Sunday 14 February 2021

தமிழும் காதலும்.

 ❤️

காதலர் தினம் என்ற ஒன்று சங்கத் தமிழ் காலத்தில் இருந்ததா?

தமிழர்கள்தானே பல பண்பாடு, கலாச்சாரங்களுக்கு முன்னோடிகள்... அவங்க இப்படி கொண்டாடி இருக்காங்களான்னு பார்த்தால்...

அட போங்க நம்மெல்லாம் வேஸ்ட்...

காமவேள் விழான்னு( Valentine's day) ஒரு நாள் இல்லை இரண்டு நாள் இல்லைங்க 28 நாள் கொண்டாடி இருக்காங்க. அதுதான் பின்னாளில் இந்திர விழாவாக மாறியது. 

காதலர்கள் தங்குவதற்கான இடத்தை மூதூர்ப்பொழில் என்றும் இளவந்திகை என்றும் அழைத்திருக்கின்றனர். பூம்புகாரிலும், மதுரை மாநகரிலும் இவ்விழா கொண்டாடப்பட்டதாக இலக்கியங்கள் கூறுகின்றன.

தமிழ் எல்லா வகை காதலையும் போற்றி வகைமைப்படுத்தியுள்ளது. எந்த வகையான காதலையும், அன்பையும் தூற்றாது, மனித மாண்புகளை போற்றி இருக்கின்றன.

கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றையும் அகத்திணையில் வைத்து போற்றி இருக்கின்றனர்.

காதலர்களுக்கான உரிமையையும் சங்கத் தமிழ் குறிப்பிடுகிறது.

❤️தனியுரிமை (Privacy)


❤️சந்திப்பு ( Dating/ meeting)-

   இரவுக் குறி-9வகை & 

    பகல்   குறி-3 வகை.


❤️இன்பங்கள்( Pleasures)


❤️பொதுவெளி அன்பு 

    ( Public display of affection)


❤️பாதுகாப்பு ( safety)


❤️அலர்/ அம்பல் ( Rumours)


(அலர் - சிறு வட்டத்திற்குள் பேசப்படுவது.


அம்பல்‌- பரவலாக அம்பலமாகி பேசப்படுவது.)


❤️பெற்றோர்/ சமூக மீறல் 

     ( Non - consent)


❤️உடன் போக்கு( Elope)


❤️உடனுறை ( Living together)


❤️திருமணம் ( Marriage)


❤️ஆண் பெண் உணர்வுச்        

     சமன்மை ( Equal right of feeling)

இந்த அத்தனை உரிமைகளும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெற்றோரை மீறல் என்பதை பெருங்குற்றமாக கருதாமல், தனக்கான இணையை தேர்ந்தெடுத்தல் எனும் முறையில் மதித்து, ஒரு தாய் தன் மகளுக்கும், மாப்பிள்ளைக்கும் உணவு தயாரித்து தருவதாகவும் சங்க இலக்கிய பாடலொன்று சொல்கிறது.

❤️

உவக்குநள் ஆயினும், உடலுநள் ஆயினும்,

யாய் அறிந்து உணர்க’ என்னார் தீ வாய்

அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்,

“இன்னள் இனையள் நின் மகள்” எனப் பல் நாள்

எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன்,  5

‘நாணுவள் இவள்’ என நனி கரந்து உறையும்

யான் இவ் வறுமனை ஒழிய, தானே,

‘அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை

எனக்கு எளிது ஆகல் இல்’ எனக் கழல் கால்

மின் ஒளிர் நெடுவேல் இளையோன் முன்னுறப்,  10

பன் மலை அருஞ்சுரம் போகிய தனக்கு யான்

அன்னேன் அன்மை நன்வாய்யாக,

மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி

வெய்து இடையுறாஅது எய்தி முன்னர்ப்

புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர்,  15

செல் விருந்து ஆற்றித் துச்சில் இருத்த

நுனை குழைத்து அலமரும் நொச்சி

மனை கெழு பெண்டு யான் ஆகுக மன்னே.

அகநானூறு -203.

❤️

திருநர் காதலையும், LGBT போன்றவற்றையும் கூட 3000 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து, அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்த இனம்தான் தமிழினம்.

கபிலர் காதலோடு காமத்தையும்,‌ ஒரு பெண்ணின் காதலை தோழி தலைவனிடம் கூறுவது போல் அமைந்திருக்கும் இப்பாடலில் பெண்ணின் உணர்வுகளையும் பாடியிருப்பது சிறப்பு.‌

பாடலைப் பார்ப்போம்.

❤️

வேரல்வேலி வேர்க்கோட் பலவின்

சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!

யார் அஃது அறிந்திசினோரே! சாரல்

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள்

உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே!

❤️

பெண்ணிற்கு அச்சம், மடம் நாணம், பயிர்ப்பு என்ற நால்வகை குணங்களையும், ஆணுக்கு அறிவு, நிறை,ஓர்ப்பு,கடைப்பிடி என்ற நாற்பண்புகளையும் சங்கத் தமிழ் வகுக்கவில்லை.

மரபுவாதிகளால் வகுக்கப்பட்ட இப்பண்புகளை உற்று நோக்கினால் பெண்ணிற்கு மடம் என்றும் ஆணுக்கு அறிவு என்றும்  கூறியுள்ள சூழ்ச்சி புரியும்.

சங்கத்தமிழில் "பெண் நாண துறப்பு" என்பது பற்றிய குறிப்பும் தமிழர்களின் உளவியல் மற்றும் உரிமையில் சமன்மை அறிவிற்கு சான்றாகும்.

சங்க இலக்கியம் இயற்கையை பாடுகிறது காதலையும் பாடுகிறது. காதல் என்பது இயற்கை, அனைத்து உயிரினங்களின் இயல்பு.

சரி வேலண்டைன்ஸ் பற்றி பார்ப்போம்.

🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️

மூன்றாம் நூற்றாண்டில் ரோம பேரரசை க்ளாடியஸ்II கோத்திகஸ் (Claudius II Gothicus) என்ற மன்னன்‌ ஆண்டு வந்தார், அவர் காலத்தில் நிறைய போர்களை மேற்கொண்டார், அதற்காக இளம் சிப்பாய்களை படையில் சேர்க்க முயற்சி செய்கிறார். 

யாரும் முன்வராது போக, காதலியை / மனைவியை, குடும்பத்தை விட்டு வர யோசிப்பதால்தான், படைக்கு இளம் சிப்பாய்கள் கிடைக்கவில்லை என்ற எண்ணிய மன்னன். யாரும் காதலிக்கவோ, திருமணம் செய்துக்கொள்ளவோ கூடாது என்று சட்டம் போடுகிறார்.

இதை எதிர்க்கும் வண்ணம் வேலண்டைன் ரகசியமாக, இளைஞர்களுக்கு சிப்பாய்களாக படையில் சேருவதற்கு முன்பு திருமணம் செய்து வைக்கிறார்.

இந்த ரகசியத்தை அறிந்த க்ளாடியஸ், வேலண்டைனை சிறை வைத்து, பிப்ரவரி 14 அன்று கொல்லப்படுவார் என்றும் அறிவித்து விடுகிறார்.

இந்நிலையில், ஜெயிலரின், பார்வையற்ற பெண் தினம் வேலண்டைனுக்கு உணவு வழங்க  வருகிறார், இருவருக்கு மிடையே காதல் மலர்கிறது. பிபரவரி 13 ம் தேதி இரவு ஜெயிலரின் மகளுக்கு கடிதம் எழுத மை ஏதும் இல்லாத காரணத்தினால், துணியில் ரத்தத்தால் ஒரு காதல் கவிதை ( Sonnet - செய்யுள்) எழுதி கீழே உன் வேலண்டைனிடமிருந்து என கையெழுத்திட்டு அனுப்பியதாகவும். அதில் எழுதியிருப்பதை படிப்பதற்காகவே அப்பெண் பார்வைப் பெற்றார் என்றும் கதை செல்கிறது.

க்ளாடியல், 3 ம் நூற்றாண்டில் வெவ்வேறு வருடங்களில் பிப்ரவரி 14 அன்று இரு வேறு வேலண்டைன்களை  கொன்றதாகவும் சொல்கிறார்கள். இல்லை இருவருமே ஒருவர்தான் என்றும் சொல்கிறார்கள்.

எது எப்படியோ காதலுக்காக உயிர் துறந்த st.Valentine னின் பெயர் இன்றும் வாழ்கிறது.

காதல் இல்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை....

காதல் இனிது... ஆதலினால் காதல் செய்வீர்.

காதல் கவிதைகளை கடந்து சென்றுவிடும் நீங்கள் எப்படி இதை எழுதுகிறீர்கள்? என்ற உங்களின் கேள்வி புரிகிறது.

காதல்தான் வாழ்வின் அச்சு...  மூச்சு. மூச்சுப்போல இருக்கணும் ஆனால் வெளியில் தெரியக்கூடாது, அதுதான் சமூகத்திற்கான இயக்கத்தை செய்யத் தூண்டுவது.

" போராளிகளே சிறந்த காதலர்கள்"



அன்புடன்

- கோ.லீலா.