Saturday 22 February 2020

சோறு-1


சோறு முக்கியம் பாஸ் .......

என்ற சொற்றொடரின் மூலமாக இன்று சோறு என்ற சொல் வாழ்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

சோறு என்ற சொல்லை பயன்படுத்துவதே மேட்டிமைத் தனத்திற்கு இழுக்கு என்பதான ஒரு போக்கும் நிலவி வருகிறது.

இன்னும் ஒரு படி மேலே போய் white rice  என்று ஆங்கிலத்தில் கேட்கும் வழக்கமும் பரவலாக உள்ளது.

உமியோடு இருப்பது நெல், உமி நீங்கியது அரிசி... புழுக்கம் போட்டு அரிசியாக்கப்பட்டது புழுங்கல் அரிசி, நெல்லை புழுக்கம்‌ போடாமல் அரிசியாக்கப்பட்டது பச்சரிசி என்றும். அவியலிட்டு உண்ணும் பதத்திற்கு வந்தால் அதை சோறு என்றும் சொல்லுமளவிற்கு பெரும் சொல்லாட்சிக் கொண்ட நம் தமிழ் மொழியில் பேசுவதை விடுத்து வெந்தாலும், வேகவிட்டாலும் ரைஸ் தான் எனும் பரந்த நோக்குடன்‌ பாதி வெந்ததை உண்டு விதி வந்தால் சாவோம் என்ற மனப் போக்குடன் உலவும் மனிதத்திற்கும், இயற்கைக்குமான இடைவெளியை களைவதும், உணவின் முக்கியம் குறித்தும் அதன் தேவை குறித்தும் பேசுவதுமே இக்கட்டுரையின் நோக்கம்.

ஏராளமான அரிசியின் வகைகள்
செழித்து வளர்ந்த பூமிதான் நம்முடையது. வொயிட் ரைஸ் என்றவுடன் கறுப்பு அரிசி( கவுனி),  சிவப்பரிசி 
( தற்காலத்தில் மட்டையரிசி) என பல்வேறு அரிசிகளும் அதற்கு பின்னுள்ள சுவாரஸ்சியமான வரலாற்று கதைகளும், அரசியல் குறித்தும்‌ நினைவிற்கு வருகிறது அவற்றை பின்வரும்‌ பகுதிகளில் பார்ப்போம்.

ஏன் சோறு முக்கியம்?
*************************
 துறவிகள் கூட துறக்க முடியாத ஒன்று  உண்டு என்றால் அதுதான் உணவு என்று வள்ளுவர் கூறுகிறார்.

🚩உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.

அப்படியான உணவு எந்த நிலையில் உள்ளது?
உணவு அரசியல்,
உணவு பாதுகாப்பு, உணவு வரலாறு, உணவு யுத்தம் என பல்வேறு செய்திகள் தினம் தினம் கேள்வியுறுகிறோம்.

🚩ஒருநாள் உணவை
     ஒழியென்றால் ஒழியாய்
     இரு நாளைக்கு
     ஏலென்றால் ஏலாய்
     ஒரு நாளும்
     என்னோ அறியாய்
     இடும்பை கூர்
     என் வயிறே
     உன்னோடு  வாழ்தல் அரிது.

என்ற ஒவையின் பாடலை படிக்கும் போதெல்லாம் விளையாட்டாக அப்போ ஃப்ரிட்ஜ் இல்லை என கூறினாலும்.

ஆழ்ந்து படித்தால்‌ இப்பாட்டிற்கு பின்னால் உள்ள உணவு பாதுகாப்பின்மை, அதிக உற்பத்தி,  வறுமைக்கோட்டிற்கு‌ கீழுள்ள மனிதர்களின் நிலை. மனித உடலின் தன்மை போன்றவற்றை பாடியிருப்பது தெரிய வரும்.

அப்படி என்ன முக்கியத்துவம் உணவிற்கு.

உணவுதான் உடல் இயக்கத்திற்கு மூல காரணம்.உடல் கட்டமைப்பு, மன கட்டமைப்பு ஆகியவற்றையும் உணவுத் தீர்மானிக்கிறது.

ஆரோக்கியமான சிந்தனைகளை உணவு கொடுக்கிறது.

அது மட்டுமில்லாமல் பல்வேறு சாம்ராஜ்யங்கள் சரிந்ததற்கும், உயர்ந்ததற்கும், வெளிநாட்டு இளவரசிகள் இங்கு வந்தற்கும்,
நம் நாட்டு இளவரசிகள் வேறு நாடுகளுக்கு போனதற்கும் பின்னால் உணவின் கதை சுவைக்கிறது...

உணவு விசயத்தில் தமிழர்கள் முன்னோடிகளாக இருந்திருக்கின்றனர். பல்வேறு பொருட்களை பயன்படுத்தியது மட்டுமில்லாமல், சரியான விகிதம்,‌ யார்க்கு எந்த உணவை எப்போது வழங்க வேண்டும்‌. அளவு, காலநேரம் போன்ற பல்வேறு அறிவியல் அடிப்படையில் உணவினை கட்டமைத்துள்ளனர்.

ஒரு நாட்டை அடிமைப்படுத்த அந்நாட்டின் "கலையை"அழிக்க வேண்டும் என்றொரு கோட்பாடு உண்டு. உணவு மலிந்து கிடைக்குமிடத்தில் கலைகள் செழித்தோங்கும் என்பது இயற்கை.

இந்தியாவில் குறிப்பாக தமிழகம் வந்தவர்கள்‌ தஞ்சை பெரிய கோயிலில் உள்ள சிற்பங்களின் மூக்கையெல்லாம் உடைத்து இருப்பார்கள். ஏனென்றால் Nose is the index of beauty  என்பதால் அதை செய்தனர்.

ஆனாலும் இந்தியா செழிப்புடன் மீண்டெழுந்ததை புரியாது வியந்து பார்த்தவர்கள். நம் ரகசியத்தை கண்டறிய பல்வேறு அறிஞர்களை ரகசிய துப்பிற்காக அனுப்பினர்.

அப்படி கண்டறிந்த துப்புதான் நம்மின் பண்டைய வாழ்வியல்
முறையும், விவசாயமும் அதை வைத்து  என்ன செய்தார்கள் என்பதை அடுத்தடுத்த தொடர்களில்‌  பார்ப்போம்.

அன்புடன் கோ.லீலா.

No comments:

Post a Comment