Wednesday 11 April 2018

காவிரி தாய்.......



பூவாடை மேனியெங்கும்
பூத்து மணம் வீசிவர
குடகு மலை காற்றும்
கைவீசி சேர்ந்து வர
எம்பூமி நீ நடந்த
நாளல்லாம் திருநாள்தான்
கரையோர தருவெல்லாம்
முக்கனியை உதிர்த்துவிட 
முக்கனியின் சுவையோடு
முத்தான சொல்லெடுத்து
சத்தான தமிழ்கொடுத்து
கொத்தாக நெல்கொடுத்த
காவிரி தாயே!
காவியங்கள் பலதந்து
கற்புக்கும் நாயகியாய்
கண்ணகியை வழிநடத்தி
காதலுக்கு உடனிருந்து
கவிதைக்கு நீரூற்றி
காயாத வயலெல்லாம்
தமிழாக நெல்விளைய
கண்டிருந்த நாளெல்லாம்
கனவாய்தான் போனதம்மா
சீர்தந்தும் பேர்தந்தும்
வாழ வைத்த காவிரியே
வாரியம் அமைக்க முடியலையே
வாக்கு கெட்டு போனதாலே
கவிதை தந்த காவிரி
காய்ந்து வெடித்த நிலமாகி
சருகுக்கே இடமாகி போனதம்மா
கண்ணு ரெண்டும் காட்டாறா
கால்வாயா தான் ஓடுதம்மா
மூவாயிரமாண்டா முத்தொள்ளாயிர
ஆண்டா காவிரி கரைசேர்த்த
நாகரிகமெல்லாம் நகலழிஞ்சி
நகரழிச்சி போயிடுமோ.
குடமுருட்டி நீபாய்ந்து
கொழித்து செழிக்க வைத்த
உன்னைதான் தறிக்கெட்ட மனசு 
பகடையா உருட்டுதம்மா 
சூரியனின் செந்நிறம் மின்ன
வெள்ளை நதியாய் நீ நீள
பசுமையாய் கொடி விளைந்தம்மா
நீலசக்கரம் கழன்றுதான் போனதுவோ
சுழலமால் தான் நின்னதுவோ
ஏரோட்டம் நின்றுவிட்டால்
பாரோட்டம் என்னாகும் 
சிறுமனசு பதறுதம்மா.
பார்த்தவருக்கெல்லாம் நீ ஆறு
உன்மடி வளர்ந்த எங்களுக்கு
நீர் உணவு! நீர் உணர்வு!
நீர் தமிழ் ! நீர் தாய்! நீர் உயிர்!
தவறியும் மலடென உனை
சொல்லமாட்டேன் தாயே !
மாற்றானும் மூழ்கிடமா
தடம் தந்து காத்திடும் நீ
மீண்டும் உயிர்த்தெழுவாய் !
உயிரான தமிழாய் வருவாய் !
-கோ.லீலா

No comments:

Post a Comment