Friday, 27 July 2018

கடத்தப்பட்ட காடு

கண்ணாலே கடத்தி வந்த
காட்டில் திளைத்து கிடக்குதே
மனம் சொகமா…
பெருங்காட்டில் ஒத்த மயிலா
சிறகுகோதி அலையுதே
மனம் தனியா…
கொட்டி புதைந்த விதைகள்
முட்டி வெளிவந்து நிற்குதே
கூட்டு பச்சையமா
கால் படா வான் சென்று
விழிகள் போடுதே புது தடமா
தடத்தில் மிதக்கும் மேகம்
பஞ்சு பொதியாய் கனவின்
தலையணைக்குதே மெதுவா
மிளிரும் மயில் தோகையில்
ஆடும் மெல்லிய பூங்காற்று
அருவி தொட்டு சேலை கட்டி
பறந்து ரசிக்குதே
மரத்தின் தலையாட்டி
பூவென உதிரும் மழைதுளி
ஏந்தும் இருகையில்
வரமாய் மிதக்குதே வானம்
நினைவுகள் யாவும் கனவாகும்
கனவும் இனி இனிதாகும்.
-கோ.லீலா.

இயற்கையின் தூரிகை.



நிறமற்ற நீரை
முகர்ந்த மேகம்
கறுமையானது எப்படி
கறுத்த மேகம்
தாங்கும் வானம்
நீலமானது எப்படி
மேகம் சிந்தும் மழை
வெண்மையாய்
தோன்றுதே எப்படி
நீரை பருகி வளரும்
மரமும் செடியும்
பச்சையானது எப்படி
பச்சை மரங்களில்
பூத்து குலுங்கும்
பூக்கள் யாவும்
வண்ணமானது எப்படி
வண்ணப் பூக்கள்
காயாகும் போது
பச்சையானது எப்படி
பச்சை காய்கள்
கனியும் போது
வண்ணமாவது எப்படி
வானில் வயலில்
இலையில் பூவில்
காயில் கனியில்
அலையில் கரையில்
புகுந்து வழியும்
காற்றில் ஏதும்
நிறமில்லையே எப்படி
இயற்கை தேவன்
வண்ணத் தூரிகை
ஒளித்து இடம்
காணுவது எப்படி
கண்ட பின்னே
வண்ணம் குழைக்கும்
தூரிகையின் ஓரிழையாய்
வரம் கேட்க வேண்டும்
மனதின் சொற்படி.
-கோ.லீலா.

Thursday, 26 July 2018

கடலை தேடிய நதிகள்.



வணக்கம் தோழமைகளே

நீண்ட நாட்களுக்கு பின் மழையைப் பற்றி பேச போகிறோம்.

ஆறு கடலில் சேரும் காட்சி.
              

மன்னர்கள் அக்காலத்தில் கேட்டது போல் மாதம் மும்மாரி பொழிந்ததா என  இந்த மாதம் கேட்டிருந்தால் மன்னா மாதம் முப்பதும் மாரி என பதில் சொல்லியிருப்பார்கள்.
அது சரி அணைகள் எல்லாம் நிரம்பி வழியும் அடுத்த மாநிலம் நுழைந்து அங்குள்ள அணைகளை நிரப்பி பின் கடலை நோக்கி பயணிக்கிறது.இந்நேரத்தில் பலரும், சில ஊடகங்கள் உட்பட கடலில் தண்ணீர் வீணாக கலக்கிறது என கவலைப்பட்டும், கடுமையாக விமர்ச்சித்தும் வருகிறார்கள்.

கடலில் குறிப்பிட்ட அளவு மழை பொழியவேண்டும் என்பது குறித்து பலமுறை விவசாயிகளிடையே பேசியிருந்தாலும் இந்த நேரத்தில் அதைப் பற்றி பேசுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

கரையோர மக்களையெல்லாம் பாதுகாப்பாக இருக்க சொல்லி அறிவிக்கப்பட்டுள்ளது.காவிரி தாய் வீறு நடைப்போட்டு புல் பூண்டுகளை எல்லாம் உய்வித்து பொங்கி பிராவகிப்பதை பெரும் மகிழ்வுடன் மக்கள் பார்த்த வண்ணமிருக்கின்றனர்..காவிரி கடல் நோக்கி போகிறதே என கவலைபடுபவர்களுக்கு
திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என பார்ப்போம்,ஏனெனில் சுற்றுசூழல் குறித்து வள்ளுவரின் பார்வையை முன்பே திருக்குறளின் நான்காம்பால் என்ற பதிவில் பார்த்தோம்,எனவே இது குறித்தும் திருவள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் என பார்ப்போம்.

வான் சிறப்பு அதிகாரத்தில்

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் 

(அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:17)  என சொல்லியிருக்கிறார்.

இதன் பொருள் என்ன சற்று விரிவாக பார்ப்போம்.

மணக்குடவர் தான் குறளுக்கு முதலில் உரை எழுதியவர் என நினைத்து அவரின் உரையை பார்த்தேன.

மேகம் திரண்டு மின்னி மழை பொழியாவிடில் நிலம் மட்டுமின்றி நெடுங்கடலும் தன்  நீர்மைதன்மையிலிருந்து குறையும் என்று கூறியுள்ளார்.

பரிமேலழகர் கூறும் போதும் எழிலி அதாவது மேகம் குறைந்து பெய்யுமாயின் நெடுங்கடலும் தன் தன்மையிலிருந்து குறைந்து விடும் என கூறியுள்ளார்.
எனில்! கடலில் மழைநீர் கலக்க வேண்டுமென்றே கூறப்பட்டுள்ளது.

குறளின் சொல்லாட்சி செறிவுடையது என்பது யாவரும் அறிந்த ஒன்றே.

நெடுங்கடல் என்ற சொல்லாட்சி  சிந்திக்க வைக்கிறது.கடல் என்பதே பெரிது,நெடிது என நினைக்க நெடுங்கடல் என்கிறாரே! இல்லை இல்லைநெடுங்கடலும்என்றல்லவா கூறுகிறார்.

 ஆம் கடலும் அதுவும் மாபெரும் கடலும் என்று பொருள் தருவதாக சொல்லட்சியுடன் அமைந்துள்ளது முதல் சீர்.

தன்னீர்மை என்றால் என்ன ? அதாங்க இரண்டாவது சீர்.இந்த சொல்லாட்சியோ இன்னும் வியப்பில் ஆழ்த்துகிறது.என்ன வியப்பு என்றால்,வேதியியல் படிக்கும் போது நீரின் தன்மை அமிலத்தன்மையா அல்லது காரத்தன்மையா என அறிய PH Value படித்திருக்கிறோம்.ஆனால் வள்ளுவர் காலத்திலேயே அதைப் பற்றிய குறிப்பு இந்த சொல்லில் பொதிந்துள்ளது.ஆம் ph 7 என்றால் அது தூய நீரின் நிலை அதாவது காரத்தன்மையும் மிகாமல்,அமிலத்தன்மையும் மிகாமல் நடுநிலையோடு இருப்பதை குறிக்கிறது.

பொதுவாக ph-7 க்கு குறைவாக இருந்தால் அமிலத்தன்மையும்,கூடுதலாக இருந்தால் காரதன்மையுடனும் இருப்பதாக கொள்ள வேண்டும்.கடல் நீரின் ph 7.4-8.3 வரை இருக்கும்.இது அதிகமானால்  கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு உண்டாகும் அதாவது மடிந்து போகும்.
கடலுக்கு கனிமம் கடத்தும் ஆறுகள்.
                    


நதிகளின் மூலம் கனிமங்களும்,உப்பும் கடலை வந்து சேருகின்றன,இதோடு மட்டுமின்றி கடலுக்கு அடியில் இருக்கும் புவியின் மேல்தட்டிலிருந்து வெடிப்புகளின் மூலம் கடல்நீர் பூமிக்குள் சென்று அங்குள்ள கனிமங்கள் மற்றும் உப்புகளை சுமந்துக் கொண்டு மீண்டும் வெந்நீர் ஊற்றுகளாய்  வெளிவந்து கடல் நீரோடு கலந்து மேலும் உப்பு மற்றும் கனிமங்களை கடல் நீரில் கலந்து விடுகின்றன.

 கடலுக்குள் இருக்கும் எரிமலைகள் வெளியிடும் கனிமங்கள் மற்றும் உப்புகளும் கடலில் கலக்கின்றன.அதோடு காற்றின் மூலம் வரும் கனிமங்கள்,உப்பும் சேர்ந்து கடல் நீரின் உப்புத்தன்மையை அதிகரிக்க செய்கிறது.
கடலின் அடியில் இருக்கும் எரிமலை.

இந்நிலையில் கடல் எப்படி சமன் செய்து கொள்கிறது.

கடலில் வாழும் ஓட்டுடலிகள்(shell body animals).மெல்லுடலிகள் (Molluscs)

மெல்லுடலிகள்.
                          

மற்றும் பவள பாறைகள் (Coral reef) போன்ற கடல் வாழ் உயிரினங்கள் உப்பை உறிஞ்சிக் கொள்கின்றன. கால்சியத்தைக் கொண்டு எலும்பு மற்றும் ஓடுகளை உருவாக்கி கொள்கின்றன இப்படி தொடர்ந்து சுழற்சி நடந்து கொண்டேயிருக்கிறது,
ஓட்டுடலிகள்.
                  
எனினும் உப்புத்தன்மையின் பெருக்கத்தை குறைக்க நன்னீர் கடலில் சேர வேண்டியது அவசியமாகிறது,அப்படி நன்னீர் சேராத போது நிலத்தடி நீரில் கடல் நீர் ஊடுருவி நீரின் மற்றும் நிலத்தின் உப்புத்தன்மையை அதிகப்படுத்தும் அபாயமும் உள்ளது.ஏற்கனவே சில கடற்கரையோரம் இந்த ஊடுருவல் உணரப்பட்டுள்ளது.


பவள பாறைகள்.

தற்காலத்தில், கரியமில வாயுவை வாகனங்களின் மூலம்,தொழிற்சாலைகள் மூலம் தொடர்ந்து வெளியிடுகிறோம்,இந்த கரியமில வாயு கடலில் கலக்கும் போது நீரின் அமிலத்தன்மையை அதிகப்படுத்துகிறது,இதனால் புவி தட்டுகளின்(tectonic plates) நகர்வு நடக்க்கூடும் என்றும் இன்றைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.ஆய்வினை கேள்வியுறும் போது முங்காலத்தை விட தற்காலத்தில் கூடுதலான நன்னீரை கடலில் கலக்க விட வேண்டியது அவசியமாகிறது.

ஆனால்,திருவள்ளுவரோ  அமிலம்,காரம் என்று எந்த சந்தேகமுமின்றி அறுதியிட்டு நீர்மைதன்மை குன்றும் என்கிறார் தொலைநோக்கு கொண்ட தீர்க்கதரிசி திருவள்ளுவர்.

தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்  என்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்.
எழிலி என்றால் மேகம் என்றும் தடித்து என்பது திரண்ட அல்லது பெருத்த என்றும் அல்லது தடித்து என்பது மின்னல் என்றும் பொருள்படும்படியாக பாடியுள்ளார்.
எளிமையாக, திரண்டெழுந்த மின்னலடிக்கிற மேகம் மழையை பொழியாவிட்டால், கடல் நீரின் நீர்தன்மை குறைந்து விடும் என்கிறார்.நீர்தன்மை குறைதல் என்றால் உப்பின் அடர்வு மிகுதல் ஆகும்.சிறுமேகம் என்று சொல்லாமல் திரண்ட மேகம் வந்தால்தான் கடலில் சேருமளவுக்கு மழை வரும், சிறு மேகம் நிலத்தை நனைப்பதற்கே போதுமானதாக இருக்கும் என்றுணர்ந்து திரண்ட மேகம் என்று திருவள்ளுவர் சொல்லாட்சியை மீண்டும் நிலைநாட்டுகிறார்.

திரண்டெழுந்த மின்னலடிக்கிற மேகம் மழை பொழிந்தால்தான் கடலின் நீர்த்தன்மை நிலைபெறும் என்று கூறுகிறார்.உப்பின் அடர்வு அதிகரித்தால் கடல்வாழ் உயிரினங்கள் அழியும் இதனால் (Ecology of sea) கடலின் சூழலியல் பாதிப்படையும், பூமியின் சூழலியல் என்பது கடலின் சூழலியலை சார்ந்ததுதான் என்பதை நாம் உணர வேண்டும்.அதோடு கடலில் உப்பையும்,கனிமத்தையும் கொண்டு சேர்க்க வேண்டியது ஆறுகளின் பொறுப்பாகும்.
திரண்ட மேகம்.


மேலும்,பன்னெடு காலமாக மலையில் பிறந்து ஆறாய் ஓடி கடலில் கலந்துக் கொண்டிருக்கிறது நன்னீர் ஆறாய்.இடையில் வந்த மனிதர்களாகிய நாம் அதை சொந்தம் கொண்டாடுவதுடன் கடலுக்கு செல்வதும் வீண் என்று சொல்வதும் எவ்வளவு சுயநலம்.கடலில் கலந்தாலும்,மேகம் முகர்ந்து நன்னீராகவே பொழியும்,இதனால் வீண் என்பது இல்லை,மேலும் நம் வருங்கால சந்ததியினருக்கு இந்த பூமியை நல் முறையில் கையளிக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு உள்ளது என்பதை நாம் உணரவுமே இந்த பதிவு.


அன்புடன் கோ.லீலா.


Friday, 20 July 2018

சாதி...

எங்களின் வியர்வைப் பட்ட
தானியங்களால் தீட்டுப்பட்ட
உன் சமையலறையை தீயிடு!
எங்களின் இசையை
அனுமதியின்றி அள்ளிப்
பருகிய காதுகளை கொய்து விடு!
எங்களின் ஆதிதாய் நடந்த
மண்ணில் நடந்து தீட்டான
உன் கால்களை முடமாக்கிவிடு!
எங்களின் சாதிப் பெயரை
உச்சரித்து தீட்டான உன்
நாவை துண்டித்து விடு
தீட்டான உன் நா நீராடிய
உமிழ்நீரை எதைக் கொண்டு
சுத்தம் செய்வாய்……..
எங்களின் இசையை கேட்டே
தேரேறும் தீட்டான
உங்களின் கடவுளரை
என் செய்வாய்………
உனது ஊதியத்திற்கு
கையெழுத்திடும் அதிகாரம்
பெற்ற எங்களால் உன்
தீட்டான ஊதியத்தை
என் செய்வாய்….
கலவிக்கு மட்டும்
சாதி பாராத உன்
காமூக மானுடர்களை
என் செய்வாய்……….
எங்களின் மூச்சுக் காற்று
கலந்த காற்றில் வாழும்
உன் உயிரை ………..
காதிழந்து காலிழந்து
தலையிழந்த உன்னை
எப்படியழைப்பது…….
எங்களை பழித்து தீட்டாகிய
உன் உடலை தீயால் எரித்தெடுக்க
மயானத்தில் காத்திருக்கும்
சோதரன் பெயர் மனிதன்.
-கோ.லீலா

மறந்து போன மரபு – 4 குதிர்.


                           
ஆதிக்காலத்தில் காட்டில் வாழ்ந்த மனிதர்கள் இலைகளையும், மரப் பட்டைகளையும் ஆடைகளாய் தரித்து வாழ்ந்தனர். கைக்கு கிடைத்த காய், கனிகளையும்,வேட்டையாடிய விலங்குகளையும் உண்டு வாழ்ந்தனர்.ஆனால் அவர்களுக்கு நம்மை போன்று மூன்று வேளையும் உணவு கிடைக்கவில்லை அதற்கு மாறாக,ஒரு வேளை உண்விற்கும் மறுவேளை உணவிற்கும் இடையில் பலநாட்கள் அவர்கள் போராட வேண்டியிருந்தது.

ஆற்றங்கரையில் குடியேறி மெள்ள நாகரீக வாழ்வை நோக்கி நகர தொடங்கினர்..அதன் முதல்படியாக விவசாயம் தான் இருந்தது,விவசாயம் செய்து அதன் அறுவடையில் கிடைத்த அளவற்ற தானியங்களை கண்டு திகைப்படைந்தனர்.

தானியங்களை பறவைகள் கொத்தி சென்றன,எலியும்,மற்ற விலங்குகளும் தானியங்களை வீணாக்குவதை கண்டு அதனை எப்படியாவது பாதுகாப்பாக சேகரிக்க வேண்டும் என யோசித்தனர்.

அதன் விளைவாக, மண்ணாலும்,பின்னர் மரத்தாலும் குதிர்களை உருவாக்கினர், பின்னர் சுட்ட செங்கற்கள் கொண்டும் குதிர்களை அமைத்தனர். தேவைக்கேற்ப அதன் அளவும்,வடிவமும் நிர்ணயிக்கப்பட்டன. காட்டில் வசித்ததால் காட்டில் காணும் பொருட்களின் வடிவமைப்பை சில குதிர்கள் கொண்டிருந்தன.

 நான் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவள்.எங்கள் மூதாதையர்கள் வேளாங்கண்ணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமத்தில் வாழ்ந்து வந்தார்கள். எங்களின் ஆத்தா,தாத்தா வீட்டில் குதிர்,பத்தாயம்,கோட்டை,சேர் என தனிதனி பெயரில் ஒவ்வொன்றையும் அழைப்பார்கள்.குதிரின் அடிப்பாகத்தில் சிறிய கதவு போன்ற அமைப்பு இருக்கும் அடிக்கடி நாங்கள் திறந்து விட்டு கொட்டும் நெல்லை வேடிக்கைப் பார்த்ததும்,பெரியவர்கள் வரும் போது சிரித்துக் கொண்டு ஏய்த்து  ஓடியதும்,நெல்கோட்டையில் சாய்ந்து நின்ற நினைவெல்லாம்,அவிக்கும் நெல் மணமாய்,முற்றிய கதிர் உடைய வயலை கடக்கும் போதெல்லாம் நெஞ்சு வரை பரவும் பச்சை நெல் மணமாய் நினைவு அடுக்குகளில் மணம் வீசுகிறது.

சரி ! இப்போது ஒவ்வொரு வகைகளை குறித்து காண்போம்.

குதிர்:
                                                      

களிமண் மற்றும் வைக்கோலை கொண்டு உறைகள் என்று சொல்லப்படும் வளையங்கள் செய்து, அதனை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி ஒரு பெரிய கொள்கலன் செய்யப்படும்... இதன் கடைசி உறையின் கீழ் புறம் பக்கவாட்டில் நெல் எடுப்பதற்காக ஒரு துவாரம் அமைக்கப்பட்டிருக்கும்.. இதனை வைக்கோலை அடைத்து களிமண்ணால் பூசி விடுவார்கள். தேவைப்படும் போது இதை திறந்து நெல்லை எடுக்கலாம்..இதில் சுமார் பத்து மூட்டைகள் வரை சேமிக்கலாம்...

பத்தாயம்:
                                          
ஒன்று அல்லது ஒன்றரை அடி அகலமும் நான்கு அல்லது ஐந்து அடி நீளமும் உள்ள பலகைகளை சதுரமாகவோ, செவ்வகமாகவோ பெட்டிபோல இணைத்து (இதற்கு சட்டி என்று பெயர்) , அந்த சதுர பெட்டிகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி இணைத்து (நான்கு அல்லது ஐந்து சட்டிகள்) ஒரு உயரமான கொள்கலன் செய்வார்கள்.. இதில் கொள்ளளவிற்கேற்ப இருபத்தைந்து மூட்டைகளோ.. ஐம்பது மூட்டைகளோ வரை சேமிக்கலாம்.. ( ஒரு மூட்டை என்பது 70 கிலோ) அவரவர்களின் விளைநிலங்களின் அளவை பொறுத்து ஒன்று, இரண்டு, மூன்று நான்கு கூட வைத்திருப்பார்கள்..

கோட்டை:
                              
வைக்கோலை கயிறுபோல திரித்து (இதன் பெயர் பிரி)அதனை ஒரு நட்சத்திரம் வரைவதுபோல குறுக்கும் நெடுக்குமாக தரையில் விரித்து அதன் மீது உதிரி வைக்கோலை பரப்பி அதில் நெல்லை கொட்டி ஒரு பந்துபோல உருட்டி வைக்கோல் பிரிகளால் இறுக்க கட்டி விடுவார்கள்.. பிறகு இதன் மீது மாட்டு சாணத்தால் மெழுகி காயவைத்து விடுவார்கள்.. இதில் சுமார் ஒரு மூட்டை அளவு நெல்லை பாதுகாக்கலாம்... மறுபடியும் அடுத்த பருவத்திற்கு பயிரிட தேவையான விதை நெல்லை இப்படி பாதுகாப்பார்கள்.. இப்படி பாதுகாப்பதால் அந்த விதை பூச்சி புழுக்கள் அண்டாமல் ஒரு குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையிலேயே இருக்கும்.. இதனால் விதை நெல் முளைப்புத்திறன் குறையாமல் பாதுகாக்கப்படும் …..
                                   

சேர் (சேரு) :

                                          
முதலில் வைக்கோலை மிக நீண்ட பிரியாக திரித்துக்கொள்வார்கள் .. வீட்டின் வாசலில் குறைந்தது ஆறு அடி விட்டமுள்ள அரை அடி() ஒரு அடி உயரமுள்ள மண் மேடு அமைத்து அதில் உதிரி வைக்கோலை பரப்பி பிறகு அதில் நெல்லை கொட்டி.. திரித்து வைத்த வைக்கோல் பிரியால் சுற்றி சுற்றி சுவர் போல் உயர்த்துவார்கள்.. இப்படி உயர்த்தி உயர்த்தி சுமார் ஆறு முதல் எட்டு அடி உயரம் கொண்டு செல்வார்கள்.. பிறகு மேற்புறம் வைக்கோலால் கூரை வேய்ந்து மூடி விடுவார்கள்.. இது ஒரு தேர் போல காட்சியளிக்கும்.. இதில் குறைந்த பட்சம் இருபது மூட்டைகள் வரை சேமிக்கலாம்..

கூன்:

                                       

இது குயவர்களால் செய்யப்படும்.. முதுமக்கள் தாழி என்று சொல்லப்படுவது போல இருக்கும் சுட்ட களிமண்ணால் ஆனது... இதில் குறைந்தது ஒரு கலம் (ஒரு கலம் என்பது பன்னிரண்டு மரக்கால்) அளவு சேமிக்கலாம்.. இதில் நெல், அரிசி, இன்னும் மற்ற சிறு தானியங்களையும் சேமிப்பார்கள்...

இத்தனை வகையினை நம் முன்னோர்கள் அறிவியல் அடிப்படையில் தானியங்களை பாதுகாக்க முறைப்படுத்தியிருகின்றனர்.

உணவின் மகத்துவத்தையும்,தேவையையும் உணர்ந்த நம் முன்னோர்கள் தானியங்களை முன்னெச்சரிக்கையுடனும் மிகுந்த பக்தி அல்லது மாரியதையுடனும் பாதுகாத்தார்கள் என்பதற்கு மேல் கூறிய குதிர், கோட்டை,பத்தாயம் எல்லாம் சான்றாகும்.
காலப்போக்கில் நவநாகரீக வாழ்வால் குதிரும்,பத்தாயமும் விரட்டப்பட்டன.இன்றோ நினைவு சின்னமாக மட்டுமே உள்ளது. அதோடு மக்களின் நலனும் பாதிக்கப்பட்டு விட்டது.ஒரு காலத்தில் கடையில் அரிசி வாங்குவதை தரக்குறைவாக நினைத்தனர்.ஆனால் இன்றோ கிராமத்தில் கூட மைசூர் பொன்னியே பிரதானமாக உள்ளது.

குதிர்,பத்தாயமும் இல்லாத காரணத்தினால்,விவசாயிகள் சாக்கு மூட்டையில் கட்டி வைக்கின்றனர்.பனியும்,மழையும் ஊடுருவி நெல்லின் தரத்தை குலைக்கின்றது.

கோடைக்காலத்தில் நெல் கட்டுவிட்டு அரிசியில் கோடு விழுந்து குருணையாகி விடும்.அதுமட்டுமின்றி எலிகள் சாக்கை ஓட்டையிட்டு தானியங்களை சூறையாடி விடும் ஆபத்தும் அதிகம்.

இதனால் நெல்லை பத்திரப்படுத்த முடியாமல் உடனடியாக வரும் விலைக்கு விற்க வேண்டிய நிர்பந்தமும் உருவாகிவிட்டது.ஒரு மூட்டை என்பது 60கிலோ எடைக்கொண்டது.ஒரு மூட்டையை ரூ 900-1000 க்கு விற்று விட்டு,விதை நெல்லை விலைக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை அதுவும் 30 கிலோ எடையை ரூபாய் 1000க்கு வாங்கி விதைக்கின்றனர்.

இது புறமிருக்க,நினைவு சின்னம் என்றோமே அதைப் பற்றி பார்ப்போம்.
நெற்களஞ்சியம் என்று போற்றப்பட்ட தஞ்சை மாவட்டத்திலும்,அதை அடுத்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும் கோயில்களில் சுட்ட செங்கற்களால் கட்டிய  குதிர்கள் உள்ளன.

அதில் ஆசியாவிலேயே, மிகப் பெரிய குதிர் தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில்,பாபநாசத்திலிருந்து திருப்பாலைத் துறைக்கு பிரியும் சாலையில் பாலைவன நாதர் கோயிலில் உள்ளது.
                                   

 இந்த குதிர் 400ஆண்டுகளுக்கு முன், கி.பி. 1600 – 1634 இல், தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னரால் கட்டப்பெற்ற நெற்களஞ்சியமாகும்,இன்றளவும் சிறு பழுதும் இன்றி கம்பீரமாய் காட்சியளிக்கிறது. இதன் கொள்ளளவு 3,000 கலம்.

 முகத்தல் அளவை

இரண்டு படி என்பது ஒரு மரக்கால்

பனிரெண்டு மரக்கால் என்பது ஒரு கலம்

இரண்டு கலம் என்பது ஒரு மூட்டை

ஒரு மூட்டை என்பது 60 கி.கி என்றார்கள்.

அப்படியென்றால் 3,000 கலம் கொள்ளளவு என்பது, 1500 மூட்டைகள் ஆகும்.
ஒரு மூட்டை 60 கிகி என்றால், 1500 மூட்டைகள் என்பது தொன்னூறு ஆயிரம் கிலோ கிராம்.

    அதாவது 90 டன்.

     இதனை அரிசியாக்கினால், சற்றேறக்குறைய 45 டன் கிடைக்கும்.

      ஒரு கிலோ அரிசியினைச் சமைத்தால், பத்துபேர் ஒரு வேளை உணவு உண்ணலாம் என வைத்துக் கொள்வோம்.
                                         
       அப்படியானால், நான்கரை இலட்சம் பேர் இவ்வுணவினை ஒரு வேளை உண்ணலாம்.
ஆயிரத்து ஐநூறு பேர் அடங்கிய சிறு கிராமம் எனில், மூன்று வேளையும் சாப்பிட்டாலும், இந்த களஞ்சியத்திலுள்ள நெல்லைக் கொண்டு, 150 நாட்களுக்கு வயிறாரவும்(திருப்தியாக சாப்பிட்டால்-Fill) வயிறாறவும்(பட்டினி கிடந்த பின் உண்ணுதல் -HEAL)  உணவு உண்ணலாம்.

அதே போல் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலிலும் வரிசையாக குதிர்கள் உள்ளன.

                               
இலக்கியத்தில் குதிர் பற்றிய குறிப்பு ஒரு கண்ணோட்டம்:

வைக்கோலுக்கும் யானைக்கும் சிலேடை கவிதையை காளமேக புலவர் எழுதிய பாடல் உங்களுக்காக.


வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும்
போரிற் சிறந்து பொலிவாகும்சீருற்ற
செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலும் மால்யானை யாம். (3)

வைக்கோலானது வாரிக் களத்தில் அடிக்கப்படும். பின்னர் அது வைக்கோல் போர்க் கோட்டையாக புகுத்தப்படும். வைக்கோல் போரில் அது சிறந்து பொலிவுற்றிருக்கும்.
 யானை பகைவர்களை வாரிப் போர்க்களத்தில் அடிக்கும். பின்பு வந்து அதன் கட்டுத்தறியாகிய கோட்டைக்குள் புகும். போர்க்களத்தில் சிறப்புடன் பொலிவுற்று விளங்கும்.

இந்த பாடலில் நெல்கோட்டையைப் பற்றிய குறிப்பு உள்ளது.காளமேக புலவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திருவானைக்கால் ஊரில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் நெல்கோட்டைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்.


கீழ் வரும் பெரும்பாணாற்றுப்படை பாடலிலும் குறிப்பு உள்ளது.


எழுகாடு ஓங்கிய தொழுவுடை வரைப்பின்
பிடிக்கணத்து அன்ன குதிர்உடை முன்றில்
களிற்றுத்தாள் புரையும் திரிமரப் பந்தர்
குறுஞ்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி
நெடுஞ்சுவர் பறைந்த புகைசூழ் கொட்டில்
பருவ வானத்துப் பாமழை கடுப்பக்
கருவை வேந்த கவின்குடிச் சீறூர் - பெரும் 184 – 191
                      

நெல் காய்க்க போகும் மரமெது எனக் கேட்க போகும் நவயுக தலைமுறையினருக்கு இது ஒரு செய்தி சொல்லும் பதிவாக இருக்கும் என நினைக்கிறேன்.

அன்புடன் கோ.லீலா.