Wednesday, 10 August 2016

பாசனமும் ..............சங்கத்தமிழும்.........



நண்பர்களே வணக்கம்…………….எல்லோரும்எப்படியிருக்கீங்க?
சுகம்தானே………………..

கார்த்தி&சுமதி:   என்ன மேடம் எப்பவும் புத்தகமும் கையுமா இருப்பீங்க
இன்னைக்கு செல்லும் கையுமாஇருக்கீங்க…..

வாங்க, வாங்க………….

            


அது மும்பையில செம மழை,ஒரே நாளில் 142mm மழை,நம்ம செல்வா 

அங்கே இருக்காங்க அதான் குருப்புல விசாரிச்சுகிட்டு இருக்கோம்.

என்ன சொல்றாங்க.

செல்வா: இவ்வளவு மழை  பெய்தாலும்அணைகள் 80% 

தான்நிறைஞ்சிருக்கு.பருவமழை மாறி பெய்வதாலும்,acute rainfall  ஆக 

இருப்பதாலும்,பல நீர்மேலாண்மை சிக்கல் வருது.

சரி நீங்களும் group chat ல கலந்துக்கலாம்.

சுமதி:  மேம்  சொல்லுங்க இந்த நீர் மேலாண்மையை எப்படி செய்றது?

அதுக்கு முன்னாலே உங்களுக்கு ஒரு  கேள்வி நீங்களும் ,நானும்வேலை 

செய்ற இந்த அலுவல் பற்றிய மேன்மையும். முக்கியத்துவமும் 

தெரியுமா?

கார்த்தி: இருமாநிலங்களுக்கிடையேயான நீர்பங்கீடு குறித்த பணிகள் 

பார்க்கிறோம் என்ற பெருமை இருக்கு.

அதுமட்டுமில்ல, தமிழ்நாட்டிலேயே இது ஒரு  Exclusive subdivision.

சுமதி: ஓ நல்ல தகவல் மேடம்.

இப்போ இன்னொருகேள்வி,நாம் பார்க்கிற இந்த நீரளவையை உலகத்தில் 

முதன்முதலா யார் பார்த்தா? எந்த பகுதியில் பார்த்தாங்க? எந்த 

காலத்தில் பார்த்தாங்க தெரியுமா?

செல்வா: என்னப்பா,உங்க ஸ்டாஃப்கெல்லாம் டெஸ்டா?

ஹாஹா ,இல்லை இல்லை சும்மா ஒரு கருத்து பரிமாற்றம் 

அவ்வளவுதான்.

கார்த்தி: வெங்கிட்டுபதி சார்வர்றார்மேடம்.

வாங்கசார்.

சுமதி: நீங்களே சொல்லுங்க  மேடம்


        



முதன் முதலில் நைல் நதிகரையில்தான கி.மு 3500 லேயே நீரளவு 

செய்யக்கூடிய (Gauging) அளவுக்கோல்களை வச்சிருக்காங்க.

அதுமட்டுமில்ல, ஆயிரம் ஆண்டுகளுக்கான (தொடர்ச்சியாக

நீர்மட்டவிவரங்கள் கிடைக்கும் வகையில் உள்ளது.

           

கார்த்தி: மேடம் நீர்மேலாண்மை பத்தி சொல்றேன்னு சொன்னீங்க

ஆமாம்,அதுக்கு முன்னால் நம்முடைய மூதாதையர்கள் எப்படி நீரை 

கையாண்டு இருக்காங்கன்னு நம்முடைய இலக்கியங்களில் 

சொல்லியிருக்காங்க அதை படிச்சாலே நீர்மேலாண்மை தெளிவா புரியும்.

சுமதி&வெங்கிடுபதி: பாட்டுபுரியுமா?

புரியற மாதிரி பல புத்தகங்களில் அதை குறித்து விளக்கங்கள் 

கொடுத்திருக்குநீர்சுழற்சி ஆங்கிலத்தில் water cycle என்பதை படமாகவும்,

சிறுவயதில்குளம் குட்டை தண்ணீர் ஆவியாகி என்ற பாடலை பாடியும் 

அறிந்துகொண்டோம்.அதை மிகஅழகாக பட்டினப்பாலையில் 

உருத்திரங்கண்ணனார் கூறுகிறார்.

வான்முகந்தநீர்மலைப்பொழியவும்

மலைப்பொழிந்தநீர்கடல்பரப்பவும்

மாரிபெய்யும்பருவம்போல

நீரினின்றும்நிலத்துஏற்றவும்

நிலத்தினின்றுநீர்ப்பரப்பவும்

அளந்துஅறியாபலபண்டம்

வரம்புஅறியாமைவந்துஈண்டி

அருங்கடிபெருங்காப்பின்

வலிவுடைவல்அணங்கின்நோன்

புலிபொறித்துபுறம்போக்கி

மதிநிறைந்தமலிபண்டம்

பொதிமூடைப்போர்ஏறி

மழைஆடுசிமையமால்வரைக்கவாஅன்

வரைஆடுவருடைத்தோற்றம்போலக்

கூர்உகிர்ஞமலிக்கொடுந்தாள்ஏற்றை

ஏழகத்தகரொடுஉகளும்முன்றில் (126-141) 


           



பல்பொருளும் குவிந்து கிடக்கும் காவிரிப்பூம்பட்டனத்துப் 

பண்டகசாலையை விவரிக்கும்போது

மேகம் கடலிலே முகந்தநீரை மலையிலே மழையாகப் பொழிவதும்

மலையில் பொழிந்த நீர் ஆறாகப்பெருகி கடலிலே போய்ச் 

சேருவதுமாகிய மழைபொழியும் காலத்தைப் போலக்

(பலநாடுகளிலிருந்துநீர்வழியாக )  கப்பலில் வந்த பொருட்களைக் 

கடலிலிருந்து கடற்கரையில் கொண்டு வந்து சேர்ப்பதும் , ( 

உள்நாட்டில்விளைந்தபொருட்களை) வெளிநாடுகளுக்கு அனுப்பும் 

பொருள்களைக் கப்பலில் பரப்புவதுமாக அளவிட்டு அறியமுடியாத 

பலபொருட்கள்பண்டகசாலையில் எல்லையின்றி வந்து குவிந்துகிடந்தன

பெருமையும் அச்சமும் , மிகுந்தகாவலும் அமைந்த பண்டகசாலையில் ,

வரிகொடுக்காமல் மறைப்பவர்களுக்கு, அச்சம் தருபவராக இருக்கின்ற 

வலிமை வாய்ந்த சுங்கம் வாங்குவோர், பொருட்களின் மீது பெருமை 


பொருந்திய புலிச்சின்னத்தைப்பொறித்து, (பண்டகசாலையின்முற்றத்திற்கு

வெளியேஅனுப்புவர். இவ்வாறு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த 

பண்டங்களும் உள்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்குச் செல்லும் 

பொருட்களுமாகப் பலவகைப்பொருட்களும் வரிசெலுத்தப்பட்டு

பொதியப்பட்டமூட்டைகளாகக்குவிக்கப்பட்டுள்ளன. மேகம் உலவுகின்ற 

பெருமை பொருந்திய பொதிகைமலையின் பக்கமலைகளிலே 

வருடைமான்கள்விளையாடுகின்றகாட்சி போலப் பண்டகசாலை 

முற்றத்தில் குவித்துவைக்கப்பட்டுள்ள மூட்டைகளின் மீது கூர்மையான 

நகங்களையும் வளைந்த பாதத்தையுடைய ஆண்நாயும், செம்மறி 

ஆட்டுக்கிடாய்களும துள்ளிக்குதித்து விளையாடும்.இத்தகைய 

தன்மையினை உடையது பண்டகசாலையின் முற்றம்இதை 

பார்க்கும்போது நீரியல்சுழற்சியை நினைவூட்டுவதாக கூறுகிறார்.



எல்லோரும்: அருமையானபாடல்.

சரி நீரியல் சுழற்சியை பாடலாக நம் பாட்டான் காலத்திலேயே நமக்காக 

எழுதி வைத்திருக்கிறார்கள் ,தண்ணீர் பஞ்சம்,பற்றாக்குறை என்றெல்லாம் 

புலம்புகிறோமே அது உண்மையா? யாராவதுசொல்லுங்க


வெங்கிடுபதி: இல்லை அளவு குறையலை மேடம்………..ஆனா அதற்கான 

சான்று இருக்கான்னு தெரியலை.தெரிஞ்சா சொல்லுங்களேன்.

சான்று இருக்கு நண்பர்களே…………


             
வெங்கிடுபதி சார் சொன்னது ரொம்ப சரி அளவு குறையல ,அதற்கான 

சான்று இருக்கு, அதுவும் உலகபொதுமறையில் இருக்கு.
கூறாமைநோக்கிக்குறிப்பறிவான்எஞ்ஞான்றும்
மாறாநீர்வையக்கணி.
                           (குறள் 701: மன்னரைச்சேர்ந்தொழுகல்அதிகாரம்)

கூறாமைநோக்கிக் – ஆள்வோன்கூறாமலேயே
குறிப்பறிவான் – அவன்உள்ளக்கிடக்கையைஅறிந்துஆற்றுவோன்
எஞ்ஞான்றும் – எப்போதும்
மாறாநீர் – நீர்வளம்குறையாத
வையக்குஅணி – உலகத்துக்குபூணும்நகையன்னவன்

இங்கு மாறாநீர் என்பது நீர் வளம் குறையாத என்று பொருளாயினும் அளவில் மாறாத நீர் என கொள்ளலாம்.
அறிவியல் ரீதியாகவும் ஒரு உருண்டையான டப்பாவில் தண்ணீரை ஊற்றி அதற்குள்ளாக சுழற்சி முறையில் அதே நிலையை அடையக்கூடிய தண்ணீரை அடைத்து வைப்போமானால்,அளவு கூடவும்,குறையவும் வாய்ப்பில்லை.
Conveyance loss போன்றவற்றிக்கு இங்கு இடமில்லை என்பதறியவும்.
சுமதி: அட எவ்வளவு நுட்பமா எழுதியிருக்காங்க.அப்போ தண்ணி எங்கே போகுது.
நல்ல கேள்வி கேட்டீங்க,இதே கேள்விதான் என்னை இந்த தேடுதலுக்கு உட்படுத்தியது…………
அதாவது,தண்ணீரின் அளவுதான் மாறாவில்லை,ஆனால் தண்ணீரின் தன்மையை நாம் மாற்றிவிட்டோம்,சரியான முறையில் பயன்படுத்தமா மாசு பண்ணிட்டோம்,இப்போ அந்த தண்ணீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறிடுச்சி,அதோடு,நீர்நிலைகள் எல்லாம் குப்பைகளால்ஒரு புறமும்,மக்களின் வீடுகளால் ஒரு புறம் ஆக்கிரமிப்பு ஆயிட்டதால பெய்யற மழை அதாவது,நீரியல் சுழற்சி மூலமா திரும்ப வரும் தண்ணீரை சேமிக்க முடியலை.அதனால தண்ணீர் அளவுக்கு அதிகமா கடலுக்குள் போகவும்,நீர் வடிய முடியமால் ஊருக்குள் நிற்பதும் வழக்கமாகிவிட்டது.
கார்த்தி: சரிதான்.மேம் ஏதோ மெசேஜ் வருது
செல்வாவும் அனிதாவும்தான்
என்ன சொல்றாங்க
நீரியல் சுழற்சி தெரிந்த செய்திதானே,அந்த பாட்டு என்ன ஸ்பெஷல் ன்னு கேட்கிறாங்க.
என்ன நண்பர்களே உங்களுக்கும் அந்த சந்தேகமிருக்கா?
உலகின் மற்ற பகுதிகளில் நீரியல் சுழற்சி குறித்த தெளிவான சிந்தனையில்லாத போது,சங்ககாலத்திலேயே தமிழர்களிடத்தில் நீரியல்,மழை பற்றிய தெளிவான அறிவியல் கருத்துக்கள் இருந்தற்கான பாடல்தான் அது.
வெங்கிடுபதி: நைல் நதி பத்தி சொன்னீங்க, நாகரீகம்  எல்லாமே ஆற்றோரத்தில்தான் வளர்ந்தது,அப்போ சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் நைல் நதி க்கும் தொடர்பு உண்டா?

அருமையான கேள்வி.நீங்க நினைக்கிற மாதிரி எல்லாஆற்றங் கரையோரத்திலும் நாகரீகங்கள் உருவாகிடவில்லை.


குறிப்பா நைல்நதி ,டைக்ரிஸ், யூஃப்ரடஸ், சிந்துநதி, மஞ்சள் 

நதியோரங்களில் மட்டும்தான் நாகரீகங்கள் உருவானது

இந்த நாகரீகங்கள் தனக்குள் தொடர்பு கொண்டு இருந்தன.குறிப்பாக 

வணிக பரிமாற்றங்கள் கொண்டிருந்தன், அதனால் பாசனமுறைகளும்

வளர்ச்சியும் ஒத்து இருந்ததாக வரலாறுகூறுகிறது.

        

சுமதி:இவ்வளவு முந்தைய பாரம்பரியமா நம்மோடது,பெருமையா இருக்கு

மேடம்.அதுமட்டுமில்ல, முதன்முதலா கால்வாய்களை பராமரிப்பது 

குறித்த விரிவான எழுத்து வடிவில் யார் கொண்டு வந்தாங்க தெரியுமா?

கார்த்தி&வெங்கிடுபதி: நீர்பாசனசட்டம் 2000ம்சரியா?


ஹாஹா, இல்லை இல்லை, இது நாம சொல்லிக்கிறோம்.

அப்போ யார் சொல்லுங்க ரொம்ப ஆர்வமாயிருக்கு.

சரி சரி .அப்படியே suspense ஆ இருக்கட்டும். ஒரு காபி அல்லது தேநீர் சாப்பிடுவோம்.

என்ன நண்பர்களே,காபி சாப்பிட்டாச்சா?

கார்த்தி: மேடம்சொல்லுங்க suspense மண்டைய குடையுது.


அட சொல்றேன் பொறுங்க

சுமேரிய நாட்டு மன்னன் ஹமுராபி 3500 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்து

வடிவத்தில் கால்வாய் பராமரிப்புக்கான சட்டத்தை கொண்டு வந்திருக்கார்.

சுமதி: மெசேஜ் வருது மேடம்.

பரிமள்தான்

தமிழ்நாட்ல நடந்தத கொஞ்சம் சொல்லு.




                   


சரி பரிமள் சொல்றேன்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை முன்பே கூறியதுபோல் சங்ககாலத்திலேயே ,
நீர்மேலாண்மையில் சிறந்து விளங்கினர்.

         

கார்த்தி: மேடம் எனக்கொரு சந்தேகம் கேட்டா எதுவும் 

சொல்லமாட்டீங்களே…………..

கேளுங்க……………

கார்த்தி:விவசாயம் எப்போ ஆரம்பிச்சாங்களோ, அன்னைக்கே உலகம் 

அழிய ஆரம்பிச்சிடுச்சுன்னு அடிக்கடி சொல்வீங்களே…………………… அதான் 

கேட்டேன்.

உண்மைதான்,ஆனாஅது தனியா ஒருநாள் பேசணும். இப்போ பாசனம் 

பத்தி பார்ப்போம்…………என்னசரியா.

அட பரிமள் வாவா………… வந்துகிட்டே தான் பேசுனியா,

முதலில்,மழையை மட்டும் நம்பி பாசனம் செய்தாங்க,அதாவது மழை 

பெய்தா விவசாயம் இல்லைன்ன இல்லை,இது கிட்டதட்ட மானாவரின்னு 

சொல்றோம்ல அந்த மாதிரி.

சுமதி: பரிமள் வாங்க ,நான் சுமதி,

மேடம், அப்போ, எல்லோருக்கும் உணவு எப்படி கிடைச்சுது.

அவங்க அவங்களுக்கு தேவையான உணவை அவங்க அவங்க விவசாயம்

செய்துகிட்டாங்க.


இரண்டாவது நிலைதான் ,குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் 


தேங்கும் நீரை பயன்படுத்திகிட்டாங்க,

மூன்றாவது நிலைதான், ஓடும் நீரை தடுத்து அணைகள் கட்டி பாசனம் 

செய்தாங்க. இந்த மூன்றாவது நிலை முற்றிலும் நீரின்ஓட்டம் ,மழை

போன்ற பல்வேறு அறிவியல்சார்ந்த நீரியல் தகவல்களின் 

அடிப்படையில் அணை கட்டப்பட்டது.

                     



வெங்கிடுபதி: அணையை முதன்முதலில் கட்டியது யார்?

சார், செம கேள்வி, மற்ற நாகரீங்களில் வெள்ளம் வரும்போது 

அதை முறையாக பயன்படுத்தினார்கள். ஆனால் சிந்துவெளி 

நாகரீகத்தில்தான் ஆற்றுக்கு குறுக்கே அணைகட்டி இருபுறமும் 

விவசாயம் பார்த்தார்கள்.அந்த வகையில் நாம் பெருமை அடையலாம்.

                

பரிமள்: ஆகா,நம் முன்னோர்கள் எவ்வளவு அறிவாளியா 

இருந்திருக்காங்க.ஆமாம்,கல்லணை பெரிய பெருமையில்லையா,

மேட்டூர் அணையை கட்ட வந்த ஆர்தர்.காட்டன் அவர்கள் வியந்து 

நின்றது நம்தமிழரின் கட்டுமான மற்றும் நீரியல் அறிவுக்கும் பெரிய 

சான்று.

              


இடியுடை பெருமழை எய்தா ஏகப்

பிழையாவிளையுள் பெருவளம் தரப்ப  

மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்’வரி26-28

இளங்கோவடிகள் குறிப்பிடும் மழை பிணித்து ஆண்ட மன்னவன் என்ற 

அடிக்கு பொருள் முறையாக மழையை தக்கமுறையில் பயன்படுத்தி 

நாட்டை வளம் பெற செய்த மன்னன் இவன் என்பதாகும்.

அத்தகைய மன்னர்கள் தமிழகமெங்கும் இருந்தார்கள்.அதில் 

முன்னோடியாக திகழந்தவர்தான் கரிகால்சோழன்

       

பிற்காலச் சோழ மன்னர்கள் காலத்தில் 20 பெரும் நீர்க்கட்டமைப்புகள் செய்யப் பட்டுள்ளன. இதில் ஒன்பது கட்டுமானங்கள் மன்னர்களின் பெயர்களைக் கொண்டவை. அரசியின் பெயரால் அமைந்தவை மூன்று. அமைச்சர்கள், அதிகாரிகள், குழுக்கள் பெயரில் அமைந்தவை எட்டு.
அரசர் பெயரில் அமைந்தவை
கண்டராதித்தன் - கண்டராதித்த ஏரி
சுந்தரசோழன் அல்லது இரண்டாம் பராந்தகன் - சுந்தரசோழன் வாய்க்கால்
இராசராசன் - இராசராசன் வாய்க்கால்
முதலாம் இராசேந்திரன் - முடிகொண்ட சோழப் பேராறு
வீரராசேந்திரன் - வீரராசேந்திரப் பேராறு; இராசகேசரி வாய்க்கால்
முதலாம் குலோத்துங்கன் - புத்தாரான குலோத்துங்க சோழப் பேராறு; சுங்கம் தவிர்த்த சோழன் வாய்க்கால்
இராசாதிராசன் - இராசாதிராசன் வாய்க்கால்
அரசியர் பெயரில் அமைந்தவை
செம்பியன் மாதேவி வாய்க்கால்
பராந்தகன் மாதேவி வாய்க்கால்
மாதேவடிகள் வாய்க்கால்
அதிகாரிகள் பிறர் பெயரில் அமைந்தவை
தாமோதர வாய்க்கால்
தென்பூமி வாய்க்கால்
தருமி வாய்க்கால்
அம்மையப்பன்வாய்க்கால்
திருவாஞ்சியத்தேவன் வாய்க்கால்
சோமநாதன் வாய்க்கால்
முன்னூற்றுவன் வாய்க்கால்
மூவாயிரவன் வாய்க்கால்
எல்லோரும்: உங்க ஊரு பெருமைய மட்டும் சொல்லாதீங்க மேடம் மற்றதை சொல்லுங்க.
அப்படி ஏதுமில்லை, கல்லணைதான் பல அணைகளுக்கு வழிக்காட்டியாக இருந்துள்ளது அதனால்தாபன் அங்கிருந்து ஆரம்பித்தேன்,அப்படியே எங்க ஊரும்.
அதேபோல்திருச்சிராப்பள்ளியில்உள்ளஉய்யக் கொண்டான் வாய்க்கால்தான்தமிழகத்தின்முதல் சமமட்டக் கோட்டு வாய்க்கால் ஆகும். (Contour Canal) இந்த வாய்க்கால் அமைந்துள்ள பகுதி மேடும் பள்ளமும் அமைந்ததது. ஆற்றுநீர் அறுத்து முறையற்று இருக்கும் இடம். இங்கு சமமட்டக்கோட்டு வாய்க்கால் அமைக்கும் நுட்பம் அப்போதே இருந்தமை மிகவும் வியப்பிற்குரிய ஒன்று. ஏனெனில் நீரியல் கோட்பாடுகள் வளர்ந்தது 18ஆம் நூற்றாண்டுக் காலத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமதி&பரிமள்மற்றமன்னர்கள்பற்றிசொல்லுங்க.
சொல்றேன்……
சோழர்கள்மட்டுமில்லைபாண்டியர்கள்,பல்லவர்கள்எனசமகாலமன்னர்கள்யாவரும்நீர்மேலாண்மையில்சிறந்துவிளங்கினர்.
மழைநீரைசேமித்துவைப்பதற்குஏற்றநீர்நிலைகளைஅமைப்பதுமன்னனின் தலையாய கடமையென புறநானூறு கூறுகிறது..
நல்இசை நிறுத்தல் வேண்டினும், மற்றதன்

தகுதி கேள், இனி, மிகுதியாள!

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;

நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;

வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்

வைப்புற்று ஆயினும், நண்ணி ஆளும் 

இறைவன் தாட்குஉத வாதே; அதனால்,

அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே

நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்

தட்டோர் அம்ம, இவண்தட் டோரே;

தள்ளா தோர்இவண் தள்ளா தோரே


இந்த பாடல்குடபுலவியானர்அவர்கள்பாண்டியநெடுஞ்செழியன்அவர்களை 

புறநானூறு-18நீரும்நிலனும்என்றதலைப்பில்புகழ்ந்துபாடியதாகும்





நிலம் பள்ளமாக எங்கெங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் நீர்நிலைகள் அமையும் படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் தம்பெயரை நிறுத்தி கொள்வார்கள் என்ற பொருள்படும் இப்பாடல் நீர்நிலைகளின் சிறப்பை கூறுகிறது.


          


வெங்கிடுபதி: அட பாண்டியர்கள் இவ்வளவு சி றப்பாக நீர்மேலாண்மை செய்திருக்காங்களா?
சார்,பவானி ஆற்றில் உள்ள காலிங்கராயன் அணைக்கட்டு பிற்காலப்பாண்டியர் காலத்தை சேர்ந்தது. முதலாம்மாறவர்மன் சுந்தர்பாண்டியன் சோழநாட்டை வென்றான்அவனது அமைச்சருக்கு காளிங்கராயன் என்ற பட்டம் இருந்தது.எனினும் கொங்கு வரலாற்றில் காளிங்கராயன் என்ற அரசுஅதிகாரி இவ்வணையைக் கட்டியதாக கூறுகிறது.

      




பரிமள்: அப்போ பாண்டியர்கள் ஆட்சி செய்த பகுதியையும்,வென்ற 

பகுதியையும் ஒன்று போல் நடத்தியிருப்பது அவர்களது 

பெருந்தன்மையை காட்டுகிறது ம்ம்….

இப்போ ரொம்ப    முக்கியமான ஒருத்தரை பற்றி சொல்ல போறேன்

எல்லோரும்: சொல்லுங்க சொல்லுங்க ஆர்வமாயிருக்கு………….

சொல்றேன்,தமிழ்நாட்டின் பாசன வரலாற்றில் எட்டிச்சாத்தன் எனப்படும் 

இருப்பைக்குடிக்கிழவனுக்கு மிக முக்கியமான இடம் உண்டு.

இவர் சிறிமாற சிறிவல்லபன் என்ற பாண்டிய அரசனுக்கு உட்பட்டவன். 

இவரது காலம் கி.பி. 815 முதல் 862 வரை. இவர் வாழ்நாளில் 

பெரும்பகுதியை பாசனப் பணிகளுக்காகவே செலவிட்டார். சாத்தூர்

கோவில்பட்டி, முதுகுளத்தூர், விளாத்திகுளம் ஆகிய பகுதிகளைக் 

கொண்டது இருஞ்சோணாடு. இப்பகுதியை ஆட்சி செய்தவர் இவர். தனது 

ஆட்சியில் பெரும்பகுதியை நீர்ப்பாசனப் பணிக்காகவே செலவிட்டிருக்கிறார்.

ஏரிநூலிட்டு ஏறுவித்தல்என்ற செப்பமான அணைக்கட்டும் தொழில்நுட்பம் இவனது காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவன்தான் நீர் அறுவடை என்று இன்று கூறப்படும் நுட்பத்தின் தந்தை எனலாம். பாண்டிய மண்டலம் முழுமையும் ஏரிகளை உருவாக்கி பெய்யும் மழையைப் பிடித்து வறண்ட பகுதிகளை வளமாக்கினான். கிழவனேரி, திருமால் ஏரி, மாறனேரி, திருநாராணயன் ஏரி, பெருங்குளம் என்று பெருமளவு ஏரிகளை அமைத்துள்ளார்




ஆற்றின் மட்டத்திலிருந்து உயரமான இடத்திற்கு நீரைக் கொண்டு செல்லும் தொழில்நுட்பத்தை இவர்கள் மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர். எங்கெல்லாம் ஒரேஒரு கால்வாய் பிரிகிறதோ அங்கெல்லாம் வடிவத்திலும், இருபுறத்திலும் கால்வாய் பிரியும் இடத்தில் குதிரைலாட வடிவில் காய்வாய்கள் அமைக்கப்பட்டன. இதை அறியாத ஆங்கிலேயர் பாறையின் போக்கிலேயே இது கட்டப்பட்டதாக கருதினர். இதனால் அவர்கள் கட்டிய அணைகள் உடைப்பெடுத்தன.

இவ்வளவு பண்டைய வரலற்றைத் தனன்னகத்தே கொண்ட பாண்டியர்களின் பாசனப் பணி என்பது வையை ஆற்றோடும், பொருநை என்ற தாமிரபரணியோடும் நெருக்கமானது. வையை மேற்கு மலைத் தொடரில் தோன்றும் ஆறு. கண்ணகியும் கோவலனும் கடும் கோடை காலத்தில் மதுரைக்குள் நுழைகின்றபோது படகுகள் ஓட்டும் அளவிற்கு நீரோட்டத்தைக் கொண்டிருந்தது.

புனல்யாறு அன்று இது பூம்புனல் யாறு என
அனநடை மாதரும் ஐயனும் தொழுது
பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும்
அரிமுக அம்பியும் அருந்துறை இயக்கும்
பெருந்துறை மருங்கின் பெயராது ஆங்கண்
மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித்
தேமலர் நாறும் பொழில் தென்கரை எய்தி’ (சிலம்பு: 175)
கார்த்தி: மேடம்இந்தபாடலின்பொருள்சொல்லுங்க……….
என்று வையை ஆறு பல்வகையான மலர்களுடன் ஓடியதையும், அதில் குதிரைமுக படகுகளும், யானைமுகம் படகுகளும், சிங்கமுகப் படகுகளும் சென்ற செய்தியை இளங்கோவடிகள் பதிவு செய்துள்ளார்.
பரிமள்: வைகைஆறுபத்திஒண்ணும்சொல்லலையாப்பா

சொல்லியிருக்காங்கபரிமள்சொல்றேன்கேளு.

.
வைகையை கடலில் புகாத நதி என்பார்கள். உவமானத்துக்கு சொன்னாலும் உண்மையும் இருக்கிறது. இப்போதும் வைகையின் நீர் நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெள்ளங்களின்போது மட்டுமே கடலில் கலக்கிறது. காரணம், பாண்டியர்களின் நீர் மேலாண்மை. நீரை வீணாக்கக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருந்தார்கள். பாண்டியர்கள் காலத்தில் வைகையில் சுமார் 3000 சங்கிலித் தொடர் ஏரிகள், கண்மாய்கள் அமைக்கப்பட்டன. அந்த நீர் நிலைகள் அத்தனையும் வைகையின் நீரை உள்வாங்கிக்கொண்டன. இதனால், கடலுக்கு வைகையின் நீர் மிகக் குறைவான அளவே சென்றது.
இதை வைத்து ஒருமுறை ஒட்டக்கூத்தருக்கும் புகழேந்திப் புலவருக்கும் பாட்டுப் போட்டி நடந்தது. அப்போது ஓட்டக்கூத்தர்,





நாரியிடப் பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதாத வைகையேஎன்று பாடினார்

இதற்கு எதிர்ப்பாட்டு பாடினார் புகழேந்திப் புலவர்.

வாரி இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ் பாண்டிய நாடு

என்றார் அவர். முன்னவர் புராண ரீதியாக காரணம் சொன்னார் எனில் பின்னவர் புவியியல் ரீதியாக காரணத்தை விளக்கினார். வைகை தனது தண்ணீரை இரு கரைகளிலும் வாரி வாரி (வாய்க்கால்கள் வழியாக) வழங்கிவிட்டதால் கடலுக்கு செல்ல நீர் இல்லை என்கிறார்.

அதேசமயம் வடகிழக்கு பருவ மழையை மட்டுமே நம்பியிருந்தது வைகை. ஆற்றில் எப்போதும் தண்ணீர் ஓடும் என்று சொல்ல முடியாது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த உண்மையை உணர்ந்த பாண்டியர்கள் ஆற்றில் தண்ணீர் ஓடும்போது அதனை முழுமையாக ஏரிகளில் சேமித்துக் கொண்டார்கள். வைகையின் இந்த நீரியல் ஓட்டத்தை அவர்கள் நன்றாக புரிந்து வைத்திருந்தார்கள். குறிப்பிட்ட ஆண்டில் வைகையில் நிச்சயம் நீர்ப்பாயும் என்று தெரிந்தால் குறிப்பிட்ட ஏரிகள் நிரம்பும் வகையில் ஆற்றிலிருந்து நேரடி கால்வாய்கள் வெட்டினார்கள். வெள்ளக்காலங்களில் அந்தக் கால்வாய்கள் திறக்கப்பட்டன. நீர்வரத்து குறைவான காலங்களில் ஆற்றின் குறுக்கே சாய்வாக மரம், தழை, மண் கொண்டு தற்காலிக கொரம்புகளை அமைத்தார்கள். சில இடங்களில் பாறைகள் கொண்டு சிறு அணைகளை அமைத்தனர்.

வெங்கிடுபதி: அடேயப்பா, கேட்கவே இவ்வளவு மலைப்பா இருக்கே……………………ம்…….எப்படிவேலை செஞ்சிருப்பாங்க பாருங்க.
ஆமாம் சார் ,து ஒரு சாம்பிள்தான், இந்தமாதிரி பதிவு செய்யப்படாத பல செய்திகள் உண்டு சார்.

எல்லோரும்: உண்மைதான், ஆனாலும் இதையெல்லாம் நாம கடைப் பிடிச்சிருந்தா இன்னைக்கு இவ்வளவு பிரச்சனை இல்லை இல்லையா.
உண்மைதான்…………………..

தண்ணீர் அளவீடு பத்தி சொன்னேன் இல்லையா, அதேமாதிரி முதன் முதலா  நாட்டில்நடந்த நதிநீர் இணைப்பு எதுன்னு சொல்லுங்க பார்ப்போம்………………

சுமதி&பரிமள்: நதிநீர்இணைப்பை பத்தி முன்னாடியே யோசனை செய்திருக்காங்களா? ஆச்சரியமா இருக்கே…………

கார்த்தி: ஏதோ மெசேஜ் வருது மேடம்………
செல்வாவும்,அனிதாவும்தான்

இவ்வளவு செய்திகளா சங்கத்தமிழிலில் ன்னு ஆச்சரியமும் ,பெருமையுமா இருக்குன்னு சொல்றாங்க.

சரி சொல்றேன் கவனமா கேளுங்க…………………

பாண்டியர்கள் இணைத்த பறலையாறு - பழையாறு! - நாட்டில் நடந்த முதல் நதி நீர் இணைப்பு


   பாண்டியன் அணைக்கட்டின் தடுப்பணைகளில் ஒன்றான பள்ளிகொண்டான் தடுப்பணை.


எல்லோரும்&நானும்: கைதட்டல்.

சரி இப்போ இன்னொரு சுவராஸியமான செய்தி சொல்ல போறேன்.
சொல்லுங்க மேடம்.

சொல்றேன்…………

மழைப்பொழிவு பற்றிய அளவுமுறைகள் பழந்தமிழ்நாட்டில் எப்படி

இருந்தன என்பது கொஞ்சம் பார்ப்போம். மழைப்பொழிவை அளக்க

செவி பதனு என்கிற அடிப்படை அளவுமுறை இங்கு புழக்கத்தில்

 இருந்து வந்த்து. இது தற்கால 10 மி.மீ. அல்லது 1 சென்டி மீட்டர் 

மழைக்கு சமமானது. பொதுவாக வேளாண் மக்கள் 

வீடுகளில் வெளிமுற்றத்தில் ஆட்டுரல் இருப்பது உண்டு. இது 

கால்நடைகளுக்குத் தேவையான பருத்திக் கொட்டை, புண்ணாக்கு

 போன்றவறை அரைப்பதற்கு பயன்படுத்தப்பட்டன. அதே நேரத்தில் இது 

மழைகணிக்கம் (rain gauge)  அல்லது மழைமானியாகவும் பயன்பட்டது. 

இரவில் பெய்த மழையின் அளவை ஆட்டுரலில் மையத்தில் உள்ள 

குழியில் உள்ள நீரின் உயரத்தை விரலால் அளந்து தெரிந்து கொள்வர். 



      


ஓர் உழவுக்கு அல்லது ஈர் உழவுக்கு ஏற்ற மழை பெய்துள்ளது என 

அறிந்து கொள்வர். மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்திற்கும் 

தொடர் இருப்பதால் இதனை பதினு என்று குறிப்பிட்டனர். தொழில்நுட்பக் 

கூறுகளை எளிதாக்கி சாதாரண மக்களும் பயன்படுத்து வகையில் 

உருவாக்கி வைத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். இந்த இடத்தில் 

ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. நமது முன்னோர்கள் 

எல்லாத்துறை தொழில்நுட்பங்களையும் எளிமையாக எல்லோரும் 

எளிதில் கையாளும் வகையிலும் கட்டமைத்திருந்தனர் என்ற செய்தி 

நமக்குவியப்பைத் தருகிறது. இடைகாலத்தில் இத்தன்மை மாறி 

தொழில்நுட்பங்கள் கடினமானதாகவும் சிக்கலுக்குரியதாகவும் தனிபயிற்சி 

மேற்கொண்டாவர்களால் மட்டுமே கையாள கூடியதாகவும் 

மாறிவிட்டது. இதன் விளைவாக எளிய மக்கள் இந்த தொழில் 

நுட்பங்களிலிருந்து விலகி அந்நியமாகி போயினர்.

       



கார்த்தி: மேடம்பல்லவர்கள்எதுவும்செய்யலையா?

அப்படியெல்லாம் இல்லை, அவங்களும் போட்டி போட்டு நீர்மேலாண்மை 

செய்திருக்காங்க.

நான் காவிரியின் கழிமுக பகுதியை சேர்ந்தவள்,எனினும் நீர்வள ஆதார 

அமைப்பில் என்னுடைய முதல் அரசு பணி தொண்டை 

மண்டலத்தில்தான் தொடங்கியது,ஏரிகளின் மாவட்டம் என்ற 

பெருமையை உடைய காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் பணியாற்றி 

இருக்கிறேன்,இதில் பல்லவர்கள் வெட்டிய ஏரிகள் இன்னும் செயல்பட்டு 

கொண்டு இருக்கிறது,இதில் சில ஏரிகளை புனரமைக்கும் வாய்ப்பும் 

கிடைத்தது.

தென்னேரி(திரையனேரி),

தூசி மாமண்டூர் ஏரி

   

காவேரிப்பாக்கம் ஏரி

உத்தரமேரூர் ஏரி

மதுராந்தகம் ஏரி

இப்படி பெரிய ஏரிகளை காணவும்,பணியாற்றவும்,வாய்ப்பு கிடைத்தது.

கூரம்,கோவிந்தவாடி அகரம்,பொன்னேரி,நேமம்,அத்திக்கடவு வடக்கு 

தாங்கல்,எச்சூர் பெரிய ஏரி,சிறுவேடல்,இலுப்பப்பட்டு என பல 

ஏரிகளும்,அய்யாங்கர் குளம் போன்ற தொன்மையான குளங்களையும் 

குறித்து தகவல் திரட்டவும் முடிந்தது.


உத்திரமேரூர் சுமார் 5 சதுர.கி.மீ பரந்து விரிந்த ஊர்,இதன் ஜீவ நாடி 

வைரமேக தாடகம் ஆகும்.இந்தியாவிலேயே முதன் முதலாக 

குடவோலை முறையில் நிர்வாக குழுக்கள் வாரியங்கள் தேர்வு 

செய்யப்பட்டன்,கி.பி 739 லேயே மகாசபை என்ற அமைப்பு 

செயல்பட்டதும்,கி.பி 878 ல் ஏரி வாரியம் என்றொரு அமைப்பும் 

செயல்பட்டிருக்கிறது.ஆண்டுதோறும் வைரமேக தடாகத்தை குழிகுத்திப் 

பாரமரிக்கப்பட்டுள்ளது(தூர் வாருவது).கி.பி 739 லேயே குழிகுத்தப்பட்டதை 

கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது.இதற்கான செலவுகளை 

செல்வந்தர்களும்,வணிகர்களும் நன்கொடையாக அளித்துள்ளனர்.

வெங்கிடுபதி& சுமதி: மேடம் அவங்க பெயர்கள் 


ஏதும்கல்வெட்டில் இருக்கா




          


இருக்கு,அதை கொடுத்தா இன்னும் நீளமா பேசவேண்டியிருக்கும்.அதனால

ஏரிகளின் அமைப்பு பற்றி சங்கத்தமிழ் என்ன சொல்லுது பார்ப்போம்.
சங்கப் புலவர் கபிலர் எந்த வடிவில் ஏரி இருக்க வேண்டும் என்பதைக் கூறுகிறார்.

அறையும் பொறையும் மணந்த தாய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தென்நீர்ச் சிறுகுளம் கீழ்வது மாதோ
தேர்வன் பாரி தன் பறம்பு நாடே.






                       ஏரி கரை
ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால் அதிக நீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு, எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும் போது ஏற்படும் இது ஏரி அமைப்பதில் மிகவும் சிக்கனமான  வடிவமைப்பு.
"சிறுபஞ்சமூலம்" நூலில் காரியாசான், ஏரிகள் அமைக்கப்பட வேண்டிய வரைபடத்தைத் தருகிறார்.

குளந்தொட்டு கோடு பதித்து, வழி சித்து
உளந்தொட்டு உழவயலாக்கி - வளந்தொட்டு
பாடு படுங்கிணற் றோடென்றிவ்வைம் பாற்
கடுத்தான் ஏகுசுவர்க்கத் தினிது.



           ஏரி கரை

ஒரு ஏரியைக் கீழ்க்கண்ட 5 அங்கங்களுடன் அமைப்பவன் சொர்க்கத்திற்குப் போவான் என்பது இப்பாடலின் பொருள்.

குளம் (குளம் தொட்டு). 2. கலிங்கு (கோடு பதித்து). 3. வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் போகும் கால்கள் ஆகிய வழிகளை அமைத்தல் (வழி சித்து).




                                     கலிங்கு
இப்படி ஏரிகளை வடிவமைப்பதிலும்,அதன் இயக்கம்,போன்றவற்றை நிர்வகிப்பதில் வல்லவர்களாக இருந்தார்கள் பல்லவர்கள்.
பரிமள்:ஏதும் சிறப்பான செய்திகள் பல்லவர்களின் நீர் மேலாண்மையில் இருக்கா?
சிறப்பு மட்டுமில்லை,சற்று சுவாரஸியமான மறக்க முடியாத செய்திகள் உண்டு.
எப்பவும் சோழ நாடு சோறுடைத்து என்று எங்க ஊர் பெருமையை பேசி வம்பு செய்வேன்.அப்போ,எங்க ஜீப் ஓட்டுநர் ஒரு வீதி வழியா வண்டியை திருப்பினார்.எப்போதும் போல இந்த வீதி பேரென்ன என நான் கேட்க,அவர் சொல்வதற்கு முன்பே பெயர் பலகையை படித்துவிட்டேன்.
என்னப்பா,நான் தஞ்சாவூரில் இல்லையே என கேட்டேன்,
மேடம்,செங்கழுநீரோடை வீதி,காஞ்சிபுரத்தில் இருக்கீங்க என்றார்.
காவிரியின் கழிமுக பகுதியில் நெல் விளைச்சலுக்கு இணையாக,நெல் விளைவித்து,வருவோர்கெல்லாம் சோறு வடித்த கஞ்சி ஓடி அது நீரோடைப்போல் செங்கழுநீரோடையாக ஓடியிருக்கிறது என்றால்,அங்கிருந்த நீர் மேலாண்மை பற்றி சொல்ல வேண்டுமா?
பொன்விளைந்த நல்லூர் என்ற ஊரின் பெயரும்,அதிகமான நெல் விளைச்சல் கண்டதால் அப்பெயர் பெற்றதாகவும் அவ்வூர் மக்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன்.

சிந்து நதிப்பாசனப் பகுதியில் முகலாயர் ஆட்சியில் உருவான "வாரபந்தி" என்ற சுழற்சி முறைப் பாசனம், பாலாற்று ஏரிகளுக்காக 18-ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட "மாமூல் நாமா" என்ற சுழற்சி முறை, ஆகியவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக தமிழர்கள் தண்ணீர் பகிர்வு முறையில் அறிவியல் பூர்வமாகச் சிந்தித்து நீர் விரயமாகாமல் பங்கீடு செய்தது அவர்களின் மேலாண்மைத் திறமைக்குச் சான்றாகும்.



ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபனின் (கி.பி.815-860) கல்வெட்டு ஒன்று ஸ்ரீகண்ட வாய்க்காலில் வரும் நீரை ஒழுங்குப்படுத்தி, எந்தெந்த நிலங்களுக்கு, எவ்வளவு நேரம் நீர் பாய்ச்ச வேண்டும்? இந்த நீர் பாய்ச்சலில் யார் யாருக்கு எந்த வரிசைக் கிராமத்தில் பாய்ச்ச வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இந்த ஒழுங்குமுறை தவறியவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது "சுழற்சி முறைப் பாசனம்" என்று குறிப்பிடப்படும் நீர் மேலாண்மை வழிமுறையை கி.பி. 9-ம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது.
பரிமள்: ஆமா,அய்யாங்கார் குளம் அது என்ன வித்தியாசமா பேரு.
மற்றவர்கள்: அட ஆமா இல்லே…………..சொல்லுங்க மேடம்.
ஆமாம்,ஒரு முறை,மழை குறைவான நேரம்,கொஞ்சம் வறட்சின்னு கூட சொல்லலாம்……….அப்போ chain of tanks குறித்து ஒரு தள ஆய்விற்கு சென்ற போது அதன் GI MAP பார்த்து கொண்டே வர அய்யங்கார் குளம் என்ற ஊர் வர ஏம்பா குளம் எங்கேன்னு கேட்க,குளம் நோக்கி நடந்தோம்.கொஞ்சம் வித்தியாசமான் குளம்,அது என்ன அப்படின்னு கேளுங்க……

பல்லவர் காலத்தில் வெட்டப்பட்ட "அய்யங்கார் குளத்தின்" நடுவில், ஒரு ஆழமான சிறிய குளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குளத்தில் உள்ள தண்ணீரை மதகுகள் மூலம் வெளியேற்ற முடியாது. பாசன காலம் முடிந்து, குளம் வற்றிய பின்பும், கோடை காலத்தில், இந்த நடுக்குளத்தில் தண்ணீர் இருக்கும். பாசனம் அல்லாத பிற தேவைகளுக்கு இந்தத் தண்ணீர் பயன்பட்டது. காஞ்சிபுரம் அருகில் இன்றும் இக்குளத்தைக் காணலாம்.

                             அய்யாங்கர் குளம்.
மீன் பிடிப்போரும், சலவைத் தொழிலாளர்களும் பகல் பொழுதில் எப்போதும் குளக்கரையில் இருப்பதால், அவர்களிடம் குளக்கரைக் காவல் மற்றும் மடை காவல் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகக் கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கம் இன்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், நிலவரி வருவாயைக் கருத்தில் கொண்டு, குளப்பராமரிப்பு ஆயக்கட்டுதாரர்களிடம் மட்டும் ஒப்படைக்கப்பட்டது. இதுவே மற்றவர்களுக்கு ஏரிகளின் மீது அக்கறை இல்லாமல் போகும்படி செய்துவிட்டது
 இந்த மாதிரியான அமைப்பில் குளம் வேறெங்கும் பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சரி நேரமாச்சு கிளம்பலாமா?
பரிமள்:அது சரி எல்லா ஊரையும் சொன்னே,பவானி ஆறு பத்தி சொல்லாம கிளம்பினா எப்படி?
எல்லோரும்: அதானே மேடம்.
சொல்லிட்டா போச்சு.
கூவத்தில வெள்ளம் வந்தப்போ,தன்னை தானே சுத்தம் செய்து கொண்டதாக கதை,கவிதை என எழுதி சலித்தார்கள்     ஆனா உண்மையிலேயே அப்படி ஒரு அணை இருக்கு தெரியுமா?

அப்படியா சொல்லுங்க சொல்லுங்க.

அந்த அணைதான்

கொடி வேரி அணைக்கட்டு. அதன்படி 151 மீட்டர் நீளம், 30 அடி 
அகலத்தில் அணை கட்டப்பட்டது. அணையின் வலதுப் பக்கத்தில் 
தடப்பள்ளி வாய்க்காலும், இடதுப் பக்கத்தில் அரசன்கோட்டை 
வாய்க்காலும் சுமார் 5 கி.மீ நீளத்துக்கு ஆற்றை ஒட்டியே வெட்டப்பட்டன. பிற்காலங்களில் பாசனம் பெருகப் பெருக தடப்பள்ளி 
வாய்க்கால் 26 கி.மீ வரையும் அரசன்கோட்டை வாய்க்கால் 42 கி.மீ 
வரையும் வெட்டப்பட்டன. கொடிவேரி அணையின் சிறப்பே அதன் 
கால்வாய்கள் மற்றும் மணல் வாரிகள்தான். நுட்பமான நீரியல் 
தொழில்நுட்பம் கொண்டவை அவை.

                                                    கொடிவேரி அணைக்கட்டு

ஓர் ஆற்றில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் எடுக்கக் கூடாது. குறிப்பிட்ட அளவு ஆற்றின் நீர் கடலில் கலக்க வேண்டும். ஆற்றின் நீரியல்போக்கு திசையில் இருந்து 50 சதவீதத்துக்கும் மேலாக எந்தக் காரணம் கொண்டும் திருப்பக்கூடாது என்கிறது உலக ஆறுகள் பாதுகாப்பு விதிமுறைகள் (Helsinki Rules). ஆனால், அன்றைக்கே நம் முன்னோர்கள் இதனை கொடிவேரி அணைக்கட்டுப் பாசனத்தில் நடை முறைப்படுத்தியிருக்கிறார்கள்.

தடப்பள்ளி கால்வாயும் அரசன் கோட்டை கால்வாயும் ஆற்றை ஒட்டியே இருபுறமும் செல்கிறது. இதனால் ஆற்றின் நீரோட்டம் திசை        திருப்பப்படுவதில்லை. மேலும், ஆற்றில் இருந்து கால்வாய்களுக்குச் செல்லும் தண்ணீர் வயல்களுக்குச் சென்று அதன் கசிவு நீர் மீண்டும் வாய்க்கால் வழியாக ஆற்றுக்கு வந்துவிடும். அதாவது ஒரு பாசன நிலம் தனக்குத் தேவையானது போக மீதமிருக்கும் தண்ணீரை மீண்டும் ஆற்றுக்கு அனுப்பிவிடுகிறது. இதற்காகப் பாசன நிலங்களின் மட்டத்துக்கு ஏற்ப கால்வாய்கள் அமைக்கப்பட்டன.

மிகச் சிறந்த சிக்கன நீர் மேலாண்மை இது. இங்கிருந்து ஆற்றுக்கு கீழே 

60 கி.மீ தொலைவில் இருக்கிறது காளிங்கராயன் அணைக்கட்டு. 

தடப்பள்ளி - அரசன்கோட்டை கால்வாய்களின் மிகச் சிறந்த நீர் 

மேலாண்மை காரணமாக இன்றைக்கும் கொடிவேரி அணையில் 

பாசனத்துக்காக விநாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறந்தால், அந்தத் 

தண்ணீர் இடைப்பட்ட பகுதிகளின் பாசனத்துக்கு போக மீதம் சுமார் 400 

கனஅடி தண்ணீர் காலிங்கராயன் அணைக்குச் சென்றுசேர்கிறது.
அடுத்தது மணல்போக்கி தொழில் நுட்பம். அணைக்கட்டின் மையப் பகுதி யில் தண்ணீரின் குவி மையத்தில் கிணறு வடிவில் சுரங்கம் வெட்டப்பட்டிருக்கிறது. இது அணைக்கு வெளியே தண்ணீர் திறக்கப்படும் இடத்துக்கு சுமார் 20 அடி தூரத்துக்கு அப்பால் சென்று முடிகிறது. சுரங்கத்தின் வாய்ப் பகுதி அகலமாகவும் உள்ளேச் செல்ல செல்ல குறுகலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுரங்கத்துக்குள் கல்லால் ஆன நுட்பமான சல்லடை அமைப்புகள் மற்றும் கல்லால் செதுக்கப்பட்ட பல்வேறு வடிவமைப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. மணல் போக்கிகளைக் கரையில் இருந்தே மூடும் வகையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கதவுகள் அமைக்கப்பட்டன. இந்த மணல்போக்கிகள் மணலையும் சேற்றையும் உள்ளே இழுத்து மறுபக்க சுரங்கத்தின் துவாரம் அணைக்கு வெளியே தள்ளிவிடும். இதன் மூலம் அணையில் மணலும் சேறும் தங்கவில்லை. மேலும் இதன் வழியாக தண்ணீரும் வெளியேறாது என்பதும் இதன் தனி சிறப்பு. இதனால் அணையின் நீர் தூய்மையாக இருந்தது. அணை தன்னைதானே தூர் வாரிக்கொள்ளும் தொழில்நுட்பம் இது.

சுமதி&கார்த்தி: குற்றாலம் குறித்து நிறைய பாடல் படிச்சிருக்கோம்,அதை பத்தி சொல்லுங்க.
ம்ம்...............குற்றால குறவஞ்சி பாட்டு சொல்ல போறதில்லை மாறாக வேறொரு செய்தி சொல்ல போறேன்...............
ஒவ்வொவ்வொரு நீரோட்டத்திலும் அடிமைகளின் வேதனையும்,அழுகையும் கலந்துதான் ஓடிக்கொண்டிருக்கிறது.................
வெங்கிடுபதி: என்ன மேடம் முக்கியமான கதையோ.
வரலாற்று முக்கியம் வாய்ந்த கதை சார்.சொல்றேன் கேளுங்க.
நயாகரா,மற்றொன்று விக்டோரியா ஆகிய இரு அருவிகளும் உலகில் புகழ்பெற்றதாகக் கூறப்படுகிறது.  நயாகரா நதி,பனிக்கட்டியாகப் போன பிரமாண்ட தொடர் ஏரிகளின் உருகிய நீரின் பிறப்பு.37மைல் நீளத்துக்கு ஓடி வந்து இரண்டாகப் பிரிந்து,ஒரு பகுதி அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் இன்னும் ஒரு பகுதி கனடாவிலும் தரையிறங்குகிறது. விக்டோரியா,ஆப்பிரிக்காவின் சாம்பசி நதியில் அமைந்த அருவி.இந்த நதியின் நீளம் 2200 மைல்கள்.400அடி உயரத்திலிருந்து பேரிரைச்சலுடன்,மலையைப் பிளந்துக் கொண்டு அருவியாக் கொட்டி தரையில் வழிகிறது.இந்த அருவிச் சாரலை போலதான் நம் குற்றாலச் சாரல். ஆரியன்காவு கணவாயிலிருந்து படிப்படியாக உயர்ந்து ஐயாயிரம் அடிவரை நிமிர்ந்து,பொதிகை மலையை திரும்பிப் பார்க்கிறது ஒரு மலைத் தொடர்.இதன் மிகவும் உயரமான சிகரம் பஞ்சந்தாங்கி மலை.இந்த மலையிலிருந்தே குற்றால சிந்தாநதி பிறப்பெடுக்கிறது
.
1892ம் ஆண்டில் மாஜிஸ்டிரேட் உத்தரவின் படிஆங்கிலேயர்கள் காலை மணி 

முதல் மணி வரை அருவியில் குளிக்கும் உரிமையைப் பெற்றிருந்தார்கள்.

விபரம் அறியாமல் மைசூரைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் 

குளித்துவிடுகிறார்கள்.உடனே வழக்கு பதிவு செய்யப்பட்டுதண்டிக்கப்படுகிறார்கள். இறுதியில் இவ்வழக்கு உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்படுகிறது. நாடு சுதந்திரம் அடையும் வரை தலித் மக்கள் குற்றாலத்தில் நீராடும் உரிமையை 

இழந்திருந்தார்கள்.குற்றாலத்தில் நீராடும் இன்பம் தலித்துகளுக்கு ம்றுக்கப்பட்ட்து

என்ற உண்மை,1934ம் ஆண்டில் காந்தியடிகளின் தமிழக வருகையின் 

மூலம்தான் உலகம் அறிய நேர்ந்தது.குற்றாலத்துக்கு வந்த 

காந்திஅருவியிலிருந்து மூன்று மைல்தொலைவில் உள்ள அய்யாசாமி பங்களாவில் ஓய்வு கொள்கிறார்
அப்போது தாலுக்கா போர்டு உறுப்பினர் குமாரவேலு குடும்பம் தலைமையில் ஒரு தூதுக் குழு காந்திஜியைச் சந்திக்கிறது. அவரிடம் மேற்படியான பிரச்னைகளை கூறுகிறார்கள். இதை கேள்விப்பட்டதும் காந்தி அதிர்ச்சியடைகிறார்.
அன்று மாலையே காந்தி குற்றால அருவிக்கு அழைத்து செல்லப்படுகிறார்.அருவியின் மூலிகை குணம் இதர பெருமைகள் அவரிடம் கூறப்படுகிறது. இருந்தும் இயற்கையின் உபாசகன் காந்தி, அருவியில் நீராட மறுக்கிறார்.என்றைக்கு தலித் மக்கள் நீராடும் உரிமை பிறக்கிறதோ அன்று நானும் குளிக்கிறேன் என்றார் மகாத்மா.
இப்படி அடிமைகளின் கண்ணீராக ஓடிக்கொண்டிருந்ததுதான் நம்முடைய நதிகள்...
சரி நண்பர்களே,ரொம்ப நேரமா பேசிக்கொண்டிருக்கிறோம்,மீதி கதையை இன்னொரு நாள் பேசுவோம்.நண்பர்களே நன்றி...............மீண்டும் சந்திப்போம்





அப்போது தாலுக்கா போர்டு உரிப்பினர் குமாரவேலு குடும்பம் தலைமையில் ஒரு தூதுக் குழு காந்திஜியைச் சந்திக்கிறது. அவரிடம் மேற்படியான பிரச்னைகளை கூறுகிறார்கள். இதை கேள்விப்பட்டதும் காந்தி அதிர்ச்சியடைகிறார்
.
அன்று மாலையே காந்தி குற்றால அருவிக்கு அழைத்து செல்லப்படுகிறார்அருவியின் மூலிகை குணம் இதர பெருமைகள்அவரிடம் கூறப்படுகிறது. இருந்தும் இயற்கையின் உபாசகன் காந்திஅருவியில் நீராட மறுக்கிறார்.என்றைக்கு தலித் மக்கள் நீராடும் உரிமை பிறக்கிறதோ அன்று நானும் குளிக்கிறேன் என்றார் மகாத்மா.
இப்படி அடிமைகளின் கண்ணீராக ஓடிக்கொண்டிருந்ததுதான் நம்முடைய நதிகள்...

சரி நண்பர்களே,ரொம்ப நேரமா பேசிக்கொண்டிருக்கிறோம்,மீதி கதையை 

இன்னொரு நாள் பேசுவோம்.நண்பர்களே நன்றி...............மீண்டும் சந்திப்போம்



கருத்து மூலம்





தமிழக பாசன வாரலாறு-பழ.கோமதி நாயகம்

இருப்பைக்குடி கிழவன்-வெ.வேதாசலம்.(இணையத் தகவல்)

செவி பதனு-இணைய தகவல்

கொடிவேரி- செவி வழி செய்தி மற்றும் ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

கல்லணை- பார்த்ததும் கேட்டதும்

குற்றாலம்-செவி வழி செய்தி

அய்யாங்கார் குளம் மற்றும் ஏரிகள்-பணிபுரிந்த இடத்திலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்

சங்ககால பாடல்கள்-இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது.

படங்கள்-புகைப்படம் எடுத்தது மற்றும் இணையத்திலிருந்து எடுத்தது

காணொளி- you tube.
அன்புடன் லீலா 

.





























































No comments:

Post a Comment