Sunday 4 March 2018

முல்லை பெரியாறு அணை வரலாறு...................




வணக்கம் தோழமைகளே! இன்று முல்லைப் பெரியாறு அணையைப் பற்றிய வரலாறு குறித்து தான் பேச போகிறோம்.

கேட்க நீங்கள் தயாரா?

                      


அடடா! இப்போதானே பென்னிகுயிக்கின் பேத்தி வந்தாங்க செய்திதாளில் பார்த்தேன் லீலா.

                          

வாங்க வாங்க ரீனா,கூட யார் வந்திருக்காங்க?

ரீனா: சியாமளா மேடம் வந்திருக்காங்க.

வாங்க சியாமளா.

என்ன லீலா நீங்க பி.ஏ.பி தானே? சட்ன்னு மதுரை,தேனின்னு போயிட்டீங்க?

நீர் வள ஆதாரப் பொறியாளாராக நாம் அனைத்து நீர்நிலைகளைப் பற்றியும், இரு மாநிலங்களிடையே உள்ள நதிநீர் பங்கீட்டைப் பற்றியும் தெரிஞ்சிக்க வேணுமில்லையா.

சியாமளா&ரீனா:சரி சரி கதை கேட்க ஆர்வமாயிருக்கு சொல்லுங்க.

நானும் ஆர்வமாயிருக்கேன் வாங்க சொல்றேன்,இந்த அணையைப் பற்றி you tube ல் நிறைய காணொளிகள் இருந்தாலும்,ஒரு கதைப் போல் இதை ஆவணப்படுத்த வேண்டுமென எனக்கு நீண்ட நாட்களாக ஆசை.அதோடு அம்மா,அம்மு,நான்,தம்பி எல்லோரும் அங்கு போய் வந்த பின் இன்னும் அதிகமாயிற்று,இருந்தாலும் 3-4 ஆண்டுகளுக்கு பின் இப்போதுதான் அதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ரீனா: ஓ நீங்க அங்கே போயிருக்கீங்களா?

ஆமா,ரீனா எனக்கு என்னமோ, நீர்நிலைகளைப் பற்றியும் அதன் போக்குப் பற்றியும்,தெரிந்து கொள்வதில் ஒரு ஆர்வம் அது அப்படியே ஒரு hobby போல் ஆயிற்று.

சியாமளா: சரி எப்போ எப்படி இந்த அணை உருவானது ?


                         


1790 மார்ச் 6ல் மதுரை மாவட்டம் உதயமானது. ஏப்.5ல் முதல் கலெக்டராகஏ. மிக்லட் நியமிக்கப்பட்டார்.

17ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டிலும்,ஏனைய இந்தியப் பகுதிகளிலும் கடும் பஞ்சம் நிலவியது.உணவில்லாமல் மக்கள் இறந்தனர்.அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குப் பகுதியில் அதாவது கேரளாவில் ஆண்டுக்கு 3000மி.மீ மழை பெய்தது,இந்த தொடர் மழையினால் 44 வற்றாத ஜீவ நதிகள் உருவாகி கேரளாவை வளமாக்கின,அதே நேரத்தில் சமவெளி குறைவாக உள்ள நில அமைப்பு காரணத்தினால் இந்த ஆறுகளின் தண்ணீர் வீணாக கடலில் கலந்தது.

                            

1798ல் இராமநாதபுரம் மன்னர் சேதுபதி, முல்லை, பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை,இராமநாதபுரம் பகுதிக்கு கொண்டு வர திட்டமிட்டார்.

இதற்காக முத்து இருளப்ப பிள்ளை தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்த குழு தங்கி காடுகளை அழித்து, அணை கட்டும் இடத்தை தேர்வு செய்து மதிப்பீடு தயார் செய்தது. நிதி வசதியின்றி திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ரீனா:எப்படி எந்த வாகனத்தில் போனாங்க?

             
ஆங்! சரியா கேட்டீங்க குதிரை,யானை என
பயன்படுத்தியிருக்காங்கஇத்தகைய செயல்கள் அவர்கள் தண்ணீருக்காக பாடுப்பட்டதையும், அதற்காக அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியையும் காட்டுகிறது.அதே நேரத்தில் சிலர் நடைமுறைப்படுத்த முடியாது எனவும் கூறியுள்ளனர்.

சியாமளா:அதைப் பற்றி சொல்லுங்க லீலா.

1807ல் மதுரை கலெக்டர் ஜார்ஸ்பேரிஸ், மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்று பெரியாறு அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்ய மாவட்ட பொறியாளர் ஜேம்ஸ் கார்டுவெல்லுக்கு உத்தரவிட்டார்.

ஆனால் 1808ல் நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என கார்டுவெல் அறிக்கை தந்தார்.

              

1837ல் கர்னல் பேபர் சின்னமுல்லையாறு தண்ணீரை மண் அணை மூலம் திருப்பும் பணியில் ஈடுபட்ட போது, வேலையாட்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாலும், கூலி அதிகம் கேட்டதாலும் பணி நடக்கவில்லை என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
                         



ரீனா&சியாமளா: அச்சோச்சோ என்னப்பா இப்படி சொல்றீங்க.

அடடா ! கவலைப்படாதீங்க, நம்ம ஹீரோக்கள் சிலர் வந்திருக்கார்கள், அவர்கள் மதிப்பீடு மற்றும் வரைவுத் திட்டம் எல்லாம் தயார் செய்திருக்காங்க.

1867ல் மேஜர் ரைவ்ஸ் என்பவர் தண்ணீரை கிழக்கே திருப்புவதுதான்முக்கிய நோக்கம் என்று 17.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டாலான அறிக்கை சமர்ப்பித்துள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளில் உருவாகி அரபிக்கடலில் சென்று வீணாகக் கலந்து கொண்டிருந்த பெரியாறு நீரைப் பயன்படுத்த அன்றைய ஆங்கிலேய அரசு முடிவு செய்து அந்தப்பகுதியில் அணை ஒன்றைக் கட்டத் தீர்மானித்தது. பெரியாற்றின் குறுக்கே மண் அணை அமைத்து அந்த ஆற்றின் நீரைக் கிழக்குப் பக்கமாகத் திருப்புவதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை சுமித் என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார்.

                  

சியாமளா: அதானே வில்லன் இருந்தா ஹீரோ இருக்கணும்ல.

நான்: ஹீரோ இருந்தா வில்லன்கள் இருப்பாங்க இல்லையா..

இந்தத் திட்டத்திற்கு தலைமைப் பொறியாளராக இருந்த வாக்கர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இந்த அணைத் திட்டம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் 1876 ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டதால் இந்த அணைத்திட்டம் மேலும் காலதாமதம் ஆனது.

ரீனா: அட நீங்க சொன்ன மாதிரி வில்லன்கள் கை ஓங்கிடுச்சே…

நான்: இறுதியில் தர்மமே வெல்லும் இல்லையா? இப்போ வரப் போறவர்தான் சூப்பர் ஹீரோ,இவரைப்பற்றி தனியாக ஒரு கதை கதைக்கலாம்.

                   

ஆங்கிலேய அரசின் ஆணைப்படி மேஜர் ஜான் பென்னிகுயிக் என்பவர் 1882-ல் அணையைக் கட்டுவதற்கான திட்டத்தைத் தயாரித்தார். இத்திட்டத்தின்படி ஆற்றின் அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும், ஆற்றின் தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும் அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடி உயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி அணையை அடைத்துத் தேங்கியிருக்கும் தண்ணீரை எதிர்புறத் திசையிலிருந்து வாய்க்கால் வழியே கொண்டு வருவது என்றும் இந்த வாய்க்காலின் நீளம் 6500 அடியாகவும் இதற்கான தலைமை மதகின் தரை மட்டம் 109 அடி என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல மலையினுள்ளே 5900 அடி வரை சுரங்கம் அமைத்து இதன் வழியே வைரவன் ஆற்றில் கலந்து அப்படியே அதைச் சுருளி ஆற்றில் கலந்து வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது.

                            

ரீனா & சியாமளா: வாவ் ! அருமை அருமை என்ன ஒரு சிந்தனை,சுவாரஸ்யமா இருக்கு சொல்லுங்க…….

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராணுவப்பணிப் பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர் கர்னல் பென்னி குயிக் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார்.

                                

இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார்.

                                  


எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.

                          

ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குயிக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள்,கடும் மழை,திடீரென உருவாகும் காட்டாறுபோன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது.

                        

சியாமளா: என்ன லீலா நல்லது செய்ய வந்தவருக்கு இப்படி ஆயிடுச்சே…..

நான்: குறிக்கோளை நிறைவேற்ற முடிவு செய்பவருக்கு எதுவும் ஒரு தடையில்லை,அதே நேரத்தில் அவர்களை நோக்கி தடை வராமல் இருப்பதுமில்லை. தடைகள் தாம் நம்மை பட்டைத் தீட்டவும்,நமது திறனை அதிகரிக்கவும் செய்யும்,அப்படிதான் நம்ம ஹீரோவும் தன்னலமற்ற சேவை ஆற்றியுள்ளார்.

அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குயிக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று( திருமணத்தின் போது கொடுக்கப்படும் கட்டிலே மிக பொக்கிஷமாகவும்,குடும்ப கவுரவமாகவும் கருதப்படும் வம்சத்தில் அதையும் விற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.) அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்.

                          

இதனால் தேனி,திண்டுக்கல்.மதுரை,சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.

                    

ரீனா: அட்டகாசம்,அற்புதம் என்ன ஒரு தன்னலமற்ற எண்ணம்,இன்று பலர் அரசு பணத்தை சுருட்ட நினைக்கையில்.நமது முன்னோர்கள் எப்படி தன் சொத்தை மக்களுக்காக,அதுவும் பிறிதொரு நாட்டு மக்களையும் தன் நாட்டு மக்களாக நினைத்து செயல்பட்டிருக்கார்.

நான்: ஆம் தோழமைகளே ! நாம் நமது வணக்கத்தையும்,நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு,நன்றியை திருப்பி செலுத்த வேண்டும்.

சியாமளா & ரீனா: எப்படி திருப்பி செலுத்துவது?


நான்: பொதுவா,துறையில் பணியாற்றும் நாம் நேர்மையாகவும், விவசாயிகளுக்கு நன்மை தரும் வகையில் நடு நிலையோடும் இருக்க வேண்டும்.அதற்காக வேலை பளு குறைவாக உள்ள அல்லது Non sensitive பணியில் இருக்க வேண்டும் என்பது தவறான கருத்து.எங்கு தண்ணீர் பங்கீடும்,கட்டுமான பணியும் நடக்கிறதோ அங்கே இருந்து அதிகப்பட்ச நேர்மையான பணியை தர வேண்டும்,ஏனெனில் நேர்மையான பணியாளர்கள்தான் சமுதாயத்திற்கு நன்மை செய்ய முடியும். அதுவே நாம் செலுத்தும் நன்றியாகும்.அதே போல் வாகனம்,பச்சை மை போன்ற சலுகைகள் யாவும் பணியை துரிதமாக செய்து உடையவருக்கு சேர்ப்பிக்க மட்டுமே என்பதையும் உணரவேண்டும்.அரசு அதிகாரிகள் என்பதை விடவும் அரசு பணியாளர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொண்டு மக்கள் சேவை செய்தலே நன்றி கடனாகும்.


சரி குத்தகை ஒப்பந்தம் பற்றி பார்ப்போம்.

குத்தகை ஒப்பந்தம்

                                           






அக்டோபர் 29, 1886 இல் திருவிதாங்கூர் அரசர் விசாகம் திருநாளுக்கும் பெரியாறு நீர்ப்பாசனப் செயற்திட்டத்தின் இந்தியாவிற்கான பிரித்தானிய செயலாளருக்கும் இடையே 999 ஆண்டுகள் செல்லுபடியாகும் ஒரு குத்தகை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அந்த குத்தகை ஒப்பந்தம் திருவிதாங்கூரின் திவான் வி. ராம் மற்றும் சென்னை மாகாணத்தின் மாநிலச் செயலாளர் ஜே. சி. ஹான்னிங்டன் இருவராலும் கையொப்பமிடப்பட்டது. 24 ஆண்டுகளாக திருவிதாங்கூருக்கும் பிரித்தானிய அரசுக்கும் இடையே நடைபெற்ற முயற்சிகளுக்குப் பின்னர் அந்த குத்தகை ஒப்புதலானது.


                               

ரீனா: அதென்ன பேரு விசாகம் திருநாள்?

நான்: ஓ !இவ்வளவு நுட்பமா கவனிக்கிறீங்களா?

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பிறக்கும் இளவரசர்களுக்கு அவர் பிறக்கும் நட்சத்திரமே அவர்களுக்கு பெயராக சூட்டப்படும்,திருநாள் என்பது குடும்ப பெயர்.சுவாதி திருநாள் என்ற அரசரின் வாழ்க்கையின் ஒரு பகுதிதான் மலையாளத்தில் மணிச்சித்திரதாழ் எனவும்,தமிழில் சந்திரமுகி எனவும் எடுக்கப்பட்ட்து.வேட்டைய ராஜாவாக வருவதுதான் சுவாதி திருநாளின் கதாபாத்திரம்.

சியாமளா:அட சுவாரஸ்யமா இருக்கே...

நான்: இருங்க சியாமளா,இன்னொரு அதிச்சி தகவல் உண்டு.


முதலில் இந்த அணைப்பகுதி திருவிதாங்கூர் சமஸ்தான கட்டுப்பாட்டிலேயே இல்லை.முல்லைபெரியாறு அணை தேவிக்குளம், பீர்மேடு மாவட்டத்தில் கி.பி 12ம் நூற்றாண்டில் பாண்டியர்கள்தான் ஆட்சி செய்து வந்தனர்.அதற்கு பின்னர் சேர ஆட்சியை சார்ந்த கூனியார் தம்பிரான் எனப்படும் பூஞ்சார் வம்சமே ஆண்டது..பூர்வீகமாக இந்த இடம் தமிழகத்திற்கே உரியது,ஆனால் மதுரையை கைப்பற்றியிருந்த ஆங்கிலேயேர்கள் தவறுதலாக திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு குத்தகை தொகையை பெற திருவிதாங்கூர் அரசர் புதையலை பெற்றது போல் மகிழ்ந்து கையெழுத்திட்டார் என்பதுதான் உண்மை.அதோடு 90% தமிழ் பேசும் மக்கள் இருந்த தேவிக்குளம் மற்றும் பீர்மேடு மாவட்டம் கேரளாவோடு இணைக்கப்பட்டது.

சரி ஒப்பந்தம் பற்றி பார்ப்போம்…….


7 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது.

1.ஒப்பந்த காலம் 999 வருடம்.

2.ஏக்கருக்கு ரூ5 வீதம் வருடத்திற்கு ரூ 40,000.

3.நீர்பிடி பகுதியில் உள்ள கல்,தாதுப்பொருட்கள்,மரம்,செடிகொடிகளை பயன்படுத்திக் கொள்ள உரிமை.

4 அதிகாரிகள்,வேலையாட்கள்,அவர்களை சார்ந்தவர்கள் செல்ல,பொருட்களை கொண்டு செல்ல உரிமை.

5அணை கட்டுதல் மற்றும் பாசன பராமரிப்புகாக நீர்பிடி சார்ந்த பகுதியில் 100ஏக்கர் நிலம்.

6. நிலத்தின் வழியாக வரக்கூடிய அனைத்து நீருக்கும் உரிமை.

7.அணை மற்றும் அதை சார்ந்த பாசன வேலைகள் செய்ய உரிமை.மற்றும் நீர்பிடி பகுதியில் மீன் பிடிக்க உரிமை.

அந்த ஒப்பந்தத்தில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் அணை கட்டவும், கட்டியபின் நீர்ப்பாசனம் மற்றும் அது தொடர்பான அனைத்துப் பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளவும், மாநில செயலாளருக்கு அதிகாரமும், முழு உரிமையும், சுதந்திரமும் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

ஒப்பந்தப்படி அணையின் 155 அடி உயர நீர்த் தேக்கத்திற்கு 8000 ஏக்கர் நிலப்பரப்பும், அணை கட்டுவதற்கு 100 ஏக்கர் நிலப்பரமும் அளிக்கப்பட்டுள்ளது. நில வரியாக ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு 5 ரூபாயாகத் தீர்மானிக்கப்பட்டது. ஆண்டுக்கு ரூ40,000 க்கு முல்லை பெரியார் அணையின் முழு நீரையும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதியையும் பயன்படுத்தும் உரிமையை முழுமையாக அந்த ஒப்பந்தம் பிரித்தானிய அரசுக்கு அளித்துள்ளது.

ரீனா: நம்ம இடத்துக்கு நாமே காசு கொடுக்க வேண்டிய நிலையாயிடுச்சே.

நான்: பெரியாறு தமிழகத்தின் சிவக்கிரி மலையில் பிறந்து கேரளாவில் உள்ள முல்லையாறுடன் இணைந்து பின் முல்லை பெரியாறு ஆகிறது.

                     


1947 இல் இந்தியா விடுதலை பெற்ற பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்ற இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. ஜூலை 1, 1949 இல் திருவிதாங்கூர் மற்றும் கொச்சி இரண்டும் ஒன்று சேர்ந்து, இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. ஜனவரி 1, 1950 இல், திருவிதாங்கூர்-கொச்சி ஒரு மாநிலமாக அங்கீகாரம் பெற்றது. 1947 இல் சென்னை மாகாணம் சென்னை மாநிலமானது.

சியாமளா:விடுதலையான பின் தான் தனி மாநிலமாச்சா?

நவம்பர் 1, 1956 இல் மலபார் மாநிலம், திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்தின் தெற்கு வட்டங்கள் நீங்கலான பகுதி, காசர்கோடு வட்டம், தெற்கு கனரா ஆகியவைகளை இணைத்து கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது. பிரித்தானிய அரசும் திருவிதாங்கூர் அரசரும் செய்துகொண்ட முந்தைய ஒப்பத்தம் செல்லுபடியாகதென்றும் அது புதுப்பிக்கப்பட வேண்டுமென்றும் கேரள மாநில அரசு அறிவித்தது.

ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க கேரள அரசால் 1958, 1960, 1969 களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியடையவில்லை. இறுதியாக 1970 இல் கேரள முதலமைச்சராக சி.அச்சுத மேனன் பொறுப்பிலிருந்த போது இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தப்படி, நிலவரி ஒரு ஏக்கருக்கு 30 ஆகவும், முல்லைப் பெரியார் அணை நீரைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சக்திக்கு ஒரு கிலோ வாட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு 12 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. அணையிலும் அதைச் சார்ந்த நீர்ப்பிடிப்பு மற்றும் குளம், குட்டை போன்ற நீர் நிலைகளிலும் மீன் பிடிக்கும் உரிமையும் தமிழகத்திடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்டது. இவ்வொப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்றும் குறிக்கப்பட்டது. இதன்படி இவ்வணையிலிருந்து 104 அடிக்கு மேலுள்ள நீர் குகை மூலம் வைகைப் படுகைக்கு திருப்பி விடப்பட்டு இப்பகுதி பாசன வசதி பெறுகிறது. முல்லை பெரியாறு அணை நிலத்தையும் நீரையும் தமிழ்நாடு பயன்படுத்துவதற்குத் தமிழக அரசு ஆண்டுக்கு நில வரிப்பணமாக ரூ2.5 இலட்சமும், உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சக்திக்கான உபரிவரிப்பணமாக ரூ7.5 இலட்சமும் கேரள அரசுக்கு செலுத்திவருகிறது.

ரீனா:புதுப்பிக்கப்பட்ட ஆண்டிலிருந்து 999 ஆண்டா?

நான்:அதைக் குறித்து சரியாக எனக்கு தெரியவில்லை.

இந்த ஒப்பந்தம் குறித்து தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகளுக்கிடையே ஏற்பட்ட சர்ச்சை தீர்க்கப்படாத நிலையிலேயே உள்ளது. இச் சர்ச்சையினால் ஒரு மாநிலத்தில் கட்டப்பட்டு, வேறொரு அண்டை மாநிலத்தால் பயன்படுத்தப்படும் அணைகள் மற்றும் நீர்ப்பயன்பாடு குறித்த நடுவண் அரசின் அதிகாரமும் கேள்விக்குரிய நிலைமையாகி உள்ளது.


இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு 1887 செப்டம்பர் மாதத்தில் அணை கட்டும் பணி துவங்கப்பட்டது. இந்தப்பகுதி முழுவதும் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் பொறியாளரான மேஜர் ஜான் பென்னி குயிக் இதற்காக அதிக அளவில் இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு செய்தார்.

இதன்படி சென்னை மாகாணத்தின் கூடலூர் மலைப் பகுதியிலிருந்து தேக்கடி வரையும் அங்கிருந்து அணை கட்டும் பகுதி வரை கம்பிவடப் பாதைகளை அமைத்து அதற்கான பொருட்களைக் கொண்டு சென்றார். இந்த அணையின் கட்டுமானப்பணிகளுக்காக 80 ஆயிரம் டன் சுண்ணாம்புக்கல் பயன்படுத்தப்பட்டது.

இந்த பெரியாறு அணை 1893-ல் 60 அடி உயரத்திற்கும் அதன்பின்பு 1894-ல் 94 அடி உயரத்திற்கும் 1895 டிசம்பர் மாதத்தில் 155 அடியும் கட்டி முடிக்கப்பட்டு கைப்பிடிச் சுவரும் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையை சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் பிரபு திறந்து வைத்தார்.

சியாமளா: இதில் மின் உற்பத்தி செய்வதுஒப்பந்தத்தில் இருக்கே அதைப்பற்றி சொல்லுங்க லீலா.

1955ம் ஆண்டு பெரியாறு தண்ணீர் தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின் உற்பத்தி செய்வதற்கு ஒரு திட்டம் வகுக்கப் பெற்றது. 1970-ம் ஆண்டு கேரளத்துடன் செய்து கொண்ட புது ஒப்பந்தத்தின் படி இங்கு தமிழகம் 140 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையத்தை அமைத்துள்ளது. இது தமிழகத்திற்கு வரும் நீரை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாகும்.

ரீனா: இந்த அணையிலிருந்து எந்த மாவட்டங்கள் பயன் பெறுகிறது? குடிநீருக்கு பயன்படுகிறாதா?

இந்த அணையில் இருந்து முல்லை ஆறாக வரும் நீர் தமிழ்நாடு அரசின் தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் அளிக்கப் பயன்படுகிறது. இந்த முல்லை ஆற்றின் வழியிலுள்ள கூடலூர்,கம்பம்,சின்னமனூர்,தேனி போன்ற தேனி மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் இடைப்பட்ட பல ஊர்களின் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றுகிறது.

                         


இந்த முல்லை ஆறு தேனி நகருக்குக் கிழக்குப் பகுதியில் வைகை ஆறுடன் கலந்து வைகை அணையின் ஆதாரமாகவும் விளங்குகிறது. இதன் பின்பு மதுரை,சிவகங்கை,இராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாய நிலங்களுக்குத் (208000 ஏக்கருக்கு) தேவையான தண்ணீரை வழங்குவதின் மூலம் 400 கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்களை விளைவிக்க முடிகிறது.

சியாமளா: எல்லாமே நெல்லா?

நான்: அதிகமா நெல் தான் போடுறாங்க.




மதுரைமாநகராட்சியின்குடிநீர்த் தேவையையும், ஆண்டிப்பட்டி சிலம்பட்டி,சேடப்பட்டிப் பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கான தனிக் குடிநீர்திட்டம் மூலம் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றி வருகிறது.


                                 

சியாமளா;அது சரி இடையில் நிறைய செய்திகள் வந்துக் கிட்டே இருந்ததே அதைப் பற்றி சொல்லுங்க.

நான்:சொல்றேன்,முக்கியமா தெரிஞ்சிக்க வேண்டிய செய்தியும் கூட..

                                 

இந்நிலையில் 1976 ஆம் ஆண்டு கேரளா முல்லை பெரியாறு அணைக்கு கீழ் 50 கி.மீ தூரத்தில் 70 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட 1200 அடி நீளமும்,555அடி உயரமும் கொண்ட ARCH அணையாக இடுக்கி அணை மிகப்பெரிய நீர்மின் திட்டத்திற்காக கட்டப்பட்டது,ஆனால் தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு எதிர்பார்க்கப்பட்ட நீர்வரத்து கிடைக்கவில்லை, அதனால் நீர் பற்றாக்குறை ஏற்பட எதிர்பார்த்த அளவு மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியவில்லை. அதனால் கேரள அரசின் பார்வை முல்லை பெரியாறு மீது திரும்பியது.

10.10.1979 அன்று கேரள செய்தி ஏடான மலையாள மனோரமாவில் முல்லை பெரியாறு அணையில் நிலஅதிர்ச்சி உணரப்பட்டதாகவும் அதனால் அணை ஆபத்துக்கு உட்படும் எனவும் கூறியது.

அதன் அடிப்படையில்,கேரள அரசு தொடந்து கொடுத்த அழுத்தத்தினால் மத்திய நீர் ஆணையம்,அப்போது தலைவராக இருந்த K.C.தாமஸ் அவர்கள்

அணையை 23.11.1979 அன்று ஆய்வு செய்தார்.பின் அணை திடமாக இருப்பதாக அறிவித்தார்.

                            


ஆனால் இரண்டு நாள் கழித்து திருவனந்தபுரம் சென்று வந்த பின் தனது கருத்தை மாற்றி அணை திடமாக இருந்தாலும்,மேலும் திடப்படுத்த சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தினார்.

ரீனா&சியாமளா: என்ன லீலா! அநியாயமா இருக்கே...

நான்: ஆமா,ஆனால் நாம மிகவும் பண்ப்பட்ட முறையில்தான் இதை கையாண்டிருக்கோம்.

மத்திய நீர் ஆணையத்தின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் இருமாநிலமும் பேச்சுவார்த்தை நடத்திய பின் மூன்று கட்டமாக பலப்படுத்தும் பணி மேற்கொள்ள வேண்டுமென்றும் அணைக்கு வரும் அழுத்தத்தை குறைக்கும் வரையில் அணையின் நீர்மட்டம் 136 அடி மட்டுமே இருக்க வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டது.

                       


முல்லை பெரியார் அணை முன் மற்றும் பின் பகுதி சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்ட கல் கட்டடமாகும் ,நடுப்பகுதி சுண்ணாம்பு கலவை கான்கிரீட்டால் ஆனது.

ரீனா: அதென்ன மூன்று கட்டம்

நான்:குறுகியக்கால நடவடிக்கை,இடைப்பட்ட கால நடவடிக்கை,நீண்ட கால நடவடிக்கையென பிரித்து பணியை செய்ய வேண்டுமென்பதே அந்த மூன்று கட்ட நடவடிக்கை.

சியாமளா:குறுகியக்கால நடவடிக்கையென்ன லீலா?

குறுகியக்கால நடவடிக்கையாக,அணையின் எடையை அதிகரிக்க 21அடி அகலத்திற்கு,3 அடி கனத்திற்கு உறுதியூட்டப்பட்ட கான்கிரீட்(R.C.C) அணையின் மேல் (ON TOP OF THE DAM) அணையின் முழு நீளத்திற்கு தொப்பி போல் போடப்பட்டது.இதன் மூலம் மீட்டருக்கு 35 டன் எடை அதிகரிக்கப்பட்டது,முழு அணையின் நீளத்திற்கு 12000 டன் எடை கூட்டப்பட்டது.

                                

ரீனா: குறுகியக் கால நடவடிக்கையே பெரிசாயிருக்கே.இடைப்பட்ட கால நடவடிக்கையாக என்ன செய்தாங்க லீலா?

நான்:இடைப்பட்ட கால நடவடிக்கையாக,கேபிள் ஆங்கரிங் (Cable Anchoring) செய்யப்பட்டது அதாவது முன் தகைவுருதல் ( pre stressing)  செய்யப்பட்டது.

                               




                                         

                                          

அணையின் மேற்புறம் அணையின் முன்பகுதியிலிருந்து 5 அடி தள்ளி மேற்புறத்தில் 4 அங்குல விட்டத்தில் 30 அடி ஆழத்திற்கு பூமியின் உள் துளையிடப்பட்டு அதனுள் 7மி.மீ விட்டமுள்ள உயர் திடப்படுத்தப்பட்ட( high strength) 34 உறுதியூட்டப்பட்ட கம்பிகள் ஒரே கட்டாக கட்டப்பட்டு உள்ளே செலுத்தப்பட்டது.செலுத்தப்படும் கம்பிகளை நிலைநிறுத்த அடித்தளத்தில் 120 அடி உயரத்திற்கு கான்கிரீட் போடப்பட்டு,கேபிள்கள் 120 டன் வேகத்தில் உள் செலுத்தப்பட்டது.இதன் மீது மீண்டும் கான்கிரீட் போட்டு மூடப்பட்டது,இதனால் முன் தகைவுரு செய்யப்பட்ட கம்பிகள்(Pre stressed) அணையின் அடிமட்டத்தில் 120 டன் அழுத்தில் அணையை இறுக்கி பிடித்துள்ளது.இப்படி 95 இடத்தில் அணையின் முழு நீளத்திற்கு 9 அடி இடைவெளியில் நிலஅதிர்வைதாங்கும்படிஅணை பலப்படுத்தப்பட்டுள்ளது.

சியாமளா &ரீனா: அடேயப்பா,என்ன ஒரு தொழில்நுட்பம்,நம்ம மூத்தப் பொறியாளர்களுக்கு ஒரு பெரிய சல்யூட். அடுத்து என்ன செய்தாங்க.

நான்:நீண்ட கால நடவடிக்கையாக 10 அடி ஆழத்தில் தொடங்க்கி 145 அடி வரை 32 அடி அகலத்தில் ஏற்கனவே போடப்பட்ட தொப்பி போன்ற கான்கிரீட்டையும் உள்ளடக்கி அணையை தாங்கி பிடிக்கும்படி பின்புறத்தில் உறுதியூட்டப்பட்ட கான்கிரீட் போடப்பட்டுள்ளது (R.C.C BACKING).

                                 

ரீனா:அப்பாடா ! ஒரு வழியா வேலைகள் முடிஞ்சாச்சு,இப்போ 152 அடி தண்ணீரை நிறுத்தலாமா?

 நான்:இருங்க இருங்க அவசரப்படாதீங்க,அப்படியெல்லாம் விட்ருவாங்களா?

இதன் பின்,அணையில் அதிகமான நீர் கசிவு ஏற்படுவதாக கேரள அரசு புகார் செய்தது,தவறான செய்தி என்ற போதும் அணையின் 10 அடி மற்றும்45அடி மட்டத்தில் இரண்டு வடிகால் சுரங்கங்கள் அமைக்கப்பட்டது ( DRAINAGE GALLERY).


                                          

சியாமளா: அணையில் நீர் கசிவதைக் குறித்து சொல்லுங்க லீலா.

நான்:சொல்றேன் சியாமளா  கேளுங்கஅணையின் கசிவினை தொடர்ந்து அளந்து வருகின்றனர், அனுமதிக்கப்பட்டஅளவை  விட  குறைவாகவே கசிவு உள்ளது.அதோடு ஒரு அணை பாதுகாப்பாகவும், வலிமையோடும், ஆரோக்கியமாகவும் இருக்க அணையிலிருந்து குறிப்பிட்ட அளவு நீர் கசிவு இருக்க வேண்டுமென்பது அறிவியல்.



ரீனா: வேறென்ன பிரச்சனையை கிளப்பப் போறாங்களோ பயமாயிருக்கு.

நான்: நீர் வழிப்போக்கி பற்றி கேட்க மறந்திட்டீங்களா?
சொல்றேன் கேளுங்கமேலும் தண்ணீர் 152அடிக்கு நிற்கும் போது அணையை பாதுகாக்க நீரை வெளியேற்றும் மதகுகள் 36அடிX10 அடி என்னும் அளவில் பத்து நீர் வழி போக்கிகள் இருந்தன.இதன் மூலம் விநாடிக்கு 86000 கன அடி நீரை வெளியேற்ற முடியும்.மேலும் மத்திய நீர் ஆணையத்தின் அறிவுரைப்படி கூடுதலாக, விநாடிக்கு 36000 கன.அடி நீரை வெளியேற்ற ஏதுவாக 40அடிX16அடி அளவில் மூன்று நீர் வழி போக்கிகள் அமைக்கப்பட்டது.

தற்சமயம் விநாடிக்கு 1,22,000 கன.அடி நீரை வெளியேற்ற முடியும். இத்தனை பணிகளும் 1981 முதல்-1994 வரை நடைப்பெற்றது.இதற்காக சுமார் 18 கோடி செலவிடப்பட்டது.

                              


இதை தொடர்ந்து பேபி அணை 240 அடி நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.பிரதான் அணையில் 112 அடி தண்ணீர் வந்தால்தான் பேபி அணை அருகே தண்ணீர் வரும்.அதாவது பிரதான அணையில் 152 அடி நீர் மட்டம் இருக்கும் போது பேபி அணையில் 40 அடி நீர் அழுத்தம் மட்டுமே இருக்கும்.

                                   


எனினும் பேபி அணையின் பின்புறத்திலும் உறுதியூட்டப்பட்ட கான்கிரீட் போட்டு பலப்படுத்த திட்டமிடப்பட்டு வேலை தொடங்கும் முன்பு கேரளா அரசின் வனத்துறை வேலை செய்ய இடையூறு தரலாயிற்று.,,பின் என்னவாயிற்று என்பதை பின்னொரு நாளில் பேசுவோம்.

ரீனா&சியாமளா: நன்றி லீலா

நான்: சரி எப்போதும் போல் தேநீர் சாப்பிடுவோம் வாங்க,நானே போட்டு தரேன் வாங்க மக்கா!

நன்றி தோழமைகளே,பின்னொரு நாள் வேறொரு செய்தியுடன் சந்திப்போம்.

இந்த கட்டுரை (பொதுப்பணித்துறை) எங்கள் துறையை சார்ந்த மூத்தப் பொறியாளர்கள்  முல்லைப் பெரியாற்றில் பணியாற்றிய அனுபவத்தை கேட்டறிந்தும்,2010 ம் ஆண்டு மூத்தப் பொறியாளர் சங்கத்தால் வெளியிடப்பட்ட காணொளியின் குறுந்தகடு எனக்கு பரிசளிக்கப்பட்டது.அதில் நம் துறையைச் சார்ந்த பொறியாளர்கள் மட்டுமே பிரத்யோகமாக எடுக்க முடியும் புகைப்படங்கள் இருக்கிறது,அதையே இதில் இணைத்துள்ளேன்.

இந்த தகவல்களை இளைய தலைமுறை பொறியாளர்களுக்கு கடத்த வேண்டும் என்ற ஆவலில் மட்டுமே எழுதப்பட்டது.

சிரமம் பாராமல் பணியாற்றிய துறைச்சார்ந்த அனைத்து பொறியாளர் மற்றும் ஏனைய அலுவலர்களுக்கும் நன்றியும்,சிரம் தாழ்ந்த வணக்கங்களும்.

நன்றி:

1.மூத்த பொறியாளர்கள் சங்கம்,பொடுப்பணித்துறை,தமிழ்நாடு.

2.இணைய தளம்
3.விக்கிப்பீடியா.



அன்புடன் கோ.லீலா.




2 comments:

  1. முல்லைப் பெரியாறு அணை வரலாறு - அருமையான படங்களுடன், நிறைய விபரங்களுடன் கூடிய பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். நன்றி திருமதி Leela Ammu

    ReplyDelete
  2. முல்லைப் பெரியாறு அணை வரலாறு - இன்று (31.10.19) காலை மறுபடியும் திரும்பப் படித்தேன். அற்புதமான, அரிய படங்களுடன், முழு விபரங்களுடன் கூடிய பதிவு. மறுபடியும் எனது பக்கத்தில் பகிர்கிறேன். அனைவரும் ஆழ்ந்து படிக்க் வேண்டுகிறேன். அருமையாக, மிக சிரத்தை எடுத்து எழுதியிருக்கிறீர்கள். நன்றி & வாழ்த்துகள் திருமதி Leela Ammu

    ReplyDelete