Sunday 9 December 2018

பொழுதுக்கால் மின்னல்.

பொழுதுக்கால் மின்னல்.
 ==========================




ஆசிரியர்.கா.சு.வேலாயுதன்.
தமிழ் நாவல் உலகில் காலங்கடந்தும் பேசப்பட வேண்டிய ஒரு நாவல் .
“பொழுதுக்கால் மின்னல்” கொங்கு மண்டலத்தின் வட்டார வழக்கில் எல்லைகள் கடந்து ெண்ணியம்,பொருளாதாரம்,சாதியம் என பல தளங்களின் தரிசனத்தை கண்முன்னே நிறுத்துகிறார்.
தாய்வழிச் சமூகம் தந்தை வழிச் சமூகமாக மாறிய பின் பெண்களின் கருத்து சுதந்திரம், உடல் சார்ந்த தேவைகள்,பொருளாதார சுதந்திரம், கைம்பெண் மறுமணம், பால்ய திருமணம் என பல்வேறு கூறுகள் எப்படி உருமாற்றம் பெற்றுள்ளன என்ற கருத்துக்கள் தீர்க்கமாக அதே நேரத்தில் நுணுக்கமாக கதை முழுதும் விரவிக் கிடக்கிறது.
கதையின் நாயகியின் மூலம் ஒரு சராசரி பெண்ணின் வாழ்க்கை சூழலையும், சுழலையும் சித்திரமாய் தீட்டுகிறார்.சுழலில் சுழன்று கைக்கெட்டிய பிடிமானங்களை பிடிப்பதும் பின் பிடி நழுவி சுழலில் சுழலுவதுமென வாழ்க்கையின் போராட்டமும்,இடையிடையே சுகிக்கும் ஆனந்த தருணங்களையும் அதன் காட்சிகளாக மனதில் பதியம் போடுகிறது கதை.
இரு வேறு திசையிலிருந்து புறப்பட்டு ஓரிடத்தில் சங்கமிக்கும் ஆறென கதை இரு வேறு காலத்திலிருந்து பயணித்து நம்மை நிகழ்காலத்துக்கு அழைத்து வருகிறது.இரு வேறு ஆறானாலும் இரண்டிலும் பயணிப்பது தண்ணீர்தானே.
தாய்வழி சமூகமாக இருந்த போது மறுமக்கள் தாயம் என்ற முறை இருந்தது.எனினும் 1933 ல் Marumakkal thayam abolishment act மூலம் அதை முடிவுக்கு கொண்டு வந்தனர்,எனினும் நடைமுறையிலிருந்து முழுமையாக விடுபட காலமாகியிருக்கலாம்.கதையின் நாயகி சுதந்திர தினம் கொண்டாடும் போது இளமங்கையாக இருக்கிறாள்,அந்நிகழ்விற்கு எஸ்டேட் துரை பங்கு பெறுகிறார் இதன் மூலம் மறுமக்கள் தாயத்தின் எச்சமே கதையில் கதை நாயகியின் எண்ண பிடிமானமாக இருக்கிறது.
காலங்காலமாக சேலைக் கட்டிய பெண்களை நம்பாதே என்றே கேள்விப்பட்ட உலகத்துக்கு, வேட்டிக் கட்டிய ஆண்களையும் நம்பாதே என்றும்,நம்பினால் ஏமாந்து வாழ்வை இழந்து வதைப்பட்டு கண்ணீர் சிந்த வேண்டும் என்ற உண்மையை உரத்து சொல்கிறது கதை.
கதையின் நாயகி பச்சைக்கிளி பூப்பெய்துவதற்கு முன்பே கைம்பெண்ணாகி விடுகிறாள்.பூப்பெய்திய பின் பார்த்த முதல் ஆண் மீது மையல் கொள்கிறாள்,
சின்னக்காத்தன் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் என்பதால் தன் இச்சைக்கு எளிதாக உடைமையாக்கி கொள்வதன் மூலம் பெண் தன் தேவையை நிறைவு செய்துக் கொள்ள சமூக கட்டுப்பாடுகளை கட்டுடைப்பதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
எனினும் ஒரு வாசகரின் மனநிலையில் சின்னக்காத்தான் உயர்சாதி ஆணாயிருந்திருந்தால் பச்சைக்கிளிக்கு இது சாத்தியமாயிருக்குமா? என்ற கேள்வி எழாமல் இல்லை.
இதன் மூலம் உருவாகும் முதல் மகவை துணியில் சுற்றி ஊருக்கு வெளியே போட்டுவிட்டு வரும் பச்சைக்கிளி தன் இறுதி நாள் வரை ஒரு முறைக் கூட முதல் மகவை குறித்து நினைவுகூரவே இல்லை என்பது சற்று உளவியல் ரீதியாக இயலுமா? என்ற கேள்வியும் எழுகிறது.
பொன்னுசாமியின் குண மாற்றத்தால் பச்சைக்கிளி இறுகிய மனதினள் ஆகிவிடுகிறாள் என்றாலும் சொத்துக்களை பத்திரப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் இருப்பதோடு,பொன்னுசாமி பச்சிக்கிளி இவருக்குமிடையேயான பிள்ளைகளுக்கும் கூட அதை பிரித்து கொடுக்கவோ அல்லது பொருளாதார உதவியோ செய்யவில்லை என்பதன் மூலம் பணத்தினைக் கொண்டு தன் இறுதிக்காலத்தில் பாதுகாப்பாக இருந்து விட முடியும் என நினைப்பதும் பச்சைக்கிளி ஒரு சராசரி பெண் என்பதை காட்டுகிறது.
கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது என்றாலும், பெண்ணோ, ஆணோ இன்னொருவரை தன் இணையாக ஏற்றுக்கொள்ளும் போது அவரது மனம்,கற்பு நிலையைக் குறித்த சிந்தனைகள் இருவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது. அப்படிதான் பச்சைக்கிளி உண்மையை மறைத்ததால் பொன்னுசாமியின் மனமும், குணமும் மாறி போய்விடுகிறது என்பதையும் மறுக்க முடியாது.
தாமரை பொது வாழ்வில் ஈடுபடும் பெண்ணாக காட்டப்பட்டுள்ளார்,அதே நேரத்தில் கற்பு எனும் நிலையை கட்டுடைத்த பெண்ணாக வருகிறார். இதன் மூலம் கற்பு என்ற ஒன்று இல்லையென்பதை சொல்ல வரும் ஆசிரியர்,திருமணம் என்ற ஒரு ஒப்பந்ததையும் தாமரை மறுத்து வெளியேறுவதாக காட்டவில்லை என்பது சற்று முரணாக இருக்கிறது. இந்த முரணால் கற்பு நிலையை கட்டுடைக்கிறார் என்பதற்கு பதிலாக கணவனிடம் கிடைக்காத ஒன்றை வெளியில் தேடுபவளாக, பொது வாழ்வில் தன்னை இருத்திக் கொள்ள எடுத்துக் கொள்ளும் முயற்சியாகவே ஒரு சராசரி வாசகனால் உள்வாங்கப்படும் அபாயமும் இருக்கிறது.
கருவாச்சி காவியத்தில் தெற்கத்தி பெண்ணாக வந்த கருவாச்சியின் ஞானம் பச்சைக்கிளிக்கு இல்லை,மாறாக சராசரிக்கு கீழான பெண்ணாக முன் யோசனையற்று தன் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளும் உணர்ச்சிக்கு அடிமையான பெண்ணாக இருக்கிறார்.இப்படி வரிக்கு வரி சிந்தனையை தூண்டக் கூடிய நாவல்.
மொழி வசப்பட்டிருக்கிறது,திரைப்படத்தின் விறுவிறுப்புடன் செல்கிறது கதை. பச்சைக்கிளியின் வாழ்வின் மூலம் பெண்ணின் கனவுகள் சிதைவுறுவதை,பெண்ணின் வாழ்வை தீர்மானிப்பது அவளின் கையில் இல்லையென்பதையும்,ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வாழ்வியலையும், தண்டனைகளையும் விவரிப்பதன் மூலம் ஆசிரியர் பல்வேறு சமூக சீர்கேடுகளை முன்னிறுத்துகிறார்.
கற்பு என்று ஒன்று இல்லையென்பதை பெரியாருக்கு பின் ஒரு ஆணாக கூறியிருக்கும் ஆசிரியர் பாராட்டுக்குரியவர். கதையில் ஒரு இடத்திலும் ஆசிரியர் வெளிப்படவில்லை.மாறாக கதாபாத்திரங்களே மனதில் நிற்கின்றனர் என்பதே ஆசிரியரின் வெற்றி.
அனைத்தும் பொதுவுடைமை ஆகிவிடும்போது பெண்ணிற்கோ, ஆணிற்கோ தனிப்பட்ட தேவைகள் ஏதும் இருக்காது,அதே நேரத்தில் மறுக்கப்படும் கனியாக காமம் இருப்பதால் கசப்பு மாத்திரையின் மீதான இனிப்பாக இருக்கும் காதல்,காமம் என்பது எட்டும் கனியாகவும், கிட்டும் கனியாகவும் மாறும் போது காதலென்ற வார்த்தை என்பது கண நேர உணர்வாகிவிடுமா? என்ற உளவியல் ரீதியான கேள்விகளும்,ஓஷோ சொல்லியது போல் குழந்தைகள்,பெரியவர்கள் அனைவரும் Institution போல் இயங்கும் நிலை தேவைப்படுமோ? என்றும் சிந்திக்க தோன்றுகிறது.
அதிமுக்கியமான செய்தி சாதி ஒழிப்பை ஒரு பெண்ணால் தான் செய்ய முடியும் என்பதை கதையின் மறைமுக பொருளாக கூறியிருக்கிறார் என்பதும் போற்றப்பட வேண்டிய சிந்தனை.
வாழ்வின் சுக துக்கங்கள்,சக மனிதனின்,சமூகத்தின் வாழ்வியல் மற்றும் கதாபாத்திரங்களின் செயல்பாடுகள் என அனைத்தும் செம்மையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கதையின் காலம்,கதையின் உட்கரு, சமூகத்திற்கு சொல்ல வந்த கருத்து என அனைத்தும் தெளிவாக பயணிக்கிறது.
மேலோட்டமாக இல்லாமல் ஆழ்ந்த கருத்து செறிவும்,வாழ்வியலின் அவதானிப்பும் கொண்ட எழுத்தாக மிளிர்கிறது நூல்.
ஞானம்,புத்தம் என்றெல்லாம் குழப்பமால்,சதாரண கிராமிய சூழலில் ஆணாதிக்கம்,ஊர்க்கட்டுப்பாடு,சாதிய கட்டுப்பாடு என்ற பல்வேறு தளைகளில் வாழும்,வாழ்க்கையை வாழ்ந்துவிட வேண்டும் என்ற வேட்கை கொண்ட பெண்ணின் துயர்களை சொல்லி அதன் மூலம் கன்னியம்மாள் போன்றவர்களின் மன ஏக்கத்தையும்,உயர் குணத்தையும் கூறுவதோடு கதாபாத்திரங்களின் அறிவு நிலையைக்கூட வாசகன் உணரும் வண்ணமாக படைக்கப்பட்டுள்ளது.
வாழ்த்துக்கள் சார்.அருமையான சமூக நாவல்.
என்றென்றும் அன்புடன்.
கோ.லீலா.