Thursday, 27 February 2020

சோறு-6

சோறு முக்கியம் பாஸ்.............

4. அயினி
அயில் என்பதன் பொருள் விருப்பத்துடன் வேண்டுமளவு உண்ணுதல் என்று முன்பு பார்த்தோம். அதனை அடியாகக் கொண்ட
பெயற்சொல்லே அயினி.
குதிரைக்கு மிகவும் பிடித்த உணவு கொள்ளு. ஆனால் அது கடற்கரை ஊரில் எவ்வாறு கிடைக்கும்? அங்கு உப்பை விற்று மாற்றாகக்
கொண்டுவந்த நெல்தான் இருக்கும். அதனைக் குற்றி அவலாக்கி, அயினியாக வயிறார உண்ணத் தன் தலைவனின் குதிரைகளுக்குத் தருவேன்
என்கிறாள் நெய்தல் தலைவி.
உமணர் தந்த உப்புநொடை நெல்லின்
அயினி மா இன்று அருந்த – நற்றிணை 254/6,7
மா என்பது இங்கு குதிரை. இவை விரும்பி உண்ணும் வகையில் அயினியாக அரிசி அவல் தருவேன் என்கிறாள் தலைவி.
தொண்டை நாட்டு நன்னனிடம் பரிசில் பெற்றுவரப் புறப்பட்டுச் செல்லும் ஒரு கூத்தர் கூட்டம், செல்லும் வழியில் பலவித
நிலங்களைக் கடந்து செல்கிறது. அக் கூட்டம் மருத நிலத்தைக் கடந்து செல்லும் வழியில் அவர்களுக்கு அங்கு கிடைக்கக்கூடிய மீன்குழம்புச்
சோற்றைச் சுவைபட எடுத்தோதுகிறார் புலவர் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்.
மீனின் முள்ளைக் கழித்து ஆக்கின, கொழுப்பால் வெளுத்த
நிறமுடையை துண்டுகளையுடைய வெள்ளிய சோற்றை வேண்டுமளவு அரசரின் துய்த்தலோடு (ராஜபோகம்) உண்ணலாம் என்று சொல்லவந்த
புலவர் கூறுகிறார்:
முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண்சோறு
வண்டுபடக் கமழும் தேம்பாய் கண்ணித்
திண் தேர் நன்னற்கும் அயினி சான்ம் எனக்
கண்டோர் மருளக் கடும்புடன் அருந்தி – மலைபடுகடாம் 465 – 468
சான்ம் என்பது சாலும் என்றதன் சுருக்கம். போதுமானதாக அமையும் என்று பொருள். அந்த உணவு தூய்மையாலும், சுவையாலும்,
தோற்றத்தாலும் உயர்ந்து அரசனாகிய நன்னனும் விரும்பி நிறைய உண்ணத்தக்கதாயிருக்கும் என்பது இதன் பொருள் என்பர். இவ்வாறாக விரும்பி
உண்ணும் சிறந்த உணவே அயினி.
5. உண்டி, உணவு, ஊண்
இந்த மூன்றுமே உணவு என்ற பொதுவான பொருளை உடையன. இருப்பினும் இலக்கியப் பயன்பாட்டில் இவற்றுக்கிடையே
நுண்மையான வேறுபாடு இருப்பதைக் காணலாம். அவற்றை எடுத்துக்காட்டுகளுடன் இங்குக் காண்போம்.
5.1,2 உண்டி, உணவு
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே (புறம் 18:19) என்ற அருமையான புறநானூற்று அடி நமக்குத் தெரியும்.
ஒருவன் மிகவும் பசியோடு தள்ளாடிக்கொண்டு வருகிறான். இன்னும் சிறிது நேரத்தில் சுருண்டு படுத்துவிடுவான் என்ற நிலையில், அவனுக்குப்
பக்கத்துத் தேநீர்க் கடையில் கிடைக்கும் ரொட்டி, பழம், தேநீர் ஆகியவற்றை வாங்கிக்கொடுக்கிறீர்கள். மிகுந்த ஆவலுடன் அந்தப் பண்டங்களை
உண்ட அவன் சற்று நேரங்கழித்து, “அப்பாடா இப்போதுதான் உயிர் வந்தது” என்று சொல்வான் பார்த்தீர்களா, அதுதான் உயிர்கொடுத்தல். அவன்
சாப்பிட்டதுதான் உண்டி.
ஒருவர் விரதம் இருக்கிறார். காலையிலிருந்து ஒன்றுமே உட்கொள்ளாமல் இருந்து மதியவேளையில் எல்லாக் கடமைகளையும்
முடித்து தம் நோன்புக்குரிய பண்டங்களைக் கொண்ட உணவு உண்பார். அதுவே விரதம் கழிப்பது. இவ்வாறு அவர் உண்பதனை
உண்டி என்கிறது குறுந்தொகை.
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம் பூ முருக்கின் நன் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்து
படிவ உண்டி பார்ப்பன மகனே – குறு. 156:1-4
ஒருவன் பசியுடன் இருக்கும்போது ஒரு கிணைமகள் பாகல்காய்க் கூட்டுடன் புளிக்குழம்புடன் சேர்த்த கூழ் தருகிறாள்.
நேரங்கெட்ட நேரமாயிருந்தாலும் பசியினால் அதனையுண்ட புலவன் கூறுகிறான்,
கிணைமகள் அட்ட பாகல் புளிங்கூழ்
பொழுதுமறுத்துண்ணும் உண்டியேன் – புறம் 399:16,17
ஆக, இவற்றினின்றும் நாம் அறிவது, ஒரு திருமண வீட்டில் சமைத்துப் பரிமாறுவதற்காகப் பலவித பாத்திரங்களில்
எடுத்துவைக்கப்பட்டிருப்பது உணவு. அதனை ஒவ்வோர் இலையிலும் பரிமாறியபின் இலையில் இருப்பது உண்டி. உண்டி எனப்படுவது
உண்ணும் நிலையில் உள்ள உணவு. உணவு என்பது பொதுப்படையான சொல் - “நான் புலால் உணவு உண்பதில்லை” என்று சொல்கிறோமே,
அங்கு வருவதைப் போல.
மேலும் உண்டி என்ற சொல் உயர்திணை உயிரினங்கள் உண்ணுவதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். உணவு என்ற
பொதுச்சொல் எல்லா உயிரினங்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் காணலாம். வானில் பறந்து திரியும் வானம்பாடிப் பறவைக்கு
மழைத்துளியே உணவு என்கிறது பட்டினப்பாலை.
தற்பாடிய தளி உணவின் புள் – பட்:3,4
கோடைகாலத்தில் எறும்புகள் தம் மழைக்காலத் தேவைக்காக கிடைக்கின்றவற்றை இழுத்துக்கொண்டுபோய்ச் சேர்ப்பதை
அகநானூறு அழகாகச் சொல்லுகிறது.
கோடை நீடலின் வாடு புலத்து உக்க
சிறு புல் உணவு நெறிபட மறுகி
நுண் பல் எறும்பு கொண்டு அளைச் செறித்த – அகம் 377: 1-3
வேள்வித்தீயில் படைக்கும் பொருள்கள் வேகும்போது ஏற்படும் மணமே தேவர்களுக்கு உணவாகிறதாம். இதனை நாற்ற உணவு
என்கிறார் புறநானூற்றுப்புலவர்.
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவினோரும் – புறம் 62: 16,17
‘நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு’
என்கிறது மதுரைக்காஞ்சி (458)
எனவே, இன்றைய வழக்கில், உண்டி என்பது சாப்பாடு (meal), உணவு என்பது ஆகாரம் (food).
உணவு என்பது உணா என்றும் அழைக்கப்படுகிறது.
பணை நிலைப் புரவி புல் உணாத் தெவிட்ட – மதுரைக்காஞ்சி 660
சில் உணா தந்த சீறூர்ப் பெண்டிர் – அகம் 283: 5
என்ற அடிகளில் உணா என்பது உணவு என்ற பொருளில் வந்துள்ளதைக் காணலாம்.
சோறு ஆக்கிக் கொண்டிருக்கிறேன்...
சூடான சோறாய்சுவைக்க அறுசுவையுடன் உங்கள் கைகளில் விரைவில் நூலாய் தவழும்....
காத்திருங்கள் தோழமைகளே......
அன்புடன்
-கோ.லீலா.


Wednesday, 26 February 2020

சோறு -5



சோறு முக்கியம் பாஸ் .......









2. அமலை


அமலை என்பதற்கு மிகுதி என்பது பொருள். இதுவே ஆகுபெயராகி, மிகுதியான சோற்றுத்திரள் அமலை எனப்படுகிறது.


சில திருமண விருந்துகளில் ஒரு சிலரின் இலையில் போடப்பட்டிருக்கும் சோற்றின் அளவைக் கண்டால் நமக்கு மயக்கமே வரும்.


இவ்வாறு தட்டு அல்லது இலை நிறையப் போடப்பட்ட உணவே அமலை.


பலவிடங்களில் அமலை என்பது சோற்றுக்கு அடைமொழியாகக் கையாளப்பட்டுள்ளது.


அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு - சிறு 194


பழம் சோற்று அமலை முனைஇ - பெரும் 224


பெரும் சோற்று அமலை நிற்ப - அகம் 86/2


ஆம்பல் அகல் இலை அமலை வெம் சோறு - அகம் 196/5


ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் - புறம் 33/14


அமலை கொழும் சோறு ஆர்ந்த பாணர்க்கு - புறம் 34/14


ஆனால் சிலவிடங்களில் அமலை என்பது சோற்றுத்திரள் என்ற பொருளிலேயே கையாளப்பட்டிருப்பதையும் காணலாம்.


செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது - குறு 277/2


வெண் எறிந்து இயற்றிய மா கண் அமலை - மலை 441


அல்கு அறை கொண்டு ஊண் அமலை சிறுகுடி - கலி 50/13


பைம் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை - புறம் 177/14


3. அமுது.


அமுது என்பது அமிர்தம், அமுதம், அமிழ்தம் ஆகியவற்றின் சுருக்கப்பெயராகப் பயன்பட்டுள்ளது எனினும், சிலவிடங்களில்


உணவு என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மிகவும் சுவையான உணவுகளை அமிழ்தம் போன்ற சுவையான உணவு என்று சொல்லும் வகையான அவ்வகை உணவுகளே அமுது என்று சொல்லப்பட்டுள்ளன.


பலவகையான சுவையான உணவு வகைகளைப் பெரும்பாணாற்றுப்படை அடுக்குவதைப் பாருங்கள்.


வல்லோன் அட்ட பல்லூன் கொழுங்குறை


அரி செத்து உணங்கிய பெருஞ்செந்நெல்லின்


தெரிகொள் அரிசித் திரள் நெடும் புழுக்கல்


அரும் கடித் தீஞ்சுவை அமுதொடு பிறவும்


விருப்புடை மரபின் கரப்புடை அடிசில் – பெரும் 472 - 476


இங்கே தீஞ்சுவை அமுது என்பதற்கு இனிய சுவையுடைய அமிழ்தம் போன்ற உண்டிகளும் என்றே பொருள் கொள்கிறார்


பெருமழைப்புலவர்.


இன்னும் பல இலக்கியச் சுவையோடு உணவு அரசியலின் கார நெடியோடு சோறு உண்ணலாம் வாங்க அடுத்தடுத்த தொடர்களில்....


அன்புடன்


கோ.லீலா.

Tuesday, 25 February 2020

சோறு-4


சோறு முக்கியம் பாஸ்ஸ்.................
உணவு வகைகள்.
*****************************
சங்கத் தமிழர் ஒவ்வொருவிதமான உணவுக்கும் ஒவ்வொருவிதமான பெயர் வைத்திருந்தனர் என்பது வியப்புக்குரிய செய்தி.
இப்பொழுதும் நாம் பொரியல், அவியல், வறுவல், துவையல், புழுங்கல், களி, சோறு என்று பலவிதமான உணவுவகைகளைக் கொண்டிருக்கிறோம்.
இதுபோன்றே பண்டைத் தமிழகத்தும் உணவுப் பொருள்களுக்குப் பல்வேறு சொற்கள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. அவற்றை அகர வரிசையில்
இங்குக் காண்போம்.
1. அடிசில்.
****************
இன்றைக்கும் நாம் அக்காரவடிசில் என்ற ஒருவகை உணவுப் பொருளை அறிவோம். அதனைச் சிலர் கற்கண்டுச் சாதம் என்பர். அக்காரம்
என்பது கற்கண்டு அல்லது கரும்புவெல்லத்தைக் குறிக்கும். இதனைச் சேர்த்து, நெய்யோடு மிகவும் குழைவாகச் செய்யப்பட்டதே அக்கார + அடிசில்.
சேர்க்கை விதியின்படி அக்காரவடிசில் ஆனது. இந்த அடிசில் ஒரு பழஞ்சொல் ஆகும். சங்க இலக்கியங்களில் இதனைப் பற்றிய குறிப்புகள் வெகுவாகக்
கிடைக்கின்றன.
அடிசில் என்பதற்குக் குழைவாக ஆக்கிய நெல்லரிசிச் சோறு என்பது ஒரு பொதுவான பண்பு. இதில் பலவகை உண்டு என்பதையும்,
அவற்றின் சிறப்புப் பண்புகளையும் பார்ப்போம்.
அப்பொழுதுதான் நடக்கப் பழகிய குழந்தை. ‘குறுகுறு’-வென்று அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்குச் சோறு ஊட்டவேண்டும்.
அந்தச் சோறு எப்படி வெந்திருக்கவேண்டும்? பருக்கை பருக்கையாகவா? பாட்டிக்குக் கோபம் வந்துவிடும். குழந்தைக்காகச் சோற்றைக் குழைய
ஆக்கியிருப்பார்கள். அதனையும் குழைவாகப் பிசைந்துவிட்டிருப்பார்கள். நெய்யும் சேர்த்திருப்பார்கள். அதை வாங்க மறுத்த குழந்தை பெரியவளைப்
போல் கையை நீட்டுகிறது. உள்ளங்கையில் ஓரு சிறிய உருண்டையை ஆசையுடன் வைக்கிறீர்கள். அப்படியே கையை வாய்க்குக் கொண்டுசெல்கிறது
குழந்தை. வாயில் பாதி-வயிற்றில் பாதியாக மேனியெல்லாம் சோறு. பார்த்த பாண்டியன் அறிவுடைநம்பி பாடுகிறான்:
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை -------------- புறம் 188/3-6
குழந்தைகளும் உண்ணும் குழைந்த உணவே அடிசில். பாண்டியன் குழந்தை உண்ணுவது நெய்யுடை அடிசில்.
காதல்கொண்ட தலைவன், திருமணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வந்துவந்து பார்த்துச் செல்கிறான்.
ஒருநாள் அவளைப் பெண்பார்க்க வந்துசென்றால், அதன் பின்னர் மணம் முடிந்து அவள் தன் வீட்டில் உனக்குச் பால்ச்சோறு தருவாளே என்ற கருத்தில்
தோழி தலைமகனைப் பார்த்துச் சொல்கிறாள்:
புதுக்கலத்தன்ன செவ்வாய்ச் சிற்றில்
புனையிரும் கதுப்பின் நின் மனையோள் அயரப்
பாலுடை அடிசில் தொடீஇய ஒருநாள்
மாவண் தோன்றல்! வந்தனை சென்மோ! – அகம் 394/9-12
இன்றைக்குச் சில குடும்பங்களில் திருமணம் நடந்து முதலிரவன்று, மணமகள் வெள்ளித்தட்டில் மணமகனுக்குப் பால்ச்சோறு
எடுத்துச் செல்வது வழக்கமாக இருக்கிறது. அன்றைக்கும் குழைவாக ஆக்கிய சோற்றில் பாலூற்றிப் பிசைந்து மணமகள் மணமகனுக்குத் தருவது
பழக்கமாயிருந்தது போலும்! இது பாலுடை அடிசில்!
பச்சரிசிச் சோற்றைக் குழைவாக ஆக்கி, அகப்பையில் மொண்டு வட்டியில் இட்டால் உருண்டையாக விழும். அதற்குத் தொட்டுக்கொள்ள,
சுடச்சுட கறிக்குழம்பு ஊற்றினால் எப்படியிருக்கும்! இதோ ஒரு சங்க மகள் ஊற்றித் தருகிறாள் பாருங்கள்.
குய் குரல் மலிந்த கொழும் துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயில் புரவலர் - புறம் 250/1,2
குய் என்பது தாளித்தல். கொழும் துவை என்பது கொழுத்த மாமிசம் போட்ட ‘கொள கொள’-வென்ற குழம்பு. தாளித்த ஓசையுடன்
கூடிய கொழுத்த ஊன் குழம்பும் குழைத்த சோறும் இரவலரைப் போகவிடாது தடுக்குமாம். இது கொழும் துவை அடிசில்!
பெருவள்ளலாகிய குமணன், தன்னைத் தேடி வரும் இரவலருக்குப் பொன்னாலான வட்டிலில் இந்தக் கொழும் துவையை
நெய்யுடை அடிசிலோடு கொடுத்திருப்பதைப் புலவர் பெருஞ்சித்திரனார் பாடுகிறார்.
குய் கொள் கொழும் துவை நெய்யுடை அடிசில்
மதி சேர் நாள்மீன் போல நவின்ற
சிறு பொன் நன் கலம் சுற்ற இரீஇ - புறம் 160/7 -9
இது இன்னும் சிறந்த கொழும் துவை நெய்யுடை அடிசில்!
இந்தக் குய் மணக்கும் கொழும் துவை அடிசில் மிக்க சுவையுடையது என்றும் அமிழ்தத்தினும் சுவை மிக்கது என்றும் கூறுகின்றனர்
நம் சங்கப் புலவர்கள்.
அமிழ்து அட்டு ஆனா கமழ் குய் அடிசில் - புறம் 10/7,8
சுவைக்கு இனிது ஆகிய குய் உடை அடிசில் - புறம் 127/7,8
கொழுத்த ஆட்டின் மாமிசத்தில் கொழுப்பு ஒட்டிக்கொண்டிருக்கும். அதனை வேகவைத்துக் கையிலெடுத்தால் கைவிரல்களுக்கிடையில்
அது நெய்போல ஒழுகும். பசுவின் நெய்யை மிகுதியாக இட்டுக் குழைத்து ஆக்கிய சோற்றுடன் இந்த ஒழுகும் நிணமும் கலந்திருந்தால்
எப்படியிருக்கும்? இது ஒரு வகை அடிசில். இந்த அடிசிலை விருந்தினருக்கு இட்டு, அவர்கள் உண்ட பின் மிஞ்சிய மீதத்தை நாம் உண்போம்
என்று குறிஞ்சிப்பாட்டுத் தலைவன் தலைவியிடம் கூறுகிறான்.
பைம் நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில்
வசை இல் வான் திணை புரையோர் கடும்பொடு
விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது - குறி 204 - 207
இது நிணம் சேர்த்த நெய் அடிசில்!
இன்றைக்கு ஊனோடு சேர்ந்த சோற்றைப் பிரியாணி என்கிறோம். அது உதிரி உதிரியாகக் கூட இருக்கும். இதனை ஊன்சோறு எனலாம்.
அப்படி இல்லாமல் வெகுவாக ஊனுடன் குழைத்து ஆக்கப்படுவது ஊன் அடிசில். இருப்பினும் இங்கே குழைவாக என்பதை அழுத்தம் திருத்தமாகச்
சொல்ல, நம் புலவர்கள் இதனை ஊன் துவை அடிசில் என்றார்கள். நன்றாக மசிப்பதுதானே துவையல்! துவை என்பதற்கு மிதித்து உழக்கு, குழை
என்பது பொருள். சோறும் கறியும் வேறுவேறாகத் தெரியக்கூடாதாம், பதிற்றுப்பத்து கூறுவதைப் பாருங்கள்!
சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில்
ஓடா பீடர் உள்_வழி இறுத்து - பதி 45/13,14
போரில் வெற்றியை ஈட்டித்தந்த மறவருக்கு வெற்றிவேந்தன் அளித்த விருந்தின் ஒரு பகுதி இது! இது ஊன் துவை அடிசில்.
இவ்வாறான பலவகை அடிசில்கள் சங்க கால மக்களால் உண்ணப்பட்டன. இமயம் போன்ற மார்பினைக் கொண்ட பீமன்,
உணவுவகைகளைப் பற்றிய நூல் இயற்றியிருந்தான் எனவும், அந் நூலில் விதம் விதமான பல்வேறு அடிசில் வகைகளைப் பற்றிக் கூறியிருந்தான்
எனவும் சிறுபாணாற்றுப்படை ஆசிரியர் கூறுகிறார்.
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருள்
பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில் - சிறு 240,241
பனுவல் என்பது புத்தகம். பனிவரை மார்பன் என்பவன் பீமன் –
சமையற்கலையிற் சிறந்தவன் என்று போற்றப்படுபவன்.
வேறு சுவையான உணவு வகைகள் மற்றும் உண்வு மூலம் நடக்கின்ற கலாக்காரப் போர்,அரசியல் போன்ற்வைகளை அடுத்தடுத்த தொடர்களில் காண்போம்.சந்திப்போம்.
அன்புடன்
கோ.லீலா.

N.Rathna Vel

Monday, 24 February 2020

சோறு-3

சோறு முக்கியம் பாஸ்............................

சிவப்பு அரிசி
*********************
அரிசி வகைகள் ஆயிரம். அவற்றில் மூன்று வகையான அரிசிகள் நிலைத்து நின்றன - சிவப்பு, கறுப்பு, வெள்ளை. இந்த வண்ண அரிசிகளைப் பற்றிய சுவாரசியமான பழங்கதைகள் உண்டு.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய யஜுர் வேதத்தில் மூவண்ண அரிசியின் மகிமை கூறப்படுகிறது. தெய்வங்களுக்குப்
படைக்க வேண்டிய தானியங்களைப் பற்றிக் கூறும்போது, கறுப்பு அரிசியை அக்னி தேவனுக்கும், சிவப்பு அரிசியை மழைக் கடவுளான இந்திரனுக்கும், வெள்ளை அரிசியை சூர்யபகவானுக்கும் படைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
அரிசி, நம் பாரம்பரியமான உணவு தானியம். 6,000 ஆண்டுகளுக்கு முன்னரே சீனாவில் நெல் விளைவிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், சமீபத்திய தொல்லியல் ஆய்வு 9,000 ஆண்டுகளுக்கு முன்னரே நெல் விதைகள், அதைப் பயிரிட உதவும் விவசாயக் கருவிகள் இருந்ததாகக் கண்டுபிடித்திருக்கிறது. அரிசி, தன் நீண்ட வரலாற்றில் ஆசியக் கண்டத்தில் மட்டுமே நிலைத்திருக்கிறது. உலகில் பெரும் அளவில் அரிசி உற்பத்தி செய்யப்படுவது ஆசியாவில்தான்.
சீனா, தாய்லாந்து, வியட்நாம் இந்த மூன்றும்தான் அரிசியை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகள். இன்றைக்கும் தென்னிந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அரிசி அதிகமாக விளைவிக்கப்பட்டாலும், இவற்றில் அதிகம் நாம் பெறுவது பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியைத்தான். சிவப்பு அரிசியை நாம் பயன்படுத்துவது வெகு குறைவே.சிவப்பு அரிசி, பெரிய கடைகளில், மால்களில், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கும் ஓர் அரிய பொருளாகிவிட்டது. அதன் அருமை, பெருமைகளை தெரிந்துகொண்டால், சிவப்பு அரிசியை நாம் ஒதுக்க மாட்டோம்.
குதிரை வால் சம்பா, மணிச் சம்பா, மடு முழுங்கி, கவுனி, தூய மல்லி என்று அழகழகான அரிசி வகைகளின் பெயர்கள் எல்லாம் ஒரு காலத்தில் எல்லோரின் வீட்டிலும் புழங்கி வந்தன. பிறகு கற்பனை வறட்சியுடன் ஐ.ஆர்.8, சி.ஓ33 பெயர் வைக்கப்பட்ட ஹைப்ரிட் அரிசிகள் வந்தன. ஒரு காலத்தில் இந்தியாவில் இரண்டு லட்சம் அரிசி வகைகள் இருந்ததாகச் சொல்கிறார் விஞ்ஞானி ரிச்சாரியா.
அந்த வகையில் சிவப்பு அரிசி என்பது ஓர் அற்புதமான அறிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்… சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.
சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, ‘காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.
நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!
பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு
வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch). இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன.
சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.
எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் –அளவுக்கு இரும்புச் சத்து – சிங்க் (Zinc), மாங்கனீசு, மெக்னீசியம், செலினியம், பாஸ்பரசு போன்ற கனிமங்கள் – மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன
தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித்திருக்கின்றன.
சிவப்பு அரிசியில் மானோகோலின் – கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் ‘லோவாஸ்டேடின்’ (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உள்ளது.
‘சிவப்பு பூஞ்சண அரிசி’ (Red yeast rice) என்று இதற்குப் பெயர். சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து. இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி…
இப்போது காணாமல் போன மர்மம் என்ன?
சிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும் சரி, இடாவிட்டாலும் சரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை உண்டு.
ஆனால், ஆங்கிலேயர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed) என்றார்கள். சிவப்பு நெல்லை சிவப்பு அரக்கன் (Red Menace) என்றும் அழைப்பார்கள்.
சிவப்பு அரிசி... ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்! எப்படி?
இதயத்துக்கு இதம்!
*******************************
நார்ச்சத்தும் (Fiber) செலினியமும் (Selenium) மிகுந்து இருக்கின்றன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளைத் தடுத்து நிறுத்துகின்றன. இது மட்டுமல்ல, வைட்டமின் இ, நம் உடல் முழுக்க இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களோடு இணைந்து செயல்படுகிறது. இந்த ஆற்றல் மிகுந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களின் செயல்பாடு, இதய நோய்கள் வராமல் காக்கும்; ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கும்; மூட்டுவலி வீக்கத்தைக் (Rhemetoid Arthritis) குறைக்கும்.
கொழுப்பைக் குறைக்கலாம்!
முழுமையான சிவப்பு அரிசியில் இருக்கும் எண்ணெய், நம் உடலில் இருக்கும் எல்.டி.எல் (Low Density Lipoprotein) என்கிற கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. அமெரிக்காவில், லூசியானா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் நடந்த ஓர் ஆய்வில் இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதில் இருந்து தயாரான எண்ணெயை (Rice Bran Oil) சிலரைப் பயன்படுத்தச் சொல்லி சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இறுதியில் எல்.டி.எல் அளவு குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதோடு இந்த ரைஸ் பிரான் ஆயில், இதய ஆரோக்கியத்துக்கு செயல்படு உணவாக (Functional Food) இருந்து காக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். காரணம், இதில் இதய ஆரோக்கியத்துக்கு உதவும் வைட்டமின் பி, மக்னீசியம், நார்ச்சத்து உள்ளிட்டவை இருப்பதுதான்.
மாதவிடாய் நின்ற பெண்களுக்கு... மருந்து!
மாதவிடாய் முடியும் நிலையில் இருக்கும், முடிந்த நிலையில் இருக்கும் பெண்களுக்கு சில பிரச்னைகள் தோன்றுவது வழக்கம். அதிகக் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் எல்லாம் வரும் வாய்ப்பு உண்டு. வாரத்துக்கு 6 முறை சிவப்பு அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக, இந்த அபாயங்களை வெகுவாகக் குறைக்கலாம் என்கிறது ஓர் ஆய்வு.
டைப் 2 சர்க்கரை நோயைக் குறைக்கும்!
இதில் இருக்கும் மக்னீசியம், நம் உடலில் இருக்கும் 300-க்கும் மேற்பட்ட நொதிகளுடன் (Enzymes) செயலாற்றுகிறது. குறிப்பாக, குளூக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்பில்! இதன் காரணமாக, டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பில் மக்னீசியம் உதவுகிறது; நோயைத் தடுக்கிறது.
இன்னும், ஆஸ்துமா தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதில், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில், மாரடைப்பைத் தவிர்ப்பதில், பக்கவாதம் வராமல் தடுப்பதில், பித்தப்பைக் கற்கள் உருவாகாமல் காப்பதில்... என இதன் பலன்கள் பட்டியல் வெகு நீளம்.
வெள்ளை அரிசியை சமைப்பதைவிட, சிவப்பு அரிசி அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதைக்கொண்டு சாதம் தொடங்கி தோசை, புட்டு, ரவையாக்கி உப்புமா, அடை, கொழுக்கட்டை என எத்தனையோ செய்வதற்கு வழியுண்டு. சிவப்பு அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வோம். ஏனெனில், அது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமான தானியம்.
ஏன்..?
**********
ரசாயன உரங்கள் மூலமும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமும், விவசாயத்துறையில் உலகெங்கும் ஒரு ராட்சத பொருளாதார சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு, எந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தேவையும் இன்றி வளர்ந்த இந்த செந்நெல் பிடிக்கவில்லை. தங்கள் தொழிலை தக்கவைத்துக் கொள்ள இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தை எப்படியாவது திட்டியே தீர்ப்பதென்றும் முடிவெடுத்தனர். 'பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி’ என்ற கவர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர். நம் ஊர் மக்களும் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும் மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர்.
தண்ணீர் அதிகம் தேவையில்லாத, உரம் தேவையில்லாத, பூச்சிக்கொல்லிகள் தேவையில்லாத, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உடைய, ருசியான, மலிவான சிவப்பு அரிசிக்கு நாம் ஏன் மாறக்கூடாது?!
இன்னும் பல சுவராஸிய செய்திகளுடன் அடுத்தடுத்த தொடர்களில் சவ்திப்போம்.
அன்புடன்
கோ.லீலா.


Sunday, 23 February 2020

சோறு-2


கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலரு.
+++++++++++++++++++++++++++++++++++++
கறுப்பு அரிசி அல்லது கவுனி அரிசி பயன்கள்
கறுப்பு அரிசி என்றால தமிழில் இன்னொரு பெயர் உள்ளது அது தான் “கறுப்பு கவுனி அரிசி”. அதிக சத்துக்களும் (Nutrients), உயிர்வளியேற்ற எதிர்பொருள் (Anti-oxidant) நிறைந்தது. இந்த அரிசி அதிகமாக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் வீட்டு திருமண மற்றும் சுப நிகழ்ச்சிகளில் இனிப்புப்பொங்கல், பாயசம் வைப்பார்கள்.
மன்னர்களின் காலத்தில் இந்த கவுனி அரிசின் (கறுப்பு அரிசி) சத்துக்கள் ரகசியம் தெரிந்த அரசர்களும், மந்திரிகளும் மட்டுமே பயன்படுத்துவர்களாம், மக்கள் யாராவது கறுப்பு அரிசியை பயன்படுத்தினால் தண்டிக்கப்படுவார்களாம்.அரசர்களுக்கு தெரியாமல் உண்பவர்களின் தலையை எடுத்துவிடுவார்கள் என கதைகள் சொல்கின்றன.
கறுப்பு கவுனியின் பயன்கள்.
==============================
உணவுக்குழாய் புற்றுநோயிலிருந்து பாதுகக்கிறது.
உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் நிறைந்துள்ளது.
நாட்பட்ட நோய்களாகிய சர்க்கரை, புற்றுநோய், இதயக்கோளார் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கின்றது..
தேவையற்ற கொழுப்புக்களை கட்டுப்படுத்துகிறது.
அதிகமாக நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்தது.
உயிர்ச்சத்து (Vitamin) பீ/ ஈ நிறைந்தது.
உயிர்ச்சத்து (Vitamin) பீ – பயன்கள்:
**************************************
தோல் பாதுகாப்புக்கு நல்லது, தசைப்பிடிப்புக்கு நல்லது, நரம்புகளுக்கு சிறந்தது.

#கறுப்புகவுனி அரிசி - கறுப்பில் இருக்கும் சிறப்பு.
நாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளை அரிசி, பழுப்பு அரிசியைவிட அதிகச் சத்துகளைக் கொண்டது கறுப்பு அரிசி எனப்படும் கவுனி அரிசி. ஆசிய நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கவுனி அரிசி பயன்படுத்தப்படுகிறது. மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவே கவுனி அரிசி பயிரிடப்படுகிறது.
பண்டைய காலங்களில் தென்னிந்தியாவில்ஒரு குறிபிட்ட சமுதாயம் மட்டுமே இந்தக் கவுனி அரிசியைப் பரவலாகப் பயன்படுத்தியது. இன்றும்கூட, அவர்களின் திருமணங்களில் கவுனி அரிசியில் செய்யப்பட்ட ஓர் இனிப்பு வகை இடம்பெறுகிறது. இதன் சிறப்பைப் புரிந்துகொண்ட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா நாடுகள் அண்மைக்காலமாக இந்த அரிசியைப் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
அரசர்களின் அரிசி.
**********************
சீனாவில் இந்த அரிசியை ‘தடைசெய்யப்பட்ட அரிசி’ என்கிறார்கள். அதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் உண்டு. மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த அரிசியை பண்டைய சீனாவில் அரசர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். ஒரு காலக்கட்டத்தில் இதன் மகத்துவத்தை அறிந்து மக்களும் பயன்படுத்தத் தொடங்க, அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் இந்த அரிசியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. அதனால், இன்று வரை சீனாவில் தடைசெய்யப்பட்ட அரிசி என்றே இதை அழைக்கிறார்கள்.
கவுனி அரிசியின் தனிச் சிறப்பே அதன் கறுப்பு நிறம்தான். கறுப்பு நிறத்துக்குக் காரணமாக இருப்பது ‘ஆன்தோசயானின்’ என்னும் நிறமி. திராட்சை வகைகள், கத்தரிக்காய், ஊதா முட்டைகோஸ், மாதுளை, கறுப்பு பீன்ஸ் போன்று இந்த அரிசியும் ‘ஆன்தோசயானின்’ நிறமியைக் கொண்டுள்ளது. இந்த நிறமிகள், இதயம், மூளை மற்றும் ரத்தக் குழாய்களின் செயல்பாடுகளையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. வெள்ளை நிற அரிசி, பழுப்பு நிற அரிசியோடு ஒப்பிடுகையில், கவுனி அரிசி கொஞ்சம் குறைவான மாவுச்சத்தையும் அதிகமான புரதம், இரும்புச் சத்தையும் கொண்டுள்ளது. கவுனி அரிசியில் வைட்டமின் இ உள்ளதால் கண் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு நல்லது. தவிர நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்தது.
இந்த அரிசியில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் இருக்கிறது. நீரிழிவு, புற்றுநோய், இதய நோய் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளிலிருந்து ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நம்மைக் காப்பாற்றுகிறது. கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து, உணவுக்குப்பின் ரத்தச் சர்க்கரை உயராமல், சீராக இருக்க உதவுகிறது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகள், வாய்வு, வயிற்று வீக்கம், வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கும் இந்த அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது.
#கறுப்புகவுனி அரிசியின் வெளிப்புற அடுக்கில், அதிக அளவில் ‘ஆன்தோசயானின்’ நிறமி காணப்படுகிறது. இது ரத்த நாளங்களில் படியும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது. தவிர, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை உயர்த்தி, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ரத்த நாளங்கள் முதிர்ச்சி அடையாமல் பாதுகாத்து இதய ஆரோக்கியத்தைத் தக்க வைக்கிறது. நச்சுப் பொருள்கள் உடலில் சேர்வதே பல்வேறு நோய்களுக்குக் காரணம். கவுனி அரிசியில் காணப்படும் ‘பைட்டோ நியூட்ரியன்ட்ஸ்’ (Phytonutrients), உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுகள், கல்லீரல், ரத்த நாளங்கள், பெருங்குடல் ஆகியவற்றில் குவியாதவாறு தடுக்கிறது.
#கறுப்புகவுனி அரிசியும் பழுப்பு அரிசியைப்போன்ற சுவையைக் கொண்டதுதான். சமைக்க அதிக நேரம் எடுக்கும். ஒரு மணி நேரம் ஊறவைத்துச் சமைத்தால் எளிதாக இருக்கும். உணவும் மென்மையாக இருக்கும். இன்று மளிகைக் கடைகளில்கூட கவுனி அரிசி விற்பனைக்குக் கிடைக்கிறது. கவுனி அரிசியின் முழுப்பயன்களும் அதன் மேல்பகுதியில் ஒட்டியிருக்கும் தவிட்டில்தான் இருக்கிறது. அதனால் வாங்கும்போதே முழுக் கவுனி அரிசியா என்று பார்த்து வாங்க வேண்டும்.
எங்க ஊர் பக்கத்தில் புதிதாக திருமணம் ஆன ஆண்களுக்கு இந்த கவுனி அரிசியில் கொழுக்கட்டை செய்து தருவார்கள்.
என்ன என்ன வகை உணவுகள் இருக்கு,அதைப்பற்றி சங்க இலக்கியங்கள் என்ன சொல்கிறது என அடுத்தடுத்த தொடர்களில் பார்ப்போம்.
அன்புடன்.
கோ.லீலா
Mohamed Ali Jinna, Ananda Kumar and 3 others