வாங்க தோழமைகளே ! வணக்கம்,நிறைய பேர் மறந்து போன மரபு பதிவிற்கு வாழ்த்தும் தொடர்ந்து பல்வேறு பொருட்களை குறித்த பதிவினையும் செய்யுமாறு கேட்டனர்.அனைத்து நல்லுங்களுக்கும் நன்றியும்,அன்பும்.
நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தனர் எத்தகைய பொருட்களை பயன்படுத்தினர்,அதன் அறிவியல் பின்னணி என்ன என்பதையெல்லாம் நாமும்,நம் சந்த்தியினரும் அறிவதன் மூலம் தன் பாரம்பரியமும்,வரலாறும் அடைய வேண்டிய தொலைவினை நிர்ணயிக்க இயலும் என நினைக்கிறேன்.
இன்று நாம் பார்க்கவும்,பேசவும் போகும் பொருள் பிரிமனை.
பிரிமனையை பரணை,திருகாணி,திருகணை,அடவியன் என பல்வேறு பெயர்களால் அழைக்கின்றனர்.இந்தியாவில் பிரிமனை அல்லது பரணை என்று அழைக்கின்றனர்.இலங்கை பகுதியில் திருகணை,அடவியன் என்று அழைக்கின்றனர்.
20ம் நூற்றாண்டில் கீழை நாடுகளின் சமையலறையில் சமையல் செய்த பானை,சட்டி,குடம் போன்ற அடிப்பாகம் வளைந்த பாத்திரங்களை விழுந்து விடாமல் இருக்கவும்,அசையாமல் இருக்கவும்,பாத்திரத்தின் அடிப்பகுதியில் வட்ட வடிவில் பனை நார்/தென்னை நார் அல்லது அப்பகுதியில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு திரணையாக அல்லது உருளையாக வடிவமைக்கப்பட்ட பொருளின் பெயர் தான் பிரிமனை.
சூட்டினை பொறுக்கவும்,பாத்திரம் விழாதிருக்கவும் பயன்படும்வைக்கோல் பிரியால்செய்யப்பட்டதால் பிரிமனையென்று அழைக்கப்பட்டது. பனை நாரினால் செய்யப்பட்டது அடவியன் என அழைக்கப்பட்டது.
கனமான பொருட்களை தலையில் சுமந்து செல்வோரும்,பொருளுக்கும் தலைக்குமிடையே இத்தகைய பிரிமனைகளை பயன்படுத்தினர்,அவை சும்மாடு என அழைக்கப்பட்டது.அவை மென்மையான் பொருட்களை கொண்டு செய்யப்பட்டிருக்கும் நாளடைவில் துணியினை சும்மாடாக பயன்படுத்தினர்.
இக்கால குளிர்சாதனப் பெட்டியின் பணியினை உறி செய்து வந்தது.உறியினைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.இந்த உறியின் அடிப்பாகத்தில் பிரிமனை பானைகளை வைப்பதற்கு பயன்பட்டது.
பிரிமனை என்பது சற்று பெரிய பாத்திரங்களை வைப்பதற்கும் பயனப்டும்.சில இடங்களில் வாழை நாரினாலும் திருகணைகள் செய்யப்படுகின்றன. பாத்திரங்களை அணைத்து விழாதிருக்க ஆதரவு நல்குவதால் இதன் பெயர் திருகணை ஆகியிருக்கலாம் என்பது ஒரு ஊகமாக் இருக்கிறது.
இந்து சமய சடங்குகளில் தீச்சட்டி தாங்கும் போது வேப்பிலைகளால் ஆன பிரிமனைகள் பயன்படுத்தப்படுகின்றன.இப்போதும் கூட கிராமப்புறங்களில் பிரிமனை பயன்படுத்தப்படுகின்றன.
சமய சடங்குகளை கடந்து கலை,இலக்கியத்திலும் பிரிமனைகள் இடம் பெற்றுள்ளன.நாட்டுப்புற கலையான கரகாட்டம் மற்றும் பிரிமனையின் மீது ஒற்றை பானையை வைத்துக்கொண்டு ஆட்ட்த்தை துவக்கி பின் மெல்ல தாளக்கதிக்கு ஏற்றவாறு ஆடியப்படியே ஒவ்வொரு பானையாக தலையில் இருக்கும் பானை மீது அடுக்கிக் கொண்டு ஆடும் சில நடனங்களிலும் பிரிமனைகள் பயன்படுகின்றன.இந்த நடனம் இன்றைய இளைஞர்களால் வியப்புடன் பார்க்கப்பட்டும்,பாராட்டப்பட்டும் வருகின்றது.
பழநிக்கு தென் மேற்கில் இருக்கும் பொருந்தல் கிராமத்தில் ஈம்மனையினை அகழ்வராய்ச்சி செய்த்தில் ஈமக்குழியில் 2கிலோ நெல்மணிகள்,இன்னும் பிறப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.அந்த நெல்மணிகள் கி.மு 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.எனில் அத்தகைய பழமையானது பிரிமனையும்.
தொழில்நுட்ப முன்னேற்றங்களும்,உலக மயமாதலும் அடுமனையிலும் தன்னை நீட்டிக் கொண்டுள்ளது. ஆம் பிரிமனை வழக்கொழிந்து போக சில்வர் தாங்கிகள்(silver holder),வண்ண வண்ண ரப்பர்,நாரினால்,மூங்கில் செய்யப்பட்ட விரிப்புகள் இப்போது புழக்கத்தில் வந்து விட்டன.
பல செய்திகள்,பொருட்கள் வழக்கொழிந்து போய்விட்டன,இத்தகைய செய்திகள்,பொருட்களை நம் பிள்ளைகள் அறிந்துக்கொள்ள வேண்டும்.நம் வாழ்வியலின் பிடிமான வேர் அது தானே.வழக்கொழிந்துப் போன பராம்பரிய பொருட்களைப் பற்றிய செய்திகளை ஆவணப்படுத்த வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையின் ஒரு துளிதான் இந்த படைப்பு.
அன்புடன் லீலா.
No comments:
Post a Comment