மழைச்சாரலில்
விழித்துக்கொள்கிறது காடு.
கூழாங்கல்லின் உதடு வருடி சதா
சலசலக்கும் நீரோடைகள்
உறங்கவிடுவதில்லை என்னை
விழித்திருக்கும் எனக்கு தெரியாமல்
பூமிக்குள் ரகசியமாய் நழுவுகிறது நீர்
நீர் போகும் ரகசியம் வேருக்கு மட்டும்………..
நீரும் வேரும் பூமிக்கடியில்
கூடி களிப்பதை…….
வானுக்கு அறிவிக்கிறது
பச்சை மரக்கவிகை……….
மெல்ல மரம் தழுவிக்கொள்கிறேன்
பறவைகளின் கீச்சொலி கீதமாய்
நிரம்பி வழிகிறது….
என் மேல் படரும் கொடிகளின்
பச்சையம் என்மேல் பரவி படர்கிறது
மழைக்காலம்,கோடைக்காலம்
அனைத்தும் காடுக்காலமாக
இருக்கிறது…..
மிரண்ட மான்களோடும்,மயில்களோடும்
காடுகளை மேய்ந்து திரும்புகையில்
பூக்கள் தேடி யாரும் காணாத
மலரொன்றை காண்கிறேன்…….
இப்போது கானுயிர்களின்
கலவையாக பச்சைய
மணமாக மணக்கிறேன்..
-லீலா.
No comments:
Post a Comment