Monday, 26 March 2018

யாதுமானவள்.....





பால்யத்தில் கடலோடும்
பருவத்தில் மலைகளோடும்
பின் வனத்தோடும் வாழ
வாய்த்தவள் அவள்.


நினைவடுக்குகளில்
அலை பாயும் கடல்
மனயிடுக்கு வழியே
ஈரமாய் நாளும் கசிகிறது
கசிவால் முகிலினை நிரப்பி
வனத்தை வளர்த்தெடுக்கிறாள்


மலையில் கசியும் ஈரமும்
ஆழ்கடலின் அசையா பாறையும்
கண்களுக்கு புலப்படாது
என்பதறிந்தவள்….


முத்தெடுத்தாலும் மூழ்கி
வெற்றுச்சிப்பி எடுத்தாலும்
மூச்சடக்க தெரிந்தவரை
உள்வாங்கும் கடலென
நேசத்தை அனுமதிப்பவள்


கற்பழிக்கும் மாக்களை
அழிக்கும் ரௌத்ரம் கொண்டு
ஆழிபேரலையின் மீது
நடமிடும் காளியவள்.


அலைகளை இறகாக்கி
வனத் தேவதையாய்
வலம் வரும் பாதையெங்கும்
நட்சத்திர பூப்பூப்பவள்


கடலும் வனமும்
சந்திக்கும் அற்புதமவள்
இவளின் மேல் வானமே
கவிழ்ந்துக் கிடக்கிறது
வானமென்பது ஏதுமற்றது
என்பதறிந்தவள்……


ஏதுமில்லாதது ஒளிர்வது
எப்படி என்றும்…
மேகத்திரை வழி வெண்
சீலையென வீழும் மழை
குளிர்வது எப்படியென்றும்
கேட்ட என்னிடம்


ஏதுமற்று இருத்தலின் சுகம்தான்
ஒளிர்வதும் குளிர்வதும்
என்று புன்னகைக்கிறாள்
யாதுமானவள்…


-கோ.லீலா

No comments:

Post a Comment