Tuesday 18 August 2020

உணவும் பெண்ணும்.

 ஆதிகாலத்தில் காட்டில் வேட்டையாடி நாடோடியாக திரிந்த மனிதர்கள் கைக்குக் கிடைத்த காய்,கனிகளையும் வேட்டையில் அகப்பட்ட விலங்குகளையும் பச்சையாக உண்டு வந்த காலத்தில்தான் இடி விழுந்த இடத்தில் வெந்த விலங்கின் மாமிசத்தை உண்டு அதன் ருசிக்கு அடிமை ஆனார்கள்.


இடி விழும் போது தீயை பற்றிக் கொள்ள ஏற்பாடு செய்தனர். அத்தீ அடுத்த இடி வரை தாக்குப் பிடிக்காமல் அணைந்து போக சுவையான உணவிற்காக நெருப்பை தேடி அலைந்தவர்கள் தாம் சிக்கிமுக்கி கல் மூலமாக நெருப்பை கண்டறிந்தனர். உணவின் மூலம் நெருப்பை  கண்டடைந்தனர் என்றால்....

விவசாயத்தை கண்டடைந்தது இன்னொரு கதை.
ஆதியில் பெண்ணே குழுவின் தலைவியாக இருந்திருக்கிறாள் வேட்டையாடுதல்,உணவை சேகரித்தல்,அதைப் பங்கிட்டுக் கொடுத்தல் என பல்வேறு பணிகளை செய்திருக்கிறாள்.

ஒரு மழைக்காலத்திற்கு பிறகு வெறுமையாக கிடந்த நிலம் விளைந்து நின்றதை பார்த்த பெண்தான் விவசாயத்தை கண்டுபிடிக்கிறாள்.

தான் கைநழுவ விட்ட தானியங்கள் தான் ஈர நிலத்தில் விழுந்து விளைந்து இருக்கிறது எனஉணர்ந்து விவசாயத்தை கண்டுபிடிக்கிறாள் பெண்.
இதற்குப் பின்னர்தான் காட்டை அழித்து விவசாயம் செய்து குழுவாக உண்டு இருக்கின்றனர்.

இந்த காலகட்டத்திற்கு பின்தான் பெண் தலைவியாக இருப்பதிலிருந்து பின் தள்ளப்பட்டு சமையல் மற்றும் பரிமாறல் என்ற வட்டத்திற்குள் அடைக்கப்படுகிறாள். அதற்குப் பின்தான் சமூகவியல் ( Sociology) உருக்‌கொள்ளத் தொடங்குகிறது.

ஒரு ஆணின் ஆளுகைக்குட்பட்ட நிலத்தையும் அவனுக்கான பெண்களையும் நிர்ணயித்து கொள்கிறான். அந்நாளில் தான் பலதாரமணம்(Polygamy)என்பது ஆண்களுக்கு மட்டும் ஆக மாறிப்போகிறது. விவசாய நிலத்தை அதிக அளவில் கைப்பற்றவும் அதில் விளைகின்ற பொருட்களை தானே வைத்துக் கொள்ளவும் நினைத்த பொழுது ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடும் உருவாகிறது. இதற்கு காரணம் விளைநிலத்தை கையகப்படுத்தி ஆளுமை செலுத்த வேண்டும் என்ற எண்ணமே அதற்கு அடிப்படை காரணம் உணவிற்கு தேவையான தானியங்களை அதிக அளவில் வைத்திருக்க வேண்டும் என்பதேயாகும்.

எனவே உணவு என்பது நெருப்பு நிலம் பெண் என பெரிய சமூக கட்டமைப்பை உருவாக்கவும் அழிக்கவும் வல்லது. தன் நாட்டில் இல்லாத உணவுப் பொருட்களின் விதைகளை நாற்றுகளை பெறுவதற்காக வேறு நாட்டு பெண்களை கவர்வதும், திருமணம் செய்துகொண்டு அந்தப் பயிர்களின் விதைகளை நாற்றுகளை சீராக பெற்றதும் வரலாற்றில் அறியாத கதை.
கரும்பிற்கு பின்னால் ஒரு இனிப்பான காதல் கதையுண்டு. மன்மதனின் காதல் ஆயுதம் கரும்பு வில்லும் மலர்‌கணையும் தான் என புராணங்கள் சொல்கின்றன ஆனால் காதலுற்ற காதலனுக்கு கரும்பையே பரிசாக அளித்த கதையை பார்ப்போம்.

1492 இல் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் சில நாட்கள் கானரி தீவுகளில் தங்கினான்,
அவனுடன் காதல் வயப்பட்ட அந்த நாட்டு இளவரசி அவன் விடைபெறும்போது காதல் பரிசாக கரும்பு நாற்றுகளை அவளுக்கு கொடுத்தாள் அதன் மூலம் கரும்பு அமெரிக்காவிலும் நுழைந்தது. பெண்களால் வேறு நாடுகளுக்கு உணவுகள் வேரோடு புலம்பெயர்ந்த கதைகளும் உண்டு.

இலக்கியத்தில் பெண்களின் உணவு.
*********************************
பெண்களின் உணவு பற்றிய குறிப்புகள் இலக்கியத்தில் மிக குறைவாகவே இருப்பதாக தோன்றுகிறது.

பெண் என்பவள் ராஜபோக உணவினை சுவைத்து உண்ணுதல் போன்ற காட்சிகள் எங்கும் தென்படவில்லை. மாறாக உணவை சமைப்பவர் பரிமாறுபவளாக காட்டுகிறதே தவிர சுவைத்து உண்பவளாக காட்டப்படவில்லை.
இலக்கியம் பெண்களின் உணவு பற்றி என்ன கூறுகிறது..... சுவைப்போம் வாருங்கள்.
குறுந்தொகையின் வரிகளைப் பார்ப்போம்.

"முளி தயிர் பிசைந்த காந்தள் மென்விரல்"

என்ற பாடலில் தயிர் பிசையும் பெண்ணின் விரல் வர்ணிக்கப்படுகிறதே தவிர அப்பாடலை முழுதும் உற்று நோக்கினால் உணவை,இனிது என ரசித்து கணவன் உண்ண வேண்டியதின் பொருட்டு தலைவி ரசித்து சமைப்பது காட்டப்பட்டுள்ளது.ஆனால் தலைவி சுவைத்து உண்பது போல் எந்த குறிப்பும் இல்லை.
ஆண்களுக்கு உணவில் இருந்த கட்டுப்பாடற்ற தன்மை பெண்களுக்கு இல்லை என்பதே உண்மை.

உடலியல் சார்ந்த,அழகியல் சார்ந்த,சமூக கட்டமைப்பு சார்ந்த பல உணவு கட்டுப்பாடுகள் பெண்களுக்கு இருந்திருக்கிறது.... இருக்கிறது. என்பதை உணவு முறைகளும் பெண்களுக்கு என வரையறுக்கப்பட்ட உணவுகளும் கூறுகின்றன.

அவ்வையார் பாடிய கொன்றை வேந்தனில் "உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு" என்று ஏன் பாடினார்? பசியின்‌ கொடுமையை அறிந்தவர் அவ்வையார்.

சிலம்பி என்ற பெண் கொடுத்த கூழுக்காக கவி பாடியவர் அவ்வையார்.அப்படி இருக்க பசியின் கொடுமையால் தனக்குத்தானே "உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு" என்ற மைண்ட் வாய்ஸை பாடிவிட்டாரா?

எது எப்படியாயினும் வழக்கத்திலுள்ள இப்பாடல் அழகியல் சார்ந்த நெருக்குதல்கள் பெண்ணிற்கு உள்ளதுபோல் ஆண்களுக்கு இல்லை என்பதையே சொல்கிறது.

எனினும் இன்னொரு ஐயமும் உண்டு இருபாலருக்கும் பொதுவான கருத்துகளையே பாடும் அவ்வையார் இதை மட்டும் ஏன் பெண்ணுக்காக பாடியிருக்கிறார்?

ஒருவேளை "உண்டி சுருக்குதல் பண்டிக்கு அழகு" என்று இருந்திருக்கும் என்றும் தோன்றுகிறது.பண்டி என்றால் வயிறு உடல் என்ற பொருள் உண்டு என தமிழ் ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ளது.

தேவையான அளவு மட்டுமே உண்பது வயிற்றுக்கு நல்லது. என்று பாடி இருக்கக்கூடுமோ அதை மீள் பதிவு செய்தவர்கள் அதை பெண்களின் தலையில் ஏற்றி விட்டார்களா?

ராமாயணத்திலும் தாடகை உண்ணும் காட்சியையும் கும்பகர்ணனும் காட்சியையும் விவரிக்கும் பாடலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பெண் என்பவள் குறைத்தே உண்ண வேண்டும் என்ற கருத்து பூடகமாக உள்ளது சற்றே பாடலை பார்ப்போம்.

கும்பகர்ணன் உணவு உண்ணும் காட்சியை பார்ப்போம்.

இரும் பசிக்கு மருந்து என எஃகினோடு
இரும்பு அசிக்கும் அருந்தும்  எயிற்றினான்.
வரும் களிற்றினைத் தின்றனன்.
(கும்பகர்ணன் வதைப்படலம் 7462)

கடும் பசியின் வேகத்தால் எஃகையும்,இரும்பையும் யானையையும் உண்ணும் கும்பகர்ணனின் உணவு அவனது வலிமைக்கு குறியீடாக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தாடகை வதைப் படலத்தில் தாடகை உண்ணும் காட்சியில் கம்பர் என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போம்.

கிளப்ப அருங்கொடுமைய அரக்கி கேடு இலா வளப்பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள்
(தாடகை வதைப்படலம் 363).

அருமையான வளம்மிக்க மருத நிலத்தை உண்டு அதை பாலையாக மாற்றி விட்டாள் "அரக்கி" என்கிறார்.

கெடுதல் செய்யும் குணத்தை உடைய வரை "அரக்கி"எனலாம் ஆனால் குணம் தவிர்த்து தாடகையின் உணவு உண்ணும் தன்மையைக் கொண்டு "அரக்கி" என கம்பர் பாடுவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

பசிஉணவு,பெண் என்ற மூன்று சொற்களை நினைக்கும்போது உறுதியாக நினைவுக்கு வருபவள் காயசண்டிகை.

யானைத்தீ நோயால் அடங்காப் பசியால் அவதியுற்று அதிலிருந்து மீள்வதற்கான 12 ஆண்டுகால போராட்டமுமே சாபமாக அளிக்கப்பட்டது கவனிக்கத்தக்கவை.

முந்நா லாண்டின் முதிர்கன்னி நானீங் குண்ணு நாளுன் னுறுபசி களைகென
அந்நா ளாங்கவ னிட்ட சாபம்.
(உலகவறவி புக்க காதை:45-48)

இதன் மூலம் பெண்ணின் உணவு,அவளின் பசி பெரிதும் ஆணின் பார்வையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன என்பது புலனாகிறது.

இதைப் படிக்கும்போது பெண் பூப்பெய்திய காலம்,முன் பேறு காலம்,பின் பேறுகாலம் மற்றும் கைம்பெண் காலம் எனக் கால முறைகளில் சத்தான ஆகாரங்கள் அல்லது சத்துக்குறைவான ஆகாரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதே?என்ற கேள்விகள் எழலாம்.

கூர்ந்து நோக்கினால் பெண்ணின் சடங்குகளும் மற்றும் பிள்ளைபேறு சார்ந்தும் உணவுமுறை அமைந்து இருக்கிறதே தவிர பொதுவாக ரசனையும்தேர்வும் ஆணை  மையமிட்டு இருப்பதால் பெண் உணவிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறாள் என்பது புலனாகும்.

ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது. 11

இந்தப் பாடலில் உணவின் பாதுகாப்பின்மை, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழுதல்,உணவு பற்றாக்குறை மற்றும் மிகு உணவு, குறைத்தல் நிலவின் கட்டுப்பாடு அரசின் இடத்தில் இருந்திருக்கிறது என்பதையும் இப்பாடல் உணர்த்துகிறது.

பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு என்னும் புலவரால் பாடப்பெற்ற 246வது புறநானூறு பாடலில் பெண்ணிற்கான உணவு பற்றிய குறிப்புகள் உள்ளது.

அடை இடை கிடந்த கைபிழி பிண்டம்
வெள் எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சி ஆகப் பரற் பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ.

என்ற பாடலின் மூலம் எல் துவையலும் வேளக்கீரையுமோ கைம்பெண் உணவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இலக்கியத்திற்கு மாறாக நாட்டுப்புற பாடல் பெண்ணுக்கான உணவுகளில் கவனம் செலுத்துகிறது.

நாட்டுப்புறப் பாடலில் பருவமடைந்த பெண்ணிற்கான உணவாக தமிழரின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான புட்டும், பச்சரிசி பால் புட்டு உளுத்தங்களி கத்தரிக்காய் பால்கறி, பச்சரிசி பால் பொங்கல் நல்லெண்ணெய் பச்சை முட்டை மோரிஸ் எனப்படும் பச்சை வாழைப்பழம்.

திருமணமான பெண்களின் உணவாக உளுந்து மாவு கஞ்சி இடம் பெற்றிருப்பதை அகநானூறு போன்ற சங்க நூல்கள் எடுத்துக் கூறியுள்ளன. இது உடலுக்கும் கர்ப்ப உறுப்புகளுக்கும்,இடுப்பு எலும்புகளுக்கும் உறுதியையும் பலத்தையும் கொடுப்பதாக சொல்லப்படுகிறது மேலும் எள்ளுப்பாகு பசும்பால் சம்பா அரிசிச் சோறு பேரீச்சம்பழம் பாதாம் பருப்பு முந்திரி பழம் செவ்வாழை பழம் இக்காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டியவை என நாட்டுப்புற பாடல்கள் கூறுகின்றன.

கர்ப்பிணி பெண்களின் உணவாக முதல் மூன்று மாதத்திற்கு மாம்பிஞ்சு விலாங்காய் மிளகாய் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.அதற்கு பிறகான காலத்தில்
மாதுளம்பழம், உளுந்து பனங்கட்டி,முளைக்கட்டிய பச்சைப்பயறு,மத்தி மீன்,கீரை வகைகள்,கொண்டக்கடலை பசும்பால் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுதல் வழக்கமாக இருக்க வேண்டும் என நாட்டுப்புற பாடல்கள் கூறுகின்றன.

பிரசவித்த பெண்களின் உணவு/பாலூட்டும் தாயின் உணவாக.

சுறா புட்டு கருவாடு குழம்பு கொத்தமல்லி சீரகம் மிளகு தேங்காய் சொட்டு மஞ்சள் சேர்த்து அம்மியில் அரைத்துப் பின் பூண்டு இஞ்சி தட்டிப்போட்டு உப்பு சேர்த்து சூடாக்கி எப்படி தனியாக கொடுக்கவும் சோற்றுடன் கலந்து உண்ணவும் கொடுக்க வேண்டும் என நாட்டுப்புற பாடல்கள் உணவு வழக்கத்தை சொல்கின்றது.

எனினும் தற்காலத்தில் பெண்களுக்கு உணவு சுதந்திரம் கிடைத்து இருப்பதாக நினைத்தாலும் அவசரமாக பணிக்குச் செல்லும் பெண்கள் சரிவர சத்தான உணவுகளை உண்பது இல்லை என்பதே உண்மை.

மேலும்,வளரிளம் பெண்கள் பாரம்பரிய உணவுகளை உண்பதை தவிர்த்து பீசா,பர்கர், ஸ்பகெட்டி, நூடுல்ஸ் போன்ற இன்னும் பெயர் தெரியாத அல்லது வாயில் நுழையாத பெயர்களையெல்லாம் கொண்ட உணவுகளை விரும்பி உண்ணுவதால் உடல் நலக் கேடும் மனநிலை கேடும் உண்டாகிறது.

ஒரு காலத்தில் பெண் என்பவள் உணர்வு நிறைந்த விலைக்கு வைக்கப்பட்டிருந்தால் என்று புலம்பினால்...

இக்காலத்தில் சுதந்திரம் என்ற பெயரில் பாரம்பரிய உணவுகளை தவிர்த்து உடலுக்கும் மனதுக்கும் கேடு விளைவிப்பதோடு நாட்டின் பொருளாதார சீர்கேடுகளுக்கும்
ஆண் பெண் என்ற பேதமின்றி காரணமாக இருக்கின்றனர்.
உடல் நலம் பேணவும் மன நலன் பேணுவும் நல்ல உணவுகளை உண்போம்.

உணவை தவிர்த்து அதன்மூலம் குடும்பத்தின் சுமைகளை ஒப்பதாக நினைத்துக் கொள்ளும் பிழையினை களைவோம்.

பெண் குழந்தைகளுக்கும் ஆண் குழந்தைக்கு நிகரான சத்தான ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை கொடுக்கவும், மற்ற பெண்களும் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வதை தலையாய கடமையாக கொள்ள உறுதிமொழி எடுத்துக் கொள்ளவோம்.
அன்புடன் 
கோ.லீலா.

Sunday 16 August 2020

"இன்றொரு நாள் போதுமா"

 ராகமாலிகா...

***************

சற்று முன் கவிஞர் கண்ணதாசன் எழுதி, கே.வி மகாதேவன்‌ அவர்கள் இசையமைக்க, பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் இனிய குரலில் ஒரு பாடல் கேட்டேன்.


"இன்றொரு நாள் போதுமா" அதை பற்றி நான் சொல்ல "இன்றொரு நாள் போதுமா"


ஆமாங்க, இன்றொரு நாள் போதுமா பாடலேதான். 


இளையராஜா அவர்களின் மிகப் பெரிய விசிறி என்பதால், அவரது இசையை மட்டும் கூர்ந்து கேட்பது வழக்கம்.


எனினும், மிருதங்கமும், தபேலாவும் பின்னிசையாக இருந்தால் எந்த பாடலையும் விடாது கேட்பேன்.


"இன்றொரு நாள் போதுமா" பாடல் எல்லோரையும் வசீகரிக்கும் ராகத்தில் தொடங்குவது மிகச் சிறப்பு, அதனினும் சிறப்பு, திரையில் வட நாட்டிலிருந்து வரும் ஹேமநாத பாகவதர் பாடும்‌ போட்டி பாடல் என்பதால்...


தொடக்கத்தில், தன் நாட்டின் ஹிந்துதானி ராகமான "மாண்ட்" ராகத்தில் தொடங்குவது மீச்சிறப்பு.


கவியரசர் பாடலுக்கான பல்லவியை இப்படி எழுதிக் கொடுத்தார்:


"நாதமா கீதமா அதை நான் பாட

இன்றொரு நாள் போதுமா"


இந்தப் பல்லவியை "ச்ரோதோவகயதி" முறையைப் பின்பற்றி..


"ஒரு நாள் போதுமா

இன்று ஒரு  நாள் போதுமா

நான் பாட இன்றொரு நாள் போதுமா

நாதமா கீதமா அதை நான் பாட

இன்றொரு நாள் போதுமா..


என வரிக்கு வரி சொற்களை கூட்டி எழுதி வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.


மாண்ட் ராகமோ கேட்பவரை சுண்டியிழுக்கும் தன்மையுடையது.


அப்படியே தான் தென்னாட்டின் கர்நாடக இசையிலும் தேர்ச்சிப் பெற்றவர் என்பதை காட்டுவது போல் தோடி, தர்பார், மோகனா, கானடா ராகங்களில் பாடுவர்.


அதிலும் மிகப்பெரிய வியப்பு எந்த ராகத்தில் பாடப்படுகிறதோ, அந்தந்த வரியில் ராகத்தின் பெயர் வரும் படி எழுதி அசத்தியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் என்பதுதான்.


"குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்

என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்"


என்ற  சரண வரிகளில்  குழலென்றும் என்பதை தொடர்ந்து ஆலாபனையும், ஸ்வரமும் பாடி குழலிசையில் 

முடித்திருப்பதும், 


யாழென்றும் என்பதை தொடர்ந்த ஸ்வரத்துடன் வீணையின் இசையில் 

முடித்திருப்பதும் தற்செயலானாது அல்ல, இது இசையமைப்பாளர் கே.வி மகாதேவன் அவர்களின் ஆளுமையல்லவா. கேட்டுணர்ந்த போது அசந்து போனேன்.


தோடி ராகம்.

******************

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ 

எழுந்தோடி வருவாரன்றோ...எழுந்தோடி...தோடி...இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ...


அட ! கவியரசரின் இசை ஞானம் வரிகளில் "தோடி" என்ற சொல்லை‌ அமைத்து எழுதியிருக்கிறார் எனில் தமிழில் எவ்வளவு ஆளுமை இருந்திருக்க வேண்டும். அதனால்தான்‌ அவர் கவியரசர் அல்லவா.


தானும் குறைந்தவர் இல்லையென தோடி ராகத்தில் இசையமத்திருக்கிறார் கே.வி அவர்கள். 


இந்த வரிகள் தோடி ராகத்தில் பாலமுரளி கிருஷணா அவர்களின் குரலில் இனிமை.



தர்பார் ராகம்.

***************

எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ

தர்பாரில் எவரும் உண்டோ....தர்பாரில் எவரும் உண்டோ....

எனக்கிணையாக  தர்பாரில் எவரும் உண்டோ.


தர்பார் ராகத்தில் இசை அமைக்கப்பட்டுள்ள வரிகள்.


தர்பார் இசையில் தனக்கு இணையாக யாரும் உண்டா என கேட்கிறாரா? 


அல்லது "தர்பாரில்"( அரசவையில்) தனக்கு இணையாக யாரும் உண்டா என்கிறாரா?


அடடா ! ரசனையோடு அல்லவா எழுதியும், இசையமைத்தும், பாடியும் இருக்கிறார்கள்.


மோகன ராகம்.

*******************

கலையாத மோகன சுவை நானன்றோ மோகன சுவை நானன்றோ 

மோகனம்....

கலையாத மோகன சுவை நானன்றோ.


மோகன இசையில் இசைத்து தான் கலையாத மோகன சுவையென கவிஞரின் வரிகளை பாடும் பாடகர் என மூவருமே படைப்பில் கலையாத மோகன சுவையாக மிளிர்கிறார்கள்.


கானடா ராகம்.

******************

கானடா ஆ .....என் பாட்டு தேனடா 

இசை தெய்வம் நானடா ...


இந்த வரிகள் கானடா ராகத்தில் அமைந்துள்ளது.


இப்படி ஒரு கூட்டு முயற்சியாக வாசகர்களுக்கு ஒரு சுவையான படைப்பை அளித்துள்ள கவியரசர் கண்ணதாசன், இசையமைப்பாளர் 

கே.வி. மகாதேவன், 

டாக்டர். பாலமுரளி‌கிருஷ்ணா ஆகியோர்கள் என்றும் வணக்கத்துக்கு‌ உரியவர்கள்.


நான் ரசித்தேன்... கேட்டு பாருங்களேன்‌ உங்களுக்கும் வியப்பும், மகிழ்வும் வரும்.


#பாடல்_ஒரு_பார்வை.


அன்புடன்

- கோ.லீலா.