Monday, 15 January 2018

தை மகள்.

தைமகளே நீ வந்தா
தரையெல்லாம் குளிரும்ணு  
பிறைமதி வானை பிரியுமுன்னே
வண்ண வண்ண இழையாலே
பூக்கோல சமுக்காளம்
வாசலிலே விரிச்சிருக்கேன்
தைமகளே நீ அமர
பேசிடணும் ஏராளம்
நீ காட்டணும் மனத்தாராளம்
அறுவடை நாளே உலகெங்கும்
புத்தாண்டாய் தானிருக்க
பொங்கலாய் மட்டும் நீ
வந்து போகலாமோ சொல்லு
மீன மேஷம் பார்த்து
புத்தாண்டை மாற்றிட்ட
சோறு கஞ்சி இல்லாம
சாகுமோ அந்நாளில் ஆதி
தமிழ் மக்கள் கூட்டம்
தைமகளே  நீயே
புத்தாண்டாய் இருந்திட்டா
கையில் கொஞ்சம் காசிருக்கும்
சுருக்கு பையும் நிறைஞ்சிருக்கும்
அறுத்த நெல்லு மணம் சேர
குதிருக் கூட நிரம்பிவிடும்
பூக்கோலம் விரிஞ்சிருக்கும்
நடுவே பூசணிப் பூ சிரிச்சிருக்கும்
மஞ்சளோடு இஞ்சிக்கொத்து
மணத்து மங்கலத்தை பெருக்கிடும்
அச்சுவெல்லம் பச்சரிசி பாலோடு
தான் பொங்க முந்திரியும் ஏலமும்
உழவன் மனசுப் போல மணத்திருக்கும்
உழவன் முகம் மலர்ந்திருக்க
நுனிக்கரும்பும் இனிப்பாகும்….
உழைத்த உயிர்களுக்கெல்லாம்
அன்று ஒருநாள் விடுப்பாகும்
அவர்களுக்கு நன்றி
சொல்லல் எம் பொறுப்பாகும்.

-கோ.லீலா

No comments:

Post a Comment