Sunday, 9 November 2025

பல்லுயிர்_போற்றிய_பழந்தமிழர்



மார்கழியில் மண்ணும் குளிரும்

தையில் தரையும் குளிரும்

மாசியில் மச்சை குளிரும் என்பது நம் தமிழரின் வாய்மொழி வானியல் அறிக்கை. 


பனியிருந்தால் மழையிராது என்பதும் அவர்தம் கூற்றே.


ஊட்டி, அவலாஞ்சி, ஆகிய இடங்களில் மேற்பரப்பு நீர் உறைந்துள்ளன, காஷ்மீரில் பனிமழை, திருச்சியில் குளிரோ குளிர் என தரையெல்லாம் குளிர்கிறது தையில்.


தமிழர்களின் வானியல் அறிவை கண்டு வியந்தவர்கள் மேலை நாட்டினர்.

 இத்தகைய வானியல் அறிவை கொண்டு, அறுவடை காலமாக தை மாதத்தை முடிவு செய்து விவசாயத்தை திட்டமிட்டுள்ளனர்.

தை இலையுதிர் காலத்தின் ஆரம்ப காலம் என்பதால் அதற்கு பிறகு அறுவடை காலத்தை நிர்ணயித்தால் நெல்மணிகள் என்னவாகும்? என்பதை அறிந்தவன் தமிழன்.


மூவாயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்பே மலரின் மாண்பை அறிந்தவன் தமிழன்.


நீரில் மலரை இட்டு வணங்குவதும், கோலத்தின் நடுவில் பூசணி பூ வைப்பதும் தமிழர் மரபு.


தமிழர்தம் வாழ்வில் பிறந்தது முதல் இறப்பது வரை பூக்கள் இல்லாத நிகழ்வுகளே இல்லை.

பெண்ணின் பருவநிலையில் ஒன்றை குறிக்க பூப்பெய்தல் என்று சொல்லும் வழக்கமும், அச்சொல்லின்‌ பின் விரியும், உள்ளடக்கமும் வாழ்வியல்.

பூ மலர்ந்த பின்னே காயாகி, கனியாகி விதைகள் பரப்பி இனம் பெருக்கும் தாத்பரியத்தை சுமந்த சொல்தான் பூப்பு என்பது.


தமிழரின் வாழ்வில் பூக்கள் ஏன் முக்கியத்துவம் பெற்றன?

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


பூக்களின் நறுமணம் மனநிலையை சாந்தப்படுத்தக் கூடியது, இதை Aroma therapy என்கிறது, நீண்ட ஆராய்ச்சிக்குப்பின் மேலைநாடுகள்.


கோலத்தின் நடுவில் சாணியில் பூசணி பூ, செம்பருத்தி பூவை செருகி வைத்தால் பனிக்காற்றில் நறுமணம் கிருமிநாசினியாக செயல்படும் என்று அறிந்திருந்தான்‌ தமிழன்.


அதனால்தான், அதிகாலையில் கோலமிட்டனர் (இரவில்‌அல்ல)


ஆனால், தமிழர்களோ காதல், போர், வெற்றி, திருமணம் என ஒவ்வொரு நிகழ்வும் பூக்களை கொண்டே கொண்டாடி இருக்கிறார்கள்.


ஒரு ஆண் பெண்ணிற்கு தன் காதலை, அன்பை தெரிவிக்க பூக்களை வழங்குதல் இயல்பு...

பெண் சூடினால் விருப்பமென அறியவும் வகையாயிற்று.


வெட்சி, கரந்தை,வஞ்சி,நொச்சி/உழிஞை என புறபொருள் பாடலுக்கும் பூக்களே முக்கிய பங்கு வகுத்து இருக்கின்றன.


*#பொழுதும்_போதும்*

💐💐💐💐💐💐💐💐💐💐


மரங்களை பெருக்குவது மலர்களே என்பதுணர்ந்து, மரங்களை போற்றி, மலர்களையும் அறிவியல் பூர்வமாக பயன்படுத்தி கொண்டாடி இருக்கிறார்கள்.

சிறுபொழுது, பெரும் பொழுது போன்றவைகளை மலர்களை கொண்டும், பறவைகளை கொண்டும் கணித்திருக்கிறார்கள்.


கன்னல் என்னும் இயந்திரம் மூலம் நேரத்தை கணித்துள்ளனர்.

வட்டிலில் தண்ணீர் விட்டு, சிறு சிறு துளியாக வழியவிடும் அமைப்பைக் கொண்டு நேரத்தை கணித்துள்ளனர். இந்த இயந்திரத்தை #குறுநீர்க்கன்னல் என்றும், நாழிகை கன்னல் என்றும் அழைத்துள்ளனர்.


நீருக்கு பதிலாக மணல் வட்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.


உயர்குடி பெண்களும், சாமானிய பெண்களும் பொழுதை அறிய மலர்களைதான் பயன்படுத்தி உள்ளனர்.


சில மலர்களின் மலரும் நேரம்.


தாமரை சூரிய உதய நேரம்


செண்பகம் காலை 6-7 மணிக்கு இடையில்.


அந்திமந்தாரை மாலை 4-5 மணிக்கு இடையில்


முல்லைப்பூ/பிச்சிப்பூ, வாழைப்பூ, பிடவ மலர், பீர்க்கம் பூ மாலை 5-6 மணிக்கு இடையில்.


பவளமல்லிகை மாலை 6-7 மணிக்கு இடையில்


மல்லிகை மாலை 7-8 மணிக்கு இடையில்.


நெடுநல்வாடையில் மலர்களின் மூலம் பொழுதை அறிந்தது குறித்த குறிப்புகளும் உள்ளன.


வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோள்;


மெத்தென் சாயல்; முத்துறழ் முறுவல்; பூங்குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக்கண்; மடவரல் மகளிர் பிடகைப் பெய்த செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து அவ்விதழ் அவிழ்பதம் கமழப் பொழுது அறிந்து இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொலீஇ நெல்லும் மலரும் தூஉய்க் கைதொமுது மல்லல் ஆவணம் மாலை அயர:


இப்படி மலர்களோடு மனம் மலர்ந்திருந்த பெருவாழ்வு தமிழருடையது.


செல்வந்தராக வாழ்ந்த சங்கத் தமிழச்சிகள் நான்காது அடுக்ககத்தில் இருந்தபோது பகல் எது இரவெது என அறியமுடியாத கார்கால பொழுதுகளில், மலர்வதற்கு முன்பாக பறிக்கப்பட்ட முல்லை மொட்டுகளை, மல்லிகை மொட்டுகளை பச்சை இலையில் பரப்பி வைத்து விடுவார்கள், மலர்ந்து மணம் வீசத் தொடங்கியதும் மாலை வந்தது என அறிந்து விளக்கை பொருத்தும் வழக்கத்தை கொண்டு இருந்திருக்கின்றனர்.



சாதாரண குடிமக்கள் வீட்டு வாழ் பெண்கள், அடர் இருள் பரப்பும் கார்காலத்தில் பீர்க்கம் பூ மலர்வதை கொண்டு மாலை பொழுதறிந்து இருக்கின்றனர். 

பறவைகளையும், பூக்களையும் காலச்சுட்டியாக சங்கத்தமிழன் அறிந்து பயன்படுத்தும் அறிவார்ந்த தொன்மைக்கு சொந்த க் காரர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.


இரவெது பகலெது

அறிய ஒளிவிடாது

முகில்மூடி மாரிபெய்ய

குரீஇ குரலெழுப்ப

பகலென அறிய

ஆனைசாத்தன் 

மூன்றுக்கு கீச

குயில் கூவ நான்காக

நாலரையில் சேவல் கூவ

கா.. கா வென அய்ந்தாக

அய்ந்தரைக்கு கவுதாரி

சிரல் குரலெழுப்ப ஆறு

என்றறிய...

குமுதம் மலர்ந்ததே

கதிரெழுச்சியென கண்டு

சுழலும் நாளில்

பிடவ மலரிதழ் விரிய 

காலை கவிழ்ந்து

மாலை தொடர் இரவென

உரைப்ப...

கடிகாரமின்றி காலம் செப்பும் 

பூவிதழ் விரிவும் குரீஇ மொழியும் 

அறிய செய்தாய்..

பெய்க வானமே !


- கோ.லீலா

*#வரையாட்டின்_குளம்படிகள்* கட்டுரை நூலில் இடம் பெற்றிருக்கும் என் கவிதை.


யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வாழ்ந்த தமிழ் இனம் நமது.

யாவரும் என்பது உலகத்து மக்கள் எல்லாம் என்பது பாதிதான் உண்மை.

முழு உண்மை என்ன? 

இப்பூமியில் வாழும் அனைத்து உயிரினமும் எனது உறவு என்ற மேன்மையான பண்பாட்டோடு வாழ்ந்தவன் தமிழன். எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காது வாழ்ந்த இனம் தமிழ் இனம்...


தமிழர்களின் இறை என்பது சிலைகளோ உருவங்களோ அன்று.


இயற்கையை தொழுதவன் தமிழன். அவித்த உணவை படைத்து வழிபடும் வழக்கம் தமிழனுக்கு கிடையாது என்பதை புறநானூறு இவ்வாறு பதிவு செய்து இருக்கிறது.


ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி

ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்

கல்லே பரவின் அல்லது

நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே (புறநானூறு 335)


ஒத்துப் போகாத பகைவர்களை (தெவ்வர் = பகைவர்) எதிர்த்து, முன் நின்று தடுத்து ஒளியுடைய, உயர்த்திய தந்தங்களையுடைய யானைகளைக் கொன்று விட்டு வீழ்ந்தவர்களுக்கு நட்ட கல்லைத் தான் நாங்கள் வழிபடுவோம். நெல்லைத் தூவி வழிபடும் வேறு கடவுள் எதுவும் எங்களுக்குக் கிடையாது என நடுகல் வழிபாட்டின் சிறப்பினைக் கூறுகின்றது.


சங்கத் தமிழனின் நீட்சியாக வாழ்ந்த ,வாழ்கின்ற பெருங்கவிஞர்களும், சித்தர்களும் இறைத்தன்மையை ( இறைவனையன்று)

பாடியிருக்கின்றனர்.


நட்ட கல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே சுற்றி வந்து மொண மொணென்று சொல்லு மந்திரம் ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்? 

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ? சித்தர் சிவ வாக்கியார் என்ன சொல்ல வருகிறார்?


மனிதனுள் இறைத்தன்மை ( நாதன்) அதாவது அன்பு, கருணை, இரக்கம், அமைதி, நித்ய பேரின்பம்,மரியாதை, மதித்தல், வீரம், விவேகம் போன்ற குணநலன்களே இறைத்தன்மை ( Godliness) என கருதப்படுகிறது.


இவையெல்லாம் இல்லாது, பிறர் மனம் நோகும்படியான செயல்களை செய்துவிட்டு நட்டக்கல்லிற்கு பூ சூட்டி மந்திரம் ஓதுவதால் நீ இறைவனை காண முடியாது, கறியின் சுவையை கரண்டி அறிய முடியாதோ அப்படியானதுதான் உள்ளத்தை தூய்மையாக்காது கல்லை வணங்குதல் என்கிறார் சிவவாக்கியார்.


சாணிக்கு பொட்டிட்டு

சாமியென்பார் செய்கைக்கு

நாணி கண்ணுறங்கு ! என்கிறார் பெண் குழந்தை தாலாட்டில் பாவேந்தர் பாரதிதாசன்.


இதன் மூலம் அறிய வேண்டியது பல்லுயிர் போற்றிய, பண்பாடு செறிவு மிக்க அறிவார்ந்த இனம் தமிழினம் என்பதே !


அன்புடன்

பொறிஞர். கோ.லீலா

சூழலியல் எழுத்தாளர் 

தமிழ் நாடு

No comments:

Post a Comment