குவளையம் வியந்து போற்றும்
திருக்குவளையே !
முத்துவேலர் அஞ்சுகத்தம்மை
ஈன்றெடுத்த நித்திலமே!
உறங்கினாலும் சிங்கம் சிங்கம்தானே !
தமிழை கர்ஜித்த தங்கமே !
உயிர்ப்போடு இருக்கும் என் எண்ணமே !
படைப்புலகின் பெட்டகமே !
தாடியில்லா கம்பனே!
சொற்களில் விளையாடும் வம்பனே !
தடியில்லா பெரியாரே!
பொடியில்லா அண்ணாவே!
எவ்வளவு எழுதினாலும் தீருமோ
உன் தமிழ் மீதான மோகம்!
திருக்குவளையை அடக்க முடியுமோ
சிறு குவளைக்குள்!
நீ அலைந்த மண்ணில் நானும்
அலைந்தேன் என்பதொன்று போதாதா?
நீ கல்வி கற்ற இடத்தில்
கற்றேன் என்றாலது இறுமாப்பா?
கமலாலய காற்றில் வீசும் உன்
தமிழை சுவாசித்தது வரமல்லவா?
யாருக்கு வாய்த்திருக்கும் இப்பெரும் பேறு !
எண்ணி எண்ணி எய்துகிறேன் இறும்பூது!
தலைமுறைக்கும் தமிழ்போதித்த
குரு தெட்சிணாமூர்த்தியே!
இன்று எளியோரின் கையில் தவழும் கருணா "நிதி"யே
ஊரெல்லாம் கலைஞர் எனும்
சிலர் கருணாநிதி என்பர்
பலர் தலைவர் என்பர்...
எங்களுக்குதான் வாய்த்தது
நம்ம ஊரு தாத்தா எனும் பெரும்பேறு !
திருவாரூரில் நீ அசைத்த
பெருந்தேரு சொல்லும்
உன் சமத்துவ கூறு!
பூம்புகார் புகழடையும்
வள்ளுவர் எழுந்து நிற்பார்
தாத்தா நீ கோலெடுத்தால்
எழுது கோலெடுத்தால்!
அந்நிய தேசத்தில் இருந்தது போலிருந்தோம்
புண்ணிய தேசமாய் உணருகிறோம்
ஒரு மரம் பூத்ததில்...
கொடுங்காலத்தில் மருத்துவ மணம் வீசும் நீலமலரது!
உன் கிளைகள் என்றும்
சமத்துவத்தைதான் பூக்கும்!
- கோ.லீலா.
No comments:
Post a Comment