Saturday, 10 November 2018

அஞ்சல மவன்

மண்வாசனையோடு அம்மாவின் நினைவுகளை சுமந்தலைகிற ஒரு எளிய இனிய கவிஞன் தான் கட்டாரி என்கிற சரவணன் அவர்கள்.
அஞ்சல மவனின் நூலாசிரியர்,எனினும் புத்தகத்தை இயக்குவது தன்னலமற்ற அம்மாவின் பேரன்பும்,அதன் மூலம் தினம் தினம் மீட்டெடுக்கப்படும் பால்யங்களும் தான்.
எந்த ஒப்பனைகளுமற்ற எளிய மொழியில் எங்களின் தலைமுறைக்கு, முந்தைய தலைமுறை அம்மாக்களும் வாசிக்கக் கூடிய அம்மாவின் மொழியில் வடிக்கப்பட்டிருக்கும் பேரன்பு “அஞ்சல மவன்”.
அம்மா என்றால் அன்பு. ஆனால் அம்மாவென்றால் “சோறு” என்பதுதான் உண்மை. தாயற்று போனவர்களின் பசி ஒரு போதும் ஆற்றுப்படுத்தப்படுவதேயில்லை.
“எம் புள்ள பசி தாங்காது” என்ற ஒற்றை வாசகத்தால் உலகத்து அம்மாக்கள் எல்லாம் உணர்வால் ஒன்றாகி விடுகிறார்கள்.
அந்த நிதர்சன உண்மையை பல இடங்களில் கவிதையாக்கி இருக்கிறார் கட்டாரி.அம்மாவென்று அழைக்கும் உயிர்களுக்கெல்லாம் சோறாக்கி விடும் அம்மாக்கள் இருப்பதாலேயே பூமியும் நனைகிறது மழையால்.
நானும் மருத நிலத்தை சேர்ந்தவள் என்பதால்,சூழலை கண்முன் நிறுத்தி படிக்கும்போது பச்சை நெல் மணமாய் பரவுகிறது அம்மாவின் பேரன்பு. என் அம்மாவை மட்டுமின்றி என் ஆத்தாக்களையும் மனதில் கொண்டு வந்துவிடுகிறார் அஞ்சல அம்மாள்.
அரை இட்லி சாப்பிடாததற்கே நாயென்று அழைத்து சாப்பிட வைத்த அம்மா………….
இப்போது வட்டில் நிறைய இட்லியிருந்தும் உண்ண சொல்ல அம்மா இல்லையென்ற வெறுமையை,வலியை எதைக் கொண்டு துடைப்பது…..கவிதை கண்ணீர் மல்கி நிற்கிறது.
ஒரு மூச்சுக் காற்றென, அம்மாவின் அன்பு, அக்கறை நம் மேல் ஊடுருவிக் கிடப்பது எத்துணை பேரின்பம்.மாத சந்தா கட்டச் சொல்லியெல்லாம் குறுஞ்செய்தி வருகிறதே, ஆனால் நமது அன்பின் வேரை அறுக்கப்போவதை ஒரு குறிப்புணர்த்திக் கூட செல்லவில்லையே இயற்கை என்று அங்கலாய்க்கும் கவிஞன்,தாயன்போடு ஒரு மாபெரும் செய்தியை ‘அஞ்சல மவன்” நூல் மூலமாக தமிழ்,மலையாளம்,ஆங்கிலம் போற்றும் நல்லுகிற்கு தந்துள்ளார்.
அய்யா ஜி.ராஜன் சொல்லியிருப்பது போல் நான் “சீதை மவளாக” படித்தேன் அதைப்போல் படிப்பவர் யாவரும் தத்தம் அம்மாவின் மவனாகவோ,மவளாகவோ படிப்பார்கள்.படிப்பவர்கள் யாவரும் தன் தாயை,தந்தையை கொண்டாட வேண்டும் என்பதையும் உணர்வார்கள்.
இப்போது,முன்பை விட அம்மாவை கூர்ந்து கவனிக்கிறேன்,இதை எழுதும் இந்த மாலைப் பொழுதில் சுவர் ஏறி கத்திக்கொண்டிருக்கும் பூனையிடம் பால் வேண்டுமா, சோறா என கேட்கிறார் என் அம்மா,பசிப்பவரின் தேவை எப்படி புரிகிறது,பாலை ஊற்றச் சொல்லி என்னையும் ரொட்டித்துண்டை போட அம்முவையும் அழைக்கிறார்
இப்படிதான் எல்லா அம்மாவும் இருக்கிறார்கள். நாம்தான் அவதானிப்பதில்லை,அதை களைந்து அம்மாவை ரசிக்க சொல்லித் தருகிறது “அஞ்சல மவன்”.
இப்படியாக எண்ணற்ற அம்மாக்களின் மூலமாக அஞ்சல அம்மாள் உங்களையும், எங்களையும் ஆசீர்வதித்தப்படி இருக்கிறார்.
இன்னும் இன்னும் இனிய நிகழ்வுகளை,அதை இழந்த வலிகளை அம்மாவின் எலும்பு சூட்டின் மூலம் உணர வைக்கும் பல கவிதைகளை உங்களின் சொந்த அனுபவத்திற்கு விட்டு விடுகிறேன் படித்து நெகிழுங்கள்.
இம்மாபெரும் உணர்வை அனைத்து மொழியாளர்களுக்கும் கடத்தி தரும் உன்னத பணியை ஆற்றியிருக்கும் அய்யா கருணாநிதி சண்முகம்,மற்றும் ஜி.ராஜன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
என் அம்முவிற்கும்,அவரின் பிற மொழி தோழமைகளுக்கும் இதை படிப்பதற்கு ஏதுவாயிற்று.
ஆண்டன் பெனி சகோதரரின் அணிந்துரை அஞ்சல அம்மாவின் அன்பை,கனவை, குழந்தைகளை பாத்துங்கப்பா என்ற உணர்வை படம்பிடித்து காட்டியவர் அஞ்சல அம்மாவின் அன்பில் நனைந்தவர் என்பதை சொல்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக,எந்த ஒப்பனையுமற்ற உன்னத உணர்வுகளை மண்வாசனையுடன்,எளிய மொழியில் ஒரு நூலை வெளியிட்டு தாய்மையை,மகவின் உணர்வுகளை கொண்டாடிய படைப்பு குழுமத்திற்கும்,நிர்வாகி ஜின்னா மற்றும் தோழமைகள்,ஓவியர்கள் அனைவருக்கும் நன்றியும்,பாராட்டும்,மனம் நிறைந்த வாழ்த்துக்களும்.
அட்டைப்படம் அம்மாதான் அகிலத்தின் முதல் எழுத்து என்பதை ஆணித்தரமாக சொல்கிறது அதை எழுதுக்கோல் நிருப்பித்து இருக்கிறது.
அரை வயிறா கிடக்குற வளர்ற புள்ள உங்களின் புறங்கையில் மேக பொதிமத்தினின்று நீர் திவலைகள் நனைத்தால்….அது அஞ்சல அம்மாளின் முத்தம் மட்டுமில்லை,பல உருவங்களாக வாழ்கின்ற அம்மாக்களின் முத்தங்களும் அன்போடு கலந்திருப்பதாக கொள்க…………..
என்றென்றும் அன்புடன்
கோ.லீலா.

வனத்தின் காலடி

படபடத்தடங்கும் கூடிழந்த
பறவையின் சிறகொலியில்
மறைந்து கிடக்கிறது
வெளியேறும் வனத்தின்
காலடியோசை.
-கோ.லீலா

பார்வையற்ற தாய் பாடும் தாலாட்டு.


ஆரேஆரிரரோ ஆரேரே ஆரிராரோ
ஏலே இளங்கிளியே பாடி வரும்
பூங்குயிலின் தேனிசையே
பைந்தமிழின் தீஞ்சுவையே
நான் காணா காட்சியெலாம்
காண வந்த என் கண்ணே
செல்லமே கண்ணுறங்கு
யாழென்ன குழலென்ன உன்
குரலிசை போல வருமா?
கொஞ்சிடும் ரஞ்சிதமே
செல்லமே கண்ணுறங்கு
செவி தீண்டும் செந்தமிழின்
தீராத தேன்சுவையே
நான் காணா உயர்பொருளின்
பெண்ணுருவம் தான் நீயோ
தமிழின்பமே செல்லமே
நீ கண்ணுறங்கு……
கோடை குளிர்மழை தீண்டலே
தென்றல் சுமந்து வரும் பூமணமே
செல்லமே கால் அசைக்காதே
குலக்கொடியே கண்ணுறங்கு
கனிச்சாறின் நிறை சுவையே
திகட்டாத வைகாசி மாங்கனியே
குற்றால தென்றலே செல்லமே’
நீ கண்ணுறங்கு….
பாடல் பொதி பொருள்சுவையே
பண்ணிசைக்கும் கொலுசொலியே
செல்லமே நீ கண்ணுறங்கு..
நோன்பு பல நானிருந்து
ஈன்றெடுத்த வரமே
தமிழ் மொழியின் சுரமே
தமிழே அமுதே
சிறுமழைச் சாரலே
காலத்தில் விழித்தெழணும்
கண்ணுறங்கு கண்ணுறங்கு.
-கோ.லீலா.
கவிக்கோ அய்யா அவர்களுக்கு சமர்ப்பணம்.

பெண் எனும் பெரும் சக்தி.

பெண்ணழகை பேரழகை
சுற்றி வரும் கண்ணழகை
பாடி பாடி மாய்கின்றீர்
காமத்தின் முதல் படி வழியே
காதல் துய்த்து இறைமை
அடையாமல் அலைகின்றீர்
ஊருக்கே சேதி சொல்லும்
சாதி மல்லி வாசம் போல
அந்தரங்கத்து ஆசையெலாம்
அவையினிலே அவிழ்க்கின்றீர்
காதலென்ற மகத்துவத்தை
அங்க வர்ணிப்பால் அவமதிக்கின்றீர்
இலவச கழிப்பறை சுவர் தாங்கும்
மதியிழந்த மதிப்பற்ற சொற்களை
நற்றமிழின் பெயராலே பாட்டென
வார்த்தெடுத்தல் முறையாமோ
கற்ற தமிழால் பெற்றாளை
பேணி வளர்த்தாளை உற்றாளை
உடன்பிறந்தாளை பாடுமோ
உம்பேனா இவ்வகையில்.
இலக்கண வட்டிலில் அழகாய்
அடுக்கிய சொற்களெலாம்
கண்சிமிட்டி அழைக்க உவப்பில்லா
உருவப்படம் சேர்க்கின்றீர்
கண்ட பின்னே தெரிகிறது
ஆகாத இனிப்பு அஃதென்று
தமிழும் தலைக்குனியும்அறியீரோ
பெண்ணிங்கே போகப்பொருளோ
காட்சிக்கு வைக்கும் காண்பொருளோ
வெகுண்டு எழும் பெண் யாரும் இலரோ?
காமத்துபால் எங்களுக்கு ஒன்றும்
கசப்பில்லைக் காண் என்றாலும்
வள்ளுவனின் மூன்றாம்பாலென
இலைமறையாய் தந்திட்டால்
பொதுமறையாய் ஆகிவிடும்.
-கோ.லீலா

“கடவுள் மறந்த கடவுச் சொல்”

படைப்பு- ஒலியும் ஒளியும் கவிதைத் துளியும் | பகுதி - 18
ஒலியும் ஒளியும் கவிதை துளியும் -கஸல்
என் மூலம் எழுதப்பட்ட விமர்சனம்.
கஸல் என்றொரு இறையின் இசை.
“கடவுள் மறந்த கடவுச் சொல்” என்ற தலைப்பே கஸலாக இசையை வழியவிடுகிறது.கஸல் எங்கிருந்து எழுகிறது?அன்பு நிறை நெஞ்சத்தின் இசையென பெருவெளியில் மிதந்து ஒவ்வொன்றையும் இசைத்துக் கொண்டேயிருக்கிறது.
இசை பள்ளத்திலிருந்து மேட்டிற்கும்,மேட்டிலிருந்தும் பள்ளத்திற்கும் சதா பயணிக்கிறது இசை எங்கு வழிந்தாலும் இனிமைதானே.
காதலியாக இருந்தாலும்,இறைமையாக இருந்தாலும் முழுமையாக நம்மை ஒப்பளிப்பு செய்யும் போதுதான்,பேரன்பு பிரபஞ்சத்தின் பேரொளியென காலத்தைக் கடந்து மிளிரும்.

எதையும் எதிர்பாராத ஒப்பளிப்பின் மகத்துவம் பெரிதல்லவா?இந்த ஒப்பளிப்பின் மூலம் தான் காதலென்பது கஸலின் இசையாகிறது.
காதலின் பெருக்கில் காதலுக்குரியவரை உயர் சக்தியாக இறையாக பார்ப்பதும்,இறைவனின் மேல் கொண்ட அளவில்லா பக்தியால் இறையை காதலானகவோ,காதலியாக பாவிப்பதும் நம் தமிழ் இலக்கியத்தின் மரபு.
கஸல் கவிஞர் ஜின்னா அஸ்மியின் கஸலில் அத்தகைய இறைத்தன்மையை தன்னை முழுமையாக இசைத்துக் கொண்டிருக்கிறது.
1.என்னைத் தேடுவதற்கு
நானே புறப்படுகிறேன்…
அதற்கு முன்
எப்படியாவது என்னைத்
தொலைத்துவிட வேண்டும்.
எத்துணை ஆழமான கவிதை தன்னை தொலைத்து தன்னை தேட சொல்லும் கஸல் எத்தனை தத்துவார்த்தமான உண்மையை எளிதாக சொல்லி விடுகிறது.முதல் கஸலிலேயே என்னை தொலைத்து,அதன் இறைத்தன்மையை துய்த்துக் கொண்டிருக்கிறேன்.
பசுமை சூழ்ந்த மலை முகட்டினை மேகம் உரச,மலைச்சாலையில் பூந்தூறல் தீண்டினால் வரும் இன்பமன்றோ தன்னை தொலைத்தல். எதை தொலைத்து எதை பெறப் போகிறார் கவிஞர்.
“தான்” எனும் அகத்தை தொலைத்து,தன்னுள்ளே பயணம் செய்து ஞானம் தேட புறப்பட்டுவிட்டார், இது எத்தனை பேருக்கு வாய்க்கும்.
விழிப்புணர்வோடு தொலைதல் என்பது ஆன்மாவின் ராகம்,அதில் இறைத்தன்மை சுருதி சேர்க்கும்.
ஞானத்தின் முதல்படி தன்னை தொலைத்தல்,கஸலின் முதல் படியிலேயே ஞானத்தை தேடி புறப்பட்டுவிடும் கஸல் மலைச்சாரலின் இனிமை.
மலை முகட்டின் உச்சியில் தன்னை தொலைத்து,இயற்கையின் பிரம்மாண்டத்தில் வியப்புற்று ஒலியெழுப்பும் தருணம் போன்று சட்டென எதிர்பாராது நிகழ்ந்து விடும் ஞான கணங்களை இக் கஸல் அடைக்காத்து வைத்துள்ளது.
அடுத்த கஸல்
2. உன்னை
நேரில் பார்ப்பது சுகம்
நினைத்து பார்ப்பது
அதைவிட சுகம்.
எத்தனை நுண்மையான தத்துவத்தை உள்ளடக்கிய கஸல்.
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்.
என்று காதலில் உருகும் இதே கஸல் இறைமையையும் தாங்கி நிற்கிறது.
இஸ்லாத்திலும்,சைவ,வைணவத்திலும்,இறையை உருவமற்ற நிலையிலே தொழக்கூடிய ஒரு நிலையே பக்தியின் உன்னத நிலை என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது இறைத்தன்மைக்கும்,காதலுக்கும் பொருந்தும்.
உருவமற்று போனாலும் ஒருவரின்/ஒன்றின் மேல் வழியவிடப்படும் அன்பு என்பது இப்பெருவெளியில் சதா படரும் நேச இசைக்குறிப்பாகும் முழுமையாக ஒப்பளித்தலின் நிமித்தம் ஏற்படும் சுகம்…
எதையும் முழுமையாக உணர்ந்துவிட்டால் அதற்கு மேல் கடந்து செல்ல ஏதுமற்று போய்விடும்….. அதனால் எதிர்பார்த்து கிடப்பதில் உள்ள சுகத்தை முழுமையாக தொடர் அனுபவமாக என்றைக்குமான பேரின்பமாக இருக்க வேண்டும் என்கிற தொனியில் நினைத்துப் பார்ப்பது அதைவிட சுகம் என்கிறார்.
நேரில் பார்ப்பதால் ஏற்படும் சுகத்தின் சுகந்தம் பார்க்காத போதும் நினைவெங்கும் பரவி இறைத்தன்மையாக நிற்கின்ற இன்பத்தை கஸலாக இசைக்கிறார் கஸல் கவிஞர் ஜின்னா அஸ்மி.
====================================================================================3. நீ மேலே இருக்கிறாய்
நான் கீழே இருக்கிறேன்
உன் பார்வை எனக்காகக் கீழ்நோக்கியும்
என் பார்வை உனக்காக மேல்நோக்கியும்
இப்போது நாம் சந்திக்கும் இடம்
கீழா.. மேலா?
இக்கஸல் காப்பியத்தை பாடுகிறதா? காதலை பாடுகிறதா?
இறைத்தன்மையை பாடுகிறதா? சமூகத்தின் சமமின்மையை பாடுகிறதா?
வியப்பிலாழ்த்துகிறது கவிஞரின் சிந்தனை. வாசிப்போரின் எண்ணங்களுக்கு சிறகு கொடுத்து பறக்க வைத்து விடுகிறது.
எண்ணரும் நலத்தினாள் இனையள் நின்றுழிக்
கண்ணொடு கண்ணினை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.
. பெண் என்பவள் நாணத்தோடு குனிந்த பார்வையோடும்,ஆண் வீரத்தோடு நிமிர்ந்த பார்வையோடும் இருக்க வேண்டுமென அமைக்கப்பட்ட காட்சியை கவிஞர் ஜின்னா அஸ்மி அருமையாக தன்னியல்பில் கருத்துக்களை பொதித்து தர பயன்படுத்தியிருக்கிறார், கம்பர் உணர்வு ஒன்றிட நோக்கினர் என்கிறார் ஒரு படி மேலே போய் நோக்கினோம்,பார்வை எங்கு சந்தித்தது எனும் கேள்வியால் கஸலில் இறைத்தன்மையையும்,சமூகத்தையும் பாடுகிறார்.
இறைத்தன்மை நிறைந்த மானுடத்தை கலக்க இறை இறங்கி வருகிறது,இறைத்தன்மையை தேடும் மானுடம் மேல் நோக்கி பயணிக்கிறது இருவருக்கும் எங்கே சங்கமம் நிகழும் கீழா? மேலா?
மனிதமும், இறைத்தன்மையும் ஒன்றாகும் போது தானே….
மனிதம் இறைத்தன்மை நிறைந்ததாக மாற வேண்டும் என்கிற நுண்மையான செய்தியும் இதில் பாடப்பட்டுள்ளது.
சமூகத்தில் கீழ் மேல் என்கிற சமத்துவமின்மை எங்கு உடைப்படுகிறதோ அங்கு சந்தித்துக் கொள்கின்றன. கீழ் மேல் என்பதெல்லாம் ஒன்றாக…
இப்படி ஒரு கஸல் பன்முகத்தன்மையோடு தன்னை இசைத்துக் கொள்கிறது.
4. நீ போகும் போது
பூத்ததாகச் சொல்லப்படும் பாலைவனத்திலும்
நான் போகும்போது மணலாக இருக்கிறது.
இக் கஸல் காதலையும் பாடி கடவுளையும் பாடுகிறது.
பாலைவனத்தில் காதலி செல்லும் போது தன்னுடைய காதலே செல்வதால் பாலையும் இன்பசோலையாய் பூப்பூத்து இருக்கிறதாம்.அதே நேரத்தில் காதலி தன்னிடம் காதலை சொல்லாது போவதால் அவள் போகும் அதே பூப்பூத்த பாலை தனக்கு மணலாக இருக்கிறது என்கிறார்.காதலே காட்சியை ரசிக்கத் தக்கதாக மாற்றும் வல்லமைக் கொண்டது என்கிற நுட்பமான செய்தியை சொல்கிறார்.
இறைமையையும் பாடுகிறது…
இறையை தேடி செல்லும் பாதை கடினமானது எனினும் இன்பச்சோலையெனும் இறைத்தன்மைக்கு இட்டுச்செல்லும். இறைவன் சென்ற பாதை பூப்பூத்திருந்தாக சொல்லப்பட்டது,ஆனால் தான் போகும் போது மணலாக இருக்கிறதே..என்று சொல்லும் போது தான் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளதென்றும், அதே நேரத்தில் அதை அடைந்து விடவே பயணிப்பதும் இலைமறைவாய் சொல்லப்பட்டிருக்கிறது. தன் பயணத்தில் மணலாக தெரிந்தாலும் அது மலரை நோக்கிய பயணம்.
5.தவறு செய்யமுடியாத சரி நீ
சரி செய்ய முடியாத தவறு நான்
இதில்
யார் சரி? யார் தவறு?
எத்தனை நுட்பமான கஸல் “வாஹ்” போட வைக்கும் கஸலில் இதுவும் ஒன்று.
முதல் கஸலிலும்,இக்கஸலிலும் கவிஞரின் ஆழ்ந்த நுட்பமான சிந்தனை ஒரு மலரைப்போல தன்னியல்பில் மலர்ந்து மணம் வீசுகிறது.
காதல்,இறைத்தன்மை இரண்டும் நிறைந்த ஞானக் கேள்வியால் வியப்பில் ஆழ்த்தும் கஸல் இது.
காதலி சரியானவளென்றும்,தான் அவளின் காதலைப் பெற முடியாததால் தான் சரி செய்ய முடியாத தவறாகிவிட்டேன்,உன் மீதான காதலை மீள பெற இயலாது.தன் பழைய நிலைக்கு போக முடியாது அதனால் சரி செய்யமுடியாத தவறாகி விட்டேன்.என்றும் தன்னை சொல்லிக் கொள்ளும் காதலன்
அப்படியானல் யார் சரி யார் தவறு?
உன் மீது தீராத மாறாத காதல் கொண்ட நான் தவறா?சரியா? அல்லது என்னைப் போன்று காதலில் சிக்கிக் கொள்ளாமல், தன் நிலையிலேயே சரியாக இருக்கிறாயே நீ சரியா? தவறா? என கேள்வியை வைக்கிறார்.
சிறு ஊடல் போல் தோன்றினாலும்,காதலனின் ஏக்கமாகவே தொனிக்கிறது.
இறைத்தன்மையை பற்றி என்ன சொல்கிறது கஸல்.
இறைமையென்பது தவறே செய்ய முடியாத சரி.ஆனால் சரி செய்ய முடியாத தவறு நான்,என்னை படைத்தது நீ அப்படியானால் சரியான நீ எப்படி தவறான என்னை படைத்திருப்பாய்.தவறான என்னை படைத்தால் எப்படி நீ சரி.சரியான நீ படைத்த நான் எப்படி தவறாவேன். என்று இறைமையை நோக்கி உரிமையோடு தோழமையோடு சிறு சண்டை போடுகிறார்.இறைத்தன்மையின் உச்சத்தில்
இறைமையை தன் தோழனாக பாவித்தல் இயல்பு. தன்னை சரி ஆக்கு என்கிறார்.
கடவுள் என்றும் மறக்க முடியாத கடவுச் சொல்லாக இக் கஸல் பரிமளிக்கிறது.
என்றென்றும் அன்புடன்
கோ.லீலா.