Saturday, 18 July 2020

கவிப்பேரரசு வைரமுத்து

கவிஞர், திரைப்பட பாடலாசிரியர், நாவலாசிரியர், கட்டுரையாளர் கலைமாமணி, பத்ம பூஷன், பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.💐💐💐
வெண்நரை மெதுவாக
 வெளிப்படும் நேரமிதில்
மென்தரையில் வளர்ந்திருக்கும் புல்லின் மேலிருக்கும் பனித்துளிகளை ரசிக்கும் மனதையும் அன்பையும் ஆரோக்கியத்தையும்
எல்லா வளங்களையும் நலங்களையும் வாரி வழங்கிட வாழ்த்துக்கள்.💐💐💐💐💐

***********************************
இது ஒரு பொன்மாலை பொழுது பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியாது,  சலிக்காத வரிகள்.

ஒரு தெய்வம் தந்த பூவே போன்ற பல்வேறு பாடல்களை சொல்லலாம்.

அலைகள் ஓய்வதில்லை பட பாடல்களில், சிறந்த கவிதை வரிகள் திரைப்படப் பாடலாகி இருப்பதை அறிந்த போது ஆச்சரியம் மேலிட்டது.

ஆறு முறை மாநில விருதும், ஏழு முறை தேசிய விருதும் பெறுவதென்பது மிகப் பெரிய சாதனை.

பாடல்கள் மட்டுமின்றி கவிதை நூல்கள், கட்டுரை, நாவல்கள், சிறுகதைகள் என எத்தனை நூல்கள்... மீண்டும் ஆச்சரியம்தான்.

தண்ணீர் தேசம், மூன்றாம் உலகப்போர் ஆகிய நூல்கள் என் மனதிற்கு மிக நெருக்கமான நூல்கள் என்றால்,

கருவாச்சி காவியமும், சாகித்ய அகாடமி பெற்ற கள்ளிக்காட்டு இதிகாசமும்‌ இரட்டை காப்பியங்கள் எனலாம்.

எத்தனை நுணுக்கமான செய்திகள் எல்லாம் அதில் சொல்லப்பட்டிருக்கின்றன என்று அவதானித்தால், பெரும் வியப்பே ஏற்படுகிறது.

கருவாச்சி காவியத்தில் தானே பிள்ளைப் பெற்றுக்கொள்ளும் காட்சி கண்ணீரை வரவழைத்தால், கள்ளிக்காட்டு இதிகாசத்தில் பேயத் தேவர் மாட்டிற்கு பிரசவம் பார்ப்பது என மிக நுட்பமான செய்திகள் எல்லாம் காட்சியாய் விரிவது எழுத்தின் சிறப்பு.

வைரமுத்துவின் சிறுகதைகள்‌ நூலில் கதாபாத்திரங்களின் உருவ அமைப்பை விவரிக்கும்‌போது கவிஞரின் நகைச்சுவை உணர்வு பெரிதும் வெளிப்படும்.

ஆனமலை நல்லார் திட்ட தொழில் நுட்ப வல்லுநர் உபகுழு உறுப்பினராக கூடுதல்‌ பொறுப்பு‌ ஏற்று இருந்த நேரம், உபகுழு என்றாலும் பிரதான குழுவின் முக்கிய பணிகள் அனைத்தையும் பார்த்த நேரம், வீடு திரும்ப நள்ளிரவு ஆகிவிடும்.

அந்த நேரத்தில், ரிலாக்ஸ் செய்துக்கொள்ள, ஜீப்பில் பயணிக்கும் போது மீள் வாசிப்பாக சிறுகதைகளை படிப்பேன்.

ஒருநாள் ஓய்வுப் பெற்ற தலைமைப் பொறியாளரிடம் ப்ராஜக்ட் பற்றி பேசும் போது, என்னையும் அறியாமல்‌ சிரித்துக் கொண்டிருக்க , என்னவென்று கேட்டபோது சிறுகதையில் வரும் வசனங்களை சொன்னேன், அவரும் சேர்ந்து சிரித்தார்.

ரசித்த வரிகள்.

🚩"செத்த கிளிக்கு எதுக்கு சிங்காரம்" என்ற வசனம் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு கூட, நானும் தம்பியும் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தோம்.

சமீபத்தில் படித்த வரிகள்.

🚩"திருடிட்டு ஓடுறவன் ஒழுக விடுற சில்லறையத்தானய்யா கொடைன்னு சொல்லிக் கொண்டாடுது இந்த உலகம்."-வைரமுத்து
🚩
அந்தந்த வயதில்...

இருபதுகளில்...

எழு!

உன் கால்களுக்கு

சுயமாய் நிற்கச் சொல்லிக் கொடு!

ஜன்னல்களைத் திறந்து வை!

படி! எதையும் படி!

வாத்சாயனம் கூடக்

காமமல்ல, கல்விதான்..

படி!

பிறகு

புத்தகங்களை எல்லாம்

உன்

பிருஷ்டங்களுக்குப்

பின்னால் எறிந்துவிட்டு

வாழ்க்கைக்கு வா..

உன் சட்டைப் பொத்தான்,

கடிகாரம்,

காதல்,

சிற்றுண்டி,

சிற்றின்பம்

எல்லாம்

விஞ்ஞானத்தின் மடியில்

விழுந்து விட்டால்,

எந்திர அறிவு கொள்!

ஏவாத ஏவுகணையினும்

அடிக்கப்பட்ட ஆணியே பலம்.

மனித முகங்களை

மனசுக்குள் பதிவு செய்!

சப்தங்கள் படி!

சூழ்ச்சிகள் அறி!

பூமியில் நின்று

வானத்தைப் பார்!

வானத்தில் நின்று

பூமியைப் பார்!

உன் திசையைத் தெரிவு செய்!

நுரைக்க நுரைக்க காதலி!

காதலைச் சுகி!

காதலில் அழு!

இருபதுகளின் இரண்டாம் பாகத்தில்

மணம் புரி!

பூமியில் மனிதன்

இதுவரை துய்த்த இன்பம்

கையளவுதான்..

மிச்சமெல்லாம் உனக்கு!

வாழ்க்கையென்பது

உழைப்பும் துய்ப்புமென்று உணர்!

உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து!

இன்னும்... இன்னும்...

சூரியக் கதிர்கள்

விழமுடியாத ஆழத்தில்...

**

முப்பதுகளில்...

சுறுசுறுப்பில்

தேனீயாயிரு!

நிதானத்தில்

ஞானியாயிரு!

உறங்குதல் சுருக்கு!

உழை!

நித்தம் கலவி கொள்!

உட்கார முடியாத ஒருவன்

உன் நாற்காலியை

ஒளித்து வைத்திருப்பான்..

கைப்பற்று!

ஆயுதம் தயாரி..

பயன்படுத்தாதே.

எதிரிகளைப் பேசவிடு!

சிறுநீர் கழிக்கையில் சிரி!

வேர்களை,

இடிபிளக்காத

ஆழத்துக்கு அனுப்பு..

கிளைகளை,

சூரியனுக்கு

நிழல் கொடுக்கும்

உயரத்தில் பரப்பு..

நிலை கொள்.

**

நாற்பதுகளில்...

இனிமேல்தான்

வாழ்க்கை ஆரம்பம்..

செல்வத்தில் பாதியை

அறிவில் முழுமையை

செலவழி..

எதிரிகளை ஒழி!

ஆயுதங்களை

மண்டையோடுகளில் தீட்டு!

ஒருவனைப் புதைக்க

இன்னொருவனைக்

குழிவெட்டச் சொல்!

அதில்

இருகையால் ஈட்டு..

ஒரு கையாலேனும் கொடு..

பகல் தூக்கம் போடு.

கவனம்!
இன்னொரு காதல் வரும்!

புன்னகைவரை போ..

புடவை தொடாதே.

இதுவரை இலட்சியம் தானே

உனக்கு இலக்கு!

இனிமேல்

இலட்சியத்துக்கு நீதான்

இலக்கு..

**

ஐம்பதுகளில்...

வாழ்க்கை, வழுக்கை

இரண்டையும் ரசி..

கொழுப்பைக் குறை..

முட்டையின் வெண்கரு

காய்கறி கீரைகொள்!

கணக்குப்பார்!

நீ மனிதனா என்று

வாழ்க்கையைக் கேள்..

இலட்சியத்தைத் தொடு

வெற்றியில் மகிழாதே!

விழா எடுக்காதே!

**

அறுபதுகளில்...

இதுவரை

வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது..

இனியேனும்

வாழ்க்கையை நீ வாழ்..

விதிக்கப்பட்ட வாழ்க்கையை

விலக்கிவிடு..

மனிதர்கள் போதும்.

முயல் வளர்த்துப் பார்!

நாயோடு தூங்கு!

கிளியோடு பேசு!

மனைவிக்குப் பேன் பார்!

பழைய டைரி எடு

இப்போதாவது உண்மை எழுது..

**

எழுபதுக்கு மேல்...

இந்தியாவில்

இது உபரி..

சுடுகாடுவரை

நடந்து போகச்

சக்தி இருக்கும்போதே

செத்துப்போ...

ஜன கண மண...

-கவிப்பேரரசு வைரமுத்து

கவிராஜன் கதையும் விரும்பி‌‌ படித்த நூல்.

வைகறை மேகங்கள், இந்த‌ குளத்தில் கல் எறிந்தவர்கள், இந்த‌ பூக்கள் விற்பனைக்கல்ல என்று தொடரும் நீள் பட்டியலில் தமிழாற்றுப்படையில் சற்று மூச்சு வாங்கி கொள்கிறேன்.

ஒரு கல்லூரியில் பேச சென்றிருந்தபோது, உங்களைப் பற்றி விசாரித்தோம், நிறைய படிப்பீர்கள் என்று அறிந்தோம் அதான் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் வாங்கி வந்தோம் என்று கூறி அந்த புத்தகத்தை பரிசளித்த நிகழ்வு‌‌ மட்டற்ற‌ மகிழ்ச்சிக்குரிய தருணம்.

தேனி சென்றிருந்தப்போது, வடுகப்பட்டி மற்றும் பண்ணைப்புரமும்‌ செல்ல வேண்டுமென சொல்லி சென்று பார்த்தேன்.

இப்படியொரு‌ குக்கிராமத்தில் இருந்து‌ வந்தவர்கள் எத்தனை உயரத்தில் இருக்கிறார்கள்‌ என்று வாய்பிளந்து நின்றேன்.‌ எங்கிருந்து வருகிறோம்‌ என்பதை விடவும் எதை அடைகிறோம்‌‌ என்பது‌ மிக முக்கியம் என்றுணர்ந்த கணமது.

வைகை அணை சென்றிருந்தப் போது ஒரு பக்கம்‌ பொறியாளாராக தொழில்நுட்பம் காணும் மனம்.
இன்னொரு புறமோ, இந்த நீர்பரப்பில் எந்த இடம் மேட்டூராக இருந்திருக்கும், எந்த இடத்தில் புத்தகத்தை ஆற்றில் விட்டிருப்பார் என பல்வேறு சிந்தனைகள் தோன்றின.

கவிஞர் வழித்தோன்றலாக இல்லாமல், எந்த பின்புலமும் இல்லாமல் பதினான்கு வயதில் யாப்பு எழுதுவதும், பத்தொன்பது வயதில் கவிதை நூல் வெளியிடுவதும், பெரிய சாதனை மட்டுமல்ல, பிறப்பிலேயே ஒரு கவிஞனாக பிறந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழுக்கு‌ கிடைத்த வரமும்.

கவிபேரரசு அவர்கள் "மரம்" என்ற தலைப்பிலும், "அம்மா" என்ற தலைப்பிலும் வாசித்திருக்கும் கவிதைகளை, மிகவும் ரசித்துக் கேட்பேன்.

கவிபேரரசும், இசைஞானியும் பிரிவுற்ற தருணம் அவர்களுக்குள் எவ்வளவு‌ பெரிய மனவலியை, பாரத்தை கொடுத்திருக்கும் என்று யோசிக்கும்போதே கண்ணீர் வந்துவிடும்.‌‌பிரிந்தாலும் அவர்கள்‌ தனது திறமையில் சோடை‌ போகவில்லை.

இருவருமே, அதற்கு பிறகு பல வெற்றிகளை, உயரங்களை அடைந்திருக்கிறார்கள்.

பிரிந்தாலும்‌ தோழமையின் வளர்ச்சியை கவனித்து வாழ்த்திக் கொண்டேதான்‌ இருக்கும்‌ தோழமை மனம்.
அதில் தோழமைக்கான பாடமும்‌ உள்ளது அல்லவா?

இணைந்து இருந்திருந்தால், கலையுலகிற்கு, இன்னும்‌ பல அரிய படைப்புகள்
கிடைத்திருக்கும்.

ஒரு ரசிகையாக,‌ இப்போதாவது அவர்கள் இணைந்து ஒரு பாடல் தரமாட்டார்களா? என்றே ஏங்குகிறது மனம்.

தமிழுக்கு தொண்டாற்றியதோடு, சமூக அக்கறையோடு‌ "தண்ணீர் தேசம்"  "மூன்றாம் உலகப்போர்" எழுதியதாலே எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் என்பேன்.

எல்லா நலமும், வளமும்‌பெற்று நீடு வாழ்க கவிப்பேரரசே!

🚩

வித்தையில்லா கர்வம் பாழ்
கர்வமில்லா வித்தை வீண்
வித்தையுள்ள கர்வமே சிறப்பு.

- சுக்கிர நீதி.

வித்தையுள்ள கர்வமே ! தமிழின் மறு உருவமே நீ வாழி !

அன்புடன்

- கோ.லீலா.

No comments:

Post a Comment