வணக்கம் தோழமைகளே!
நீண்ட நாட்களுக்கு பின் மழையைப் பற்றி பேச போகிறோம்.
ஆறு கடலில் சேரும் காட்சி. |
மன்னர்கள் அக்காலத்தில் கேட்டது போல் மாதம் மும்மாரி
பொழிந்ததா என இந்த
மாதம் கேட்டிருந்தால் மன்னா மாதம் முப்பதும் மாரி என பதில் சொல்லியிருப்பார்கள்.
அது சரி அணைகள் எல்லாம் நிரம்பி வழியும் அடுத்த
மாநிலம் நுழைந்து அங்குள்ள அணைகளை நிரப்பி பின் கடலை நோக்கி பயணிக்கிறது.இந்நேரத்தில் பலரும், சில ஊடகங்கள் உட்பட கடலில் தண்ணீர்
வீணாக கலக்கிறது என கவலைப்பட்டும், கடுமையாக விமர்ச்சித்தும்
வருகிறார்கள்.
கடலில் குறிப்பிட்ட அளவு மழை பொழியவேண்டும் என்பது
குறித்து பலமுறை விவசாயிகளிடையே பேசியிருந்தாலும் இந்த நேரத்தில் அதைப் பற்றி பேசுவது
பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
கரையோர மக்களையெல்லாம் பாதுகாப்பாக இருக்க சொல்லி
அறிவிக்கப்பட்டுள்ளது.காவிரி தாய் வீறு நடைப்போட்டு புல்
பூண்டுகளை எல்லாம் உய்வித்து பொங்கி பிராவகிப்பதை பெரும் மகிழ்வுடன் மக்கள் பார்த்த
வண்ணமிருக்கின்றனர்..காவிரி கடல் நோக்கி போகிறதே என கவலைபடுபவர்களுக்கு
திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என பார்ப்போம்,ஏனெனில் சுற்றுசூழல் குறித்து வள்ளுவரின் பார்வையை முன்பே திருக்குறளின் நான்காம்பால்
என்ற பதிவில் பார்த்தோம்,எனவே இது குறித்தும் திருவள்ளுவர் என்ன
சொல்லியிருக்கிறார் என பார்ப்போம்.
வான் சிறப்பு அதிகாரத்தில்
நெடுங்கடலும்
தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
தான்நல்கா தாகி விடின்
(அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:17) என சொல்லியிருக்கிறார்.
இதன் பொருள் என்ன சற்று விரிவாக
பார்ப்போம்.
மணக்குடவர் தான் குறளுக்கு முதலில் உரை எழுதியவர்
என நினைத்து அவரின் உரையை பார்த்தேன.
மேகம் திரண்டு மின்னி மழை பொழியாவிடில் நிலம் மட்டுமின்றி
நெடுங்கடலும் தன் நீர்மைதன்மையிலிருந்து குறையும் என்று கூறியுள்ளார்.
பரிமேலழகர் கூறும் போதும் எழிலி அதாவது மேகம் குறைந்து
பெய்யுமாயின் நெடுங்கடலும் தன் தன்மையிலிருந்து குறைந்து விடும் என கூறியுள்ளார்.
எனில்! கடலில் மழைநீர்
கலக்க வேண்டுமென்றே கூறப்பட்டுள்ளது.
குறளின் சொல்லாட்சி செறிவுடையது என்பது யாவரும்
அறிந்த ஒன்றே.
நெடுங்கடல் என்ற
சொல்லாட்சி சிந்திக்க
வைக்கிறது.கடல் என்பதே பெரிது,நெடிது என
நினைக்க நெடுங்கடல் என்கிறாரே! இல்லை இல்லை “நெடுங்கடலும்” என்றல்லவா கூறுகிறார்.
ஆம் கடலும்
அதுவும் மாபெரும் கடலும் என்று பொருள் தருவதாக சொல்லட்சியுடன் அமைந்துள்ளது முதல் சீர்.
தன்னீர்மை என்றால்
என்ன
? அதாங்க இரண்டாவது சீர்.இந்த சொல்லாட்சியோ இன்னும்
வியப்பில் ஆழ்த்துகிறது.என்ன வியப்பு என்றால்,வேதியியல் படிக்கும் போது நீரின் தன்மை அமிலத்தன்மையா அல்லது காரத்தன்மையா
என அறிய PH Value படித்திருக்கிறோம்.ஆனால்
வள்ளுவர் காலத்திலேயே அதைப் பற்றிய குறிப்பு இந்த சொல்லில் பொதிந்துள்ளது.ஆம் ph 7 என்றால் அது தூய நீரின் நிலை அதாவது காரத்தன்மையும்
மிகாமல்,அமிலத்தன்மையும் மிகாமல் நடுநிலையோடு இருப்பதை குறிக்கிறது.
பொதுவாக ph-7 க்கு குறைவாக
இருந்தால் அமிலத்தன்மையும்,கூடுதலாக இருந்தால் காரதன்மையுடனும்
இருப்பதாக கொள்ள வேண்டும்.கடல் நீரின் ph 7.4-8.3 வரை இருக்கும்.இது அதிகமானால்
கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு உண்டாகும் அதாவது மடிந்து போகும்.
கடலுக்கு கனிமம் கடத்தும் ஆறுகள். |
நதிகளின் மூலம் கனிமங்களும்,உப்பும் கடலை வந்து சேருகின்றன,இதோடு
மட்டுமின்றி கடலுக்கு அடியில் இருக்கும் புவியின் மேல்தட்டிலிருந்து வெடிப்புகளின்
மூலம் கடல்நீர் பூமிக்குள் சென்று அங்குள்ள கனிமங்கள் மற்றும் உப்புகளை சுமந்துக் கொண்டு
மீண்டும் வெந்நீர் ஊற்றுகளாய் வெளிவந்து கடல்
நீரோடு கலந்து மேலும் உப்பு மற்றும் கனிமங்களை கடல் நீரில் கலந்து விடுகின்றன.
கடலுக்குள் இருக்கும்
எரிமலைகள் வெளியிடும் கனிமங்கள் மற்றும் உப்புகளும் கடலில் கலக்கின்றன.அதோடு காற்றின்
மூலம் வரும் கனிமங்கள்,உப்பும் சேர்ந்து கடல் நீரின் உப்புத்தன்மையை அதிகரிக்க செய்கிறது.
கடலின் அடியில் இருக்கும் எரிமலை. |
இந்நிலையில் கடல் எப்படி சமன் செய்து கொள்கிறது.
கடலில் வாழும் ஓட்டுடலிகள்(shell body animals).மெல்லுடலிகள்
(Molluscs)
மெல்லுடலிகள். |
மற்றும் பவள பாறைகள் (Coral reef) போன்ற கடல் வாழ் உயிரினங்கள் உப்பை உறிஞ்சிக்
கொள்கின்றன. கால்சியத்தைக் கொண்டு எலும்பு மற்றும் ஓடுகளை உருவாக்கி கொள்கின்றன இப்படி
தொடர்ந்து சுழற்சி நடந்து கொண்டேயிருக்கிறது,
ஓட்டுடலிகள். |
எனினும் உப்புத்தன்மையின் பெருக்கத்தை
குறைக்க நன்னீர் கடலில் சேர வேண்டியது அவசியமாகிறது,அப்படி நன்னீர் சேராத போது நிலத்தடி
நீரில் கடல் நீர் ஊடுருவி நீரின் மற்றும் நிலத்தின் உப்புத்தன்மையை அதிகப்படுத்தும்
அபாயமும் உள்ளது.ஏற்கனவே சில கடற்கரையோரம் இந்த ஊடுருவல் உணரப்பட்டுள்ளது.
பவள பாறைகள். |
தற்காலத்தில், கரியமில வாயுவை வாகனங்களின் மூலம்,தொழிற்சாலைகள்
மூலம் தொடர்ந்து வெளியிடுகிறோம்,இந்த கரியமில வாயு கடலில் கலக்கும் போது நீரின் அமிலத்தன்மையை
அதிகப்படுத்துகிறது,இதனால் புவி தட்டுகளின்(tectonic plates) நகர்வு நடக்க்கூடும் என்றும்
இன்றைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.ஆய்வினை கேள்வியுறும் போது முங்காலத்தை விட தற்காலத்தில்
கூடுதலான நன்னீரை கடலில் கலக்க விட வேண்டியது அவசியமாகிறது.
ஆனால்,திருவள்ளுவரோ
அமிலம்,காரம் என்று எந்த சந்தேகமுமின்றி அறுதியிட்டு நீர்மைதன்மை குன்றும் என்கிறார்
தொலைநோக்கு கொண்ட தீர்க்கதரிசி திருவள்ளுவர்.
தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் என்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்.
எழிலி என்றால் மேகம் என்றும் தடித்து என்பது திரண்ட அல்லது பெருத்த
என்றும் அல்லது தடித்து என்பது மின்னல் என்றும் பொருள்படும்படியாக பாடியுள்ளார்.
எளிமையாக, திரண்டெழுந்த மின்னலடிக்கிற மேகம் மழையை பொழியாவிட்டால்,
கடல் நீரின் நீர்தன்மை குறைந்து விடும் என்கிறார்.நீர்தன்மை குறைதல் என்றால் உப்பின்
அடர்வு மிகுதல் ஆகும்.சிறுமேகம் என்று சொல்லாமல் திரண்ட மேகம் வந்தால்தான் கடலில் சேருமளவுக்கு
மழை வரும், சிறு மேகம் நிலத்தை நனைப்பதற்கே போதுமானதாக இருக்கும் என்றுணர்ந்து திரண்ட
மேகம் என்று திருவள்ளுவர் சொல்லாட்சியை மீண்டும் நிலைநாட்டுகிறார்.
திரண்டெழுந்த மின்னலடிக்கிற மேகம் மழை பொழிந்தால்தான் கடலின்
நீர்த்தன்மை நிலைபெறும் என்று கூறுகிறார்.உப்பின் அடர்வு அதிகரித்தால் கடல்வாழ் உயிரினங்கள்
அழியும் இதனால் (Ecology of sea) கடலின் சூழலியல் பாதிப்படையும், பூமியின் சூழலியல்
என்பது கடலின் சூழலியலை சார்ந்ததுதான் என்பதை நாம் உணர வேண்டும்.அதோடு கடலில் உப்பையும்,கனிமத்தையும்
கொண்டு சேர்க்க வேண்டியது ஆறுகளின் பொறுப்பாகும்.
திரண்ட மேகம். |
மேலும்,பன்னெடு காலமாக மலையில் பிறந்து ஆறாய் ஓடி கடலில் கலந்துக்
கொண்டிருக்கிறது நன்னீர் ஆறாய்.இடையில் வந்த மனிதர்களாகிய நாம் அதை சொந்தம் கொண்டாடுவதுடன்
கடலுக்கு செல்வதும் வீண் என்று சொல்வதும் எவ்வளவு சுயநலம்.கடலில் கலந்தாலும்,மேகம்
முகர்ந்து நன்னீராகவே பொழியும்,இதனால் வீண் என்பது இல்லை,மேலும் நம் வருங்கால சந்ததியினருக்கு
இந்த பூமியை நல் முறையில் கையளிக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு உள்ளது என்பதை
நாம் உணரவுமே இந்த பதிவு.
அன்புடன் கோ.லீலா.
மிகச் சிறப்பான பதிவு. இந்த பூமி நம் முன்னோர்கள் நமக்குக் கொடுத்துச் சென்ற பரிசு அல்ல மாறாக அடுத்த தலைமுறையிடம் நாம் வாங்கியிருக்கும் கடன் இந்தப் பூமியை இருப்பதை விட இன்னும் சிறப்பாக அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டியது நமது கடமை.
ReplyDelete