Wednesday, 11 April 2018



மேகங்களற்ற விண்மீன்
நிறைந்த வான்கொண்ட
இரவின் அழகென அவள்
மெல்ல நடந்து செல்கிறாள்
மேன்மையான இருளும்
ஒளிரும் ஒளியும்
அவளது விழிகளில்
சந்தித்துக் கொள்ள
கனிந்த மெல்லிய ஒளியை 
கசியவிடுகிறது அவளது நயனங்கள்
என்றும் காணாத
வனப்புகளின் சொர்க்கமாக
காலங்களை மறுதலித்து
ஒளிவீசிக் கொண்டிருக்கிறது..
குறைந்த ஒளிக்கீற்றின் நிழலென 
கிளைகளில் ஊஞ்சலாடும்
அவளது பெருங்கருணையில்
முகம் ஒளிர்ந்து புனித
சிந்தனைகளை இனிய 
கீதமென வழிய
தூய்மையான நேசத்திற்குரிய
இருப்பிடமாக மாறுகிறது
அவளது கன்னங்களும்
புருவமும் மிக மென்மையாக
மௌனமாக எதையோ 
சதா முணுமுணுக்கிறது.
வென்றுவிடும் புன்னகையும்
பூக்களின் வண்ணத்தால்
ஒளிர்ந்த அந்த நாட்களின்
பேரானந்தம் குழந்தையின்
அன்பென வசீகரமாய் 
நெஞ்சினில் இசை மீட்ட…..
சட்டென எழுந்து அவளை
காண சென்றேன் அவளோ
மூடிய விழிகளுடன் எதையோ
வேண்டியப்படி நிற்கிறாள்
அவள் பெயர் காவிரி….
-கோ.லீலா.

No comments:

Post a Comment