Thursday 3 June 2021

யாருக்கு கிடைக்கும் இப்பேறு.



குவளையம் வியந்து போற்றும்

திருக்குவளையே !

முத்துவேலர் அஞ்சுகத்தம்மை

ஈன்றெடுத்த நித்திலமே!

உறங்கினாலும் சிங்கம் சிங்கம்தானே !

தமிழை கர்ஜித்த தங்கமே !

உயிர்ப்போடு இருக்கும் என் எண்ணமே !

படைப்புலகின் பெட்டகமே !

தாடியில்லா கம்பனே!

சொற்களில் விளையாடும் வம்பனே !

தடியில்லா பெரியாரே!

பொடியில்லா அண்ணாவே!

எவ்வளவு எழுதினாலும் தீருமோ

உன் தமிழ் மீதான மோகம்!

திருக்குவளையை அடக்க முடியுமோ 

சிறு குவளைக்குள்!


நீ அலைந்த மண்ணில் நானும்

அலைந்தேன் என்பதொன்று போதாதா?

நீ கல்வி கற்ற இடத்தில்

கற்றேன் என்றாலது இறுமாப்பா?

கமலாலய காற்றில் வீசும்‌ உன்

தமிழை சுவாசித்தது வரமல்லவா?

யாருக்கு வாய்த்திருக்கும்‌ இப்பெரும் பேறு !

எண்ணி எண்ணி எய்துகிறேன் இறும்பூது!


தலைமுறைக்கும் தமிழ்போதித்த

குரு தெட்சிணாமூர்த்தியே!

இன்று எளியோரின் கையில் தவழும் கருணா "நிதி"யே

ஊரெல்லாம் கலைஞர் எனும்

சிலர் கருணாநிதி என்பர்

பலர் தலைவர் என்பர்...

எங்களுக்குதான் வாய்த்தது

நம்ம ஊரு தாத்தா எனும் பெரும்பேறு !

திருவாரூரில் நீ அசைத்த

பெருந்தேரு சொல்லும்

உன் சமத்துவ கூறு!


பூம்புகார் புகழடையும்

வள்ளுவர் எழுந்து நிற்பார்

தாத்தா நீ கோலெடுத்தால்

எழுது கோலெடுத்தால்!


அந்நிய தேசத்தில் இருந்தது போலிருந்தோம்

புண்ணிய தேசமாய் உணருகிறோம்

ஒரு மரம் பூத்ததில்...


கொடுங்காலத்தில் மருத்துவ மணம் வீசும் நீலமலரது!

உன் கிளைகள் என்றும் 

சமத்துவத்தைதான் பூக்கும்!


- கோ.லீலா.

Wednesday 2 June 2021

குக்கூ குக்கூ

 

குக்கூ குக்கூ ன்னு சத்தம் கேட்குதா?

ஆமாங்க மே10 உலக வலசை போதல் தினம்.

பழைமையான காடு என்றால் அதிகமான ஓசை இருக்கும்...

பறவைகளின் கீச்சொலி கீதம் மட்டுமில்லை, காடுகளின் அடிநாதம் அதுதான்.

காட்டின் நலனை பறவைகளின் ஓசையை வைத்துதான் கணிக்கிறார்கள்....

வண்ண வண்ணச் சிறகுடன் எண்ணம் நிறைக்கும் இசையுடன்

விதையை தூவி பச்சைய பாத்திரம் செய்யுமோர் அட்சயப் பாத்திரம் பறவைகள் பற்றி பார்க்கலாம் வாங்க...

வலசை என்பது தமிழர்களுக்கு புது சொல் அல்ல... புலம்பெயர் புள், வம்பப் புள் என்றெல்லாம் பழந்தமிழ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புள் =பறவை.

பறவை மட்டுமல்ல பல்வேறு கானூயிர்களும், கடல்வாழ் உயிரினங்களும் புலம்பெயர்கின்றன.

பூமியின் காந்த விசையில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து தாங்கள் சேருமிடத்தைக் கண்டறிகின்றன.

ஆமா பறவைகள் ஏன் வலசை போகின்றன...

மனிதர்கள் தேன்நிலவுக்கு போற மாதிரிதான், இனப்பெருக்கம் செய்ய தக்க சீதோஷ்ண நிலை உள்ள இடத்திற்கு பறந்து போறாங்க, ஆனால் எல்லோரும் அப்படியில்லைங்க...

திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடுங்கற மாதிரி ஓரிடத்தில் ஏட்படும் உணவு பற்றாக்குறையை சரிசெய்துக் கொள்ள சொய்ங்னு பறந்து நம்ம நாட்டுக்கும், ஆப்பிரிக்கா வுக்கும் ஏப்ரல், மே மாதங்களில் வந்திடுவாங்க...

ஹனிமூனோ, வேலையோ, வெளிநாடு போக தயாராகணும் இல்லையா?

எப்படி தயார் ஆகுறாங்க பாருங்க !

இடம்பெயர்வதற்கு முன்பாக தனது எடையில் பாதி எடைக்கு ஓர் அடுக்கு கொழுப்பை உடலில் சேர்த்துக்கிறாங்க. 200 கிராம் எடையுள்ள ஒரு பறவை, உடலில் 100 கிராம் கொழுப்பை சேமித்துக் வச்சிக்கிறாங்க. இதுதான் பறப்பதற்கான எரிசக்தியாம்.

சில பறவைகள் கறுப்பு நிறத்திலும், ஆழ்ந்த பிக்மென்ட் மற்றும் உயர்வான ஆன்டி ஆக்சிடன்ட் கொண்ட பழங்களை விரும்பி சாப்பிடுவாங்க.

இதனால்தான் ஒரே மூச்சில் பல ஆயிரம் கி.மீ., பறக்கும் மூக்கானால், எட்டரை நாட்கள் பட்டினியாக இருக்க முடிகிறது.

எப்படி அணிவகுத்து பறக்கணும்னு கூட ஒத்திகை பார்த்துப்பாங்க..

V வடிவத்தில் அணி வகுத்து பறப்பாங்களாம், முதலில் யாரு தலைவர்னு முடிவு செய்யணும்ல...

அப்படி ஒரே ஒரு தலைவரெல்லாம் கிடையாது..‌.‌ எல்லோரும்‌ இந்நாட்டு மன்னர்கள்னு ஷிப்ட் போட்டு அணியை தலைமை தாங்கி பறப்பாங்க.

தலைமை தாங்குறவங்க சிறகசைக்க, காற்றின் வேகத்திற்கு V  வடிவத்தில் பறப்பதால், பின்னால் வரும் பறவைகளுக்கு கொஞ்சம் சிறகசைக்கும் வேலை மிச்சமாம்.

பறவைகள், முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் நிலமே அதன் தாய் நிலம் என்கிறார்கள் பறவையிலாளர்கள்.

நாம சொல்ற வானிலை மழை வரும்னா வராது, வராதுன்னா வரும் அப்படியில்லைங்க, இவங்க வானிலையை அறிவதில் பலே கில்லாடிகள்...

இவங்க வான்வழி பாதையாக 12 பாதையை வச்சிருக்காங்க...

பறவைகளும்‌ காதலும்

🐧❤️🐧❤️🐧❤️🐧❤️🐧❤️🐧❤️🐧


பெண் பறவையை‌ கவர தூக்காணங்குருவி அழகாக கூடு கட்டணும்...

பனங்காடை அந்தரத்தில் அதிகமுறை குட்டிக்கரணம் போடணும்...

பென்குயினில் ஆண்தான் அடைக்காக்கும்.

இருவாட்சியில், பெண்ணுக்கும், குஞ்சுக்கும் உணவு கொடுத்து இறக்கை முளைக்கும் வரை பார்த்துக்கணும்.

இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் 

இளைப்பாற மரமே இல்லை

கலங்காமலே கண்டம் தாண்டுமே 

பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்

படம்: சத்தம் போடாதே!

எனக்கு மிகவும் பிடித்தப் பாடல், ரொம்ப நாள் ரிங்டோனா வச்சிருந்தேன்...

இந்த வரிகள் என்னை கவர்ந்தது, விடுவோமா ! உண்மையான்னு  ஆராய்வோம்ல...

ஆச்சரிய செய்திகள் கிடைத்தது

படிங்க, அசந்து போவீங்க...

நமது கட்டை விரல் பருமனில் உள்ள டகங்காரப் பறவை முதல் குதிரை அளவு கொண்ட நெருப்பு கோழி வரை இந்தியாவில் 1,263 பறவை இனங்களும், அதில் தமிழகத்தில் 520 இனங்களும் உள்ளன. இதில் 160 இனங்கள் வலசை செல்லக்கூடியவை. வாலாட்டுக்குருவி, ஒவ்வொரு ஆண்டும் ரஷ்யா சென்று வருமாம். 

வரித்தலை வாத்து மங்கோலியாவில் இருந்து 21ஆயிரத்து 120 அடி உயரமுடைய இமயமலையை கடந்து 8,000 கி.மீ., தொலைவை இரண்டு மாத காலத்தில் பறந்து கூந்தங்குள்ளத்தை வந்தடைகிறதாம்.

மிகவும் நீண்ட துாரம் பறக்கும் வலசைப் பறவை 'ஆர்ட்டிக்டேன்'. வடதுருவ ஆர்க்டிக்கில் இருந்து ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா கண்டங்களின் வழியே தென்துருவ அண்டார்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் இவை போகின்றன. 

ஒரு அடி நீளமுள்ள இப்பறவை, வாழ்நாளின் பெரும்பகுதியை பறப்பதிலேயே செலவிடுகிறது. இது ஒரு முறை வலசை சென்று திரும்பி வர 70ஆயிரத்து 900 கி.மீ., பயணிக்கிறது.

தமிழில் 'மூக்கான்' என நாம் அடையாளப்படுத்தும் காட்விட் பறவைக்கு, உலகிலேயே அதிக துாரம் ஒரே மூச்சில் நிற்காமல் பயணிக்கும் பறவைகளின் பட்டியலில் முக்கிய இடமுண்டு. நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள மிராண்டாவில் இருந்து 2007 மார்ச்சில் புறப்பட்ட பெண் பட்டை வால் மூக்கான் பறவை உடலில், சிறிய ரேடியோ மின் அலைபரப்பி பொருத்தப்பட்டது. இதன் பயணம் செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்பட்டது.

இப்பறவை இரைக்காகவோ, தண்ணீருக்காகவோ எங்கும் தரையிறங்காமல் எட்டு நாட்கள் பறந்து 10 ஆயிரத்து 200 கி.மீ.,ல் உள்ள 'யாலு ஜியாங்' என்ற இடத்தை அடைந்தது. பின், ஐந்து வார ஓய்வுக்கு பின் அங்கிருந்து கிளம்பி ஐந்து நாட்களில் 7,400 கி.மீ., பறந்து அலாஸ்காவின் யூகான்-குஷாக்வின் முகத்துவார பிரதேசத்தை எட்டியது. நான்கு மாதங்களுக்கு பின் மீண்டும் ஆக.,30ல் புறப்பட்டு வேறு பாதையில் 11 ஆயிரத்து 600 கி.மீ., ஒரே மூச்சில் பறந்து எட்டரை நாட்களில், கிளம்பிய இடமான மிராண்டா பகுதியை அடைந்தது.

இந்த சிறு பறவை ஏறத்தாழ ஆறு மாதங்களில் 29 ஆயிரத்து 200 கி.மீ., பயணம் செய்தது. மூக்கான்களை ராமநாதபுரம் மாவட்டம் கோடியக்கரையில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை பார்க்கலாம். மூக்கானின் வேகம் மணிக்கு 58 கி.மீ., வலசை பறவைகளில் பெரும்பாலானவை இரவில் பறப்பவை.

ஆத்தி ! பறவை எங்கே நம்ம எங்கே...

நான்‌ பார்த்து இன்றும் பிரமிக்கும் பறவை இருவாட்சி..

என்ன சவுண்ட், என்ன சைஸ்...

அது சரி #வேள்பாரி யில் 

காக்காவிரிச்சின்னு சொல்றாங்களே அது உண்மையான்னு பார்த்தால், அது பேரு காக்காய்வெருட்சி யாம் இங்கிலீசுல Greater false vampire bat  ன்னு சொல்றாங்க, காக்காவை வெருண்டு ஓடச்செய்யும் வவ்வால் இனம்.

சும்மா 10 செ.மீ நீளமும், 60 கிராம் எடையும் கொண்ட இவங்க அசைவக்காரவங்க...

அது சரி, இப்படி நீட்டி முழக்கி பறவையை பற்றி ஏன் பேசணும்ங்கிறீங்க...

பறவை இல்லேன்னா, பிரபஞ்சம் இல்லைங்க... அட காடு வேணும், மழை வேணும்... எத்தனை வேணும் அத்தனைக்கும்‌ பறவை வேணும்...

பறவைக்கு சோறு வைக்கிறேன், தண்ணி வைக்கிறேன்னு கிளம்புற மக்கா !

ஒரு செடி வைங்க, மரமாகட்டும், அவங்களுக்கு பிடிச்சத அவங்களே தேடி 

சாப்பிடுவாங்கல்ல...

அப்படியே நீர்நிலையெல்லாம்‌ பாதுகாப்பா பார்த்துக்கங்க, வெளிநாட்டு பறவைகள் நம்ம நாட்டுக்கு விரும்பி வரணும்ல.

மனிதர்களை விடவும் மகத்தானவைகள் பறவைகள்.

இந்த வருட தீம் என்ன?


Sing, Fly, Soar - Like a bird.


பாடுவோம், பறப்போம், உயர்வோம்‌ பறவைகளாக பறவைகளோடு!


பறவைகளின் கீதம்

காடுகளின் நாதம்.


அன்புடன்

- கோ.லீலா.

Tuesday 1 June 2021

உலக பல்லுயிர் தினம்.

 மனிதர்களின் வாழ்வியலோடு பெரிதும் தொடர்புடைய நாள் ஒவ்வொன்றிற்கும் ஒரு கருத்துரு தந்து, ஒவ்வொரு நாளும் கவனம் செலுத்தப்பட வேண்டிய நாள் என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு தினம் அனுசரிக்கப்படுகிறது.


இப்பூமி மனிதர்களுக்கு மட்டுமானது அல்லது, யானை, திமிங்கிலம் போன்ற பேருயிர்களும், எறும்பு, கரையான் போன்ற சிற்றுயிர்களும், இன்னும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும் உரிமை கொண்டுள்ள இடம்தான் இவ்வழகிய பூமி.


நானூறு வருடம் வாழும் ஆமைக்கும் அல்ப ஆயுசு என்று கருதப்படும் ஈசலுக்கும் ( உண்மையில் அப்படியில்லை )  உரிமையுள்ள பூமி.


பாலையிலும், சோலையிலும், நீர்நிலையிலும்,மரங்களிலும், மலைகளிலும் வாழக்கூடிய எண்ணற்ற பல்லுயிர்களை பேணிகாக்க வேண்டியது மனிதர்களின் கடமை.


இந்த வருட கருத்துரு We are part of solution for nature. தீர்வின் ஒரு பகுதி நாம்தான் என்கிறபோதே... இயற்கையின் மீதான ஆதிக்கத்தை, வன்முறையை மனிதர்கள் கைவிட வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு தான் இவ்வாண்டின் கருத்துரு.


உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக உலக பல்லுயிர் தினம் மே 22 ல் கொண்டாடப்படுகிறது. 

உயிரினங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.


பல்லுயிர் பரவல் குறைவிற்கு காலநிலை மாற்றமே  நேரடி காரணமாக உள்ளது. குறிப்பாக இனப்பெருக்க காலம், தாவரம் வளரும் காலம் பாதிக்கப்படுவதாலும், இக்கால மாற்றத்தால் ஏற்படும் உணவு பற்றாக்குறை, வலசை போதலில் தடை ஆகியவற்றாலும் பல்லுயிர் பரவல் பாதிக்கப்படுகிறது.


உலகில் உள்ள 190 நாடுகளில், 17 நாடுகளில் மட்டும் 70 சதவிகித தாவர, விலங்கு உயிரினங்கள் உள்ளன. 


இந்த 17 நாடுகளும் 'பெரும் பன்மய' நாடுகள் என்ற சிறப்பை பெற்றுள்ளன. அவற்றுள் இந்தியாவும் ஒன்று. கிழக்கு விந்திய மலைகளும், மேற்குத் தொடர்ச்சி மலைகளும் இந்தியாவின் பல்லுயிர் வளத்திற்காக உலக அளவில் கவனம் பெற்றவை. 


இந்தியா போன்ற வெப்பமண்டல தேசம் பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு நாடு என்பதே இந்தியாவின் சிறப்பு ஆகும்.


கடல், மலை, சமவெளி, பள்ளத்தாக்கு, பாலைவனம், சோலைக்காடுகள், சதுப்பு நிலங்கள், ஏரிகள், கழிமுகங்கள்,  என அனைத்து வகை நிலங்களையும், அதில் வாழக்கூடிய உயிரினங்களையும் கொண்ட சிறப்புமிக்க புவியியல் அமைப்பும், இயற்கை வளமும் கொண்டது நம் தேசம்.


உலகின் 16 சதவிகிதம் பல்லுயிர் வளம் இந்தியாவில் உள்ளது. இன்னும் இனம் கண்டறியப்படாத 4 லட்சம் உயிரினங்கள் இந்தியாவில் இருக்கலாம் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.நம் நாட்டைப் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் உள்ள மழைக் காடுகளில்தான் உயிரினப் பன்மை செழித்துக் காணப்படுகிறது. ஏறத்தாழ 91,000 உயிரினங்களும், 45,000 தாவரங்களும் நம் நாட்டில் இனம் காணப்பட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. 45,000 தாவர இனங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவுக்கு மட்டுமே உரித்தானவை.தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட பாலுாட்டி வகைகள், 400க்கும் மேற்பட்ட பறவை வகைகள், 160-க்கும் மேற்பட்ட ஊர்வன வகைகள், 12,000-க்கும் மேற்பட்ட பூச்சி வகைகள், 5,000-க்கும் மேற்பட்ட தாவர வகைகள், 10,000-க்கும் மேற்பட்ட சங்கு, சிப்பி, கடல் வாழ் உயிரின வகைகள் உள்ளன.நெல் என்ற ஒரு இனத்தை எடுத்து கொண்டால், இந்தியாவில் இரண்டு லட்சம் நெல் ரகங்கள் இருந்ததாக இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரிச்சாரியா ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 


நம்முடைய பொறுப்பற்ற அலட்சிய போக்கால் பல அரிய இயற்கை பொக்கிஷங்களை இழந்து வருகிறோம்.


பல்லுயிர் என்பது சூழல் ரீதியாக மட்டுமில்லாமல், கலாச்சார பண்பாடு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக பண்பாட்டு அசைவுகளை காக்கவும், மண்ணரிப்பு, நீர்நிலைகளை பாதுகாத்தல், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த, நல்ல இயற்கை மருத்துவம் பெற என பல்லுயிர் பரவும், உயிர் பன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும்.


மனிதர்களின் நடமாட்டம் குறைந்த இந்த கொரோனா காலத்தில் இயற்கை இயல்பு சுவாசத்திற்கு திரும்பியிருக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.


கொரோனா காலத்திற்கு பின்பும் அந்நிலை தொடர, இயற்கைக்கான தீர்விற்கான பகுதியாக நாம் இருக்க வேண்டும்.


பூமியின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க வேண்டியது நம் கடமை என உறுதிமொழி ஏற்போம்

- கோ.லீலா, பொறிஞர்,சூழலியலாளர், எழுத்தாளர்.



கிடை

 நூல் : கிடை

ஆசிரியர் : கி.‌ராஜநாராயணன்

பதிப்பு :1968  அறுசுவை வாசகர்   

                 வட்டம்.

          ‌‌‌‌‌‌       2017 -காலச்சுவடு


விலை :ரூ73/-

கிண்டில் எடிஷன் : ரூ63/-

   

****************************************


கதையின் ஆரம்பமே ரெட்டை கதவு திறந்து வரவேற்கிறது...


அடடே ! பெரிய ஆச்சரியம் ரொம்பவே குட்டி கதை, அதுக்குள்ள எவ்வளவு பெரிய செய்திகளை அசால்டாக சொல்லி இருக்கிறார்.


இப்படியும் எழுதலாம்னு, பாடம் சொல்லுதே கதை.


கீதாரி என்றால் என்ன என்பதை, இரண்டு வருடங்களுக்கு முன்பாகதான் அம்மாவிடம்‌ கேட்டு தெரிந்துக் கொண்டேன்...


என் சித்தி, யாரையோ நம்ம வீட்ல கீதாரி வேலை பார்த்தவ பேசுற பேச்சைப் பார்த்தியானு சொல்லிக்கிட்டு இருந்தவர்...


நான் வரவும்,

ஒம் பொண்ணு வந்திருச்சு, யாரை பத்தியும் குறை பேசாதேன்னும், நீ டீய போடுக்கா, குடிச்சுட்டு போறேன்னார்.


ஒண்ணும் புரியலை, அம்மாவிடம்‌ கீதாரின்னா என்ன? என்றேன்...

சுருக்கமா ஆடு மேய்க்கறவங்க என்று சொல்லிட்டாங்க. அப்புறம்  அதை பற்றி மறந்து போயிட்டேன்.


கி.ரா அய்யா விலாவாரியா சொல்லிட்டாரே...


கிடை என்பது தனி ராஜ்ஜியம், அதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன்தான்‌ #கீதாரி என்று.


ரெட்டைக்கதவு, மோப்பு திண்ணை என்றவுடன் கும்பகோண வெத்தலை, சீவல்னு அடுத்து வரும்னு நினைச்சி படிச்சேன்... கும்பகோண வெத்தலை சீவலா கமகமன்னு வட்டார மொழி மணம் வீசுது.


அடடா ! சொற்களஞ்சியம், சில சொற்கள் எங்க ஊர்லேயும் அதேதான், அதனால் பெரிதாக சிரமம் இல்லை, கூடவே வட்டார மொழிவழக்கு கதைகளில் ஒரு மயக்கம் உண்டு எனக்கு.


வெள்ளாடு, செம்மறியாடு, குரும்பாடு, கிடா ன்னு கொஞ்ச பேருதான் தெரியும் மத்தபடி சிவப்பா இருந்தா செவலைன்னு சொல்லுவாங்கன்னு தெரியும்...


இங்கே கி.ரா அய்யா 

கொடுத்திருக்கும்  பெயர் பட்டியலை படிக்க படிக்க...


எங்க தாத்தா வீடு, பெரிய நிலத்தில் நடுவில் இருக்கும், சுத்தியும் உயிர்வேலி இருக்கும், கருவேல மரம்... ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, புறாபண்ணை, வாத்துப்பண்ணை, ஒத்த குதிரை, மூணு ஜோடி மாடுன்னு ஒரே கோலகலமாக இருந்த நாட்கள் மனசுக்குள் நினைவாட 

ஆரம்பிச்சிருச்சு. 


அட ! அதுதானே எழுத்தின் சிறப்பு, நம்மள வேறொரு உலகத்துக்கு கூட்டிட்டு போறது


ஆடுக கருவேல மர காயை கரக் கரக் ன்னு திங்கும், பாலாட்டாங் குழை  என ஓரிடத்தில் கதையில் வர, டக்குன்னு அப்போ இருந்த ஆடும் அவை அசைப்போட்ட தழைகளையும் அசைப்போட ஆரபித்து விட்டது மனம்.


தாலி புதுசான செய்தி என்பதாலேயே சந்தோசமான செய்தியாகவும் இருந்தது, சில ஆட்டுக்குட்டிக ஓடி வரும்போது, அது தாடைக்கு கீழே இரண்டு தொங்கட்டான்கள் மாதிரி இருக்கும் அதை வேடிக்கை பார்த்திருக்கேன் பேரு தெரியாது, இன்று தெரிந்து கொண்டேன்.


பள்ளை ஆடு, ஓங்கோல் ஆடெல்லாம் புதுசா கேள்விபடுகிறேன்... 


ஒரு சின்ன கதையில் ஆட்டின் பெயர்கள், ஆட்டுப் பாலின் நன்மைகள், (அதில் 'உதவி" என்ற ஒரு சொல்லாடல் வருகிறது அது என்னவென்று எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறினால் மகிழ்வேன்)

சில தழைகளின் பெயர்கள், ஆடுகளை மேய்க்கும் மனிதர்களின் வாழ்வியல், அவர்களின் நம்பிக்கைகள், சமூக ஏற்றத்தாழ்வு, நடுநிலையோடு இருக்கும் மாந்தர்கள் சாதிய அடுக்குகளை காத்து நிற்பதற்காக காலங்காலமாக மறைக்கின்ற உண்மைகள், வல்லமை கொண்டோர்களின் கரங்கள் தனிமனிதர்களின் வாழ்வை  வெளியில் தெரியாத வண்ணம் அடக்கி ஆள்வது,

பொதுவாக, கிராமப் புறத்தில் இருக்கும் கேலி, திருட்டு, உடன்போதல், பயிர்களுக்கு ஏற்படும்‌ இழப்பு, அதற்கு தீர்வு வழங்கும் சபையென அத்தனை செய்திகளையும் உள்ளடக்கிய ஒரு நுட்பமான கலை படைப்பாக மிளிர்கிறது #கிடை.


எல்லப்பனின் கல்யாண ஊர்வலத்தின் போது நடக்கின்ற செவனியின் பேயோட்டும் நிகழ்வு சமூக முரண்களை படம் பிடித்துக் காட்டுகிறது. பெண்ணின் மனநிலை புரியாது பேயோட்டுவதும், அடிப்பதும் கொடுமை. செவனியின் நிலை மனதை விம்ம செய்கிறது.


கூடவே, கல்யாணம் என்றால், ஒரு ஆணுக்கு இரண்டு பெண்களை தாரை வார்க்கும் முறையை மிக நுட்பமாகவும், பூப்பெய்துவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகின்ற போக்கு என பல்வேறு சமூக கூறுகள் பதிவு செய்யப்பட்டுள்ள கதை.


பொடி போடும் அழகை பதனமாக கஞ்சிராவுக்கு ஸ்ருதிப் பார்ப்பதைப் போல ஆட்காட்டி விரலால் பொடி எடுப்பதை கூறியிருப்பது அய்யாவின் உசை ஞானத்திற்கு சான்று, ஈறுகளில் ஒட்டாத பொடியை பூ என ஊதிவிட்டு, உதட்டை உம்‌ என்ற "அழகில்" வைத்துக் கொள்ளும்போது என்பதெல்லாம், வெகு இயல்பான காட்சிப்படுத்துதலும், அவதானிப்பும், அழகிய ரசனையுமாகும்.


அடிக்கடி பென்ஸ் கார் மோட்டாரைப் போல கஹ் என்ற ஒரு சப்தத்தை கொடுத்து மூச்சு காற்றை வெளியேற்றிக் கொண்டிருப்பார்... மெல்லிய சிரிப்பொன்று படர்ந்தது.

அன்றைய காலம், பென்ஸ் காலம்.


பனைநார் பற்றிய குறிப்புகள் மண் வாசனை... கத்தாழை நார் போல நரைத்த கொண்டை... அடடா ! ஒப்பீடு, கூடவே ஒரு தாவரத்தின் பெயர் பதிவு என ஏக அமர்க்களம்.


மீசையில்லாத ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது என்ற, தமிழகப் பெண்களின் ரசனையை ஓரிரு சொற்களில் போகிற போக்கில் சொல்வதையும், மீசையில்லாத ஆணை, பெண் வேசம் போட எங்காவது அச்சாரம் வாங்கியிருக்கீகளா? என்று கேட்பதையும் மிகவும் ரசித்தேன்...

மீசை இல்லாத ஆண்களை எனக்கும் பிடிக்காது, என்ற உளவியல் கூட இந்த ரசனைக்கு காரணமாக இருக்கலாம்.


டணா கம்பு, தொறட்டி கம்பு, கம்பராக் கத்தி... கிராமத்தை படம் பிடிக்க போதுமான சொற்கள்...


பஞ்சத்திலும் ஆவாரம்பூ 

செழித்திருக்கும் என்பதும், ஆடு தின்னாத பாளையையே ஆடு தின்னும்‌ என்பதும்,இடைகாட்டர், வரகை மண்ணோடு பிசைந்து கோட்டை கட்டி வாழ்ந்ததும், ஆடு சுவரில் உரச உதிரும் வரகை, ஆட்டுப்பாலில் சமைத்து உண்பதும்... ஆகா ! அறிவியல் நுட்பம் அல்லவா. 


எங்க தாத்தா வீட்டில் ஒரே ஒரு முறை, ஆட்டுப்பாலில் காஃபி தயாரித்தார்கள் என் சித்தி, என் அம்மா, வேண்டாம் கொச்சை வாடையடிக்கும் என்று சொன்னதும் நினைவில் இருக்கிறது.


அவளுடைய கீழுதடுக்கும் நாடிக்கும் இடையில் "பாசிபருப்பு" அளவில் பாலுண்ணி இருக்கும்...

தானியம் கொண்டு அளவீடு செய்வது பண்டைய முறை,  இதுவரை படித்த கதைகளில், இந்த கதையில் மட்டும்தான் அம்முறை கையாளப்பட்டிருப்பதை பார்க்கிறேன்.


கூடவே, அவளுடைய பாம்படத்தை விற்று  சந்தையில் நாலு புருவைகள் வாங்கி வந்தார், இப்போ அவரிடம்‌ஒரு மொய்க்கு மேலே இருக்கு. ஒரு மொய் என்பது 21 ஆடுகள், முதல் ஈத்துலேயே கொச்சைக் கிடா கிடைத்தது... எச்சத்தை வைத்து பறவையை கண்டு பிடிச்சுடுவார் 


என்ற வரிகளில் பாம்படம் என்ற நகை, மொய் எனும் அளவீடு, ஆட்டின் பெண் உறுப்பை அறை எனும் சொல்,  எச்சம் வைத்து கண்டுபிடிக்கும் நுண்ணறிவு என காலம் கடந்தும் கடத்தப்படும் பதிவுகள் அற்புதம்.


பொன்னுசாமி நாய்க்கரின், பேய் கதைகள் சூப்பர். எங்கள் கிராமத்திலும் இவ்வகை கதைகளை எங்க ஆத்தா சொல்லி கேட்டிருக்கிறேன்.


மேலுதடு கிழிந்து மேற்பற்கள் தெரியும் ஒரு விவரணையை படிக்க, சிறுவயதில், கிராமத்தில் அப்படி ஒருவரை பார்த்த நினைவு வந்து சென்றது.


கிராமத்தில் பார்த்ததை மீளப்பெற்றேன்... அம்மாவிடம் கொஞ்சம் விவரங்கள் பெற்றால், ஒரு கதை உருவாகலாம்...


கி.ரா வின் கிடை வாசிப்பவரை அந்த space and time ல் சஞ்சரிக்க வைக்கிறது.


வாழ்வில் ஒவ்வொன்றையும் அவதானித்து வாழ்வதே பெரு வாழ்வு என்பதை கதை இயல்பாக சொல்கிறது..


#கிடை மனதை மேயும் வசீகரம்!


அன்புடன்

-கோ.லீலா.

When the River Sleeps

 Book : When the  River Sleeps

Author : Easterine Kire


நாகாலாந்தின் அங்கமி (Angami) எனும் பழங்குடியினரான Vilie, உறங்கும் ஆற்றை நோக்கி, அந்த ஆற்றில் Heart- stone ( it was guarded by a ferocious widow spirit) ஐ எடுக்க பயணிக்கும் காட்டு வழிப் பயணத்தின் விவரிப்பும், Heart - stone. னின் சக்தியும், அதனால், அதை உடமையாக கொள்பவர் எதிர்நோக்கும் தொல்லைகளும் கதையாக விரிந்துள்ளது.


காட்டைப் பற்றி சுருக்கமாகவே சொல்லப்பட்டிருகிறது... இன்னும்‌ கொஞ்சம் கூட கூடுதலான விவரணைகள் இருந்திருக்கலாம், நாகாலாந்து பற்றிய பிம்பம் இதில் பெரிதாக இல்லையென்றாலும், நேபாளி செட்டில்மெண்ட்டில் நடக்கும் இரட்டை கொலைகள் மூலம் ஒரு உப செய்தியை கடத்தி இருக்கிறார்.


நாகாலாந்த் எனும் இனிய சிறு பூமியில் வாழும் மனிதர்களின், முன்னோர்களின் ஆவி மீதான நம்பிக்கை, சடங்குகள், கெட்ட ஆவி, விலங்குகளின் ஆவி, ஆவி அழகிய பெண்ணாக நீண்ட கூந்தலுடன் ஆண்களை மயக்குதல்,மனிதர்களின் பழி வாங்கும்‌ குணம், அன்புக்காக ஏங்குதல், அன்பாக இருத்தல், காட்டில் வாழும் மனிதர்களுக்கே உரிய உபசரிப்பு,பிறழ்வுகள், பேராசை, விரக்தி, தனிமை, கபடு, குரூரம், ஆனந்தம், தூய்மை என்று எல்லா மனிதப் பிராந்தியங்களின் சிக்கலான கலவையின் ஊடாக கதை பயணிக்கிறது.


ஆற்றிலிருக்கும் மந்திரக்கல்லை எடுப்பது மட்டுமல்லாது, Travel of a man from Ignorance to Experience ஆக இக்கதை ஒரு பரிமாணத்தையும்  கொண்டிருக்கிறது.


Vilie காட்டை மனைவியாக மணந்து கொண்டதை சொல்லும்‌ இடங்களில், காட்டின் மீதான எனது possessiveness தலைதூக்குவதை தவிர்க்க முடியவில்லை.


ம்ம்ம்... காட்டை ஆண் என்றும் பெண் என்றும்‌ பாகுபடுத்தி பார்ப்பதில்லை, தோன்றும்போது ஆணாகவும், தோன்றும்போது பெண்ணாகவும் காண்பேன்.  ரகசியா எனும் பொது பெயர் இட்டிருந்தாலும், பெண்ணாகவே பாவிக்கப்படும் காடு,கவிதைக்கு காதலானகி விடும்...


காட்டின் மீதான காதல் அலாதியானது, முரட்டு காதலன்/ காதலி, காதலிக்க தொடங்கி விட்டால் மீண்டு வரமுடியாது, மீளவும் வேண்டாமே !


Vilie ஆகவே மாறி கதையில் பயணிக்க முடிகிறது, காட்சிகள் விரிய எனக்கான காடு, ஆறு, தற்காலிக குடில்கள், செட்டில்மெண்ட்,‌ அடர் மரங்கள், unclean forest, nettle forest, உருவாக அதனுள் பயணிக்க வாய்த்தது.


genna day கிறித்துவ மதத்தில் ஒரு சாரார் வாரவாரம் ஞாயிற்றுக்கிழமையில் கடைபிடிக்கும் முறைகளை நினைவூட்டியது, கூடவே எதன் நீட்சி எது என ஆராய தொடங்கிவிட்டது மூளை.


மூலிகை, மற்றும் மரப்பட்டைகள், வேர்கள் குறித்து மிக சொற்பமாகவே சொல்லப்பட்டு இருப்பதாக தோன்றியது, எனினும் குற்ற உணர்வு நீங்க தரும், மரப்பட்டை போட்டு கொதிக்க வைத்த நீர் புதுத் தகவல்.


Ate, Zote இருவரையும் சந்தித்த பிறகு கதையின் விறுவிறுப்பு கூடுகிறது. ஆங்காங்கே வாழ்வியல் தத்துவங்கள் அடங்கிய ஓரிரு வசனங்கள் தென்படுகின்றன.


ஏனோ paulo coelho வின் The Alchemist கதை நினைவுக்கு வந்ததை தடுக்க முடியவில்லை, கூடவே Gabriel Marquez ன் சர்ரியலிசம் போன்று இல்லாமல், மாயஜால குணங்கள் என்பதை விடவும், தூய்மையான் சர்ரியல் பணியாக இருக்கிறது Easterine kire ன் இப்புத்தகம்.


தொய்வில்லாமல் பயணிக்க வைக்கிறது Kire ன் கதை சொல்லும்‌ பாங்கு, எளிய மொழியில், அதே நேரத்தில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலிருந்து வந்திருக்கும், enriched language ஆகவும் இருக்கிறது.


காடுகளில் பயணித்து இராதவர்களுக்கு உறுதியாக புதிய அனுபவமாக இருக்கும்.


காட்டு வழி பயணத்தையும் கடந்து Vilie & Ate வழியே ஒரு நன்னெறியை கடத்துகிறார் நூலாசிரியர். Heart - stone has spiritual power... Has to felt from insight  அதை யாராலும் சூறையாட முடியாது என்பது இறுதியாக சொல்லப்படும் செய்தி.


Zote அவ்வளவு குரூரம் நிறைந்தவளாக மாறுவதற்கு காரணம் அன்பு காட்டப்படாமல் கிராமத்து மக்களால் ஒதுக்கப்படுவதே காரணம், அதே நேரத்தில் தனது தங்கை Ate டிடமிருந்து கொள்கை ரீதியாக வேறுபட்டாலும், அவளை‌ப் போற்றி பாதுகாத்தது நெகிழச் செய்கிறது.


Zote ன் மரணம், நம்மையும் கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது என்பதே உண்மை.


Vilie, பயணவழியே திரும்பும்‌போது Nettle Forest ல் சந்தித்த பெண் idele, நேபாளியான கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி இறந்தது என ஆங்காங்கே காடுகளில் வாழும் மனிதர்களின் பாதுகாப்பற்ற வாழ்வியலை சொல்லி செல்கிறது.


காலங்காலமாக, மனிதனின் மண்ணாசைக்கும், பொன்னாசைக்கும் பலியாகும்‌ இயற்கையையும், அதை சார்ந்த மனிதர்களின்‌ பாடுகளையும் கதையில் உணரமுடிகிறது.


செல்லும் இடத்தில் ஆங்காங்கே குடில் அமைக்கவும், சமைத்து உண்ணவும், நீர் தேடவும், கானூயிர்களோடு போராடுவதுமென தினமுமே வாழ்தல் என்பது போராட்டமாக இருக்கிறது, அதுவே மன உறுதியையும் தருகிறது காட்டு வாழ்வில். 


எந்த இடத்திலும் வனதேவதை பற்றியோ, காடுகளில் வாழ்வோரின்‌ கொண்டாட்டங்கள் பற்றியோ ஏதும்‌ குறிப்பில்லை என்பது சற்றே ஏமாற்றம்.


பூமி தாயாக, வானம் தந்தையாக, எனது ஆன்மா பெரிது என உத்வேகம் தரும் சொற்களும், மூதாதையர்களின் பெயர் சொல்வதும் காட்டுவாழ் மனிதர்களின் நம்பிக்கையும், மனோதைரியமுமாக இருக்கிறது.


தேன், இலை, மரப்பட்டை, வேர் பற்றி இன்னும் விரிவாக 

சொல்லியிருக்கலாம்.


இரவு நேரத்தில் நரி, were tiger ( புலியின் ஆன்மா) பற்றிய பதிவுகளில்‌ அவை எழுப்பும்‌ ஒலியைப் பற்றிய பதிவு மட்டுமே இருக்கிறது.


 இரவில் எந்த உயரத்தில் விலங்களின் கண்கள் ஜொலிக்கிறதோ, அதைக்கொண்டு, என்ன விலங்கென்று இனங்காணுவது பற்றி சொல்லியிருந்தால் இன்னும்‌கூட கதையின் pep கூடியிருக்கும்.


தூய்மையான செய்கையும், குணமும் கொண்டவர்களுக்கு மட்டுமே Heart stone கிடைக்கும் என்பது, இயற்கை தவறுகளை ஒரு போதும்‌ மன்னிப்பதில்லை என்பதாக புரிந்துக் கொண்டேன்.


Vilie ன் தன்னந்தனியான பயணத்தின்‌போது ஏற்படும்‌ காய்ச்சல், காயங்கள் அதற்கான மருந்துகள் லேசாக சொல்லப்பட்டிருக்கிறது.


Saturday market, மலைக்கும் கிராமத்திற்கும் இடையேயான வயல்வெளி என சரியான புவியமைப்பு சொல்லப்பட்டிருக்கிறது.


Kani மற்றும் அவரது மனைவி ‍Subhale மனதில் நிற்கிறார்கள்.

மூங்கிலில் மீன்‌ வேகவைக்கும் மணம், நம்மையும் சாப்பிட அழைக்கிறது.


ஒரே ஒரு இடத்தில்‌ மட்டும் மழைக்கான அறிகுறியை சொல்கிறார், விறகுகள் சேகரிக்கும்போது மட்டும் காய்ந்த சுள்ளிகளை சேகரிப்பதாக கூறும்போது, மனம் தானாகவே வலிந்து, ஒரு மழையை தேடிக்கொள்கிறது.


Ate ன் தோளில் பதிந்த புலியின் கால் நகம், Zote மற்றும்‌ Ate ன் குடுமிபிடி சண்டைகள் அச்சமூட்டுகின்றன.


Ate, Heart -stone ஐ வைத்து Ate, Vilie க்கு ஏன் ஏதும் செய்யவில்லை? என்ற கேள்வி எழுகிறது. சற்று தாமதமாகவே Vilie ன் நிலை அவரது உறவினருக்கு தெரிவிக்கப்படுகிறது என்பதை காரணமாக இருக்குமோ?


Vilie ன் வீடும் அதன் இடமும் என்னுள்‌ ஒரு காட்சியை உருவாக்கி இருக்கிறது... அதில் இன்னமும் Vilie வாழ்ந்து கொண்டிருக்கிறார்... அப்படியே வாழ்ந்துக்கொண்டு இருக்கட்டுமே...


Kudos Easterine kire. Excellent  narration and enchanting journey through forest...surreal journey.


அன்புடன்

- கோ.லீலா.


தமிழ் அழகியலும் இந்திரன் சாரும்

 நேற்று தமிழ் அழகியல் பற்றி திசை கூடல் நடத்திய இணைய வழி கூடுகையில்,  கலை இலக்கிய விமர்சகர் Indran Rajendran  அவர்கள் சிறப்பானதொரு உரையை வழங்கினார்கள்.

 

கலந்துரையாடலுக்கென போதிய அவகாசம் அளித்தது போற்றுதலுக்குரியது.


இச்சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்த தமிழ் மரபு அறக்கட்டளைக்கு என் வாழ்த்துக்களும், நன்றியும்.


பல்வேறு நாடுகளை சேர்ந்த அறிஞர்களை ஒரு சேர பார்த்ததும், அவர்களின் உரையினை கேட்டதும் மகிழ்ச்சி.


தமிழ் அழகியல் என்பது குறித்து, என்னுள் ஆழ்ந்த மற்றும் நீண்ட சிந்தனை இருந்தது உண்டு. அச்சிந்தனைக்கு நேற்றைய நிகழ்வு சில விடைகளையும், சில கேள்விகளையும் எழுப்பி உள்ளது.


இந்திரன் அய்யா சொல்லியது போல், மனிதர்களின் வாழ்வில் தேடப்பட வேண்டியது அழகியல்.


என் கருத்து.

*******************

தமிழ் என்பதே அழகியல்தானே...


அழகியல் என்பதற்கு சைவம், வைணவம், இஸ்லாம், கிறித்துவம் என முத்திரை தேவையற்ற ஒன்று.


காண்பவரின் அவதானிப்பிலும், விழிகளிலும் ததும்புவதே அழகியல்.


'லைலாவை கயஸின் விழிகளால் பார்" என்ற வரிகளை விட அழகியலை விளக்க வேறு வரிகள் தேவையில்லை.


Dance of Siva பற்றியும், அதன் அழகியல் பற்றியும் பேசிய யாரும், அவரவர் பகுதிக்குரிய சிறுதெய்வங்களின் அழகியலைப்பற்றி பேசவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது.


தமிழர்களின் அழகியல் என்பது வடிவமைக்கப்பட்ட, ஒரு பரிணாமம் கொண்டதல்ல...


தமிழர்களின் அழகியல், தத்துவம், அறிவியல், ஞானம், வாழ்வியல், இயற்கை என்ற பல்வேறு பரிணாமங்களும், பரிமாணங்களும் கொண்டவை.


அறிவியலை அடிப்படையாக கொண்ட தமிழர்களின் அழகியல், ஆங்கிலேயர்களின் புகுதலுக்குப்பின் அழிவை அடிப்படையாக கொண்ட அழகியலாக மாறியது... (மான் கொம்பு, புலி பல், யானை தந்தம்‌ போன்றவற்றை கொண்டு கலைப்பொருட்கள் செய்வது)


கோயில்

***************

மேலைநாடுகளின் தெய்வங்கள் எதுவும் கலைகூடத்தில் வைக்கப்பட்டுள்ளதா என எனக்கு தெரியவில்லை, ஆனால் சிவா எனும் ஆனந்த தாண்டவம் ஆடும் சிலை கலை பொருளாகவும், வழிப்பாட்டுக்கு உரிய ஒன்றாகவும் இருக்கிறது, எனில் கலையை, அழகியலை தத்துவத்தை, ஞானத்தை தொழுத பண்பாடாக தமிழர்களின் அழகியல் இருந்ததாக தோன்றுகிறது.


அதே போன்று தமிழர்களின் தெய்வம் எனில் முருகன், மற்றும் சிறுதெய்வங்கள்தான், அவற்றைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லாது போனது, மண்ணின் மைந்தர்களின் வாழ்வியலை மறைத்த ஏதொன்றும் எப்படி அழகியலாகும் என்ற கேள்வியை என்னுள் எழுப்புகிறது.


சிறுதெய்வங்களின் உறுமால் கட்டு, வெட்டுக் கத்திகளின் வகைகள், ஆண், பெண் உடையலங்காரம், அணிகலன்கள் பற்றியெல்லாம் ஆய்வு மேற்கொண்டு அதை தமிழ் அழகியலில் சேர்க்க வேண்டும் என்பது எனது அவா. அதுதான் தமிழர்களின் அழகியலாகவும் இருக்கும்.


இந்திரன் அய்யா பேசும்போது சொன்னார்கள், வெளிநாட்டினர் ஒருவர் கோயில் கோபுரங்களை கொண்டு ஓவியங்களை தமிழர்கள் மறைத்து விட்டார்கள் என்று சொன்னதாக.


கோயில் என்பது வெறும் வழிப்பாட்டு தலம் மட்டுமல்ல, அக்காலத்தில் வாகன வசதிகள் இல்லாத போது வெகு 

தூரத்திலிருந்து நடந்து வருபவர்களுக்கு ஓய்வெடுக்கும் இடமாகவும், பொது நிகழ்விற்காக கூடும் இடமாகவும் ( Get together), மழைநீர் சேகரிப்பிற்கான இடமாக, கலைக்கூடமாக, பொருளை பாதுகாக்கும் இடமாக, போரின் போது ஒரு ஊரிலிருந்து வேறு ஊருக்கு தப்பி செல்வதற்கான சுரங்கப்பாதை கொண்ட இடமாக, இப்படி பல்நோக்கு கொண்ட இடம்தான்‌ கோயில்... இதில் கோபுரத்தின் பங்கு என்ன?


கோ எனில் பசு/ மாடு.

புரம் என்றால் பகுதி. 


Dravidian architecture ல் கோபுரத்தின் இருமருங்கிலும் மாட்டின் கொம்பு போன்ற அமைப்பு இருக்கும்... 


கோயிலை விட உயரமான கட்டிடங்கள் ஏதும் இருக்கக்கூடாது என்பது எழுதப்படாத சட்டம், அதனால் தூரத்தில் இருந்து வருபவருக்கு கோபுரம் தெரிய கோடி நன்மையென ஓய்வெடுக்க, உணவருந்த, விரைவதற்கும், ஆசுவாசம் கொள்வதற்கும் ஏதுவாக இருக்குமென அமைக்கப்பட்டது கோபுரம்.


அதுமட்டுமல்லாது,கோபுர கலசங்களில் விதை தானியங்களை பாதுகாப்பு செய்து வைத்து பஞ்சக்காலத்தில், பயன்படுத்தும் Pr‍oactivenessம் சேர்ந்த அழகியல்தான் கோபுரம்.


அதே போன்று கோபுரத்தின் பொம்மைகளை உற்று நோக்கினால், எடையை அதிகம் தாங்கும் யானைகள், உடல் வலுவாக இருக்கும்‌ பூத கணங்களே கீழ் வரிசையில் இருக்கும். இது வெறும் அழகியல்  அல்ல... அறிவியல் கலந்த அழகியல் அல்லவா?


தஞ்சை கோயில்

***********************

 தஞ்சை கோயிலின் சுற்றுச்சுவர் இரட்டை சுவர்.


அதேபோல், கூடுகையில் ஒருவர் கேட்டார், சிற்பங்கள், ஓவியங்களை எப்படி வரைந்தார்கள் அதற்கான வெளிச்சம், காற்றோட்டம், space  எப்படி கிடைத்தது என?


அதற்கு ஆதாரப்பூர்வமான சான்றுகளுடன்‌ கூடிய விளக்கம் இதுதான், அனைத்து கோயில்களிலும், கோயிலின் கோபுர வேலைகள் முடித்தப் பின்னர்தான், சிலையை பிரதிஷ்டை செய்வார்கள், ஆனால் தஞ்சை பெரிய கோயிலில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அமைத்து விட்டு தான் கோபுர வேலையை செய்தார்கள்.


சிலையின் மீது கற்கள் விழாமலிருக்க, சிலையின்‌ மீது மணலை,முதல் தள உயரத்திற்கு கொட்டி மூடிய பின்னர் கோபுர வேலைகள் நடந்தன.


இன்றும் லிங்கத்தை வெளியில் எடுக்க முடியாது சிலையை விட வாயில் சிறிது என்பதே இதற்கு சாட்சி.


கூடவே, கோபுரத்தின் முதல் தளத்தில் இரட்டை சுவர் எழுப்பட்டுள்ளது உட்சுவர் 13 அடி அகலமும், வெளிசுவர் 7 அடி அகலமும் கொண்டவை, இவ்விரு சுவர்களுக்கும் இடையே ஒரு கட்டை வண்டி செல்லும் அளவிற்கு இடைவெளி இருக்கிறது. 


அந்த சுவற்றில் தஞ்சை ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. கூடவே பரதத்தின் பாவனைகள் மற்றும் நிற்கும் விதத்தினை (Pose) 108 சிற்பங்களாக வடிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு 81 சிற்பம் மட்டுமே முடிவுற்ற நிலையில் உள்ளது, 82 ல் இருந்து சிற்பமாக்கப்படா பாறைகள் மட்டுமே இன்றும் உள்ளது, இது கோயிலின் கட்டுமான பணி முழுமைப் பெறவில்லை என்பதற்கான சான்று.


இவ்விரு சுவர்களும் கோபுரத்தின் stability ஐ உறுதி செய்வதற்கான கட்டுமானம்.


இக்கோபுரம் sound proof ஆகவும்‌ கட்டமைக்கப்பட்டுள்ளது.‌( Is it not Acoustics Engineering). அங்கு நின்று ஓம் என்று உச்சரித்தால், வெளியில் செல்லாது உள்விதான கல்லில் பட்டுப்பெருகி ஒலிக்கும்


கூடவே, கோயிலில் காணப்படும் கல்வெட்டில் தலைமை தச்சர் பெயர், ஓவியர்கள், சிற்பிகள் என அனைவரின் பெயரும், கோயில் கட்டுமானப் பணிக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர்கள், பராமரிப்பு பணி மற்றும் செய்யப்பட வேண்டிய பூஜைகள் குறித்தும் 107 பத்திகளில் விளக்கமாக பொறிக்கப்பட்டுள்ளது.


சரிங்க...


ஓவியம், தூய்மையும் தமிழ் அழகியலும், பறையும் அழகியலும், கிருஷ்ணர்  பாதம் வரைவது  Action பெயின்டிங் ஆ, சதுர வடிவ தரையின் மேல் எப்படி dome கட்டுவது? Mughal architecture க்கு முன்பே தமிழர்கள் அக்கலையழகில் சிறந்து விளங்கினார்கள் அதற்கு சான்று இருக்கிறதா? கேன்வாஸ் பெயிண்டிங்கிற்கும் சேலை என்ற சொல்லுக்கும் என்ன தொடர்பு?

மூலிகையில் வண்ணம் தீட்டியதில் யார் முன்னோடி?


மருத நிலத்திற்கு வந்தப்பின் ஓவியங்களை, சிற்பங்களை மறக்கவில்லை, அவர்களே வளர்த்தெடுத்து இருக்கிறார்கள் என்பதற்கு சான்று இருக்கிறதா?


தமிழிசை, நாட்டுப்புற இசை, நாட்டுப்புற படைப்புகள் செவ்வியல் படைப்புகளாக கருதப்படவில்லையே ஏன்?


தமிழ் அழகியலில் தமிழருக்கே இடமில்லாது போனது ஏன்?


பூச்சூடலின் அழகியலுக்குப் பின்னுள்ள அறிவியல் என்ன?


இன்னும் பல செய்திகளை நாளை  பார்ப்போம்.


இத்தகைய சிந்தனைகளை வெளிசொல்ல வாய்ப்பாக அமைந்தது த.ம. அ நடத்திய திசைகூடல் நிகழ்வும், அதில் உரையாற்றிய இந்திரன் சார் அவர்களின் உரையும் தான்.


அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும், பேரன்பும்


அன்புடன்

-கோ.லீலா.