Monday, 15 January 2018

பாம்படம்.....


பாம்படம் ஆடி வர
பலகதைகள் பேசி வர
ஊர்கதை வம்பளந்து
உறவுகுள்ள உசந்து
நின்னா முத்தம்மா
இளசா இருக்கையிலே
இளந்தாரியை கைப்பிடிக்கையிலே
மனமுவந்து பூட்டிக்கிட்ட
பொன்நகைதான் பாம்படம்
காது கேக்காத கதையையும்
பாம்படம் வச்சிருக்கும் பத்திரமா
பிறகதை சொல்லும் சரித்திரமா
இட்லி அவிச்ச கதை
இடியாப்ப மாவு இடிச்ச கத
வெல்லம் இடிச்ச உரலுல
முறைமாமன் தலைவிட்ட கத
ஆளான பொண்ணுக்கு
சோவனம் போடும் கத
முறைமாமன் மீசை முறுக்கையிலே
முகம் சிவந்து நின்ன கத
இப்படி ஏதோ ஏதோ கத சொல்லும்
இதிகாசமதையும் விடாது
இப்போ பாக்கு இடி சத்தமோடு
மருமகளை முணுமுணுக்கும்
மத்த நேரம் வெறும் வாசல் பாத்திருக்கும்
மின்விளக்கில்லா வீட்டு சிம்னிப் போல
ஓரத் திண்ணையில ஆத்தா ஒத்தயா
முணுமுணுக்க  பாம்படம் மட்டும்
கேட்ட்தா  தலையசைக்கும்….
கதக்கேட்டு கதச்சொல்லி கதமுடிஞ்ச
பாம்படம் கனத்துக் கிடக்க
பாம்படத்தை கழட்டமா
பக்குவமா பாத்துக்கிட்டான் மகன்
பலகதை சொல்லிடுமோன்னு
பயந்தே போயிட்டான்
பாம்படம் புதைஞ்சி போச்சி
பழங்கதை மறஞ்சி போச்சி
பாட்டியில்லா வீட்டில்
ஐபாடு கதை சொல்லுமா….
-கோ.லீலா.

No comments:

Post a Comment