Tuesday 25 February 2020

சோறு-4


சோறு முக்கியம் பாஸ்ஸ்.................
உணவு வகைகள்.
*****************************
சங்கத் தமிழர் ஒவ்வொருவிதமான உணவுக்கும் ஒவ்வொருவிதமான பெயர் வைத்திருந்தனர் என்பது வியப்புக்குரிய செய்தி.
இப்பொழுதும் நாம் பொரியல், அவியல், வறுவல், துவையல், புழுங்கல், களி, சோறு என்று பலவிதமான உணவுவகைகளைக் கொண்டிருக்கிறோம்.
இதுபோன்றே பண்டைத் தமிழகத்தும் உணவுப் பொருள்களுக்குப் பல்வேறு சொற்கள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. அவற்றை அகர வரிசையில்
இங்குக் காண்போம்.
1. அடிசில்.
****************
இன்றைக்கும் நாம் அக்காரவடிசில் என்ற ஒருவகை உணவுப் பொருளை அறிவோம். அதனைச் சிலர் கற்கண்டுச் சாதம் என்பர். அக்காரம்
என்பது கற்கண்டு அல்லது கரும்புவெல்லத்தைக் குறிக்கும். இதனைச் சேர்த்து, நெய்யோடு மிகவும் குழைவாகச் செய்யப்பட்டதே அக்கார + அடிசில்.
சேர்க்கை விதியின்படி அக்காரவடிசில் ஆனது. இந்த அடிசில் ஒரு பழஞ்சொல் ஆகும். சங்க இலக்கியங்களில் இதனைப் பற்றிய குறிப்புகள் வெகுவாகக்
கிடைக்கின்றன.
அடிசில் என்பதற்குக் குழைவாக ஆக்கிய நெல்லரிசிச் சோறு என்பது ஒரு பொதுவான பண்பு. இதில் பலவகை உண்டு என்பதையும்,
அவற்றின் சிறப்புப் பண்புகளையும் பார்ப்போம்.
அப்பொழுதுதான் நடக்கப் பழகிய குழந்தை. ‘குறுகுறு’-வென்று அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்குச் சோறு ஊட்டவேண்டும்.
அந்தச் சோறு எப்படி வெந்திருக்கவேண்டும்? பருக்கை பருக்கையாகவா? பாட்டிக்குக் கோபம் வந்துவிடும். குழந்தைக்காகச் சோற்றைக் குழைய
ஆக்கியிருப்பார்கள். அதனையும் குழைவாகப் பிசைந்துவிட்டிருப்பார்கள். நெய்யும் சேர்த்திருப்பார்கள். அதை வாங்க மறுத்த குழந்தை பெரியவளைப்
போல் கையை நீட்டுகிறது. உள்ளங்கையில் ஓரு சிறிய உருண்டையை ஆசையுடன் வைக்கிறீர்கள். அப்படியே கையை வாய்க்குக் கொண்டுசெல்கிறது
குழந்தை. வாயில் பாதி-வயிற்றில் பாதியாக மேனியெல்லாம் சோறு. பார்த்த பாண்டியன் அறிவுடைநம்பி பாடுகிறான்:
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை -------------- புறம் 188/3-6
குழந்தைகளும் உண்ணும் குழைந்த உணவே அடிசில். பாண்டியன் குழந்தை உண்ணுவது நெய்யுடை அடிசில்.
காதல்கொண்ட தலைவன், திருமணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வந்துவந்து பார்த்துச் செல்கிறான்.
ஒருநாள் அவளைப் பெண்பார்க்க வந்துசென்றால், அதன் பின்னர் மணம் முடிந்து அவள் தன் வீட்டில் உனக்குச் பால்ச்சோறு தருவாளே என்ற கருத்தில்
தோழி தலைமகனைப் பார்த்துச் சொல்கிறாள்:
புதுக்கலத்தன்ன செவ்வாய்ச் சிற்றில்
புனையிரும் கதுப்பின் நின் மனையோள் அயரப்
பாலுடை அடிசில் தொடீஇய ஒருநாள்
மாவண் தோன்றல்! வந்தனை சென்மோ! – அகம் 394/9-12
இன்றைக்குச் சில குடும்பங்களில் திருமணம் நடந்து முதலிரவன்று, மணமகள் வெள்ளித்தட்டில் மணமகனுக்குப் பால்ச்சோறு
எடுத்துச் செல்வது வழக்கமாக இருக்கிறது. அன்றைக்கும் குழைவாக ஆக்கிய சோற்றில் பாலூற்றிப் பிசைந்து மணமகள் மணமகனுக்குத் தருவது
பழக்கமாயிருந்தது போலும்! இது பாலுடை அடிசில்!
பச்சரிசிச் சோற்றைக் குழைவாக ஆக்கி, அகப்பையில் மொண்டு வட்டியில் இட்டால் உருண்டையாக விழும். அதற்குத் தொட்டுக்கொள்ள,
சுடச்சுட கறிக்குழம்பு ஊற்றினால் எப்படியிருக்கும்! இதோ ஒரு சங்க மகள் ஊற்றித் தருகிறாள் பாருங்கள்.
குய் குரல் மலிந்த கொழும் துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயில் புரவலர் - புறம் 250/1,2
குய் என்பது தாளித்தல். கொழும் துவை என்பது கொழுத்த மாமிசம் போட்ட ‘கொள கொள’-வென்ற குழம்பு. தாளித்த ஓசையுடன்
கூடிய கொழுத்த ஊன் குழம்பும் குழைத்த சோறும் இரவலரைப் போகவிடாது தடுக்குமாம். இது கொழும் துவை அடிசில்!
பெருவள்ளலாகிய குமணன், தன்னைத் தேடி வரும் இரவலருக்குப் பொன்னாலான வட்டிலில் இந்தக் கொழும் துவையை
நெய்யுடை அடிசிலோடு கொடுத்திருப்பதைப் புலவர் பெருஞ்சித்திரனார் பாடுகிறார்.
குய் கொள் கொழும் துவை நெய்யுடை அடிசில்
மதி சேர் நாள்மீன் போல நவின்ற
சிறு பொன் நன் கலம் சுற்ற இரீஇ - புறம் 160/7 -9
இது இன்னும் சிறந்த கொழும் துவை நெய்யுடை அடிசில்!
இந்தக் குய் மணக்கும் கொழும் துவை அடிசில் மிக்க சுவையுடையது என்றும் அமிழ்தத்தினும் சுவை மிக்கது என்றும் கூறுகின்றனர்
நம் சங்கப் புலவர்கள்.
அமிழ்து அட்டு ஆனா கமழ் குய் அடிசில் - புறம் 10/7,8
சுவைக்கு இனிது ஆகிய குய் உடை அடிசில் - புறம் 127/7,8
கொழுத்த ஆட்டின் மாமிசத்தில் கொழுப்பு ஒட்டிக்கொண்டிருக்கும். அதனை வேகவைத்துக் கையிலெடுத்தால் கைவிரல்களுக்கிடையில்
அது நெய்போல ஒழுகும். பசுவின் நெய்யை மிகுதியாக இட்டுக் குழைத்து ஆக்கிய சோற்றுடன் இந்த ஒழுகும் நிணமும் கலந்திருந்தால்
எப்படியிருக்கும்? இது ஒரு வகை அடிசில். இந்த அடிசிலை விருந்தினருக்கு இட்டு, அவர்கள் உண்ட பின் மிஞ்சிய மீதத்தை நாம் உண்போம்
என்று குறிஞ்சிப்பாட்டுத் தலைவன் தலைவியிடம் கூறுகிறான்.
பைம் நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில்
வசை இல் வான் திணை புரையோர் கடும்பொடு
விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது - குறி 204 - 207
இது நிணம் சேர்த்த நெய் அடிசில்!
இன்றைக்கு ஊனோடு சேர்ந்த சோற்றைப் பிரியாணி என்கிறோம். அது உதிரி உதிரியாகக் கூட இருக்கும். இதனை ஊன்சோறு எனலாம்.
அப்படி இல்லாமல் வெகுவாக ஊனுடன் குழைத்து ஆக்கப்படுவது ஊன் அடிசில். இருப்பினும் இங்கே குழைவாக என்பதை அழுத்தம் திருத்தமாகச்
சொல்ல, நம் புலவர்கள் இதனை ஊன் துவை அடிசில் என்றார்கள். நன்றாக மசிப்பதுதானே துவையல்! துவை என்பதற்கு மிதித்து உழக்கு, குழை
என்பது பொருள். சோறும் கறியும் வேறுவேறாகத் தெரியக்கூடாதாம், பதிற்றுப்பத்து கூறுவதைப் பாருங்கள்!
சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில்
ஓடா பீடர் உள்_வழி இறுத்து - பதி 45/13,14
போரில் வெற்றியை ஈட்டித்தந்த மறவருக்கு வெற்றிவேந்தன் அளித்த விருந்தின் ஒரு பகுதி இது! இது ஊன் துவை அடிசில்.
இவ்வாறான பலவகை அடிசில்கள் சங்க கால மக்களால் உண்ணப்பட்டன. இமயம் போன்ற மார்பினைக் கொண்ட பீமன்,
உணவுவகைகளைப் பற்றிய நூல் இயற்றியிருந்தான் எனவும், அந் நூலில் விதம் விதமான பல்வேறு அடிசில் வகைகளைப் பற்றிக் கூறியிருந்தான்
எனவும் சிறுபாணாற்றுப்படை ஆசிரியர் கூறுகிறார்.
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருள்
பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில் - சிறு 240,241
பனுவல் என்பது புத்தகம். பனிவரை மார்பன் என்பவன் பீமன் –
சமையற்கலையிற் சிறந்தவன் என்று போற்றப்படுபவன்.
வேறு சுவையான உணவு வகைகள் மற்றும் உண்வு மூலம் நடக்கின்ற கலாக்காரப் போர்,அரசியல் போன்ற்வைகளை அடுத்தடுத்த தொடர்களில் காண்போம்.சந்திப்போம்.
அன்புடன்
கோ.லீலா.

N.Rathna Vel

1 comment:

  1. சோறு முக்கியம் பாஸ்.................

    சோறு-4
    **************

    உணவு வகைகள். - ஆஹா. எத்தனை வகைகள்? அருமையான தகவல்கள் இலக்கியத்திலிருந்து. எனது பக்கத்தில் பகிர்கிறேன். அருமையாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள் திருமதி Leela Ammu

    ReplyDelete