Wednesday 26 May 2021

தமிழிசைக்கருவி -1

குடமுழா/ பஞ்சமுக வாத்தியம். 
**************************************

 பறவைகளின் கீச்சொலிகளோடு, எழும்போதே காவேரியாற்றங்கரையின் நினைவுகள் உள்ளுக்குள் இசைக்க தொடங்கி விட்டது... 

ஏதேதோ நினைவுகள்.... 

 காவேரி மண் கவிதைகளையும், கதைகளையும் மட்டுமா சுமந்து மணக்கிறது? 

 இயல், இசை, நாடகம் அத்தனைக்கும் பிறப்பிடமல்லவா, வீரம் செறிந்த காதலோடு கலை பல பயின்ற மாந்தர்களை படைக்கும் காவேரியை நினைக்க... 

 காவேரியாறு கொடுத்த கொடையல்லவா.... 

கம்பர், ஒட்டக்கூத்தர்,இளங்கோவடிகள், கல்கி, தி.ஜா, கு.ப.ரா, கு.ப.சேது,க.நா.சு, ந.பிச்சமூர்த்தி, கரிச்சான் குஞ்சு, தஞ்சை ப்ரகாஷ், எம்.வி.வெங்கட்ராமன், தேனுகா, திரிலோக சீத்தராம், ந. விச்சுவநாதன், வாலி, சுஜாதா... என நீளும் வரிசையில் இன்று என்னை இசைக்கிறது காவேரியோர இசை. 


     பயிருக்கு மட்டும் மண்ணை பிரித்தால் போதாதா? படைப்புக்குமா மண்ணை பிரிக்க வேண்டும் என்ற கேள்வி என்னுள் எப்போதும் உண்டு, எனினும் பிறந்த மண்ணின் இசை மீட்டும்போது மயங்காதிருக்க முடியுமா? 

 காலையில்துயிலெழும்போதே திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் சாயரட்சை ( காமிக) பூஜையில் இசைக்கும் குட முழா ( ஐமுக வாத்தியம்/ பஞ்சமுக வாத்தியமும்) பாரி நாயனமும், பிரம்ம தாளமும் என்னுள் இசைக்க தொடங்கி விட்டன... 


குடமுழா/பஞ்சமுக வாத்தியம்.




 சிறுவயதில் கேட்டு, ரசித்த யாவும்,கொள்கைகளை புறந்தள்ளும் ஆற்றலுடையவை. 

 இசையும், இலக்கியமும் இசைந்து கொடுக்க அவற்றை சிற்பமாக்கி கொண்டன, திருவாரூர், தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், கும்பகோணம், தாராசுரம், ஸ்ரீ ரங்கம் கோயில்கள். 

 அவற்றை வரைந்து கொண்டன கோயில் கூரைகளும், தஞ்சைதட்டு ஓவியங்களும். 

 இசைகருவியையும், சிற்பங்களையும் செய்யும் ஓசையில், இசை சுருதி பிசகமால் தாளமிட காவிரியோடு கரகமும், பொய்க்காலும் ஆனந்த கூத்தாடின. 

 கி.பி 2 ம் நூற்றாண்டிலேயே வடிவமைக்கப்பட்ட தோல் இசைக்கருவி‌ என ஆய்வுகள் சொல்கின்றன. 

குடமுழா, இப்போதும் வாசிக்கப்படுவது இரண்டு இடங்களில்தான். ஒன்று திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், இன்னொன்று திருத்துறைப்பூண்டியில் உள்ள பிறவி மருத்தீஸ்வரர் கோயில்.திருவாரூர்பலவற்றுக்கு பெயர் பெற்ற ஊர், திருவாரூரில் பிறந்தேன் எனும் பேறு பெரிதென உவக்கிறேன். 

 சங்க கால இசைக்கருவியை நேரில் பார்த்து இசை கேட்டு வளர்ந்திருக்கிறேன், அந்த கருவியை தொட்டுப் பார்த்திருக்கிறேன்.


 தியாகராஜ பிரம்மம், முத்துசாமி தீட்சிதர், ஷியாமா சாஸ்திரிகளின் மும்மூர்த்தி சபாவை தினசரி கடந்திருக்கிறேன், தமிழகத்தில் போற்றி வளர்க்கப்பட்ட இவர்கள் ஒரு கீர்த்தனையை கூட தமிழில் இயற்றவில்லையே என்ற எண்ணம் எப்போதும் என்னுள்‌தோன்றும்.

 கர்நாடக இசையும், தமிழிசை இரண்டுமே பிடிக்கும் என்றாலும், இரண்டும்‌ ஒரே நேரத்தில் நடந்தால், தமிழிசை, மற்றும் கிராமிய இசை கேட்கவே செல்வேன். 


 சோழர்களின் இசைஞானத்திற்குதாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் பலிபீடத்தில் அமைந்துள்ள பத்து இசைப் படிக்கட்டுகளைக் கொள்ளலாம். இவற்றை ஒவ்வொன்றாக தட்டும்போது ச,ரி,க,ம,ப,த,நி,ச என்ற சங்கராபரண இசையொலி எழுகின்றது. மதுரை மீனாட்சியம்மன் மற்றும் சுசீந்திரம் ஸ்தாணுமால்ய ஸ்வாமி கோயில்களில் உள்ள இசைத் தூண்களுக்கு இந்த இசைப் படிக்கட்டுகளே முன்மாதிரியாகத் திகழ்ந்தன. 

 இலக்கியத்தில் குடமுழா
********************************** 

 தா,தாம், தீம், நாம் எனும் இசையெழுப்பும்குடமுழா பற்றி சிறுபாணாற்றுப்படை, பெருபாணற்றுப்படை, மதுரைக் காஞ்சி, மலைபடுகடாம், அகநானூறு,கலித்தொகை, ஐங்குறுநூறு, குறுந்தொகை,பதிற்றுப்பத்து, பெருங்காதை, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, தேவாரப் பதிகம், ஆழ்வார் பாசுரங்கள், கல்லாடம், திருப்புகழ் போன்ற பல்வேறு சங்க இலக்கிடம் மற்றும் பக்தி இலக்கிடத்திலும் குடமுழவுப் பற்றிய செய்திகள் கிடைக்கப்பெறுகின்றன. 

 சில... 
 வண்டணை கொன்றை வன்னியு மத்தம் 
மருவிய கூவிளம் எருக்கொடு 
மிக்க கொண்டணி சடையர் 
விடையினர் பூதங் கொடுகொட்டி குடமுழாக் கூடியு 
முழவப் பண்டிகழ் வாகப் பாடியோர் 
வேதம் பயில்வர்முன் பாய்புனற் 
கங்கையைச் சடைமேல் வெண்பிறை சூடி 
உமையவ ளோடும் வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 
1.75.4 

 🌷 


 விட்டிசைப் பன கொக்கரை கொடு 
 கொட்டி தந்தளகம் 
 கொட்டிபாடுமித் துந்துபி யொடு 
 குடமுழா நீர் மகிழ்வீர். 

 என அப்பர் அடிகள் தேவராத்தில் குடமுழவு கேட்டு, ஆரூர்கூத்தன் உவகை கொண்டாடியதை விவரிக்கிறார். 

 மேலும், 
 தொண்டைவாய் உமை ஓர் பாகம் கூடுமே; 
குடமுழவம், வீணை, தாளம், குறுநடைய சிறு 
 பூதம் முழக்க, மாக்கூத்து ஆடுமே; 
அம் தடக்கை அனல் ஏந்து(ம்)மே;- 
அவன்ஆகில் அதிகைவீரட்டன் ஆமே. 

 என ஆறாம் திருமுறை தேவார பதிகத்தில் குடமுழா எனும் இசைக்கருவியை பற்றிய குறிப்புகள் உள்ளன. 

 சிற்பங்களில் குடமுழா 
******************************* 

 வங்கநாட்டுப் பாலர்கள், கங்கர்கள், காகதீயர்கள், மேலை மற்றும்‌ கீழை சாளுக்கியர்களின் சிற்பங்களிலும் ஆடல்வல்லனுக்கு/சிவனின் நிருத்த சிற்பங்களுக்கு முன்பாக குடமுழா வாசிக்கப்படுவது போன்று சிற்பங்களில் குடமுழா அமைக்கப்பட்டுள்ளது.‌இதன் மூலம், குடமுழா பிரபலமான இசைக்கருவியாக இருந்ததும், இதை பல்வேறு பகுதியை சேர்ந்த மக்களும்‌ போற்றி கொண்டாடி இருந்ததற்குமான சான்றாக சிற்பங்கள்‌ இருக்கின்றன...

 🌷 

 குறிப்பு : நிருத்தம் என்பது பரதநாட்டியத்தில் சுத்தநடனம் ஆகும். இது உடல் அழகையும், உடலின் அழகிய அசைவுகளையும், தாளத்தின் மிகநுணுக்கமான அளவைகளையும், கைகள், விரல்களின் அழகான முத்திரைகளையும், பாதஜால வித்தைகளையும் இசை, அதன் தாள மெல்லின வல்லினங்களையும் உருவகப்படுத்தும் ஒரு கலையாகும். 🌷 

 திருவலஞ்சுழி கோயில் விதானத்தில் குடமுழா இசைப்பது போன்றொரு ஓவியம் உள்ளது, அது தஞ்சை நாய்க்கர் காலத்தில் வரையப்பட்டதென அறியப்படுகிறது. 

கங்கைகொண்ட சோழபுர சிற்பம்.


 தரங்கம்பாடி,செந்தலை, கங்கைகொண்ட சோழபுரம், திருப்புள்ளிருக்குவேளூர் என்ற பெயருடைய வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் தென்திருவலங்காடு ஆகிய சிவாலயங்களில் ஆடல் வல்லானின் முன்பு வாசிக்கப்படுவதாக இருக்கிறது இப்படி, பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட இக்கருவி ஆடலுக்கு இசைக்க கூடிய கருவியாக இருந்திருக்கிறது. 

 ஆக்கல் – சதியோஜாதம்- மேற்கு 

காத்தல் – வாமதேவம்- வடக்கு 

அழித்தல் – அகோரம் – தெற்கு 

மறைத்தல் – தத்புருஷம் –கிழக்கு 

அருளல்- ஈசானம் – வானம் 

 ஆகிய மேற்கூறிய அய்ந்து செயல்களை குடமுழா குறிப்பதாக சொல்கிறார்கள். 

 இது பஞ்ச உலோகத்தால் ஆகியது. அதன் அடிப்பகுதி கடம் என்னும் வாத்தியம் போல பெரிய பானை வடிவத்தில் இருக்கும். அதற்கு ஐந்து முகங்கள் உண்டு. அவை ஒவ்வொன்றும் வட்ட வடிவில் இருப்பதால் அதை வட்டத் தட்டு என்பர். இதைப் பசுத்தோல் போற்றி மூடி இருப்பர். ஒவ்வொரு முகத்தின் – வட்டத் தட்டின் – மீதும் மூடப்பட்டதோலின் கனமும் வேவ்வேறு அளவில் இருப்பதால் இது வெவ்வேறு ஒலியை எழுப்பும். 

அதாவது ஐந்து முகங்களும் ஐந்து விதமான ஓசையை எழுப்பும். ஒவ்வொரு‌ முகத்தின் கழுத்தின் அளவிற்கு ஏற்பவும், கட்டப்பட்டிருக்கும்‌ மான் தோலின் தடிமனுக்கு ஏற்பவும் இசை எழுப்பும். 

குடமுழா பற்றி குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் எழுதிய "குடமுழா" என்ற நூலில் விரிவாக இருக்கிறது. 

தஞ்சை பெரிய கோயிலை விடவும், திருவாரூர் பெரியகோயில் மனதிற்கு நெருக்கமானது, இறைவனை தேடி எல்லோரும் அங்கு போனபோது, நான் மட்டும் அங்கு இசையை, சிற்பங்களை, கதைகளை, புல்வெளியை, கோயில் கோபுரத்தில் இருந்து படபடத்து பறக்கும்‌ புறாக்களை தேடி இருக்கிறேன். 

இக்கருவியை பாராசைவர்களான முட்டுக்காரர்கள் தான் வாசித்து இருக்கிறார்கள். கடைசியாக முட்டுக்காரர் சங்கரமூர்த்திதான் இருகோயில்களின்‌ குடமுழாவையும்‌ வாசித்து இருக்கிறார். தற்சமயம் அக்கலை அழிந்து விடக்கூடாது என முட்டுக்காரர் வழி வந்த தேவமங்கை எனும்‌பெண் குடமுழாவை வாசித்து வருகிறார். 

இன்று, கொரோனாவால், குடமுழா இசைக்கப்படவில்லை... 

எத்தனை தாண்டவங்கள், விழாக்கள், ராஜ உபசரணைகள், பூஜைகள் என கொட்டி முழக்கிய இசைக்கருவிகள் மூலையில் கிடக்கலாமோ?

 இப்படி மறக்கப்பட்ட ஒவ்வொரு தமிழிசைக் கருவிகளும் மௌனமாக பல்லாயிரமாண்டு வரலாற்று நிகழ்வுகளை இசைத்துக் கொண்டிருக்கின்றன... 

நாளை கெத்தா வர்றேங்க... 

அட கெத்து அப்படிங்கறது ஒரு இசைக்கருவியோட பேருங்க. 

அன்புடன் - கோ.லீலா.