Wednesday 8 January 2020

"ழ" கர நினைவுகள். ‌‌‌

         

வீறுடைய செம்மொழி தமிழ்மொழி!
உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி!
- பெருஞ்சித்திரனார்.

ழ கரம் குறித்து நீண்ட காலமாக எழுத வேண்டுமென்று ஒரு ஆசை இருந்துகொண்டே
இருந்தது.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர்கள் முதல் பேட்டி கொடுக்க வரும் இலக்கிய ஆளுமைகளில் சிலரும் கூட " ழ" கரத்தை சரியாக உச்சரிப்பது இல்லை என்பது பெரும் வருத்ததை தருவதோடு,
அத்தகைய உரையாடலை,கவி வாசிப்பை நான் செவியுறாது கடந்து விடுவேன் என்பதே உண்மை.

தன்னை கவிஞர்களாக,
பேச்சாளர்களாக,
எழுத்தாளர்களாக அறிவித்துக் கொள்பவர்களில் சிலருக்கு ழ கரம் ஆட்டம் காட்டுகிறது என்பதே உண்மை.

ழகரம் மீது எனக்கு ஒரு
வசீகரமும்,நீண்ட பெருங் காதலும் உண்டு.அதன் வடிவத்தில், உச்சரிப்பில்,பின் உயிரை வளர்க்கும் அமிழ்து என காரணங்கள் உண்டு.

உயிரை வளர்க்கும் அமிழ்து.
******************************
அமிழ்து அமிழ்து என்றால் அது தமிழ் தமிழ் என ஒலிக்கும்,
சுவைக்கும்.உயிரை வளர்த்தல் என்றால் என்ன? நீண்ட ஆயுளை கொடுத்தல் தானே.யார் கொடுப்பார் நீண்ட ஆயுளை? தமிழ்தான் கொடுக்கும்.எப்படி என்று பார்ப்போமே.

மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியிடுவதே முழு சுவாசம். அப்படி முழு சுவாசத்தை விழிப்புணர்வோடு விடுவதே ஆயுளை நீட்டும்.ஆனால் நாம் அப்படி சுவாசிப்பதில்லை.
மேலோட்டமாக சுவாசிப்பதால் ஆயுள் குறைந்து விடுகிறது.
மூச்சு பயிற்சியினைப் பற்றி வேறொரு நாள்‌‌ பார்க்கலாம்.

தமிழுக்கு வருவோம்.ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 15 மூச்சு என்றால் ஒரு மணி நேரத்திற்கு 900 மூச்சுகள் அல்லவா?( 60*15=900).ஒரு நாளைக்கு 24*900= 21600. இறுதியில் இருக்கும் இரு சுழியத்தை நீக்கி விட்டால் 216 அதாவது உயிர்மெய் எழுத்துக்கள்.

தூய தமிழை சரியாக உச்சரித்து பேசினால் சராசரியாக நிமிடத்திற்கு 12 மூச்சுகள் வரும்.அதாவது மூன்று மூச்சுகள் குறையும்.மூச்சுகள் குறைந்தால் ஆயுள் நீளும்.

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர். என்ற பாரதிதாசனின் வரிகள் எவ்வளவு உண்மை,இனிமை....

அவ்வளவுதானா?  ம்ம்ம்ம்.....
இல்லையே.

மூன்றாம் கண்ணைத்திறக்கும் ழ.
**********************************
நம்மின் மூன்றாம் கண்ணைத்  திறக்க வைக்கிறது ழகரம். எப்படியென்று பார்ப்போம்.
ழகரத்தை சரியாக உச்சரிக்கும் போது மூளையில் உள்ள pineal gland ஐ  நன்றாக சுரக்க வைப்பதால்,மனம்
உற்சாகத்துடன் இருக்கும்.
மனச்சோர்விலிருந்து விடுபட வைக்கும்.

மூன்றாம் கண் என்று சொன்னோமே? ஆமாம் pineal gland க்கு Third eye என்ற பெயர் உண்டு.

Once called the 'third eye,' the pineal gland is a small gland located deep in the center of the brain. Named for its pinecone shape, this gland secretes melatonin, which plays a role in the body's internal clock.

வேறென்ன ழகரத்தின் சிறப்பு.
தமிழ்,மலையாளம் மற்றும் மண்டரின் இன மொழியிலும் ழ‌கரம் உள்ளது.மண்டரின் மொழியில் ழ இருந்தாலும் உச்சரிப்பு வேறாக உள்ளது என மொழியறிஞர்கள் சொல்கிறார்கள்.

ழகர நினைவுகள்.
*******************
அம்மா,அப்பா இருவருமே எனக்கும்,என் தம்பிக்கும் ழகரத்தை சரியாக உச்சரிக்க வேண்டுமென சொல்லிக் கொடுத்தார்கள்.அதோடு நாச்சுழற்றி(Tongue twister)  என சொல்லப்படக் கூடிய சொற்றொடர்களையும் சொல்லித் தந்ததோடு,சில நகைச்சுவையானகதைகளையும் சொல்வார்கள்.காலஞ்சென்ற முதலமைச்சர் மாண்புமிகு திரு C.N அண்ணாத்துரை அவர்களின்சொற்பொழிவையும் சொல்வார்கள்.

அப்படி சொன்ன கதை ஒன்று.
ரயிலில் ஒருவர் வாழைப்பழம் விற்றுக் கொண்டு வந்தாராம்....
வாழப்பழம் வாழப்பழம்‌ ன்னு கூவி. ரயில்‌‌ செங்கல்பட்டு கடந்ததும் வேறொருவர் வாயப்பயம்...வாயப்பயம்ன்னு கூவினாராம்....வாழைப்பழத்தை ஏம்பா வாயப்பயம்‌ ன்னு  சொல்றேன்னு கேட்டதுக்கு. செங்கல்பட்டு வரவரைக்கும் காய்வெட்டா இருந்தது....இப்போ பயித்திடுச்சு( பழுத்திடுச்சு)ன்னாராம்.

 ஜி.ஆர்.எம் பள்ளியில் படித்தப்போது  தமிழாசிரியை B.சரோஜா அம்மா அவர்கள் சொல்லிக்கொடுத்த நாச்சுழற்றி சொற்றொடரைதான் அம்முவுக்கு சொல்லித் தருகிறேன்.அந்த நாச்சுழற்றி இதுதான்.

"ஏழை‌க் கிழவன் வியாழக்கிழமை உழுதுண்டு ஏழு வாழப்பழங்களை விழுங்கினான்"
தமிழை சரியாக உச்சரிப்போம்.
மகாகவி பாரதி சொன்னது‌ போல் திக்கெட்டும் பரவட்டும்‌" தேமதுர தமிழோசை".

அன்புடன் கோ.லீலா.