Monday 24 February 2020

சோறு-3

சோறு முக்கியம் பாஸ்............................

சிவப்பு அரிசி
*********************
அரிசி வகைகள் ஆயிரம். அவற்றில் மூன்று வகையான அரிசிகள் நிலைத்து நின்றன - சிவப்பு, கறுப்பு, வெள்ளை. இந்த வண்ண அரிசிகளைப் பற்றிய சுவாரசியமான பழங்கதைகள் உண்டு.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய யஜுர் வேதத்தில் மூவண்ண அரிசியின் மகிமை கூறப்படுகிறது. தெய்வங்களுக்குப்
படைக்க வேண்டிய தானியங்களைப் பற்றிக் கூறும்போது, கறுப்பு அரிசியை அக்னி தேவனுக்கும், சிவப்பு அரிசியை மழைக் கடவுளான இந்திரனுக்கும், வெள்ளை அரிசியை சூர்யபகவானுக்கும் படைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
அரிசி, நம் பாரம்பரியமான உணவு தானியம். 6,000 ஆண்டுகளுக்கு முன்னரே சீனாவில் நெல் விளைவிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், சமீபத்திய தொல்லியல் ஆய்வு 9,000 ஆண்டுகளுக்கு முன்னரே நெல் விதைகள், அதைப் பயிரிட உதவும் விவசாயக் கருவிகள் இருந்ததாகக் கண்டுபிடித்திருக்கிறது. அரிசி, தன் நீண்ட வரலாற்றில் ஆசியக் கண்டத்தில் மட்டுமே நிலைத்திருக்கிறது. உலகில் பெரும் அளவில் அரிசி உற்பத்தி செய்யப்படுவது ஆசியாவில்தான்.
சீனா, தாய்லாந்து, வியட்நாம் இந்த மூன்றும்தான் அரிசியை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகள். இன்றைக்கும் தென்னிந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அரிசி அதிகமாக விளைவிக்கப்பட்டாலும், இவற்றில் அதிகம் நாம் பெறுவது பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியைத்தான். சிவப்பு அரிசியை நாம் பயன்படுத்துவது வெகு குறைவே.சிவப்பு அரிசி, பெரிய கடைகளில், மால்களில், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கும் ஓர் அரிய பொருளாகிவிட்டது. அதன் அருமை, பெருமைகளை தெரிந்துகொண்டால், சிவப்பு அரிசியை நாம் ஒதுக்க மாட்டோம்.
குதிரை வால் சம்பா, மணிச் சம்பா, மடு முழுங்கி, கவுனி, தூய மல்லி என்று அழகழகான அரிசி வகைகளின் பெயர்கள் எல்லாம் ஒரு காலத்தில் எல்லோரின் வீட்டிலும் புழங்கி வந்தன. பிறகு கற்பனை வறட்சியுடன் ஐ.ஆர்.8, சி.ஓ33 பெயர் வைக்கப்பட்ட ஹைப்ரிட் அரிசிகள் வந்தன. ஒரு காலத்தில் இந்தியாவில் இரண்டு லட்சம் அரிசி வகைகள் இருந்ததாகச் சொல்கிறார் விஞ்ஞானி ரிச்சாரியா.
அந்த வகையில் சிவப்பு அரிசி என்பது ஓர் அற்புதமான அறிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்… சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.
சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, ‘காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.
நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!
பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு
வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch). இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன.
சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.
எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் –அளவுக்கு இரும்புச் சத்து – சிங்க் (Zinc), மாங்கனீசு, மெக்னீசியம், செலினியம், பாஸ்பரசு போன்ற கனிமங்கள் – மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன
தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித்திருக்கின்றன.
சிவப்பு அரிசியில் மானோகோலின் – கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் ‘லோவாஸ்டேடின்’ (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உள்ளது.
‘சிவப்பு பூஞ்சண அரிசி’ (Red yeast rice) என்று இதற்குப் பெயர். சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து. இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி…
இப்போது காணாமல் போன மர்மம் என்ன?
சிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும் சரி, இடாவிட்டாலும் சரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை உண்டு.
ஆனால், ஆங்கிலேயர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed) என்றார்கள். சிவப்பு நெல்லை சிவப்பு அரக்கன் (Red Menace) என்றும் அழைப்பார்கள்.
சிவப்பு அரிசி... ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்! எப்படி?
இதயத்துக்கு இதம்!
*******************************
நார்ச்சத்தும் (Fiber) செலினியமும் (Selenium) மிகுந்து இருக்கின்றன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளைத் தடுத்து நிறுத்துகின்றன. இது மட்டுமல்ல, வைட்டமின் இ, நம் உடல் முழுக்க இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களோடு இணைந்து செயல்படுகிறது. இந்த ஆற்றல் மிகுந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களின் செயல்பாடு, இதய நோய்கள் வராமல் காக்கும்; ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கும்; மூட்டுவலி வீக்கத்தைக் (Rhemetoid Arthritis) குறைக்கும்.
கொழுப்பைக் குறைக்கலாம்!
முழுமையான சிவப்பு அரிசியில் இருக்கும் எண்ணெய், நம் உடலில் இருக்கும் எல்.டி.எல் (Low Density Lipoprotein) என்கிற கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. அமெரிக்காவில், லூசியானா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் நடந்த ஓர் ஆய்வில் இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதில் இருந்து தயாரான எண்ணெயை (Rice Bran Oil) சிலரைப் பயன்படுத்தச் சொல்லி சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இறுதியில் எல்.டி.எல் அளவு குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதோடு இந்த ரைஸ் பிரான் ஆயில், இதய ஆரோக்கியத்துக்கு செயல்படு உணவாக (Functional Food) இருந்து காக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். காரணம், இதில் இதய ஆரோக்கியத்துக்கு உதவும் வைட்டமின் பி, மக்னீசியம், நார்ச்சத்து உள்ளிட்டவை இருப்பதுதான்.
மாதவிடாய் நின்ற பெண்களுக்கு... மருந்து!
மாதவிடாய் முடியும் நிலையில் இருக்கும், முடிந்த நிலையில் இருக்கும் பெண்களுக்கு சில பிரச்னைகள் தோன்றுவது வழக்கம். அதிகக் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் எல்லாம் வரும் வாய்ப்பு உண்டு. வாரத்துக்கு 6 முறை சிவப்பு அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக, இந்த அபாயங்களை வெகுவாகக் குறைக்கலாம் என்கிறது ஓர் ஆய்வு.
டைப் 2 சர்க்கரை நோயைக் குறைக்கும்!
இதில் இருக்கும் மக்னீசியம், நம் உடலில் இருக்கும் 300-க்கும் மேற்பட்ட நொதிகளுடன் (Enzymes) செயலாற்றுகிறது. குறிப்பாக, குளூக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்பில்! இதன் காரணமாக, டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பில் மக்னீசியம் உதவுகிறது; நோயைத் தடுக்கிறது.
இன்னும், ஆஸ்துமா தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதில், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில், மாரடைப்பைத் தவிர்ப்பதில், பக்கவாதம் வராமல் தடுப்பதில், பித்தப்பைக் கற்கள் உருவாகாமல் காப்பதில்... என இதன் பலன்கள் பட்டியல் வெகு நீளம்.
வெள்ளை அரிசியை சமைப்பதைவிட, சிவப்பு அரிசி அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதைக்கொண்டு சாதம் தொடங்கி தோசை, புட்டு, ரவையாக்கி உப்புமா, அடை, கொழுக்கட்டை என எத்தனையோ செய்வதற்கு வழியுண்டு. சிவப்பு அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வோம். ஏனெனில், அது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமான தானியம்.
ஏன்..?
**********
ரசாயன உரங்கள் மூலமும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமும், விவசாயத்துறையில் உலகெங்கும் ஒரு ராட்சத பொருளாதார சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு, எந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தேவையும் இன்றி வளர்ந்த இந்த செந்நெல் பிடிக்கவில்லை. தங்கள் தொழிலை தக்கவைத்துக் கொள்ள இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தை எப்படியாவது திட்டியே தீர்ப்பதென்றும் முடிவெடுத்தனர். 'பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி’ என்ற கவர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர். நம் ஊர் மக்களும் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும் மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர்.
தண்ணீர் அதிகம் தேவையில்லாத, உரம் தேவையில்லாத, பூச்சிக்கொல்லிகள் தேவையில்லாத, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உடைய, ருசியான, மலிவான சிவப்பு அரிசிக்கு நாம் ஏன் மாறக்கூடாது?!
இன்னும் பல சுவராஸிய செய்திகளுடன் அடுத்தடுத்த தொடர்களில் சவ்திப்போம்.
அன்புடன்
கோ.லீலா.


No comments:

Post a Comment