Tuesday, 12 April 2016


களவு போன கனவுகள்.

பள்ளி சென்றபின் அறிவிக்கப்படும் மழைக்கால விடுமுறைகள் போல்
இனிதாவது ஏதொன்றுமில்லை, புத்தக பை பத்திரமாய் மூடப்பட்டு,விரிக்காத குடைகளுடன் நனைந்த நாட்களில்,தலை துவட்டிவிடும் அம்மாவின் கதகதப்பில் மழையின் குளுமையுணர்ந்தோம்.பிடித்த காய்ச்சலுக்கு அரிசி கஞ்சி குடிக்கும்போது பாசங்கள் பரிமாறப்பட்டது.

பின் சூடான காபியுடன் பக்கோடக்களும்,முறுக்குகளும் உண்டு,சீக்கிரமாய் வீடு திரும்பிய அப்பாவுடன் விரித்த பெரிய குடையில் சென்று தொலைபேசியில் ஆத்தா,தாத்தா,சித்தப்பா,சித்தி,மாமா என அனைவரின் நலன் விசாரித்து திரும்பும்போது வானொலியில் மந்தமாருதம் கேட்டோம்

மழைநீர் வடிந்த மதியமொன்றில்,நாட்டுக்கோழி சாறும்,வேகவைத்த பனங்கிழங்கும்,இனிப்பு பணியாரமும்,வண்ண வளையல்களொடும் வந்திறங்கிய ஆத்தாவும்,தாத்தாவும் இன்னும் மனதோடு இருக்கிறார்கள்,இன்னும் சொந்தங்களும் கூடிட, மெதுவாய் நழுவி காகித கப்பல்களில்,பூக்கள் நிரப்பி மழைநீரில் விட்டு மகிழ்ந்தோம்,சுட சுட வசைகள் வாங்கி கொண்டு உடல் சுத்தம் செய்து பின் நாட்டுக்கோழி சாறு சாப்பிட வைக்கப்பட்டோம்,கப்பல்களில் பூக்கள் நிரப்பிய குதூகலங்களை ,கீதாஞ்சாலியின் பாடத்தோடு ஒப்பிட்டு பேசி ஆத்தா,தாத்தா பூரித்து எங்க வீட்டு புள்ளைங்க இங்கிலீஸ் பேசுதுக என பூரித்து போனார்கள்.
இப்படியாக உறவுகளோடும்,உணவுகளோடும் கடந்து போன எங்களின் மழைக்கால நினைவுகளை,எங்களது குழந்தைகளுக்கு விட்டு செல்ல நினைத்த எங்களின் கனவுகளை களவாடியது யார்?

No comments:

Post a Comment