Wednesday, 26 February 2020

சோறு -5



சோறு முக்கியம் பாஸ் .......









2. அமலை


அமலை என்பதற்கு மிகுதி என்பது பொருள். இதுவே ஆகுபெயராகி, மிகுதியான சோற்றுத்திரள் அமலை எனப்படுகிறது.


சில திருமண விருந்துகளில் ஒரு சிலரின் இலையில் போடப்பட்டிருக்கும் சோற்றின் அளவைக் கண்டால் நமக்கு மயக்கமே வரும்.


இவ்வாறு தட்டு அல்லது இலை நிறையப் போடப்பட்ட உணவே அமலை.


பலவிடங்களில் அமலை என்பது சோற்றுக்கு அடைமொழியாகக் கையாளப்பட்டுள்ளது.


அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு - சிறு 194


பழம் சோற்று அமலை முனைஇ - பெரும் 224


பெரும் சோற்று அமலை நிற்ப - அகம் 86/2


ஆம்பல் அகல் இலை அமலை வெம் சோறு - அகம் 196/5


ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் - புறம் 33/14


அமலை கொழும் சோறு ஆர்ந்த பாணர்க்கு - புறம் 34/14


ஆனால் சிலவிடங்களில் அமலை என்பது சோற்றுத்திரள் என்ற பொருளிலேயே கையாளப்பட்டிருப்பதையும் காணலாம்.


செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது - குறு 277/2


வெண் எறிந்து இயற்றிய மா கண் அமலை - மலை 441


அல்கு அறை கொண்டு ஊண் அமலை சிறுகுடி - கலி 50/13


பைம் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை - புறம் 177/14


3. அமுது.


அமுது என்பது அமிர்தம், அமுதம், அமிழ்தம் ஆகியவற்றின் சுருக்கப்பெயராகப் பயன்பட்டுள்ளது எனினும், சிலவிடங்களில்


உணவு என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மிகவும் சுவையான உணவுகளை அமிழ்தம் போன்ற சுவையான உணவு என்று சொல்லும் வகையான அவ்வகை உணவுகளே அமுது என்று சொல்லப்பட்டுள்ளன.


பலவகையான சுவையான உணவு வகைகளைப் பெரும்பாணாற்றுப்படை அடுக்குவதைப் பாருங்கள்.


வல்லோன் அட்ட பல்லூன் கொழுங்குறை


அரி செத்து உணங்கிய பெருஞ்செந்நெல்லின்


தெரிகொள் அரிசித் திரள் நெடும் புழுக்கல்


அரும் கடித் தீஞ்சுவை அமுதொடு பிறவும்


விருப்புடை மரபின் கரப்புடை அடிசில் – பெரும் 472 - 476


இங்கே தீஞ்சுவை அமுது என்பதற்கு இனிய சுவையுடைய அமிழ்தம் போன்ற உண்டிகளும் என்றே பொருள் கொள்கிறார்


பெருமழைப்புலவர்.


இன்னும் பல இலக்கியச் சுவையோடு உணவு அரசியலின் கார நெடியோடு சோறு உண்ணலாம் வாங்க அடுத்தடுத்த தொடர்களில்....


அன்புடன்


கோ.லீலா.

No comments:

Post a Comment