Sunday 19 July 2020

அடிமையின் மோகம் - வெள்ளை



கொரானா என்னும் வைரஸை விடவும், கொடுமையான ஒரு வைரஸ்  மனித மனமெங்கும் படர்ந்து கிளைத்து வளர்ந்து கிடக்கிறது.

கொரானா தனிமைப்படுத்தி விட்டதே என புலம்புகிற நாம் இனவொதுக்கல் என்பதை பற்றி புலம்பியிருக்கிறோமா? கவலைப்பட்டுள்ளோமா?

தென்னாப்பிரிக்காவின் இனவொதுக்கலை மாய்ந்து மாய்ந்து பேசுகிற நாம், உள்நாட்டின் சாதிய ஒதுக்கலையும் சிந்திக்க வேண்டும்.

இன்றும், வெள்ளைத்தோல் மீதான மோகம் என்பது படித்தவர் படிக்காதவர் என்றில்லாமல் எல்லோர் மனதிலும் வளர்ந்து கிடக்கிறது.

காரணம் இது ஒரு அடிமையின் மோகம்.

சமீபத்தில் ஒரு திரைப்பட பாடல் கேட்டேன்.

"வெள்ளாவி வச்சுதான் வெளுத்தாகளா, இல்ல வெயிலுக்கு‌ காட்டாமா வளர்த்தகளா"

அதே போல் சிரிச்சி சிரிச்சி வர்றா சீனா தானா பாடலிலும் வெள்ளைத்தோல் பற்றிய வரிகள் வருகிறது.

அங்கவை சங்கவை என்ற பெருமைமிகு இலக்கிய கதாபாத்திரங்களுக்கு கறுப்பு வண்ணத்தை செயற்கையாக பூசி எள்ளி நகையாடிய கொடுமை எந்த படத்தில் நிகழ்ந்தது என்றால், எந்த கதாநாயகனுக்கு,

" கறுப்புதான் எனக்கு‌ புடிச்சா கலரு" என்றும்

"மனங்களின் நிறம் பார்த்த காதல் முகங்களின் நிறம் பார்க்குமோ"

"வெள்ளை மேகம் வண்ணம் மாறி வந்தால் தானே பெய்யும் மாரி"

என்றும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கறுப்பு நம் அடையாளம் என்பதை உரக்க எழுதிக் கொடுத்தாரோ அந்த கதாநாயகன் நடித்தப் படத்தில்தான் அங்கவை சங்கவையின் கறுப்பு நிறம் எள்ளி நகையாடப்பட்டுள்ளது.

இன்னொரு திரைப்படத்தில், கறுப்பு பெண்ணிற்கு வண்ணம் பூசி திருமணம் செய்த பின், குளிக்கும்போது வண்ணம் கரைந்து போவது போல் காட்டி எள்ளி நகையாடி இருக்கிறது.

இந்த சமூகத்திற்கு, இதன் மூலம் சொல்ல வரும் கருத்து என்ன.
ரசிகர்களின் பெயரில் குறையை சொல்லி, இப்படி‌ படைத்தால்தான், படமோ, கவிதையோ, கட்டுரையோ, கதையோ வெற்றி பெறுகிறது என்பது‌ பொய்மையின் வேடம்.

உண்மையில் ரசிகர்கள், வேறுவழியின்றிதான் அதை‌ பார்க்கிறார்கள்.‌

குறிப்பாக தமிழர்கள் உயர்ந்த ரசனையுடையவர்கள். அவர்களுக்கான தரமான கலைப்படைப்புகளை தர வேண்டியது ஒவ்வொரு படைப்பாளியின் கடமையாகும்.

கறுப்பு என்ற இனவொதுக்கலே தவறு எனும்போது ஆண் கறுப்பாக இருக்கலாம், பெண் கறுப்பாக இருக்கவே கூடாது என்ற ஒரு
உள் இனவொதுக்கலும் கூடவே உள்ளது என்பது இன்னும் வேதனையான செய்தி.

கறுப்பு பெண்ணாக இருந்தால் 50 பவும் கூட போடணும், அப்போ  நிறம் காணமல் போய்விடும்.

திரைப்படம், ஊடகம் என அனைத்திலும் வெள்ளைத்தோல் பெண்தான் மனிதபிறவியாக கருதப்படுவதும், அவர்களை போகப்பொருளாக பயன்படுத்துவதும் இன்றைய இளைய சமூதாயத்தினரிடையே பரவலாக வெள்ளையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்துள்ளது.

பேர் அண்ட் லவ்லி யில் காக்காவே வெள்ளையாகிவிடும் அளவிற்கு விளம்பரங்கள் வேறு.

கறுப்பு, வெள்ளை என்ற இன வேற்றுமை யாவரின் மனதிலும் ஒரு வண்டலென படிந்து இருக்கிறது.

சாதி, மத, இன வேற்றுமை கசடுகளை நீக்க சிறந்த கலைப்படைப்புகள் தேவைப்படுகிறது.

பல படங்கள் நிற வேற்றுமையை பற்றி பேச முற்படும்போது, காமெடி தர்பார் ஆகிவிடுகிறது என்பதே பேருண்மை.

ஆனால், யாவற்றையும் தகர்த்து, பல நுட்பமான அவதானிப்புடன் நிற வேற்றுமையை உண்மைத்தன்மை மாறாது காட்டும்‌ திரைப்படம்தான் ஆஸ்கார் விருது வாங்கிய
 "கீரின் புக்".

சிறந்த கலைப்படைப்பை தந்த இயக்குநர் பீட்டர் பெர்ரேலி க்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

ஏன் இன்று இதைப்பற்றி எண்ண வேண்டும்.

நேற்று ஜூலை 18 நெல்சேன் மண்டேலா அவர்களின் பிறந்தநாள்.

இங்கு கஸல்‌ கவிஞர் Mohamed Ali Jinna அவர்களின் கவிதையை நினைவூட்ட விரும்புகிறேன்.

#நிறங்கள்

முதன் முதலில்
இரவு பகலென
இயற்கையைப் பிரித்ததே நிறங்கள்தான்...

வருவதும் மறைவதுமே வாழ்க்கை என்பதை
வானவில் வழியே
வந்து சொன்னதும் நிறங்கள்தான்...

நிறமே அடையாளமாக இருப்பது
நேர்மை எனவும்
அடையாளமே நிறமாக இருப்பது
பச்சோந்தி எனவும்
பிரித்துக்காட்டியதும் நிறங்கள்தான்...

காக்கைகளே நம் முன்னோர்கள் எனில்
இறந்த பிறகு எல்லோரும் ஒரே நிறம்தானே என
மூடநம்பிக்கையிலும் முக்தியடைய வைத்தது
இந்த நிறங்கள்தான்...

நிறங்கள் இருப்பதால்தான்
உங்கள் கண்களுக்கு
எல்லாமே தெரிகிறதென
சவால் விட்டதும்...
கண்கள் இருந்தாலும்
காற்றுக்கு என்ன நிறமென
உங்களால் கண்டறிய முடியாதென
சாபம் விட்டதும் இதே நிறங்கள்தான்...

பின்பு
சமாதானத்திற்கு வெள்ளையாகவும்
துக்கத்திற்குக் கருப்பாகவும்
வறுமைக்குச் சிவப்பாகவும்
மங்கள நிகழ்வுக்கு மஞ்சளாகவும்...
மனிதனே நிறங்களைப் பார்த்துப் பிரித்தான்
நிறங்கள் நீளத்துவங்கின...
மனிதனுக்குள் நிறம் பார்த்து பிரித்தான்
நிறங்கள் சுருங்கிக்கொண்டன ...

#ஜின்னா_அஸ்மி

Apartheid ‌என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இன ஒதுக்கலை சீர்திருத்த சுமார் 27 ஆண்டுகள் சிறையில்‌ இருந்த உன்னதரின் பிறந்தநாள்.

நெல்சேன்‌ மண்டேலா அவர்கள் கறுப்பினத்தவருக்காக மட்டுமல்ல, எந்த இன வேற்றுமையும்‌ இருக்ககூடாது என்பதற்காக பாடுபட்டவர்.

தமிழகத்தில், குற்றாலத்தில் குளிக்க ஆதி தமிழர்களுக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்ததைப்போல் தென்னாப்பிரிக்காவில்‌, டர்பன்‌ கடற்கரையில்‌‌ ஒரு பகுதியில்,
இனவொதுக்கல் கொள்கையின் அடிப்படையிலான ஒரு அறிவித்தல் பலகை வைக்கப்பட்டிருந்தது.

ஆங்கிலம், ஆப்பிரிக்கானர், சூலு ஆகிய மொழிகளில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது
டர்பன் நகரம், டர்பன் கடற்கரைச் சட்ட விதிகளின் 37 ஆம் பிரிவின் கீழ் இந்தக் குளிக்கும் பகுதி வெள்ளை இனக் குழு உறுப்பினர்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. (1989)

தென்னாபிரிக்க அரசால் 1948ல் இருந்து 1998 வரை இருந்த சட்டம் மூலமாக இன வேற்றுமை முறை செயல்பாட்டில் இருந்த காலத்தினை "இன ஒதுக்கல் காலம்" (Apartheid - Era )
என்கிறது வரலாறு.

இனவொதுக்கல் சட்டம், குடிமக்களையும், நாட்டுக்கு வருகை தந்திருப்போரையும், கறுப்பர், வெள்ளையர், இந்தியர், ஆசியர் எனப் பல்வேறு இனக்குழுக்களாகப் பாகுபடுத்தியது. தென்னாபிரிக்கக் கறுப்பினத்தவரின் குடியுரிமை நீக்கப்பட்டது.

1948-1990 காலப்பகுதியில் ஆப்பிரிக்கானரின் ஆதிக்கத்தில் இருந்த அரசாங்கமே இனவொதுக்கலுக்கான காரணம் எனப் பரவலாகக் கருதப்பட்டாலும், இனவொதுக்கல், பிரித்தானியக் குடியேற்றவாத அரசின் நடவடிக்கைகளின் விளைவாகும். பிரித்தானியரால் ஆளப்பட்டதும், வெள்ளையர்களும், பிற நிறத்தவரும் வாழ்ந்த பகுதிகளுக்கு, பழங்குடியினர் பகுதிகளிலிருந்து கறுப்பினத்தவர் வருவதைத் தடுப்பதற்காக கேப் குடியேற்றப் பகுதியிலும், நேட்டாலிலும்19 ஆம் நூற்றாண்டில் உருவான அனுமதி அட்டை முறையே இதற்கான அடிப்படையாகும்.

ஆசியர் பதிவு‌ சட்டம் 1906 ன் படி அனைத்து இந்தியர்களும் பதிவு செய்து, இந்த அனுமதி அட்டையை வைத்திருக்க வேண்டும் என்றது இனவெறி கொண்ட ஆப்பிரிக்க அரசு.

இந்த அனுமதி அட்டையை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். இந்த அனுமதி அட்டை பெண்களுக்கு வழங்கப்படவில்லை.

பெண்களுக்கு அனுமதி அட்டை வழங்க எடுத்த முயற்சிகள் தீவிரமான எதிர்ப்புக்களைச் சந்தித்ததால், 1956 ஆம் ஆண்டுவரை அனுமதி அட்டை முறையில் இருந்து பெண்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இனவொதுக்கலை
சிறு இனவொதுக்கல், பெரும்‌ இனவொதுக்கல் என்று இரண்டாக பிரித்து...

பெரும் இனவொதுக்கல் என்பது தென்னாப்பிரிக்காவைப் பல பிரிவுகளாகப் பிரிக்க எடுத்த முயற்சிகளையும்...

சிறு இனவொதுக்கல் என்பது இனங்களைத் தனித்தனியாகப் பிரித்து வைக்க எடுத்த முயற்சிகளையும் குறித்தது.

பெரு இனவொதுக்கல்தான்‌ தாயக முறையை சட்டமயமாக்கி பாண்டுஸ்தான்‌ எனும்‌ பத்து தாயக பழங்குடிகளை, ஒரே குடிகளாக்கி, ஒரு தாயகத்தை ஒதுக்கினர், அதன் நிலப்பரப்பு அள்வில் மிக சிறியதாகவும், வளம்‌ குன்றியதாகவும் இருந்தது.

வெள்ளை இனத்தவருக்கென எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதியில் வாழ்ந்த கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை பறிக்கப்பட்டது.

பொதுவாகவே, கல்வி, மருத்துவ வசதிகள்‌‌ மற்றும் பொது சேவைகள் யாவும் பாகுபாட்டுடன் வழங்கப்பட்டது. கறுப்பினத்தவர்களை கூலியாட்களாக தயாரிப்பதற்காகவே அவர்களது பாடசாலைகள்‌ வடிவமைக்கப்பட்டு இருந்தது.

பல உடல் ரீதியான சித்திரவதைகள் செய்யப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, விலங்குகளுக்கு கிடைத்த சுதந்திரத்தைக்கூட வழங்கமால்‌ அடிமைப்படுத்தப்பட்டிருந்த கறுப்பினத்தவர்களின் விடிவெள்ளி‌தான்
நெல்சேன் மண்டலா.

அந்த விடிவெள்ளி கறுப்பினத்தவர்களின் ஒளியேற்றிட 27 ஆண்டுகள் சிறையில் அடைந்திருந்து, சுண்ணாம்பு‌ கல் உடைத்தலில் இருந்து இன்னும் பல்வேறு கொடுமைகளை அனுபவித்தது.

இன்றும் தொடரும் இனவொதுக்கல்.
******************************
இங்கிலாந்தில் ஜோக்சயர் என்னும் இடத்தில் உணவு விடுதி வைத்திருக்கும் கறுப்பு இன பெண்மணி தனது கடைக்கு முன்னால் “ நான் கறுப்பு இனத்தவள்தான், நல்ல உணவும் நல்ல சுத்தமான இடமும் தேவையானால் எனது கடைக்கு வரவும். நான் உங்களை கடிக்கமாட்டேன்”
என எழுதி வைத்ததன் மூலம் இங்கிலாந்தில் தொடரும் நிற வேற்றுமையை வெளிப்படுத்தியுள்ளார்.

கறுப்பினத்தை சார்ந்த ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தும் கூட, அமெரிக்காவில் இனவேற்றுமை மாறவே இல்லை, என்பதற்கு கசப்பான சான்றுதான்,
ஜார்ஜ் ஃப்ளோயிட் ( George Floyd) ன் படுகொலை.

இதை தொடர்ந்து இன்ஸ்டாக்ராமில்
கிறிஸ் கெயிலின் பதிவு பரபரப்பை ஏற்படுத்தினாலும், அதில்‌ பொதிந்துள்ள வலி உண்மையானது.

இப்படி நிறவெறி தென்னப்பிரிக்காவில் மட்டுமல்ல, தமிழகத்திலும்‌ நிறைந்துள்ளது என்றால்‌ ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.

நிறத்தை, பெயரை, உருவத்தை வைத்து இன்ன சாதியா ? என மறைமுக கேட்கும் கீழ்மை, இங்கு பரவிக் கிடக்கிறது.

இப்படி, உலகின்‌ மூலை முடுக்கெங்கும்‌ நிமிட நிமிடத்திற்கும் ஏதோ ஒரு வகையில் மனிதர்களை கீழ்மைப்படுத்தி ஒதுக்கி வைக்கும் மனபாங்கை  வளர்த்துக் கொண்டேதான்‌‌ இருக்கிறது‌ மனித மனம்.

அறிவியல் உண்மை.
**************************
அந்தந்த வாழ்விடத்திற்கு ஏற்றார் போல் நிறம், முடி, தோலின் தடிமம் போன்றவை இயற்கையால் மனிதர்களுக்கு மட்டுமில்லை, கானுயிர்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.

எல்லா பூக்களும் ஒரே நிறத்தில் இருந்தால் சலிப்பாகி விடும். அதனதன் நிறத்தில் அதனதன் தன்மையோடு இருப்பதும், அத்தன்மையோடு‌ இருக்க அனுமதிப்பதும், ஏற்றுக்கொள்ளலுமே அறிவுடமையாகும்.

கறுப்பு என்று‌ நிறம் பேதம்‌ பற்றிய  இரு உரையாடலை கேட்டபோது...

பூக்கள் பூக்க திணறுகிறது
ஒரு பூவை பூத்துவிட
உன் நிறத்தில்.

#கறுப்பு#

- கோ.லீலா.

என்று சில வரிகளை‌ நான் எழுதினேன்.

இன்று தோழர்எட்வின் இரா அவர்களின் கவிதையை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

இருட்டும் இருட்டும்
இருட்டில் கலந்து
இருட்டில் பிறந்த
இருட்டு நான்

இருட்டைத் தின்று
இருட்டைக் குடித்து
இருட்டைக் கக்கி
இருட்டைப் பேள

இருட்டால் துடைத்து
இருட்டால் எடுத்து
இருட்டில் எறிவாள்
என் தாய் இருட்டு

இருட்டை உடுத்தியபடியும்
இருட்டை சுமந்தபடியும்
இருட்டை மிதித்தபடியும்
இருட்டை இழுத்தபடியும்
இருட்டைப் பிடித்தபடியும்
இருட்டைக் கடக்க முயலும்
இருட்டு நான்

இருட்டில்
இருட்டோடு நாங்கள்
நடந்துகொண்டே இருப்பது
எங்கள் பேரப்பிள்ளைகளுக்கான
வெளிச்சத்திற்காக

சன்ன வெளிச்சத்திற்கே
கண்கள் கூசும் எங்களைக்
கிண்டல் செய்யாதீர்

தலைமுறை தலைமுறையாய்
எங்களுக்கான வெளிச்சத்தையும் சேர்த்தே
தின்று வளர்ந்தவர்கள் நீங்கள்

- இரா.எட்வின்.

சாதி,மத,இன,நிற ஒதுக்கலை களைய உறுதிமொழி எடுத்துக் கொள்வதே, இத்தகைய தலைவர்களுக்கு‌ செய்யும்‌ மரியாதை ஆகும்.

கறுப்பு‌ என் அடையாளம்‌‌ என் பெருமை.

அன்புடன்
- கோ.லீலா.

Saturday 18 July 2020

கவிப்பேரரசு வைரமுத்து

கவிஞர், திரைப்பட பாடலாசிரியர், நாவலாசிரியர், கட்டுரையாளர் கலைமாமணி, பத்ம பூஷன், பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.💐💐💐
வெண்நரை மெதுவாக
 வெளிப்படும் நேரமிதில்
மென்தரையில் வளர்ந்திருக்கும் புல்லின் மேலிருக்கும் பனித்துளிகளை ரசிக்கும் மனதையும் அன்பையும் ஆரோக்கியத்தையும்
எல்லா வளங்களையும் நலங்களையும் வாரி வழங்கிட வாழ்த்துக்கள்.💐💐💐💐💐

***********************************
இது ஒரு பொன்மாலை பொழுது பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியாது,  சலிக்காத வரிகள்.

ஒரு தெய்வம் தந்த பூவே போன்ற பல்வேறு பாடல்களை சொல்லலாம்.

அலைகள் ஓய்வதில்லை பட பாடல்களில், சிறந்த கவிதை வரிகள் திரைப்படப் பாடலாகி இருப்பதை அறிந்த போது ஆச்சரியம் மேலிட்டது.

ஆறு முறை மாநில விருதும், ஏழு முறை தேசிய விருதும் பெறுவதென்பது மிகப் பெரிய சாதனை.

பாடல்கள் மட்டுமின்றி கவிதை நூல்கள், கட்டுரை, நாவல்கள், சிறுகதைகள் என எத்தனை நூல்கள்... மீண்டும் ஆச்சரியம்தான்.

தண்ணீர் தேசம், மூன்றாம் உலகப்போர் ஆகிய நூல்கள் என் மனதிற்கு மிக நெருக்கமான நூல்கள் என்றால்,

கருவாச்சி காவியமும், சாகித்ய அகாடமி பெற்ற கள்ளிக்காட்டு இதிகாசமும்‌ இரட்டை காப்பியங்கள் எனலாம்.

எத்தனை நுணுக்கமான செய்திகள் எல்லாம் அதில் சொல்லப்பட்டிருக்கின்றன என்று அவதானித்தால், பெரும் வியப்பே ஏற்படுகிறது.

கருவாச்சி காவியத்தில் தானே பிள்ளைப் பெற்றுக்கொள்ளும் காட்சி கண்ணீரை வரவழைத்தால், கள்ளிக்காட்டு இதிகாசத்தில் பேயத் தேவர் மாட்டிற்கு பிரசவம் பார்ப்பது என மிக நுட்பமான செய்திகள் எல்லாம் காட்சியாய் விரிவது எழுத்தின் சிறப்பு.

வைரமுத்துவின் சிறுகதைகள்‌ நூலில் கதாபாத்திரங்களின் உருவ அமைப்பை விவரிக்கும்‌போது கவிஞரின் நகைச்சுவை உணர்வு பெரிதும் வெளிப்படும்.

ஆனமலை நல்லார் திட்ட தொழில் நுட்ப வல்லுநர் உபகுழு உறுப்பினராக கூடுதல்‌ பொறுப்பு‌ ஏற்று இருந்த நேரம், உபகுழு என்றாலும் பிரதான குழுவின் முக்கிய பணிகள் அனைத்தையும் பார்த்த நேரம், வீடு திரும்ப நள்ளிரவு ஆகிவிடும்.

அந்த நேரத்தில், ரிலாக்ஸ் செய்துக்கொள்ள, ஜீப்பில் பயணிக்கும் போது மீள் வாசிப்பாக சிறுகதைகளை படிப்பேன்.

ஒருநாள் ஓய்வுப் பெற்ற தலைமைப் பொறியாளரிடம் ப்ராஜக்ட் பற்றி பேசும் போது, என்னையும் அறியாமல்‌ சிரித்துக் கொண்டிருக்க , என்னவென்று கேட்டபோது சிறுகதையில் வரும் வசனங்களை சொன்னேன், அவரும் சேர்ந்து சிரித்தார்.

ரசித்த வரிகள்.

🚩"செத்த கிளிக்கு எதுக்கு சிங்காரம்" என்ற வசனம் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு கூட, நானும் தம்பியும் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தோம்.

சமீபத்தில் படித்த வரிகள்.

🚩"திருடிட்டு ஓடுறவன் ஒழுக விடுற சில்லறையத்தானய்யா கொடைன்னு சொல்லிக் கொண்டாடுது இந்த உலகம்."-வைரமுத்து
🚩
அந்தந்த வயதில்...

இருபதுகளில்...

எழு!

உன் கால்களுக்கு

சுயமாய் நிற்கச் சொல்லிக் கொடு!

ஜன்னல்களைத் திறந்து வை!

படி! எதையும் படி!

வாத்சாயனம் கூடக்

காமமல்ல, கல்விதான்..

படி!

பிறகு

புத்தகங்களை எல்லாம்

உன்

பிருஷ்டங்களுக்குப்

பின்னால் எறிந்துவிட்டு

வாழ்க்கைக்கு வா..

உன் சட்டைப் பொத்தான்,

கடிகாரம்,

காதல்,

சிற்றுண்டி,

சிற்றின்பம்

எல்லாம்

விஞ்ஞானத்தின் மடியில்

விழுந்து விட்டால்,

எந்திர அறிவு கொள்!

ஏவாத ஏவுகணையினும்

அடிக்கப்பட்ட ஆணியே பலம்.

மனித முகங்களை

மனசுக்குள் பதிவு செய்!

சப்தங்கள் படி!

சூழ்ச்சிகள் அறி!

பூமியில் நின்று

வானத்தைப் பார்!

வானத்தில் நின்று

பூமியைப் பார்!

உன் திசையைத் தெரிவு செய்!

நுரைக்க நுரைக்க காதலி!

காதலைச் சுகி!

காதலில் அழு!

இருபதுகளின் இரண்டாம் பாகத்தில்

மணம் புரி!

பூமியில் மனிதன்

இதுவரை துய்த்த இன்பம்

கையளவுதான்..

மிச்சமெல்லாம் உனக்கு!

வாழ்க்கையென்பது

உழைப்பும் துய்ப்புமென்று உணர்!

உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து!

இன்னும்... இன்னும்...

சூரியக் கதிர்கள்

விழமுடியாத ஆழத்தில்...

**

முப்பதுகளில்...

சுறுசுறுப்பில்

தேனீயாயிரு!

நிதானத்தில்

ஞானியாயிரு!

உறங்குதல் சுருக்கு!

உழை!

நித்தம் கலவி கொள்!

உட்கார முடியாத ஒருவன்

உன் நாற்காலியை

ஒளித்து வைத்திருப்பான்..

கைப்பற்று!

ஆயுதம் தயாரி..

பயன்படுத்தாதே.

எதிரிகளைப் பேசவிடு!

சிறுநீர் கழிக்கையில் சிரி!

வேர்களை,

இடிபிளக்காத

ஆழத்துக்கு அனுப்பு..

கிளைகளை,

சூரியனுக்கு

நிழல் கொடுக்கும்

உயரத்தில் பரப்பு..

நிலை கொள்.

**

நாற்பதுகளில்...

இனிமேல்தான்

வாழ்க்கை ஆரம்பம்..

செல்வத்தில் பாதியை

அறிவில் முழுமையை

செலவழி..

எதிரிகளை ஒழி!

ஆயுதங்களை

மண்டையோடுகளில் தீட்டு!

ஒருவனைப் புதைக்க

இன்னொருவனைக்

குழிவெட்டச் சொல்!

அதில்

இருகையால் ஈட்டு..

ஒரு கையாலேனும் கொடு..

பகல் தூக்கம் போடு.

கவனம்!
இன்னொரு காதல் வரும்!

புன்னகைவரை போ..

புடவை தொடாதே.

இதுவரை இலட்சியம் தானே

உனக்கு இலக்கு!

இனிமேல்

இலட்சியத்துக்கு நீதான்

இலக்கு..

**

ஐம்பதுகளில்...

வாழ்க்கை, வழுக்கை

இரண்டையும் ரசி..

கொழுப்பைக் குறை..

முட்டையின் வெண்கரு

காய்கறி கீரைகொள்!

கணக்குப்பார்!

நீ மனிதனா என்று

வாழ்க்கையைக் கேள்..

இலட்சியத்தைத் தொடு

வெற்றியில் மகிழாதே!

விழா எடுக்காதே!

**

அறுபதுகளில்...

இதுவரை

வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது..

இனியேனும்

வாழ்க்கையை நீ வாழ்..

விதிக்கப்பட்ட வாழ்க்கையை

விலக்கிவிடு..

மனிதர்கள் போதும்.

முயல் வளர்த்துப் பார்!

நாயோடு தூங்கு!

கிளியோடு பேசு!

மனைவிக்குப் பேன் பார்!

பழைய டைரி எடு

இப்போதாவது உண்மை எழுது..

**

எழுபதுக்கு மேல்...

இந்தியாவில்

இது உபரி..

சுடுகாடுவரை

நடந்து போகச்

சக்தி இருக்கும்போதே

செத்துப்போ...

ஜன கண மண...

-கவிப்பேரரசு வைரமுத்து

கவிராஜன் கதையும் விரும்பி‌‌ படித்த நூல்.

வைகறை மேகங்கள், இந்த‌ குளத்தில் கல் எறிந்தவர்கள், இந்த‌ பூக்கள் விற்பனைக்கல்ல என்று தொடரும் நீள் பட்டியலில் தமிழாற்றுப்படையில் சற்று மூச்சு வாங்கி கொள்கிறேன்.

ஒரு கல்லூரியில் பேச சென்றிருந்தபோது, உங்களைப் பற்றி விசாரித்தோம், நிறைய படிப்பீர்கள் என்று அறிந்தோம் அதான் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் வாங்கி வந்தோம் என்று கூறி அந்த புத்தகத்தை பரிசளித்த நிகழ்வு‌‌ மட்டற்ற‌ மகிழ்ச்சிக்குரிய தருணம்.

தேனி சென்றிருந்தப்போது, வடுகப்பட்டி மற்றும் பண்ணைப்புரமும்‌ செல்ல வேண்டுமென சொல்லி சென்று பார்த்தேன்.

இப்படியொரு‌ குக்கிராமத்தில் இருந்து‌ வந்தவர்கள் எத்தனை உயரத்தில் இருக்கிறார்கள்‌ என்று வாய்பிளந்து நின்றேன்.‌ எங்கிருந்து வருகிறோம்‌ என்பதை விடவும் எதை அடைகிறோம்‌‌ என்பது‌ மிக முக்கியம் என்றுணர்ந்த கணமது.

வைகை அணை சென்றிருந்தப் போது ஒரு பக்கம்‌ பொறியாளாராக தொழில்நுட்பம் காணும் மனம்.
இன்னொரு புறமோ, இந்த நீர்பரப்பில் எந்த இடம் மேட்டூராக இருந்திருக்கும், எந்த இடத்தில் புத்தகத்தை ஆற்றில் விட்டிருப்பார் என பல்வேறு சிந்தனைகள் தோன்றின.

கவிஞர் வழித்தோன்றலாக இல்லாமல், எந்த பின்புலமும் இல்லாமல் பதினான்கு வயதில் யாப்பு எழுதுவதும், பத்தொன்பது வயதில் கவிதை நூல் வெளியிடுவதும், பெரிய சாதனை மட்டுமல்ல, பிறப்பிலேயே ஒரு கவிஞனாக பிறந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழுக்கு‌ கிடைத்த வரமும்.

கவிபேரரசு அவர்கள் "மரம்" என்ற தலைப்பிலும், "அம்மா" என்ற தலைப்பிலும் வாசித்திருக்கும் கவிதைகளை, மிகவும் ரசித்துக் கேட்பேன்.

கவிபேரரசும், இசைஞானியும் பிரிவுற்ற தருணம் அவர்களுக்குள் எவ்வளவு‌ பெரிய மனவலியை, பாரத்தை கொடுத்திருக்கும் என்று யோசிக்கும்போதே கண்ணீர் வந்துவிடும்.‌‌பிரிந்தாலும் அவர்கள்‌ தனது திறமையில் சோடை‌ போகவில்லை.

இருவருமே, அதற்கு பிறகு பல வெற்றிகளை, உயரங்களை அடைந்திருக்கிறார்கள்.

பிரிந்தாலும்‌ தோழமையின் வளர்ச்சியை கவனித்து வாழ்த்திக் கொண்டேதான்‌ இருக்கும்‌ தோழமை மனம்.
அதில் தோழமைக்கான பாடமும்‌ உள்ளது அல்லவா?

இணைந்து இருந்திருந்தால், கலையுலகிற்கு, இன்னும்‌ பல அரிய படைப்புகள்
கிடைத்திருக்கும்.

ஒரு ரசிகையாக,‌ இப்போதாவது அவர்கள் இணைந்து ஒரு பாடல் தரமாட்டார்களா? என்றே ஏங்குகிறது மனம்.

தமிழுக்கு தொண்டாற்றியதோடு, சமூக அக்கறையோடு‌ "தண்ணீர் தேசம்"  "மூன்றாம் உலகப்போர்" எழுதியதாலே எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் என்பேன்.

எல்லா நலமும், வளமும்‌பெற்று நீடு வாழ்க கவிப்பேரரசே!

🚩

வித்தையில்லா கர்வம் பாழ்
கர்வமில்லா வித்தை வீண்
வித்தையுள்ள கர்வமே சிறப்பு.

- சுக்கிர நீதி.

வித்தையுள்ள கர்வமே ! தமிழின் மறு உருவமே நீ வாழி !

அன்புடன்

- கோ.லீலா.

கவிஞர் வாலி -1


#கட்டுரை.

கவிஞரை ஓவியராக்க வைக்கப்பட்டப் பெயர் வாலி.
***********************************
எழுத்தாளர், நடிகர், வசனகர்த்தா, ஓவியர், கவிஞர், திரைப்பட பாடலாசிரியர்
பத்ம ஸ்ரீ வாலி அவர்களின் நினைவு நாளில், வணங்கி
💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏 💐
நினைவுகளைப் போற்றுவோம்.
***********************************
இவ்வுலகில் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்தாலும், மனிதன்‌ மட்டுமே ரசனையின் உச்சத்தை பகுத்தறிந்து மகிழக்கூடியவனாக இருக்கிறான். எத்தனை வசதி, வாய்ப்புகள் இருந்தாலும், மனமகிழ்ச்சி இல்லையென்றால் எதுவும்‌ பயன் தராது.

பல்வேறு பணிகளுக்கிடையில் சிக்கித் தவிக்கும் மூளைக்கு புத்துணர்ச்சி ஊட்டுவது இலக்கியம் என்றால், அதில்‌ திரையிலக்கியம் முக்கிய பங்காற்றுவதை மறுக்க இயலாது.

அதிலும் திரைப்பட பாடலுக்கென்றே தனியிடம் உண்டு.

எந்த சூழலுக்கும் பொருந்தும் பாடல்களை கொண்டிருப்பது திரை இலக்கியத்தின் செறிவு என்றே சொல்ல வேண்டும்

நம்மை, புத்துணர்வுடன் வைத்திருந்த படைப்பாளியை அவரது நினைவு நாளில், நம்மின் "நினைவு நாடாக்களில்"
சுழற்றுவோம்.

சிறுவயதில் ரேடியோவில் சிலோன் ஸ்டேஷன், பள்ளிக்கு போய் வரும் வழிகளில் உள்ள கடைகளில் என கவிஞர் வாலி அவர்களின் பாடலை கேட்டிருக்கிறேன்.

( யார் எழுதினார்கள் என்பது பற்றிய பிரக்ஞையெல்லாம் அப்போது கிடையாது.)

நாளடைவில் கவிஞர்களின் பெயர்களை கேட்கும் அளவிற்கு, வரிகளில் ஈர்ப்பு துவங்கியிருந்த காலம்.

திரையரங்கிற்கு இப்போதும் அதிகமாக என்பதை விடவும் செல்லவே மாட்டேன் என்றே சொல்லலாம். ஆனால், பாடல்கள் மட்டும் தெரியும்.

சிறு வயதில் இருந்தே தத்துவப் பாடல்களும், சமூக சிந்தனை சார்ந்த வரிகளுமே என்னை பெரிதும் ஈர்த்தன.

அப்படி என்னை ஈர்த்த வரிகள்தான்...

"மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா  ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா"

அடடா ! என்ன அற்புதமான சிந்தனை என மலைத்துப் போனேன்.

"அவதார புருஷன்" என்ற தொடரை, எதர்ச்சையாக, ஒரு முறை படித்தேன், ஆகா ! அழகியத் தமிழும், சிலேடையும், மீண்டும் மீண்டும் படிக்கும் ஆவலைத் தூண்டியது.

காவிரி நீரின் சுவை மிளிர்கிறதே எழுத்தில்‌ என்று தோன்ற, கவிஞர் வாலி அவர்களைப் பற்றிய தகவல்களை தேடி எடுத்தேன்.

கணிப்பு தவறாகவில்லை, திருப்பராய்த்துறையில் பிறந்து, ஸ்ரீரங்கத்தில் வளர்ந்தவர்.

ஒரு புறம் பெரியாரின் கொள்கை மீது தீராத பற்று, இன்னொரு புறம் நித்தமும் காதில் ராமயாணம்‌ பற்றிய சொற்பொழிவுகள் ஒலிக்க வளர்ந்த பருவத்தில் கலைஞரின் தமிழுடன், வாலி அவர்களின் தமிழ் எனக்கு‌ பிரமிப்பை தந்தது.

இப்படிதான் வாலி அவர்களின்‌ பாடல்களை கேட்கத் தொடங்கினேன்.

எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி- கமல், விஜய் - அஜித், சிம்பு- தனுஷ் என நான்கு  காலக்கட்டத்தின் ரசனைகேற்ப சுமார் பதினைந்தாயிரம் பாடல்களை எழுதியுள்ளார்.

காதல், பக்தி, தத்துவம்,நட்பு என வாழ்வின் அனைத்துப் பக்கங்களையும்‌ காலத்திற்கேற்ப எளியத் தமிழில் சுவைக்க கொடுத்தவர்.

நாங்கள் கல்லூரியில் படித்த காலத்தில் எங்கள் பேட்ஜ் பாடும்‌  "காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுதான்"  ரொம்பவே ஹிட். இப்போ அனுமினி மீட் சென்றபோதுகூட மீண்டும் அதே‌ பாடலை பாடினோம், அப்படி வாழ்வோடு, உணர்வுகளோடு ஒன்றிப்போன பல பாடல்களை‌ தந்தவர் கவிஞர் வாலி அவர்கள்.

அம்மா பாட்டுன்னா இதோ...

அம்மா என்றழைக்காத உயிரில்லையே’,

 ‘அம்மா அம்மா எந்தன் ஆருயிரே’, ‘

நானாக நானில்லை தாயே’,
 ‘சின்னத்தாயவள் தந்த ராசாவே’,

‘காலையில் தினமும் கண்விழித்தால்’

என அம்மாவை கவியெழுதியவர்.

பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா’ என்பது ஒரு பாடல்.

கற்பகம்  கவிஞர் வாலியைத் தனித்தன்மையுள்ள கவிஞராக நிறுத்தியது என்றே சொல்லலாம்.

"பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையில படம் புடிச்சான்" ன்னு ஒரு பாட்டு...

மனசுக்குள்ளே தேரோட்ட
மை விழியில் வடம் புடிச்சான்
மனசுக்குள்ளே தேரோட்ட
மை விழியில் வடம் புடிச்சான்

எங்க ஊர்ல ( திருவாரூர்) தேருக்குதானே வடம் பிடிப்பாங்க, இதென்ன "மை விழியில் வடம் புடிச்சான்"ன்னு நான் ரொம்பவே ரசித்த வரி. கவித்துவம் நிறைந்த வரியாகவும் இருந்தது.

தொட்டால் பூ மலரும் பாடல் இன்றும் வியப்பையும், ரசிப்பையும் ஒன்றாக சுரக்க வைக்க கூடியவை.

கேள்வி - பதில் பாடல்.
*************************
ஒடிவதுபோல் இடை இருக்கும், இருக்கட்டுமே’

இந்தப் புன்னகை என்ன விலை...
என் இதயம் சொன்ன விலை’

இதை தொடர்ந்து வாடகை, விலை என்பதை வைத்து பாடல்கள்.

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்…
வாடகை என்ன தரவேண்டும்?

மூன்றெழுத்தில்‌ என் மூச்சிருக்கும் என்ற பாடலை கேட்ட வயதில் அரசியல் என்னவென்றே தெரியாது... மூன்றெழுத்தில் மூச்சுன்னா "மூக்கு" தானேன்னு‌ குறுக்கு எழுத்து போட்டிக்கு யோசிக்கிற மாதிரி யோசிச்சு இருக்கேன்.

பின்னாளில், சோ அவர்களிடம்‌ மூன்றெழுத்தில் மூச்சு ன்னா தமிழ், அண்ணா, திமுக எது? என்று கேட்டார்களாம்,

சோ அவர்களும் மூக்கு என்றுதான் பதில் சொன்னாராம்.‌😀

அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பாடல்கள்‌ கவிஞர் வாலியின் பாடல்கள்.

நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், மிகவும்‌‌ பிரபலமான பாடல்.

நானொரு குழந்தை நீயொரு குழந்தை என பாடல்‌‌களை  சொல்லிக் கொண்டே போகலாம்.

அவதாரப் புருஷன் , அம்மா பொய்க்கால் குதிரைகள், ராமானுஜ காவியம்,
நிஜ கோவிந்தம், 
கலைஞர் காவியம்,
பாண்டவர் பூமி,
கிருஷ்ண விஜயம், 
நானும் இந்த நூற்றாண்டும் ‌

என பதினைந்து புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார்.

மேலும் கலியுகக் கண்ணன், காரோட்டிக் கண்ணன்,
ஒரு செடியில் இரு மலர்கள்
என சுமார் பதினைந்து திரைப்படங்களுக்கு மேல் திரைக்கதை-வசனம் எழுதியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், பொய்கால் குதிரை,  சத்யா,
பார்த்தாலே பரவசம், ஹே ராம் என திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சுவாரசிய செய்திகள்.
**************************
🚩
கவிஞர் ரங்கராஜன் நல்ல ஓவியரும்‌ ஆவார். கவிஞரின் நண்பர் பாபு என்பவர், கவிஞர் மாலி போல் புகழ்பெற வேண்டும்‌ என்று கவிஞர் ரங்கராஜனுக்கு சூட்டிய பெயர்தான் வாலி.
🚩
கவிஞர் வாலி நடத்திய பத்திரிக்கையின்‌ பெயர் "நேதாஜி" பலரும்‌ அதில் எழுதி பங்கேற்றனர்.‌

அவ்விதழில்‌ எழுதியவர்களில், பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதாவும்‌ ஒருவர்.
🚩

பணம் படைத்தவன் படத்தில் ‘கண்போன போக்கிலே கால்போகலாமா’,

‘தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை’.

இந்த இரண்டு பாடல்களையும் கண்ணதாசன்தான் எழுதினார் என்றே இன்னமும்  நினைத்துக்‌ கொண்டிருக்கிறார்கள்.

இல்லை இந்த இரண்டு பாடல்களையும் எழுதியவர் வாலி.

இரண்டாவது பாடல் திருக்குறளின் சாரத்தை கொண்டது.

🚩

வாலியின் திரைப்பாடலில் பெண்ணியம், சமூகசிந்தனை, அக‌ப்பொருள் மரபு போன்ற ஆய்வுகளை காலம் வாய்க்கும்போது மேற்கொள்ள வேண்டும்.

தெரிந்துக் கொள்ள வேண்டிய செய்தி
**********************************
இவர்களுக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான்.

கவிஞர் வாலி அவர்களி‌ன்‌ நினைவுகளை போற்றி வணங்குவோம்.🙏💐🙏💐🙏💐

அன்புடன்
- கோ.லீலா.

Wednesday 15 July 2020

கர்மவீரர் காமராஜர் -2

கலெக்டர் ஆபீஸ் பியூனா கூட நான் ஆகமுடியாது - கர்ம வீரர் காமராஜர்.
***************************************
ஜூலை 15, கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக📚📚📚 கொண்டாடுகிறோம்.
இன்று தென்னாட்டு காந்தியின் 118 வது பிறந்தநாள்.💐💐💐💐💐

அவரது ஆட்சியின் கீழ் 10 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவை
🌊🌊🌊🌊
பவானித்திட்டம்,
மேட்டூர் கால்வாய்த்திட்டம்,
காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்,
மணிமுத்தாறு,
அமராவதி, வைகை,
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம்,
சாத்தனூர், கிருஷ்ணகிரி,
ஆரணியாறு ஆகியவையாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.

கட்சி சார்பற்று ஒரு தலைவராக மனதிற்குள் நின்ற மனிதர் மட்டுமல்ல...

என் அன்றாட அலுவலகப் பணியில் ஒரு அதிகாரி எப்படி எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்கும்,
நேர்மையாகவும், விரைந்தும் முடிவெடுக்க வேண்டும் என்பதற்கும், நாம் வாழும் தேசத்தின் புவியமைப்பு, மழை என அனைத்தையும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்பதற்கும்,
எளிய மனிதர்களின் தேவையை உணர்ந்து‌ பணியாற்ற வேண்டும் என்பதற்கும், அய்யா காமராஜர் அவர்களை பற்றி படித்ததும், கேட்டதுமே காரணம்.

தன்னுடைய ஒன்பது ஆண்டுகால ஆட்சி காலத்தில் சுமார் 27,000 பள்ளிகளை திறந்திருக்கிறார்.
🚩
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'

-பாரதி.
🚩
என்ற வரிகளை விடவும் ஒரு படி மேலே போய் அன்னமும் இட்டு கல்வியும் தந்த பெருந்தகை காமராஜர் அவர்கள்.

இன்று நான் பணியாற்றும் பரம்பிக்குளம் ஆழியார் திட்டம், அய்யா காமராஜரின் பெரும் முயற்சியால்‌ வந்தது. எப்படி வந்தது என்று பார்ப்போம்.

விவேகமாய் செயலாற்றுதல்.
********************************
முதலமைச்சரான அய்யா காமராஜர்‌ அவர்கள் CS அவர்களை அழைத்து....

காமராஜர் :
பரம்பிக்குளம் ஆழியார் திட்டம் என்னாச்சுங்குறேன்.

CS : பேசிகிட்டு இருக்குறாங்க.

காமராஜர் : யாருங்குறேன்.

CS : அதிகாரிங்க.

காமராஜர் :

அவன் பேசுவான்லே, அவன் 58 வயசு வரைக்கும் பேசுவான்லே. நமக்கு‌ அஞ்சு வருஷந்தான்லே...
ஏன், நீங்க பேசமாட்டியலோ.

நம்பூதி பட் க்கு போனை போடுங்குறேன்.
☎️
போன் உரையாடல்.

காமராஜர் :

என்னாவே, இதுக்குதானா, இரண்டு பேரும் ஜெயிலுல வானத்த அண்ணாந்து பார்த்துகிட்டு கிடந்தோம்..

ந.ப : என்னை திட்ட உங்களுக்கு உரிமை இருக்கு, ஆனா எதுக்கு திட்றேன்னு சொல்லிட்டு திட்டுங்க.

காமராஜர் : என்னமோ தண்ணி தர மாட்டியேன்னியாலமே...

என்னவே தண்ணிய வச்சிகிட்டு என்ன பண்ண போறேங்குறேன்.
நான் காங்கிரஸ், நீ கம்யூனிஸ்டா இருந்தாலும், தேச பக்தங்கறேன்.

ந.ப :
நான் எப்போ முடியாதுன்னேன்
எவ்வளவு தண்ணி வேணும் சொல்லுங்க.

காமராஜர்:
உன்னை நான் நம்பறேன், டிரப்ட் போட்டு‌ அனுப்புல கண்ணை மூடிகிட்டு கையெழுத்து போடுதேங்கிறேன்.

ந.ப : நான்‌கையெழுத்து போட்டே அனுப்பிடுறேன்.
📚✍🏼📚✍🏼📚✍🏼
டிரப்ட் வந்தவுடன்,  CS ஐ அழைத்து பார்த்துகுவே, படிக்கமாலே கையெழுத்து போடுறேன் என்று கையெழுத்திட்ட "King maker".

அப்படி உருவான ஒரு திட்டத்தில் பொறியாளராக பணியாற்றும் பெரும்பேறு பெற்றுள்ளேன் என்பதே மகிழ்வுதான்.

எளியவரின் தேவையை அறிதல்.
***********************************
ஒரு‌ முறை முதலமைச்சர் காமராஜர் அவர்களை பார்க்க பஸ் கம்பெனி உரிமையாளர்கள் வந்திருந்தனர், அதே நேரத்தில் வேறு ஒரு கோரிக்கைக்காக பொதுமக்களும் வந்திருந்தனர்.

காமராஜர், முதலில்‌ பொதுமக்களை சந்திக்க சென்றுவிட்டார், முதல் கேள்வியாக உங்களுக்கு கடைசி பஸ் எத்தனை மணிக்கு என்று கேட்டிருக்கிறார்.

அவர்கள் இரவு  7.30 மணிக்கு என்று சொல்ல, அதற்குள் அவர்களின் வேலையை முடித்து அனுப்பியிருக்கிறார்.
🚌🚌🚌🚌🚌
அதற்குள், பேருந்து உரிமையாளர்கள் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார்கள் என உதவியாளர் சொல்ல... போடு போடு போனை போடு என்று சொல்லி போனில் பேசியிருக்கிறார்.

என்னாங்குறேன், அவனுக்கு கடைசி பஸ் 7.30 க்கு விட்டுட்டா அவன் வீட்டுக்கு போகமுடியாது.

நீ காரு வச்சிருக்க எப்ப வேணும்னாலும்‌ போகலாம்வே.

அவன்‌ ஊருக்கு போக முடியலைனா, மெட்ராஸ்ல தங்கனுங்குறேன், கையிலே காசு இருக்குமாவே..

நீ ரூம் போட்டு தங்கலாம்ங்குறேன்...

அவன் நெலமைய பாக்கணும்வே...
புரியாமா கோவிச்சுக்கிட்டா  எப்படிங்குறேன்.

நான் முதலமைச்சரா ஆனாதல பார்க்க வர...

அவன் என்னை முதலமைச்சரா ஆக்கிட்டு வந்திருக்கான்லே என்றராம்.

இதை படித்ததின் விளைவுதான், விசிட்டர் யார் வந்தாலும், காக்க வைக்கமால், அவர்களின் தேவையை உணர வைத்தது, வைக்கிறது.

எல்லோரும்‌ சமம்.🪑🪑🪑
*********************
காமராஜரின் கீழ் எம்.எல்.ஏ வாக இருந்த ஒருவர் எந்த அதிகாரி வந்தாலும் நிற்க வைத்தே பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்.

இந்த தகவல் அதிகாரிகள் மூலம், சீஃப் செகரட்ரி வழியே முதலமைச்சர் காமராஜரை அடைந்துவிட்டது.

காமராஜர் உடனே அந்த எம்.எல்.ஏ வையும், மற்ற எம்.எல்.ஏக்களையும் வரசொல்லு ஒரு புறம் அமர வைத்திருக்கிறார்.

சிறிது நேரத்தில் அனைத்து துறை அதிகாரிகளையும் வரவழைத்து இன்னொரு புறம் அமர சொல்லிவிட்டு,‌ அய்யா, பேப்பரை  படித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

வெகுநேரம் ஆகிவிட, அந்த எம்.எல்.ஏ வர சொன்னீங்க என்றாராம்.

நீங்களும் உட்கார்ந்திருக்கீங்க, நானும் உட்கார்ந்திருக்கேன்,  அவங்களும் உட்கார்ந்து இருக்காங்க ஒண்ணும் குடிமுழுகிடல போங்கவே என்றாராம்.
🪑
எவ்வளவு ஒரு எளிமை. இதை படித்ததும் மனதில் பதிந்த செய்தி.

நமக்காக, நம் கீழ் பணிபுரிவோர் நின்றால், அவர்களை முதலில் அமர சொல்லவேண்டும், சாப்பிட்டார்களா என்பதை கேட்டறிய வேண்டும், அவர்கள் வீடு திரும்ப வாகன வசதிகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்பதுதான்.

நம் தேசத்தை நாம் அறிந்திருக்க வேண்டும்.
***********************************

கர்நாடக  முதலமைச்சராக இருந்த நிஜலிங்கப்பாவுடன், காமராஜர் நெருங்கிய நட்புடையவர். ( வா, போ என்று பேசும்‌ அளவிற்கு).

ஒரு முறை, கர்நாடகவில் அவருடன் பயணித்திருக்கிறார், லேசா மழைதூற, வழியில் ஒரு ஏரி வர...

(இருவருக்குமிடையே மொழிபெயர்ப்பாளராக மதுர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இருந்திருக்கிறார்கள்.)

காமராஜர்:
அது என்ன கொள்ளளவுங்குறேன்‌.

நி.லி : தெரியாது.

காமராஜர் :
இந்த தண்ணி விவாசயத்துக்கு போகுதா, வேறெதும் தொழிற்சாலைக்கு போகுதா? விவசாயம்னா எவ்ளோ ஏக்கரு?

நி.லி : தெரியாது.

காமராஜர் : மூதி ஒண்ணுமே தெரியாத நீ முதலமைச்சரா இருந்தா எப்படி விளங்குகேறேன்.

(மதுர் கி.முக்கு மொழிபெயர்ப்பின் பிரச்சனை முதல் இரண்டு எழுத்தில் ஆரம்பித்து விட்டது).

அடுத்த சம்பவம், தொழிற்சாலைக்கு ஆயிரம் ஏக்கர் நில ஒதுக்கீடு
🌦️☀️🌍
எனக்கான பாடம் :

அதிகாரியா இருக்கிறவங்களும், முழு தகவலையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

துணிந்தும் விரைந்தும் முடிவெடுத்தல்.
*****************************
சீன போர் முடிந்த நேரம் நேரு மனசோர்வில்‌ இருக்கிறார். இந்தியாவுக்கு பெரிய அடி.

நேருவை பார்த்த காமராஜர் என்ன பிரச்சனை என்கிறார்.

நேரு:

ராணுவ தள்வாடங்களை அமெரிக்காவில் இருந்து கொண்டு அமெரிக்க வங்கி‌ ஒன்று கையெழுத்திட வேண்டும், ஆனால் எந்த வங்கியும் போட தயராய் இல்லை.

காமராஜர் : நம்ம ஊர்ல அமெரிக்ககாரங்க கடை ஏதுமில்லையா?

நேரு : கடைன்னா ? எத சொல்றீங்க.

காமராஜர் : அதான் இன்ஸ்டிட்டியூஷன்.

நேரு : அமெரிக்கன் எகஸ்பிரஸ் பேங்க் தான் இருக்கு. வேறெதும் இல்லை.

காமராஜர் :
அதை இழுத்து மூடுங்க. நமக்கு உதவாதவன் இங்கே எதுங்குறேன்...

நேரு : பெரிய பிரச்சனை ஆயிடுமே.

காமராஜர் : ஆகட்டுமே, என்ன ஆகிடும்ங்கேறேன்.

உடனே, அமெரிக்கன் எகஸ்பிரஸ் பேங்கை இழுத்து மூட உத்தரவிட, அமெரிக்காவில் துரித தகவல் வருகிறது 24 மணி நேரத்தில் இராணுவ தள்வாடங்கள் இந்தியா வருமென்று.

அசையாத நேர்மையை பாராட்டு.
***********************************

கட்சிக்காரரின் தியேட்டர் ஒன்றை திறந்து வைக்க காமராஜருக்கு அழைப்பு வர, அதை ஏற்றுக் கொண்டார்.

தியேட்டரில் வயரிங் வேலை முடிவடையாமல் லைசென்ஸ் அனுமதிக்க முடியாது என்று அன்றைய கலெக்டர் பசுபதி பாண்டியன் சொல்லியிருக்கிறார்.

கட்சி தொண்டர்களோ, யாருகிட்ட பேசுற. வரபோறது, சகல வல்லமையும் வாய்ந்த முதலமைச்சர், நீ வெறும் டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் என சொல்ல.

நான், இன்னைக்கே ரிசைன் பண்ணிட்டு, எலெக்‌ஷன்ல நின்னா முதலமைச்சரா ஆக முடியும், ஆனால் தலைகீழா நின்னாலும் உங்க அய்யா கலெக்ட்ராக ஆக முடியாது. அதனால் நான்தான் கையெழுத்து போடணும் போ என்று சொல்லியிருக்கிறார்.

இந்த செய்தி காமராஜருக்கு போக, அவர் சொன்னதில்ல என்ன தப்பு, ஒரு சின்ன தப்பு இருக்கு, நான் பியூனா கூட ஆக முடியாது, அதுக்கும் குறைந்தளவு படிப்பு வேணுமில்ல....

என்ன குறைய கண்டீங்க, சட்டத்தைதானே சொல்லியிருக்காரு, இவரை மாதிரியான நேர்மையான அதிகார்களை நம்பிதான் ஆட்சி செய்றேன் என்று சொல்லிவிட்டு.

ரிப்பனை வெட்டுறேன், ஆனா படம் ஓட்டாத, என்று சொல்லி திறப்பு விழா செய்திருக்கார்.

( அரசியல்வாதிகள் தனிப்பட்ட கூட்டத்திற்கு சென்றால் அங்கு அரசு அதிகாரிகள் செல்ல மாட்டார்கள் என்பது மரபு)

திறப்பு விழா முடிந்தவுடன், நேரே கலெக்டர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். கலெக்டரும்,அவரது மனைவியும், வாங்க என வரவேற்க,‌ எனக்கு காஃபின்னா புடிக்கும்‌ கொண்டு வாம்மான்னு சொல்லிவிட்டு, விளையாடிக் கொண்டிருந்த கலெக்டர் பையனை வாங்க ! உங்க பேர் என்ன ?

நீங்களும்‌ அப்பா மாதிரி நேர்மை மாறாத பெரிய பதவிக்கு வரணும்னு சொல்லி காஃபியை குடிச்சிட்டு போயிட்டராம்.

இப்படி நேர்மையான அதிகாரிகளை பாராட்டிய அரசியல்வாதிகள் வாழ்ந்த பூமி இது. ( ஹூம்‌ இப்போ... )

மக்களுக்காக சட்டமேயன்றி. சட்டதிற்காக மக்கள் இல்லை.
- காமராஜர்.

இன்னும் பல்வேறு நிகழ்வுகள் படிக்க படிக்க வியப்பும், மகிழ்ச்சியும் ஒருசேர வருவதோடு, நம்மை சிறந்த மனிதராகவும் செதுக்கி விடும் வல்லமையான வாழ்வு வாழ்ந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாள் என்பது மிகவும் பொருத்தமே.

அவரது எளிமை இன்னும் பிற நற்குணங்களை பின்பற்றுவதே  அவருக்கு செய்யும் மரியாதை ஆகும்.

நேரம் வாய்க்கும்போது இன்னும் பல நிகழ்வுகளை குறித்து எழுத்து தொடரும்.

அன்புடன்.
- கோ.லீலா.
#கட்டுரை.