Sunday, 16 August 2020

"இன்றொரு நாள் போதுமா"

 ராகமாலிகா...

***************

சற்று முன் கவிஞர் கண்ணதாசன் எழுதி, கே.வி மகாதேவன்‌ அவர்கள் இசையமைக்க, பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் இனிய குரலில் ஒரு பாடல் கேட்டேன்.


"இன்றொரு நாள் போதுமா" அதை பற்றி நான் சொல்ல "இன்றொரு நாள் போதுமா"


ஆமாங்க, இன்றொரு நாள் போதுமா பாடலேதான். 


இளையராஜா அவர்களின் மிகப் பெரிய விசிறி என்பதால், அவரது இசையை மட்டும் கூர்ந்து கேட்பது வழக்கம்.


எனினும், மிருதங்கமும், தபேலாவும் பின்னிசையாக இருந்தால் எந்த பாடலையும் விடாது கேட்பேன்.


"இன்றொரு நாள் போதுமா" பாடல் எல்லோரையும் வசீகரிக்கும் ராகத்தில் தொடங்குவது மிகச் சிறப்பு, அதனினும் சிறப்பு, திரையில் வட நாட்டிலிருந்து வரும் ஹேமநாத பாகவதர் பாடும்‌ போட்டி பாடல் என்பதால்...


தொடக்கத்தில், தன் நாட்டின் ஹிந்துதானி ராகமான "மாண்ட்" ராகத்தில் தொடங்குவது மீச்சிறப்பு.


கவியரசர் பாடலுக்கான பல்லவியை இப்படி எழுதிக் கொடுத்தார்:


"நாதமா கீதமா அதை நான் பாட

இன்றொரு நாள் போதுமா"


இந்தப் பல்லவியை "ச்ரோதோவகயதி" முறையைப் பின்பற்றி..


"ஒரு நாள் போதுமா

இன்று ஒரு  நாள் போதுமா

நான் பாட இன்றொரு நாள் போதுமா

நாதமா கீதமா அதை நான் பாட

இன்றொரு நாள் போதுமா..


என வரிக்கு வரி சொற்களை கூட்டி எழுதி வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.


மாண்ட் ராகமோ கேட்பவரை சுண்டியிழுக்கும் தன்மையுடையது.


அப்படியே தான் தென்னாட்டின் கர்நாடக இசையிலும் தேர்ச்சிப் பெற்றவர் என்பதை காட்டுவது போல் தோடி, தர்பார், மோகனா, கானடா ராகங்களில் பாடுவர்.


அதிலும் மிகப்பெரிய வியப்பு எந்த ராகத்தில் பாடப்படுகிறதோ, அந்தந்த வரியில் ராகத்தின் பெயர் வரும் படி எழுதி அசத்தியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் என்பதுதான்.


"குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்

என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்"


என்ற  சரண வரிகளில்  குழலென்றும் என்பதை தொடர்ந்து ஆலாபனையும், ஸ்வரமும் பாடி குழலிசையில் 

முடித்திருப்பதும், 


யாழென்றும் என்பதை தொடர்ந்த ஸ்வரத்துடன் வீணையின் இசையில் 

முடித்திருப்பதும் தற்செயலானாது அல்ல, இது இசையமைப்பாளர் கே.வி மகாதேவன் அவர்களின் ஆளுமையல்லவா. கேட்டுணர்ந்த போது அசந்து போனேன்.


தோடி ராகம்.

******************

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ 

எழுந்தோடி வருவாரன்றோ...எழுந்தோடி...தோடி...இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ...


அட ! கவியரசரின் இசை ஞானம் வரிகளில் "தோடி" என்ற சொல்லை‌ அமைத்து எழுதியிருக்கிறார் எனில் தமிழில் எவ்வளவு ஆளுமை இருந்திருக்க வேண்டும். அதனால்தான்‌ அவர் கவியரசர் அல்லவா.


தானும் குறைந்தவர் இல்லையென தோடி ராகத்தில் இசையமத்திருக்கிறார் கே.வி அவர்கள். 


இந்த வரிகள் தோடி ராகத்தில் பாலமுரளி கிருஷணா அவர்களின் குரலில் இனிமை.



தர்பார் ராகம்.

***************

எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ

தர்பாரில் எவரும் உண்டோ....தர்பாரில் எவரும் உண்டோ....

எனக்கிணையாக  தர்பாரில் எவரும் உண்டோ.


தர்பார் ராகத்தில் இசை அமைக்கப்பட்டுள்ள வரிகள்.


தர்பார் இசையில் தனக்கு இணையாக யாரும் உண்டா என கேட்கிறாரா? 


அல்லது "தர்பாரில்"( அரசவையில்) தனக்கு இணையாக யாரும் உண்டா என்கிறாரா?


அடடா ! ரசனையோடு அல்லவா எழுதியும், இசையமைத்தும், பாடியும் இருக்கிறார்கள்.


மோகன ராகம்.

*******************

கலையாத மோகன சுவை நானன்றோ மோகன சுவை நானன்றோ 

மோகனம்....

கலையாத மோகன சுவை நானன்றோ.


மோகன இசையில் இசைத்து தான் கலையாத மோகன சுவையென கவிஞரின் வரிகளை பாடும் பாடகர் என மூவருமே படைப்பில் கலையாத மோகன சுவையாக மிளிர்கிறார்கள்.


கானடா ராகம்.

******************

கானடா ஆ .....என் பாட்டு தேனடா 

இசை தெய்வம் நானடா ...


இந்த வரிகள் கானடா ராகத்தில் அமைந்துள்ளது.


இப்படி ஒரு கூட்டு முயற்சியாக வாசகர்களுக்கு ஒரு சுவையான படைப்பை அளித்துள்ள கவியரசர் கண்ணதாசன், இசையமைப்பாளர் 

கே.வி. மகாதேவன், 

டாக்டர். பாலமுரளி‌கிருஷ்ணா ஆகியோர்கள் என்றும் வணக்கத்துக்கு‌ உரியவர்கள்.


நான் ரசித்தேன்... கேட்டு பாருங்களேன்‌ உங்களுக்கும் வியப்பும், மகிழ்வும் வரும்.


#பாடல்_ஒரு_பார்வை.


அன்புடன்

- கோ.லீலா.


No comments:

Post a Comment