Friday 23 December 2016

விவசாயிகள் தினம்............



வெண்முகில் கறுத்து கருக் கொள்ளுமோ
வான் பார்த்த மண்ணில் மழையாகுமோ
காற்றழைத்த திசைத்தேடி மேகம் போகுமோ?
கழனி நனைக்க மழையாக  சொரியுமோ?

கண்ணீர் மாரியில்  கழனி விளையுமோ?
வான் பார்த்து களைத்து போகிறான்
விளைச்சல் இன்றி இளைத்து போகிறான்
உணவின்றி  தன்னையே உரமாக போடுறான்

விடிந்த பொழுதிலும் விடியாமல் வாழ்கிறான்
மண்ணில் உயிரோடு புதைந்து போகிறான்
தினம் விவசாயியை நினைக்க மறந்தவன்
விவசாய  தினமதில் திளைக்க சொல்றான்

சின்னஞ்சிறு  விதையை சோறா ஆக்குபவன்
அதற்கு உதிரத்தை வியர்வையாய் ஊற்றுபவன் 
இன்று மண்ணுக்கு  விவசாயி  உணவாகிறான்
நாளை மண்மட்டுமே நமக்கு உணவாகும் 





-அன்புடன் லீலா........

Tuesday 20 December 2016

சமூக காதல்..........






மருதாணி பூசி
மல்லிகைப்பூ சூடி
மயங்கவச்சி போறவளே
சொல்லாத சொல்லால
மணலுல மீனபோல
துடிக்கதடி உசிரு
என்னானு கேட்டுப்போ
மரம்வெட்டி பொழக்கிற
மனுசபய வாழும்ஊரு
மரம் நடுவோம்நூறு
ஆக்கிடுவோம் அறுநூறு-பின்
படிப்போம் அகநானூறு.

மூக்குத்தி அணிஞ்சி
முல்லைப்பூ சூடி
முகம் காட்டி போறவளே
குழலுல காத்துப்போல
சுத்துதடி உசிரு
கதயேதும் கேட்க
மறுக்குதடி மனசு
என்னானு கேட்டுப்போ
காஞ்ச வயலுல
கதிரும் விளையில
மறைஞ்சி நிக்கவழியில்ல
தண்ணியில்லேன்னா
கதிருமில்ல காதலுமில்ல
தண்ணிநிக்க வழிசெய்வோம்
பின்னாலே காதல்செய்வோம்……

கண்ணாடி வளையலடுக்கி
கனகாம்பர பூச்சூடி
கனகமணியணிஞ்சி போறவளே
கானகத்து வண்டா                       
சுத்துதடி என்உசிரு
சொல்லாத சொல்லால
சொக்கட்டான் ஆடுதடிமனசு
என்னானு கேட்டுப்போ
தண்ணியள்ளி குடம் நிறைச்சு
இடக்கையால் அதஅணைச்சி
நடக்குமழகு பார்க்க
ஆயிரம் கண்வேணுமடி
தண்ணி நிறைக்க
ஊத்துக்கண்ணு இல்லையடி
ஊரெல்லாம் காஞ்சிகிடக்கு
உறவெல்லாம் வாடிகிடக்கு
கூடிகிடப்பது மட்டுமில்லைகாதல்
கூடிஉழைப்பதும்தான் காதல்
நல்ல மழைபெய்ய
நாடும் வளம்பெற
மரம் கோடிநடுவோம்-பின்
மனம் நாடிகூடுவோம்…..

-அன்புடன் லீலா
நன்றி-புகைப்படம்: தீபா ஜேக்கப்.


Sunday 18 December 2016

வால்பாறை……. வால்பாறை………………


வணக்கம் நண்பர்களே……………..
                 


பத்து வருடமாக அடிக்கடி அலுவலக பணி மற்றும் சுற்றுலா என பலமுறை சென்று வந்த இடமான வால்பாறை பற்றிதான் இன்று பேச போகிறோம்.ஆரம்ப காலத்தில் ஊட்டியை விட வால்பாறைதான் மிகவும் பிடித்த இடமாக இருந்தது. ஆனால்,வனம் அழிந்த கதையும்,தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் அடிமைப்படுத்தப்பட்ட கதையும்,வால்பாறை மீதிருந்த ஈர்ப்பை குறைத்துவிட்டது.
                
எனினும்,இயற்கையின் பேரழகு பாரபட்சமற்றது……………
சரி வாங்க, வாங்க சீக்கிரம் வண்டியிலே ஏறுங்க…………..அப்போதான் நிறைய இடம் பார்க்கலாம்….
தண்ணீர்,தீனி,முதலுதவி பெட்டி,காமிரா எல்லாம் எடுத்துக்கோங்க……….
                            
வால்பாறை பற்றிய கதையை சொல்லிக்கிட்டே போகலாம்……..
பொள்ளாச்சியிலிருந்து ஆழியார் வழியா வால்பாறை போகணும்.மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகள்,அதில் 32 கொண்டை ஊசி வளைவுகள் ஏற்றம்,8 கொண்டை ஊசி வளைவு இறக்கம்….
3914 அடி உயரத்தில்(elevation)ல இருக்கு…
                       
வால்பாறை இப்போ இருக்கிற மாதிரி அப்போ இல்லை………..
ஆமாம் பெரிய அடர் வனமா இருந்திருக்கு
              
1864 ல் இராமசாமி முதலியார் என்பவர் வால்பாறையில் முதன் முதலாக தனது சொந்த எஸ்டேடில் காபி பயிரிட்டார்,ஆனால் எதிர்பார்த்த அளவு விளைச்சல் இல்லைன்னு சொல்லி தன்னுடைய இடத்தை வித்திருக்கார்.அதே வருடம் கர்நாடக  காபி கம்பெனி மதராஸ் அரசிடம் வால்பாறையில் கொஞ்சம் இடம் கேட்டது.அரசும் ஏக்கர் ரூ5.00 என்ற விலைக்கு இடம் கொடுக்க சம்மதித்தது, அதில் கர்நாடக  காபி கம்பெனி காபி பயிட்டது,அதுவும் விளைச்சல் சரியாக இல்லாததால்,அவர்களும் மக்களிடம் இடத்தை விற்றுவிட்டனர்.இன்று அந்த இடம் தான் ஒரு பகுதி வேவர்லி எஸ்டேட் என்றும் இன்னொரு பகுதி வாட்டர் பால்ஸ் எஸ்டேட் என்றும் அழைக்கப்படுகிறது..
                 
1875 ஆம் வருடம் இங்கிலாந்தின் இளவரசர் வேல்ஸ் எட்வார்ட் VII இந்தியாவிற்கு வந்தார்.அவர் வேட்டையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டவர்,அதனால் க்ராஸ் ஹில் பகுதியில் வேட்டையாட விரும்ப,அவரது வருகையை முன்னிட்டு முன்னேற்பாடுகளை கவனிப்பதற்காக மக்கள் முகாமிட்டனர்,குறிப்பாக ஆங்கிலேயே மக்கள் அதிகமாக அந்த முகாமில் இருந்தனர்,அதனால் அந்த பகுதி ஆங்கில குறிச்சி என்று அழைக்கப்பட்டது,தற்சமயம் அந்த இடம் அங்கலகுறிச்சி என அழைக்கப்படுகிறது.

அடடா,என்ன மேம் இந்த ஆங்கிலேயர்கள் எங்கெல்லாம் வந்திருக்காங்க…
ஆமாம்,இளவரசர் வருவதற்காகன் சாலை,ரயில் பாதைகள்,விருந்தினர் மாளிகை என அனைத்தையும் புதிதாக அமைத்தனர்,இதற்காக வனம் அழிக்கப்பட்டது. இந்த பணிக்காக வீரர்கள்,யானைகள்,குதிரைகள் பயன்படுத்தப்பட்டனர்,ஆனால் சில காரணத்தால் இளவரசர் வேல்ஸ் வேட்டையாட வரவில்லை..
           
ஏன் லீலா?
காரணம் சரியா தெரியலை,ஆனா அந்த நேரத்தில் விலங்குகளுக்கு நல்ல நேரம் ன்னு நினைக்கிறேன்.
              
1877 ம் வருடம், அரசு ஒரு முடிவு எடுத்தது,அதாவது இந்த காடழிப்பால்,விலை மதிப்பற்ற மழை, காடு, மற்றும் அரிய வகை மரங்கள்,விலங்குகள் அழிவதால், இனி காபி பயிடுவதற்கு நிலம் தருவதில்லை என்பதுதான் அந்த முடிவு. நிறைய தேக்கு மரங்கள் காணாமல் போனதால் எஸ்டேட் முதலாளிகளுக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் சச்சரவு ஏற்பட்டது.
                                                 
அப்போ எப்படி தேயிலை தோட்டம் வந்தது லீலா?
சொல்றேன்… கேளுங்க அதுக்கு முன்னாடி நாம் இப்போ இருக்கிற இடம்தான் அங்கலகுறிச்சி.
என்னப்பா நிறைய மண் பானை விற்பனை இருக்கு…….
அங்கலகுறிச்சி மண்பானை, மற்றும் மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்கள்,பொம்மைகள் போன்ற பொருள்கள் கிடைக்கும் இடம்.

1890ல் விண்டில் மற்றும் நார்டன் என்பவரும் அரசிடம் காபி பயிரிட நிலம் கேட்டனர், அங்குள்ள நீராதரங்களிலிருந்து வரும் தண்ணீர் எல்லாம் வீணாக கொச்சின் வழியே  அரேபியன் கடலில் கலந்து விடுகிறது,எங்களுக்கு அனுமதி கொடுத்தால் அந்த தண்ணீரை வைத்து நிலத்தில் பயிரிட்டுக் கொள்கிறோம் என காரணம் சொல்லி, அரசை நிலம் தர சம்மதிக்க வைத்தனர்.
                          
அரசும் நிலத்தை கொடுக்க, விண்டில் முதல் வேலையாக என்ன செய்திருப்பார் ன்னு நினைக்கிறீங்க?
என்னப்பா suspense வைக்கிற…………….
விண்டில் தன்னுடைய நிலத்தில் இருந்த அத்தனை மரத்தையும் வெட்டி சாய்த்தார்…..
அச்சோச்சோ…….
ஆமா,போன முறை மழைக்காடுகள்  பற்றி பேசும் போது சொன்ன மாதிரி விண்டில் காட்டை அழிச்சவுடனே அவருக்கு வளமான மண் உடைய நிலம் கிடைச்சுது…….
அட தனியாளா எப்படி இதெல்லாம் செஞ்சிருப்பார்…..
ஆமா நல்லா கேட்டீங்க.
சரி  வலது பக்கம் பாருங்க,குரங்கு அருவி….
விடுமுறை நாட்களில் அதிகமா கூட்டம் வரும்….
இடது பக்கம் பிரியும் சாலையில் போனால் ஆழியார் அருவி போகலாம்,வழியில் சமமட்டக் கால்வாய் பார்க்கலாம்,மலையாள கரையோரம் பாடல் படமாக்கப்பட்ட இடம் இந்த சாலை……
லீலா,நிறைய ஷூட்டிங் நிறைய பார்க்க வாய்ப்பு இருக்குமோ……
நிறைய ஷூட்டிங் நடக்கும்…………
காதலிக்க நேரமில்லை படம் ஆழியாரில் தான் படமாக்கப்பட்டது, விஸ்வநாதன் வேலை வேண்டும் பாடல் ஆழியார் ஆய்வு மாளிகையில்தான் எடுக்கப்பட்டது.
              
 இந்த பொன்னான கைகள் புண்ணாகலாமா? பாடல் இந்த சாலையில்தான் படமாக்கப்பட்டது…….
சரி வால்பாறையை பற்றி சொல்றேன்…..
தனியா எதையும் செய்ய முடியாதில்லையா……அதற்காக   மார்ஷல் என்ற  மிகுந்த திறமையும்,17 வருட அனுபவம் கொண்ட முதுநிலை(senior) அலுவலரை வர செய்து ரூ250 மாத சம்பளத்திற்கு  எஸ்டேடில் பணியிலமர்த்தினார்….கார்வல் மார்ஷல் சிறந்த பணியாளர் மட்டுமில்லை,மக்களிடம் இனிமையாக பழக கூடியவராகவும் .நோயுற்றவர்களுக்கு மருந்தாகவும் இருந்தார்.அதனால் மக்களின் அன்புக்குரியவராக ஆனார்,அவரை மக்கள் ஆனைமலையின் தந்தை என அன்புடன் அழைத்தனர்,பின்னாளில் அவரது சிலையை அவரது மனைவி அனுப்பி வைத்தார்.
               
சரி அப்படியே திரும்பி பாருங்க அதுதான் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவு இப்போ பார்த்தோம்ல அந்த காட்சி முனை. அந்த சாலையை பாருங்க, ஆங்கிலேயே அரசர்களின் வருகையை முன்னிட்டு போடப்பட்ட சாலை,இதை வடிவமைத்த லோம்ஸ் என்ற பொறியாளாரின் பெயரில் அந்த இடம் Loams view point என அழைக்கப்படுகிறது.இந்த வளைவுக்கிட்டே தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு நிறைய இருக்கும். மலையில் செங்குத்தாக நடக்க கூடியவை இந்த ஆடுகள் . 
                  
வால்பாறை போகும் வழியில் கவர்கல் என்ற இடத்தில் கார்வல் மார்ஷலின் சிலை இன்றும் கம்பீரமாக நிற்கிறது.அவர் கை நீட்டும் திசையை நோக்கினால் பரம்பிக்குளம் தெரியும் என்பது கூடுதல் தகவல்.
                         
1898 ல்  மார்டின் என்பவர் சிறுகுன்றா எஸ்டேட்டை உருவாக்கினார்.
1896ல் Passion Quince company Aency யின் உஅதவியோடு ரூபி தேயிலை கம்பெனியை உருவாக்கினார்.இவர்கள் தான் 1927 ல் நல்லகாத்து மற்றும் இஞ்சிபாறை எஸ்டேட் என 1939 ல் 5204 ஏக்கர் நிலத்தை தேயிலை தோட்டமாக்கி இருந்தனர். இந்த பகுதி ஸ்டேன்மோர் க்ரூப் னுடையது.
                                       
 ஷேக்கல் முடி ன்னு பஸ் போகுது…
ஆமா,ஷேக்கல் முடிங்கிறது ஒரு க்ரூப்(M/s parry agro industries ltd.,1904 ல் கார்வர் மார்ஷும் காங்கேரு ம் கல்லாயான பந்தல் எஸ்டேடில் ர்ப்பர் பயிட்டனர், கல்லாயான பந்தல் என்ற பெயர் பழங்குடியினரின் கடவுளின் பெயரான கல்யாணி என்ற பெயரிலிருந்து வைக்கப்பட்டது.
கவர்கல் வந்தாச்சு கொஞ்ச நேரம் இறங்கி பாருங்க….
வெள்ளமலை க்ரூப்( m/s periya karamalai tea produce co ltd.,)1925-1937  க்குள் 1038 ஏக்கர் தேயிலை பயிடப்பட்டு வெள்ளமலை,காஞ்சமலை தேயிலை எஸ்டேட்டாக உருவெடுத்தது. கார்வர் மார்ஷல் 1911ல் தொடங்கிய பணியை 1927 வரை தொடர்ந்தார் 777ஏக்கர் நிலத்தை தேயிலை பயிரிட்டனர்.
            
சரி சரி அங்கே பாருங்க பாலாஜி கோயில் போற வழி வந்தாச்சு….
என்ன மேம் கோயிலுக்கு போவீங்களா என்ன?

J நண்பர்களுக்காகவும்,அங்கே பரந்து விரிந்து கிடக்கும் இயற்கையின் பேரழகிற்கும் நான் அடிமை என்பதாலும் கோயிலுக்கு வரலாம்தானே J
                              
இங்கு அதிகாலையில் வந்தால் பனிபடர்ந்த தேயிலை தோட்டமும் பனியில் நிழலாய் தெரியும் உயர்ந்த மரங்களும் பார்க்க பார்க்க கண் குளிரும் காட்சி.அங்குள்ள மலர்களும் மனதிற்கு இதமளிக்க கூடியவை.சரி வாங்க கொஞ்சம் நடக்கலாம்.கொஞ்ச நேரம் பேசாமல் அப்படியே இயற்கையோட ஒன்றி போகுதல் ஒரு தவம்…..ஒரு 10 நிமிடம் எனக்கு கொடுங்க, நீங்களும் எடுத்துக்கோங்க……
                          
லீலா நேரமாயிடுச்சி வாங்க………….
சரி வாங்க,,பக்கவாட்டில் பார்த்துகிட்டே வாங்க தேயிலை தோட்டமும்,அதில் பணி புரியும் பெண்கள்,ஆண்கள் எல்லாம் தெரிவாங்க…
இந்த தேயிலை தோட்டத்தை பார்க்கும் போதெல்லாம் ஆமை படுத்திருப்பது போல் தோன்றும் எனக்கு.
என்னப்பா இன்னும் பனி இருக்கு…..
ஆமா,சில நாட்களில் நாள் முழுக்க பனியிருக்கும் சில நேரங்களில் சூரிய ஒளிப்பட்டு தேயிலை இலைகளிலிருந்து ஆவியாகும் பனியை பார்க்கும் போது பெண்கள் தலை குளித்த பின் சாம்பிராணி புகை போட்டுக் கொள்வது போல் இருக்கும்.இந்த ஆறு பெயர்தான் கூழாங்கல் ஆறு.
                     
சரி அங்கே பாருங்க அதுதான் வேளாங்கண்ணி மாதா கோயில் போன்றே வடிவமைக்கப்பட்ட தேவாலயம்,மிகவும் அமைதியான இடம் தண்ணீரின் சலசலக்கும் ஓசையுடன் அந்த இடம் ஒரு சொர்க்கம்.
                
அடடா! என்ன ஒரு அற்புதமான இடம்….
இருங்க இருங்க இன்னுமொரு அற்புதமான இடத்திற்கு போக போறோம்…
பசுமை,குளுமை,மனதிற்கு இதமளிக்கும் இந்த காட்சிகளின் பின்னே ஒளிந்திருக்கும் மாபெரும் கண்ணீர் கதைகளை அடுத்த உரையாடலில் கூறுகிறேன்.
இப்போ,காட்சிகளை கண்டு களிப்போம்.
இருங்க தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் பெண்களை ஒரு புகைப்படம் எடுத்துக்கலாம்.
என்ன சில இடத்தில் தேயிலை செடியெல்லாம் வெட்டிட்டாங்க ?
அதுக்கு பெயர்தான் கவாத்து செய்றது…
கவாத்து என்பது செடியின் கிளைகளை வெட்டி சரி செய்தல்,முக்கியமாக கவாத்து செய்வதன் மூலம் இலை பறிக்கும் மட்டம்,காய்ந்த மற்றும் நோய் தாக்கிய செடிகளின் கிளை வாதுகளை வெட்டி எடுக்க முடியும்.
 சரி அந்த அற்புதமான இடம் என்ன சொல்லுங்க லீலா.
ஆங், அதுதான் சின்னார்  நீர்வீழ்ச்சி…..
சின்னார் தமிழகத்தின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படும் அளவிற்கு மழை பெறும் பகுதி.( தற்சமயம் மாயேஷ்வரம் தான் இந்தியாவில் அதிக மழை பெறும் இடம்).
வாங்க வாங்க….இந்த பாலம் தாண்டி போனால் falls. அதோ பாருங்க…
இனிமே யாரும் பேச மாட்டாங்க………. நானும்,நீங்களும் கூட அந்த பேரழகை பாருங்கள்……….
             


                                
சரி கிட்டதட்ட 30 நிமிடத்திற்கு மேலே ஆயிடுச்சி  வாங்க திரும்பி போகணும்,யானை வரும்…
சரி நீரார் ஆய்வு மாளிகையில் கொஞ்சம் ஓய்வு எடுத்திட்டு போகலாம்…..
இந்த குளுமை,அமைதி இதுதான் சொர்க்கம்…
அக்காமலை க்ராஸ் ஹில்(Grass hill) போறோம்.. இந்த புல் படுக்கைதான் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அருவியை தக்க வைத்து கடை மடை பகுதி வரை தருவதற்கு உதவும் இந்த புல்வெளி,இதில் சற்று அடர்வான மழைக்காடுகள் தெரிகிறதா அந்த பகுதியில் காட்டு பசுக்கள்(Indian gaur) இருக்கும்.                 
போட்டோ எடுத்தாச்சா சரி வாங்க போகலாம்…………. வரையாடுகள் இங்கேயும் அதிகமா இருக்கும்.
             
இன்று வால்பாறையில் ஓய்வு எடுத்துக்கலாம்.காலையில் சோலையார்
போகலாம்…

              
சரி நண்பர்களே, வேறொரு நாள் சந்திப்போம்.நன்றி

-அன்புடன் லீலா.

Monday 5 December 2016

அம்மு


Dedicated to Ammuchellam.

மலைப்பூவே என் மனப்பூவே
என் அன்பான செல்லக்கிளி
இவள் ஓடி வர ஒளிந்திருக்க
பார்க்கையில் பூவாக சிரிக்கிறாள்
நினைக்கையில் தேனாக இனிக்கிறாள்
சின்னஞ்சிறுபூசிந்தும் சிரிப்பில்
நெஞ்சம் நெகிழ்ந்ததென்ன
அள்ளி அணைக்கையில்
ஆசை பெருகுகையில்
என்னை மறந்ததென்ன
மூக்கு கடித்துமுத்தம் கொடுக்க
நெஞ்சம் குளிர்ந்ததென்ன
சித்திர சேலையில்
சின்னஞ்சிறு பூவை காண
உள்ளம் சிலிர்த்ததென்ன
இவளோடு நானிங்கு
வாழ்கின்ற நாளெல்லாம் தேன்
எனை இவள்  கொஞ்சாத
நாளெல்லாம் வீண்
சொந்தமென பந்தமென
எனை  தொடரும் உறவுதான்
நினைக்கையில் இனிப்பாக இருக்குது

என் மனம் எங்கெங்கோ பறக்குது.
-அம்முவிற்கு அம்மாவின் அன்பு முத்தங்களுடன்....