Wednesday, 2 June 2021

குக்கூ குக்கூ

 

குக்கூ குக்கூ ன்னு சத்தம் கேட்குதா?

ஆமாங்க மே10 உலக வலசை போதல் தினம்.

பழைமையான காடு என்றால் அதிகமான ஓசை இருக்கும்...

பறவைகளின் கீச்சொலி கீதம் மட்டுமில்லை, காடுகளின் அடிநாதம் அதுதான்.

காட்டின் நலனை பறவைகளின் ஓசையை வைத்துதான் கணிக்கிறார்கள்....

வண்ண வண்ணச் சிறகுடன் எண்ணம் நிறைக்கும் இசையுடன்

விதையை தூவி பச்சைய பாத்திரம் செய்யுமோர் அட்சயப் பாத்திரம் பறவைகள் பற்றி பார்க்கலாம் வாங்க...

வலசை என்பது தமிழர்களுக்கு புது சொல் அல்ல... புலம்பெயர் புள், வம்பப் புள் என்றெல்லாம் பழந்தமிழ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புள் =பறவை.

பறவை மட்டுமல்ல பல்வேறு கானூயிர்களும், கடல்வாழ் உயிரினங்களும் புலம்பெயர்கின்றன.

பூமியின் காந்த விசையில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து தாங்கள் சேருமிடத்தைக் கண்டறிகின்றன.

ஆமா பறவைகள் ஏன் வலசை போகின்றன...

மனிதர்கள் தேன்நிலவுக்கு போற மாதிரிதான், இனப்பெருக்கம் செய்ய தக்க சீதோஷ்ண நிலை உள்ள இடத்திற்கு பறந்து போறாங்க, ஆனால் எல்லோரும் அப்படியில்லைங்க...

திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடுங்கற மாதிரி ஓரிடத்தில் ஏட்படும் உணவு பற்றாக்குறையை சரிசெய்துக் கொள்ள சொய்ங்னு பறந்து நம்ம நாட்டுக்கும், ஆப்பிரிக்கா வுக்கும் ஏப்ரல், மே மாதங்களில் வந்திடுவாங்க...

ஹனிமூனோ, வேலையோ, வெளிநாடு போக தயாராகணும் இல்லையா?

எப்படி தயார் ஆகுறாங்க பாருங்க !

இடம்பெயர்வதற்கு முன்பாக தனது எடையில் பாதி எடைக்கு ஓர் அடுக்கு கொழுப்பை உடலில் சேர்த்துக்கிறாங்க. 200 கிராம் எடையுள்ள ஒரு பறவை, உடலில் 100 கிராம் கொழுப்பை சேமித்துக் வச்சிக்கிறாங்க. இதுதான் பறப்பதற்கான எரிசக்தியாம்.

சில பறவைகள் கறுப்பு நிறத்திலும், ஆழ்ந்த பிக்மென்ட் மற்றும் உயர்வான ஆன்டி ஆக்சிடன்ட் கொண்ட பழங்களை விரும்பி சாப்பிடுவாங்க.

இதனால்தான் ஒரே மூச்சில் பல ஆயிரம் கி.மீ., பறக்கும் மூக்கானால், எட்டரை நாட்கள் பட்டினியாக இருக்க முடிகிறது.

எப்படி அணிவகுத்து பறக்கணும்னு கூட ஒத்திகை பார்த்துப்பாங்க..

V வடிவத்தில் அணி வகுத்து பறப்பாங்களாம், முதலில் யாரு தலைவர்னு முடிவு செய்யணும்ல...

அப்படி ஒரே ஒரு தலைவரெல்லாம் கிடையாது..‌.‌ எல்லோரும்‌ இந்நாட்டு மன்னர்கள்னு ஷிப்ட் போட்டு அணியை தலைமை தாங்கி பறப்பாங்க.

தலைமை தாங்குறவங்க சிறகசைக்க, காற்றின் வேகத்திற்கு V  வடிவத்தில் பறப்பதால், பின்னால் வரும் பறவைகளுக்கு கொஞ்சம் சிறகசைக்கும் வேலை மிச்சமாம்.

பறவைகள், முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் நிலமே அதன் தாய் நிலம் என்கிறார்கள் பறவையிலாளர்கள்.

நாம சொல்ற வானிலை மழை வரும்னா வராது, வராதுன்னா வரும் அப்படியில்லைங்க, இவங்க வானிலையை அறிவதில் பலே கில்லாடிகள்...

இவங்க வான்வழி பாதையாக 12 பாதையை வச்சிருக்காங்க...

பறவைகளும்‌ காதலும்

🐧❤️🐧❤️🐧❤️🐧❤️🐧❤️🐧❤️🐧


பெண் பறவையை‌ கவர தூக்காணங்குருவி அழகாக கூடு கட்டணும்...

பனங்காடை அந்தரத்தில் அதிகமுறை குட்டிக்கரணம் போடணும்...

பென்குயினில் ஆண்தான் அடைக்காக்கும்.

இருவாட்சியில், பெண்ணுக்கும், குஞ்சுக்கும் உணவு கொடுத்து இறக்கை முளைக்கும் வரை பார்த்துக்கணும்.

இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் 

இளைப்பாற மரமே இல்லை

கலங்காமலே கண்டம் தாண்டுமே 

பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்

படம்: சத்தம் போடாதே!

எனக்கு மிகவும் பிடித்தப் பாடல், ரொம்ப நாள் ரிங்டோனா வச்சிருந்தேன்...

இந்த வரிகள் என்னை கவர்ந்தது, விடுவோமா ! உண்மையான்னு  ஆராய்வோம்ல...

ஆச்சரிய செய்திகள் கிடைத்தது

படிங்க, அசந்து போவீங்க...

நமது கட்டை விரல் பருமனில் உள்ள டகங்காரப் பறவை முதல் குதிரை அளவு கொண்ட நெருப்பு கோழி வரை இந்தியாவில் 1,263 பறவை இனங்களும், அதில் தமிழகத்தில் 520 இனங்களும் உள்ளன. இதில் 160 இனங்கள் வலசை செல்லக்கூடியவை. வாலாட்டுக்குருவி, ஒவ்வொரு ஆண்டும் ரஷ்யா சென்று வருமாம். 

வரித்தலை வாத்து மங்கோலியாவில் இருந்து 21ஆயிரத்து 120 அடி உயரமுடைய இமயமலையை கடந்து 8,000 கி.மீ., தொலைவை இரண்டு மாத காலத்தில் பறந்து கூந்தங்குள்ளத்தை வந்தடைகிறதாம்.

மிகவும் நீண்ட துாரம் பறக்கும் வலசைப் பறவை 'ஆர்ட்டிக்டேன்'. வடதுருவ ஆர்க்டிக்கில் இருந்து ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா கண்டங்களின் வழியே தென்துருவ அண்டார்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் இவை போகின்றன. 

ஒரு அடி நீளமுள்ள இப்பறவை, வாழ்நாளின் பெரும்பகுதியை பறப்பதிலேயே செலவிடுகிறது. இது ஒரு முறை வலசை சென்று திரும்பி வர 70ஆயிரத்து 900 கி.மீ., பயணிக்கிறது.

தமிழில் 'மூக்கான்' என நாம் அடையாளப்படுத்தும் காட்விட் பறவைக்கு, உலகிலேயே அதிக துாரம் ஒரே மூச்சில் நிற்காமல் பயணிக்கும் பறவைகளின் பட்டியலில் முக்கிய இடமுண்டு. நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள மிராண்டாவில் இருந்து 2007 மார்ச்சில் புறப்பட்ட பெண் பட்டை வால் மூக்கான் பறவை உடலில், சிறிய ரேடியோ மின் அலைபரப்பி பொருத்தப்பட்டது. இதன் பயணம் செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்பட்டது.

இப்பறவை இரைக்காகவோ, தண்ணீருக்காகவோ எங்கும் தரையிறங்காமல் எட்டு நாட்கள் பறந்து 10 ஆயிரத்து 200 கி.மீ.,ல் உள்ள 'யாலு ஜியாங்' என்ற இடத்தை அடைந்தது. பின், ஐந்து வார ஓய்வுக்கு பின் அங்கிருந்து கிளம்பி ஐந்து நாட்களில் 7,400 கி.மீ., பறந்து அலாஸ்காவின் யூகான்-குஷாக்வின் முகத்துவார பிரதேசத்தை எட்டியது. நான்கு மாதங்களுக்கு பின் மீண்டும் ஆக.,30ல் புறப்பட்டு வேறு பாதையில் 11 ஆயிரத்து 600 கி.மீ., ஒரே மூச்சில் பறந்து எட்டரை நாட்களில், கிளம்பிய இடமான மிராண்டா பகுதியை அடைந்தது.

இந்த சிறு பறவை ஏறத்தாழ ஆறு மாதங்களில் 29 ஆயிரத்து 200 கி.மீ., பயணம் செய்தது. மூக்கான்களை ராமநாதபுரம் மாவட்டம் கோடியக்கரையில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை பார்க்கலாம். மூக்கானின் வேகம் மணிக்கு 58 கி.மீ., வலசை பறவைகளில் பெரும்பாலானவை இரவில் பறப்பவை.

ஆத்தி ! பறவை எங்கே நம்ம எங்கே...

நான்‌ பார்த்து இன்றும் பிரமிக்கும் பறவை இருவாட்சி..

என்ன சவுண்ட், என்ன சைஸ்...

அது சரி #வேள்பாரி யில் 

காக்காவிரிச்சின்னு சொல்றாங்களே அது உண்மையான்னு பார்த்தால், அது பேரு காக்காய்வெருட்சி யாம் இங்கிலீசுல Greater false vampire bat  ன்னு சொல்றாங்க, காக்காவை வெருண்டு ஓடச்செய்யும் வவ்வால் இனம்.

சும்மா 10 செ.மீ நீளமும், 60 கிராம் எடையும் கொண்ட இவங்க அசைவக்காரவங்க...

அது சரி, இப்படி நீட்டி முழக்கி பறவையை பற்றி ஏன் பேசணும்ங்கிறீங்க...

பறவை இல்லேன்னா, பிரபஞ்சம் இல்லைங்க... அட காடு வேணும், மழை வேணும்... எத்தனை வேணும் அத்தனைக்கும்‌ பறவை வேணும்...

பறவைக்கு சோறு வைக்கிறேன், தண்ணி வைக்கிறேன்னு கிளம்புற மக்கா !

ஒரு செடி வைங்க, மரமாகட்டும், அவங்களுக்கு பிடிச்சத அவங்களே தேடி 

சாப்பிடுவாங்கல்ல...

அப்படியே நீர்நிலையெல்லாம்‌ பாதுகாப்பா பார்த்துக்கங்க, வெளிநாட்டு பறவைகள் நம்ம நாட்டுக்கு விரும்பி வரணும்ல.

மனிதர்களை விடவும் மகத்தானவைகள் பறவைகள்.

இந்த வருட தீம் என்ன?


Sing, Fly, Soar - Like a bird.


பாடுவோம், பறப்போம், உயர்வோம்‌ பறவைகளாக பறவைகளோடு!


பறவைகளின் கீதம்

காடுகளின் நாதம்.


அன்புடன்

- கோ.லீலா.

No comments:

Post a Comment