Monday, 15 January 2018

கிராமிய நிலை........



அரைப் பரீடசை விடுப்புக்கு
ஆத்தா ஊருக்கு வரேன்னு
ஆச பேரன் சொல்லிப்புட்டான்
அடுக்காய் அடுக்காய் அவன்
ஆசைகளை அடுக்கிட்டான்
விளைஞ்ச நிலமதிலே கதிரோடு
நின்னு படம் புடிக்கணுமாம்
களைப்பு தீர குளத்துல
முங்கி குளிக்கணுமாம்
ஆத்தா முந்தானையிலே
மீனும் நிறைய புடிக்கணுமாம்
பொரிச்சு தின்ன பின்னால
கன்னுக்குட்டி பால் குடிக்கும்
அழகை படம் புடிக்கணுமாம்.
பதபதச்சு போனா மயிலாத்தா
பழைய நினவுக்குள்ள
நழுவிப்போனா அந்தாத்தா
காவிரி ஆத்துல தண்ணி வர
கறுப்பு வாவால் துள்ளி வர
தேனாத்துல தண்ணி வர
தெப்பிலி கெண்டை மிதந்து வர
நீலாத்துல தண்ணி வர
நெத்திலி மீனு துள்ளி வர
பாலாத்துல தண்ணி வர
பப்பாளி கெண்டை துள்ளி வர
பாலாத்து பரமசிவனுக்கு
நிறஞ்ச சோவனம் கொட்டுங்கடி
என கைத்தட்ட கனவுல
காலம் கழிஞ்சது நினைச்சி
பதறி எழுந்திரிச்சா மயிலாத்தா
என்னான்னு சொல்லுவேன்
ஏதுன்னு சொல்லுவேன்
பாடையில வாரது போல்
கூடையில வர மீன
திங்கறத சொல்வேனா
கண்மாய் குளமெல்லாம்
கரட்டு மேடு ஆனத சொல்வேனா
விளை நிலம் இங்கே
கம்பி வேலிக்காரனுக்கு
கைமாறி போனத சொல்வேனா
கறவை மாட்டைக் கடங்காரனுக்கு
அவுத்து கொடுத்தத சொல்வேனா
பதறிப் போனா மயிலாத்தா
பரபரன்னு காயிதம் தேடி
ஓடுனா அடுத்து வீட தேடி
படிச்ச பய அவனப் பார்த்து
பேரனுக்கு காயிதம் ஒண்ணு
போடச் சொன்னா மயிலாத்தா
"விடுப்புக்கு நான் வாரேன் அங்க"ன்னு
“வா”ன்னு பதில் கடுதாசி
வந்தபின்னும் தனக்குள்ளே
ஒப்பாரி வச்சியழுதா மயிலாத்தா
காசு பணம் சேத்து என்ன செய்ய
கண்னே நீ கேட்ட காட்சி
சுகமெல்லாம் காசு கொடுத்தாலும்
கிடைக்காதே என்ன செய்ய….
மழ ஒருநாள் வரும்
கனவெல்லாம் நிறைவேறும்னு
தனக்குத் தானே சொல்லிக்கிட்டா.
மனச கொஞ்சம் தேத்திக்கிட்டா.
-கோ.லீலா.

No comments:

Post a Comment