Sunday, 23 November 2025

சூழலியலில் பனை

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்.

 - திருக்குறள் 104

தமிழர் மரபில் பனை மரம் ஒரு தவிர்க்க முடியாத பகுதியாகும், ஏனெனில் அது வாழ்வின் எல்லா அம்சங்களிலும் பயன்பட்டுள்ளது. பனை மரத்தின் வேர், ஓலை, நார், நுங்கு, பனம்பழம், பதநீர், கள்ளு, கருப்பட்டி போன்ற பல பாகங்கள் உணவு, உடை, வேளாண்மை, எழுத்து (பனையோலைச் சுவடிகள்) என பல தேவைகளுக்குப் பயன்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டின், மாநில மரம் பனை ஆகும்.

1988 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பனை மரம் தமிழ்நாட்டின் மாநில மரமாக அறிவிக்கப்பட்டது.

ஏன் பனை மரம் மாநில மரமாக தேர்ந்தெடுக்கப்பட்டது?

பனை மரம் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார மதிப்பைக் கொண்டுள்ளதோடு, பல்லுயிர் பாதுகாக்கும் தன்மையுடையவை என்பதும், காலநிலை மாற்றத்தை எதிர்க்கொள்ளும் வல்லமை வாய்ந்தவை என்பதோடு, சத்தான உணவுகளையும், தமிழ் நாட்டின் சொத்தான பல தமிழ் இலக்கியங்களையும் தந்த ஓலைகளை ஈந்த மரம் என்பதால் பனை மரம் தமிழ் நாட்டின் மாநில மரமாக அறிவிக்கப்பட்டது.

எல்லை பனை

☘️☘️☘️☘️☘️☘️

காடுகள் முடிந்து மனித வாழ்விடங்கள் தொடங்கிய இடத்தில் பாரம்பரியமாக பனைமரங்கள் நடப்படுகின்றன. அதிக இடைவெளி இல்லாமல் நடப்பட்ட மரங்களின் வரிசைகள், மாமிச உண்ணிகள் மற்றும் யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுத்தன, இதனால் மனித-விலங்கு மோதல் தடுக்கப்பட்டது.

மேலும், அதீத மழை, காற்றுக் காலங்களில் மனித வாழ்விடங்களை காக்கும் அரணாக நின்று, இயற்கை பேரிடர்களை தடுக்கும் தடுப்பான்களாகவும் செயலாற்றின.

இன்றும், திருவாரூர்- நாகப்பட்டிணம் சாலையில் வயல்வெளிகளையும் சாலையையும் பிரிக்கும் எல்லையாக பனை மரங்களை காணலாம்.

விவசாய நிலங்களுக்கு இடையேயும்,நீர்நிலைகளை சுற்றியும் பனைமரங்கள் எல்லையாக நிற்பதை காணலாம்.

பனையின், 120 ஆண்டுகள் நீண்ட ஆயுளைக் கருத்தில் கொண்டு, எல்லைகளைக் குறிக்க மக்கள் அவற்றைப் பயன்படுத்தினர் என்பது தமிழர்தம் தொல்நோக்கு.

இந்திய பனைகள்

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

இந்தியாவில் மட்டும் 106 வகையான பனைகள் உள்ளன. இந்திய பனைகளில் இருந்து கிடைக்கும் நுங்குகளில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதோடு, குறைவான கொழுப்பும்

( பூஜ்ஜியம்), பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம், கால்சியம்,துத்தநாகம், இரும்பு போன்ற அத்தியாவசிய சத்துக்களுடன் மிக குறைவான புரதமும்

இந்திய நுங்கின் உள்ளடக்கமாக இருக்கின்றன.

வெப்ப காலங்களில், உடலுக்கு ஏற்ற நீரேற்றத்தையும் புத்துணர்ச்சியையும் தர வல்லவை. 

பனம்பழத்திலும் 75 சதவீதம் தண்ணீர் உள்ளது.

இவை உடல் ஆரோக்கியம், வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு செயல்பாடு கொண்டவை.

வெப்ப மண்டலத்தில் செழித்து வளரும் பனைகளின் நுங்கின் தண்ணீர் வேர்க்குருவிற்கான மருந்தாகவும், நுங்கின் மேல்தோல் உள்ளுறுப்புகளுக்கு நன்மை தரக் கூடியதாகவும் இருக்கின்றது.

இயற்கை பேரிடர் தடுப்பான்கள்

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

பனை மரங்கள் மிகப்பெரிய காற்றையும் தாங்கி நிற்கும் இது உண்மையா?

கண்கூடாக கண்ட காட்சியும் ஆய்வுகளும் அதை உறுதி செய்கின்றன.

வங்காள விரிகுடாவில் இருந்து அய்ம்பது கிலோ மீட்டருக்குள் இருக்கும் மஞ்சக்கொல்லை, சிக்கல் போன்ற ஊர்களில் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 18 வீசிய கஜா புயலின் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டன.

பெரிய பெரிய கிளைகள் முறிந்து விழுந்தன, பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன, மின் கம்பங்கள் அபாயகரமான சூழலை உருவாக்கி சாய்ந்தன, கேபிள்களோ தரையோடு தரையாக தட்டையாகி போயின, தென்னை மரங்கள் மூன்று நான்காக உடைந்து விழுந்தன. பெரும்பாலான *பனை* மரங்கள் உறுதியாக நின்றன. எப்படி ?

நெகிழ்வே உறுதி

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

காலநிலைக்கு ஏற்ப மீள்தன்மை (Resilience) பெறும் ஆற்றல், பனை மரத்தின் தண்டு ( trunk) பகுதிக்கு உள்ளது... இழைபோன்ற அல்லது நார்ப்போன்ற உள்ளமைப்பைக் கொண்ட தண்டு நெகிழ்ச்சித்தன்மை உடையது என்பதால் பெருங்காற்றுக்கு வளைந்து உடையாதிருக்கிறது. மேலும், மரங்களின் உச்சியில் விசிறி போல் விரிந்து லேசான எடையுடன் இருப்பதால் காற்றை தடுக்கும் ஆற்றலுடன் செயல்படுகின்றன என்பது பனை மரத்தின் தனித்துவம்.

இதற்கு சான்று,  கஜா புயலின் போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள விழுந்த மாவடி கிராமத்தில் ஒரு குடிசையின் பனை ஓலை கூரை எவ்வாறு சேதமடையவில்லை என்பதைக் கவனித்தார். "இது கடலில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இருந்தது. மங்களூர் ஓடுகள் கூட கூரைகளிலிருந்து பறந்துவிட்டன, ஆனால் இந்த பனை ஓலை கூரை பறக்கவில்லை, என்கிறார் கஜா புயலின் போது இவற்றை கவனித்த ஆரோன் டாஸ்.

மின்னலே மின்னலே

⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

மின்னல் பாதுகாப்பிலும் பனை மரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றின் அதிக ஈரப்பதம் மின்னல் தாக்கங்களிலிருந்து மின்சாரத்தை உறிஞ்சி சிதறடிக்க உதவுகிறது. மேலும் மின்சாரத்தை தரையில் பாதுகாப்பாக செலுத்தும் இயற்கை கடத்திகளாக செயல்படுகின்றன. ஒடிசா அரசாங்கம் பனை மரங்களின் நன்மையை உத்தேசித்து மின்னல் தொடர்பான இறப்புகளை குறைக்க 9.1 மில்லியன் பனை மரங்களை நடத்தொடங்கின. இது கடந்த 11 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 4000 இறப்புகளை குறைக்க உதவின.


வேரின் வீரியம்

🌳🌳🌳🌳🌳🌳🌳

ஆழமாகவும், அகலமாகவும் செல்லும் நார்ச்சத்துள்ள வேர்கள் மண்ணோடு பிணைந்து மண்ணரிப்பைத் தடுக்கின்றன.‌மேலும், வேரின் அமைப்பான மண்ணை உறுதிப்படுத்துவதோடு, மண்ணின் ஈரப்பதத்தையும் பாதுகாக்கிறது. அனைத்து வகையான மண்ணிலும், காலநிலை மண்டலங்களிலும் வளரும். வறண்ட பகுதியிலும் வளரும் பனை, ஒரு மண்ணில் விளையவில்லை எனில் அங்கு நிலத்தடி நீரின் நிலை மிக மோசமானதாக இருப்பதை உணரலாம்.

நீர்நிலையை சுற்றி பனை மரங்கள் நடப்பட்டால், மீண்டும் நீர்நிலைகளில் நீரை நிரப்பும், ஏனெனில் வேரின் மய்யப்பகுதி நார் போன்ற அமைப்பு தண்ணீரை சேமித்துக்கொள்ளும், பஞ்சுப்போன்ற அடுக்குகளை கொண்டுள்ளதால், நீர்நிலைகளில், நீர்சுழற்சியில் முக்கியமான பங்காற்றுகின்றன என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பல்லுயிர் ஓம்பும் பனை

🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

பேரிடர் தடுப்பான்களாக மட்டுமல்லாது,  பனை மரங்கள் பல்லுயிர்கள் வாழ்வதற்கான வாழ்விடமாகவும் விளங்குகின்றன.

கழுகுகள், கிளிகள், மயில்கள், கருப்பு அரிவாள் மூக்கன், தூக்கணாங்குருவிகள் உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்களுக்கு வாழ்விடமாக செயல்படுகின்றன.

சூரிய பறவைகள், இந்திய பனங்காடைகள் பனை சுவிஃப்ட்கள், வெள்ளி-மூக்கு பறவைகள், வெண்-மார்பு மீன்கொத்திகள் மற்றும் ஷிக்ராக்கள் குறிப்பாக பனை மரங்களை விரும்புகின்றன. இவை பாம்புகள் மற்றும் உடும்புகள் போன்ற ஊர்வனங்களுக்கும் வாழ்விடமாக உள்ளன.

கரியமில வாயு ஒழுங்காற்றும் பனை

🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚

காலநிலை மாற்றத்திற்கு மிக முக்கிய காரணம் அதீத கரியமில வாயுவின் வெளியீடே.

அத்தகைய கரியமில வாயுவை ( கார்பன் டை ஆக்ஸைட்) உறிஞ்சும் திறனும், கார்பன் தடத்தை குறைக்கும் தன்மையையும் கொண்டிருக்கும் பனை காலநிலை மாற்றத்தை

ஒழுங்காற்றும் பணியில் முக்கிய பங்களிக்கிறது.

இலக்கியத்தில் பனை

✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

சேர மன்னர்களின் குடிப்பூவாக பனை இருந்தது. பனை, போந்தை, பெண்ணை ஆகிய பெயர்களையும் கொண்டிருந்தன.

பனையை மரமென்று அழைத்தாலும் தொல்காப்பியம் பனையை புல்லினம் என்கிறது.

புறக்கா ழனவே புல்லென மொழிப”-தொல். பொருள். 9 : 86

பனையின் விதை Monocot என்பதால், தாவரவியலில் புல், மூங்கில் ஆகியவற்றோடே தொடர்புப்படுத்தப் படுகிறது.

பனையின் பஞ்சு போன்ற நுங்கைப் பாடுகின்றார் திரையன்:

“பாளை தந்த பஞ்சிஅம் குறுங்காய்

 ஓங்கிரும் பெண்ணை நுங்கு”-குறுந் . 293 : 2-3

பனையின் இவ்விருவகைப் பூக்களும் மஞ்சள் கவினிய வெண்ணிறங் கொண்டவை. இவையிரண்டுமே சூடிக் கொள்ளும் வாய்ப்பற்றவை. ஆதலின், பனையின் வெளிய இளங்குருத்து ஓலையைப் பிளந்து, அதன் கூரிய வலப்பக்கத்துப் பாதியைக் குடிப்பூச் சின்னமாகக் சூடிக் கொண்டனர்.

“இரும்பனை வெண்டோடு மலைந்தோன்”-புறநா. 45 : 1

⁠(தோடு-தடித்த பனையோலை)

“. . . . ⁠ . . . . ⁠வளர்இளம் போந்தை

 உச்சிக் கொண்ட ஊசிவெண் தோட்டு”-புறநா. 100 : 3-4

⁠(வளர் இளம் போந்தை-குருத்தோலை)

“மிசையலங் குளைய பனைப்போழ் செரீஇ”-புறநா. 

என இன்னும் பனையோலையென விரிகின்றன இலக்கிய பாடல்கள்.

தமிழர் எழுத்து மரபில் பனை

✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

சங்ககால அறிவை சமகாலத்திற்கு கைமாற்றி தந்ததில் பனையோலைகளுக்கு பெரும் பங்கு உண்டு.

தமிழர்களின் செழுமையான அறிவாற்றலை தாங்கி நின்றவை பனையோலைகளே, இல்லையெனில் தெள்ளுத்தமிழின் சிறப்பிலக்கியங்கள் யாவும் புலவர்களின் நாவில் இருந்து காற்றில் கரைந்து போயிருக்கும்.

தமிழர் தம் எழுத்து மரபு தனித்துவமானவை, அறிவியலும், வெளியும், காலமும் சரியாக அமைந்த ஞான வெளிபாடுகள் தமிழர்தம் எழுத்து.

அத்தகைய தமிழ் எழுத்து மரபுகள் பனை வேரென பனையோலைகளால் தமிழர்களோடு பிணைந்தவை.

தமிழுக்கு செழுமை சேர்த்த திருக்குறள், தமிழ் இலக்கண இலக்கியங்கள் யாவற்றையும் பாதுகாத்து தந்தவை பனையோலைகளே.

தமிழர்தம் பானம் முதல் பனைப்பெட்டி, பாய்,கடகம் என  தமிழர்தம் வாழ்வியல் மரபில் இரண்டற கலந்து தோய்ந்த பனை இன்று தமிழர்களின் நினைவுகளில் மட்டுமே வாழும் அளவிற்கு, கலாச்சார மற்றும் சமூக சூழல் மாற்றங்களால், ரியல் எஸ்டேட், தொழில்துறை விவசாயத்திற்கு பயனற்ற ஒன்றாக கருதப்பட்டு  அழித்தொழிக்கப்பட்டுள்ளன. தமிழர்தம் வரைவியலோடும், இலக்கியத்தோடும், நிலவியலோடும் பொருண்மை மரபிலும் கலந்து நிற்கும் பனை, தமிழர்களின் உணர்வோடு நீண்ட நெடிய உறவினை கொண்டுள்ளது.

பனைகளை பாதுகாத்து சூழலியலையும், தமிழர்தம் தன்சார்பு வாழ்வியலையும் மீட்டெடுக்க பனையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயலாற்ற வேண்டியது நம் கடமை ஆகும்.

அன்புடன் 

- கோ.லீலா



Sunday, 9 November 2025

பல்லுயிர்_போற்றிய_பழந்தமிழர்



மார்கழியில் மண்ணும் குளிரும்

தையில் தரையும் குளிரும்

மாசியில் மச்சை குளிரும் என்பது நம் தமிழரின் வாய்மொழி வானியல் அறிக்கை. 


பனியிருந்தால் மழையிராது என்பதும் அவர்தம் கூற்றே.


ஊட்டி, அவலாஞ்சி, ஆகிய இடங்களில் மேற்பரப்பு நீர் உறைந்துள்ளன, காஷ்மீரில் பனிமழை, திருச்சியில் குளிரோ குளிர் என தரையெல்லாம் குளிர்கிறது தையில்.


தமிழர்களின் வானியல் அறிவை கண்டு வியந்தவர்கள் மேலை நாட்டினர்.

 இத்தகைய வானியல் அறிவை கொண்டு, அறுவடை காலமாக தை மாதத்தை முடிவு செய்து விவசாயத்தை திட்டமிட்டுள்ளனர்.

தை இலையுதிர் காலத்தின் ஆரம்ப காலம் என்பதால் அதற்கு பிறகு அறுவடை காலத்தை நிர்ணயித்தால் நெல்மணிகள் என்னவாகும்? என்பதை அறிந்தவன் தமிழன்.


மூவாயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்பே மலரின் மாண்பை அறிந்தவன் தமிழன்.


நீரில் மலரை இட்டு வணங்குவதும், கோலத்தின் நடுவில் பூசணி பூ வைப்பதும் தமிழர் மரபு.


தமிழர்தம் வாழ்வில் பிறந்தது முதல் இறப்பது வரை பூக்கள் இல்லாத நிகழ்வுகளே இல்லை.

பெண்ணின் பருவநிலையில் ஒன்றை குறிக்க பூப்பெய்தல் என்று சொல்லும் வழக்கமும், அச்சொல்லின்‌ பின் விரியும், உள்ளடக்கமும் வாழ்வியல்.

பூ மலர்ந்த பின்னே காயாகி, கனியாகி விதைகள் பரப்பி இனம் பெருக்கும் தாத்பரியத்தை சுமந்த சொல்தான் பூப்பு என்பது.


தமிழரின் வாழ்வில் பூக்கள் ஏன் முக்கியத்துவம் பெற்றன?

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


பூக்களின் நறுமணம் மனநிலையை சாந்தப்படுத்தக் கூடியது, இதை Aroma therapy என்கிறது, நீண்ட ஆராய்ச்சிக்குப்பின் மேலைநாடுகள்.


கோலத்தின் நடுவில் சாணியில் பூசணி பூ, செம்பருத்தி பூவை செருகி வைத்தால் பனிக்காற்றில் நறுமணம் கிருமிநாசினியாக செயல்படும் என்று அறிந்திருந்தான்‌ தமிழன்.


அதனால்தான், அதிகாலையில் கோலமிட்டனர் (இரவில்‌அல்ல)


ஆனால், தமிழர்களோ காதல், போர், வெற்றி, திருமணம் என ஒவ்வொரு நிகழ்வும் பூக்களை கொண்டே கொண்டாடி இருக்கிறார்கள்.


ஒரு ஆண் பெண்ணிற்கு தன் காதலை, அன்பை தெரிவிக்க பூக்களை வழங்குதல் இயல்பு...

பெண் சூடினால் விருப்பமென அறியவும் வகையாயிற்று.


வெட்சி, கரந்தை,வஞ்சி,நொச்சி/உழிஞை என புறபொருள் பாடலுக்கும் பூக்களே முக்கிய பங்கு வகுத்து இருக்கின்றன.


*#பொழுதும்_போதும்*

💐💐💐💐💐💐💐💐💐💐


மரங்களை பெருக்குவது மலர்களே என்பதுணர்ந்து, மரங்களை போற்றி, மலர்களையும் அறிவியல் பூர்வமாக பயன்படுத்தி கொண்டாடி இருக்கிறார்கள்.

சிறுபொழுது, பெரும் பொழுது போன்றவைகளை மலர்களை கொண்டும், பறவைகளை கொண்டும் கணித்திருக்கிறார்கள்.


கன்னல் என்னும் இயந்திரம் மூலம் நேரத்தை கணித்துள்ளனர்.

வட்டிலில் தண்ணீர் விட்டு, சிறு சிறு துளியாக வழியவிடும் அமைப்பைக் கொண்டு நேரத்தை கணித்துள்ளனர். இந்த இயந்திரத்தை #குறுநீர்க்கன்னல் என்றும், நாழிகை கன்னல் என்றும் அழைத்துள்ளனர்.


நீருக்கு பதிலாக மணல் வட்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.


உயர்குடி பெண்களும், சாமானிய பெண்களும் பொழுதை அறிய மலர்களைதான் பயன்படுத்தி உள்ளனர்.


சில மலர்களின் மலரும் நேரம்.


தாமரை சூரிய உதய நேரம்


செண்பகம் காலை 6-7 மணிக்கு இடையில்.


அந்திமந்தாரை மாலை 4-5 மணிக்கு இடையில்


முல்லைப்பூ/பிச்சிப்பூ, வாழைப்பூ, பிடவ மலர், பீர்க்கம் பூ மாலை 5-6 மணிக்கு இடையில்.


பவளமல்லிகை மாலை 6-7 மணிக்கு இடையில்


மல்லிகை மாலை 7-8 மணிக்கு இடையில்.


நெடுநல்வாடையில் மலர்களின் மூலம் பொழுதை அறிந்தது குறித்த குறிப்புகளும் உள்ளன.


வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோள்;


மெத்தென் சாயல்; முத்துறழ் முறுவல்; பூங்குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக்கண்; மடவரல் மகளிர் பிடகைப் பெய்த செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து அவ்விதழ் அவிழ்பதம் கமழப் பொழுது அறிந்து இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொலீஇ நெல்லும் மலரும் தூஉய்க் கைதொமுது மல்லல் ஆவணம் மாலை அயர:


இப்படி மலர்களோடு மனம் மலர்ந்திருந்த பெருவாழ்வு தமிழருடையது.


செல்வந்தராக வாழ்ந்த சங்கத் தமிழச்சிகள் நான்காது அடுக்ககத்தில் இருந்தபோது பகல் எது இரவெது என அறியமுடியாத கார்கால பொழுதுகளில், மலர்வதற்கு முன்பாக பறிக்கப்பட்ட முல்லை மொட்டுகளை, மல்லிகை மொட்டுகளை பச்சை இலையில் பரப்பி வைத்து விடுவார்கள், மலர்ந்து மணம் வீசத் தொடங்கியதும் மாலை வந்தது என அறிந்து விளக்கை பொருத்தும் வழக்கத்தை கொண்டு இருந்திருக்கின்றனர்.



சாதாரண குடிமக்கள் வீட்டு வாழ் பெண்கள், அடர் இருள் பரப்பும் கார்காலத்தில் பீர்க்கம் பூ மலர்வதை கொண்டு மாலை பொழுதறிந்து இருக்கின்றனர். 

பறவைகளையும், பூக்களையும் காலச்சுட்டியாக சங்கத்தமிழன் அறிந்து பயன்படுத்தும் அறிவார்ந்த தொன்மைக்கு சொந்த க் காரர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.


இரவெது பகலெது

அறிய ஒளிவிடாது

முகில்மூடி மாரிபெய்ய

குரீஇ குரலெழுப்ப

பகலென அறிய

ஆனைசாத்தன் 

மூன்றுக்கு கீச

குயில் கூவ நான்காக

நாலரையில் சேவல் கூவ

கா.. கா வென அய்ந்தாக

அய்ந்தரைக்கு கவுதாரி

சிரல் குரலெழுப்ப ஆறு

என்றறிய...

குமுதம் மலர்ந்ததே

கதிரெழுச்சியென கண்டு

சுழலும் நாளில்

பிடவ மலரிதழ் விரிய 

காலை கவிழ்ந்து

மாலை தொடர் இரவென

உரைப்ப...

கடிகாரமின்றி காலம் செப்பும் 

பூவிதழ் விரிவும் குரீஇ மொழியும் 

அறிய செய்தாய்..

பெய்க வானமே !


- கோ.லீலா

*#வரையாட்டின்_குளம்படிகள்* கட்டுரை நூலில் இடம் பெற்றிருக்கும் என் கவிதை.


யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வாழ்ந்த தமிழ் இனம் நமது.

யாவரும் என்பது உலகத்து மக்கள் எல்லாம் என்பது பாதிதான் உண்மை.

முழு உண்மை என்ன? 

இப்பூமியில் வாழும் அனைத்து உயிரினமும் எனது உறவு என்ற மேன்மையான பண்பாட்டோடு வாழ்ந்தவன் தமிழன். எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காது வாழ்ந்த இனம் தமிழ் இனம்...


தமிழர்களின் இறை என்பது சிலைகளோ உருவங்களோ அன்று.


இயற்கையை தொழுதவன் தமிழன். அவித்த உணவை படைத்து வழிபடும் வழக்கம் தமிழனுக்கு கிடையாது என்பதை புறநானூறு இவ்வாறு பதிவு செய்து இருக்கிறது.


ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி

ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்

கல்லே பரவின் அல்லது

நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே (புறநானூறு 335)


ஒத்துப் போகாத பகைவர்களை (தெவ்வர் = பகைவர்) எதிர்த்து, முன் நின்று தடுத்து ஒளியுடைய, உயர்த்திய தந்தங்களையுடைய யானைகளைக் கொன்று விட்டு வீழ்ந்தவர்களுக்கு நட்ட கல்லைத் தான் நாங்கள் வழிபடுவோம். நெல்லைத் தூவி வழிபடும் வேறு கடவுள் எதுவும் எங்களுக்குக் கிடையாது என நடுகல் வழிபாட்டின் சிறப்பினைக் கூறுகின்றது.


சங்கத் தமிழனின் நீட்சியாக வாழ்ந்த ,வாழ்கின்ற பெருங்கவிஞர்களும், சித்தர்களும் இறைத்தன்மையை ( இறைவனையன்று)

பாடியிருக்கின்றனர்.


நட்ட கல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே சுற்றி வந்து மொண மொணென்று சொல்லு மந்திரம் ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்? 

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ? சித்தர் சிவ வாக்கியார் என்ன சொல்ல வருகிறார்?


மனிதனுள் இறைத்தன்மை ( நாதன்) அதாவது அன்பு, கருணை, இரக்கம், அமைதி, நித்ய பேரின்பம்,மரியாதை, மதித்தல், வீரம், விவேகம் போன்ற குணநலன்களே இறைத்தன்மை ( Godliness) என கருதப்படுகிறது.


இவையெல்லாம் இல்லாது, பிறர் மனம் நோகும்படியான செயல்களை செய்துவிட்டு நட்டக்கல்லிற்கு பூ சூட்டி மந்திரம் ஓதுவதால் நீ இறைவனை காண முடியாது, கறியின் சுவையை கரண்டி அறிய முடியாதோ அப்படியானதுதான் உள்ளத்தை தூய்மையாக்காது கல்லை வணங்குதல் என்கிறார் சிவவாக்கியார்.


சாணிக்கு பொட்டிட்டு

சாமியென்பார் செய்கைக்கு

நாணி கண்ணுறங்கு ! என்கிறார் பெண் குழந்தை தாலாட்டில் பாவேந்தர் பாரதிதாசன்.


இதன் மூலம் அறிய வேண்டியது பல்லுயிர் போற்றிய, பண்பாடு செறிவு மிக்க அறிவார்ந்த இனம் தமிழினம் என்பதே !


அன்புடன்

பொறிஞர். கோ.லீலா

சூழலியல் எழுத்தாளர் 

தமிழ் நாடு

Saturday, 6 September 2025

அறிவுசார் சொத்துரிமை

 

Intellectual Property Rights என ஆங்கிலத்திலும் அறிவுசார் சொத்துரிமை என தமிழ்நாட்டிலும், புலமைச் சொத்து என இலங்கையிலும் வழங்கப்படுகிறது.


அறிவுசார் சொத்துரிமை என்பது, அந்தந்த மண்ணில் உருவாக்கப்பட்ட நிலம்சார் வாழ்வியல் பதிவுகள், கலை இலக்கிய படைப்புகள், அந்தந்த நிலப்பகுதியில் மட்டுமே விளையக்கூடிய பிரத்யேக பயிர்கள், தானியங்கள், பாரம்பரிய அறிவு சார் மருத்துவ குறிப்புகள் போன்ற இன்னும் பலவாகும்.


எடுத்துக்காட்டாக, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சை ஓவியம், தஞ்சாவூர் தட்டு, தஞ்சாவூர் மல்லி, வேப்பம், மஞ்சள், ஓலைச்சுவடிகள், மண்சார் இனக்குழு தலைவன், தலைவிகளின் சிற்பங்கள் ( மதுரை வீரன், கருப்பண்ண சாமி, முருகன், பெரியநாயகி அம்மாள், பொம்மி போன்ற சிற்பங்கள்...), சிதம்பர நடராசரின் நடன சிற்பம், மர சங்கிலி, கல் சங்கிலி, யாளி, அக்காமலை க்ராஸ் ஹில் ஒன்றையொன்று விழுங்குவது போன்ற ஓவியங்கள் என பல தனித்தன்மை வாய்ந்த கலைகள், உணவு வகைமைகள், செடிகள், என ஒவ்வொன்றுக்கும் அந்தந்த நிலத்திற்குரிய அறிவுசார் சொத்துரிமை அந்தந்த மண்ணிற்கு உரியவருக்கே உண்டு அதாவது அந்தந்த அரசு நிறுவனங்களுக்கே உரிமை, அந்த உரிமையை மீறியோ அறியாமலோ பிற நாட்டிற்கோ, நாட்டு மக்களுக்கோ விற்கவோ, அறிவுசார் சொத்துரிமையை வழங்கவோ அரசு தலைபட்டால், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அவற்றை தட்டிக் கேட்க உரிமை உண்டு.


பொதுவாக உலக அளவில் அங்கீகரிக்கப்படும் அறிவுசார் சொத்துரிமைகளில், காப்புரிமை, பதிப்புரிமை, வணிகச் சின்னம், படைப்புரிமம், புவிசார் குறியீடு, வணிக இரகசியம் ஆகியவையும் அடங்கும்.


தொட்டு உணரக்கூடிய சொத்து, தொட்டு உணர முடியா சொத்து என இரு வகையாக இச்சொத்துக்கள் இருக்கின்றன.


தனிமனித அறிவுசார் சொத்துரிமை, பொதுவுடமை அறிவுசார் சொத்துரிமை என அதிகாரம், பதிவுபெறல், பாதுகாத்தல், பயன்படுத்துதல், என்பதின் அடிப்படையில் சிறுசிறு மாறுபாடுகளை கொண்டுள்ளன.


இனக்குழு சமூகமும், சொத்து உடைமை சமூகமும் சமகாலத்தில் இருப்புக் கொண்டிருந்த காலத்தில் விளைந்த சில வாழ்வியல் இலக்கியங்கள், ஆணைகள், கலை படைப்புகள் ஆகியவை பொதுவுடமை சொத்துரிமைக்கு உரியனவாக பெரும்பாலும் இருக்கின்றன.


இனக்குழு சமூகம் என்பது ஆதிகால பொதுவுடமை சமூகமாகவும், சொத்துடைமை சமூகம் என்பது அரசு நிறுவனங்கள் தோன்றிய பின் உருவான சமூகமாகவும் கொள்ளலாம்.

இவ்விரண்டும் சமகாலத்தில் இருப்பு கொண்டிருந்த பொழுது விளைந்த #திருக்குறள் #தொல்காப்பியம் போன்றவை அந்தந்த நாட்டின் பொதுவுடைமை அறிவுசார் சொத்துரிமைக்கு உரியதாகும்.


அயோத்தி தாசரின் பாட்டனார் கந்தசாமி அவர்கள் ஆரிங்டன் துரையிடம் சமையல் கலைஞராக பணியாற்றிய போது, அடுப்பெரிக்க வந்த ஓலைச்சுவடிகளை, அவர் ஆரிங்டன் துரையிடம் கொடுக்க, அவர் தனது நண்பரான, தமிழில் செய்யுள் வடிக்கும் அளவிற்கு தமிழை கற்றறிந்த எல்லீஸ் துரையிடம் கொடுக்க திருக்குறள் எனும் உலக பொதுமறை உலகிற்கு கிடைத்தது. 


எல்லீஸ் துரையின் பெயரில் சென்னையில் வீதிகளின் பெயர் உண்டு. எனினும் எல்லீஸ் துரை #திருக்குறளின் அறிவுசார் சொத்துரிமையை கொள்ள இயலாது. அவரும் அதை கோரவில்லை.


இவ்வாறு பல்வேறு இலக்கியங்களும், மருத்துவ குறிப்புகளும், கலைவடிவ சிற்பங்கள், ஓவியங்கள் வழியே அடுத்த தலைமுறைக்கு விட்டு சென்ற அறிவியல் உண்மைகளை பாதுகாக்க வேண்டியது அந்தந்த மண் சார் மக்களின் பெருங்கடமை யாகும்.


சூழலியல், அறிவியல், நாத்திகம் என எழுதும்‌ ஒரு எழுத்தாளருக்கு ஏன் சட்டென அறிவுசார் சொத்துரிமை சட்டம் குறித்தும், வரலாறு, சமூகவியல், தொல்லியல், வேளாண்மை, கலை இலக்கிய படைப்புகள் குறித்தான சிந்தனை வந்திருக்கிறது என்றொரு கேள்வி எழும்.


முதல்தர மாணக்கர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று சட்டம், மருத்துவம், பொறியியல்,

மேலாண்மை போன்று படித்து விட்டு, உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ தொழில்சார் வல்லுநர்களாக இருந்து விடுகின்றனர்... அவர்களின் கண்டுபிடிப்புகளுக்குரிய உரிமத்தை மட்டும் பெற்றுக்கொள்வார்கள்.


ஆனால், வரலாறு, தொல்லியல், இலக்கியம் படித்தவர்கள், ஆளும் அதிகாரம் கொண்டவர்களின் துணையோடு பல்வேறு வரலாற்று மாற்றங்களை செய்து, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின், நாட்டின், இனத்தின்‌ கலாச்சார பண்பாடு, கலை இலக்கியங்கள், மருத்துவம் மற்றும் பல அறிவுசார் சொத்துகளின் காலகிரமங்கள், உரிமை ஆகியவற்றை மாற்றி விடுகின்றனர்.


திருவள்ளுவர் நாயனார் என்று சிறுவயதில் படித்த நினைவுண்டு, ஆனால் இன்று மலேசியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் சில கூட்டங்கள் திருவள்ளுவரை சமயமுனி‌ என பரப்பி வருகின்றன.


திருக்குறளில் இல்லாத கடவுள் என்ற சொல்லை முதல் அதிகாரத்தின் தலைப்பாக வைத்துள்ளனர்.


தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து என்பது மூலப்பிரதியில் இருந்ததா? இருக்கிறது எனில் அதில் எதை அல்லது எந்த கடவுளரை வழிப்பாடு செய்ய சொல்கிறார், இடைச்செருகல்கள் என்னென்ன?


திருக்குறளிலோ, தொல்காப்பியத்திலோ, கீழடி, சிந்து சமவெளி நாகரீகத்திலோ, இடைச்செருகல் மற்றும் காலகிரமங்களை மாற்றுதல் போன்றவற்றை  practicing Lawyers, Doctors, Engineers, Gombass கள் செய்யவில்லை. மாறாக வரலாறு, தொல்லியல், இலக்கியம், ஆன்மீகம் போன்றவற்றை படித்தவர்களே வரலாற்றுப்பிழைகளை திட்டமிட்டு அரங்கேற்றுகின்றனர்.


அதை, நுட்பமாக ஆழ்ந்து அகழ்ந்து நோக்கினால், அவரவர் நாட்டு பெருமை, கலாச்சாரம், பண்பாடு, சாதி, மொழியை  தூக்கி நிறுத்தும் நோக்கில், அறிவுசார் சொத்துரிமைக்கு சகல உரிமை உடைய மண்ணின் மாண்புகள், வாழைப்பழ ஊசியாக, மிக தேர்ந்த சொற்களால் கீழ்மைப்படுத்தப்படும்.


இந்த குழு அல்லது கூட்டத்தில் பெரும்பாலும், புலம்பெயர்ந்த மக்கள் பெருவாரியாக இருப்பர்.


அருமை தெரியாமல் விற்றால் நாங்கள் வாங்குவோம் அதில் என்ன தவறு போன்ற சிறுபிள்ளைத்தனமான பொறுப்பற்ற பேச்சையும் பேசுவார்கள்.


ஒரு நாட்டின்‌ ராணுவ ரகசியத்தை ஒருவன் அறமின்றி விற்கிறான் என்றால் அவன் தேசத்துரோகி, அவனிடமிருந்து அதை விலைக்கு பெறுபவன், பெரும் கொள்ளைக்காரன் மட்டுமல்ல, அறமற்றவன் இல்லையா? பெருங்குற்றவாளி இல்லையா ?


அப்படிதான், ஓலைச்சுவடிகளை, நடராஜர் சிலைகளை, ஐம்பொன் சிலைகளை அரசுக்கும், நீதிக்கும்‌ தெரியாது விற்பது தேச துரோகமெனில் , அதை வாங்குவதும் குற்றமே.


கஞ்சா விற்பதும் வாங்குவதும் குற்றம், லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் அதே போல்தான் ஒரு நாட்டின் அறிவுசார் சொத்துகளை , விற்பதும், வாங்குவதும் குற்றமே ?


கஜினி முகமது பதினெட்டு முறை ( உண்மையில் 17 முறைதான் படையெடுத்தார்) இந்தியாவை நோக்கி படையெடுக்க காரணம்‌ என்ன?


இந்தியா கலைச்செல்வமும், இலக்கியமும், அருட்செல்வமும், பொருட்செல்வமும், ஞானச்செல்வமும், வேளாண் அறிவும், நீர் மேலாண்மையும், கட்டிட அறிவும், நெசவு என பல தளங்களில் விரிவான ஆழமான அறிவை கொண்டிருந்த நாடு என்பதால்தான், பல மன்னர்களால் பல முறை படையெடுப்புக்கு உள்ளான நாடு.


மிளகு வாங்க வந்தவன்தானே நம்மை அடிமையாக்கி ஆண்டான்.


அப்படிதான், நவீன யுகத்திலும் மின்மயமாக்கி தருகிறேன், சேமிக்கிறேன், பாதுகாக்கிறேன் என்றெல்லாம் புன்னகையோடு ஊடுருவும் அந்நிய சக்திகளை நாம் இனங்கண்டு ஒதுக்க வேண்டும்.


முதலில், நம் நாட்டின் அறிவுசார் சொத்துரிமை உடையவற்றை முதலில் முறையாக பதிவு செய்தல் வேண்டும்.


அறிவுசார் சொத்துரிமையின் விரிவாக்கம், வளர்ச்சி, முக்கியத்துவம், நோக்கம், நன்மைகள், பாதுகாப்பிற்கான தேவை, அவற்றை பாதுகாக்க வரையறுக்கப்பட்டுள்ள சட்டங்கள் குறித்தும், அறிவுசார் சொத்துரிமைகளை‌ Memorandum of Undetanding ( MoU) அரசு சாரா உள்நாட்டு நிறுவனங்கள், அரசு சாரா, இந்திய குடியுரிமை உள்ள / இந்திய குடியுரிமை இல்லாத உறுப்பினர்கள் / தலைவர்களை கொண்ட அந்நிய நாட்டு அமைப்புகளுக்கு வழங்கும்படும் போது, பின்பற்றப்பட வேண்டியவை, கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னென்ன? என்பதை நாளை பார்ப்போம்...


அது சரி ! ஓலைச்சுவடிகளை, கல்வெட்டுகளை சேகரிக்கவும், வாசிக்கவும், பாதுகாக்கவும், அவற்றை மின்மயமாக்கவும்,

தமிழ்நாட்டில் பிறந்து, வாழும் குடியுரிமையுடன் தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழன் ஒருவர் கூட  ஓலைச்சுவடிகளை வாசிக்கும் பெரியோர்களும், மின்மயமாக்க தெரிந்த தொழில்நுட்பம் பயின்று தேர்ந்த இளைஞர்களும் இல்லையா என்ன?


என்ன கூத்து இது? வைத்தீஸ்வரன் கோயிலில் வரிசையாக நாடி ஜோதிட சென்டர்களில் இருப்பவர்கள் ஓலைகளை வாசிக்கிறார்களே ! இதை குறிப்பிடும் போது மிக ஏளனமாக தோன்றலாம். ஒன்று வாசிப்பது உண்மை எனில் அவர்களை பயன்படுத்தி அறிவுசார் சொத்துகளில் என்ன உள்ளது என அறியலாம். திருக்குறள் போல் பல பொக்கிஷங்கள் கிடைக்கலாம்.

மருத்துவ குறிப்புகள் கிடைக்கலாம்



இல்லை அவர்கள் பொய்யாக வாசிக்கிறார்கள் எனில், அவ்வகவு கடையை நடத்த அனுமதிக்கலாமா?


இது பொய் என சொல்வார்கள், என்பதால் காஞ்சீபுரத்தில் அகத்திய நாடி ஜோதிடத்தில், 2002 ல் ஓலைச்சுவடி பார்க்க சென்றோம் ( எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்பது தனிக்கதௌ)


கைரேகையை பெற்றுக்கொண்டு மறுநாள் வரச்சொன்னார்கள் என சென்றோம், ஒரே ஒரு கட்டில் ஒவ்வொரு ஓலையாக வாசித்து, அத்தன் ( அப்பா) பெயரும், அம்மை ( அம்மா) பெயரும், உடன் பிறந்தோர் எண்ணிக்கை, பெயர் எதில் பொருந்தி வருகிறதென பார்க்க நான்கைந்து ஓலைகளை படித்து ஒதுக்கிய பின் அய்ந்தாவதோ, ஆறாவதோ ஓலை பொருந்தி வர அதில் உள்ளபடியே வாசித்து, நமக்கு புரியும் தமிழில் சொல்லி, நோட்டில் எழுதியும், கேசட்டில் பதிவு செய்தும் தந்தனரே. இன்றும் வைத்துள்ளேன்.


தமிழ்நாடெங்கும் பரவி கிடக்கும் ஓலை வாசிப்பாளர்களை ஒருங்கிணைத்து, ஊதியம் அளித்தால், சட்டென வேலை முடியுமே.


மேலும், கல்வெட்டு, ஓலைச்சுவடிகளை பதிவேற்றம்‌ செய்து, தேவநகரி எழுத்துக்களை இன்றைய தமிழ் எழுத்துக்கு மாற்றவும் அவற்றை வருடிகளால் ( Scanner) மின்மயமாக்கம் செய்யும் தமிழ் நாட்டு இளைஞர்கள் இருக்கின்றனரே. 


எதெதெற்கோ செலவு செய்யும் போது, இந்த இளைஞர்களுக்கு அரசே நேரடி தொகுப்பூதியம்‌ அளித்து பணியில் அமர்த்தலாமே.


இப்போதும், தமிழ்நாட்டு இளைஞர்கள்தான் அப்பணிகளை‌ அயல்நாட்டினரின் அமைப்பிற்கு கீழ் குறைந்த ஊதியத்தில் செய்து வருகிறார்கள்.


அரசு நிறுவனம் ஒரு பணியை Out sourcing செய்யும் போது, பணியாளர்களை அமர்த்திக்கொள்வது, ஊதியம் அளிப்பது யாவும் பணியை எடுத்து முடித்து தருவதாக ஒப்பந்தம் செய்துக்கொண்ட நிறுவனத்தின் பொறுப்பே ஆகும்.


பணியின் ஒவ்வொரு கட்ட நிறைவுறுதலுக்கும் ( Completion in stages) அரசு நிறுவனம் தொகையை வழங்கும். பணியின் நேர்த்தி, நம்பகத்தன்மை, பதிவு கோப்புகள், அரசு‌ இறையாண்மையை பாதிக்க கூடிய, முக்கிய அரசு ரகசிய கோப்புகள் போன்றவற்றை திரும்ப பெறுதலும், அரசு நிறுவனத்தில், இப்பணிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைசார் வல்லுநர்களின் பொறுப்பு‌ ஆகும்.


அரசு வேறு அரசாங்கம் வேறு என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.


அறிவுசார் சொத்துரிமைகளை பாதுகாப்பதில் அரசு மற்றும் அரசாங்கத்தின் அங்கு குறித்த சட்டத் திட்டங்கள் அந்தந்த நாட்டுற்கு தக்க மாறுபடும்.


பலரின் வேண்டுகோளுக்கு இணங்க இத்தொடர் எழுதப்படுகிறது.


வேப்பங்குச்சியின் காப்புரிமையை அய்யா நம்மாழ்வார் தமிழகத்திற்கு பெற்று தந்த வெற்றி கதை அடுத்த பாகத்தில்...


Stay tuned...


பொறிஞர் கோ.லீலா

சூழலியல் எழுத்தாளர்

தமிழ்நாடு

மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்

 *மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்* ஜி.நாகராஜன்.


இவ்வரிகளில் சிலருக்கு ஒவ்வாம்மை உண்டு.

இராயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே


தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுதகண் ணீரும் அனைத்து.   (௮௱௨௰௮ - 828)


அய்யன் திருவள்ளுவர் எழுதி இருக்கிறார் எனில்

எந்த தொழுத கையை நம்பி துரோகத்தை சந்தித்து துடிதுடித்து எழுதினாரோ,  மனிதன் மகத்தான சல்லிப்பயலாக இருந்திருக்கிறான்‌ என்பது உண்மையல்லவா?


தந்திரமாக மேலோட்டமாக ஒரு பழகும் முறையை வகுத்து கொள்வதொரு திறமையாக கருதப்படுகிறது இந்நாளில், அவர்கள் எல்லோருக்கும் நல்லவர்கள், எல்லோரும் அவர்களுக்கும் நல்லவர்கள். அவர்களுக்கு மனிதனின் மகத்தான சல்லித்தனம் புரிப்படாது அல்லது அதை விளங்கி கொள்ள விரும்புவதில்லை.


சிற்பம் செதுக்கும் சிற்பியை விட சிற்பத்தை நேசிப்பவன் எவருண்டு, பார்த்து பார்த்து செதுக்கும்போது கல்லுக்கு உணர்விருந்தால் வலிக்கிறது என்றே சொல்லும், சிற்பியை வெறுத்தே கொல்லும்...


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும். 


என்கிறார் அய்யன் திருவள்ளுவர். இது அரசனுக்கு மட்டுமல்ல நட்பு முதல் காதல் வரை பின்பற்றப்பட வேண்டிய ஒன்று.


இடித்துரைக்காதவனின் அன்பு எத்தகையது. இனிக்க பேசுவான், கொண்டாடுவான், மதிப்பான், கைதட்டுவான். பொறு யோசி நின்று நிதானித்து உற்று நோக்கு, காலத்தினால் நிற்கும் நன்மை என்ன செய்துள்ளான்...

அவங்வங்களுக்கு தெரியும் என்ற விட்டேத்தியான மேலோட்ட அன்பில் என்ன விளையும்? முதலில் அது அன்பா? வியாபார முறை அணுகல் அல்லவா அது.


இடித்தும், உடைத்தும், செப்பனிட்டும் வழிநடத்தும் அன்பே உன்னை சபையில் பெருமைக்கொள்ள செய்யும். பெருமைப்படுத்தும். அறைக்குள் அதட்டி அம்பலத்தில் அணி சேர்க்கும் உறவின் மேன்மையை உணராதவன் மகத்தான சல்லிப்பயல் இல்லையா


எப்போதும் கண்டிக்கும் தந்தை, மகனின் வெற்றியை கொண்டாடும் பேரன்பை ஒரு போதும் மகன்கள் அறிவதில்லை, தான் தந்தையாகும் வரை...


ஆனாலும், மனிதன்‌ ஒரு மகத்தான சல்லிப்பயல்...‌ என்பது உண்மையிலும் உண்மை.


ஒளியை தேடி போகாதே நீயே ஒளியாகு எனும் சொல் செவியேறாத போது, அதில் மறைந்து கிடக்கும் அன்பின் பேரொளி எப்படி புரியும்.


(ஒரு எ.கா மட்டுமே உடனே இசைஞானியை வைத்து ஒரு விவாதம் என்பது தலைப்பை நீர்த்துப் போகச் செய்யும்) இசைஞானி இளையராஜா ஏன் இறுகி ய முகமாய் பலருக்கும் காட்சியளிக்கிறார்.


துறை சார் ஆழறிவும், யாருக்கும் எட்டாத நுட்பமும், மனிதர்களின் மீதான அன்பையும், தன் திறமை மீது கொண்டிருக்கும்‌ அபார நம்பிக்கையையும் புரிந்துக்கொள்ளாத மனிதர்களிடமிருந்து விலகி நிற்கிறார். தான் சுவைத்த இசையை நம் மக்களும் சுவைக்க வேண்டும் என்ற பேராவல் மனிதர்களின் மீதான அன்பில்லையா?


மனம் இறுகி விலகிய அறிஞனின் வெளிப்பாடு உலகம் வியக்கும் சிம்ஃபொனி.‌ 


ஒரு அறிஞனின் சிந்தனையின் உயரத்தை, எண்ணங்களின் உயர்வை, சிற்பியென செதுக்குவது ஏனென்று உணராத மனிதர்கள், அதே வட்டத்தில் அதே உயரத்தில் நின்றுக்கொண்டு சிறு சிறு வெற்றியை கொண்டாடி கூடிக் களிப்பதே வாடிக்கை.


உண்மையாய் நேசிக்கும் மனமோ சதா உன்னை கண்காணிக்கும். காதலென்பது வெற்று உடல்சார் உறவன்று. இணைந்தே வளர ஊக்கமளிக்கும் உறவாக, எந்த உறவும் இருக்க வேண்டும் நட்போ, காதலோ, கல்யாணமோ, உடன் பிறந்தோரோ, மகவோ எங்கும் பரிபூரண பேரன்பு செப்பனிடும்...


ஆனால், மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்

ஆம் ! நான் தலைவி/ தலைவன் எனக்கென்று ஒரு கூட்டப்பட்ட கூட்டமொன்று உண்டு, அதில் நீயும் ஒரு அங்கமாய் இரு, கைதட்டு, தந்திரமாய் தன்னை புகழ வைத்து சிரிக்கும், அவையில் தானே முன்னென நிற்கும் அந்த தந்திர உறவை கொண்டாடி, உற்ற உன்னத உறவுகளை காயப்படுத்தும் மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் இல்லையா?


பேரிடர் காலத்தில், தன்னையுமறியாமல், பயத்தில் உள்ளொளியாய் மறைந்துக் கிடக்கும் மனிதம் மேலெழுந்து விடும்போது மட்டும் உதவி கரம் நீட்டி விடுகிறான்.


அந்த ஆபத்தான சூழலிலும் கூட தன் முத்திரையை பதிக்க துடிக்கும் மனிதர்களும், அமைப்புகளும் உண்டு.


தான் தர்மவானாக இருப்பதற்காக பிச்சைக்காரர்களை முன்னேற விடாத மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் இல்லையா?


அண்டை நாட்டின்‌ Intellectual Property Rights ஐ தன்னகப்படுத்திக் கொள்ளும் மனிதர்கள் அறமற்றவர்கள் எனில், சிந்திக்கும் திறனிழந்து உடன் நிற்கும் பேடைகள் மகத்தான சல்லிப்பயல்கள் இல்லையா?


நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறனும் இன்றி

வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி என்றானே நம் கவிஞன் எங்கு புறம் இழிவு பேசி, முன் புகழுரைத்த யாரை கண்டு உள்ளம் கொதித்துப்போய் எழுதினானோ இவ்வரிகளை.


அவன் சொல்வதும் மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் என்பதையே...


கடலை சேர வேண்டிய நதிகள், குட்டைகளில் தேங்குவதில்லை. தேங்கிவிடும் அளவோ, எளிதாய் நெருங்கிவிடும் அளவிலோ அதன் வேகம் இருப்பதில்லை. 


காட்டாற்று வேகமும், கடல் சேரும் தன்முனைப்புமாய் பாய்ந்தோடும் நீரே கடல் சேரும், அலையென நடனமிடும், வானேகும், மேகமாகும், மழையாகும், மலை தழுவி மரம் தழுவி மண்ணில் தன்னை விதைத்து குதூகலம் கொள்ளும். கடல் சேரும் யுக்தி அறிந்த நீர்த்திவலைகள், யாரின் கைக்கும் சல்லிசாக எட்டிவிடாது.


நீர்த்துளியின் ஆளுமை, கம்பீரம், வழிமாறா கண்ணியம், இடர் எது வரினும் பாதை மாறா பயணம் போன்ற குணங்கள்‌ மனிதரிடம் இருந்தால் அவன் மகத்தான தனக்கே தனக்கான வெற்றியை சூடிக்கொள்கிறான்.


நேசிப்பவர்களை, உயர்ந்த இடத்தில் இருத்தி பார்க்கவே ஆசைக்கொள்வர். ஆனால், காலங்காலமாய் மனிதன் மகத்தான சல்லிப்பயலாகவே இருக்கிறான்.‌ ஆழ்ந்த அறிவும், உற்று நோக்கலும்,நுட்ப ஆய்வும் இருப்பதில்லை. 


சிற்பியை வெறுக்கும் சிற்பங்கள் வெறுங் கல்லாய் கிடக்கும்...


சிற்பியை தவிர கல்லுக்குள் இருக்கும் சிற்பத்தை வேறு யாராலும் செதுக்கி எடுத்து உலகிற்கு காட்டிவிட முடியாது. சிற்பங்கள் கடவுளாகி விட்டாலோ, பலர் பார்வை பெறும் உயர்ந்த இடம் அடைந்து விட்டாலோ, சிற்பத்திற்கே சிற்பியை யாரென தெரியாது.


சிற்பிக்கும் அதுவன்று கவலை, தான் செதுக்கி எடுத்த சிற்பம் உச்ச வெற்றியை எய்தி விட்ட ஆனந்தத்தை வேறு யாரால் கொண்டாடி விட முடியும். சிற்பி கொண்டாடது நிறைவுறுமா சிற்பத்தின் வெற்றி.


ஆனாலும், சிற்பியை மறந்த சிற்பமாக, அல்லது செதுக்காதே வலிக்கிறதென தூற்றும் மனிதர்கள் மகத்தான சல்லிப்பயல்கள் இல்லையா?


மனிதர்களை விட மரங்கள் மகத்தானவை.


முன் கசந்து பின் இனிக்கும் சொல்லே வாழ்வின் மந்திரம்...


தலைக்கனம் கொண்டவருக்கோ காதுகளும் வாய்களே !


இவ்வளவு‌ கடிந்துரைத்தால், இடித்துரைத்தால் உறவில் உரசல் வரும் என்றறிந்தும் கறாராக செப்பனிடும் உறவுகள் வரம்.


கணக்கு வாத்தியை எவனுக்கு பிடிக்கும்

காக்கா கடி மிட்டாய்தான் இனிக்கும்...


காலந்தோறும் கனவிலும்

கணக்குதானே வாழ்வினை நடத்தும்...


நன்றி மறந்து விடும் மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. இது வாழ்வு கசந்தவனின் சொற்களில்லை.


வாழ்வை, குழந்தைமையுடன் கள்ளம் கபடமற்று ஏற்றுக்கொண்டு, இயல்பாய் வாழ்ந்தவனுக்கு சமூகம் கொடையளித்த சொற்கள் இவை.


பெண்ணை நாயென நடத்துபவன் மகத்தான சல்லிப்பயல் இல்லையா


பெண் குழந்தைகளை வன்புணர்வு செய்பவன் மகத்தான சல்லிப்பயல் இல்லையா


சாதிய அடுக்குமுறையில் நேரடியாக முகத்தில் சிறுநீர் கழிப்பவன் மகத்தான சல்லிப்பயல் இல்லையா


யாருமறியாத வண்ணம் கபட வேடமிட்டு சாதிய அடிப்படையில் கூடுபவன் மகத்தான சல்லிப்பயல் இல்லையா


சிந்துவெளியிலும், கீழடியிலும் கிடைத்த நீர் மேலாண்மை, சாதிய அடுக்குமுறையற்ற பேதமற்ற, போர்கருவியற்ற பண்பட்ட சமூகமாக இருந்தது என்பதை சொல்லாது, நெசவாளர், குயவர், வணிகம் செய்தவரென சாதியை தூக்கி நிறுத்த முயற்சிப்போர் மகத்தான சல்லிப்பயல்கள் இல்லையா?


குழந்தைகளை கொலை செய்பவன் சல்லிப்பயல் இல்லையா ?


மனிதன் மகத்தான சல்லிப்பயலேதான்.


மதியாதார் தலைவாசல் மிதியாதே என்றாலே அவ்வை எங்கே அவமானப்பட்டாளோ...


தந்திரம் மிகுந்தவன் நல்லவன் என கொண்டாடப்படுவான்...


நல்லவனாக வாழ்வதே மந்திரம் என நினைப்பவன் எளிதாய் சூறையாடப்படுவான், ஒதுக்கி வைக்கப்படுவான்.


வென்றவன் மகத்தான சல்லிப்பயல்.


இழந்தவன் கேடுகெட்ட நல்லவன்.


மனிதர்களை விட மரங்கள் மகத்தானவை.

நேரிய நல்லாற்றலை போதிக்கும் இயற்கையே மகத்தானவை.


- கோ.லீலா.