Tuesday 1 June 2021

தமிழ் அழகியலும் இந்திரன் சாரும்

 நேற்று தமிழ் அழகியல் பற்றி திசை கூடல் நடத்திய இணைய வழி கூடுகையில்,  கலை இலக்கிய விமர்சகர் Indran Rajendran  அவர்கள் சிறப்பானதொரு உரையை வழங்கினார்கள்.

 

கலந்துரையாடலுக்கென போதிய அவகாசம் அளித்தது போற்றுதலுக்குரியது.


இச்சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்த தமிழ் மரபு அறக்கட்டளைக்கு என் வாழ்த்துக்களும், நன்றியும்.


பல்வேறு நாடுகளை சேர்ந்த அறிஞர்களை ஒரு சேர பார்த்ததும், அவர்களின் உரையினை கேட்டதும் மகிழ்ச்சி.


தமிழ் அழகியல் என்பது குறித்து, என்னுள் ஆழ்ந்த மற்றும் நீண்ட சிந்தனை இருந்தது உண்டு. அச்சிந்தனைக்கு நேற்றைய நிகழ்வு சில விடைகளையும், சில கேள்விகளையும் எழுப்பி உள்ளது.


இந்திரன் அய்யா சொல்லியது போல், மனிதர்களின் வாழ்வில் தேடப்பட வேண்டியது அழகியல்.


என் கருத்து.

*******************

தமிழ் என்பதே அழகியல்தானே...


அழகியல் என்பதற்கு சைவம், வைணவம், இஸ்லாம், கிறித்துவம் என முத்திரை தேவையற்ற ஒன்று.


காண்பவரின் அவதானிப்பிலும், விழிகளிலும் ததும்புவதே அழகியல்.


'லைலாவை கயஸின் விழிகளால் பார்" என்ற வரிகளை விட அழகியலை விளக்க வேறு வரிகள் தேவையில்லை.


Dance of Siva பற்றியும், அதன் அழகியல் பற்றியும் பேசிய யாரும், அவரவர் பகுதிக்குரிய சிறுதெய்வங்களின் அழகியலைப்பற்றி பேசவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது.


தமிழர்களின் அழகியல் என்பது வடிவமைக்கப்பட்ட, ஒரு பரிணாமம் கொண்டதல்ல...


தமிழர்களின் அழகியல், தத்துவம், அறிவியல், ஞானம், வாழ்வியல், இயற்கை என்ற பல்வேறு பரிணாமங்களும், பரிமாணங்களும் கொண்டவை.


அறிவியலை அடிப்படையாக கொண்ட தமிழர்களின் அழகியல், ஆங்கிலேயர்களின் புகுதலுக்குப்பின் அழிவை அடிப்படையாக கொண்ட அழகியலாக மாறியது... (மான் கொம்பு, புலி பல், யானை தந்தம்‌ போன்றவற்றை கொண்டு கலைப்பொருட்கள் செய்வது)


கோயில்

***************

மேலைநாடுகளின் தெய்வங்கள் எதுவும் கலைகூடத்தில் வைக்கப்பட்டுள்ளதா என எனக்கு தெரியவில்லை, ஆனால் சிவா எனும் ஆனந்த தாண்டவம் ஆடும் சிலை கலை பொருளாகவும், வழிப்பாட்டுக்கு உரிய ஒன்றாகவும் இருக்கிறது, எனில் கலையை, அழகியலை தத்துவத்தை, ஞானத்தை தொழுத பண்பாடாக தமிழர்களின் அழகியல் இருந்ததாக தோன்றுகிறது.


அதே போன்று தமிழர்களின் தெய்வம் எனில் முருகன், மற்றும் சிறுதெய்வங்கள்தான், அவற்றைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லாது போனது, மண்ணின் மைந்தர்களின் வாழ்வியலை மறைத்த ஏதொன்றும் எப்படி அழகியலாகும் என்ற கேள்வியை என்னுள் எழுப்புகிறது.


சிறுதெய்வங்களின் உறுமால் கட்டு, வெட்டுக் கத்திகளின் வகைகள், ஆண், பெண் உடையலங்காரம், அணிகலன்கள் பற்றியெல்லாம் ஆய்வு மேற்கொண்டு அதை தமிழ் அழகியலில் சேர்க்க வேண்டும் என்பது எனது அவா. அதுதான் தமிழர்களின் அழகியலாகவும் இருக்கும்.


இந்திரன் அய்யா பேசும்போது சொன்னார்கள், வெளிநாட்டினர் ஒருவர் கோயில் கோபுரங்களை கொண்டு ஓவியங்களை தமிழர்கள் மறைத்து விட்டார்கள் என்று சொன்னதாக.


கோயில் என்பது வெறும் வழிப்பாட்டு தலம் மட்டுமல்ல, அக்காலத்தில் வாகன வசதிகள் இல்லாத போது வெகு 

தூரத்திலிருந்து நடந்து வருபவர்களுக்கு ஓய்வெடுக்கும் இடமாகவும், பொது நிகழ்விற்காக கூடும் இடமாகவும் ( Get together), மழைநீர் சேகரிப்பிற்கான இடமாக, கலைக்கூடமாக, பொருளை பாதுகாக்கும் இடமாக, போரின் போது ஒரு ஊரிலிருந்து வேறு ஊருக்கு தப்பி செல்வதற்கான சுரங்கப்பாதை கொண்ட இடமாக, இப்படி பல்நோக்கு கொண்ட இடம்தான்‌ கோயில்... இதில் கோபுரத்தின் பங்கு என்ன?


கோ எனில் பசு/ மாடு.

புரம் என்றால் பகுதி. 


Dravidian architecture ல் கோபுரத்தின் இருமருங்கிலும் மாட்டின் கொம்பு போன்ற அமைப்பு இருக்கும்... 


கோயிலை விட உயரமான கட்டிடங்கள் ஏதும் இருக்கக்கூடாது என்பது எழுதப்படாத சட்டம், அதனால் தூரத்தில் இருந்து வருபவருக்கு கோபுரம் தெரிய கோடி நன்மையென ஓய்வெடுக்க, உணவருந்த, விரைவதற்கும், ஆசுவாசம் கொள்வதற்கும் ஏதுவாக இருக்குமென அமைக்கப்பட்டது கோபுரம்.


அதுமட்டுமல்லாது,கோபுர கலசங்களில் விதை தானியங்களை பாதுகாப்பு செய்து வைத்து பஞ்சக்காலத்தில், பயன்படுத்தும் Pr‍oactivenessம் சேர்ந்த அழகியல்தான் கோபுரம்.


அதே போன்று கோபுரத்தின் பொம்மைகளை உற்று நோக்கினால், எடையை அதிகம் தாங்கும் யானைகள், உடல் வலுவாக இருக்கும்‌ பூத கணங்களே கீழ் வரிசையில் இருக்கும். இது வெறும் அழகியல்  அல்ல... அறிவியல் கலந்த அழகியல் அல்லவா?


தஞ்சை கோயில்

***********************

 தஞ்சை கோயிலின் சுற்றுச்சுவர் இரட்டை சுவர்.


அதேபோல், கூடுகையில் ஒருவர் கேட்டார், சிற்பங்கள், ஓவியங்களை எப்படி வரைந்தார்கள் அதற்கான வெளிச்சம், காற்றோட்டம், space  எப்படி கிடைத்தது என?


அதற்கு ஆதாரப்பூர்வமான சான்றுகளுடன்‌ கூடிய விளக்கம் இதுதான், அனைத்து கோயில்களிலும், கோயிலின் கோபுர வேலைகள் முடித்தப் பின்னர்தான், சிலையை பிரதிஷ்டை செய்வார்கள், ஆனால் தஞ்சை பெரிய கோயிலில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அமைத்து விட்டு தான் கோபுர வேலையை செய்தார்கள்.


சிலையின் மீது கற்கள் விழாமலிருக்க, சிலையின்‌ மீது மணலை,முதல் தள உயரத்திற்கு கொட்டி மூடிய பின்னர் கோபுர வேலைகள் நடந்தன.


இன்றும் லிங்கத்தை வெளியில் எடுக்க முடியாது சிலையை விட வாயில் சிறிது என்பதே இதற்கு சாட்சி.


கூடவே, கோபுரத்தின் முதல் தளத்தில் இரட்டை சுவர் எழுப்பட்டுள்ளது உட்சுவர் 13 அடி அகலமும், வெளிசுவர் 7 அடி அகலமும் கொண்டவை, இவ்விரு சுவர்களுக்கும் இடையே ஒரு கட்டை வண்டி செல்லும் அளவிற்கு இடைவெளி இருக்கிறது. 


அந்த சுவற்றில் தஞ்சை ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. கூடவே பரதத்தின் பாவனைகள் மற்றும் நிற்கும் விதத்தினை (Pose) 108 சிற்பங்களாக வடிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு 81 சிற்பம் மட்டுமே முடிவுற்ற நிலையில் உள்ளது, 82 ல் இருந்து சிற்பமாக்கப்படா பாறைகள் மட்டுமே இன்றும் உள்ளது, இது கோயிலின் கட்டுமான பணி முழுமைப் பெறவில்லை என்பதற்கான சான்று.


இவ்விரு சுவர்களும் கோபுரத்தின் stability ஐ உறுதி செய்வதற்கான கட்டுமானம்.


இக்கோபுரம் sound proof ஆகவும்‌ கட்டமைக்கப்பட்டுள்ளது.‌( Is it not Acoustics Engineering). அங்கு நின்று ஓம் என்று உச்சரித்தால், வெளியில் செல்லாது உள்விதான கல்லில் பட்டுப்பெருகி ஒலிக்கும்


கூடவே, கோயிலில் காணப்படும் கல்வெட்டில் தலைமை தச்சர் பெயர், ஓவியர்கள், சிற்பிகள் என அனைவரின் பெயரும், கோயில் கட்டுமானப் பணிக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர்கள், பராமரிப்பு பணி மற்றும் செய்யப்பட வேண்டிய பூஜைகள் குறித்தும் 107 பத்திகளில் விளக்கமாக பொறிக்கப்பட்டுள்ளது.


சரிங்க...


ஓவியம், தூய்மையும் தமிழ் அழகியலும், பறையும் அழகியலும், கிருஷ்ணர்  பாதம் வரைவது  Action பெயின்டிங் ஆ, சதுர வடிவ தரையின் மேல் எப்படி dome கட்டுவது? Mughal architecture க்கு முன்பே தமிழர்கள் அக்கலையழகில் சிறந்து விளங்கினார்கள் அதற்கு சான்று இருக்கிறதா? கேன்வாஸ் பெயிண்டிங்கிற்கும் சேலை என்ற சொல்லுக்கும் என்ன தொடர்பு?

மூலிகையில் வண்ணம் தீட்டியதில் யார் முன்னோடி?


மருத நிலத்திற்கு வந்தப்பின் ஓவியங்களை, சிற்பங்களை மறக்கவில்லை, அவர்களே வளர்த்தெடுத்து இருக்கிறார்கள் என்பதற்கு சான்று இருக்கிறதா?


தமிழிசை, நாட்டுப்புற இசை, நாட்டுப்புற படைப்புகள் செவ்வியல் படைப்புகளாக கருதப்படவில்லையே ஏன்?


தமிழ் அழகியலில் தமிழருக்கே இடமில்லாது போனது ஏன்?


பூச்சூடலின் அழகியலுக்குப் பின்னுள்ள அறிவியல் என்ன?


இன்னும் பல செய்திகளை நாளை  பார்ப்போம்.


இத்தகைய சிந்தனைகளை வெளிசொல்ல வாய்ப்பாக அமைந்தது த.ம. அ நடத்திய திசைகூடல் நிகழ்வும், அதில் உரையாற்றிய இந்திரன் சார் அவர்களின் உரையும் தான்.


அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும், பேரன்பும்


அன்புடன்

-கோ.லீலா.

No comments:

Post a Comment