பயணம்
வார்த்தையே சுகம் சேர்க்க கூடியது.ஓரிடத்தை விட்டு,அங்குள்ள அறிமுகமான மக்களை விட்டு வேறு இடத்திற்கு செல்வது,அல்லது நெருங்கியவருடனான பயணம்……..
எத்தனை
பயணங்கள்…….

கடல்
பயணம்,வானூர்தி பயணம்,பேருந்து பயணம்,ரயில் பயணம்,நடை பயணம் என வாகனத்தின் அடிப்படையிலும் பட்டியல் நீளுகிறது.
நிமிடத்திற்குள்ளாக நினைத்த
இடத்திற்கும்,மனிதர்களுக்குமிடையேயும் பயணித்து வரும் மனதின் பயணமே பெரும் பயணம்,பயணங்களின்
பயணமாக இருக்கிறது.
தந்தையிடமிருந்து தாயின் கருவறையை நோக்கி தொடங்கிய பயணம் இறுதி
பயணம் வரை நீண்டுக்கிடக்கிறது.இந்த தீராத பயணம் எதை நோக்கி?
ஒவ்வொவ்வொரு பயணமும் ஏதோ ஒன்றை அடைவதற்கான ஓயாத தேடலாய் இருக்கிறது,நினைவு
அடுக்களில் பெரிய பரப்பளவை இந்த பயணமும் அதனால் உண்டான நினைவுகளுமே ஆக்கிரமித்து கிடக்கிறது.
பாறையை ஊடுருவும் வேரின் பயணங்கள் போல
சில பயணங்கள் வெளியில் தெரிவதில்லையென்றாலும்,ஆழமான மகத்துவமான பயணமாக
அது பரிமளிக்கிறது.

பல நேரங்களில் செவி இசையோடும்,கண்
காட்சிகளோடும் பயணிக்க மனம் பயணம் துறந்து நிகழ்காலத்தில் ஆனந்த நடனமிடவும்,சன்னலோர சிறு சாரலை கையேந்தவும்,முகம் நனைத்து மனம் வரை
நனையவும் இந்த பயணங்களில் சாத்தியமாகிறது.
பயணம் அறிவை மெருகேற்றி,மனதை
பண்படுத்தி,உணர்வுகளை தன் வசப்படுத்தும் கலையை போதித்து விடுகிறது,வழி நெடுக நேசம் நிறைந்த மனிதர்களையும்,இயற்கையின் கொடையையும்
தூவி வைத்திருக்கிறது,பல நேரங்களில் அறிமுகமில்லாத மனிதர்கள்
மன வலியோடு நம்மோடு பயணிப்பதும்,பக்கத்து இருக்கை குழந்தை நம்முள்
புன்னகையை விதைத்து பூத்து குலுங்குவதும் இயல்பாகிவிட,பயணம் சிந்தனையை
தூண்டும் உந்து சக்தியாக இருக்கிறது.
உணர்வுகளை
பரிமாறி கொள்ளவில்லையென்றாலும் உணவுகளை பரிமாறி கொள்ள தவறுவதில்லை இந்த பயணம்.சில நேரங்களில் தொலைத்த மனிதர்களின் நேசம் நினைத்து கண் கசியவும்
செய்து விடுகிறது, உண்மைதான் பயணங்கள் பல நேரங்களில் நினைவுகளின் அடுக்களில் பயணம் செய்ய, இனிய நினைவுகளும்,பெருமூச்செறிய செய்யும் நினைவுகளும்,வருத்தம்,இயலாமையென எத்தனையோ நினைவுகளை ஒரு நிமிடம் மனதின் மேற்பரப்புகளில் விரிய விட்டு சென்று விடும் வல்லமை வாய்ந்தது.
வாழ்க்கை
பயணம்:
வாழ்க்கை
பயணம் எத்தனை நீளம்
யாரறிவார்? இந்த பயணத்தின் வழியில் எத்தனை புன்னகைகள்,எத்தனை வருத்தங்கள்,எத்தனை கண்ணீர் துளிகள்,கருணைகள்,எத்தனை வலிகள்,வெளிப்படுத்தமுடியாத ஏக்கங்கள், எத்தனை கோபங்கள், வெறுமைகள், புகழ்கள், பெருமைகள், கர்வங்கள் இறைந்து கிடக்கின்றன.

வெற்றியும்,தோல்வியும்,உறவும்,பிரிவுமென இருபக்கங்களை சுமந்தபடியேதான் இந்த பயணம் தொடர்கிறது.வாழ்க்கை பந்தயமல்ல பயணம் என்பதை உணரும்போது,கீழிருக்கையோ மேல் இருக்கையோ பயணம் யாவருக்கும் ஒன்றுதான் என புரியும்.பயணத்தின் இறுதி வரை தொடர்ந்து யாரும் வரப்போவதில்லை.பயணமும் நாமும் மட்டுமே பயணிக்க வேண்டும்.பயணங்களை மட்டும் ரசிக்க பழகிவிட்டால் வாழ்க்கை இனிதாகிவிடும்.
மலை பயணம்

மலையின் பிரம்மாண்டம்
வியப்பில் ஆழ்த்திவிடுமென்றாலும்,பல நேரம் தனிமையில் மலையோடும்,மலைசார்ந்த காடுகளோடும்
இருக்க விரும்பி தனித்து இருந்தபொழுதுகளில் சட்டென்று ஒரு திகில் சூழ்ந்தது உண்டு,இந்த
மலைகள் எப்படி ஈர்க்கின்றன? இந்த மானுடத்திற்கு என்ன சொல்கிறது?
என்னிடம் இந்த
மலைகள் பேசியவை .
இந்த மலைகள் என்னை
பார்க்கின்றன ,என்னுடைய தகப்பனை,தாயை பார்க்கின்றன,எனது
பாட்டனையும்,ஆத்தாவையும் பார்த்திருக்கும்.ஆனால் நாம் எத்தனை காலம் இந்த மலைகளை பார்க்கப்போகிறோம்.ஆனால் இறுமாந்து சொல்வதென்ன “மலையை பார்க்க போகிறேன்”
என்று.மாறாக இந்த மலைதான் நம்மை ஓயாது பார்த்துக்கொண்டிருக்கிறது. மனிதர்களின் மன இடுக்களில்
ஒளிந்திருக்கும் ரகசியம் போல பல அற்புத ரகசியங்க்களை தன்னுள்ளே புதைத்து கொண்ட பேரழகி
இந்த மலை.
பொங்கி வரும் அருவிகளிலும்,நீரோடைகளிலும்,ரகசியங்களை வழிந்துவிடாமல் கவனித்துக்கொள்ளும்
நேர்த்தி பெரும் அனுபவத்தை தருகிறது,எனினும் ரகசியத்தை வெளியிட முடியாத ஏக்க கண்ணீராக
இந்த அருவிகள் இருக்ககூடாதென்பதே எனது ஆவல்.இப்படியாக பலநூறு எண்ணங்களையும்,மகிழ்வையும்,மனதையும்,உடலையும்
குளிர்வித்துவிடும் விந்தை இந்த மலைப் பயணத்திற்கு உண்டு.
பகலில் ஆற்றில்
அலையாட,கெண்டைகள் விளையாட,பறவைகள் காத்து நிற்கும் கோலமெல்லாம் இருளில் ஒளிந்துக்கொள்ள
இரவு வாழ்க்கை வனங்களின் இன்னொரு பக்க வனப்புகளை காட்டி பிரமிக்க வைக்கும்.
மலை பயணம், மலைக்க
வைக்கும் பயணம். அன்புடன் –லீலா.
-தொடரும்
No comments:
Post a Comment