கொரானா என்னும் வைரஸை விடவும், கொடுமையான ஒரு வைரஸ் மனித மனமெங்கும் படர்ந்து கிளைத்து வளர்ந்து கிடக்கிறது.
கொரானா தனிமைப்படுத்தி விட்டதே என புலம்புகிற நாம் இனவொதுக்கல் என்பதை பற்றி புலம்பியிருக்கிறோமா? கவலைப்பட்டுள்ளோமா?
தென்னாப்பிரிக்காவின் இனவொதுக்கலை மாய்ந்து மாய்ந்து பேசுகிற நாம், உள்நாட்டின் சாதிய ஒதுக்கலையும் சிந்திக்க வேண்டும்.
இன்றும், வெள்ளைத்தோல் மீதான மோகம் என்பது படித்தவர் படிக்காதவர் என்றில்லாமல் எல்லோர் மனதிலும் வளர்ந்து கிடக்கிறது.
காரணம் இது ஒரு அடிமையின் மோகம்.
சமீபத்தில் ஒரு திரைப்பட பாடல் கேட்டேன்.
"வெள்ளாவி வச்சுதான் வெளுத்தாகளா, இல்ல வெயிலுக்கு காட்டாமா வளர்த்தகளா"
அதே போல் சிரிச்சி சிரிச்சி வர்றா சீனா தானா பாடலிலும் வெள்ளைத்தோல் பற்றிய வரிகள் வருகிறது.
அங்கவை சங்கவை என்ற பெருமைமிகு இலக்கிய கதாபாத்திரங்களுக்கு கறுப்பு வண்ணத்தை செயற்கையாக பூசி எள்ளி நகையாடிய கொடுமை எந்த படத்தில் நிகழ்ந்தது என்றால், எந்த கதாநாயகனுக்கு,
" கறுப்புதான் எனக்கு புடிச்சா கலரு" என்றும்
"மனங்களின் நிறம் பார்த்த காதல் முகங்களின் நிறம் பார்க்குமோ"
"வெள்ளை மேகம் வண்ணம் மாறி வந்தால் தானே பெய்யும் மாரி"
என்றும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கறுப்பு நம் அடையாளம் என்பதை உரக்க எழுதிக் கொடுத்தாரோ அந்த கதாநாயகன் நடித்தப் படத்தில்தான் அங்கவை சங்கவையின் கறுப்பு நிறம் எள்ளி நகையாடப்பட்டுள்ளது.
இன்னொரு திரைப்படத்தில், கறுப்பு பெண்ணிற்கு வண்ணம் பூசி திருமணம் செய்த பின், குளிக்கும்போது வண்ணம் கரைந்து போவது போல் காட்டி எள்ளி நகையாடி இருக்கிறது.
இந்த சமூகத்திற்கு, இதன் மூலம் சொல்ல வரும் கருத்து என்ன.
ரசிகர்களின் பெயரில் குறையை சொல்லி, இப்படி படைத்தால்தான், படமோ, கவிதையோ, கட்டுரையோ, கதையோ வெற்றி பெறுகிறது என்பது பொய்மையின் வேடம்.
உண்மையில் ரசிகர்கள், வேறுவழியின்றிதான் அதை பார்க்கிறார்கள்.
குறிப்பாக தமிழர்கள் உயர்ந்த ரசனையுடையவர்கள். அவர்களுக்கான தரமான கலைப்படைப்புகளை தர வேண்டியது ஒவ்வொரு படைப்பாளியின் கடமையாகும்.
கறுப்பு என்ற இனவொதுக்கலே தவறு எனும்போது ஆண் கறுப்பாக இருக்கலாம், பெண் கறுப்பாக இருக்கவே கூடாது என்ற ஒரு
உள் இனவொதுக்கலும் கூடவே உள்ளது என்பது இன்னும் வேதனையான செய்தி.
கறுப்பு பெண்ணாக இருந்தால் 50 பவும் கூட போடணும், அப்போ நிறம் காணமல் போய்விடும்.
திரைப்படம், ஊடகம் என அனைத்திலும் வெள்ளைத்தோல் பெண்தான் மனிதபிறவியாக கருதப்படுவதும், அவர்களை போகப்பொருளாக பயன்படுத்துவதும் இன்றைய இளைய சமூதாயத்தினரிடையே பரவலாக வெள்ளையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்துள்ளது.
பேர் அண்ட் லவ்லி யில் காக்காவே வெள்ளையாகிவிடும் அளவிற்கு விளம்பரங்கள் வேறு.
கறுப்பு, வெள்ளை என்ற இன வேற்றுமை யாவரின் மனதிலும் ஒரு வண்டலென படிந்து இருக்கிறது.
சாதி, மத, இன வேற்றுமை கசடுகளை நீக்க சிறந்த கலைப்படைப்புகள் தேவைப்படுகிறது.
பல படங்கள் நிற வேற்றுமையை பற்றி பேச முற்படும்போது, காமெடி தர்பார் ஆகிவிடுகிறது என்பதே பேருண்மை.
ஆனால், யாவற்றையும் தகர்த்து, பல நுட்பமான அவதானிப்புடன் நிற வேற்றுமையை உண்மைத்தன்மை மாறாது காட்டும் திரைப்படம்தான் ஆஸ்கார் விருது வாங்கிய
"கீரின் புக்".
சிறந்த கலைப்படைப்பை தந்த இயக்குநர் பீட்டர் பெர்ரேலி க்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
ஏன் இன்று இதைப்பற்றி எண்ண வேண்டும்.
நேற்று ஜூலை 18 நெல்சேன் மண்டேலா அவர்களின் பிறந்தநாள்.
இங்கு கஸல் கவிஞர் Mohamed Ali Jinna அவர்களின் கவிதையை நினைவூட்ட விரும்புகிறேன்.
#நிறங்கள்
முதன் முதலில்
இரவு பகலென
இயற்கையைப் பிரித்ததே நிறங்கள்தான்...
வருவதும் மறைவதுமே வாழ்க்கை என்பதை
வானவில் வழியே
வந்து சொன்னதும் நிறங்கள்தான்...
நிறமே அடையாளமாக இருப்பது
நேர்மை எனவும்
அடையாளமே நிறமாக இருப்பது
பச்சோந்தி எனவும்
பிரித்துக்காட்டியதும் நிறங்கள்தான்...
காக்கைகளே நம் முன்னோர்கள் எனில்
இறந்த பிறகு எல்லோரும் ஒரே நிறம்தானே என
மூடநம்பிக்கையிலும் முக்தியடைய வைத்தது
இந்த நிறங்கள்தான்...
நிறங்கள் இருப்பதால்தான்
உங்கள் கண்களுக்கு
எல்லாமே தெரிகிறதென
சவால் விட்டதும்...
கண்கள் இருந்தாலும்
காற்றுக்கு என்ன நிறமென
உங்களால் கண்டறிய முடியாதென
சாபம் விட்டதும் இதே நிறங்கள்தான்...
பின்பு
சமாதானத்திற்கு வெள்ளையாகவும்
துக்கத்திற்குக் கருப்பாகவும்
வறுமைக்குச் சிவப்பாகவும்
மங்கள நிகழ்வுக்கு மஞ்சளாகவும்...
மனிதனே நிறங்களைப் பார்த்துப் பிரித்தான்
நிறங்கள் நீளத்துவங்கின...
மனிதனுக்குள் நிறம் பார்த்து பிரித்தான்
நிறங்கள் சுருங்கிக்கொண்டன ...
#ஜின்னா_அஸ்மி
Apartheid என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இன ஒதுக்கலை சீர்திருத்த சுமார் 27 ஆண்டுகள் சிறையில் இருந்த உன்னதரின் பிறந்தநாள்.
நெல்சேன் மண்டேலா அவர்கள் கறுப்பினத்தவருக்காக மட்டுமல்ல, எந்த இன வேற்றுமையும் இருக்ககூடாது என்பதற்காக பாடுபட்டவர்.
தமிழகத்தில், குற்றாலத்தில் குளிக்க ஆதி தமிழர்களுக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்ததைப்போல் தென்னாப்பிரிக்காவில், டர்பன் கடற்கரையில் ஒரு பகுதியில்,
இனவொதுக்கல் கொள்கையின் அடிப்படையிலான ஒரு அறிவித்தல் பலகை வைக்கப்பட்டிருந்தது.
ஆங்கிலம், ஆப்பிரிக்கானர், சூலு ஆகிய மொழிகளில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது
டர்பன் நகரம், டர்பன் கடற்கரைச் சட்ட விதிகளின் 37 ஆம் பிரிவின் கீழ் இந்தக் குளிக்கும் பகுதி வெள்ளை இனக் குழு உறுப்பினர்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. (1989)
தென்னாபிரிக்க அரசால் 1948ல் இருந்து 1998 வரை இருந்த சட்டம் மூலமாக இன வேற்றுமை முறை செயல்பாட்டில் இருந்த காலத்தினை "இன ஒதுக்கல் காலம்" (Apartheid - Era )
என்கிறது வரலாறு.
இனவொதுக்கல் சட்டம், குடிமக்களையும், நாட்டுக்கு வருகை தந்திருப்போரையும், கறுப்பர், வெள்ளையர், இந்தியர், ஆசியர் எனப் பல்வேறு இனக்குழுக்களாகப் பாகுபடுத்தியது. தென்னாபிரிக்கக் கறுப்பினத்தவரின் குடியுரிமை நீக்கப்பட்டது.
1948-1990 காலப்பகுதியில் ஆப்பிரிக்கானரின் ஆதிக்கத்தில் இருந்த அரசாங்கமே இனவொதுக்கலுக்கான காரணம் எனப் பரவலாகக் கருதப்பட்டாலும், இனவொதுக்கல், பிரித்தானியக் குடியேற்றவாத அரசின் நடவடிக்கைகளின் விளைவாகும். பிரித்தானியரால் ஆளப்பட்டதும், வெள்ளையர்களும், பிற நிறத்தவரும் வாழ்ந்த பகுதிகளுக்கு, பழங்குடியினர் பகுதிகளிலிருந்து கறுப்பினத்தவர் வருவதைத் தடுப்பதற்காக கேப் குடியேற்றப் பகுதியிலும், நேட்டாலிலும்19 ஆம் நூற்றாண்டில் உருவான அனுமதி அட்டை முறையே இதற்கான அடிப்படையாகும்.
ஆசியர் பதிவு சட்டம் 1906 ன் படி அனைத்து இந்தியர்களும் பதிவு செய்து, இந்த அனுமதி அட்டையை வைத்திருக்க வேண்டும் என்றது இனவெறி கொண்ட ஆப்பிரிக்க அரசு.
இந்த அனுமதி அட்டையை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். இந்த அனுமதி அட்டை பெண்களுக்கு வழங்கப்படவில்லை.
பெண்களுக்கு அனுமதி அட்டை வழங்க எடுத்த முயற்சிகள் தீவிரமான எதிர்ப்புக்களைச் சந்தித்ததால், 1956 ஆம் ஆண்டுவரை அனுமதி அட்டை முறையில் இருந்து பெண்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இனவொதுக்கலை
சிறு இனவொதுக்கல், பெரும் இனவொதுக்கல் என்று இரண்டாக பிரித்து...
பெரும் இனவொதுக்கல் என்பது தென்னாப்பிரிக்காவைப் பல பிரிவுகளாகப் பிரிக்க எடுத்த முயற்சிகளையும்...
சிறு இனவொதுக்கல் என்பது இனங்களைத் தனித்தனியாகப் பிரித்து வைக்க எடுத்த முயற்சிகளையும் குறித்தது.
பெரு இனவொதுக்கல்தான் தாயக முறையை சட்டமயமாக்கி பாண்டுஸ்தான் எனும் பத்து தாயக பழங்குடிகளை, ஒரே குடிகளாக்கி, ஒரு தாயகத்தை ஒதுக்கினர், அதன் நிலப்பரப்பு அள்வில் மிக சிறியதாகவும், வளம் குன்றியதாகவும் இருந்தது.
வெள்ளை இனத்தவருக்கென எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதியில் வாழ்ந்த கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை பறிக்கப்பட்டது.
பொதுவாகவே, கல்வி, மருத்துவ வசதிகள் மற்றும் பொது சேவைகள் யாவும் பாகுபாட்டுடன் வழங்கப்பட்டது. கறுப்பினத்தவர்களை கூலியாட்களாக தயாரிப்பதற்காகவே அவர்களது பாடசாலைகள் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
பல உடல் ரீதியான சித்திரவதைகள் செய்யப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, விலங்குகளுக்கு கிடைத்த சுதந்திரத்தைக்கூட வழங்கமால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த கறுப்பினத்தவர்களின் விடிவெள்ளிதான்
நெல்சேன் மண்டலா.
அந்த விடிவெள்ளி கறுப்பினத்தவர்களின் ஒளியேற்றிட 27 ஆண்டுகள் சிறையில் அடைந்திருந்து, சுண்ணாம்பு கல் உடைத்தலில் இருந்து இன்னும் பல்வேறு கொடுமைகளை அனுபவித்தது.
இன்றும் தொடரும் இனவொதுக்கல்.
******************************
இங்கிலாந்தில் ஜோக்சயர் என்னும் இடத்தில் உணவு விடுதி வைத்திருக்கும் கறுப்பு இன பெண்மணி தனது கடைக்கு முன்னால் “ நான் கறுப்பு இனத்தவள்தான், நல்ல உணவும் நல்ல சுத்தமான இடமும் தேவையானால் எனது கடைக்கு வரவும். நான் உங்களை கடிக்கமாட்டேன்”
என எழுதி வைத்ததன் மூலம் இங்கிலாந்தில் தொடரும் நிற வேற்றுமையை வெளிப்படுத்தியுள்ளார்.
கறுப்பினத்தை சார்ந்த ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தும் கூட, அமெரிக்காவில் இனவேற்றுமை மாறவே இல்லை, என்பதற்கு கசப்பான சான்றுதான்,
ஜார்ஜ் ஃப்ளோயிட் ( George Floyd) ன் படுகொலை.
இதை தொடர்ந்து இன்ஸ்டாக்ராமில்
கிறிஸ் கெயிலின் பதிவு பரபரப்பை ஏற்படுத்தினாலும், அதில் பொதிந்துள்ள வலி உண்மையானது.
இப்படி நிறவெறி தென்னப்பிரிக்காவில் மட்டுமல்ல, தமிழகத்திலும் நிறைந்துள்ளது என்றால் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.
நிறத்தை, பெயரை, உருவத்தை வைத்து இன்ன சாதியா ? என மறைமுக கேட்கும் கீழ்மை, இங்கு பரவிக் கிடக்கிறது.
இப்படி, உலகின் மூலை முடுக்கெங்கும் நிமிட நிமிடத்திற்கும் ஏதோ ஒரு வகையில் மனிதர்களை கீழ்மைப்படுத்தி ஒதுக்கி வைக்கும் மனபாங்கை வளர்த்துக் கொண்டேதான் இருக்கிறது மனித மனம்.
அறிவியல் உண்மை.
**************************
அந்தந்த வாழ்விடத்திற்கு ஏற்றார் போல் நிறம், முடி, தோலின் தடிமம் போன்றவை இயற்கையால் மனிதர்களுக்கு மட்டுமில்லை, கானுயிர்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.
எல்லா பூக்களும் ஒரே நிறத்தில் இருந்தால் சலிப்பாகி விடும். அதனதன் நிறத்தில் அதனதன் தன்மையோடு இருப்பதும், அத்தன்மையோடு இருக்க அனுமதிப்பதும், ஏற்றுக்கொள்ளலுமே அறிவுடமையாகும்.
கறுப்பு என்று நிறம் பேதம் பற்றிய இரு உரையாடலை கேட்டபோது...
பூக்கள் பூக்க திணறுகிறது
ஒரு பூவை பூத்துவிட
உன் நிறத்தில்.
#கறுப்பு#
- கோ.லீலா.
என்று சில வரிகளை நான் எழுதினேன்.
இன்று தோழர்எட்வின் இரா அவர்களின் கவிதையை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
இருட்டும் இருட்டும்
இருட்டில் கலந்து
இருட்டில் பிறந்த
இருட்டு நான்
இருட்டைத் தின்று
இருட்டைக் குடித்து
இருட்டைக் கக்கி
இருட்டைப் பேள
இருட்டால் துடைத்து
இருட்டால் எடுத்து
இருட்டில் எறிவாள்
என் தாய் இருட்டு
இருட்டை உடுத்தியபடியும்
இருட்டை சுமந்தபடியும்
இருட்டை மிதித்தபடியும்
இருட்டை இழுத்தபடியும்
இருட்டைப் பிடித்தபடியும்
இருட்டைக் கடக்க முயலும்
இருட்டு நான்
இருட்டில்
இருட்டோடு நாங்கள்
நடந்துகொண்டே இருப்பது
எங்கள் பேரப்பிள்ளைகளுக்கான
வெளிச்சத்திற்காக
சன்ன வெளிச்சத்திற்கே
கண்கள் கூசும் எங்களைக்
கிண்டல் செய்யாதீர்
தலைமுறை தலைமுறையாய்
எங்களுக்கான வெளிச்சத்தையும் சேர்த்தே
தின்று வளர்ந்தவர்கள் நீங்கள்
- இரா.எட்வின்.
சாதி,மத,இன,நிற ஒதுக்கலை களைய உறுதிமொழி எடுத்துக் கொள்வதே, இத்தகைய தலைவர்களுக்கு செய்யும் மரியாதை ஆகும்.
கறுப்பு என் அடையாளம் என் பெருமை.
அன்புடன்
- கோ.லீலா.