Sunday, 18 February 2018

வாண்டலுக்கு ஓர் இனிய பயணம்...........


வணக்கம் தோழமைகளே!
நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு பயண அனுபவங்களுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

நீண்ட நாட்களாக வாண்டலுக்கு செல்ல வேண்டுமென ஆசை உள்ளுக்குள் வளரத் தொடங்கியிருந்தது.அதற்கு காரணம் வாண்டலுக்கு 6.5 கி.மீ தூரத்திற்கு முன்னால் இருக்கும் காடம்பாறை வரை அலுவல் காரணமாக செல்ல நேரும் போதெல்லாம் நேரம் காரணமாக வாண்டல் செல்ல இயலாமல் திரும்ப வேண்டியிருந்தது.
மலைக் காட்சி
             
வாண்டல் மிக அழகிய இயற்கைக் காட்சிகளுடன் இருக்குமென எங்கள் ஓட்டுநர் சொல்ல இன்னும் ஆர்வம் மிக. நிச்சயமாக பார்த்து விட வேண்டிய பட்டியலில் வாண்டல் இருந்தது.

உடன் பணியாற்றும் உதவிப் பொறியாளர்களில் விருப்பம் உள்ளவர்களை வரச் சொல்லி முன் கூட்டியே சொல்லிவிட்டேன்.பார்க்காத இடத்தை குறித்தான கற்பனைகள் எப்போதும் விரிந்துக் கொண்டேயிருப்பது இயல்புதானே.வாண்டல் ஒரு திருப்பு சிற்றணையென்றும்,சுற்றி காடுகளும் மலையும் அருவியும் இருக்குமென்றும் சொல்லிவிட்டார்கள்……
பயணத்தின் மீது அலாதியான விருப்பமுண்டுஎனக்கு.

மனதையும்,உடலையும் உற்சாகமடைய செய்வதுடன் உறவுகளை சுமுகமாக்கிவிடும் சக்தியும் கொண்டது பயணம்,எப்போதும் ஜாலியாக அரட்டை அடிப்பதும்,கிண்டல் செய்வதுமாக இருக்கும் நான்,பயணத்தின் போது சற்று அமைதியாகிவிடுவது இயல்பு.தனியாக பயணம் செய்வதில் சற்று ஆர்வமும் உண்டு,அந்நேரங்களில் இயற்கைக்கு என்னை ஒப்புக்கொடுத்து இயற்கையுடன் உரையாடுவது பேரின்பம் அல்லவா.

ஒரு வழியாக தென்மேற்கு பருவ மழை காலத்தின் போது காடம்பாறைக்கு நீர் வரத்து எங்கிருந்து வருகிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டிய ஒரு சூழல் ஏற்பட,அந்த நீர் வரத்து வாண்டலில் இருந்துதான் வருகிறது என அறிந்த பிறகு மகிழ்ச்சிக்கு அளவேது.

ஜூலை மாதம் அந்த மகிழ்வான தருணம் வாய்த்தது.ஆனால் வனத் துறையினரிடம் அனுமதிப் பெற்று செல்ல வேண்டுமென சொல்ல, வனத் துறையை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து  அலுவலக சார்பான வேலையை குறித்து சொல்ல உடனே வனத்துறையை சார்ந்த ஒருவரை எங்களுடன் அனுப்பி வைத்தார்.

மலையருவி மனதுக்குள் சாரலிட,என்னென்ன தகவல்கள் சேகரிக்க வேண்டுமென்று எனது உதவிப்பொறியாளரிடம் பட்டியலிட அவருக்கும் எனது ஆர்வம் தொற்றிக்கொள்ள,எங்களுடன் புகைப்பட கருவியுடன் சிவக்குமார் அண்ணனும் (AGC) உற்சாகமாக கிளம்ப,எங்க லட்சுமியான ஜீப்பை அன்புடன் தட்டிக்கொடுத்து நான்,சிவக்குமார் அண்ணன்,ஓட்டுநர், யாவரும் பயண உற்சாகத்தில் சலசலத்தப்படி பயணத்தை ஆரம்பித்தோம்,வழியில் நம் உதவிப்பொறியாளர் சுமதி மேடத்தை,ஜீப்பில் ஏற்றிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.வழியில் வனத்துறையை சார்ந்த பிரபு என்பவரையும் அழைத்துக்கொண்டு,இடது புறம் ஆழியார் அணையின் நீர்பரப்பும்,மலையும் தொடர,கொண்டை ஊசி வளைவுகளில் மெல்ல ஏறத் தொடங்கினோம்.

ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் வரையாடு அதன் குட்டிகளுடன் விளையாட அதை க்ளிக்கி கொண்டு மீண்டும் பயணித்தோம் 
சில்வண்டுகளின் ரீங்காரமும், மலையை முட்டி முட்டி தழுவி விலகும் மேகங்களும்,,,சூழலை ரம்மியமாக்கின.
வரையாடு குட்டிகள்

மெல்ல அட்டக்கட்டியை நெருங்க,லட்சுமிக்கு சற்று ஓய்வுக்கொடுத்து ஆறவிட்டு,நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையின்  பார்வை முனைக்கு விரைந்தோம்,
மேல் ஆழியாறு அட்டக்கட்டியிலிருந்து

மலை நெல்லியை கைநிறைய எடுத்துக் கொண்டு பார்வை முனைக்கு செல்ல நாவில் நெல்லி இனிக்க,மேற்கு தொடர்ச்சி மலையும், அருவியும் கண்ணில் இனிக்க,சாரல் உடலை பூந்தூரலாய் நனைக்க……. 
அட்டக்கட்டி பார்வை முனை

அய்யய்யோ ஆனந்தமே என மனம் பாட கண்கள் மொத்தமும் விரிய.மேற்கு தொடர்ச்சி மலை எங்களை தாலாட்டி அழைத்தது,சற்று நேரம் அங்கு செலவிட்ட பின்னர்,நேரம் கருதி பிரியா விடைப்பெற்று ஆய்வு மாளிகையை விட்டு வந்தோம்.

 ஜீப் குளிர தண்ணீரும்,நாங்கள்தேநீரும்அருந்திவிட்டு,தின்பண்டங்களுடன்  மீண்டும் பயணம் தொடர,20 வது கொண்டை ஊசி வளைவுக்கு பின் காடம்பாறை மின் நிலையத்திற்கு செல்லும் பாதை வர இடதுப் புறமாக பிரிந்து செக்போஸ்டில் வணக்கம் வாங்கிக் கொண்டு,மீண்டும் வணங்கி விட்டு பயணத்தை தொடர,பொதுச்சாலையை விட்டு விலகி வனத்திற்குள் பயணம் சென்றுக் கொண்டிருந்தது,பெயர் தெரியாத ஆனாலும் மனதை வசியப்படுத்தும் குருவிகள் சிறகினை விரித்து சட் சட் என்று பறந்து கொண்டிருந்தன,கண்கள் வனவிலங்குகளையும்,செடிக் கொடிகளையும் பார்வையில் பதிய விட,மனமோ வாண்டல் பாரதப்புழா வடிநிலமா? பெரியார் வடிநிலமா? என கேள்விக் கேட்டுக் கொண்டேயிருந்தது.
மேற்கு தொடர்ச்சி மலையின் பேரெழில்
                         
அனைவரும்,பயண மனநிலையில் இருக்க,இதைப்பற்றி எப்படி பேசுவதென சற்று அமைதியாக வந்தேன்.சிறிது நேரத்திற்கு பின் வரைப்படத்தை எடுக்கசுமதி மேடம்,என்ன மேடம் என்றார் விஷயத்தைச் சொல்ல,சிவக்குமார் அண்ணன்,மேல் ஆழியாறில்வசதியாக வரைப்படத்தை பாருங்க மேடம்,கடமையுணர்ச்சிக்கு அளவில்லையா  எனச் சொல்ல,சட்டென்று கலகலப்பாகி,காட்டைப் பற்றி பேச ஆரம்பித்தோம்,1960 களில் நடப்பட்ட தேக்கு மரம்,பின்னலிட்ட மாதிரியான ஒரு இலையென வெவ்வேறு திசையில் பேச்சு திசை மாறி பயணிக்க.மேல் ஆழியார் செல்லும் வழி வர,சட்டென்று சுறுசுறுப்பாகினோம்.பின்னலிட்ட மாதிரியான இலையின் சாறை வெட்டு காயத்தில் வைக்க உடனடி நிவாரணம் கிடைக்குமென்றனர்.
                                                 
                                                      பெயர் தெரியாத இலை

















சற்றே ஆரவாரத்துடன் தண்ணீரையும்,அணையையும் கண்டு இறங்கினோம், நானும்,சுமதி மேடமும் அணையில் நீரளவை கணக்கிட்டு விட்டு மெல்ல அணை மீது நடக்க தொடங்க, கடல் மட்டத்திலிருந்து +2525 அடி உயரத்தில் என்ற உணர்வேயில்லாமல் நின்றிருந்த எங்களுக்கு மலையின் அருகாமையும்,உயரமும் பிரமிப்பை தந்தன.அணையைப் பற்றி குறிப்புகள் கேட்க மகிழ்வுடன் சொல்ல ஆரம்பித்தேன்.இந்த அணை 937.89 மி.கன.அடி கொள்ளளவு கொண்டது,கடல் மட்டத்திலிருந்து +2525 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த அணை, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.


மேல் ஆழியார் அணை
    இங்கிருந்து கிடைக்கும் நீர்வீழ்ச்சியை பயன்படுத்தி நவமலை மின்நிலையத்தில் 60 மெகாவாட் மின் உற்பத்தி செய்கிறார்கள் அதன் பிறகு வெளியேறும் தண்ணீர் கீழ் ஆழியார் அணைக்கு வருகிறது.அப்படி வரும் போதுதான் ஆழியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரும்.அதை காண கண் கோடி வேண்டும்.இந்த அணைக்கு வற்றாது நீர் வரத்து இருப்பதால்,திடீரென வரும் வெள்ளத்தை கணக்கில் கொண்டு 54000 கன அடி நீரை உச்ச வெள்ளமாக வெளியேற்ற கட்டமைக்கப்பட்டுள்ளது, அதற்கான உபரி நீர் வெளியேற்றும் இருவழிப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.(SPILL WAY SHUTTER-2Nos).அணையின் நீளம் 315மீட்டர் எனினும் நீர்பிடிப்பு பகுதியின் நீளம் சற்று அதிகம்.அணையின் உயரம் 81மீட்டர் ஆகும்.நீர்பிடிப்பு பகுதி 54.20 சதுர மைல் ஆகும்.
மேல் ஆழியாறு அணை பூனாச்சியிலிருந்து.

 நல்லார் நீரார் நீர் இணைப்பைக் குறித்து பேசிக்கொண்டே உபரிநீர் செல்லும் இடத்திற்கு வந்து விட்டோம்,நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு,பூனாச்சி மின்நிலையம் நோக்கி நடக்க இயற்கை பேரெழில் எங்களை வாரியணைத்துக் கொள்ள,மனம் லேசாகி இருந்தது

பூனாச்சி நுண்மின் நிலையத்தைப் பற்றி சொல்ல வேண்டுமானால் மிகச் சிறிய மின்நிலையம்,எனினும் சிறிதளவு நீரைக் கூட மின்சாரம் எடுக்கவும்,பாசனத்திற்கு பயன்படுத்தவும் நம் முன்னோர்கள் எடுத்துக் கொண்ட அக்கறைக்கு எடுத்துக்காட்டு.
பூனாச்சி மின் நிலையம்.
               
வாட்டர் ஃபால்ஸ் என்ற இடத்திலிருந்து வரும் ஒரு சிற்றருவியின் தண்ணீரை வீணாக்கமால் அதன் நீர்வீழ்ச்சியை பயன்படுத்தி மின்சரம் எடுத்தப் பின் தண்ணீர் மேல் ஆழியார் அணையில் சேருவது போல் திட்டமிட்டு உள்ளார்கள்.நம் முன்னோடி பொறியாளர்களின் தன்னலமற்ற சேவைக்கும், வியப்பிற்குரிய அறிவிற்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்களை சமர்ப்பிக்க பெரும் கடமைப்பட்டிருக்கிறேன்.

பூனாச்சி மின்நிலையத்தின் எதிரில் இருக்கும் பார்வை வளைவில் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். 
பூனாச்சி மின் நிலையம் பார்வை முனை.
             

மேற்கு தொடர்ச்சி மலையின் மடியில் பரந்து விரிந்து கிடந்த நீர் பரப்பு கண்களை கொள்ளையடித்தது. அலுவலகத்திற்கு தேவையான தகவல்களை சேகரித்துக் கொண்டு காடம்பாறை செல்லும் சாலையை நோக்கி ஜீப்பில் விரைந்தோம்.

சாலை பிரிவு.
                              
சிறுதூறல் எங்களுடன் கைக்கோர்த்து கொள்ள,நம் மாநில பறவையான மரகதப் புறா சட் சட்டென்று பறந்துக் கொண்டிருக்க புகைப்படம் எடுக்க முடியவில்லை.கண்ணோடு காண்பதெல்லாம் காமிராவுக்கு சொந்தம் இல்லையென புது மொழி கூற,சற்றே அனைவரும் முறைக்க,
தப்பித்தோமென நல்லப் பிள்ளையாக அமைதியானேன்.
இயற்கையெனும் இளையக்கன்னி.
             வனத்துறை அலுவலர் பிரபுவிடம்,வனத்தைப் பற்றி கேட்க,அவர் சொல்ல ஆரம்பித்தார்,நாம் போகுமிடம்,வால்பாறையில் உள்ள அக்காமலையின் இன்னொரு புறமென்றும்,சின்ன கல்லார் மலையில் சிறு பிளவாகி இம்மலை பிரிந்து நிற்கிறது எனக் கூறினார்.காடம்பாறையை திரும்பி வரும் போது பார்க்கலாமென நான் சொல்ல அனைவரும் ஆமோதிக்க.
             
வாண்டலை நோக்கி செல்ல ஆரம்பிக்க,சாலை குறுகி,இருபுறமும் அடர்ந்த காடு பரந்து விரிந்து கிடக்க,காட்டு மொச்சை பரவி விளைந்திருந்தது
விதவிதமான பறவைகள் ஆலாபனைச் செய்ய,மனம் பறக்க தொடங்கியது
இங்கு என்னென்ன விலங்குகள் இருக்கு என கேட்க,யானை,எல்லாம் இருக்கு என பொதுவாக சொன்னார்.சில் வண்டுகளும்,பறவைகளும் ஒன்றையொன்று முந்த இசை மழையை பொழிய,மலையன்னை தருகின்ற தாய் பால் போல் வழிந்தது வெள்ளையருவி,
தேவியாறு அருவி.
               
அருவியை பருகிடும் ஆசையிலே பறந்தது சின்ன குருவி.தொட்டு தொட்டு பேசும் தென்றல்,விட்டு விட்டு தூறும் சாரல் என அமர்க்களமாக இயற்கையன்னை தனது அழகை காண யாருமில்லையென தைரியத்தில் தன்னழகை தவழவிட்டிருந்தாள்.                                 

எத்தனை எத்தனை பச்சை,இளம் பச்சை ,அடர் பச்சை,இரண்டிலும் அகப்படாத மற்றொரு பச்சையென,வகை வகையாய் பச்சை கம்பளம் விரிந்திருந்தது
வனமகள்.
                  
ரவிவர்மன் அறிந்திடாத வண்ணத்தையெல்லாம் குழைத்து குழைத்து இயற்கையெனும் தூரிகையால் பூக்களிலும்,பறவையின் சிறகுகளிலும், வானின் ஜாலத்திலும் வழியவிட்டப்படி இருந்தாள் 
மஞ்சள் ஆடையில் மலை.
                               
இயற்கையன்னை.இந்த பிரம்மிப்பில் தன் சுயம் தொலைத்து,தான் என்ற அகம் தொலைத்து, இயற்கையின் சிறு குழந்தையென மனம் துள்ள,
கண்டதையும் ரசிக்க வாண்டல் வரப்போகுது எனச் சொல்ல அரை கிலோ மீட்டர் முன்பாக இறங்கி நடந்து செல்ல திட்டமிட்டோம். மெல்ல கண்களும்,மனதும் விரிந்து கிடக்க நடந்தோம் வாண்டல் வந்தாச்சு வந்தாச்சு என உற்சாக கூச்சலிட்டப்படி அனைவரும்கூற,வனத்துறையினர் அந்த சொர்க்கத்தின் கதவுகளை திறந்தனர்.
வாண்டல் நீர்பரப்பு.
 எப்போதும் வனத்தில் அனைவரும் செல்லும் வரை காத்திருந்து தனிமையில் சற்று நேரம் செலவழிப்பது வழக்கம்.
கடல் மட்டத்திலிருந்து +3800 அடி உயரத்தில்.

முதலில் பணி,பின்பே அனைத்தும் என்ற கொள்கையின் அடிப்படையில், திருப்பு சிற்றணை மீது சென்றோம்.அதன் காட்சி முனை கடல் மட்டத்தில் இருந்து+3800 அடி உயரத்தில் இருக்க,உற்சாகமாக உயரத்திலிருந்த பார்வை முனைக்கு சென்றோம்.அங்கிருந்து நீர்வரத்து வருமிடம் பார்த்தோம்….
அது நினைப்பது போல் ஓடையல்ல,ஆர்பரித்துக் கொண்டு மலையை துளைத்து துள்ளி குதித்துக் கொண்டிருந்தது அருவியொன்று,மனமும் துள்ளியது.இங்கேஇருந்தப்படிபுகைப்படம்காணொளி,எடுத்துக்கொண்டு,அங்கு செல்ல முடியுமா என்று கேட்டேன்,போகலாம்,ஒரு அரை கிலோ மீட்டர் அடர்ந்த வனத்தினுள் நடக்க வேண்டுமென்றார்கள்.கரும்புத் தின்ன கூலியா?
வாண்டல் அணையில்.

உடனே சரியென அனைவரும் சொல்ல அதற்கு முன்னர் கேட் வாக் ப்ரிட்ஜ்(Cat walk bridge) சென்று இயற்கை காட்சிகளை அள்ளிப் பருகியப் படி,அலுவலக பணிக்கு தேவையான தகவல்களை சேகரித்துக் கொண்டோம்.
வாண்டல் அணையின் முழு தோற்றம்.
            
ஆழ்ந்த ஆய்விற்கு பின் அக்காமலையாறு பாரதப்புழா வடிநிலமென முடிவுக்கு வந்தோம்.
தகவல்.
             
அக்கமாலையாறு,தேவியாறு ஆகியவை வந்தாலும்,தேவியாறு திருப்பு சிற்றணைக்கு மேலே இருப்பதால் அந்த தண்ணீர் நேரடியாக மேல் ஆழியாறுக்கு சென்றது.அக்காமலையாறு காடம்பாறை அணைக்கு எடுத்து செல்லப்படுகிறது.அளவுக்கு அதிகமான தண்ணீர் வரும் போது சிற்றணை வழிந்து மேல் ஆழியாறுக்கு செல்லும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது.

வனப்பாதையில் அக்கமலையாறு அருவியை நோக்கி நடக்கத் தொடங்கினோம்,யாரும் பார்க்கப் போவதில்லையென்றாலும் தன்னியல்பில் அழகழகாய் பலவண்ணப் பூக்கள் பூத்திருந்தன.


ஒரு வழியாக நீர் வழியும் இடத்திற்கு வந்தோம், மண் புதையுமா போன்ற பாதுகாப்பு கருதி சில செய்திகளை பிரபுவிடம் கேட்டு தெரிந்துக் கொண்டு,”வானத்தில் சில மேகம் பூமிக்கோ ஒரு தாகம் வேண்டும் வேண்டுமெனஎன பாடலை முணுமுணுத்தப்படி, தண்ணீரில் இறங்கினேன்,மன்னிக்கவும் திரவநிலையில் இருந்த ஐஸ் அது,கால் சட்டென்று மரத்துப் போகும் அளவில் குளுமையிருக்க, மனசும், உடலும் சற்றே இலகுவானது,குளுமையின் உச்சத்தில் எங்களையும் அறியாமல் சத்தமிட்டோம்,
அக்காமலையாறு.
               பின்பு மெல்ல நீரினுள் பல ஆண்டு கதைகளை சேகரித்துக் கொண்டு ஒரு ஞானியைப் போல் மௌனித்திருந்த பாறையின் மேல் அமர்ந்துக்கொண்டு,கால்களை தண்ணீரில் அலையவிட்டப்படி சுற்றியிருந்த இயற்கை காட்சிகளை விழிகளால் சுழற்றி சுழற்றி உள்வாங்கி கொண்டிருந்தோம்.சட்டென்று பிரபு வந்து மேடம் நீங்க நிற்கிற இடத்தில்தான் தண்ணீர் குடிக்க புலி வருமென்றார்.
புலி வருமிடம்.

புலியை பார்க்க ஆர்வம் மிக,எப்போ புலி வருமென்றேன்,அய்ய்ய்யோ மேடம் பயப்படுவீங்கன்னு பார்த்தா,புலியை பார்க்கணுமா? முதலில் எல்லோரும் கிளம்புங்க நேரமாயிடுச்சி,புலி வந்திடுமென தாயன்போடு எங்களை துரிதப்படுத்தினார். துள்ளி குதிக்கும் அருவியும்,மொழியற்ற மொழியில் பாடும் குருவியும் பச்சைய மணமாக எங்களோடு கலந்திருந்தது,மெல்ல யாருக்கும் கேட்கமால்,பின்னொரு நாள் உனை பார்க்க வருகிறேன் என அருவியிடமும்,பார்க்க முடியாமல் போன புலிடமும் சொல்லி விட்டு ஜீப்பை நோக்கி நடந்து அனைவருடன் இணைந்துக் கொண்டேன்.
மேல் ஆழியாறுக்கு தண்ணீர் செல்லும் பாதை.
               
மீண்டும் வந்த வழியே பயணம் தொடர,எல்லோர் மனதிலும் பேதமின்றி மகிழ்வும்,அன்பும் நிறைந்திருந்தது.சதா சர்வகாலமும் யாரும் அறிந்திடா வண்ணம் அருவிகளும்,அதில் குளித்து கிடக்கும் பாறைகளும், மரங்களும், குருவிகளும்,கானுயிர்களும்,நமக்கு  வாழ்வை சொல்லிக் கொடுத்த வண்ணமிருக்கிறது,நம் வீட்டின் வாயில்படியில்தான் இந்த வனத்திற்கான பாதை தொடங்குகிறது,நாம் தான் கவனிக்க தவறி விடுகிறோம்.
நேரத்தின் காரணமாக வழியில் இருந்த வெள்ளிமுடியை பார்க்காமல்
இயற்கையின் விரல் பிடித்துக் கொண்டு காடம்பாறை வந்து சேர்ந்தோம், அனைவருக்கும் நல்ல பசி,கையிலிருந்த வேர்க்கடலை, பட்டாணி, பழங்கள், முறுக்கு வகைகள் யாவும்நொறுங்கினபற்களுக்கிடையில்
தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு, காடம்பாறை அணைக்குள் நுழைந்தோம்.
காடம்பாறை அணை.
                                      
ஆகா பேரமைதி,சற்று சலசல்க்காமல் அமைதியாக அமர்ந்து வானை, மலையை, நீரினை பார்த்தப்படி இருந்தால் இப்பிறவிக்கு போதுமானது.அத்தனை அமைதியும், பேரழகும்  எங்கள் நாவினை கட்டிப்போட்டு விழிகளிடம்  விலைப் பேசிக்கொண்டிருந்தன.புத்தகயிடை மயிலிறகென மெல்ல நினைவுகளை வருடிய  சோலைக்காடுகள்.
சட்டென்று மனம் அமைதிக் கொண்டு,நகர வாழ்விலிருந்து விட்டு விடுதலையான பெரும் உணர்வு ஆட்கொண்டது.காடம்பாறை அணையின் முன் பகுதியிலிருந்து வால்பாறைக்கு சாலை இருந்தது,ஆனால் தற்போது பயன்பாட்டில் இல்லைஅந்த சாலை வழி சென்றால் 25கி.மீ தூரத்தில் வால்பாறையாம்.
காடம்பாறை அணை நீரில்.
                                             
எப்போதும் போல் அணைகளை குறித்த தகவல் அனைத்தையும் சேகரித்தோம்.அணையின் கொள்ளளவு 1089 மி.கன.அடி ஆகும்,அணையின் மொத்த நீளம் 788மீட்டர்.அதில் 310 மீட்டர் மண் அணை. மீதமுள்ள 478மீட்டர் masonary  ஆகும்.முதன்முறையாக ஜியோ காம்போஸிட் பயன்படுத்தி நீர் கசிவுகளை குறைத்ததும் இந்த அணையில்தான்.
GEO COMPOSITE


இன்னொரு முக்கிய செய்தி இந்த அணைக்கு மேல் ஆழியாரிலிருந்து உந்தப்பட்டு(pumped) தண்ணீர் வருகிறது,இங்கு பூமிக்கடியில் (underground) மின்நிலையம் உள்ளது சுமார்  கி.மீ தூரம் சுரங்கப்பாதையில் பயணித்தால் மின்நிலையம் இருக்கிறது.4 யூனிட் உள்ளது ஒவ்வொரு யூனிட்டும் 100 மெகாவாட்  உற்பத்தி செய்யும் படி அமைக்கப்பட்டுள்ளது(4x100). கிரிட்டில்(grid) 400 மெகா ஹெர்ட்ஸ் க்கு மேல் உற்பத்தியாகும் மின்சாரத்தை பயன்படுத்தி மேல் ஆழியாறிலிருந்து தண்ணீரை உந்தி மேலெடுத்து வரப் பயன்படுகிறது.மின்சாரம் உற்பத்தி செய்த பின்னர் அந்த தண்ணீர் மேல் ஆழியாறுக்கு அனுப்பப்படுகிறது.
காடம்பாறை மின்நிலையம்.
                                    
without any consumptive use water has been supplied to Lower Aliyar after generating power at Kadamparai and Navamalai power house.This is the brilliance of our great Engineers.we are proud to say that we are successors of those great Engineers,and we are walking on the dam and PH where they walked…….really we are blessed.
தென் ஆசியாவில் இத்தகைய மின்நிலையம் இது மட்டுமே.
காடம்பாறை மின்நிலைய சுரங்கப் பாதை.


 பின்னர்,நீர்வரத்துப் பற்றி விசாரிக்க,வாண்டலில் இருந்தும்,மயிலாடும் பாறையிலிருந்தும் வருவதாக கூறினார் பிரபு.”மயில் ஆடுமோ அப்பாறையில்என்றேன்,லேசாக சிரித்தக் கொண்டு அதோ அங்கே ஒரு சோலைக்காடு தெரியுதில்ல அது என்ன வடிவம் ந்னு சொல்லுங்க என்றார்,அவரவ்ர் தோன்றியதை சொல்ல,நான் நுரையீரல் என்று சொல்ல,தப்பு மேம் என்றார். நல்லாப் பாருங்க மயில் தெரியும் என்றார்.
அட ஆமா,மயிலு என 16 வய்தினிலே கமல் மாதிரி சொல்லிக் கொண்டோம், பின் மயிலோடு புகைப்படமும் எடுத்துக் கொண்டோம்.
மயிலாடும் பாறை.
                                  
அழகு ஆயிரம் உலகம் முழுவதும் என்று முணுமுணுத்துக் கொண்டே திரும்பினால்,கதிரவன் தன் பொன் கரங்களால் நீரிழையில் பட்டாடை நெய்துக் கொண்டிருந்தான்.அடடா என்ன தவம் செய்தேனோ என நினைத்து பூரித்துப் போய் திரும்ப.நாங்கள் நின்ற இடம் கடல் மட்டத்திலிருந்து +3770 அடி உயரம்.எந்த உயரத்தில் இருந்தாலும் சோறு முக்கியம் இல்லையா.அடுத்து குங்குமராஜ் கடையை நோக்கி விரைந்தோம்.


கதிரவன் நெய்த பொன்னாடை.

குங்குமராஜ் ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால் வாங்க வாங்க என வரவேற்றார்.சூடான சோறு,சுவையான மீன் குழம்பு,வறுவல்,முட்டை ஆம்லெட்,மற்றும் சைவ உணவையும் அன்போடு பரிமாற ஆனந்தமாய் புசித்தோம்.குங்குமராஜ்  மிளகு நாட்டுக்கோழியை சுவையாக சமைப்பதில் கெட்டிக்காரர் என்பது கூடுதலான சுவையான தகவல்.நான் ஒரு முறை சுவைத்திருக்கிறேன்.உண்ட களைப்பு தீர அங்கே சிறிது ஓய்வெடுத்து விட்டு ஆழியாரை நோக்கி திரும்பினோம்.

மாலை தனது கவிதையை வான் காகித்த்தில் எழுத ஆரம்பித்திருந்த்து கவிதையோ ஓவியமாய் ஒரு காவியம் படைக்க,கதிரவன்தூரிகையால் வண்ணங்க்களை அள்ளி தெளித்துக் கொண்டிருக்க காமிரவுக்குள் பதிவு செய்து கொண்டேன்.
மாலையின் கவிதை வானில்.

வனத்தேவதையிடம் பிரியா விடைப் பெற்றுக்கொண்டு பொதுச்சாலையை வந்தடைந்தோம்,அட்டக்கட்டியில் தேநீர் அருந்திவிட்டு,அமைதியாய் யாவரும் அவரவர் சிந்தையில் லயித்திருக்க,கொண்டை ஊசி வளைவுகளை கடந்து ஆழியார் நீர்பிடிப்பு பகுதி வர,நமக்காக நம்ம ஆனையார் காத்திருந்தார்.

எடு காமிரவை,என ஓடி போய் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்,யானை மீது தனி விருப்பமுண்டு என்பது ஓட்டுநருக்கு தெரியுமென்பதால், அவசரப் படுத்தமால் காத்திருந்தார்.அனைவரும் ஒரு மனதாய் ஜீப்பிற்கு திரும்ப, சேகரித்த தகவல்களை அதிகாரிகளிடம் எப்படி சமர்ப்பிக்க வேண்டுமென நான் சொல்ல,சுமதி மேடம் குறிப்பு எடுத்துக் கொண்டார்.
அலுவலகப் பணியோடு அறிவும்,மனமும்,உடலும் புத்துணர்ச்சி பெறுவதற்கான ஒரு பயணமாகவும் இருந்தது. விரைவில் வெள்ளிமுடி பயணம்…….. 
நம்ம ஆனை.

நன்றியுடன்


கோ.லீலா.

Monday, 12 February 2018

புத்தக ஒசை

புத்தகப் பக்கங்களை
திருப்பும் ஓசையில்
வேரறுந்த மரத்தின்
அழுகையொலியும்
கூடிழந்த பறவையின்
சிறகசைக்குமொலியும்
ஒலித்த வண்ணமிருக்கிறது.
-கோ.லீலா.

சோளக்காட்டு பொம்மை.



சோளக்காட்டு பொம்மையென எனை
சிலாகித்து கதைச்சொல்வார் யாரும்
நடு வயலில் சுட்டெரிக்கும் வெயிலில்
சட்டி மாட்டிய தலையோடு நிற்குமெனை
கேட்டதில்லை என் கதை என்னவென்று

ஆந்தையோடு அளகும் சோடியாய் அமர
வாகாய் குறுக்கும் நெடுக்குமாய் நடப்பட்ட
மரித்த மரமொன்றின் சீரான கிளை நான்
கதிரவன் கரைந்து மேற்கில் மறையும்
வேளையில் கண்திறக்கும் ஆந்தை
விருப்ப உணவு எலியை தேடிபிடிக்கும்
நெல் திருடும் எலியதை ஒழிக்கும்
எலிப் பொந்து போகும் நெல்லெல்லாம்
உழவனின் பங்கென களம் போய் சேரும்.

படித்தவர் பலர் ஆலோசனை செய்தே
நட்டக் கிளையெனக்கு………….
சட்டை மாட்ட வழிச்செய்தார்
விரித்த கரமோடு நிற்க வைத்தார்.
ஆந்தை வந்தமரும் சீரான கழி நான்
சோளக்காட்டு பொம்மையென
புதுச் சட்டையுடன் அவதாரமெடுத்தேன்
ஆந்தையமர வழியற்று போக
திருடும் எலிகள் கொட்டமடித்தன
எனையும் கூட கடித்துப் போயின
நெல்மணிகள் எலிப்பொந்து போயின
உழவனும் வெந்து போனான்
சொச்ச நெல்லும் மிச்சமின்றி
எலிப் பொந்துக்கே போக
அனுபவ பாட்டன் அருமையாய்
நட்ட எனை பொம்மையாக்கி
அறிவாளி நானென்று அறிவிக்கிறீர்
ஒரே ஒரு சந்தேகம் எனக்கு
மனிதர்களை கண்டு பயக்காத
காகங்கள் சோளக்கட்டு பொம்மை
எனை கண்டு எப்படி பயக்கும்….
பாமர பாட்டன் பொக்கை வாயால்
சிரிக்கிறான் நம் அறிவுக் கண்டு…
நானோ செய்வதறியாது நிற்கிறேன்
-கோ.லீலா

Wednesday, 7 February 2018

சாதி....





சாதிகள் இருக்குதடி பாப்பா
சண்டை மூட்ட பார்க்குமடி பாப்பா
சாய்த்துவிட துடிக்குமடி பாப்பா
அன்போடு ஞானம் நீ பெற்றாலும்
அவைதனில் பின் தள்ளுமடி பாப்பா
பொறாமை தீயில் சாதி மனம்
வெந்து தணியுமடி பாப்பா.
அச்சம் தவிர்த்திடு பாப்பா
அறிவாலே வென்றிடு பாப்பா
சாதி அருகிலே அமர்ந்திருக்கும்
புன்னகைக் கூட பூக்கும்
அயர்ந்தால் பள்ளம் பறிக்கும்
பயந்து விடாதே பாப்பா.
பாய்ந்து முறித்து விடு பாப்பா
படித்தவனும் மூடனாவன்
சாதி என்கையிலே சத்தியம் மீறுவான்
மிரண்டு விடாதே பாப்பா.
கவிதையிலும் கதையிலும்
சாதியில்லையென எழுதும்
கூட்டமொன்று உண்டு பாப்பா
நேரில் உயர்வு தாழ்வு கொள்ளுமது பாப்பா
கவனமாயிருந்து சாதித்திடு பாப்பா
பாரதி வந்தாலும் இதையே
அவர் மொழியில் சொல்லுவார் பாப்பா
தண்ணீருக்கு சாதி மண்ணுக்கு சாதி
மணம்புரிய சாதி காதல் கொய்ய சாதி
வெல்ல  சாதி கொல்ல சாதி
உதவ சாதி சுடுகாட்டிலும் சாதி
இவன் தூவும் பூவிலும் சாதி
இருந்தாலும் அயராதே பாப்பா
எங்குமிருப்பதால் காற்றல்ல பாப்பா
களையவேண்டிய களையது பாப்பா.


-கோ.லீலா.