Saturday, 30 July 2016

புலி வருது…...புலி வருது…….


அனைவருக்கும் வணக்கம்,

இன்னைக்கு புலி பற்றிய கதையை என் மகள் அம்முவிற்கு சொல்லும்போதே நீங்களும் கேட்டுக்கங்க…….

என்ன எல்லோரும் தயாரா,முறுக்கு,கடலை எல்லாம் வாங்கி வச்சிக்கோங்க

அம்மு வா வா….கதை ரெடி………..


                தேசிய விலங்கு 
                
அம்மு: வந்திட்டேன்,அம்மா! புலி நம் தேசிய விலங்குதானே…..தெரியும்      ஆனா அது என்ன சாப்பிடும்? எங்கேயிருக்கும்? காட்டுக்கு ராஜா சிங்கந்தானே அப்புறம் ஏன் புலிய தேசிய விலங்கா வச்சாங்க

சொல்றேன்,சரியா சொன்ன புலி நம் தேசிய விலங்கு,ஏன் சிங்கத்த வைக்கலைன்னு நானும் உன்ன மாதிரிதான் யோசிச்சேன் அம்மு.

"புலி பசிச்சாலும் புல்லை தின்னாது"

புலிகளோட பூர்வீகம் கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா,கிழக்காசிய நாடுகளில் புலியைதான் காட்டுக்கு அரசன் என்று சொல்வாங்க,புலியோட நெற்றியில்

王அடையாளம் போல இருக்கும்அது சீனா எழுத்தில் அரசன் என்பதை குறிக்கும்.

வரலாற்றில் புலிக்கும் சிங்கத்திற்கும் இடையிலான போர்களில் புலியே பெருமளவில் வெற்றிபெற்றுள்ளது.அதனாலதான் புலி தேசிய விலங்கா இருக்கும்னு நினைக்கிறேன்.

அம்மு: ஆமா,எப்போ பாத்தாலும் ஆனை கத சொல்லுவ,இன்னைக்கு ஏன் புலி கத சொல்ற?

நல்ல கேள்வி கேட்ட, என்ன நண்பர்களே உங்களுக்கும் இந்த சந்தேகம் இருக்கா?

ஜூலை 29 சர்வதேச புலிகள் தினம்,அதனாலதான் புலி கதை,உனக்கும் புலி தானே favourite animal அதனாலதான் புலி கதை,

அம்மு: அம்மா! புலி மேல கோடு இருக்குல அத பத்தி சொல்லும்மா.

புலியோட நிறம் ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த மாதிரி ஒரு நிறம் அது மேல கறுப்பு கோடுகள் இருக்கும்.

அடடே அரவிந்த் வா வா….

அரவிந்த்: அம்மு எப்படியிருக்க என்ன அத்தை,புலி கத சொல்றீயா?

ஆமாம் அரவிந்து.

அம்மு: நல்லயிருக்கேன்,நீ மாமா,அத்தை எல்லாம் எப்படியிருக்காங்க

அரவிந்த்:எல்லாரும் நல்லாயிருக்கோம்,சரி புலிக்கு ஏன் புலின்னு பேர் வச்சாங்க சொல்லு அத்த,

அம்மு,மற்றும் நண்பர்களே கேட்டுக்கங்க நீங்களும்

"டைகர்" என்ற சொல் "தீகிரிஸ் " என்ற இலத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது. இந்தக் கிரேக்கச் சொல்லானது பாரசீக மொழியில் அந்த விலங்கின் வேகத்தைக் குறிப்பிடும் வகையில் "அம்பு" எனப் பொருள்படும் சொல்லிலிருந்து பிறந்திருக்கலாம். மேலும் டைகிரிஸ் என்ற நதியின் பெயரிலிருந்தும் பிறந்திருக்கலாம்.

பாந்தெரா என்ற சொல்லானது செம்மொழிகளின் வழியாகவே ஆங்கிலத்திற்கு வந்திருந்தாலும் பெரும்பாலும் அது கிழக்கு ஆசியாவில் தோன்றியதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதன்படி இச்சொல்லுக்கு "மஞ்சள் நிற விலங்கு" அல்லது "வெளிர் மஞ்சள்" எனப் பொருள்.புலி குறிஞ்சி திணைக்குரியது.

அம்மு: அம்மா புலி என்ன சாப்பிடும் சொல்லவேயில்லையே.


சொல்றேன் சொல்றேன்..

புலி சரியான non vegetarian தெரியுமா?

அரவிந்த்: என்ன அத்த, சிக்கன் பிரியாணி சாப்பிடுமா?



ஹாஹா இல்லை இல்லை,இது உயர்நிலை ஊணுன்னி,அதாவது மான்கள், காட்டெருமைகள்,காட்டு பன்றி,இளம் யானைகள்,கரடி,ஆடு,மாடுகள் இவையெல்லாம் இதோட உணவு,மனுஷன கொல்லாது ஏன் தெரியுமா? மாமிசம் கம்மியா இருக்கும்

.



ஒரே நேரத்தில் 18 முதல் 20கிலோ எடையுள்ள மாமிசத்தை சாப்பிடும்.


3-4 நாட்களுக்கு 50-80 kg மாமிசம் சாப்பிடும்


அம்மு:அப்போ தண்ணி எப்படி குடிக்கும்?


ஆமாம், அம்மு உன்ன மாதிரிதான்,புலிக்கும் தண்ணில விளையாட ரொம்பவே பிடிக்கும்,




அதனால தண்ணி உள்ள இடத்துக்கு போய் விளையாடிட்டு,தண்ணி குடிக்கும், அப்புறம் கரையில படுத்து கிடக்கும்,அங்கே வர விலங்குகளை தண்ணியில தள்ளி வேட்டையாடும்.

அம்மு& அரவிந்த்: ஆமா,ஆமா,ஜங்கில் புக் படத்தில வருமே பார்த்திருக்கோம். அது எவ்வளவு length and weight இருக்கும்.

புலி செமையா கொழுத்த உடலும்,4மீ நீளமும்,300kg எடையும் இருக்கும்.இது ஆண் புலி,பெண் புலி அளவில் ஆண் புலிய விட சற்று குறைவா இருக்கும்,கிட்ட்தட்ட 9-10 மீ உயரம் வரை தாண்டும்,60 கி.மீ வேகத்தில் ஓடும்.


          பாயும் புலி                                                                           பாயும் புலி


அரவிந்த்: அத்த,புலி எவ்வளவு நாள் இருக்கும்?


நீ அதோட ஆயுட்காலத்தை பற்றிதானே கேட்கிறே? புலி சுமார் 15 முதல் 25 வருடங்கள் வரை உயிர் வாழும்.வயதான புலிக்கு வேட்டையாடுறது கஷ்டம் அப்போதான் மனுஷன சாப்பிடும்.

அம்மு: அம்மா,புலி காட்ல இருக்கும்னு சொல்ற அதோட வீடு குகையா? எவ்வளவு பெருசா இருக்கும்?


புலிகள் சுமார் 30 மைல் வரை தன்னோட எல்லையா வச்சிருக்கும்,மற்றப்படி உணவிற்காக எல்லையை விரிவுப்படுத்த தேவைப்பட்டால் விரிவுப்படுத்திக்கொள்ளும்,ஒரு புலியோட எல்லைக்குள் இன்னொரு புலி வந்தால் சண்டைதான் நடக்கும்,புலி தனியாதான் வேட்டையாடும்.புலி தனியாதான் வாழும்.



என்ன நண்பர்களே! குட்டீஸ்கள் செம கேள்வி கேட்கிறாங்க,கொஞ்சம் டீ,முறுக்கு சாப்பிட்டு தொடர்வோமா?

வந்தாச்சு,வந்தாச்சு, டீ,கடலை,சோளபொறி,முறுக்கு,எல்லாம்.

அரவிந்த்: அத்த அம்மு ஏன் டீ குடிக்க மாட்டேங்குது?ஜூஸ் தானா? டீ குடிச்சா கறுப்பாயிடுவாங்கன்னு சொல்லது உண்மையா அத்த?


தம்பி! அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை,நீ குடி,

அம்மு: டீ பத்தி கத சொல்லு


து இன்னொரு நாள் சொல்றேன்,சரி இப்போ டீ குடிக்க நண்பர்கள் எல்லாம் வந்தாச்சு,அப்படியே முறுக்க நொறுக்கிட்டே கதைய கேளுங்க.

எங்க விட்டேன்……………

அதான் தனியாதான் வேட்டைக்கு போகும்.


ஆங்.. தனியாதான் வேட்டைக்கு போகும்


,30 அடி தூரத்தில் இரை இருந்தாலும் குறி தவறாமல் பிடிச்சுடும்.இரையோட பின் கழுத்தை பிடிச்சு முதுகெலும்பை உடைச்சு,சுவாசத்தை நிறுத்திடும்.



அம்மு&அரவிந்த்: அய்யோ பயமாயிருக்கு,நைட் தான் வேட்டையாடுமா? எப்படி கண்ணு தெரியும்?

என்ன நண்பர்களே,உங்களுக்கும் இந்த சந்தேகம் இருக்கா?எனக்கும் இருந்தது. இப்போ பதில் தெரியும் சொல்றேன் கேளுங்க.

புலியோட கண்ணுல டபீடம் லூசிடம்மால் அப்படின்னு ஒரு சூப்பர் டூப்பர் லேயர் இருக்கு,அதாவது ஸ்பெஷல் லேயர்,அதனால மனுஷன விட ஆறு மடங்கு நல்லா பார்க்கும் திறன் புலிகளுக்கு இருக்கு.



                             இரவில் பளபளக்கும் கண்கள்.

அரவிந்த்: அத்த,அப்போ பகல் ல வேட்டையாடதா?

வேட்டையாடும் ஆனா,அதுக்காக நிறைய சக்தியை செலவு செய்யணும்,பகலில் மற்ற விலங்குகள் ரொம்பவே உஷாரா இருக்கும்.அதனால புலியார் என்ன செய்வார்னா? எல்லா விலங்குகளும் ஓய்வெடுக்கும் இரவு நேரத்தை வேட்டையாட பயன்படுத்திக்குவார்.

அம்மு: ஏம்மா,பூனைக்கு நைட்ல கண்ணு பளபள ந்னு மின்னுதுல அத மாதிரி புலிக்கும் இருக்குமா?

சரியா கேட்ட, புலி பூனையினத்தை சேர்ந்த்துதான்,ஏற்கனவே சொன்ன டபீடம் லூசிடம்மால் தான் இந்த பளபளபிற்கும் காரணம்

என்ன நண்பர்களே,புலிய பார்த்திருக்கீங்களான்னு கேட்கிறீங்களா? Zoo லயும்,சரணாலயத்திலேயும் பார்த்திருக்கேன்,ஆனா,காட்டு புலி(untamed wild tiger) பார்த்தது இல்ல,புரியுது புரியுது……………

பார்த்திருந்தா,கத சொல்ல நான் இருந்திருக்க மாட்டேன் பயத்திலேயே போயிருப்பேன்.

ஆனா,இப்படி காட்ல புலிகளை பார்க்க முடியாதாதற்கு காரணம் புலிகளோட எண்ணிக்கை நாளடைவில் குறைந்து வருவதுதான் காரணம்.

ஏன் குறைஞ்சுது? பார்ப்போம்…………



ஜார்ஜ் v அவர் மனைவியும்,வேட்டையாடிய புலியுடன்


எந்த புலி தேசிய விலங்கு அப்படின்னு பெருமையா சொல்றோமோ,அந்த புலிய ஓட ஓட விரட்டியிருக்காங்க,முறத்தால் புலியை அடிச்ச வீர தமிழச்சியில் இருந்து,பொழுது போக்குக்காக பல விலங்குகளை வேட்டையாடிய ஆங்கிலேயே துரைமார்கள்,அவர்களுக்கு துணை போன ஜமீன்தார்கள் என துரத்தியவர்களின் எண்ணிக்கை எண்ணிலாடங்கா,ஒவ்வொவ்வொரு முறையும் 10 புலிகளுக்கு குறைவில்லாமலும்,40 மற்ற விலங்குகளுக்கு குறைவில்லாமலும் வேட்டையாடியிருக்கிறார்கள்,பொழுது போக்கு மெல்ல சாகச விளையாட்டு ஆகவும், வீரத்தின் அடையாளமாகவும் மாறியது.


       ஆங்கிலேயர்கள் வேட்டையாடிய புலியுடன்

இதன் காரணமாக, 40000க்கும் மேலாக இருந்த புலிகள் இன்று ஆயிரம் அளவிற்கு குறைந்துவிட்டது.அதோடு மட்டுமில்லாமல்,நகர்மயமாகுதல்,மற்றும் தொழிற்சாலைகளின் பெருக்கத்தால்,காடுகள் பெருமளவு குறைந்ததும் பெரும் காரணம்.
மேலும்,புலியின் தோல்,நகம்,பல்,பால்,முடி என அனைத்து பகுதிகளும் மருத்துவ குணமிருப்பதாக நம்பப்படுகிறது,அதனாலேயும் இதை வேட்டையாடி கொல்றாங்க....



           வேட்டையாடிய புலியுடன் நம் நாட்டை சூறையாடியவர்கள்

அம்மு: புலி குறைஞ்சிடுச்சுன்னு எப்படி கண்டுபிடிச்சாங்க?

அடடா,எவ்வளவு பெரிய கேள்வி அசால்டா கேக்குற,கவனி செல்லம்,

புலிகளின் கால் தடத்தின்(pug mark) எண்ணிக்கையை கொண்டு முதலில் கணக்கிட்டாங்க,ஆனா இது சரியான தகவலாக இல்லை.ஏன்னா? சேறு போன்ற பகுதிகளில் நடக்கும்போது கால் தடம் சற்று விரிந்தும்,மணல் பகுதிகளில் கால் எடுத்தவுடன் மணல் சரிந்து,கால் தடத்தின் அளவு,ஒரு குழப்பத்தை கொடுத்தது,அதனால Camera Traps என்ற முறையில் Trail camera பயன்படுத்தி எண்ணினார்கள்.


             புலியின் காலடி தடம் சேறில் புலியின் காலடி தடம் மணலில்


அரவிந்த்: ஒரே புலி அதே வழியா,நிறைய முறை நடந்து போனா எப்படி கண்டுபிடிப்பாங்க?


செல்லப்பா, அருமையான கேள்வி, புலிக்கு இருக்குற கோடு கண்டிப்பா இன்னொரு புலியோட ஒத்து போகாது,கோடுகள் நம்முடைய கைரேகை மாதிரி,


ஒவ்வொவ்வொரு புலிக்கும் மாறும்.


      புலிகளின் உடல் கோடுகளின் வேறுபாடுகள்

அம்மு: புலி சில படத்தில சிரிக்கிற மாதிரி போட்டுருக்காங்க? புலி கோப பட்டா எப்படி தெரியும்.

நல்ல கேள்வி,புலியோட காதுகளுக்கு பின்னாடி வெள்ளை நிறத்தில ஐஸ்பாட்ஸ் இருக்கும்,காது கறுப்பு நிறத்தில் இருக்கும்.கோபம் வரும்போது காதுகள் உடம்போடு ஒட்டிக்கொள்ளும் அப்போ அந்த வெந்நிற ஐஸ்பாட்ஸ் நமக்கு தெரியும், எஸ்கேப் ன்னு சொல்லி ஓடிடணும்…………….

அரவிந்த்: அத்த,புலிக்குட்டி பத்தி சொல்லு

ஒரு புலி ஒரே நேரத்தில் 2 முதல் 6 குட்டிகள் வரை போடும்,குட்டிகள் பிறந்தவுடனயே,குட்டிகளோட பாதுக்காப்பு கருதி அப்பா புலிய தன்னோட எல்லையை விட்டு வெளியேற்றிவிடும் பெண் புலி,திரும்ப வந்தாலும் எல்லைக்குள் விடாமல் துரத்திடும்…


                         புலி அதன் குட்டிகளுடன்

குட்டி புலிகளுக்கு தந்தை புலியே எதிரிதான்.

அம்மு: அம்மா! புலின்னாலே பயமாயிருக்கு அத சாகடிச்சாங்கன்னு ஏன் ரொம்ப கவலைப்படுற.


1807 இலண்டனில் வெளியிடப்பட்ட சாமுவேல் ஹாவெட் & எட்வர்டு ஓரம் தங்கள் கைகாளல் வரைந்த தண்ணீர் கலரில் செதுக்கிய சித்திரங்களானது காட்டு நாய்கள் புலியை வேட்டையாடுவதை விளக்குகின்றது.


புலிகளை Predators ன்னு சொல்வாங்க,இவங்க தான் காடுகளில் இருக்கிற மற்ற உயிரின்ங்களின் எண்ணிக்கையை சமன் படுத்துவாங்க,இவங்க இல்லைன்னா,தாவரங்களை மட்டும் உண்ண கூடியவங்க பெருகிடுவாங்க,அப்போ காட்டுல இருக்கிற செடி,கொடி,மரங்க இவங்களுக்கு பத்தாம போய்டும்,அதனால இயற்கையிலேயே உணவு சங்கிலி சரியான முறையில இருக்கவும்..Ecology cycle சரியா இயங்கவும் இவங்க வேணும்.அப்போதான் காடு காடாயிருக்கும்.


என்ன நண்பர்களே,புலிகளின் வகைகள் பற்றி பட்த்துடன் பார்ப்போமா.

வங்கப்புலி அல்லது வங்காள அரசப்புலி:


இவ்வகை புலிகள் இந்தியா,வங்காள தேசம்,நேபாளம்,பூடான் மற்றும் பர்மா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இதன் வெவ்வேறு வாழ்விடங்கள்: புல்வெளிகள், துணை வெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல மழைக்காடுகள், புதர்க்காடுகள், ஈரப்பத மற்றும் வறண்ட இலையுதிர்க்காடுகள் மற்றும் சதுப்புநிலங்கள் ஆகும். பொதுவாகக் காடுகளில் உள்ள ஆண்புலிகளின் எடை 205 முதல் 227 கி.கி (450-500 பவுண்ட்) ஆகவும், பெண்புலிகளின் சராசரி எடை 141 கி.கி வரையிலும் இருக்கும்.[ இருப்பினும், வட இந்தியப் புலிகளும் வங்கப்புலிகளும் இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதிகளில் காணப்படுபவற்றை விடச் சற்று கொழுத்தவையாக உள்ளன. 1972 ஆம் ஆண்டு முதல் வங்கப்புலிகளைப் பாதுகாக்க புலிகள் பாதுகாப்புத் திட்டம் எனப்படும் அரிய வனவிலங்குப் பாதுகாப்புத் திட்டம் நடைமுறையில் உள்ளது.


                       வங்கப்புலி

இந்தியசீனப் புலி :

இப்புலிகள் கம்போடியா,சீனா,பர்மா,லாவோஸ்,தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன, மலைகள் அல்லது உயரமான பகுதிகளில் உள்ள காடுகளே அவற்றின் விருப்பமான வாழ்விடங்களாகும். இந்தப் புலிகள் வங்கப்புலிகளை விடச் சிறியதாகவும் கருப்பாகவும் இருக்கின்றன.


                             இந்தியசீனப் புலி

 மலேயேப் புலிகள்:
மலாய் தீபகற்பகத்தின் தெற்குப்பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன.


                                    மலேயேப் புலிகள்

சுமத்திராப் புலி
(பாந்தெரா டைகிரிஸ் சமத்ரயி), இது இந்தோனேசியாவின் சுமத்ராதீவில் மட்டுமே காணப்படுகின்றது. மேலும் மிகவும்ஆபத்தானது வாழும் புலியின் கிளையினங்கள் அனைத்திலும் மிகச்சிறியது, வயதுவந்த ஆண்புலிகளின் எடை 100 - 140 கி.கி (220–308 பவுண்ட்) மற்றும் பெண்புலிகளின் எடை 75–110 கி.கி (154–242 பவுண்ட்).[27] அவற்றின் இந்தச் சிறிய அளவானது அவைகள் வாழும் சுமத்ரா தீவின் கடினமான அடர்ந்த காடுகளுக்கு ஏற்றதாகவும் அதே போல் சிறிய இரைக்கு ஏற்ற வகையிலுமே அமைந்துள்ளது. காட்டில் இவற்றின் எண்ணிக்கை 400க்கும் 500க்கும் இடைப்பட்டதாக இருக்கும் என்று தோராயமாகக் கணக்கிடப்படுகிறது

.
                         சுமத்திராப் புலி

சைபீரியன் புலி: (பாந்தெரா டைகிரிஸ் அல்டைகா), இது அமுர், மஞ்சுரியன், அல்டைக், கொரியன் அல்லது வடக்கு சீனப் புலி என்றும் அறியப்படுகிறது. இது கிழக்கு சைபீரியாவின் தூரத்தில் உள்ள பிரிமோர்ஸ்கை க்ரையின் பகுதியான அமுர்-உஸ்ஸுரிமற்றும் ஹபரோவ்ஸ்க் க்ரை ஆகியவற்றுக்குள் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுவே மிகப்பெரிய கிளையினமாகக் கருதப்பட்டது

                               சைபீரியன் புலி

தென்சீனப் புலி
(பாந்தெரா டைகிரிஸ் அமோயேன்சிஸ்), அமோய் அல்லது ஜியாமென் புலி என்றும் அறியப்படுகிறது. இது புலியின் கிளையினங்களில் மிகவும் அதிக ஆபத்தானது மற்றும் உலகின் அதிக ஆபத்தான 10 விலங்குகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

1977 ஆம் ஆண்டில் சீன அரசாங்கம், காடுகளில் உள்ள புலிகளைக் கொல்லுவதைத் தடைசெய்ய ஒரு சட்டத்தைப் பிறப்பித்தது. ஆனால் இச்சட்டம் கிளையினத்தைக் காப்பதற்கு மிகவும் தாமதமாகப் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. ஏனெனில் அது ஏற்கனவே காடுகளிலிருந்து அழிந்துவிட்டது. சீனாவில் தற்போது 59 தென்சீனப் புலிகள் சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. ஆனால் இவை ஆறு விலங்குகளிலிருந்து உருவானவை மட்டுமே என அறியப்படுகின்றன. ஆகவே கிளையினத்தைத் தக்கவைப்பதற்குத் தேவையான மரபியல் வேறுபாடு இப்போது இல்லாமல் போய்விட்டிருக்கலாம். தற்போது இந்தப் புலிகளைக் காடுகளில் மறுபடியும் உருவாக்க அங்கு இனப்பெருக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.



                             தென்சீனப் புலி

அழிந்துவிட்ட இனங்கள்:

பாலினேசி புலி

ஜாவாப்புலி



வேற்று நிற புலிகள்:

வெள்ளை நிறப்புலிகள்:
நன்கு அறிந்த மரபணு சடுதி மாற்றத்தால் உருவாக்கப்பட்டது. தொழிநுட்பப்படி அது சின்சில்லா அல்பினிஸ்டிக்என்று அறியப்படுகிறது. இது காடுகளில் அரிதாக இருந்தாலும் அதன் பிரபலத்துக்காக விலங்கியல் பூங்காக்களில் அதிகம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. அவை அவற்றின் வெள்ளைச் சாயலில் மட்டுமே மாறுபடவில்லை. அவை ஊதாக் கண்கள் மற்றும் இளஞ்சிவப்பு நிற மூக்குகளையும் பெற்றுள்ளன








தங்கநிறப் பட்டைப் புலிகள்:


கூடுதலாக மற்றொரு ஒடுங்கிய பண்பு மரபணுவானது, மிகவும் வழக்கத்திற்கு மாறான "தங்கநிறப் பட்டை" நிற வேறுபாட்டை உருவாக்கலாம், சிலநேரங்களில் அது "ஸ்ட்ராபெர்ரி" எனவும் அறியப்படுகிறது. தங்கநிறப் பட்டைப் புலிகளானது வெளிர் தங்கநிற மென்மயிர், வெளிரிய கால்கள் மற்றும் மங்கிய ஆரஞ்சுநிறப் பட்டைகளையும் கொண்டுள்ளன. அவற்றின் மென்மயிரானது பெரும்பாலும் இயல்பைவிட சற்று கடினமானதாக இருக்கும். தங்கநிறப் பட்டைப் புலிகளின் எண்ணிக்கை மொத்தம் 30

இப்படி நிறைய கதைகள் சொல்லாலம்,ஆனாலும் புலிகள் நம்மை துரத்தியதை விட நாம் தான் புலிகளை துரத்தியிருக்கிறோம்.





சரி அம்மு,அரவிந்த், நம்மோட கதை கேட்ட நண்பர்களுக்கு நன்றி சொல்லுங்க.


அம்மு&அரவிந்த்:நன்றி அனைவருக்கும்.


நண்பர்களே அடுத்த வேறொரு தகவலோடும் ,கதையோடும் வருகிறேன்.



அன்புடன் லீலா.

Tuesday, 26 July 2016

அன்பு கலாமிற்கு ஒரு சலாம்............

 
.
முக்கடல் சந்திக்கும்
முனையில் விளைந்த முத்து நீ
அகிலத்தின் அரும்
சொத்து நீ

பொக்ரானால்
வல்லரசுகளை
வால் வரை
அதிர செய்த
அறிவியல் நீ

ராமேஸ்வர கடல்
வளர்த்த சிறகு
அக்னி சிறகு நீ

தமிழ் தரணியாளும்
காட்டினாய் நீ

உலகமே உறவுனக்கு
நீ தமிழனென்ற
செருக்கு எனக்கு

அறிவும் அன்பும்
அகிலத்தை ஈர்க்கும்
காந்தமென
காட்டினாய் நீ

படகோட்டி மீன்
பிடித்தாய் நீ
வானில் படகோட்டி
விண்மீன் பிடித்தாய்
பாரதியின் அக்னி குஞ்சுகளுக்கு                                       சிறகு வளர்த்தவன் நீ 

நின் உடல் நீங்கினாலும்
இளைஞரின் நெஞ்சு
வாழும் நின்நினைவு.

நின் ஆன்மா காணும்
வல்லரசாகும் இந்தியா
ராமேஸ்வர கரையோர
கல்லூரி இன்னும்பல………..
மின்விளக்கு காணாத
உன் வீடுதான்
பலருக்கு ஒளியூட்டும்
மின்கலம்.⁠⁠⁠⁠ 

கிராமத்தில் பிறந்து 
 கிரகத்தை ஆராய்ந்தவன் நீ 

 உறவுகளின் உண்வுக்கான
செலவை பிறர் அறியாமல் நீ 
செலுத்தியது வரலாற்று புரட்சி 

 முன்னால் அமைச்சருக்கு
 இன்னமும் இனமாகவே
வருகிறது இறைச்சி 

 தாய்மார்களே
 இனி
 அஎன்றால்
 அப்துல் கலாமென்றே 
 சொல்லிதாருங்கள். 


-அன்புடன் லீலா

                                                                                 

                                                                                            

Sunday, 24 July 2016

பரம்பிக்குளம் என்றொரு பரவசம்...............,Parambikulam


பரம்பிக்குளம் என்னதான் இருக்கிறது இங்கு?
பலருக்கு இது இயற்கை சூழல் தரும் அமைதி,சிலருக்கு relax செய்யும் இடம்,என ஒவ்வொருவருக்கும் ஒன்றாக இருக்க.பரம்பிக்குளம் எனக்கொரு பரவசம்.பல்கலைக்கழகம்.

அரசு அலுவல் தொடர்பாக பரம்பிக்குளம் செல்ல ஆயத்தமான போது,அனைவரிடமும் மகிழ்ச்சி, பரம்பிக்குளம் மட்டுமில்லை,நீர் பிடிப்பு(water spread) பகுதி மற்றும் வடிகால் பகுதி(catchment) முழுவதும் ஆய்வு செய்ய வேண்டுமென சொன்னவுடன்.எப்போதும் போல் எங்கள் பாசன உதவியாளர் திரு.மனோஜ், மேடம் வனத்துறையிடம் அனுமதி பெறவேண்டுமே என்றார்.

நமக்கு அலுவல் காரணமாக அந்த இடங்களுக்கெல்லாம் செல்ல ஒப்பந்தத்தில் அனுமதியிருக்கிறது என்றேன்,என்றாலும் சோதனை சாவடியின் சாவி வேண்டுமே என வாய்மொழியின் பேரில் அனுமதி பெற்றுக் கொண்டோம்.

போனமுறை,மதிய உணவு இல்லாமல் தவித்த அனுபவத்தின் பயனாக, சேத்துமடையில் தேநீரும் மூன்று ரூபாய் வடையும் சுவைத்துவிட்டு பின் கொஞ்சம் உணவு பொட்டலங்களையும் சேகரம் செய்து கொண்டு, உற்சாகமாக பயணத்தை தொடர்ந்தோம்,சிறிது தூரம் வரை அலுவலக தொடர்பான நீர் அளவீடுகள் குறித்து பேசிக்கொண்டு சென்றோம்.
ஓட்டுநர் ராஜூ,பாசன உதவியாளர் இருவரையும் கருத்தில் கொண்டு, மெதுவாக பொதுவான செய்திக்கு ஜீப் பயணிக்க தொடங்கியது. பரம்பிக்குளத்தின் வரலாறு தெரியுமா? என நான் கேட்க, ஆரம்பித்தது கதை.

காதை இவர்களிடம் கொடுத்துவிட்டு,கண்ணை இயற்கைக்கு சமர்பித்து ஏகாந்தமாய் பயணத்தை தொடர்ந்தேன்,அவ்வப்போது கண்ணை இயற்கையிடமிருந்து எடுக்கமால் நானும் கதை சொல்ல சுவராஸியமாகியது ஜீப்.

கதை கேட்க நீங்க ரெடியா?


கேரள மாநிலத்தில்,பாலக்காடு மாவட்டத்தில்,சித்தூர் வட்டத்தில்(Taluk) உள்ள ஒரு கிராமம்தான் பரம்பிக்குளம்,இக்கிராமம் பாதுக்காக்கப்பட்ட பகுதியாகும் அதாவது பாதுக்காக்கப்பட்ட வனமாகும். என்று கேரள மாநிலத்தை சேர்ந்த மனோஜ் சொல்ல,


தொடர்ந்து ஆமாம் இந்த பகுதியை எப்படி அல்லது எதற்காக கண்டுப்பிடித்தார்கள் தெரியுமாவென நான் கேட்க அனைவரும் ஒரே பதிலை சொல்ல அதையே முன்னுரையாக கொண்டு நான் ஆரம்பித்தேன்.


19ம் நூற்றாண்டில்,இரு முக்கிய ஆட்சி மண்டலத்தின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த பரம்பிக்குளம், வெட்டு மரங்களுக்காக (Timber)  கண்டுபிடிக்கப்பட்டது என நான் சொல்ல,ஆமாம் மேடம் இங்கே ட்ரம் வே இருக்கு நான் பார்த்திருக்கேன் என பொறியாளர் சுமதி சொல்லி கதைக்கு சுவரஸியம் கூட்டினார்.
ஆமாம்,நீங்க சொன்னது ரொம்ப சரி,இங்கிருந்து ட்ரம்வே வழியா,வெட்டு மரங்களை கொச்சினுக்கு எடுத்து போயிருக்காங்க என்றேன்,இங்கிருந்து உருட்டிவிட்டாலே கொச்சின் போய்விடுமாம் என கூடுதலாய் தகவல் சொல்லி  பொறியாளர் கார்த்திகேயன் தன் பங்கு கதையை சொன்னார்.


எப்போ இது எல்லாம் நிறுத்தினாங்க தெரியுமா? என்றேன்.ஜீப் நின்றது, டாப் ஸ்லிப் வந்துவிட,மூலிகை வனம்,அருங்காட்சியகம்,நீண்டு விரிந்த பச்சை கம்பளமாய் பூமியை போர்த்தியிருக்கும் புல்வெளி,அதன் மீது வரைந்த ஓவியமாய் உலவும் புள்ளி மான்கள்,பழக்கப்படுத்தப்பட்ட

யானைகள்,யானை சவாரி என அழகின் முகம் தெரிய ஆரம்பித்துவிட கேரள எல்லை நம்மை அழகுடன் வரவேற்க,கண்களெனும் இயற்கை காமிரவுடனும்,காமிரவுடனும்  உள்நுழைந்தோம்.



மூலிகை வனத்தினுள் குறிஞ்சி செடி,உள்ளிட்ட பல்வேறு மூலிகை செடிகள் இருக்க அதை குறித்த விளக்கமளிக்க மண்ணின் ஆதிமைந்தனின் சந்ததியில் ஒருவர் இருக்கிறார்.அகத்தியரின் உருவ சிலையொன்றும் இருந்தது.









அதற்கு சற்று முன்னே,தமிழக வனத்துறையின் தகவல் மய்யமும் ,அருங்காட்சியகமும் இருக்க அங்கே  பாடம் செய்யப்பட்ட பத்து மாத யானையின் கரு,சிறுத்தை புலி,பல வகை மீன்கள் பார்த்து மகிழும் 


வண்ணம் இருந்தது
மனமும்,உடலும் லேசாக,மீண்டும்,பயணமும்,கதையும் தொடர்ந்தது….
1907 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ட்ரம் வே அறிமுகப்படுத்தினர்,அதை தொடர்ந்து வெட்டு மரங்களை எடுத்து செல்லும் பணிகள் தொடர்ந்தது, பின்


1921 ஆம் ஆண்டு தேக்கு மரங்கள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பயிரிடப்பட்டது. இதை தொடர்ந்து வெட்டு மரங்களை நகரங்களுக்கு எடுத்து செல்லும்பணி மிக முனைப்புடன் நடந்தது என்று சொல்லும் போதே கண்கள் தோகை விரித்து ஆடும் மயிலை பார்க்க,கதை நிற்க, ஜீப்பும் நிற்க,மயிலும்,காமிரக்களும்,கண்களும் சுழன்று கொண்டேயிருந்தன,



ஜீப்போ உற்சாகத்தின் எல்லைக்கு செல்ல,சத்தம் போடாதே என மெல்லமாய் சொல்லி நிறைய கிளிக்கி கொண்டோம்.
மயில் தன் தோகையை மெதுவாக இறக்கி உலர்த்தி நிற்க மனமில்லாமல்,ஜீப் நகர,எனக்கொரு சந்தேகம் என்றேன்.

சொல்லுங்கமேடம் என்றார்கள் கோரஸாய், இல்லை மயில்கழுத்து கலர்லபுடவை வாங்க சொல்றாங்களே பெண்கள்,பாவமில்லையா ஆண்கள் என கேட்க,சுமதி மேடம் தவிர எனக்கு எல்லோரும் போட, ஜீப் ஒட தொடங்கியது

சிறிது தூரத்திலேயே மீண்டும் ஒரு மயில் தோகை விரித்தாட சொல்லவும் வேண்டுமோ எங்களின் ஆனந்தத்தை.




சரி, சரி கதை சொல்லுங்க என மீண்டும் கண்களை இயற்கையிடம் கொடுத்துவிட்டு கதைக்க தொடங்கினோம்.

பொறியாளர் வெங்கிடுபதியும்,மனோஜ் ம் மேடம் SE கிட்ட சொல்லிடுங்க எங்கே இருக்கோம்னு,இல்லைன்னா signalஇருக்காது என பொறுப்பானவர் களாய் மாறினார்கள். கடமையாற்றிவிட்டு 


கதை தொடர்ந்தது.சுதந்திரத்திற்கு பின் 1962 ம் ஆண்டு,வெட்டு மரங்களை பரம்பிக்குளத்திலிருந்து எடுத்து செல்லுதல் தடை செய்தனர் அதோடு தேக்கு மர வளர்ப்பை ஆரம்பித்தனர். 1973 ஆம் ஆண்டு பரம்பிக்குளம் சரணாலயம் என அறிவிக்கப்பட்டது.


ஆமாம்,சரணாலயம் என்றால் அதன் பரப்பளவு,மக்கள் பற்றி சொல்லுங்க என்றார்கள்,வனவிலங்கு சரணாலயம் 285சதுர கிலோமீட்டர் (sq. km) என்றும் பிப்ரவரி 19,2010 ஆம் வருடம் வனவிலங்கு சரணாலயம், பரம்பிக்குளம் புலிகள் இருப்பு வனத்தின் ஒரு பகுதியென  அறிவிக்கப்பட்டது .(declared as a part of Parambikulam Tiger Reserve Forest) எனவும்,Buffer zone னுடன் 643.66 சதுர கிலோமீட்டர் என்றும்  சொல்லி
மனோஜ் இங்கு வாழும் மக்களை பற்றி சொல்லுங்க என்றேன்.









மனோஜ்,உற்சாகமாக ஆரம்பித்தார்,மேடம் இங்கே ஆறு காலனில ஆளுக இருக்காங்க,காடர்,மலசர்,முடுவர்,மல மலசர் இப்படி சொல்லி என்றார்
ஆமா,இவங்களுக்கு சாப்பாடு என கேட்க,

மனோஜ் தொடர்ந்தார்,மூங்கில் அரிசி,கப்ப கிழங்கு,தேன் பிறகு இங்கே இருக்கும் பழ வகைகள். ஆனா இப்போ அவங்க கீழே வந்து பாக்கெட்ல உள்ள பொருட்களை வாங்குறாங்க,பரம்பிக்குளத்தில் கடைகள் கொஞ்சம் இருக்கு அதிலேயும் பொருட்கள் விற்பனையாகுது,இயற்கையா கிடைக்கிற பொருட்களை கேரளா வனத்துறை விலைக்கு விநியோகம் செய்றாங்க என்றார்.

சரி இவங்க non veg சாப்பிடுவாங்களா? என நம்முடைய subjectக்கு மாறினேன்.

இந்த டேம் கிடைக்கிற மீன் சாப்பிடுவாங்க,மத்தப்படி இங்கே கோழி,ஆடு,மாடுக, நாய் வளர்க்கறதில்லை,அதனாலே கீழே போய் மாமிசம் வாங்கி வந்து சமைச்சு சாப்பிடுவாங்க என்றார்.சொல்லும் போதே எல்லோருடைய சுவையரும்புகளும் பணியை துவங்கிவிட்டிருந்தது. நாங்களும் ஆனப்பாடி சோதனை சாவடிக்கு வந்துவிட்டோம்,அரசு பணிசார்பாக வந்ததால்,ஜீப் தடையின்றி செல்ல, அங்கிருந்த பயிற்சி மற்றும்விளக்கவுரை மய்யத்திற்கு(Training and explanation centre) 





செல்லும் முன் சுவையரும்புகளுக்கு ஒரு சூடான தேநீர் கொடுத்தோம்  அங்கிருந்த தட்பவெட்பத்திற்கு அமுதமாய் உள்ளிறங்கியதுதேநீர்.


 
அந்தட்ரெயினிங்க் செண்டரில் விலங்குகள்,காடுகள் குறித்த விரிவான விளக்கம் அளிக்கப்பட,செவிக்கும் உணவு கொடுத்து,காமிரக்களில் கிளிக்கி கொண்டு கிளம்பினோம்.
மெல்ல தூணக்கடவு நோக்கி ஜீப் பயணிக்க இரு புறமும்,மானும்,மயிலும்  உலவிக்கொண்டிருக்க,

அய்யோ செந்நாய்,செந்நாய் என ஜீப் கலவரத்தில் சத்தமிட அட நல்லா பாருங்கப்பா sign board என்று சொல்ல ஜீப் கலவரத்திலிருந்து கலகலப்பாகியது.  

சரி கதைய சொல்லுங்க என ஆர்வமுடன் கேடக,மீண்டும் கதை தொடங்கிற்று.பரம்பிக்குளம் எந்த மலையில இருக்கு? இதுக்கு பேரு இருக்கா? என்று முறுக்கை நொறுக்கி கொண்டே கார்த்தி கேட்க,சார் நாம மலையிலதான் மழையில போறோம் என எங்கள் தமிழறிவை காட்டிவிட்டு சொல்ல தொடங்கினேன்.


ஆனைமலை மற்றும் நெல்லியம்பதி குன்றுகளுக்கு இடையேயான சுங்க எல்லைக்கு உட்பட்டதுதான் இந்த பரம்பிக்குளம், பரம்பிக்குளத்தை உலக பராம்பரிய தளமாக UNESCO அறிவித்துள்ளது என்று சொல்லி நாம் ஒரு பராம்பரிய மிக்க வனத்திலே இருக்கிறோம் என்று பெருமையோடு சொன்னேன்.


கார்த்தி தொடர்ந்தார்,மேடம் இங்கேயிருக்கிற பழங்குடியினருக்கு என்ன தொழிலுன்னு சொல்றேன் சொல்லுங்க்க என சுமதியும்,வெங்கிடுபதியும்  ஊக்கப்படுத்த,இவங்களுக்கு தேன்  எடுக்கிறது, பூவிட்டு,நெல் கொடுத்த பின் உள்ள மூங்கிலை தட்டிபாய் போல செய்யறது,மூங்கில் குடில் அமைக்கிறது, தண்ணியில போறதுக்கு கட்டுமரம் மாதிரி செய்யறதுதான் என்றார், சரிப்பா, இவங்களுக்கு காசு யாரு கொடுப்பா? என்று கேட்டார் சுமதி.

கார்த்தி தொடர்ந்தார்,ஆமாம் மேடம் அதுக்காகதான் டெரக்கிங்,சபாரி போகும்போது பழங்குடியினர்தான் கைடு வருவாங்க,அதுக்கு இவங்களுக்கு சிறப்புபயிற்சி தராங்க,CAPACITY BUILDING பயிற்சியும் தராங்க என்றார்.ஆமாம் மூலிகை வனத்தில கூட பழங்க்குடியினர்தானே இருந்தார் என நினைவூட்டினேன்.

இப்படி சுவரஸியமாக,போய் கொண்டிருக்க வலது புறத்தில் டொட்டாய்ங் ஆர்வமுடன் எதிர்பார்த்த யானைகள் நிற்பதை, பார்த்துவிட்டேன், நிறுத்துங்க, நிறுத்துங்க என சொன்ன எனக்கு யானை என சொல்லவரவில்லை ஆர்வ மிகுதியில். அடே யானை என  இன்ஜினை நிறுத்தமால் ஜீப்பை நிறுத்த,சுமதி பயத்தில் சத்தம் போட,ப்ளீஸ் சத்தம் போட்டீங்கனாதான் தொல்லை, அமைதியா பாருங்க,யானை சிக்னல் கொடுத்தவுடன் போகலாம் என்றேன்.


குட்டியானையோடு,பெண் யானைகள் நின்ற கண்கொள்ளா காட்சி பேரழகு,செடிகளை உடைத்து மென்றுகொண்டும்,குட்டி யானையை கால்களுக்கிடையில் நடத்தி அழைத்து செல்லும் விதமும் அற்புதம்,ஓட்டுநர் மேடம் போகலாமா என கேட்க,ஒரு அதிகாரியாக,அனைவரின் பாதுக்காப்பும் என் வசம் வந்துவிட.

வேண்டாம் ராஜூ,யானை சிக்னல் தரலையே என்றேன். எவ்வளவு நேரம் நிற்பது,SE வேறு பரம்பிக்குளத்திலிருக்காரே என அனைவரும் சொல்ல.
மனோஜ்,நீங்க சொல்லுங்க காடு பற்றி உங்களுக்குதான் தெரியுமென்றேன் ,போயிடலாம் மேடம் என்றார். மனமில்லாமல் சட்டென்று வேகமாக அந்த இடத்தை கடந்து சென்றோம்.

புகைப்படங்களும்,வீடியோவும் எடுத்துக்கொண்டு, வனத்தில் பயணிக்கும்போது,வனவிலங்குகளுக்கு தொல்லை கொடுக்கமாலும் ,இயற்கையை மதிக்கும் வகையில் நெகிழி,தீ பற்றிக்கொள்ளும் பொருட்களை உடன் எடுத்து செல்ல கூடாது,தேவையில்லாமல் இடையில் இறங்ககூடாது, குப்பைகளை கண்ட இடத்தில் போடக்கூடாது,மதுபானங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.இது பயணித்த அனைவருக்கும் தெரியுமென்பதால் சற்று அமைதியான இனிமையுடன் பயணம் தொடர்ந்தது.

இடது புறம் தூணக்கடவின் நீர்பிடிப்பு பகுதி உடன் பயணிக்க,இன்னும் குளுமை கூடியது,காட்டுப்பன்றிகள் மேய்ந்து கொண்டிருந்தன.இது மிகவும் அபாயகரமான விலங்கு,இரண்டு புறமும் பல் வெளியில் நீட்டி கொண்டிருக்கும்,zip திறப்பது போல் சட்டென்று நம் சதையை கிழித்து திறந்துவிடும்,சிறுத்தைகளை கூட காட்டுப்பன்றிகள் தாக்கிவிடும்.என கதை காட்டுப்பன்றி பற்றி விரிந்தது.



ஜீப் பயணம் தொடர தூணக்கடவு அணை வர.ஜீப்பை நிறுத்தி அணையும் அதனோடு கூடிய இயற்கையின் பேரழகையும் ரசித்துக்கொண்டு மெதுவாக நடக்க குரங்குகளும்  அங்கே அருகே நடந்து கொண்டிருந்தன,தூணக்கடவு அணையின் நீரளவை குறித்துக்கொண்டு spillway பக்கம் வர முதலையொன்று தண்ணீரில் 

சோம்பேறித்தனமாக படுத்துக்கிடந்தது,காமிரா ஆன் செய்து நாங்கள் நடக்க எங்களின் ந்டை அதிர்வுக்கு சட்டென்று நீருக்குள் சென்றுவிட, அணையின் ஒருபுறம் மானும் மயிலும் உலவிக்கொண்டிருந்தன,மீண்டும்ஜீப்பில் ஏறிக்கொண்டோம், தூணக்கடவு அணையின் சிறப்பு பற்றி சொல்லுங்கள் என சொல்ல ,தூணக்கடவு ஒரு balancing reservoir என்றார்கள்(.அணைகளின் சிறப்பு பற்றி பரம்பிக்குளம் ஆழியார் திட்டம் எனும் அடுத்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.)




தூணக்கடவு,பரம்பிக்குள கோட்டத்தின் வன தலைமையகம் ஆகும்,இங்கு wireless station ம் உள்ளது.அது சரி பரம்பிக்குளத்திலிருந்து எந்த இடத்தில் தண்ணீர் தூணக்கடவை வந்து சேர்கிறது என பார்க்க அணையின் மீது சென்றோம்.டனலின் வழி தண்ணீர் வருவதை பார்த்த பின்பு,அந்த இடத்தின்  ரம்யத்தில் மனதை பறிகொடுத்து நின்றோம்.








சரி வாங்க ,வாங்க அந்த பக்கம் வனத்துறையின் ஆய்வு மாளிகை இருக்கு பார்ப்போம் என்று நான் சொல்ல



டீம் உற்சகமாக நடக்க,தூணக்கடவின் இன்னொரு புற அழகை கண்டு பிரம்மித்து போனோம்,இங்கு புள்ளி மான்,சாம்பர் மான்,கூட்டம்கூட்டமாய் யானைகள்,நமக்கு வாய்த்தால் கரடியை கூட சற்று இருள் தொடங்கும் நேரத்தில் கண்டு களிக்கலாம்.எப்போதும் போல் பல்வேறு கோணங்களில் புகைப்படமெடுத்து கொள்ளும் போது சலைங்கை ஒலி படம் போலாகிவிடமால் கவனமாக கிளிக்கி கொண்டு,பரம்பிக்குளம் நோக்கி சென்றோம்,பெருவாரிபள்ளம் அணையை வரும்போது பார்க்கலாம் என முடிவு செய்தோம்.




பரம்பிக்குளம் சென்றடைந்தோம் மணி நண்பகல் 12 நெருங்க,மீண்டும் கொஞ்சம் தின்பண்டங்கள் வாங்கி கொண்டு,ஆய்வு மாளிகை நோக்கி சென்றோம்,சிறிது ஓய்வுக்கு பின் பரம்பிக்குளம் அணைக்கு சென்றோம்                                                                                                      



செண்பக பூக்களின் மணம் எங்களை வரவேற்க,பயண களைப்பு சிறிதும் இல்லமால் பூக்களின் மணம் நுகர்ந்த படி இயற்கையின் பேரழகையும்,தமிழக பொறியாளர்களின் பேர்ரறிவையும் வியந்த வண்ணம் பேபி டேம்




சென்றோம்,அங்கு SE,EE,அங்குள்ள உபகோட்டத்தின் உதவிசெயற்பொறியாளர் மற்றும் நாங்களும் இணைந்து கொள்ள அலுவலக பணிகள்,மற்றும் தள பணிகள் குறித்து கலந்துரையாடினோம்,பின் SE கொடுத்த அறிவுரைகளை குறிப்பெடுத்துக்கொண்டு மீண்டும் பரம்பிக்குளம் அணைக்கு வந்தோம்.
பரம்பிக்குளத்தின் உயர்ந்த சிகரமான கருமலையை அங்கிருந்து பார்க்க பார்க்க பரவசம் ஆகி இயற்கையை பாதுக்காப்பது குறித்து சிறிய உரையாடல் தொடர்ந்தது.




நான்,சார் குரியக்குட்டி சென்று பார்வையிட வேண்டும் என்றேன்,சரி வாங்க போகலாமென சொல்ல,தேநீருக்கு பின் உற்சாகத்துடன் கிளம்பினோம்.வனத்துறையிடம் சொல்லிவிட்டு core forest க்குள் பயணம் ஆரம்பித்தது, இருபுறமும் அடர்ந்த வனமிருக்க,இடையில் பாதையில் ஜீப் சென்று கொண்டிருந்த்து,மாபெரும் அனுபவமாக இருக்க,குரியர்குட்டி பாலம் வந்தது,அதற்கு மேல் நடந்துதான் செல்லவேண்டுமென சொல்ல,ஜீப்பை நிறுத்திவிட்டு,நடக்க தொடங்கினோம்.

ஏதோ சில்லென்று ஏதோ நில்லென்றது,ஒண்ணுமில்லைநில்லென்றது,ஒண்ணுமில்லைங்க தென்றல்தான். பாலத்தின் வலது புறத்தில் தூணக்கடவின் உபரி நீரும்,இடது புறத்தில் பரம்பிக்குளத்தின் உபரி நீரும் சங்கமித்து பொரிங்கல்குத்து அணையை நோக்கி குதித்தோடி கொண்டிருந்தது.பாலத்தின் மீது அனைவரும் நிற்க நான் புகைப்படம் எடுத்தேன்.


கொள்ளையழகில் மனம் மயங்கி பேச்சற்று நடந்தோம்,சட்டென்று வனத்துறையின் போர்டு வர கிளிக்கிகொண்டு நடந்தோம், பிரியாணிக்கு போடும் பிரிஞ்சி இலை/ bay leaf மரம் வர அதையும் புகைப்படம் எடுத்துக்கொண்டு மெல்ல நடக்க


,
மனோஜிடம்,எந்த மனோஜ், சலிம் அலி bird study centre key கிட்டியோ என மலையாள புலமையை காட்டி சாவி வாங்கி வர குரியார்குட்டி செட்டில்மெண்ட்க்கு செல்ல.

நாங்கள் மெல்ல நடக்க தொடங்கினோம்,யாருமற்ற  வனம்,குளிர்ந்த காற்று, நீண்ட ஆறு என ரம்மியமான சூழல்,இடது புறத்தில் சிறிய தடமொன்று ஆற்றுக்கு செல்ல அதில் இறங்கி 



நடந்தோம்,புல்வெளியும்,பாறையுமாய்,ஆற்று தண்ணீருக்கு செல்ல,பனிப்போல் சில்லென்ற தண்ணீரில் கால் நனைத்து நின்றோம்,மாற்றி மாற்றி புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள,மீண்டும் மீண்டும் காலை தண்ணீருக்குள் நனைத்தவாறு நின்று 



                                                                  கொண்டிருந்தோம்,SE இப்போ எங்களை வழிநடத்த வாங்க எல்லோரும் மேலே என முன்னேற சொன்னார்,நான் எங்கள் அலுவலக பணிக்கு தேவையான குறிப்புகளை எடுத்துக்கொண்டு, மெல்ல வன சாலைக்கு திரும்பினோம்.



.

சலிம் அலி பறவைகள் படிப்பு மய்யத்தின் சாவி வர,அனைவரும் அதை நோக்கி நடந்தோம்,250 வகை பறவையினங்களை பற்றியும்,சலிம் அலி அவர்களை பற்றியும் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.SE சலிம் அலி பற்றியும்,பறவைகளுக்கும் நீர் ஆதாரத்திற்கும் என்ன தொடர்பு  என்பது பற்றியும் கூறினார்.










வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்த வழியாகவே திரும்பினோம், வழியில் ஒரு ஒட்டுண்ணி மரத்தில் பற்றி ஊஞ்சல் போல் தொங்க,சாலையின் அடி வழியாக சென்று மறுபுறம் இன்னொரு மரத்தை பற்றியிருந்தது.ஊஞ்சலில் அனைவரும் உட்கார்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள,அட்டை ஒருவருடைய காலை பதம் பார்க்க,அனைவரும் மீண்டும் சாலைக்கு வந்துவிட மெல்ல பாலத்தை அடைந்தோம்.


சரி,பரம்பிக்குளம் ஆய்வு மாளிகைக்கு போய் சாப்பிட்டுவிட்டு அடுத்த தள ஆய்விற்கு செல்லலாம் என SE சொல்ல,SE,EE இருவரிடமும்,சார் தெல்லிக்கல் போகணும் ஆனா அனுமதி கிடைக்கலை,அதனால கோழிகமுத்தி ஆறு போறோம் சார்,உணவு பொட்டலங்கள் இருக்கு என சொல்லி அனைவரிடம் விடை பெற்றுக்கொண்டு,குரியார்குட்டி செட்டில்மெண்டிலிருந்து தினேஷ் என்ற கல்லூரி மாணவர் பரம்பிகுளம் சாலைபிரிவு வரை செல்லவேண்டுமென் சொல்ல அவரையும் எங்கள் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு,மெல்ல ஜீப் நகர்ந்தது





தினேஷிடம் அவர்களின் வாழ்க்கை முறை பற்றி கேட்டேன்,மலையாளமும், தமிழும் கலந்து அவர் பேச தொடங்கினார்.

நான்: தினேஷ் குடிக்க,குளிக்க என தனி தனி தண்ணீரா? எந்த தண்ணீர் பயன்படுத்றீங்க?

தினேஷ்: இப்போ பார்த்த ஆத்து தண்ணிதான் எல்லாத்துக்கும்.

நான்:இங்கே என்ன பண்டிகை கொண்டாடுவீங்க

தினேஷ்::தீபாவளி,பொங்கல் இல்லை,கிருஸ்மஸ் கொண்டாடுவோம் என்றார்,ஆனா கிருஸ்டியன் இல்லையென்றார்,அப்புறம் அம்மனுக்கு பொங்கல் வச்சி கொண்டாடுவோம்,அன்னைக்கு எங்க( பழங்குடினர்நடனம் ஆடுவோம்

.

நான்: இங்கே என்ன மரங்கள் இருக்கு?

தினேஷ்: கூவாட்டி,கணக்க,பிள்ளைமருது,தேக்கு,பட்டைலவங்க மரம்(பிரிஞ்சி இலை) மரம் என சொல்ல.அவர் இறங்க வேண்டிய இடம் வரஅவரை இறக்கிவிட்டுவிட்டோம்,


நாங்கள் பயணத்தை தொடர வழியில் சாப்பிடலாமென சொல்ல தண்ணீர் தீர்ந்து போச்சி மேடம் என்றார்கள்,சரி வழியில அருவி இருந்தா,தண்ணீர் பிடிக்க முடிவு செய்தோம்.

சிறிது தூரத்தில் அருவியொன்று வர,எல்லா பாட்டில்களும் நிரம்பின,VIEW POINT ல் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு,அருவி தண்ணீர் குடித்தால்,சில்லென்று அருமையாக இருந்தது,உடனே பயணம் தொடர.



பெருவாரிப்பள்ளம் வர அதற்கு 50மீ முன்பாக மேடம், யானை,யானை தள்ளியிருந்த வனத்திற்குள் கூட்டமாக யானைகள் நிற்க குஷியாகி,  



பார்த்துக்கொண்டே புகைப்படங்க்ள எடுத்துக்கொண்டு,கன்னிமரா தேக்கு பார்க்க சென்றோம்,அய்நூறு வருட பழமையும் மகாவிருக்ஷா புரஸ்கார் விருதும் பெற்ற மரம் அதை பார்த்து விட்டு திரும்பும் வழியில் சாம்பார் மானும்,சற்றுதள்ளி காட்டுஎருது,காட்டு பசுக்களும் மேய்ந்து கொண்டிருந்தன.









நேரம் குறைவாக இருந்ததால்,விரைந்து டாப்ஸ்லிப் நோக்கி பயணித்தோம். டாப்ஸ்லிப் க்கு 150 மீ முன்னால் பத்துக்கும் மேற்பட்ட செந்நாய்கள் நிற்க பார்ப்பதற்குள் ஓட தொடங்கின,இருந்தும் காமிரவுக்குள் சிக்கியவைகளை கிளிக்கி கொண்டு பயணித்தோம்,
டாப்ஸ்லிப் தமிழக வனத்துறை,அங்கே கோழிகமுத்தி ஆற்றை பார்வையிட வந்திருப்பதாக மனோஜ் சென்று சொல்ல ரேஞ்சருடன் அலைப்பேசியில் பேசினேன்,உடனே அனுமதி கிடைக்க, வனத்துறை வேனை தொடர்ந்து சென்றோம்,சாலை மிக மோசமாக இருக்க மெதுவாக ஜீப் ஊர்ந்தது,கோழிகமுத்தில் யானைகள் முகாம் உள்ளது,இங்கு யானைகளுக்கென கேழவரகு மற்றும் அரிசி மாவில் உணவு தாயரிக்கிறார்கள் அதனுடன் வெள்ளம் சேர்த்து கொடுக்கிறார்கள்,
கோழி கமுத்தி ஆற்றிலேயே யானைகள் குளிக்கின்றன தனக்கான செடிகளை ஒடித்து கட்டாக இரவு டிபனுக்கு கொண்டு வந்துவிடுகின்றன,மாலை நேரத்தில் தண்ணீரில் விளையாடி,குளித்துவிட்டு,முகாமில் கொடுக்கும் உண்வை உண்டு விட்டு,பார்வையாளர்களை பார்க்கிறது.பின் தத்தம் இடத்திற்கு சென்று கொண்டு வந்த செடிகொடிகளை,சாப்பிட்டுக்கொண்டு விடியும் வரை இருக்கின்றன்,பின் வனத்திற்குள் செல்கின்றன
,ஆனால்காட்டு யானைகளிடம் இருந்து வரும் ஒரு வகையான மணமிவைகளிடமில்லை.
கோழிகமுத்தி ஆற்றை பார்த்துவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டு,ஆற்றின் ஆரம்ப இடத்தை பார்க்க வேண்டுமென கூற அதுக்கு ரொம்ப தூரம் நடக்கணும்,அடர்ந்த காடு ,இப்போ மணி மாலை 6.30 அதனால இப்போ போக முடியாது என்றார்கள்.சரியென்று ஆற்றைப்பற்றிய குறிப்புகளை எடுத்துக்கொண்டோம்,பெருங்குன்றா என்ற இடத்திலிருந்து ஆறு உற்பத்தியாகி,கதவுசாத்தி என்ற இடத்தின் வழியாக வருகிறது என்றார்கள்.


குட்டியானை சரவணனனை எனக்கு மிகவும் பிடித்துவிட அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு,கல்பனா,மாரியப்பன் என 21 யானைகளை பார்த்துவிட்டு,கிளம்பினோம்,அம்புலி சாலை வழியாக செல்ல சொன்னார்கள்,வனத்துறை வேனும் வர  ஜீப் ஓட தொடங்க,

மனோஜ்,யானைகளுக்கு இவங்க மருந்தெல்லாம் போடுறாங்க காட்டு யானைகள் என்ன செய்யுமென கேடக,தேக்கு மரத்தோட பட்டையை தின்றால் வயிற்று போக்கு நிற்குமென்பது காட்டு யானைக்கு தெரியும்,அத போல தந்தம் இரண்டும் வளர்ந்து சேர்ந்துடுச்சினா,தும்பிக்கையை தூக்க முடியாது,அதனால காட்டு யானைகள் மர கொம்புகளில் கொடுத்து உடைத்து கொள்ளும் என கூறினார்.

அம்புலி சாலையில் உள்ள அம்புலி மாளிகையை  படமெடுத்துக்கொண்டு,  மீண்டும் டாப்ஸ்லிப் வந்தோம்,ரேஞ்சருக்கு நன்றி  சொல்லிவிட்டு  பயணம்தொடர,
காட்டெருதுகளும்,காட்டு பசுக்களும் குட்டிகளுடன் சாலையில் நிற்க,மிக நெருக்கத்தில் பார்த்தோம்,காட்டெருதுகள் 1200கிலோ எடையும்,காட்டு பசுகள் 800 கிலோ எடையும் இருக்குமென்று நான் சொல்ல,மேடம் தட்டுச்சினா அவ்வளவுதான என்று கேட்கும்போதே,காட்டு முயல் இரண்டு சரியான பாய்ச்சலில் திக்குக்கொன்றாய் ஓடின,சாம்பார் மானொன்றும் குதித்தோட அவைகளின் கண்களின் பளபளப்பு சொல்லில் கூறமுடியாது.






காட்டு அணில்,காட்டுகோழி பார்த்ததையும்.காட்டு அணில் எப்படி பலா பழத்தை சாப்பிட்டது என்பதை பற்றியும் சொல்லிக்கொண்டே பொள்ளாச்சி வந்து சேர்ந்தோம்.இதில் இன்னும் பல செய்திகளை சொல்லவில்லை, அவற்றை வரும் நாளில் சொல்கிறேன்.பரம்பிக்குளம் உயிரினங்கள் பற்றி,வனம் பற்றி, நீர்நிலைகள் பற்றி,பழங்குடியினர் ஓராயிரம் கதைகளை உள்ளடக்கியுள்ள பெரும் பெட்டகம்.,ஒரு பல்கலைகழகம்.இங்கேயுள்ள செடிகள் கொடிகள்,மரங்கள் குறித்து சொல்லவே நிறைய உள்ளது.


பரம்பிக்குளம்,மேற்கு தொடர்ச்சி மலையின் உயிர்கோளத்தில் ஒரு அழகு,அற்புதம் என சொல்லிக்கொண்டே போகலாம்,கேரள மாநிலத்திலேயே அதிகமான விலங்குகளை காணக்கூடிய ஒரு இடம்.
அணைகள் குறித்தும்,ஆறுகள் குறித்தும் சுவைப்பட அடுத்த கட்டுரையில் காண்போம்.அது வரை பரம்பிக்குளத்தின் நினைவுகளில் திளைத்திருங்கள்.










-அன்புடன் லீலா.