ஆதிக்காலத்தில் காட்டில் வாழ்ந்த மனிதர்கள் இலைகளையும், மரப் பட்டைகளையும் ஆடைகளாய் தரித்து வாழ்ந்தனர். கைக்கு கிடைத்த காய், கனிகளையும்,வேட்டையாடிய விலங்குகளையும் உண்டு வாழ்ந்தனர்.ஆனால் அவர்களுக்கு நம்மை போன்று மூன்று வேளையும் உணவு கிடைக்கவில்லை அதற்கு மாறாக,ஒரு வேளை உண்விற்கும் மறுவேளை உணவிற்கும் இடையில் பலநாட்கள் அவர்கள் போராட வேண்டியிருந்தது.
ஆற்றங்கரையில் குடியேறி மெள்ள நாகரீக வாழ்வை நோக்கி நகர தொடங்கினர்..அதன் முதல்படியாக விவசாயம் தான் இருந்தது,விவசாயம் செய்து அதன் அறுவடையில் கிடைத்த அளவற்ற தானியங்களை கண்டு திகைப்படைந்தனர்.
தானியங்களை பறவைகள் கொத்தி சென்றன,எலியும்,மற்ற விலங்குகளும் தானியங்களை வீணாக்குவதை கண்டு அதனை எப்படியாவது பாதுகாப்பாக சேகரிக்க வேண்டும் என யோசித்தனர்.
அதன் விளைவாக, மண்ணாலும்,பின்னர் மரத்தாலும் குதிர்களை உருவாக்கினர், பின்னர் சுட்ட செங்கற்கள் கொண்டும் குதிர்களை அமைத்தனர். தேவைக்கேற்ப அதன் அளவும்,வடிவமும் நிர்ணயிக்கப்பட்டன. காட்டில் வசித்ததால் காட்டில் காணும் பொருட்களின் வடிவமைப்பை சில குதிர்கள் கொண்டிருந்தன.
நான் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவள்.எங்கள் மூதாதையர்கள் வேளாங்கண்ணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமத்தில் வாழ்ந்து வந்தார்கள். எங்களின் ஆத்தா,தாத்தா வீட்டில் குதிர்,பத்தாயம்,கோட்டை,சேர் என தனிதனி பெயரில் ஒவ்வொன்றையும் அழைப்பார்கள்.குதிரின் அடிப்பாகத்தில் சிறிய கதவு போன்ற அமைப்பு இருக்கும் அடிக்கடி நாங்கள் திறந்து விட்டு கொட்டும் நெல்லை வேடிக்கைப் பார்த்ததும்,பெரியவர்கள் வரும் போது சிரித்துக் கொண்டு ஏய்த்து ஓடியதும்,நெல்கோட்டையில் சாய்ந்து நின்ற நினைவெல்லாம்,அவிக்கும் நெல் மணமாய்,முற்றிய கதிர் உடைய வயலை கடக்கும் போதெல்லாம் நெஞ்சு வரை பரவும் பச்சை நெல் மணமாய் நினைவு அடுக்குகளில் மணம் வீசுகிறது.
சரி
! இப்போது ஒவ்வொரு வகைகளை குறித்து காண்போம்.
களிமண் மற்றும் வைக்கோலை கொண்டு உறைகள் என்று சொல்லப்படும் வளையங்கள் செய்து, அதனை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி ஒரு பெரிய கொள்கலன் செய்யப்படும்... இதன் கடைசி உறையின் கீழ் புறம் பக்கவாட்டில் நெல் எடுப்பதற்காக ஒரு துவாரம் அமைக்கப்பட்டிருக்கும்.. இதனை வைக்கோலை அடைத்து களிமண்ணால் பூசி விடுவார்கள். தேவைப்படும் போது இதை திறந்து நெல்லை எடுக்கலாம்..இதில் சுமார் பத்து மூட்டைகள் வரை சேமிக்கலாம்...
பத்தாயம்:
ஒன்று அல்லது ஒன்றரை அடி அகலமும் நான்கு அல்லது ஐந்து அடி நீளமும் உள்ள பலகைகளை சதுரமாகவோ, செவ்வகமாகவோ பெட்டிபோல இணைத்து (இதற்கு சட்டி என்று பெயர்) , அந்த சதுர பெட்டிகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி இணைத்து (நான்கு அல்லது ஐந்து சட்டிகள்) ஒரு உயரமான கொள்கலன் செய்வார்கள்.. இதில் கொள்ளளவிற்கேற்ப இருபத்தைந்து மூட்டைகளோ.. ஐம்பது மூட்டைகளோ வரை சேமிக்கலாம்.. ( ஒரு மூட்டை என்பது 70 கிலோ) அவரவர்களின் விளைநிலங்களின் அளவை பொறுத்து ஒன்று, இரண்டு, மூன்று நான்கு கூட வைத்திருப்பார்கள்..
கோட்டை:
வைக்கோலை கயிறுபோல திரித்து (இதன் பெயர் பிரி)அதனை ஒரு நட்சத்திரம் வரைவதுபோல குறுக்கும் நெடுக்குமாக தரையில் விரித்து அதன் மீது உதிரி வைக்கோலை பரப்பி அதில் நெல்லை கொட்டி ஒரு பந்துபோல உருட்டி வைக்கோல் பிரிகளால் இறுக்க கட்டி விடுவார்கள்.. பிறகு இதன் மீது மாட்டு சாணத்தால் மெழுகி காயவைத்து விடுவார்கள்.. இதில் சுமார் ஒரு மூட்டை அளவு நெல்லை பாதுகாக்கலாம்... மறுபடியும் அடுத்த பருவத்திற்கு பயிரிட தேவையான விதை நெல்லை இப்படி பாதுகாப்பார்கள்.. இப்படி பாதுகாப்பதால் அந்த விதை பூச்சி புழுக்கள் அண்டாமல் ஒரு குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையிலேயே இருக்கும்.. இதனால் விதை நெல் முளைப்புத்திறன் குறையாமல் பாதுகாக்கப்படும் …..
சேர் (சேரு) :
முதலில் வைக்கோலை மிக நீண்ட பிரியாக திரித்துக்கொள்வார்கள் .. வீட்டின் வாசலில் குறைந்தது ஆறு அடி விட்டமுள்ள அரை அடி(அ) ஒரு அடி உயரமுள்ள மண் மேடு அமைத்து அதில் உதிரி வைக்கோலை பரப்பி பிறகு அதில் நெல்லை கொட்டி.. திரித்து வைத்த வைக்கோல் பிரியால் சுற்றி சுற்றி சுவர் போல் உயர்த்துவார்கள்.. இப்படி உயர்த்தி உயர்த்தி சுமார் ஆறு முதல் எட்டு அடி உயரம் கொண்டு செல்வார்கள்.. பிறகு மேற்புறம் வைக்கோலால் கூரை வேய்ந்து மூடி விடுவார்கள்.. இது ஒரு தேர் போல காட்சியளிக்கும்.. இதில் குறைந்த பட்சம் இருபது மூட்டைகள் வரை சேமிக்கலாம்..
இது
குயவர்களால் செய்யப்படும்.. முதுமக்கள் தாழி என்று சொல்லப்படுவது போல இருக்கும் சுட்ட களிமண்ணால் ஆனது... இதில் குறைந்தது ஒரு கலம் (ஒரு கலம் என்பது பன்னிரண்டு மரக்கால்) அளவு சேமிக்கலாம்.. இதில் நெல், அரிசி, இன்னும் மற்ற சிறு தானியங்களையும் சேமிப்பார்கள்...
இத்தனை வகையினை நம் முன்னோர்கள் அறிவியல் அடிப்படையில் தானியங்களை பாதுகாக்க முறைப்படுத்தியிருகின்றனர்.
உணவின் மகத்துவத்தையும்,தேவையையும் உணர்ந்த நம் முன்னோர்கள் தானியங்களை முன்னெச்சரிக்கையுடனும் மிகுந்த பக்தி அல்லது மாரியதையுடனும் பாதுகாத்தார்கள் என்பதற்கு மேல் கூறிய குதிர், கோட்டை,பத்தாயம் எல்லாம் சான்றாகும்.
காலப்போக்கில் நவநாகரீக வாழ்வால் குதிரும்,பத்தாயமும் விரட்டப்பட்டன.இன்றோ நினைவு சின்னமாக மட்டுமே உள்ளது. அதோடு மக்களின் நலனும் பாதிக்கப்பட்டு விட்டது.ஒரு காலத்தில் கடையில் அரிசி வாங்குவதை தரக்குறைவாக நினைத்தனர்.ஆனால் இன்றோ கிராமத்தில் கூட மைசூர் பொன்னியே பிரதானமாக உள்ளது.
குதிர்,பத்தாயமும் இல்லாத காரணத்தினால்,விவசாயிகள் சாக்கு மூட்டையில் கட்டி வைக்கின்றனர்.பனியும்,மழையும் ஊடுருவி நெல்லின் தரத்தை குலைக்கின்றது.
கோடைக்காலத்தில் நெல் கட்டுவிட்டு அரிசியில் கோடு விழுந்து குருணையாகி விடும்.அதுமட்டுமின்றி எலிகள் சாக்கை ஓட்டையிட்டு தானியங்களை சூறையாடி விடும் ஆபத்தும் அதிகம்.
இதனால் நெல்லை பத்திரப்படுத்த முடியாமல் உடனடியாக வரும் விலைக்கு விற்க வேண்டிய நிர்பந்தமும் உருவாகிவிட்டது.ஒரு மூட்டை என்பது 60கிலோ எடைக்கொண்டது.ஒரு மூட்டையை ரூ 900-1000 க்கு விற்று விட்டு,விதை நெல்லை விலைக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை அதுவும் 30 கிலோ எடையை ரூபாய் 1000க்கு வாங்கி விதைக்கின்றனர்.
இது
புறமிருக்க,நினைவு சின்னம் என்றோமே அதைப் பற்றி பார்ப்போம்.
நெற்களஞ்சியம் என்று போற்றப்பட்ட தஞ்சை மாவட்டத்திலும்,அதை அடுத்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும் கோயில்களில் சுட்ட செங்கற்களால் கட்டிய
குதிர்கள் உள்ளன.
அதில் ஆசியாவிலேயே, மிகப் பெரிய குதிர் தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில்,பாபநாசத்திலிருந்து திருப்பாலைத் துறைக்கு பிரியும் சாலையில் பாலைவன நாதர் கோயிலில் உள்ளது.
இந்த குதிர் 400ஆண்டுகளுக்கு முன், கி.பி. 1600 – 1634 இல், தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னரால் கட்டப்பெற்ற நெற்களஞ்சியமாகும்,இன்றளவும் சிறு பழுதும் இன்றி கம்பீரமாய் காட்சியளிக்கிறது. இதன் கொள்ளளவு 3,000 கலம்.
முகத்தல் அளவை
இரண்டு படி என்பது ஒரு மரக்கால்
பனிரெண்டு மரக்கால் என்பது ஒரு கலம்
இரண்டு கலம் என்பது ஒரு மூட்டை
ஒரு
மூட்டை என்பது 60 கி.கி என்றார்கள்.
அப்படியென்றால் 3,000 கலம் கொள்ளளவு என்பது, 1500 மூட்டைகள் ஆகும்.
ஒரு
மூட்டை 60 கிகி என்றால், 1500 மூட்டைகள் என்பது தொன்னூறு ஆயிரம் கிலோ கிராம்.
அதாவது 90 டன்.
இதனை அரிசியாக்கினால், சற்றேறக்குறைய 45 டன் கிடைக்கும்.
ஒரு கிலோ அரிசியினைச் சமைத்தால், பத்துபேர் ஒரு வேளை உணவு உண்ணலாம் என வைத்துக் கொள்வோம்.
அப்படியானால், நான்கரை இலட்சம் பேர் இவ்வுணவினை ஒரு வேளை உண்ணலாம்.
ஆயிரத்து ஐநூறு பேர் அடங்கிய சிறு கிராமம் எனில், மூன்று வேளையும் சாப்பிட்டாலும், இந்த களஞ்சியத்திலுள்ள நெல்லைக் கொண்டு, 150 நாட்களுக்கு வயிறாரவும்(திருப்தியாக சாப்பிட்டால்-Fill) வயிறாறவும்(பட்டினி கிடந்த பின் உண்ணுதல் -HEAL) உணவு உண்ணலாம்.
அதே
போல் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலிலும் வரிசையாக குதிர்கள் உள்ளன.
இலக்கியத்தில் குதிர் பற்றிய குறிப்பு ஒரு கண்ணோட்டம்:
வைக்கோலுக்கும் யானைக்கும் சிலேடை கவிதையை காளமேக புலவர் எழுதிய பாடல் உங்களுக்காக.
வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும்
போரிற் சிறந்து பொலிவாகும் – சீருற்ற
செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலும் மால்யானை யாம். (3)
வைக்கோலானது வாரிக் களத்தில் அடிக்கப்படும். பின்னர் அது வைக்கோல் போர்க் கோட்டையாக புகுத்தப்படும். வைக்கோல் போரில் அது சிறந்து பொலிவுற்றிருக்கும்.
யானை பகைவர்களை வாரிப் போர்க்களத்தில் அடிக்கும். பின்பு வந்து அதன் கட்டுத்தறியாகிய கோட்டைக்குள் புகும். போர்க்களத்தில் சிறப்புடன் பொலிவுற்று விளங்கும்.
இந்த பாடலில் நெல்கோட்டையைப் பற்றிய குறிப்பு உள்ளது.காளமேக புலவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திருவானைக்கால் ஊரில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் நெல்கோட்டைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்.
கீழ் வரும் பெரும்பாணாற்றுப்படை பாடலிலும் குறிப்பு உள்ளது.
எழுகாடு ஓங்கிய தொழுவுடை வரைப்பின்
பிடிக்கணத்து அன்ன குதிர்உடை முன்றில்
களிற்றுத்தாள் புரையும் திரிமரப் பந்தர்
குறுஞ்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி
நெடுஞ்சுவர் பறைந்த புகைசூழ் கொட்டில்
பருவ வானத்துப் பாமழை கடுப்பக்
கருவை வேந்த கவின்குடிச் சீறூர் - பெரும் 184 – 191
நெல் காய்க்க போகும் மரமெது எனக் கேட்க போகும் நவயுக தலைமுறையினருக்கு இது ஒரு செய்தி சொல்லும் பதிவாக இருக்கும் என நினைக்கிறேன்.
அன்புடன் கோ.லீலா.
பழைய தமிழினம் உலக உயிர்களுக்கு எடுத்துக் காட்டு வணக்கம்
ReplyDeleteVERY INFORMATIVE WE CANT LOST ALL PAST. USE THE WORDS 'KUTHIR' TO OUR CHILDRENS. I FEEL MY GRANDFATHER BECAUSE HE SERVE THE FOOD "CHOLA CHORU" IN SOLID FORM TO ALL POORS IN EMERGENCY TIME. SOME OF THEM TOLD ME THAT " YOU ARE CHOLAKAADI FAMILY" THANKS.
ReplyDelete