Saturday 30 April 2016

Happy Arbor Day.

Arbor என்றால் லத்தீனில் மரம் என்று பொருள்.

ஏப்ரல் மாதத்தின் கடைசி வெள்ளி கிழமை Arbor  தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் ஒவ்வொவ்வொரு தனி மனிதனும்,குழுவும் மரங்களை போற்றவும்,மரக்கன்றுகளை நடவும்,அதனை பாதுக்காக்கவும்,மரங்களை பற்றி அக்கறை கொள்ளவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

சர்வதேச ஆர்பர் தினத்தை செடிகள் நட்டும்,சமூக தளங்களில் மரங்கள் குறித்து விழிப்புணர்வு கொடுத்தும் இத்தினத்தை அனுசரிக்கலாம்.

 1872,ஏப்ரல் 10 அன்று பத்திரிக்கையாளரும்,செய்தியாளருமான .J.Sterling Morton. என்பவர் இத்தினத்தை state of Nebraska  காவில் தோற்றுவித்தார்.முதல் ஆர்பர் தினத்தன்று 1million மரங்கள் நடப்பட்டுள்ளது.















மரம் ஒரு புனிதம்.ஒன்று உருவாகும் போது,படைக்கப்படும்போதும்  வரும் ஆனந்தம்,வார்த்தைகளில் அடங்கி விடாது,அழுத்தப்பட்ட விதைகள், பூமியிலிருந்து முட்டி வெளிவரும்போது பேரழகு,அதை காண்பதில் பெரும் மகிழ்வு இயல்பானது.இயற்கையோடு இயைந்து இருத்தலினும் பேரின்பம் வேறு ஏது?
மரம் எத்தனை பெருங்கருணையை உள்ளடக்கியுள்ளது,மலர்களின் வண்ணங்களும்,சுவாசத்திற்கு சுகந்தம் சேர்க்கும் மணங்களும்,சுவாசத்திற்கான ஆக்ஸிஜனை கொடுத்து,கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக்கொள்ளும் இரு பெரும் தொழிற்சாலைகளை தன்னுள்ளே கொண்டுள்ள இயற்கையின் அதிசயம்.பறவைகள் சுகபிரசவம் கொள்ளும் தாய்வீடு,நிழலும்,கைவீசும் சாமரங்களாய் இலையுடன் கூடிய கிளைகளும், சுகந்தம் பரப்பும் தூயகாற்று,மழையை பன்னீரென தன்னை தாங்கி நிற்கும் பூமியில் தூவி மகிழும் நன்றி,தூளி கட்ட,வீடு கட்ட,பண்ணிசைக்க, என எண்ணிலடாங்கா பயன்களை இந்த மண்ணிற்கும்,மனிதத்திற்கும் வழங்கிடும் வள்ளல்..........

மனிதன் எத்தனை பாடுப்பட்டாலும்,ஒரு வனத்தை அதன் இயல்புகளுடன் உருவாக்கிட முடியாது,வனத்துடன் வாழ்பவர்க்கும்,அதன் மீது தீராத காதல் கொண்டிருப்பவர்களுக்கும் மட்டுமே புரியும் அந்த உணர்வு......

இன்று,பல்வேறு கட்டுமான பணிகளுக்காக மரங்களை அகற்றுவதை வழக்கமாக்கி கொண்டிருக்கும் நாம் அதனை ஈடுகட்ட செடி நடுகிறோம் என சொல்வது,சரியான மாற்றாக தோன்றவில்லை.

ஒரு மரத்திற்கு ஈடாய் நடப்படும் செடி,மரமாக எத்தனை வருடம் ஆகும்,மரங்களிலிருந்து இடம் பெயர்ந்த பறவைகளின் நிலையென்ன,ஒரு  Ecological cycle  முழுவதுமாக பாதிக்கப்படும் நிலையை எப்படி சரி செய்வது? செடி நடப்பட்டாலும் அது முறையாக பரமாரிக்கப்படுவதை யார் கண்காணிப்பது?

ஒரு காகம் கழிவுகளிலே செய்து விடும் வேலையை,சாலைகளில் கூட்டம் போட்டு,ஆயிர ஆயிரம் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட பின் மனிதன் செய்கிறான் செடி நடு விழாவை.!!!

மரங்களை வேருடன் இடம் பெயர்த்து  நடுவதும்,கொஞ்சம் அக்கறை காட்டினால் மூன்று மாதங்களில் புது இடத்தில் பழைய மரம் காணலாம்,ஒரு சில இழப்புகள் இருப்பினும் மொத்தமாய் மரத்தை இழந்துவிடும் அபாயம் தவிர்க்கப்படும்.
இந்த யோசனையும்,அதற்கான உபகரணங்கள் இருந்தும்,மரங்களை வெட்ட காட்டப்படும் ஆர்வம் இதற்கு காட்டப்படுவதில்லை என்பதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதை சொல்ல தேவையில்லை.......
மரங்கள் வெறும் பயன் தரும் உயிர் மட்டுமன்று,நம் உணர்வுகளோடு, சிறுபிராய நினைவுகளோடு நீண்ட உறவு கொண்டது,ஒரு மரத்தோடு மனிதனின் வாழ்வியலும், நினைவுகளும்,கலாச்சரமும்,பல தீர்ப்புகளும்,பல தீர்வுகளும் வேரோடு புதைந்து கிடப்பதை மறுக்க இயலாது.

உணர்வுபூர்வமாகவும்,அறிவியல் ரீதியாகவும் மரங்கள் மனதின் வளத்தையும்,மண்ணின் வளத்தையும் காக்ககூடியவை.
துளசி செடி,மூங்கில்,அரச மரம்,ஆலமரம்,வேம்பு  ஆகியவை ஆக்ஸிஜனை அதிகமாக தரக்கூடியவை என்பது கூடுதல் தகவல்.


இத்தனை சிறிய விதையிலிருந்து இத்தனை பெரிய விருட்சமா? என வியப்பில் ஆழ்த்தும் இயற்கையின் அதிசயம்.பூவிற்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் கண்டு அதிசயிக்கும் கவிஞன் போல் விதைக்குள் ஒளிந்திருக்கும் வனம் கண்டு அதிசயித்து போகிறேன். மரம் இயற்கையின் கொடை,வாழ்நாள் முழுதும் செய்யும் கொடை நினைத்து வேருக்கு நீர் கொடுப்போம்,பூமிக்கு பச்சை கம்பளம் போர்த்துவோம்.........
-அன்புடன்
லீலா.



Friday 22 April 2016

புத்தகம் என்றொரு பொக்கிஷ தோழமை...............

புத்தகம் மாபெரும் தோழமை,நிலவும்,வான் மழையும்,இசையும்,மலரும்,
குழந்தையின் ஸ்பரிசமும்,சுதந்திரமும்,தனிமையும் தரும் மகிழ்வெல்லாம் பூரணமாகும்,புத்தகமொன்று உடனிருந்தால்.மனிதர்களின் உறவை விட புத்த்கம் பலவகையில் மேன்மையானதாக பல நேரங்களில் இருக்கிறது.
புத்தகம் ஒரு பொழுது போக்கல்ல,அது ஒரு ஆன்மாவின் தேடல்,அறிவின் தேடல்,ஒரு ஆக்கத்தின் வெளிப்பாடு.

கைத்தழுவி நிற்கும் புத்தமொன்றே கைகளின் ஆபரணம்,மனங்களின் தோரணம்,ஒரு புத்தகத்தை வைத்துவிட்டு வேறொரு புத்தகத்தை எடுக்கும் போது அப்புத்தகம் நம்மிடம் கோபித்துக்கொள்வதில்லை.எந்த புத்த்கமும் தோழமையுடன் இருப்பதற்கு நம்மின் சுயம் விசாரிப்பதில்லை,
பொய்யுரைப்பதில்லை,மாறாக,நேரம் மட்டும் கொடுத்தால் போதும்,அறிவை பெருக்கி,ஆன்மாவை அமைதியாக்கி,தனிமை போக்கி, மகிழ்வை கொடுத்து எதையும் எதிர்பார்க்காத ஒரே தோழமை புத்தகம்தானே.

தினம் படி,காலை படி,மாலைபடி,நூலை படி என்ற சொற்றொடர் எத்தனை பொருள் பொதிந்தது.மனதிற்கு பேரின்பத்தை அள்ளி தரும் ஒரே இடம் நூலகம்தான்.இணைய வசதிகள் வந்தாலும்,புத்தகமொன்றை கடைக்கு  வாங்க செல்வதே பெரும் மகிழ்வு,அங்கே பல புத்தகங்களை பார்த்தவுடன் வரும் பரவசம்,அடுத்து வாங்க வேண்டிய புத்தகங்களை தேர்வு செய்வது எத்தனை சுவராஸ்சியமான விசயம்,ஒவ்வொவ்வொரு முறையும் கையிலிருக்கும் பணயிருப்புக்கு மேலே புத்தகங்களை வாங்குவது வழக்கமாகிவிடுகிறது,சில நேரங்களில்  தவிர்க்க முடியமால் சில புத்தகங்களை வைத்துவிட்டு,திருவிழா கடையில் பொம்மையை திரும்பி பார்த்தவாறே வரும் குழந்தை போல மனம் முழுவதும் அங்கேயே சுழன்று கொண்டிருக்கும்.

தீபாவளி புத்தாடையை தொட்டு பார்க்கும் குழந்தை போல் அமைதியான இடம் தேடி அமர்ந்து,புத்தகம் பிரிப்பது பேரின்பம்.,படிக்க படிக்க  அவரவர் ரசனைகேற்ப மனதில் விரியும் காட்சிகள் கற்பனை திறனை மேம்படுத்துவதோடு ,தான் பார்த்த காட்சிகளின் அடிப்படையில் கற்பனையும் நினைவாற்றலும் அதிகரிக்கின்றது.
 படித்தல் என்பது ஒரு வகை தியானம், புறவுலகை மறந்து,தன்னை மறந்து லயிக்கின்ற பேரானந்தம் படிப்பதில்தான் கிடைக்கும்.இந்த பேரானந்தம் கிடைக்கப்பெற்றவர்களில் நானும் ஒரு நபர் என்பதில் ஆனந்தம்.
புத்தகம் கையிலிருக்கும்போது ஒரு வசதியுண்டு,எங்கு வேண்டுமானலும் கையோடு எடுத்து செல்லலாம்,வயல்களில்,பயணங்களில்,வான் பார்த்துக்கொண்டு என பல நிலைகளில் படிப்பது ஒவ்வொவ்வொரு நிலை தியானம்,ஆற்றங்கரை ஓரத்தில் அமர்ந்து படிப்பது  போன்றதொரு  பேரானந்தம் ஏதொன்றுமில்லை,படிப்பதும்,கூடவே தண்ணீரின் சலசலப்பு இசையமைக்க இயற்கையை ரசித்தப்படி படிப்பது கிடைப்பது வரம்.

 பரிசாக புத்தகம் கொடுப்பதும்,பெறுவதும் அழியாத செல்வத்தை கொடுப்பதற்கும்,பெறுவதற்கும் சமம் ஆகும்,எவ்வளவு விலையானலும் பரிசாக கொடுக்க இசையும் மனம்,இரவல் கொடுக்க மறுக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.இரவல் கொடுத்த புத்தகம் கொடுத்த வடிவில் திரும்பி வருவதில்லை,குழந்தையை பாதுக்காப்பது போல் பாதுக்காக்கப்படும் புத்தகத்தை யாரிடமும் கொடுக்க மனம் வருவதில்லை,புத்தகத்தை  மடக்கி பிடித்து படிப்பது,முனையை மடிப்பது,புத்தகத்தில் பேனாவால் கிறுக்குவது போன்ற செயல்கள் அவ்வளவு பிடித்தமானதை இருப்பதில்லை,இது போல் ஒவ்வொவ்வொருவருக்கும் ஒரு பழக்கம்,அதனால் இரவல் கொடுக்க பிடிப்பதில்லை,மீறி கொடுத்தாலும் திரும்பாத புத்தகம் சில நேரங்களில் நட்பை இழக்க வைப்பதும் உண்டு,மாறாக புத்தகங்களால் சில நட்பு கிடைப்பதும்,நீடிப்பதும் உண்டு.

யாம் பெற்ற சுகத்தை மற்றவர்களும் அடைய வேண்டும் என்பது தான் பரிசாக மாறி அவர்கள் கையில் புத்தகமாக வீற்றிருக்கிறது.
நல்ல புத்தகமா? என்பதை எப்படி அறிவது? புத்தகத்தை புரட்டினால் கீழே வைக்க முடியமால் படிக்க வைக்க வேண்டும்,மனதை,சிந்தனையை புரட்டி போட வேண்டும்,புத்தக கருவின் சார்பான பொருட்களை,காட்சிகளை பார்க்கும் போதெல்லாம் அப்புத்தக வரிகள் கண்முன்னே விரிய வேண்டும்.......

அப்படியான புத்தகம் கிடைக்கப்பெற்று விட்டால் வேறென்ன வேண்டும்.பசி,தூக்கம் மறந்து படிப்பதுதான் வேலையாகிவிடும்.பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நாளில் மருத்துவரிடம்,அண்ணா அவர்கள்  நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தில் இன்னும் சில பக்கங்கள் மீதமிருக்கிறது ,அதனால் அறுவை சிகிச்சையை தள்ளி வையுங்கள் என கூறியிருக்கிறார்.
இப்படி பல புத்தக பிரியர்கள் இருந்திருக்கிறார்கள்.நேரு,டாக்டர் இராதகிருஷ்ணன்,சாக்ராடீஸ் என பெரிய பட்டியலே போடலாம்.

புத்தகங்கள்,காண்பவற்றையெல்லாம் பகுத்தறியும் திறனை தருகிறது,சோகத்தில் சோர்ந்திடமால் காத்திடும் பெருந்தோழமை புத்தகம்,வெற்றியை கொடுத்து அமைதியாய் இருக்கும் தோழமை,கைத்தட்டல் பெற்று தந்துவிட்டு பெருந்தன்மையாய் வீட்டினுள் வீற்றிருக்கும் தோழமை.எந்த சூழ்நிலையிலும் தயார் நிலையில் நம்மை வைத்திருக்கும் தோழமை...........இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
 சந்ததியினருக்கு அறிவினை கடத்திடும் ஜீன் போன்றே பணியாற்றிடும் தோழமை புத்தகம்.

வீட்டை அழகுப்படுத்த  அழகு பொருட்கள்  வாங்கவும்,வைக்கவும் கவனம் செலுத்தும்  பலர்,புத்தகங்களையும்  அழகு பொருட்கள் போல பாவிக்கும் சிலரை பார்த்திருக்கிறேன்,புது வீடு கட்டியிருக்கிறேன்,அதில் அலங்காரமாக வைக்க சில புத்தக பெயர்களை சொல்லேன்(list)  என கேட்பவர்களை பார்க்க சற்று பரிதாபமாகதான் இருக்கிறது.ஆனால் அவர்களோ,புத்தக புழுக்களென் ஏளனமிடுவதும் நடைமுறையில் உள்ளது.

எனினும்,புத்தகங்களை வாங்குவது மட்டும் போதாது,படிக்க வேண்டும்,படித்தால் மட்டும் போதாது,ஆழ்ந்து படிக்க வேண்டும்,உள்வாங்க வேண்டும்,படித்தல் என்பது ஒரு அற்புதமான கலை,மனம் ஒன்றி படித்தல் நினைவாற்றலை,ஒருமுகத்தன்மையை விரிவாக்கும்.

புத்தகங்களை வாசியுங்கள்,நேசியுங்கள்,சுவாசியுங்கள்.

பூ மணம் போல் புத்தக மணமும் அலாதியானது....

காதலியை பற்றி எழுதும் காதலனைப்போல் புத்தகத்தை பற்றி எழுதிக்கொண்டேயிருக்கலாம்......

அன்புடன் லீலா.

தொடரும்........









Tuesday 12 April 2016


களவு போன கனவுகள்.

பள்ளி சென்றபின் அறிவிக்கப்படும் மழைக்கால விடுமுறைகள் போல்
இனிதாவது ஏதொன்றுமில்லை, புத்தக பை பத்திரமாய் மூடப்பட்டு,விரிக்காத குடைகளுடன் நனைந்த நாட்களில்,தலை துவட்டிவிடும் அம்மாவின் கதகதப்பில் மழையின் குளுமையுணர்ந்தோம்.பிடித்த காய்ச்சலுக்கு அரிசி கஞ்சி குடிக்கும்போது பாசங்கள் பரிமாறப்பட்டது.

பின் சூடான காபியுடன் பக்கோடக்களும்,முறுக்குகளும் உண்டு,சீக்கிரமாய் வீடு திரும்பிய அப்பாவுடன் விரித்த பெரிய குடையில் சென்று தொலைபேசியில் ஆத்தா,தாத்தா,சித்தப்பா,சித்தி,மாமா என அனைவரின் நலன் விசாரித்து திரும்பும்போது வானொலியில் மந்தமாருதம் கேட்டோம்

மழைநீர் வடிந்த மதியமொன்றில்,நாட்டுக்கோழி சாறும்,வேகவைத்த பனங்கிழங்கும்,இனிப்பு பணியாரமும்,வண்ண வளையல்களொடும் வந்திறங்கிய ஆத்தாவும்,தாத்தாவும் இன்னும் மனதோடு இருக்கிறார்கள்,இன்னும் சொந்தங்களும் கூடிட, மெதுவாய் நழுவி காகித கப்பல்களில்,பூக்கள் நிரப்பி மழைநீரில் விட்டு மகிழ்ந்தோம்,சுட சுட வசைகள் வாங்கி கொண்டு உடல் சுத்தம் செய்து பின் நாட்டுக்கோழி சாறு சாப்பிட வைக்கப்பட்டோம்,கப்பல்களில் பூக்கள் நிரப்பிய குதூகலங்களை ,கீதாஞ்சாலியின் பாடத்தோடு ஒப்பிட்டு பேசி ஆத்தா,தாத்தா பூரித்து எங்க வீட்டு புள்ளைங்க இங்கிலீஸ் பேசுதுக என பூரித்து போனார்கள்.
இப்படியாக உறவுகளோடும்,உணவுகளோடும் கடந்து போன எங்களின் மழைக்கால நினைவுகளை,எங்களது குழந்தைகளுக்கு விட்டு செல்ல நினைத்த எங்களின் கனவுகளை களவாடியது யார்?

Sunday 10 April 2016


   சமூக காடுகள்............

ஏப்ரல் 6  அய்யா நம்மாழ்வாரின் பிறந்த தினம். ,நம் நாட்டின் மீது தீராத பற்று கொண்டிருக்கும் நாம் என்ன செய்ய போகிறோம்.படிப்பது,வேலைக்கு போவது,வீடு கட்டுவது,காடு வாங்குவது,உண்டு உறங்குவது,இசை,கவிதை இன்னும் பல அவரவர் ரசனைக்கேற்ப அனுபவிப்பது,
காதல்,கல்யாணம்,பிரிதல்,அழுதல்,வெறுத்தல்,இது மட்டும்தான் வாழ்க்கையா? பிள்ளைகளை பெற்று விட்டு செல்வதை தவிர இந்த பூமியில் நம்மின் அடையாளமாக எதை விட்டு செல்லபோகிறோம்.நாம் ஏன் அவரவ்ரின் சொந்த ஊரில் ஒரு சமூக காடு உருவாக்க எண்ணக்கூடாது,?காடுகளின் ஒவ்வொவ்வொரு பகுதிக்கும் அவரவ்ரின் தந்தை அல்லது தாய் பெயரை சூட்டக்கூடாது?.
,ஒரு பொட்டல் மைதானத்தை தேர்ந்தெடுத்து,ஒவ்வொருவரும்,
இயன்ற அளவு மரக்கன்றுகளை நட்டு,பணியில்லாது இருக்கும் இளைஞர்களை இக்காடுகள் பராமரிக்கும் பணிக்கு அமர்த்தலாம்.
இச்சிந்தனை உணர்வு பூர்வமாக தோன்றினாலும்,முழுக்க முழுக்க அறிவுசார்ந்து யோசிக்கப்பட்டது(என்னுடைய கருத்து மட்டும்).
அயல் நாடுகளில் பணியாற்றுவது குறித்து மாற்று கருத்து இருந்தாலும்,அது தனி மனித சுதந்திரமென்பதால்,அது குறித்து ஏதும் கருத்து கூறவில்லை,எனினும்,அயல்நாடு வாழ் இந்தியர்களின் பணமும் இந்தியாவின் மேம்பாட்டிற்கு பயன்படுகிறது என்றாலும்,அவர்களின் அறிவும்,ஆற்றலும் நம் மனிதர்களுக்கும் பயன்படவேண்டும்.
அதனால் இந்தியா வரும்போதும்தயவு செய்து மாணவர்களை சந்தித்து அவர்களை இயற்கையை பாதுகாக்கவும்,அவர்களின் செயல்முறை திட்டங்களை வடிவமைத்து கொடுக்க,ஊர் மக்களோடு சேர்ந்து சமூக காடுகள் அமைக்கவும் வழி நடத்த வேண்டும்,
பழைய சாதம் சாப்பிட வெட்கப்படுகிற இன்றைய தலைமுறை,எத்தனை ஆண்டுக்கு முன் நெகிழி புட்டிகளில் அடைக்கப்பட்ட பழைய தண்ணீரை காசு கொடுத்து வாங்குகிறார்கள்,RO Water reverse osmosis,தாது பொருட்கள் அகற்றப்பட்ட ph value less than 7( acidity) உள்ள,ஒரு பூச்சி கூட வாழ தகுதியற்ற தண்ணீரை சில நாட்கள் வைத்து பின் பரிசோதித்தால் அமிலத்தன்மை அதிகமாக இருக்ககூடிய தண்ணீரை குடித்து கொண்டிருக்கிறோம்.
pepsi,coke போன்றவற்றை பேரம்பேசாமல்,உள்ளே என்ன இருக்கிறது என்றும் பார்க்க முடியாத ஒரு கறுப்பு திரவத்தை பேரம் பேசாமல் வாங்குகிற இந்த சமூகம்,இளநீருக்கு பேரம் பேசும் அசிங்கம்.
இதுபோல் படித்தவர்களே ஒரு பொருளை வாங்கும்போது சிந்திக்கமால் இருக்கிறார்களே இதெல்லாம்,நம் பாரத சமுதாயத்தின் சந்ததியினரை பாதிக்காத,தள்ளாத வயதிலும் போராடிய நம்மாழ்வார்,பெரியார் போன்றவர்கள் பிறந்த நாட்டிலே இருக்கின்ற நாம் இந்த பூமிக்கோளுக்கு என்ன செய்ய போகிறோம்?
ஏதாவது செய்ய வேண்டும்.
இன்று ஒரு உறுதி மொழி எடுத்துக்கொள்ளுங்கள்,
யாருக்காகவுமில்லை,உங்களின் தன்விருப்ப்த்தின் பேரில் , இங்குள்ள பாரம்பரிய மரக்கன்றுகளை இந்த பூமி தாய்க்கு பச்சை கம்பளமாக பரிசளியுங்கள்.உங்களை மழையெனும் பன்னீர் தூவி வாழ்த்துவாள்- என்றும் நட்புடன்


பெண்ணும் இறைத்தன்மையும்


மனிதன் மாறிவிட்டான் என்ற புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன்.வெ.இறையன்பு அவர்கள் எழுதியது.
இதில் ஓரிடத்தில் பெண்ணை விட ஆண் குழந்தை தன்மை மிகுந்தவன் என எழுதியுள்ளார்,அதனால்தான் அதிகமான கண்டுப்பிடிப்புகளை ஆண் செய்திருப்பதாகவும் எழுதியுள்ளார்.

எனக்கு இதில் உடன் பாடு இல்லை,ஓஷோ,மற்றும் Men are from mars women are from venus-John Gray புத்தகங்கள் மற்றும் இயல்பான வாழ்நிலை நோக்கல் மூலமும்,பெண்ணே அதிக குழந்தைதன்மை கொண்டவளாக காணப்படுகிறாள்.

குழந்தை தன்மையுடையவர்களே எளிதில் இறைத்தன்மையை அடைய முடியும்.பெண்களே எளிதில் இறைத்தன்மையை அடைய கூடியவர்களாக இருக்கிறார்கள்.

ஒரு மலரை கண்டு ரசிப்பதிலிருந்து,ஆறுகளில் கால் நனைத்து கொலுசு சிணுங்க்க சிரித்தாடுவதிலிருந்தும்,கையில் மருதாணி,வண்ண சேலை,குழந்தைகளை கண்டவுடன் மகிழவு என் பல்வேறு தருணங்களில் பெண் இயல்பாக தான் எனும் எண்ணத்திலிருந்து விடுப்பட்டு தன்னை வெளிப்படுத்தி கொள்பவளாகதான் இருக்கிறாள்.

ஆணை விட பெண்ணிற்கு நகைச்சுவையுணர்வு அதிகம்,சமூதாய கட்டுப்பாட்டினால் சில இயல்புகளை வெளிக்காட்ட முடியாமல் இருக்கிறாள் என்பதே உண்மை.
மாறாக,

ஆண் தன்னை அறிவாளி,பெரும் படிப்பாளி என்று

என்று நினைத்துக் ண்டு விட்டாலோ, அல்லது அத்தகைய அங்கீகாரம் கிடைத்து விட்டாலோ,சின்ன சின்ன நகைச்சுவைகளுக்கு கூட சிரிப்பதில்லை.இதனால்தான் இருதய நோய் ஆண்களை அதிகம் தாக்குவதாக புள்ளிவிபரம் கூறுகிறது.

படைப்பவர் குழந்தை தன்மை மிக்கவராக இருப்பார் என்பது உண்மை என்றாலும்,பெண்ணிற்கு பெரிய கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லையென்றாலும்,அதுவே அவர்களின் குழந்தன்மையை தக்க வைத்துள்ளது.
மாறாக,தினம் தினம் அவர்கள் படைப்பாளிகளாக உலா வருவதை யாரும் எளிதில் உணருவதில்லை,சமையல்,பூ தொடுத்தல்,கோலமிடுதால்,மருதாணி இடுதல்,கூந்தலை நேர்த்தியாக அலங்காரம் செய்து கொள்ளுதல் என பட்டியலை நீட்டிக்கொள்ளலாம்.அனைத்திற்கும் மேலாக குழந்தையை ஈன்றெடுக்க மிகப்பெரிய குழந்தைதன்மை தேவை.

குழந்தை தன்மை பெண்ணிற்கே ஆணை விட அதிகமென்று முன் கூறியது போல் ஓஷோ,ஜான் கிரே ,மற்றும் அன்றாட நிகழ்வுகளின் மூலமூம் அறிகிறேன்.

Thursday 7 April 2016

                                                            மருமகள்.




                  "மாதராய்  பிறந்திட மாதவம் செய்திட வேண்டும்"
போன்ற பல்வேறு  பாட்டுக்கள் பெண்களை உயர்த்தி  பாட,இக்கால கவிஞர்களும் வஞ்சனையில்லாமல் போற்றிதான் கொண்டாடுகிறார்கள்,
ஆறின் பெயர்களும்,மலர்களின் பெயர்களும் பெண்களின் பெயராக அகிலம் போற்றுகிறது,கல்வியில்லா பெண்கள் களர் நிலங்கள் என்றெல்லாம் கவிதை பாடியிருக்கிறோம்.

பெண்கள் வீடு,நாடு இரண்டின் கண்கள்,இன்று படித்து பட்டம் பெற்ற பெண்கள்
எப்படி இருக்கிறார்கள்,சுய சார்பாக வாழும் பெண்கள் இன்று தன்னுடைய தேவைகள்,குடும்பத்தாரின் தேவைகள் இவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதெல்லாம் பெரும் கேள்வியாக  இருக்கிறது.சில நேரங்களில் அவர்களின் செயல்பாடுகள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

மகளிர் தினம் என்று உலகமே ஆர்பரித்து கொண்டாட.இந்த பெண்கள் சக பெண்களை,உறவு பெண்களை எப்படி நடத்துகிறார்கள்,கணவனை அவரது குடும்பம் சார்ந்தவர்களை எப்படி நடத்துகிறார் (விதி விலக்குகளை தவிர) என்று அறிய வரும்போது பெரிய அதிர்ச்சியும்,இவர்களது கல்வி பணம் ஈட்டுவதற்கு மட்டுமே பயன்படுகிறது என்பதும் தெள்ள தெளிவாக தெரிகிறது.

கணவன் என்பவர் பிறக்கும் போதே  26-32 வயதில் பிறந்து,அப்போதே பணம் ஈட்ட கூடியவராக இருந்தார் என்ற மாய மனநிலையில் இருக்கிறார்கள்,அதே போல் கணவன் என்பவர்க்கு பெற்றோர்,உடன் பிறந்தோர் என யாரும் இல்லை அல்லது இருக்ககூடாது என்பதும் பரவலாக காணப்படும் மனநிலையாக இருக்கிறது.

மகளிர் தினம் கொண்டாடுவது என்பது சொந்த மாமியார்,நல்துணையார்கள் என அவர்களை முதலில் அவர்களின் மகனை,அண்ணன்,தம்பிகளை பார்க்க அனுமதியுங்கள்,
அவர்களுக்கு உணவு கொடுக்க கூட  யோசிக்கும் பெண்கள்,இன்று அவர்களை வீட்டோடு வைத்துக்கொள்வதற்கு அனுமதிப்பதே தன் குழந்தைகளை,தான் வேலைக்கு சென்ற பின் பார்த்துக்கொள்ள ஒருவர் வேண்டுமென்பதற்காகதான் என்று என்னிடமே சில பெண்கள் கூறியதும் உண்டு.

மாமனார்,மாமியார் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை விற்றாலோ,அல்லது கணவனின் உடன்பிறப்புகளுக்கு கொடுத்துவிட்டாலோ(கணவனின் ஒப்புதலுடன்) இந்த மருமகள்கள் எடுக்கும் அவதாரம் இருக்கே அப்பப்பா...............பயமாய் இருக்கு.

ஒருவரின் சுய சம்பாதியத்தை அவர்களின் இச்சை படி செலவு செய்ய,அல்லது யாருக்கும் கொடுக்கும் உரிமை உண்டு போன்ற விஷயங்களை  வசதியாக மறந்து விடுவதோடு,அவர்களின் சம்பாதியத்தை கேட்கும்போது தன்னுடைய தன்மானத்தை இழப்பது குறித்தும் கவலை கொள்வதில்லை,தன்னால் தனக்கு வேண்டியதை ஈட்டி கொள்ள முடியும் என்ற  தன்னம்ப்பிக்கை உள்ள ஆணும்,பெண்ணும் இத்தகைய செயலை செய்ய மாட்டார்கள்.


படித்த பெண்களாக வலைய வரும் இவர்கள்,ஆணின் மூளையின் கட்டமைப்பு பற்றிய அறிவு இல்லாமல் அவர்களோடு மல்லுக்கு நிற்கும் பெண்கள் எப்போது படித்தவர்களாக நடந்து கொள்வார்கள்? இவர்களது பெற்றோர்,உடன் பிறந்தவர்கள் போல் மற்றவர்களின் உறவுகளையும் மதிக்கும் நாளும்,சொத்துக்கு சண்டையிடமால் சம்ரசமாக அறிவு பூர்வமாக ந்டந்து கொள்ளும் நாளுமே சிறந்த மகளிர் தினம் ஆகும்.

Sunday 3 April 2016

             
                           இருதய நலம் காக்கும் பாரம்பரிய ஆரோக்கிய பானம்.

தமனி(Artery) உள்ள அடைப்பை அகற்ற இது மிகவும் உதவும்.
தேவையான பொருட்கள்.

இஞ்சி சாறு‍ 1 கப்,
பூண்டு சாறு‍ 1 கப்,
ஆப்பிள் சிடார் வினீகர்‍ 1 கப்,
எலுமிச்சை சாறு‍ 1 கப்(5-6 பழம்)
தேன் 3 கப்



செய்முறை

1 கப் இஞ்சி சாறு எடுக்க இரண்டு கப் துருவிய இஞ்சியை நன்றாக நீர் சேர்த்து அரைக்கவும்,பின் அதனுடன் 1கப் தண்ணீர் சேர்த்து வடிக்கட்டி,தெளிய விடவும்,தெளிந்த சாறை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
நாட்டு பூண்டு சிறந்தது,தோள் நீக்கி தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிக்கட்டி எடுத்துக்கொள்ளவும்.
1 கப் எலுமிச்சி சாறு எடுத்துக்கொள்ளவும்
அனைத்து சாறுகளுடனும்,ஆப்பிள் சிடார் வினீகர்‍ 1 கப், கலந்து மிதமான தீயில் 1/2 மணி நேரம் காய்ச்ச வேண்டும்.3 கப் அளவிற்கு குறையும் வரை காய்ச்ச வேண்டும்.பின் ஆற வைத்து, அதனுடன் சுத்தமான (original) தேன் 3 கப் கலந்து பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொள்ளவும்.
உட்கொள்ளும் முறை
மேற்கூறிய பானம் -10ml
இதனுடன் வெதுவெதுப்பான நீர் கலந்து காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் தினம் குடித்து வர வேண்டும்.
அடைப்பு உள்ளவர்கள் மூன்று வேளை சாப்பிட்டு வர அறுவை சிகிச்சையின்றி அடைப்புகள் நீங்கும்
பி.கு: மிகவும் அதிக அளவு நோய்க்கு கண்டிப்பாக மருத்துவரை அணுகியே ஆகவேண்டும்(for adverse condition of blocked artery pl consult doctor)

Friday 1 April 2016

கல்லூரி..........கவனம்..........காதல்.

             காதல் கத்தரிக்காயா?   காதல் தெய்வீகமா?

    இன்றைய நாட்களில் பேருந்து நிலையம்,கோயில்,திரையரங்கு என எங்கெங்கும் கல்லூரி மற்றும் பள்ளி  மாணவ மாணவியர், காதலர் காதலியாக மாறி கல்லூரி நேரங்களில் உலா வருவதை வெகு இயல்பாக காண முடிகிறது.

இவர்களுக்கு காமம் எது? காதல் எது? என பகுத்தறிய தெரியமால் பொது இடங்களில் நாலு பேர் பார்க்கும்படி பேசு பொருள் ஆகிவிடுவது மிகவும் பயத்தை தருகிறது.

90களில்(1990 ம் ஆண்டுகளில்) தவறவிட்ட காதலியை,காதலரை தேடும் வேட்டையை முகநூல் மற்றும் வாட்ஸ்ப்  மூலம் தொடர்கிறது ஒரு கூட்டம்.காதலன் காதலி என்ற முகவரி தொலைத்து இன்னாருடைய மனைவி,கணவன்,பெற்றோர் என்ற முகவரியை தாங்கியிருப்பதை மறந்து,தொலைந்து போன முகவரிகளில் குடியேற துடிக்கும்  இவர்கள் நட்பை,சமூக பொறுப்புகளை,தனிமனித பொறுப்புகளை மறந்து மனநிலையில் ஒரு உறுதி தன்மையில்லாமல் அலைகின்றனர்.இவர்களெல்லாம் கல்லூரி கால ரோமியோ ஜுலியட் கள்.இதே நிலையில் இன்றைய தலைமுறையும் தொடர்ந்து விட்டால் இவர்களது நிலையென்ன? ஊருக்கே தெரியும் இவர்களது காதல் பெற்றோர்களுக்கு தெரிவதில்லை.

    ப்ளே ஸ்கூலில் படிக்கும் போது வகுப்பறையிலேயே  சிறுநீர் கழிப்பதும் பின் வளர்ந்த பின் அவ்வுணர்வை கட்டுக்குள் வைத்து கழிப்பிடம் சென்று கழிப்பது போல் இக்காதல் உணர்வுகளையும் கட்டுக்குள் வைத்து நேரமும்,காலமும் வரும் வரை சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என சொல்ல தவறியது பெற்றோரா?கல்வியா? அல்லது இந்த சமூகமா?



இவர்கள் தன் காதலை நிலை நிறுத்தி கொள்ள முடியமால் பிரிவதும்,காலம் கடந்த பின்னர்.நம்பி வரும் உறவுகளுக்கு துரோகம் செய்வதும்,மனித மனநிலையை உருக்குலைக்கும் .நாளைடைவில் இப்படியான மன உறுதியற்ற மனிதர்களால் நிரம்பி வழியுமோ இந்த சமூகம்.

காதல் கத்தரிக்காய் - தன் காலில் நிற்க தைரியமும்,காதலில் ஒன்று சேர போராடும் பலமும் இல்லாதவரை.
காதல் தெய்வீகம்- சுய முன்னேற்றம் அடைந்து காதலித்த வரை கைபிடிக்கும் தைரியம் வந்தால்.

கத்தரிக்காய் தெய்வீகம் ஆகும் வரை காத்திருங்கள்,இல்லையென்றால் கத்தரிக்காய் கடை தெருவிற்கு வந்துவிடும்.

இதை படிக்கும் கல்லூரி,பள்ளி செல்லும் குழந்தைகள் மனம் மாறினால் மகிழ்ச்சி,காதலை என்றும் போற்றும் உங்கள் தோழி........