆகிய புகழ் மொழிகளுக்கு உரியது அல்லவா உலக பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள்.

செல்வா&பாலாஜி: சரி வான் சிறப்பில் கூறியிருப்பது பற்றி சொல்லுங்க கேட்போம்..

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.

உணவுப் பொருளை விளைவிப்பதோடு தானும் நீராக உண்ணப்படுவது என மழையின் பெருமை பாடும் பாடல் இது.

நீராக உண்ணப்படுவது என்பதை நேரடி பொருள் பார்த்தால் குடிநீராக பயன்படுகிறது என்பது விளங்க்கும்,எனினும் சற்றே ஆழ்ந்து நோக்கினால் சூழலியல் நிபுணர்கள் கூறும் “ மறை நீர் “ தத்துவத்தை அன்றே பதிவு செய்திருக்கும் மதி நுட்பம் எத்தகையது. “மறை நீர்” என்றால் என்ன என்பது குறித்து முந்தைய பதிவில் விரிவாக பார்த்தோம்.அதாவது ஒரு கிலோ அரிசி தயாரிக்க ஆகும் தண்ணீர் செலவு 5000லிட்டர் எனில்.அது அரிசி வாங்கும் போது நேரிடையாக தெரியாது எனினும்,கண்ணுக்கு புலப்படாத நீராக அரிசியில் இருக்கும் இதைப் போல் ஒரு பொருளை உருவாக்க ஆகும் கண்ணுக்கு புலப்படாத நீரின் செலவே மறை நீர்(virtual water) ஆகும்.ஒரு உணவை உட்கொள்ளும் போது அந்த மறை நீரும் உண்வாக இருப்பதாகவே கணக்கிடப்படுகிறது.

இப்போது நீரானது எப்படி தானே உணவாகவும் இருக்கிறது என்பது புரியும்.

இதை உணர்ந்தபோது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மாபெரும் அற்புதம் திருக்குறள் என்பது விளங்கும்.


திருக்குறள் ஓலைச்சுவடி

                                               

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.

இந்த குறள் நமது துறையின் தாரக மந்திரமாகும். உலகில் மழிய இல்லையென்றால் ஒழுக்கம் கெடும் என்று கூறுவதன் மூலம் மழையின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்.

சியாமளா&பரிமள்: கேட்க பிரமிப்பா இருக்கு திருக்குறள் படிக்கிறோம் ஆனால் ஒழுக்கம்,நட்பு,கல்வி என்று மட்டும் நோக்கும் நாம் சூழலியல் குறித்து ஆழ்ந்து நோக்கவில்லை என்பது சற்று ஆச்சரியமாக இருக்கு.

ஹேமா&பாலாஜி: உண்மைதான்,உழவு பற்றியும் தனி அதிகாரம் எழுதியிருக்கிறார் இல்லையா மேம்…..

நான்:சரியா நினைவுப்படுத்தினீங்க…..

தொடிப்புழுது கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

எனும் குறளில் ஒரு பலம் புழுதி காற்பலம் ஆகும் அளவுக்கு பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றி பயிர் செழித்து வளரும் என்பதன் மூலம் எப்படி உழவு செய்ய வேண்டும் என்பதையும்,எரு என்பது இங்கு இயற்கை வேளாண்மை முறையையே குறிப்பிட்டிருக்கிறார் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழிவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை.

என்ற குறளின் வழியே பற்றை விட்டுவிட்ட்தாக்ச் கூறும் துறவிகள் கூட உழவர்களின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும் என் கிறார் துறந்தாராலும் துறக்க முடியாத்து உழவு என்பதே இதன் உட்பொருள்.

ஒரு படி மேலே சென்று,

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

என்கிறார்.இப்படி சூழலியல் சார்பான,நீர்,நிலம்,காற்று,உழவு,என அனைத்து செய்திகளையும் பதிவு செய்துள்ளார்.


அது மட்டுமின்றி இன்னும் ஏனைய அதிகாரங்களில், உவமையாக இயற்கை சார்ந்த பொருளையே கையாண்டிருக்கிறார்.

அனிதா: அதையும் தெரிஞ்சிப்போம் சொல்லு.
நான்: "அவை அறிதல்"  அதிகாரத்தில்.

"பாத்தியுள் நீர்சொரிந் தற்று "என்று உவமை கூறுகிறார் அதே போல் உழவு என்ற அதிகாரத்தில் நீர் பாய்ச்சுதலும்,களை எடுத்தலும் உரம் இடுதலும் எவ்வளவு நல்லது எனக் குறிப்பிடுகிறார்.இதன் மூலம் உழவு தொழில் எத்தனை பழமை வாய்ந்தது என்பது விளங்கும்.

இப்படி பல்வேறு இடங்களில்,வான்,நிலம்,நீர்,நெருப்பு,காற்று எனும் அய்ந்து இயற்கை வளங்களை குறித்தே பேசுகிறார்.

பல இடங்களில் அனிச்சம,குவளை போன்ற மலர்கள்,பனை மற்றும் மூங்கில் மரங்கள்,தினை போன்ற சிறுதானிய வகைகள்,நெருஞ்சி பழம்,குன்றிமனி எனும் விதை குறித்த பதிவும் கிடைக்கப் பெறுகிறது.மூங்கில் என்பது புல்வகை எனினும் சொல் வழக்கில் மரமென்றே சொல்கிறோம்.

அதே போல் மரத்தின் மேன்மையை கீழ்கண்ட குறளில் பதிவு செய்திருக்கிறார்.

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யாங்கண் படின்.

பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.

அனைவரும்:இன்று ஒரு நல்ல செய்தியைப் பற்றி பேசிய மனநிறைவும்,நம் தமிழர்களின் வாழ்வியலும்,அவர்கள் இயற்கையை போற்றி பாதுக்காத்து அதன் சூட்சமத்தை உலகுக்கே சொல்லிய நம் திருக்குறள் என்பதை  நினைக்க மிகவும் பெருமிதமாகவும் இருக்கிறது.

நான்:ஆமாம் நண்பர்களே! இன்னும் பல சூழலியல் கருத்துக்கள் திருக்குறளில் புதைந்து கிடக்கிறது,நேரம் ஆகிவிட்டது,அதனால் பிறிதொரு நாள் திருக்குறள் எனும் புதையலை தோண்டி இன்புறுவோம்.






அறம் படி,பொருள் படி அப்படியே இன்பம் படி

அத்தனையும் தஞ்சமானது இயற்கையின் மடி.

அறம் பாடிய நூலொன்று வனமும் பாடி சென்றுள்ளது


பொருள் பாடிய நூலொன்று புழுடி உழவு பாடி சென்றுள்ளது

இன்பம் பாடிய நூலொன்று இயற்கையை பாடி சென்றுள்ளது.


"திருக்குறளின் நான்காம் பால் சூழலியல் தான்".

ஒரு சில அரிய தகவல்கள் :

திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறளை ஒவிய வடிவில் தந்துள்ளவர் திருப்பூர் பக்கம் நல்லூர்,விஜயபுரத்தில் வசிக்கும் நல்லாசிரியர் விருது பெற்ற ஓவியாசிரியர் நடராஜ் அவர்கள்.

கிட்டத்தட்ட 85 ஆண்டுகளுக்கு முன்பு, பெண்கள் எழுத வருவதே அரிதாக இருந்தது. ஆனால் மருங்காபுரி ஜமீன்தாரிணியான கி.சு.வி.லட்சுமி அம்மணி, 1929-ம் ஆண்டு திருக்குறள் தீபாலங்காரம் என்னும் பெயரில் ஒரு அற்புதமான உரை நூலை எழுதித் தமிழுக்கு அளப்பரிய சேவை செய்துள்ளார்.

                      

                                  மருங்காபுரி ஜமீந்தாரிணி.


பொறுமையுடன் உரையாடலை கேட்டதற்கு நன்றி தோழமைகளே………..

-அன்புடன் லீலா.