Sunday 8 March 2020

நீரும் பெண்ணும்



நீர் நிலைகளின் மூன்று முக்கிய பயன்பாடுகள், அழகியல் சார்ந்தது, சூழலியல் சார்ந்தது மற்றும் இதர பயன்பாடுகள் .

அழகியல் சார்ந்த பயன்பாடுகள் உங்கள் பார்வைக்கும் மனரீதியான கொண்டாட்டங்களுக்கும் மகிழ்ச்சிகளை தரக்கூடியதாகும்.

சூழலியல் சார்ந்த பயன்பாடு, நிலத்தடி நீரை அதிகப்படுத்துதல், வெள்ளத்தை கட்டுப்படுத்துதல், வனவிலங்குகளுக்கு ஆதாரமாக இருத்தல் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைப்பு செய்துக் கொள்ளுதல் ஆகும்.

இதர பயன்பாடுகள்குடிநீர் மற்றும் தினசரி பயன்பாடுகளுக்கு உரியது மீன் வளர்ப்புவிவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் மதம் சார்ந்த செயற்பாடுகள் மற்றும் மனமகிழ் செயற்பாடுகளுக்கு பயன்படுவது.


இப்படி பல பயன்பாட்டிற்கு உதவும் தண்ணீரின் ஒரே ஆதாரம் மழைதான். இந்த மழையின் அளவு மேற்பரப்பு நீராகவும் நிலத்தடி நீராகவும் இருவேறு நிலைகளை அடைகின்றன.

இதில் மேற்பரப்பு நீர் என்பது ஆறு குளம் ஏரி குட்டை மற்றும் அணைகளில் தேங்கும் நீர் ஆகும்.

இதை விடுத்து நிலத்தடி நீர் என்பது பூமிக்கு அடியில் செல்லும் நீராகும்.இதை கிணறு, ஆழ்துளை கிணறு, ஊற்று மூலம் மனிதர்கள் நாள் தோறும் சுரண்டிக் கொண்டே உள்ளனர்.

நீர் பற்றாக்குறை இயற்கையில் கிடைக்கும் நீர்வளம் குறைதல்,
இயற்கை சீரழிவுகள்,
வேகமான நகர்புற வளர்ச்சி.

மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றால் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

நீர் பற்றாக்குறை தொடர்கின்ற காலத்தில், நீரை பயன்படுத்துவோர் யார் யாரென பகுத்துப் பார்த்து, அவர்களின் நிலை, அதை சரி செய்யவேண்டிய முறைகள் யாவற்றையும் பார்ப்போம்.

·         பெண்கள்
·         விவசாயிகள்
·         தொழிலதிபர்கள்
·         தொழிற் பண்பட்டவர்

(மருத்துவர் பொறியாளர் வழக்கறிஞர்கள் மற்றும் தணிக்கையாளர்கள்)

  • சிறுதொழில் முனைவோர்
  • மாணவர்கள்
  • பொதுமக்கள்.
  • ஆ’சிரமங்கள்’

பெண்கள்
பொதுவாக கூலிப்பணிகளிலும் கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான கூலி கொடுக்கப்படுவதில்லை. 

இப்படி ஒரு சமமின்மை ஏற்கனவே சமூகத்தில் இருக்கிறது.அதோடு தண்ணீர் என்று வரும்பொழுது அந்த சமமின்மை தொடர்கிறது என்பது வருத்தம் தரும் செய்தி.

ஒரு வீட்டில் குடிநீர் சமையல்துவைத்தல்குளித்தல் மற்ற வீட்டு தேவைகளுக்கான தண்ணீரையும் குடும்ப உறுப்பினர்களுக்கான தண்ணீரையும் கொண்டுவந்து சேர்த்தல் என்பது ஒரு பெண்ணுக்கு மட்டுமேயான கடமையாக கருதப்படுகிறது. 

இதை படிக்கும் பொழுது சில ஆண்கள் நாங்களும்தான் தண்ணீர் சேகரித்து வருகிறோம் என்று சொல்லக் கூடும்எனினும் பெண்களின் பங்கு 99% உள்ளது குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளிலும்வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லக்கூடிய பல நாடுகளிலும் பெண்களுக்கு தண்ணீர் கொண்டு வரும் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது. 

குறிப்பாக இந்தியா, ஆப்பிரிக்கா,
பொலிவியா மற்றும் கென்யா போன்ற நாடுகளில் பெண்கள் பல கிலோ மீட்டர் தூரம் வெற்று காலுடன் நடந்து சென்று குடம் குடமாக அல்லது கண்டைனர் கண்டைனராக தண்ணீர் சுமந்து வரும் காட்சிகள் நாள்தோறும் இயல்பாக நடக்கிறது. 

இந்தியாவை பொருத்தவரை ராஜஸ்தானிய பெண்கள் பல மைல் தூரம் நடந்து தலையிலே அடுக்கடுக்காக குடங்களில் தண்ணீர் சுமந்து வரும் காட்சி நடைபெறுகிறது.

 They want their heads for thinking not for carrying water.

என அடிக்கடி சொல்வதுண்டு. கிட்டத்தட்ட 266 மில்லியன் மணி நேரத்தை தண்ணீரைச் சேகரிப்பதற்காக செலவிடுகிறார்கள்.

சுமார் 633 மில்லியன் மக்கள் தூய்மையான நீரற்ற நாளை எதிர்கொள்கிறார்கள். பொது இடங்களில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இருப்பதன் மூலம் மழைக்காலங்களில் கழிவுகள் பாதுகாப்பற்ற நதிகளிலும் குளங்களிலும் கிணறுகளிலும் குட்டைகளிலும் கலந்து விடும் அபாயம் இருக்கிறது. 

இந்த நீரை தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துகிறார்கள். 

இந்த நீரிலேயே‌ உணவையும் சமைக்கிறார்கள் இந்த மாசுபட்ட நீர்கூட போதுமான அளவில் பெண்களுக்கு கிடைப்பதில்லை.
மனித வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் நீர் மிக முக்கியமானது. 

உயிரியல் மற்றும் வேதியல் ரீதியாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் டயரியா, குடல் தொற்று நோய், தோல் நோய்கள் போன்றவற்றை வராமல் தடுக்கும்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் போதுமான நீர் அவசியமாகிறது.

இந்தியாபொலிவியா மற்றும் கென்யா நாடுகளில் கர்ப்பிணி பெண்கள் சிறு குழந்தைகள் பருவப் பெண்கள் இளம் மங்கைகள் என அனைத்து வயது பெண்களும் தண்ணீரை தூக்கிச்செல்லும் கடினமான வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

போதுமான தண்ணீர் வசதியற்ற இடங்களில் சிக்கும் பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்கும்போது, பருவமடைந்த பல பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிடுகிறார்கள்.

ஏனென்றால் தங்களைத்
தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு தேவையான அளவிற்கு தண்ணீரோ, கழிப்பிட வசதிகளோ இல்லை என்பதே  இதற்கு முக்கிய காரணம்.
Drop for  a Drop என இதைச்‌ சொல்ல வேண்டும்.

இதைப்போலவே ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு தேவையான அளவு தண்ணீரும்சத்தான உணவும், 
ஓய்வும் கிடைக்க வேண்டும் மாறாக ஒரு நாளைக்கு இருபதிலிருந்து அய்ம்பது லிட்டர் தண்ணீர் வரை நெடுந்தூரம் நடந்து சென்று சுமந்து வர வேண்டிய சூழல் உள்ளது.

அந்த தண்ணீரும் சுகாதாரமற்ற தண்ணீர். தண்ணீரை உட்கொள்ளும் போது தாய்க்கும், சேய்க்கும் பல நோய்களும், பாதுகாப்பற்ற வாழ்வியலும், உடல் நல குறைப்பாடுகளும் ஏற்படுகிறது.

ஆப்பிரிக்காவில்,ஒரு நாளைக்கு 16 மில்லியன் மணி நேரத்தை தண்ணீர் சேகரிப்புக்காக செலவழிக்கிறார்கள். 

ஆண்கள் 6 மில்லியன் மணிநேரமும், குழந்தைகள் 4 மில்லியன் மணி நேரமும் இதற்காக செலவிடுவதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

தண்ணீர் பிடிக்க செல்லும் பெண் குழந்தைகளை 30 நிமிடத்திற்கு பதிலாக 15 நிமிடம் மட்டும் தண்ணீர் சேகரித்தால்  போதுமென்றால், பள்ளியில் 12% வருகை அதிகரித்து விடுவதாகவும் சொல்லப்படுகிறது. 

இதைப் படிக்கும் போது இதெல்லாம் உண்மையா? அப்படி எந்த குழந்தையையும் பார்க்கவில்லையே என்று தோன்றும்.

ஆனால் நீங்கள் எண்ணுவது உண்மையில்லை, மாறாக நம்மைச் சுற்றி நாம் கவனிப்பதே இல்லை எனபதே உண்மை.

மேலும் அதீத தாகம் எடுத்தால் மட்டுமே பெண் தண்ணீர் அருந்துகிறாள்,
எனும் முகத்திலறையும் உண்மை ஒருபுறம்…





     


பெண்கள் தண்ணீர் சேகரிக்கும் பணியிலிருந்து விடுபடும் போது தன் குடும்பம்,தன் கல்வி, சுய முன்னேற்றம், சிறு தொழில் அல்லது அதிகார பொறுப்பிற்கு செல்லும் வாய்ப்புகள் மிகுதியாகவே உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.இதற்கான தீர்வை கட்டுரையின் இறுதியில் காணலாம்.

பெண் மட்டுமின்றி சாதிய பாகுபாடு, ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடுகளின் மூலமும் நீர் சமமாக பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதே வலி தரும் உண்மை. 

இதற்கு சான்றாக குற்றாலத்தில் குளிக்க தலித்துகளுக்கு உரிமை மறுக்கப்பட்ட நிகழ்வு முதல், உயர் சாதியினருக்கு என தனி குளம் அமைத்துக் கொள்ளுதல் வரை இந்த ஏற்றத் தாழ்வுகள் புரியும்,பணம் படைத்தோர் காசுக்கு தண்ணீரை வாங்கி விடுகின்றனர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு மாசடைந்த நீர்  குறைந்த அளவில்தான் கிடைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.



தண்ணீர் மாசு மற்றும் பற்றாக்குறையை சரி செய்வது பற்றி பின் காண்போம்.

தொழிலதிபர்கள்.

சமூகத்தின் முன்னேற்றம் என்பது தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் உள்ளதாக எண்ணுகிறோம். அப்படி வளர்ந்து விட்ட தொழிற்சாலைகளுக்கு சில கட்டுபாடுகளும்,சூழலியல்சான்றிதழும்,கழிவுப் பொருட்களை சுத்திகரிப்பு செய்து பின் வெளியிட அனுமதியென பல்வேறு கட்டுபாடுகள் இருந்தாலும், தொழிலதிபர்களின் அலட்சியத்தால்,அனைத்து கழிவுகளும் சுத்திகரிக்கப்படாமல் நீர்நிலைகளில் விடப்படுகிறது.

இதன் மூலம் மிக விஷத்தன்மை வாய்ந்த பொருட்கள் தண்ணீரில் கலந்து தண்ணீரை மாசடைய செய்வதோடு நீர் வாழினங்களை மடிய செய்கின்றன.

எடுத்துக்காட்டாக நொய்யலாற்றை சொல்லலாம்.
ஆறுகளைப் போலவே,கடலிலும் எண்ணற்ற கழிவுகளை கொட்டுகின்றனர், குறிப்பாக  E-waste  அதிகம் கொட்டப்படுகிறது.கடலின் சூழல் கெடும் போது, மற்ற எல்லா சூழலும் கெட்டுவிடும்,கடலிக் குறித்த தட்டையான பார்வையே பலரிடம் இருப்பதால்,இத்தகைய நிலை இன்னும் போதிய கவனம் பெறவில்லை.

தொழிற்சாலைகளின் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை நீரில் விடுவதால், அக்கழிவுகளில் உள்ள பொருட்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.நேரடியாக தண்ணீரை உட்கொள்ளுதல் மற்றும் குளிக்கப்பயன்படுத்துதல் மூலமும், அத்தண்ணீரில் வாழும் மீன்,நண்டு போன்றவற்றை உட்கொள்வதாலும் பல நோய்கள் வருகின்றன.


தோல் நோய்,புற்றுநோய்,வரம்பு மண்டல பாதிப்புகள் என பல்வேறு நோய்கள் வர காரணமாக உள்ளது.

குறிப்பாக தோல் பதனிடும் தொழிற்சாலை பகுதிகளில் உள்ள தண்ணீர் ஆரஞ்ச் வண்ணத்தில் இருக்கும்,தண்ணீரில் அதிக அளவு குரோமியம் இருந்தால் தண்ணீர் இவ்வண்ணத்தில் இருக்கும்,இதனால்நுரையீரல் புற்றுநோய்,மற்றும் பல் சம்பந்தமான நோய்கள் வரும்.
மனிதர்களை மட்டுமின்றி, மண்ணையும் மலடாக்கும் தன்மைக் கொண்டவை தொழிற்சாலை மாசுகள்.

கழிவுகள் மட்டுமல்லாது,தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருட்களுக்காக செலவிடப்படும் நீரும் அதிகம் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.எனினும் வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் என்று வரும் போது நான் சொல்லும் வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

Development Vs Environment-No
Development and Environment-No
Develop the Environment-yes
என்பதுதான் அந்த வாசகம்.

தொழிலதிபர்கள் பலர் முறையான சுற்றுச்சுழல் பாதுகாப்பிற்கான மாசுக் கட்டுப்பாட்டினை செயவதில்லை என்பதே உண்மை.

  • தொழிற் பண்பட்டவர் (மருத்துவர்,பொறியாளர்,வழக்கறிஞர்கள் மற்றும் தணிக்கையாளர்கள்)                                               
மருத்துவர்கள்.

என்னப்பா இது ஊருக்கே மருந்து தர்றவங்க, தண்ணீய என்ன செய்யப் போறாங்கன்னு தானே கேட்கிறீங்க….இதோ கேளுங்க.
ஊரில இருக்குற அத்தனை பேரும் புள்ளைய டாக்டருக்கு படிக்க வைக்கணுமின்னு ஆசைப்படுறாங்க ஆனா யார் ஊசிப் போட்டுப்பா? சரி அத விடுங்க விசயத்துக்கு வருவோம்.

பழைய காலத்தில் ஊசிப் போட்டு திரும்ப தண்ணீரில் கழுவி மீண்டும் ஊசிய மட்டும் மாத்தி சிரிஞ்ச பயன்படுத்துவாங்க,அந்த தண்ணீரைப் பூமியில் தான் ஊற்றுவார்கள்,அதே போல் டெட்டால் போட்டு கை கழுவும் தண்ணீரும் பூமிக்குதான் போகும்,அப்படி பூமிக்கு போகும் தண்ணீரில் இருக்கும் வேதியியல் பொருட்கள் பூமியில் தங்கிடும்.

அது மட்டுமில்லை,பெரிய பெரிய அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பின்னால் போய் பார்த்தீங்கன்னா மலை மலையா சலைன் பாட்டில் குவிஞ்சிருக்கும், கீய்ட்ட்தட்ட 200-300 மீட்டர் நீலத்துக்கு மூணு மீட்டர் உயரத்திற்கு எல்லாம் ஒரு குவியல் இருக்கும்,இதனால் என்ன பிரச்சனை என்றுதானே கேட்கிறீர்கள்.
இந்த பாட்டில்கள் எல்லாம் ப்ளாஸ்டிக் என்று சொல்ல்க்கூடிய நெகிழிப் புட்டிகள்,இதன் மீது பெய்யும் மழை பூமியை சென்று சேராது,அதனால் நிலத்தடி நீர் செறிவூட்டல் தடைப்படுவதோடு,அப்பகுதி மண்ணின் வளமும் பாதிக்கப்படும்.
மேலும்,மழைநீர் இதன் மேல் தேங்கி கிடப்பதால் பல சுகதார கேடுகளுக்கும் காரணமாகி விடுகின்றது.
நெசவுத் தொழில் எனும் போதே நினைவிற்கு வருவது நொய்யலாறு, சாயப்பட்டறைகளின் கழிவால் இன்று ஒரு ஆறே உருமாறிக்கிடக்கிறது. அதில் விழும் வரத்து நீரின் தன்மையும் கெட்டு விடுகிறது.அப்படி என்னதான் உற்பத்தி செய்கிறார்கள்.அத்தகைய உற்பத்தியிமன் மூலம் நாட்டின் வறுமை ஒழிந்து விட்டதா?
பின்னலாடை தொழிற்சாலைகளை ஏன் வெளிநாடுகளில் நிறுவிக் கொள்ளாமல் நம்மிடம் கொடுத்தார்கள்,எதையும் தொலைநோக்கு பார்வையுடன் காணத் தவறி விடும் நம் அரசியல் கட்டமைப்பு தான் இதற்கு காரணம்.தமிழ்நாடு மட்டுமின்றி இன்னும் பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகளின் மரணம் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.
பொறியாளர்கள்.
மின்னணு பொறியாளர்கள் E-WASTE  எனும் மி-குப்பைகளை உருவாக்கி விடுகிறார்கல்,அதை மறுசுழற்சி செய்வது அரிதான காரியம்.இந்த குப்பைகளை கடலில் கொட்டிவிடுகிறார்கள். கடல்வாழ் உயிரின்ங்கள் பாதிக்கப்படுவதோடு,அக்குப்பைகளில் உள்ள விலையுர்ந்த சில கனிமம் மற்றும் தனிமங்களை பிரித்தெடுக்க தனி நபர்கள் செய்யும் முயற்சியாலும் சுற்றுச் சூழல் மாசடைகிறது.
சமூகப் பொறியாளர்கள்.(சிவில்)
தண்ணீரை காப்பதிலும்,அதை அழிப்பதிலும் இவர்கள் சமபங்கு வகிக்கின்றனர்,ஆறு,குளம்,ஏரி,வாய்க்கால்,கண்மாய்,போன்றவற்றை ஒரு புறம் பராமரித்தாலும்,நிலத்தில் அதிக கட்டிட வேலைகளை மேற்கொள்வதும் இவர்களே.சிமிண்ட் கலவை போடும் போது (BOTH BY MACHINARIES(INCLUDING RMC) AND MANUAL) குறைந்த்து 25-40 சதுர அடி நிலம் சிமிண்ட் மற்றும் ஜல்லிகளால் ஆக்கிரமிக்கப் படுவதோடு,கலவை கலந்த தண்ணீர்,சிந்தும் கலவையென பூமீன் மேற்புறம் சிமிண்ட் கலவைக் கொண்டு பூசப்பட்டது போல் ஆகிவிடும்.இதனால் சிமிண்டின் பகுதி பூமியின் உள்ளிறங்க வாய்ப்பாகி விடுவதால் நிலத்தடி நீர் மாசடைவதோடு.மேற்புரம் நாளடைவில் கெட்டித்தன்மை பெறுவதால்,மழைக்காலங்களில் நிலத்தடி நீர் செறிவூட்டல் தடைப்படுகிறது.
நிலத்தின் பெரும் பகுதிகளில் கட்டிடங்களை கட்டுவதன் மூலம், மரம்,செடி,கொடிகளை அழிப்பதும்,இன்னும் வனம் ஒட்டிய பகுதிகளில் வனத்தை சூறையாடும் போக்கும் கானப்படுகிறது இதனால்,காலநிலை மாற்றம் ஏற்படுவதோடு,பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது.

அதே போல்,அணை,சிற்றணை போன்ற கட்டமைப்புகள் செய்யும் போதும் வெட்டப்படும் மரங்களின் சிறு சிறு கிளைகள் அங்கேயே விடப்படுவதால் நாளடைவில் தேங்கும் தண்ணீரில் அழுகி மீத்தேன் வாயுக்களை உருவாக்கி விடுகிறது.இதன் மூலம் பூமி வெப்ப மயமாக்கப்படுகிறது.இதை அருந்ததி ராய் அவர்கள் வெகு விரிவாக தன் புத்தகமொன்றில் எழுதியுள்ளார்கள்.
இப்படி துறைவாரியாக சொல்லிக்கொண்டே போகலாம்.

  • சிறுதொழில் முனைவோர்
சிறு தொழில் செய்வோர்களும் விதி விலக்கல்ல,தான் செய்யும் உற்பத்தி பொருளின் கழிவுகளை அருகில் இருக்கும் நீர் நிலைகளில் விட்டுவிடுவார்கள்.குறிப்பாக இறைச்சி கடைகள் வைத்திருப்போர் இறைச்சியின் கழிவுகளை ஆற்றில் அல்லது அருகில் செல்லும் வாய்க்காலில் கொட்டிவிவுகின்றனர்,இதன் மூலம் நீர் மாசடைவதுடன், பல் வேறு சுகாதார கேடுகளும் விளைகின்றன.
  • மாணவர்கள்.
நீர்நிலைகளைப் பற்றிய விரிவான விழிப்புணர்வு இவர்களுக்கு மிகத் தேவை ஏனெனில்,வருங்காலத்தில் இவர்கள் தான் நாம் செய்கிற தவறுகளால் வரும் விளைவுகளை  சந்திக்கப் போகிறவர்கள். இவர்களால் நீர்நிலைகளுக்கு பெரும் பாதிப்பு இல்லை. என்றாலும் நீர்நிலைகளை பராமரிக்கவும்,நீரை விரயம் செய்யாமலிருக்கவும் இவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்,பல் துலக்கும் போது,சவரம் செய்யும் போது,குளிக்கும் போது  குழாய்களை திறந்து விட்டு  எத்தனை நேரமானாலும் இவர்களின் வேலை முடிந்தப் பின்னரே குழாயை மூடும் பழக்கம் கொண்டவர்களாக பலர் இருக்கின்றனர். பெற்றோர்கள் சில நீர் சிக்கன வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம்,அதைப் பார்க்கும் குழந்தைகளும் கடைபிடிப்பர்.
என் மகள் இன்றும் கூட இரு தம்பளரில் தண்ணீரை தேவையான போது பிடித்து வைத்துக்கொண்டு பல்துலக்கும் வழக்கம் உடையவர்.தேவைப்பட்டால் மீண்டும் தண்ணீரை குழாயிலிருந்து சேகரித்துக்கொண்டு குழாயை மூடிவிடுவார்.
உணவு பொருட்களை வீணடிப்பதன் மூலம் தண்ணீர் எப்படி வீணாகிறது என்பதையும் நாம் தான் சொல்லித் தர வேண்டும்.


  • பொதுமக்கள்.
நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டுவது,பின் வீட்டு கழிவுகளை அருகில் உள்ள நீர்நிலைகளில் விடுவது என இவர்கள் நீர்நிலைகளை அழிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
பல ஊர்களில் பணியாற்றி இருக்கிறேன்,எல்லா ஊர்களிலும் ஒன்று போல் ஊரின் உள் ஓடும் ஆறு அல்லது வாய்க்கால்கள் ஊர் பொது சாக்கடையாக மாறியிருப்பதை காணலாம்.அதோடு நீர்நிலைகளை ஆக்ரமித்து வீடு கட்டுதல்,அவர்களின் தொழிற்சார்ந்த கட்டிடங்களை கட்டுவது,தன்னுடைய வயல்,அல்லது தோப்புகளை நீர்நிலைகளை அழித்து உருவாகுதல் என பல்வேறு செயல்பாடுகள் நீர்நிலைகளை அழிக்கவும்,மாசடையவும் செய்கின்றன.

  • ஆசிரமங்கள்
ஆ பெரிய சிரமங்கள் தருகின்றன இத்தகைய ஆசிரமங்கள். நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தல்,காடுகளை அழித்தல் என பல்வேறு செயல்களுடன்,வழிப்பாடு என்ற பெயரில் பெரும் கூச்சல்,வெளிச்சம் என உருவாக்கி கானூயிர்களை காட்டிலிருந்து துரத்துதல் என பல்வேறு அடாத செயல்கள் செய்கின்றன இத்தகைய ஆசிரமங்கள்.

தீர்வுகள்.

  • பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் சேர்ந்து தூய்மையான தண்ணீரை பெறுவதற்கான வழிவகைகளை காண வேண்டும்,விழிப்புணர்வு பெற வேண்டும்.தன் தேவைக்கான குரலைக் கொடுக்க வேண்டும்.பெண்கள் தன் வேலை பளுவை பகிர்ந்துக் கொள்ள வேண்டும்,பெண்கள் தண்ணீர் தனக்கான உரிமை என்பதை உணர வேண்டும்.தண்ணீரைக் குறித்த கல்வியறிவு பெற வேண்டும்.

  • விவசாயிகள் இயற்கை வேளாண்மை,அங்கத வேளாண்மை,குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்தல்,இரசாயன உரங்களை தவிர்த்தல்,அரசு அளிக்கும் பயிற்சி முகாம்கலில் கலந்து கொள்ளுதல்,அதை யாவருக்கும் சொல்லி தருதல் வேண்டும்.தண்ணீர் திருட்டை முற்றிலுமாக தவிர்த்தல் வேண்டும்.நீர்நிலைகளை உடைத்தல்,ஆக்கிரமித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

  • தொழிலதிபர்கள்,சுற்றுச்சூழல் சட்டங்களை மதித்தல்,மதிக்காதவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்தல்,உள் நாட்டு வளங்களை பாதிக்காமல் தொழில் செய்ய உறுதிமொழியினை அரசு பெறுதல்.

  • தொழிற் பண்பட்டவர்.
விழிப்புணர்வு பெறுதல்,வளர்ச்சியும்,சுற்றுச்சூழல் இரண்டும் சமமாக இருக்க வேண்டுமென்றாலும்,சுற்றுச்சூழலின் வளர்ச்சியை கருத்தில் கொள்ளுதல்.
நீர்வள ஆதார துறை பொறியாளர்கள்,ஒவ்வொரு பாசன காலத்திற்கு முன்னும் water budgeting செய்தல்,அதை முறையாக அட்டவணையிட்டு செயல்படுத்துதல் போன்றவற்றை இன்னும் நேர்த்தியாக செய்தல் வேண்டும்.
மருத்துவர்கள் மற்ற தொழிற் பண்பட்டவர்கள்,கழிவு நீரை சுத்திகரிக்க பொறியாளர்களை அணுகி அதற்கான அமைப்பினை செய்துக் கொள்ள வேண்டும் தவறும் பட்சத்தில்,தண்டனை,தண்டம் கட்டுதல் போன்றவற்றை அரசு நடைமுறைக்கு  கொண்டு வருதல் வேண்டும்.

  • மாணவர்கள்.
தண்ணீரை சிக்கன்மாக பயன்படுத்தும் வழிகளை பின்பற்றுதல் வேண்டும்,உணவுகளை வீனடிப்பதை தவிர்க்க வேண்டும்,காகிதங்களை வீண் செய்யக்கூடாது.மாணவர்கள் குழுக்களாக இணைந்து உள்ளூரில் உள்ள நீர்நிலைகளை தூர்வாருதல்,மேம்படுத்துதல் போன்றவற்றில் ஆர்வமுடன் செயல்பட வேண்டும்.

  • பொதுமக்கள்.
அரசே அனைத்தையும் செய்ய் வேண்டுமென எண்ணாமல்,சுய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவதை தவிர்த்தல்,செடிகளுக்கு மாலையில் தண்ணீர் ஊற்றுதல் என சில சின்னஞ்சிறு தீர்வுகளையும்.
சில தீர்க்க முடியாத சிக்கல்களை அரசின் அல்லது அரசு சார்ந்த துறைகளின் நேரடி கவனிப்புக்கு கொண்டு செல்லுதல் போன்றவற்றையும் செய்ய வேண்டும்.

  • ஆசிரமம்
பணப் பலம்,ஏனைய மற்ற பலங்களை காட்டி நீர்நிலைகளை ஆக்கிரமித்தல்,காடுகளை அழித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.இவர்கள் அதை மீறும் பட்சத்தில்,சட்டம் பராபட்சமின்றி நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
பொதுவாக கடைப்பிடிக்கப்பட வேண்டியது:
மழைநீர் சேகரிப்பு குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.அனைத்து கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்தலை கட்டாயப்படுத்த வேண்டும்.தவறியவர்களுக்கு அவர்களுக்கான தொழில் அல்லது வாகன உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சின்னஞ் சிறு  தீர்வுகள்.
1.உணவை வீண் செய்யாதீர்கள்.வீணாகும் உணவு பொருட்களின் வழியே மறை நீரை வீண் செய்கிறோம்.

2.உணவகங்களுக்கு சென்று உண்ணும் போது,ஒவ்வொரு உணவிற்கும் ஒவ்வொரு தட்டை பயன்படுத்தாதீர்கள்.உணவு பரிமாறுபவரிடம் பொறுமையாக அவருக்கு புரியும் வண்ணம் சொல்லுங்கள்.
ஏனென்றால்,பிரபலமான உணவகத்தில் தட்டுகளை மட்டும் கழுவ ஒரு நாளைக்கு பயன்படும் தண்ணீரைக் கொண்டு ஒரு பகுதிக்கே ஒரு நாளைக்கான தண்ணீராக பயன்படும்.

3.விழாக்களில் தண்ணீர் பாட்டில் வைக்காதீர்கள்.குடித்தது போக மீதம் வைக்கப்படும் தண்ணீர் வீணாகிவிடும்.

4.பள்ளியிலிருந்து குழந்தைகள்,மற்றும் வெளியில் சென்று வீடு திரும்பும் அனைவரின் தண்ணீர் பாட்டிலிலும் உள்ள தண்ணீரை சேகரித்து செடிகளுக்கு ஊற்றுங்கள்.

5.பல் சுத்தம் செய்யும் போது,சவரம் செய்யும் போதும் குழாயினை முழுவதும் திறந்து வைக்காதீர்கள்.தேவைப்படும் போது மட்டும் திறந்து கொள்ளுங்கள்.

6.தண்ணீர் எங்கு வீணாகி கொண்டிருந்தாலும்,உடனடியாக அதை நிறுத்த ஏற்பாடு செய்யுங்கள்.

7.துணிகளை இயந்திரத்தில் துவைப்பதாக இருப்பின்,இயந்திரந்தின் முழு கொள்ளவிற்கு துணிகளை போட்டு துவையுங்கள்.வெளியில் செல்ல வேண்டுமென்பதற்காக குறைந்த அளவு துணியை துவைக்காதீர்கள்.

             Description: https://2.bp.blogspot.com/-jamutzNGfV0/WLxSW7HEpOI/AAAAAAAAOAg/4693iJRURlM9xlaCgCApy9GlOxyCBsWYwCLcB/s400/water113.jpg
8.முடிந்த அளவு மின்சாரத்தை குறைவாக பயன்படுத்துங்கள்,ஏனெனில் மின்சார சிக்கனம் மறைமுகமாக தண்ணீர் சிக்கனம் ஆகும்.
9.Car pooling என்ற முறையை பயன்படுத்துங்கள்.அதாவது ஒரு நபருக்காக ஒரு காரை பயன்படுத்தாதீர்கள்.முடிந்தவரை ஒரே அலுவலகம், பள்ளி என செல்பவர்கள்ஒரே காரில் செல்லலாம் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொருவரின் காரினை சுழற்சி முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் இதன் மூலம் வாகனம் வெளியிடும் புகையை நம்மால் முடிந்த வரை கட்டுப்படுத்தலாம்.             

10.பிறந்தநாள் பரிசாக மரக்கன்றுகளை பரிசளியுங்கள்,சிறப்பாக பராமரிப்பவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக பாராட்டு,மற்றும் ஊக்கப் பரிசுகள் வழங்கலாம்.

11.கல்லூரிகளில் ஒவ்வொரு மாணவ,மாணவியருக்கும் ஒரு மரக்கன்றுகளை பரிசளித்து,அவர்களின் படிப்பு முடியும் வரை பராமரித்து,வெளி செல்லும்போது உள் வரும் புது மாணவர்களுக்கு ஒப்படைக்கலாம்.இதன் மூலம் மரங்களில் காதல் கதைகளை செதுக்கி,பின்னொரு நாளில் பார்க்கும் போது சோகமோ,மகிழ்வோ கொள்வதை விட,நான் வளர்த்த மரமென்ற பெருமையுடன் பின்னொரு நாளில் நம் குடும்ப உறுப்பினர்களிடம் பெருமையுடன் கூறலாம்.

12.உங்கள் வீட்டில் ஒழுகிக் கொண்டிருக்கும் குழாய்களை உடனுக்குடன் சரி செய்யுங்கள்.

13.கழிவறைகளில் half flush முறையை பயன்படுத்தும் வகையாக பொத்தான்களில் வித்தியாசம் வையுங்கள்.ஏனெனில் ஒரு நாளைக்கு5-12 லிட்டர் தண்ணீர் இதற்கே செலவாகிறது.

14.தோட்டங்களுக்கு மாலை அல்லது பின் மாலை பொழுதுகளில் நீருற்றுங்கள்.

15.மூடாக்கு எனும் முறை,அதாவது செடிகளிலிருந்து விழும் இலை, தழைகளை அங்கேயே விட்டுவிடுங்கள்,வெங்காயத் தோல்,மஞ்சி,இன்னும் பிற தண்ணீரை நிறுத்தி வைக்கும் பொருட்களை கொண்டு மூடாக்கு போட்டு தோட்டங்களை பராமரிப்பதன் மூலம் தண்ணீர் செலவு குறையும்.

16. சமையலறையிலிருந்து வெளிவரும்  தண்ணீரைப் போன்ற கழிவு நீரினை தோட்டங்களுக்கு விடுங்கள்,அதில் நைட்ரஜன் அதிகமாக இருக்கும்.

17. தண்ணீர் அதிகமாக தேவைப்படும்பணப் பயிர்களை தவிர்த்து,தண்ணீர் குறைவாக தேவைப்படும் சிறுதானிய வகைகளை பயிரிடலாம்.

18.சுற்றுலா செல்லும்பொழுது பிளாஸ்டிக் பைகளை ஆங்காங்கே போடாதீர்கள், அதை உண்ணும் வனவிலங்குகள் உயிரிழக்கும்,வனவிலங்குகள் இருந்தால்தான் காடும்,நீரும் இருக்கும். கண்ணாடி பாட்டில்களை உடைத்துப் போடாதீர்கள்,அது கானுயிர்களின் உடலில் காயங்களை ஏற்படுத்தும்.

19.எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகளுக்கு நீரின் அவசியத்தையும், அதனை பாதுகாக்கும் முறைப்பற்றியும் சொல்லிக் கொடுங்கள்.

20.நம்மால் இதையெல்லாம் செய்ய முடியுமா என யோசிக்கமால்,முடியும் என நம்புங்கள்.நெகிழிகளை தவிர்த்து விடுங்கள்.

அன்புடன்
- கோ.லீலா