பின்னிரவின் மழை
வனத்தின் நறுமணத்தை
என்னுள் இசைக்கிறது………
வனத்தில் தவழும் இசை
என்னுள் உறங்கும்
ஆதிமனுஷியை எழுப்புகிறது
தீ உறங்கும் வனம்
என் நினைவு சுவடுகளை
மழையை இசைத்து
துளிர்க்க செய்கிறது……
ஆதிமனுஷியாக
நானும் வனமும்
மரத்தை உடுத்தியிருக்கிறோம்
பறவையின் சிறகு காற்றிலிசைக்கும்
இசையை கேட்டப்படியிருக்கிறோம்
ஆகாயம் பார்க்க முடியாமல்
மூடாக்கு போட்டு கொண்ட
அருவியில் நீராடினோம்
தாயின் வனப்புகளை
சுதந்திரமாய் ஸ்பரிசிக்கும்
குழந்தையென
வனத்தின் ரகசியங்களை
சுகிக்க அனுமதிக்கப்படிருந்தேன்
அப்போது நான்
வனதேவதையாக இருந்தேன்
எனது சிறகுகள் பசுமையாய் இருந்தது
வனம் இசையால் நிரம்பி வழிந்தது
இசை ஓய்வெடுக்க தொடங்கிய நாளில்
எனது சிறகுகள்உதிரத் தொடங்கின
இசையை தேடி நெடுந்தொலைவு
வந்த என்னிடம் வனம் கேட்கிறது
என் சுவடுகளை ஏன் அழித்தாய்?
எஞ்சிய மழையில் மௌனமாய்
கசிகிறது என் கண்ணீர்
வனத்திற்கான பாடலொன்றை
இசைத்தவாறு………….
-லீலா.
No comments:
Post a Comment