Sunday, 19 June 2016

படிக்க மறந்த பாடம்.........................

                     
உண்மையில் எதற்காக படிக்கிறோம்? அல்லது படிக்க

வைக்கப்படுகிறோம்?

கல்வியென்பது என்ன?

இன்றைய குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் மனநிலை என்ன?

வாழ்தலென்பது,குழந்தை பெற்றோருடனும்,உற்றார்  உறவினருடனும் வாழ்வது,நமது பாரம்பரிய உணவுகள், திருவிழாக்கள் என செல்வது, ஏட்டறிவோடு, பட்டறிவும், பார்த்தறிவதும் ஒரு குழந்தையை செம்மையுற செய்கிறது.ஆனால் இன்றோ பிறந்தவுடனேயே பள்ளிகளை தேடுவதும்,அதோடு உண்டு உறைவிட பள்ளியென்றாலும் பிள்ளைகளை சிறுவயதிலேயே அங்கே விட்டுவிடவும் தயாராக இருக்கிறார்கள்.

சிறந்த சூழல்(Good Environment) உள்ள இடமாகதான் தேர்ந்தெடுந்திருக்கிறோம் என்ற சமாதானம் வேறு.நீண்ட நாட்களாக ஒரு கேள்வி என்னுள் உள்ளது,எத்தைகைய சூழலாயினும்,பெற்றோர் இல்லாத சூழல் எப்படி சிறந்த சூழலாக இருக்க முடியும்.பெற்றோருடன் குலாவியும்,பிணங்கியும் பின் சேர்ந்தும் சிரித்தும் வாழும் வாழ்க்கையை இழந்து பெறுவது என்ன?

எதற்காக இந்த பயணம்? எதை நோக்கிய பயணம்?

குழந்தைகள்  யாவரும் மருத்துவராக,பொறியாளராக ஆகிவிட வேண்டும்.இதன் மூலம் ஒரு நோயாளி சமூகத்தையல்லவா வேண்டி விரும்புகிறார்கள் இந்த படித்த மேதாவிகள்.
இல்லையென்று மறுத்தால் உங்கள் குழந்தைகளிடம் மருத்துவம் பார்க்க யார் வருவார்கள்.

மெக்காலே தன் குடும்ப கடனை தீர்த்துக்கொள்ள இந்தியாவில் பணியாற்ற வந்தவர்,நமது கல்வி முறையை குழித்தோண்டி புதைத்துவிட்டு மெக்காலே கல்வி திட்டத்தின் மூலம் இந்திய குழந்தைகளின் எதிர்காலத்தை பாழடித்து தன் குடும்பத்தின் செழிப்பை உயர்த்திகொண்டவர்.இந்த கல்விதிட்டத்தை சீரமைக்க வேண்டிய நிர்பந்தத்தை விட,பெற்றோர்களையும் குழந்தைகளையும் மாய உலகத்திலிருந்து மீட்க வேண்டிய அவசியமே  முன் நிற்கிறது.

கல்வியென்பது வாழ்க்கைக்கான அறிவையும், பண்பாட்டையும், முடிவெடுக்கும் திறனையும்,ஒழுக்கத்தையும் கற்பிப்பதாக இருக்க வேண்டும்,அதற்கு சிறந்த இடம் குழந்தையின் முதல் ஆசிரியரான அம்மாவுடன் இருப்பதுதான்.
சிந்தனைகளை அழித்து,வெறும் மனப்பாடம் செய்வது மட்டும் கல்வியல்ல.ஒவ்வொவ்வொரு குழந்தையும் மாபெரும் தனித்தன்மையுடனும்,திறமையுடனும் உருவாகின்றன,அவற்றை போற்றி வளர்க்கமால்,தனித்தன்மையை இழக்க வைக்கும் முயற்சிதான் இன்றைய பள்ளி தேடல்கள்.

வேலை,சம்பளத்தை பொறுத்தே என்ன கல்வி,எந்த பள்ளி என்ற முடிவெடுக்கப்படுகிறது.இதில் குழந்தையின் பங்கு இருப்பதில்லை,இதில் சில பெற்றோர்கள் கூறும் செய்திகள் சற்று அதிர்ச்சியாகவே உள்ளது,குழந்தைகள் வளர்வதற்கு முன்பாகவே  அத்தைகைய பள்ளிகளை பழக்கிவிடவேண்டுமென்றும்,
இல்லையென்றால் நாம் சொல்வதை கேட்க மாட்டார்கள் என்பதுதான் அது....படிப்பு என்பது உறவுகளுடன் இணக்கத்தை, ஒற்றுமையை வளர்ப்பதற்கு பதிலாக இடைவெளியை மனதளவிலும், உடல்ளவிலும் உண்டாக்கிவிடுகிறது,இந்த இடைவெளி சமூக மனிதர்கள் மீதான அக்கறையை,அன்பை குறைத்துவிடுகிறது,நேர்மையும்,ந்டபுறவும் உண்மையாக ஆழ் மனதில் இருப்பதில்லை,தன்நலனை மட்டுமே முதன்மைப்படுத்திக்கொள்ளும் ஒரு சமூகத்தை நாம் உருவாக்கி கொண்டிருக்கிறோம்.
 இத்தைகைய கல்வி, சாமன்ய மனிதர்களை புறம் தள்ளுகிறது,முட்டாள் என் கிறது,நான் யார்? நான் உண்ணும் உணவு எங்கிருந்து வருகிறது? எந்த நதி எங்கு உற்பத்தியாகிறது? என் தேவையென்ன நாட்டின் தேவையென்ன?எந்த கேள்வியும்,அதற்கான தேடுதலும் இல்லாத கல்வி.

பெற்றோர்களே! குழந்தைகள் உங்களிலிருந்து வந்தவர்களேயன்றி உங்களுக்காக வந்தவர்கள் அல்ல என கலீல்  ஜிப்ரான் சொல்கிறார் எத்தனை பெரிய சிந்தனை,எவ்வளவு உண்மை பொதிந்துள்ளது சற்றே சிந்தியுங்கள் பெற்றோர்களே.

குழந்தைகள் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து கொண்டு மாபெரும் மன உளைச்சலில் இருக்கிறார்கள்,இவர்களது கனவுகள் என்ன? இவர்களுக்கு என்ன பிடிக்கும்? யாரவது கேட்டதுண்டா? கேட்டாலும் அதை அனுமதித்தது உண்டா?

தன் விருப்பத்தை அழித்துக்கொள்வது எத்தனை துயரமான நிகழ்வு,இந்த நிகழ்வுதான் வருங்கால சந்ததியினர் பலருக்கு நடக்கிறது.ஆன்மாவின் கனவுகளை அழித்தலும் ஒரு வகை மரணம்தானே.

கவிதை எழுத,புகைப்படமெடுக்க,ஆட,பாட ,சித்திரம்  தீட்ட என எத்தனை எத்தனையோ அரிய திற்மைகள் எல்லாம் முடங்கிதான் போய்விடுகின்றன பங்களா,கார்,ஆசைகளிலும் பெயருக்கு  பின்னால் போடும் படிப்புகளிலும்.

உங்களின் கனவுகளை உங்கள் குழந்தைகள் மீது திணித்து சுமக்க வைப்பது கயமையல்லவா? அதற்காக அவர்களது குழந்தைதன்மையை அழிப்பது எப்படி நியாயமாகும்.

திறமைகள் கூட ஆன்ம மகிழ்விற்காக அவர்களுக்கு ஊக்குவிக்கப்படுவதில்லை என்பது மேலும் ஒரு வேதனை,டிவிக்களிலும்,இன்னும் பிற மீடியாக்களிலும் நாலு பேர் பார்க்க முதலாவதாக வரவேண்டும்.இந்த குதிரை பந்தையத்தை  யார் சொல்லிக்கொடுத்தார்கள்,என் குழந்தை முதலாவதாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை இருக்குமளவுக்கு,என் குழந்தை குழ்ந்தையாக இருக்கவேண்டுமென்ற சிந்தனை பெற்றோருக்கு இருப்பதில்லை.
மாம்பழத்தையும்,ஆப்பிளையும் எப்படி ஒப்பிட முடியும். ஒவ்வொவ்வொரு குழந்தையும் ஒரு வகை.ஒப்பீடு என்பது ஒரு நோய்,தாய்,தந்தை,ஆசிரியர் என அனைவரும் மற்றவரோடு ஓப்பீடு செய்து பழக்கிவிட்டார்கள்.நீ நீயாக மட்டும் இரு என்பதில்தான் தனித்தன்மை இருக்க முடியும். அதை விடுத்து நீ பிறரை போல் இருக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் தனித்தன்மை அழிக்கப்பட்டுவிடுகிறது.
ஒன்பது வயதிலிருந்து பதினாறு வயது வரை பதின்ம பருவம்  (adolescent ) இந்த பருவத்தில்தான் அன்பும்,அரவணைப்பும்,மிதமான கண்டிப்பும்,புரிதலும் தேவைப்படும் நேரம் அந்த பருவத்தில் பெற்றோருடன் இருப்பதே சாலச் சிறந்தது.
எல்லாவற்றிக்கும் மேலாக உடனிருந்து அவர்களின் வளர்ச்சியை,குறும்புகளை,சாதனைகளை,தோல்விகளை கண்டு ரசிக்கவும்,தாங்கிகொள்ளவும்,தேற்றவும் நான் இருக்க வேண்டும்.

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்.
 மழலைச்சொல் கேளா தவர். 

குழந்தைகளை போற்றுவோம்  கல்வியென்பது யாதென்று அறிவோம் நல்ல சமூகம் வளர்ப்போம்.


அன்புடன் -லீலா.

என்னுடைய நீண்ட நாள் சிந்தனைகளை இங்கு பதிவிடும்போது  எழுத்தாளர்  திரு.எஸ்.ரா அவர்களின் சொற்களை பயன்படுத்தியிருக்கிறேன் அவர்களுக்கு எனது நன்றி.




No comments:

Post a Comment