Monday 15 January 2018

தைப்பொங்கல்..



பழையக் கஞ்சிய ஊத்திக்கிட்டு
தூக்கு சட்டிய தூக்கிக்கிட்டு
வரப்பு மேட்டுல வெரசா நடக்கும்
கண்ணம்மா உன்
வயக்காடு நனைஞ்சிதா
வயத்துபாடு குறைஞ்சிதா
கல்யாண கடன் அடைஞ்சிதா
படிக்க வைக்க கண்ட
கனவு ஏதும் பலிச்சிதா
சோடி மாட்டை ஓட்டிக்கிட்டு
சோறில்லாமா பாடிக்கிட்டு
ஊருக்கே சோறுபோடும்
சின்னையா நீ
விதச்ச வெத நின்னுச்சா
வைக்கோலாவது மிஞ்சிச்சா
தண்ணி…….
கணக்கு பார்க்கும்அதிகாரி
என் மனசெல்லாம் கனக்குது
நினைக்க நினைக்க
கண்ணிரெண்டும் பொங்குது
சம்பாவோட குறுவையும்
யாருக்கு இங்கே தெரியுது
நித்தம் பொங்கும் உன்
அடிவயிறு யாருக்கு புரியுது
பாக்கெட் பாலு ஊத்தி
பட்டணத்து பொங்கல் பொங்குது…….
பகட்டா வாழ்த்து சொல்ல
உழவன் பேர சொல்லுது
என் வீட்டு மஞ்சக் கொத்துல
ஒட்டி வந்த வயலு மண்ணு
உன் உதிரத்த உதிர்க்குது….
என் மனசு இங்கே நிக்கலே.
உன் வீட்டு பானை
அடுப்பேறிச்சா தெரியல.
நினைக்க நினைக்க
கண்ணு ரெண்டும் பொங்குது
கால்வாயா ஓடுது.
தைப் பொங்கல் நாளாச்சும்
எல்லார் மனசிலேயும் உன்
நெனப்ப பொங்க வைக்கவாவது
வந்து போகட்டும் தைப்பொங்கல்.


-கோ.லீலா.


No comments:

Post a Comment