Saturday, 17 June 2017

தவறான எண்ணிலிருந்து அழைப்பு...

தவறான எண்ணிலிருந்து அழைப்பு...
=======================================
கவிக்கோவிற்கு வந்த 
தவறான எண்ணிலிருந்தே
அழைப்பு………..
யாரெனக் கேட்டேன்.
அடுத்தமுனையில் ஆண்டவன்
என பதில் வந்தது………
கவிக்கோவிற்கு சொன்னது போல்
யாரை ஆண்டாய் என்றேன்?
உனை தேடுபவரை விடுத்து
இல்லை எனும் என்னிடம்
ஏன் வந்தாய் என்றேன்?
எது பிடிக்குமென்றது எதிர்முனை
மலை ,மழை,காடு,கடல்
காற்றும்வானம், பூமி, குழந்தை
யானை,ரயில் இன்னும் பல
சுருங்க சொல்லின்
இயற்கையென கொள்க என்றேன்.
மெல்ல நகைத்து
அதுவே நான் என்றது
எனின் இல்லாத ஒன்றுக்கு
பாலும் தேனும் ஊற்ற
பசிக்கழும் குழந்தையை
பார்த்திருப்பதென்ன என்றேன்
கேள்வி கணைகளை
ஏந்திக்கொள்ள அடுத்தமுனை
அமைதிக் காத்தது.
படைத்த யாவும்
சிறப்பாயிருக்க
சிந்திக்கும் மனிதனுக்குள்
தீயன நுழைத்தது ஏன்?
இயற்கையை அழிப்பவரை
வதம் செய்யாதது ஏன்?
என அடுக்கினேன் கேள்விகளை
மறுமுனை மௌனம் கலைத்து
சிறிதாய் செறுமியது
தீயன அழிக்க நீ
ஏன் வரவில்லையென்றேன்?
பதிலில்லை………..
நீ இருக்கிறாயா? இல்லையா?
என்றேன் சற்றே சந்தேகத்துடன்
ஹலோ ஹலோ என்று
சிக்னல் இல்லையென்றது….
சிட்டுக்குருவியொன்று
மாய்ந்து விழுந்தது………..
இப்போது மறுமுனை
வெறுமையாய் இருந்தது…
-லீலா.
இரவின் ஊடலில்
பூமி வந்த பனித்துளி
அழைக்க வருகிறான்
சூரிய கதிரொளி…..
-லீலா.

பறையொலி……

தமிழனின் இசைக்க ருவி பறை.அதை ஒழிக்கவும்,அதை குறியீடாகவும் பயன்படுத்துவதை கண்டித்து நான் எழுதிய கவிதை.


பறையொலி……
================
தகமித தரிகிட தகமித தரிகிட
தப்பாட்டம் இல்லையென….
கொட்டி முழக்கி பறையடி
தப்புகளை ஆட்டங்காண வைக்கும்
என்று சொல்லி பறையடி
ஆடிக்கொண்டே அடிப்பது
பறையொலி அறிவியல்
உள்ளமும் உடலும்
அசையும் ஒரு புள்ளியில்
ஆடவைக்கும் உயிரின் நாதம்
ஆதிதமிழன் இசையின் வேதம்
என்று சொல்லி பறையடி…
தப்பை தீயில் நீ வாட்டு
சாதி தீயை தூர ஓட்டு
கூட்டிசை உன் இசை
கூடியிசைப்பது என்னிசை
என்று சொல்லி பறையடி
சாவுக்கான இசைமட்டுமல்ல
வாழ்வுக்கும் இதே
என்று சொல்லி பறையடி
அந்நியனின் சூழ்ச்சியை
துரத்தி ஓட்ட பறையடி
வெறும் இசையல்ல
ஓர் இனத்தின் விசை
என்று சொல்லி பறையடி…
சதை வடிவமாய் வாழ்ந்த
உனக்கு இசை வடிவ
முற்றுப்புள்ளி தரும்
வாழ்வின் தத்துவம்
என்று சொல்லி பறையடி
மனசின் அழுக்கை போக்கும்
போருக்கும் முழங்கும் முரசு
என்று சொல்லி பறையடி…
உனை தாழ்வென்று சொல்பவனை
துரத்தியடிக்க பறையடி
ஆதிதமிழன் நீயென
அழுத்தி சொல்லி
கொட்டி முழக்கி பறையடி.
-லீலா.

Tuesday, 13 June 2017

பூமித் தாய் பேசுகிறாள்.......



பூமித் தாய் பேசுகிறாள்
மக்கா!
இதயம் வேகமா துடிக்குது
வெரசா போவேனோ
விளங்கி வாழ்வேனோ
தெரியல…
அறிவியல் ஆற்றலில்
ஆட்டம் போட்டது போதும்
எங்கெங்கோ நோகுது
ஏதோதோ ஆகுது
ஓசோனை கிழிச்சிட்ட…
ஓயாத தொல்லையத
கூட்டிட்ட……
மண்ணெணை,மீத்தேன்
பெட்ரோல்,டீசலுன்னு
என் மார்பை பிளந்திட்ட…
மணல், தாதுன்னு
மேனியெல்லாம் சுரண்டிட்ட
உன் உயிர் காத்து
பிடுங்கி என் உசிரா
எடுக்கிற…..
வெப்பத் தணலுல
வெந்து மடிய
வைக்கிற...
மக்கா!
இதயம் வேகமா துடிக்குது
தண்ணிக் கூட சுடுது
தாய் நான் இல்லாட்டா!
செல்லமே!
உன்ன யாரு பார்ப்பா…
என்ன நீ காப்பாத்து
சிந்திச்சு பாத்து
சூரிய ஒளிமின்சாரம்
சிக்கனமாய் ஓடும் காரும்
என் உசிரை நீட்டும்..
மரம் வளர்த்து
மழைப் பெத்தா
ஓசோன் ஓட்டைக் கூட
அடையும்...
ஆயுள்இன்னும் கூட 
நீளும்......
எருது சாணம் எரியாம
எரிவாயுவா பயன்படுத்து
கழிச்சதெல்லாம் கொடுத்திடு
கடக்குன்னு எந்திரிப்பேன்
படக்குன்னு கண்ணு முழிப்பேன்.
செல்லமே!
எனை காப்பாத்து
மழையெல்லாம் தாரேன்
மனசு போல விளைவேன்
-லீலா
.

ஹைக்கூ

குடையை
சற்று விலக்கு
மழை நனையட்டும்.......
-லீலா

வனத்திற்கான பாடல்…….




பின்னிரவின் மழை
வனத்தின் நறுமணத்தை
என்னுள் இசைக்கிறது………

வனத்தில் தவழும் இசை
என்னுள் உறங்கும்
ஆதிமனுஷியை எழுப்புகிறது

தீ உறங்கும் வனம்
என் நினைவு சுவடுகளை
மழையை இசைத்து
துளிர்க்க செய்கிறது……
ஆதிமனுஷியாக

நானும் வனமும்
மரத்தை உடுத்தியிருக்கிறோம்
பறவையின் சிறகு காற்றிலிசைக்கும்
இசையை கேட்டப்படியிருக்கிறோம்
ஆகாயம் பார்க்க முடியாமல்
மூடாக்கு போட்டு கொண்ட
அருவியில் நீராடினோம்
தாயின் வனப்புகளை
சுதந்திரமாய் ஸ்பரிசிக்கும்
குழந்தையென 
வனத்தின் ரகசியங்களை
சுகிக்க அனுமதிக்கப்படிருந்தேன்

அப்போது நான்

வனதேவதையாக இருந்தேன்
எனது சிறகுகள் பசுமையாய் இருந்தது
வனம் இசையால் நிரம்பி வழிந்தது
இசை ஓய்வெடுக்க தொடங்கிய நாளில்
எனது சிறகுகள்உதிரத் தொடங்கின
இசையை தேடி நெடுந்தொலைவு
வந்த என்னிடம் வனம் கேட்கிறது

என் சுவடுகளை ஏன் அழித்தாய்?
எஞ்சிய மழையில் மௌனமாய்
கசிகிறது என் கண்ணீர்
வனத்திற்கான பாடலொன்றை
இசைத்தவாறு………….

-லீலா.

எனக்குள் ஒளிந்திருக்கும் காடு.



மழைச்சாரலில்
விழித்துக்கொள்கிறது காடு.
கூழாங்கல்லின் உதடு வருடி சதா
சலசலக்கும் நீரோடைகள்
உறங்கவிடுவதில்லை என்னை
விழித்திருக்கும் எனக்கு தெரியாமல்
பூமிக்குள் ரகசியமாய் நழுவுகிறது நீர்
நீர் போகும் ரகசியம் வேருக்கு மட்டும்………..
நீரும் வேரும் பூமிக்கடியில்
கூடி களிப்பதை…….
வானுக்கு அறிவிக்கிறது
பச்சை மரக்கவிகை……….
மெல்ல மரம் தழுவிக்கொள்கிறேன்
பறவைகளின் கீச்சொலி கீதமாய்
நிரம்பி வழிகிறது….
என் மேல் படரும் கொடிகளின்
பச்சையம் என்மேல் பரவி படர்கிறது
மழைக்காலம்,கோடைக்காலம்
அனைத்தும் காடுக்காலமாக
இருக்கிறது…..
மிரண்ட மான்களோடும்,மயில்களோடும்
காடுகளை மேய்ந்து திரும்புகையில்
பூக்கள் தேடி யாரும் காணாத
மலரொன்றை காண்கிறேன்…….
இப்போது கானுயிர்களின்
கலவையாக பச்சைய
மணமாக மணக்கிறேன்..
-லீலா.

வானம்….



வானம்….
=============
வேரொன்று இல்லாத
மாமரம் வானம்
மழையில் நனையும்
மலையை நனைக்கும்
புல்மீது பனித்தூவும்
ஒளியோடு கொஞ்சம்
இருளோடு கொஞ்சம்
விளையாடும் வானம்
நிலவோடும் மீனோடும்
குலவுகின்ற வானம்
மலைமோதும் மேகம்
அலையோடு ஆடும்
தொட்டுவிடும் தூரத்தில்
எட்டியே நிற்கும் வானம்
மௌனமாய் பேசும்
யாருமற்ற வானம்
யாவ்ருக்குமான வானம்
மேகங்களின் வனம்
எனதருமை வானம்.
-லீலா.

கடலும்,வானும்.........

கடலை
கையில் அள்ளினேன்
வானம் வந்தது...
-லீலா.

சூரியன் தின்னும் கடல்

சுடச் சுடச் சூரியன்
தின்னும் கடல்
குளிர்ந்தே கிடக்கிறது
பாதம் தழுவுகையில்
-லீலா

கடல்

கொஞ்சம் சிப்பி
கொஞ்சம் மீன்கள்
கொஞ்சம் மணற்துகள்
கொஞ்சம் நனைந்த ஆடை
கொஞ்சம் கடற்பாசி
என்னுடன் வீடு
நுழைகிறது கடல்…….
-லீலா.

இரவு.....

இரவு…………
ஒவ்வொவ்வொரு நாளின்
இரவும் வேறுவேறானது
இரவென்பது சொல்லன்று
கரைத்தழுவும் அலைகள்
இரவை இசைக்கிறது
இரவு பனிதுளியாக
மெல்ல உதிர்கிறது……
வெளிச்சம் தின்று
நீண்ட இரவின்
இருட்டு மடியில்
சிதறிய சில்லரைக்
காசுகளாய் விண்மீன்
கண்ணடித்தே கனவு
ஊற்றுகின்றன என்னுள்
இந்த இரவை கடந்துவிட
விருப்பமில்லைதான்………
எனினும் பகலை
சந்திக்கதான் வேண்டும்
இரவாய் உதிர்ந்த
பனித்துளி வெண்மையான
கதை கேட்க…………
-லீலா

இரவின் சுகந்தம்.

இரவின் சுகந்தம்.
=====================
அமைதியின் நறுமணம்
என் தனிமையின் 
விரல் பிடித்துக்கொள்கிறது
வானின்று ஒழுகும்
நிலவொளி பனியென
தழுவிக்கொள்கிறது
துளையின்றி முணுமுணுக்கும்
மூங்கில்காடுகள்
குழலிசைக்கின்றன.
பறவையின் கனவை
சுமந்தபடி மிதக்கின்றன
காற்று.......
தனிமையும் அமைதியும்
பூக்களின் நறுமணத்தால்
பின்னிக்கொள்கின்றன…
இரவின் சுகந்தம் கொண்டு
நிரம்புகிறது என் கோப்பை….
-லீலா.

ஓசையென்பது அமைதி


ஓசையென்பது அமைதி
========================
அதிகாலை நேரம்
சேவலின் கொக்கரக்கோ
பறவைகளின் கீச்சொலி
தும்பிகளின் பேச்சொலி
மடல்விரியும் மெல்லிசை
கோலம் போட்டெழும்
கால் கொலுசொலி
ஆவினம் மா வெனுமோசை
தயிர் கடையுமோசை
பாட்டி பாக்குமிடிக்குமோசை
அமைதியை இசைக்கிறது
அமைதியென்பது நிசப்தமன்று
இரவின் ஓசை…………
வண்டுகளின் ரீங்காரம்
இலையும் தென்றலும்
உரசிக்கொள்ளுமோசை
கரையுரசும் அலையோசை
மூங்கில் காட்டோசை….
அமைதியை இசைக்கிறது
அமைதியென்பது நிசப்தமன்று
ஓசையென்பது அமைதியென
எனை வட்டமிட்டு இசைக்கிறது………..
-லீலா

உதிரும் இலை.............

உதிரும் இலை.............
=================
இலையுதிர்கால……
வேர்களின் முனகலுக்கு
முத்தமிடுகிறது மண்ணை
உதிரும் இலை..........
மண்ணுக்கு மகவொன்று ஈந்த
பெருமித்த்தில் வான்பார்த்து
எக்காளமிடுகிறது கிளை
இலையாய் மரத்திற்கு
கொடுத்தது ஏராளம்
வீழ்வதால் இல்லை சேதாரம்
மண்ணுக்கு இதுவே ஆதாரம்
உதிர்ந்த இலை உற்சாகமாய்
பயணிக்கிறது காற்றின் கைப்பிடித்து
சிறுக நீருண்ட அலுப்பில்
நதியில் ஓடும் வான் துரத்துகிறது
மீன்குஞ்சொன்றின் முத்தத்தில்
ஒதுங்கும் எறும்பிற்கு
ஓடமாகி் ஒதுங்குகிறது
இனி வேர்வழி கிளையடையும்
உதிர்ந்த இலை ……………
மண்ணுக்கு உரம்
மனிதனுக்கு உதாரணம்
உதிர்ந்தது வாழ்கையில்
முதிர்ந்த நீ வாழமுடியாதா?
உதிர்ந்த இலையின் உத்வேகம் கொள்
மீண்டுமொருமுறை
உலகை வலம் வரலாம்.
-லீலா.