Tuesday, 1 June 2021

உலக பல்லுயிர் தினம்.

 மனிதர்களின் வாழ்வியலோடு பெரிதும் தொடர்புடைய நாள் ஒவ்வொன்றிற்கும் ஒரு கருத்துரு தந்து, ஒவ்வொரு நாளும் கவனம் செலுத்தப்பட வேண்டிய நாள் என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு தினம் அனுசரிக்கப்படுகிறது.


இப்பூமி மனிதர்களுக்கு மட்டுமானது அல்லது, யானை, திமிங்கிலம் போன்ற பேருயிர்களும், எறும்பு, கரையான் போன்ற சிற்றுயிர்களும், இன்னும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும் உரிமை கொண்டுள்ள இடம்தான் இவ்வழகிய பூமி.


நானூறு வருடம் வாழும் ஆமைக்கும் அல்ப ஆயுசு என்று கருதப்படும் ஈசலுக்கும் ( உண்மையில் அப்படியில்லை )  உரிமையுள்ள பூமி.


பாலையிலும், சோலையிலும், நீர்நிலையிலும்,மரங்களிலும், மலைகளிலும் வாழக்கூடிய எண்ணற்ற பல்லுயிர்களை பேணிகாக்க வேண்டியது மனிதர்களின் கடமை.


இந்த வருட கருத்துரு We are part of solution for nature. தீர்வின் ஒரு பகுதி நாம்தான் என்கிறபோதே... இயற்கையின் மீதான ஆதிக்கத்தை, வன்முறையை மனிதர்கள் கைவிட வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு தான் இவ்வாண்டின் கருத்துரு.


உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக உலக பல்லுயிர் தினம் மே 22 ல் கொண்டாடப்படுகிறது. 

உயிரினங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.


பல்லுயிர் பரவல் குறைவிற்கு காலநிலை மாற்றமே  நேரடி காரணமாக உள்ளது. குறிப்பாக இனப்பெருக்க காலம், தாவரம் வளரும் காலம் பாதிக்கப்படுவதாலும், இக்கால மாற்றத்தால் ஏற்படும் உணவு பற்றாக்குறை, வலசை போதலில் தடை ஆகியவற்றாலும் பல்லுயிர் பரவல் பாதிக்கப்படுகிறது.


உலகில் உள்ள 190 நாடுகளில், 17 நாடுகளில் மட்டும் 70 சதவிகித தாவர, விலங்கு உயிரினங்கள் உள்ளன. 


இந்த 17 நாடுகளும் 'பெரும் பன்மய' நாடுகள் என்ற சிறப்பை பெற்றுள்ளன. அவற்றுள் இந்தியாவும் ஒன்று. கிழக்கு விந்திய மலைகளும், மேற்குத் தொடர்ச்சி மலைகளும் இந்தியாவின் பல்லுயிர் வளத்திற்காக உலக அளவில் கவனம் பெற்றவை. 


இந்தியா போன்ற வெப்பமண்டல தேசம் பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு நாடு என்பதே இந்தியாவின் சிறப்பு ஆகும்.


கடல், மலை, சமவெளி, பள்ளத்தாக்கு, பாலைவனம், சோலைக்காடுகள், சதுப்பு நிலங்கள், ஏரிகள், கழிமுகங்கள்,  என அனைத்து வகை நிலங்களையும், அதில் வாழக்கூடிய உயிரினங்களையும் கொண்ட சிறப்புமிக்க புவியியல் அமைப்பும், இயற்கை வளமும் கொண்டது நம் தேசம்.


உலகின் 16 சதவிகிதம் பல்லுயிர் வளம் இந்தியாவில் உள்ளது. இன்னும் இனம் கண்டறியப்படாத 4 லட்சம் உயிரினங்கள் இந்தியாவில் இருக்கலாம் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.நம் நாட்டைப் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் உள்ள மழைக் காடுகளில்தான் உயிரினப் பன்மை செழித்துக் காணப்படுகிறது. ஏறத்தாழ 91,000 உயிரினங்களும், 45,000 தாவரங்களும் நம் நாட்டில் இனம் காணப்பட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. 45,000 தாவர இனங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவுக்கு மட்டுமே உரித்தானவை.தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட பாலுாட்டி வகைகள், 400க்கும் மேற்பட்ட பறவை வகைகள், 160-க்கும் மேற்பட்ட ஊர்வன வகைகள், 12,000-க்கும் மேற்பட்ட பூச்சி வகைகள், 5,000-க்கும் மேற்பட்ட தாவர வகைகள், 10,000-க்கும் மேற்பட்ட சங்கு, சிப்பி, கடல் வாழ் உயிரின வகைகள் உள்ளன.நெல் என்ற ஒரு இனத்தை எடுத்து கொண்டால், இந்தியாவில் இரண்டு லட்சம் நெல் ரகங்கள் இருந்ததாக இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரிச்சாரியா ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 


நம்முடைய பொறுப்பற்ற அலட்சிய போக்கால் பல அரிய இயற்கை பொக்கிஷங்களை இழந்து வருகிறோம்.


பல்லுயிர் என்பது சூழல் ரீதியாக மட்டுமில்லாமல், கலாச்சார பண்பாடு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக பண்பாட்டு அசைவுகளை காக்கவும், மண்ணரிப்பு, நீர்நிலைகளை பாதுகாத்தல், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த, நல்ல இயற்கை மருத்துவம் பெற என பல்லுயிர் பரவும், உயிர் பன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும்.


மனிதர்களின் நடமாட்டம் குறைந்த இந்த கொரோனா காலத்தில் இயற்கை இயல்பு சுவாசத்திற்கு திரும்பியிருக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.


கொரோனா காலத்திற்கு பின்பும் அந்நிலை தொடர, இயற்கைக்கான தீர்விற்கான பகுதியாக நாம் இருக்க வேண்டும்.


பூமியின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க வேண்டியது நம் கடமை என உறுதிமொழி ஏற்போம்

- கோ.லீலா, பொறிஞர்,சூழலியலாளர், எழுத்தாளர்.



No comments:

Post a Comment